Sunday 11 April 2010

இலங்கைத் தேர்தல் தெரிவிப்பவை எவை?



இலங்கையின் ஏழாவது பாராளமன்றத் தேர்தல் இலங்கையைப் பொறுத்தவரை "அமைதியாக" நடந்துள்ளது. திருக்கோணாமலை கண்டி ஆகிய இடங்களின் தேர்தல் முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில் கட்சிகளின் நிலவரம் இப்படி இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -144
ஐக்கிய தேசியக் கட்சி ---------------------- 60
இலங்கைக் தமிழரசுக் கட்சி --------------- 15
சுதந்திர தேசிய கூட்டணி ------------------- 6

இம்முறைத் தேர்தல் பல செய்திகளைக் கூறி நிற்கிறது.

நியமங்களாகிய அநியாயங்கள்.

தேர்தலில் முறைகேடு என்பது இப்போது இலங்கையில் சாதாரணமாகி அது தேர்தலில் ஒரு அம்சம் என்றாகிவிட்டது. தன்னால் ஒழுங்காக தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையாளர் கூறினார். நாட்டின் நீதித்துறை சீர்குலைந்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். நியாயமான தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான சட்ட விதிகள் அமுல்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருக்கும்போதே நீதித்துறை சீர் குலைந்து விட்டது.

கேலிக் கூத்தாகிய ஜே ஆரின் திட்டம்.
1977 இல் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசு இலங்கை அரசியல் அமைப்பைத் வரையும் போது அதில் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலில் விகிதாசாரப் பிரதி நித்துவ முறையை அறிமுகம் செய்தது. அதற்கு முந்திய தேர்தல்களின் படி. ஜே ஆரின் யூஎன்பி எனப்படும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்விகள் அடைந்த போதும் நாடாளவிய ரீதியில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக இருந்தது. இதனால் விகிதாசாரப் பிரதிநித்துவ முறையை அறிமுகம் செய்தால் ஒருபோதும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி(ராஜபக்சவின் கட்சி) ஆட்சிக்கு வர முடியாது என்று ஜே ஆரும் அவரது யூஎன்பியும் நம்பியது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவு ஜே ஆரின் திட்டத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது. ஒரு கட்சியின் வேட்பாளர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலையை விகிதாசாரத் தேர்வு முறை ஏற்படுத்தி "மக்களாட்சி" முறையையே அசிங்கப் படுத்திவிட்டது.

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி மக்கள் பெரும்பாலான தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அவர்களை அப்படிச் செய்யும் படி யாரும் வேண்டவில்லை. வெளிநாடுகளில் இருந்தும் பல தமிழர் அமைப்புக்கள் தேர்தலில் பங்கேற்கும்படி வலியுறுத்தியிருந்தன. இலங்கை அரசியல் அமைப்பிலும் கொழும்புச் சிங்கள் ஆட்சியிலும் நம்பிக்கை இழந்தவர்களான தமிழ்த்தேசியத்தின் தமிழ்த் தேசியத்தின் உறுதியான ஆதரவாளர்களே தேர்தலைப் புறக்கணித்தனர். யாழ் மாவட்டத்தின் மொத்த வாக்காளர் தொகையின் 10%இற்கும் குறைவானவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர் எனபது கூர்ந்து கவனிக்கத் தக்கது. சென்ற முறை அதிக விருப்பு வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்ற செல்வராசா கஜேந்திரன் இம்முறை வெற்றி பெறவில்லை. ராஜபக்சவின் சால்வை சரணம் என்று சென்ற வன்னி மாவட்ட வேட்பாளர்களான சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரத்தினம் ஆகியோ ரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கேஸ்வரிம் தோல்வியடைந்துள்ளனர். பல புதிர்கள் இத்தேர்தலில் இருப்பது ஒரு மூன்றாம் நாடு ஒன்று இத்தேர்தலில் மறைமுகமாகச் செயற்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டுகிறது.

மூன்றாவது அரச குடும்பம் உருவாக்கம்
இலங்கையை ஆண்ட சேனநாயக்க குடும்பத்தை ஜே ஆர் ஜெயவர்த்தனவும் ஆர் பிரேமதாசவும் ஓரம் கட்டினர். பண்டாரநாயக்கா குடும்பத்தை ராஜபக்சே குடும்பத்தினர் செல்லாக் காசாக்கிவிட்டனர். இனி இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தப் போவது ராஜபக்ச குடும்பம். உலக நாடுகளிடையே மிக அதிக அதிகாரம் கொண்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரச பதவி இலங்கை குடியரசுத் தலைவர் பதவி.

