Sunday 7 March 2010

இலங்கைக்கு எதிராக மேற்குலகின் "நாலு படையணிகள்".


இலங்கையின் பங்குச் சந்தை ஆசியாவிலேயே சிறந்த வளர்ச்சியடைந்து வரும் வேளையில் மேற்குலக முதலீட்டாளர்கள் அதிலும் முக்கியமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது பங்குகளை விற்று இலங்கையில் இருந்து வெளியேறுகின்றனர். இலங்கையில் பங்குச் சந்தையின் வளர்ச்சி குறுங்கால அடிப்படையானது என்றும் மத்திய அல்லது நெடுங்கால அடிப்படையில் அதன் போக்கு உகந்ததாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போதைய பொருளாதர நெருக்கடியில் இருந்து முதலில் ஆசிய நாடுகளே வெளிவரும் என்றும் அதைத் தொடர்ந்தே மற்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இருந்தும் மேற்குலக முதலீட்டாளர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவது அவர்கள் ஏதாவது புறக்காரணிகளை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுத்தார்களா என்ற எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் இது மேற்குலக அரசுகள் இலங்கைக்கு எதிரான தமது நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கை மேற்குலகின் விரோதிகளான சீனா, ஈரான், மியன்மார் (பர்மா) ஆகியவற்றுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள்; போருக்கு பின்னரான அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு இலங்கை அரசு கொடுத்துள்ள அதிக முக்கியத்துவம்; தொடர்ந்து மேற்குலகின் பல கோரிக்கைகளை இலங்கை அரசு நியமித்தமை; தனது தேர்தல் வாக்கு வேட்டைக்காக இலங்கை ஆளும் கட்சியினைச் சேர்ந்தவர்கள் மேற்குலகிற்கு எதிராகத் தெரிவித்து வரும் "சண்டித்தன" கருத்துக்கள். ஆகியவை மேற்குலகை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டி வருகின்றன.

இலங்கை அரசிற்கு எதிரான மேற்குலக நகர்வுகள்.
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் பல நகர்வுகளை பகிரங்கமாகவும் திரைமறைவிலும் மேற்கொள்கின்றன:
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் மீண்டும் மீண்டும் இலங்கைப் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணை தேவை என்று வலியுறுத்துவது;
  • மக்களுக்கான நிரந்தர விசாரணை மன்றம் (PPT) அயர்லாந்து டப்ளின் நகரத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மேற்கொண்டமை;
  • அவுஸ்திரேலிய, பிரிஸ்பேனில் உள்ள கத்தோலிக்க நீதி மற்றும் சமாதான ஆணைக்குழு அவுஸ்திரேலிய அரசை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்,கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியமை;
  • இலங்கை அரசால் நன்கு கவனிக்கப் பட்டவராகக் கருதப்படுபவரும் மஹிந்த ரஜபக்சவிற்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுபவருமான ஐக்கிய நாடுகள் சபைச் செயலர் பான்கீமூன் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகள் மற்றும் போர்குற்றம் தொடர்பாக நிபுணர்கள் குழு நியமித்தமை;
ஆகியவற்றை நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான மேற்குலகின் நான்கு படையணிகள்
இலங்கைகு எதிரான தமது நடவடிக்கைகளிற்கு நான்கு படையணிகள் திரட்டுகின்றன:
  1. இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள்.
  2. இலங்கைக்கு எதிரான போர் குற்றச் சாட்டுக்கள்.
  3. இலங்கைக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் - ஜீஎஸ்பி+ சலுகை இரத்து, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி நிறுத்தம் இப்படிப்பல.
  4. தமிழர்களின் நாடுகடந்த அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துதலும் அங்கீகரித்தலும்.
இவற்றை இலங்கை அரசு தனது இந்திய சீன நண்பர்களுடன் இணைந்து எப்படி எதிர் கொள்ளப் போகிறது?

1 comment:

Yoga said...

பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறான நகர்வுகளை மேற்குலகம் மேற்கொள்வதானது பேரினவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடக் கூடும்!யுத்த?வெற்றியை மேற்குலகு அங்கீகரிக்கவில்லை என்று மறு புறமாக பிரச்சினையை திசை திருப்பி சிங்கள மக்கள் வாக்கை திருப்பி விடலாம்!பிள்ளையார் பிடிக்கப் போய்..................................................?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...