
விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இந்தியாவிடம் இலங்கை அதிகாரபூரவமாக அறிவித்து விட்டதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 17ம் திகதி பிரபாகரன் கொல்லப் பட்டதாக அறிவித்த இலங்கை அரசு இதுவரை அதை அதிகாரபூர்வமாக இந்தியாவிற்கு அறிவிக்காமல் இருந்தது. இப்போது திடீரென அறிவித்துள்ளது.
கொழும்பு உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 8-ம் திகதி முன்னைநாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் வழக்கில் எதிரிகளின் பெயர் பட்டியலினை நீதிமனறம் மாற்றம் செய்ய அனுமதித்தது. அதில் முக்கிய எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகவிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது நெருங்கிய சகாவாகவும் அவ்வியக்கத்தின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இருந்த பொட்டு அம்மான் எனப்பட்ட சண்முகநாதன் சிவசங்கர் ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டன. ஆனால் அதற்கான இறப்பு அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிக்கப் படவில்லை. அதன் பின்பும் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை.
இப்போது திடீரென இந்த அறிவித்தல் கொடுப்பதற்கும் இலங்கையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரச்சாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வியை எழச் செய்கிறது.
No comments:
Post a Comment