
மனோ கணேசன் என்பவர் இலங்கையின் பாராளமன்றத்தின் உறுப்பினராக இருகிறார். இவருக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டுள்ளது. இத்தனைக்கும் இவர் செய்தது தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியது அல்ல. அவ்வப்போது இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அறிக்கைகள் விட்டதுதான். ஒரு கட்டத்தில் இவர் உயிராபத்தால் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார். இப்போதும் பகிரங்கமாக நடமாடப் பயந்தே வாழ்க்கையைக் கொண்டு போகிறார். இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மிகப் பயத்துடனே வாழ்கின்றனர். இந்த நிலை இன்றல்ல நேற்றல்ல 1956இல் இருந்தே இருக்கிறது. தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு பல இலட்சக் கணக்கில் இடம் பெயர்க்கப் பட்டு தவித்த போது மௌனமாக இருந்தவர் மனோ கணேசன் அவர்கள். இவர் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்:
புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை.ஆனால் தாய்நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப்போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்து கொள்ளப் பட வேண்டும்.
ஆயுத போராட்டத்திற்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டதா?
புலிகளின் ஆயுதப் போராட்டம் மழுங்கடிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களின் ஆயுத போராட்டத்திற்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டதா? என்ற கேள்விக்கு மனே கணேசன் அவர்கள் விடை சொல்லத் தேவையில்லை. இலங்கையின் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் விடை கூறிவிட்டார்:
இலங்கையின் சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது.
தலைமை நீதிபதியானவர் ஒரு நாட்டின் சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். அவரே இப்படிக் கூறிவிட்டார். சட்டத்தின் மூலம் எங்கு நீதி கிடைக்காதோ அங்கு ஆயுதப் போராட்டம் தலை தூக்கும் என்பதை எந்த அறிவிலியும் அறிவான்.
தலைமை நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் மேலும் கூறியது: தமிழர்களுக்கு போதுமான அளவிற்கு நாம் நிவாரணம் வழங்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அதற்கான பழியை நாம் தான் ஏற்க வேண்டும். இந்த நாட்டின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய துயர நிலைகள், நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வரப் படவில்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்றும் சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்தம் மனோ பாவத்தை அறிந்து
கொள்ளுங்கள் மனோ ஐயா அவர்களே!
இலங்கையின் அரசியலமைப்பைப் பற்றியும் சிங்கள ஆட்சியாளர்களின் மனோ பாவத்தையும் தெரிந்தவர்கள் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு இல்லை என்பதை அறிந்திருப்பர். நீங்கள் முதலில் தமிழனை வாழ விடுங்கள். வெளிநாட்டுத் தமிழன் நிம்மதியாக இருப்பான்.
No comments:
Post a Comment