Monday, 6 September 2010

ஏமாற்றம் கொடுத்த டேவிட் மில்லிபாண்ட் தமிழர்கள் சந்திப்ப்பு



பிரித்தானியத் தொழிற் கட்சியில் இலங்கைப் பிரச்சனையைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். நல்ல கரிசனை உள்ளவர்களும் இருக்கிறார்கள். தொழிற் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ( Tamils for Labour) பிரித்தானியாவில் உருவாக்கப் பட்டு அது தமிழர்கள் மத்தியில் தொழிற் கட்சிக்கான ஆதரவைத் திரட்ட முயல்கிறது. 04-09-2010 சனிக்கிழமை இலண்டனில் இப்போது தொழிற் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டேவிட் மில்லிபாண்ட் அவர்களை தமிழ் மக்கள் சந்திக்க தொழிற் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.

டேவிட் மில்லிபாண்ட் அவர்களைத் தமிழர்கள் சந்திக்கும் கூட்டத்திற்கு தமிழ் முறைப்படி மிகவும் காலம் தாழ்த்தியே வந்தார். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளைப் போல் அல்லாது அவரது உரை இரத்தினச் சுருக்கமாக இருந்தது. நானூறுக்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு வந்திருந்தனர். அங்கு தொழிற் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பாளர் சென் கந்தையா அவர்களும் இரு இளம் தமிழ்ப் பெண்களும் உரையாற்றினர். தமிழர் பிரச்சனையை மையம் கொண்டதாக இந்தச் சந்திப்பு அமையும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இச் சந்திப்பு தொழிற் கட்சியில் இப்போது நடக்கும் கட்சித் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் டேவிட் மில்லிபாண்ட் அவர்களுக்கு ஆதரவு தேடும் கூட்டமாகவே அமைந்தது. தமிழர்களின் வியாதி டேவிட் மில்லிபாண்டையும் தொற்றிக் கொண்டது. அவரும் சகோதர யுத்தம் செய்கிறார். ஆம் அவரை எதிர்த்து கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் அவரது சகோதரரும் ஒருவர்.

இதில் உரையாற்றிய பலரும் தமிழர்களின் பிரச்சனை சம்பந்தமாகவே பேசினர். பாராளமன்ற உறுப்பினர்கள் Mike Gapes உம் Siobhain McDonagh உம் தமிழர்களின் பிரச்சனையை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள். மிகுந்த அக்கறையும் உடையவர்கள்.

தமிழர்களிடம் அக்கறையுடையவர்களாகக் காட்டிக் கொள்ளும் தொழிற்கட்சியின் ஹரோ மேற்குத் தொகுதி பாராளமன்ற உறுப்பினர் Gareth Thomas அவர்களும் பல தமிழ் உள்ளூராட்சிச் சபையின் உறுப்பினர்களும் அந்தக் கூட்டத்தில் இருக்காதது ஏமாற்றத்தையும் சந்தேகங்களையும் தருகிறது.

இச் சந்திப்பில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியவை:
  • தொழிற் கட்சி தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
  • தொழிற் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் சிலர் தமிழர்க பிரச்சனை பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
  • தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களில் குறைந்த அளவு இரு பிரிவினர்களாவது இருக்கின்றனர்.
  • தமிழ் அமைப்புக்கள் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்த பல ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் பிரம்மாண்டமான அளவில் இருந்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக இருந்தது பிரித்தானியர்களை வியக்க வைத்துள்ளது.


ஏமாற்றம் கொடுத்த டேவிட் மில்லிபாண்ட்

டேவிட் மில்லிபாண்ட் தொழிற் கட்சியின் தலைவராக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்த ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக வரும் வாய்ப்பும் உள்ளவர் இவர். எந்த ஒரு அரசியல்வாதியும் பிரித்தானியர் அல்லாதவர்களைச் சந்திக்கும் போது தமது கட்சியின் குடியேற்றக் கொள்கை பற்றி அதிக அக்கறை காட்டுவர். ஆனால் டேவிட் மில்லிபாண்ட் தனது உரையில் தனது கட்சியின் குடியேற்றக் கொள்கை பற்றி வாய்திறக்கவில்லை. சென்ற ஆண்டு இறுதிப் போரின் போது தான் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் என்றவகையில் இலங்கை சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதை நினைவு படுத்தினார். ஆனால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதற்கு முன் ஹரோ "Zoroastrian Centre" இல் டேவிட் மில்லிபாண்ட் அவர்கள் தமிழர்களைச் சந்தித்தபோது "தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு, இலங்கை அரசு ஒரு ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசு" என்று கூறியது இன்றும் தமிழர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே கொள்கையைத்தான் டேவிட் மில்லிபாண்ட் எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர். ஆனால் அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இலங்கை பற்றிக் குறிப்பிடும் போது அவர் போர் குற்றம் என்ற வார்த்தை பயன் படுத்தவில்லை. இனப் பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் அக்கறை காட்டவில்லை. "உரிய வகை சொல்லல், உரிய மனித உரிமைப் பாதுகாப்பு, உரிய அரசியல் சீர்திருத்தம்" இலங்கையில் தேவை என்பதை மட்டும் டேவிட் மில்லிபாண்ட் அழுத்திச் சொன்னார். இது ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது. மொத்தத்தில் நரி கொக்குக்கு விருந்து கொடுத்த கதையாகவே இந்தச் சந்திப்பு நடந்தது. தமிழர்கள் எந்த ஒரு நாட்டிடமும் இருந்து எதிர்பார்ப்பது சுய நிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தான். அதைப் பற்றி பேசாத ஒரு அரசியல்வாதி பின்னால் போவதால் என்ன பயன்?



2 comments:

Anonymous said...

David must have come on time as he promised. Tamil for labour must have lied about the time of his arrival. Had he come late, he wud ve apologized.

Shan Nalliah / GANDHIYIST said...

kutram parkkin sutram illai...kurai pidippathai viduththu..yaar kutriyum arisi thaan vendum...!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...