
தமிழர்களுக்கு எதிராக சீனாவுடன் கைகோத்து நின்ற இந்தியா இப்போது தமிழர்களுக்கு எதிராகச் சதி செய்ய அமெரிக்காவுடன் கைகோக்கிறது. இலங்கையில் அமெரிக்கப் பிரசன்னம் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பிலும் பார்க்க இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தமிழர்களுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்தியா கடந்த சில வருடங்களாக உணர்ந்து செயற்பட்டு வருகிறது. 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா திருக்கோணமலையில் தனது கடற்படைக்கு எரிபொருள் நிரப்பு வசதிகளை ஏற்படுத்த முயன்றபோது அதைப் பலமாக எதிர்த்த இந்தியா அம்பாந்தோட்டையில் சீனா என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறது. இங்கு இந்தியா தமிழத் தேசியத்திற்கு எதிராக தனது பிராந்திய நலன்களைக் கூட பலியிடத் தயங்கவில்லை என்பதை பலமுறை எடுத்துக் கூறப்பட்டுவிட்டது.
இந்தியப் பேரினவாதிகள் இலங்கையில் தமிழன் ஆட்சி செய்யக் கூடாது என்பது மட்டுமல்ல சிறு அதிகாரம் கூட பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். 1980களின் ராஜீவ் காந்தி தான் இலங்கையில் இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவாலாக்கத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரப் பரவலாக்கத்தை விரும்பவில்லை என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார். இந்திய அரசியலமைப்பு எழுதப் பட்ட போது மாநிலங்களிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப் படுவதை பேரினவாதியான ஜவகர்லால் நேரு பலமாக எதிர்த்தார். அதனால் இந்திய மாநில அரசுகள் என்பது ஒரு பூசி மெழுகப்பட்ட நகரசபை என்றே அரசியல் அமைப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால்தான் தந்தை செல்வநாயகம் உதவி கேட்டுச் சென்றபோது தந்தை பெரியார் "நீங்கள் அங்கு அடிமையாக இருக்கிறீர்கள்; நாம் இங்கு அடிமைகளாக இருகிறோம், ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?" என்றார்.
இப்போது பன்னாட்டு ரீதியில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழர்களின் பிரச்சனையை பகிரங்கப் படுத்தி தமக்கு பன்னாட்டு ஆதரவைப் பெற பெரு முயற்ச்சிகள் செய்கின்றனர். இதற்கு ஆப்பு வைக்க இந்தியா பலவழிகளில் முயல்கிறது. அதில் ஒரு அம்சமாக இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் ஒரு தீர்வைக் காணலாம் என்ற மாயையை பன்னாட்டு அரங்கில் ஏற்படுத்த முயல்கிறது. இதற்காக தனது செயற்திட்டத்திற்கு அமெரிக்க ஆதரவைப் பெற முயல்கிறது. இதன் ஒரு அம்சமாக அணு சக்தி மாநாட்டிற்கு அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் பராக் ஒபமாவுடன் இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக உரையாடல்களை மேற்கொண்டார். அமெரிக்காவோ "அதிகாரப் பரவலாக்கம்", "நியாயமான தீர்வு", "இனங்களுக்கு இடையிலான இணக்கப் பாடு" என தன் பதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. இதனால் இந்திய அமெரிக்கக் கூட்டு தமிழர்களுக்கு எதிரான அடுத்த இந்தியச் சதியே. அது பாதகமான விளைவுகளையே தமிழர்களுக்கு ஏற்படுத்தும்.
இந்தியா தனது தமிழ்க்கைக்கூலிகளை அதிகரிக்கப் பலமுயற்ச்சிகளை செய்கிறது. அதன் அடுத்த திட்டம் தனது கைக்கூலிகளை ஒன்று திரட்டி சிங்களவர்கள் கொடுப்பதை வாங்குவோம் என்று தமிழர்கள் கருதுகிறார்கள் என்ற மாயையை உருவாக்குவதுதான். அதற்காக விரைவில் தமிழ் அரசியல் வாதிகளை ஒன்று கூட்டி ஒரு மாநாடு நடத்தலாம். அதில் 13வது அரசியல் திருத்தற்கு குறைவான ஒன்றை தமிழர்கள் இடைக்காலத் தீர்வாக ஏற்றுக் கொள்வார்கள் என்று பகிரங்க அறிக்கையும் விடலாம்.
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment