Friday, 16 January 2009

உயிர் நீரில் வளரும் கொடி


ஈழமெனும் நாட்டினிலே
பேரினவாதப் போரினிலே
அழியும் தமிழினமே

மாவீரர்களே நீங்கள்
மாண்டது யாருக்காக
மானத்தோடு நாம் வாழ
எங்கள் உரிமைக்காக

தண்ணீரில் வளரும் கொடி
தரணியில் உண்டு
உயிர் நீரில் வளரும் கொடி
ஈழத்தில் உண்டு

பலநாடு தேடியோடும்
தமிழர் உண்டு - ஒரு
தனிநாடு வேண்டி
தியாகம் செய்யும்
தீரர் உண்டு

ரோகத்தில் சாயும் உடல்கள்
லோகத்தில் உண்டு – பெரும்
துரோகத்தால் வாடும் இனம்
ஈழத்தில் உண்டு

நீ என்ன இலங்கை இராணுவமா


உன் கண்ணடிகள் தாக்குகின்றன
எனைக் கண்ணி வெடிகளாய்
உன் வாயசைவுகள் வருகின்றன
எனை நோக்கி எறிகணைகளாய்
நீ என்ன இலங்கை இராணுவமா
நான் என்ன அப்பாவித் தமிழனா.

உன் வருகைகளோ கொடும்
விமானக்குண்டுகளாய் வெடிக்கின்றன
அசைவுகளோ ஹெலி போல்கிலி தரும்.
நீ என்ன இலங்கை விமானப்படையா
நான் என்ன தமிழ்க் குழந்தைகளா

காதல் கடலில் தத்தளிக்கின்றேன் நான்
நிலை தெரியாமல் துடிக்கின்றேன்
சடுமென வருகின்றாய் எனை நோக்கி
உன் உதாசீனத்தால்மூழ்கடிக்கிறாய் என்னை
நீ என்ன இலங்கைக் கடற்படையா
நான் என்ன இந்திய மீனவனா.

காம யுத்தத்தில் எதிரியுடன் களம்பல
கண்ட விடுதலைப் போராளி நான்
எனைக் கணைகளால் தாக்கும்
மன்மதனுக்குஆயுத உதவி செய்கின்றாயே
நீ என்ன பாக்கிஸ்தானா சீனாவா
நான் என்ன தமிழீழ விடுதலைப் புலியா.

உன் வருகைக்கு காத்திருப்பேன்
இருபத்தி நான்கு மணி நேரமும்
என் கண்ணில் மண் தூவி
மாயமாய் வந்துமாயமாய் மறைகிறாயே
மாதேநீ என்ன விடுதலைப் புலி விமானமா
நான் என்ன இந்திய ரடாரா

உனக்கு நான் எதிரியுமில்லை
இடர் ஏதும் செய்தது மில்லை
எனை யேன் வெறுக்கிறாய்
எனை ஏன் ஒதுக்குகிறாய்
நீ என்ன ஐக்கிய அமெரிக்கவா
நான் என்ன விடுதலை இயக்கமா

என் துயர் பற்றி பாரா முகம் ஏன்
உதாசீனம் தான் உனக்கு ஏன்
என் எதிரிதான் உன் உறவா
உதவத்தான் அவன் வருவானா
நீ என்ன இந்திய மத்திய அரசா
நான் என்ன இலங்கைத்தமிழனா.

Monday, 12 January 2009

சகவாசம் சுக வாசம்



ஈழவிடுதலை வரலாற்றில்
பதுங்கு குழிகளுக்குள்
பிள்ளைகள் பிறந்ததுண்டு
பெண்கள் பூப்பெய்தியதுண்டு
காதல் பிறந்தது எமக்குத்தான்
விமானக்குண்டால் உன் வீடழிந்தது
இந்திய அமைதிப்படையோ
உன் பெற்றோரைக் கொன்றது
அனாதையாக வந்தாய்
என் அடுத்த வீட்டு உறவினரிடம்.
தொடங்கியது எங்கள் சகவாசம்
கிடைத்தது ஒருநாள் உன் சுக வாசம்
விமான இரைச்சல் கேட்டு
இருவரும் பதுங்கினோம் ஒரு குழியில்
உரசிய உடல்களில் உதித்தது நம் காதல்.