தேர்ந்தெடுக்கப் பட்ட சர்வாதிகாரி

இலங்கை அரசத் தலைவர் பதவி என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்படும் சர்வாதிகாரிப் பதவி என்பது வெள்ளிடை மலை. ராஜபக்ச இப்போது அவரது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் பாராளமன்றத்தில் பெற்றால் ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாகி விடுவார். அவரது கட்சி 225 ஆசனங்களைக் கொண்ட இலங்கைப் பாராளமன்றத்தில் 140 ஆசனங்களைப் பெறுவது உறுதி. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 10 ஆசனங்களே தேவை. அவற்றை கட்சி தாவுபவர்கள் மூலமாகவோ அல்லது ஒரு கூட்டணி மூலமோ இலகுவாக ராஜபக்சவால பெறமுடியும். ராஜபக்சவிற்குத் தடையாக இருப்பது இலங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் இருமுறை மட்டுமே வரலாம் என்பதுதான். இந்தத் தடையை அவர் தனது பாராளமன்ற பலத்தின் மூலம் அரசியலமைப்பை திருத்தி நீக்கலாம்.

செல்லாக் காசாகிய இந்திய அடிவருடிகள்
பிரபாகரனுக்கு கடிதம் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்ட ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலை கூட்டணி, ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியதாக கூறும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற இந்திய அடிவருடிக் கும்பல்களை மக்கள் நிராகரித்துள்ளனர். இந்தியச் வெளியுறவுத் துறை செயலரின் நிருபாமா ராவின் செல்லப் பிள்ளையானும் தோல்வி கண்டுள்ளார்.

மீண்டும் ஓரம் கட்டப்பட்ட தமிழர்கள்
தமிழர்கள் ஆதரவின்றி ஒரு சிங்களக் கட்சி பெரு வெற்றி ஈட்ட முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழர் பிரச்சனை ஒரு பிரச்சனையாக சிங்களப் பகுதிகளில் தேர்தல் கூட்டங்களில் விவாதிக்கப்படவுமில்லை.

இந்திய எதிர்ப்பு தமிழர்களுக்குப் பரவியது.
வழமையாக இந்திய எதிர்ப்புப் பேச்சுக்கள் சிங்களப் பகுதிகளில் வாக்கு வேட்டைக்கு பெரிதும் உதவும். சகல கட்சிகளிலும் மத்திய நிலை அரசியல் வாதிகள் இந்திய எதிர்ப்பு உரைகளை நிறைய வழங்குவர். ஆனால் இம்முறைத் தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் அந்த மாதிரியான உரைகள் குறைந்து தமிழ்ப்பகுதிகளில் இந்தியாவிற்கு எதிரான நிறைய இடம்பெற்றன. சிங்கள மக்கள் நடாத்திய தமிழினக் கொலைக்கு இந்தியா கைகொடுத்து நின்றதன் விளைவு இது. தமிழர்களின் விரோதியான ராஜபக்சவின் கட்சி வென்றதற்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

ஐயோ பாவம் ஜேவிபி
இடது சாரிச் சாயம் பூசிய இனவாதக் கட்சியான ஜேவிபி எனப்படும் ஜனதா விமுக்திப் பெரமுனை( மக்கள் விடுதலை முன்னணி) மோசமாக மண்கவ்வியுள்ளது. சென்ற தேர்தலில் தமிழர்கள் போராட்டத்தை ஒழிக்க ஒரு பலமிக்க பேரினவாதக் கூட்டணி சிங்களவர்கள் மத்தியில் உருவாக வேண்டும் என்பதற்காக சென்ற பாராளமன்றத் தேர்தலில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியையும் ஜேவிபியையும் அப்போது கொழும்பிற்கான இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் இணைத்து வைத்ததாகக் கூறப் படுகிறது. அதனால் சென்ற தேர்தலில் ஜேவிபி கணிசமான் வெற்றியீட்டியது. பின்னர் ராஜபக்ச சகோதரர்களுடன் முரண்பட்டு வெளியேறிய ஜேவிபி இம்முறைத் தேர்தலில் சரத் பொன்சேக்காவுடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது.

பாராளமன்றத்தில் சரத் பொன்சேக்கா
தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியும் தற்போது சிறையில் இருப்பவருமன சரத் பொன்சேக்கா. இவர் பாராளமன்றம் செல்ல வாய்ப்புக் கிடைக்குமா என்பது கேள்விக் குறி!

மேலும் கேள்விக் குறியான தமிழர் எதிர்காலம்.
1970இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரு வெற்றி பெறப் போவதை அறிந்த எஸ் ஜே வி செல்வநாயகம் இனிக் தமிழர்களைக் கடவுள்தான காப்பாற்ற வேண்டும் என்றார். மீண்டும் அக்கட்சி அதிக பலத்துடன் வந்திருப்பதைப் பார்த்தால் இனித் தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லியிருப்பாரோ? இனித் தமிழனை தமிழன் தான் காப்பாற்ற முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...