Thursday, 8 January 2009

கிழக்கிலங்கை


காற்சலங்கை பரதநாட்டியத்திற்கு அழகு
கிழக்கிலங்கை தமிழுலகத்திற்கு மெருகு
கிழக்கு நங்கைதன் அழகை நான் பாடினால் - அது
பிரசவ வேதனையில் துடிக்கும் பெண்ணிடம்
சரச மொழி பல பேசியது போலாகும்.
நகமும் சதையுமாய் வாழ்ந்த இனங்கள்
பாம்பும் கீரியுமாயப் போனதை யார் தடுத்தார்
நென்மணி பூண்ட அந்த நிலமகள்
கண்ணி வெடிகளால் கற்பிழந்தாளே
மட்டு நங்கை மறைவாக மனம் வாடிக்
கொட்டும் கண்ணீரை யார் துடைப்பார்
வாவிகள் யாவும் பொட்டிழந்த பெண்போல்
ஆவியது துடித்து நிற்பதை யாரறிவார்
திருமலையாளின் திண்ணிய நெஞ்சமது
எரிமலையாகக் கொதிப்பதை யாருணர்வார்
கரும்புதரு அம்பாறையாள் எழில்யாவும்
வேம்பாகக் கசந்து போக யார் கெடுத்தார்
திருக்கோயிலின் அற்புதங்கள் யாவும்
திரும்பவொணாப் புற்புதங்களாய் உடைந்தனவே
மூதூர் என்னும் நன்னிலப் பூமியது
ஏதூர் எனும் படியாய்ப் போனதுவே
உடைந்து நிற்கும் ஒவ்வொரு சுவரும்
துரோகங்களின் காவியங்களாகின்றனவே
படுவான்கரையு மொருநாள் எழுவான் கரையாகும்
எழுவான்கரையில் ஒருநாள் எதிரி விழுவான் நிரையாக.

தெருக்குறள் - 2



கடலை போட்டு நூல் விட்டு சைட் அடித்து நீவிர்
விடலைப் பருவத்தை வீணாக்குவான் என் கொல்

ஷெல்லடி கொடிது கண்ணிவெடி கொடி தென்பர் அவள்தன்
சொல்லடி செவி கேளா மாந்தர்

கைப்பேசி கடன் அட்டை பிக்கப் பண்ணவொர் வாகனம்
இம்மூன்றும் இலான் காதல் தீது

டாவடிப்பார்க்கும் டாவடித்தார்க்கும் பல்ப் வாங்கியோர்க்கும்
கட்டிங் அடிப்பதே கடைசி முடிவு

Wednesday, 7 January 2009

முறையேதும் இல்லை

இராகம்: ராக மாலிகா தாளம் ஆதி


பல்லவி
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை நாராயண தேவா


அநுபல்லவி
சிங்களவன் பின் நிற்கின்ற சிவ சங்கரநாதா
சிங்களவன் பின் நிற்கின்றதில் முறையேதும் இல்லை
சிவசங்கர நாதா நாராயண தேவா

சரணம்
இத்தாலியில் இருந்து வந்தாள் ஒருத்தி ஏழரைச் சனியா
ஒருதாலி போனதற்கு பலதாலி கேட்கு மொரு கள்ளியா
சிவசங்கர நாதா............. நாராயண தேவா........- ஆனாலும்
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
மறையோதுவோர் சொல்வது கேட்கும் நாராயணா-ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்- ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
மும்பையில் முறையாக உதை வாங்கிய பின்னும்
அரியணையில் அழகாக இருக்கும் நாராயணா
சிவசங்கர நாதா நாராயண தேவா

பெண்ணே நீ.....


Tuesday, 6 January 2009

ஓடி வருவேன் கவிபாடி


உடலது மேலுலகோடி - அது
தரும் சுகமது பல கோடி
.... ...இதழது அமுது இணையோடி
…………என்னுடன் வந்து இணையோடி
நினதடி இதம் தினம் நாடி
எனதாவி வரும் தாவி
…………தொடும்படி உனைநாடி
…………துடிக்குதடி என் நாடி
என் இடம் தேடி வாடி- இலையெனில்
தவிதவிக்கும் என் மனம் வாடி
…………நின் கழலடி என் நிழலடி
…………உன் கண்ணடி கடும் சுழலடி
ஒடி கொடி இடையடி தேடி
ஓடி வருவேன் நற் கவிபாடி.

Monday, 5 January 2009

ஓயாத கலைகள்


சுடுகாட்டு மலர்களாய் தினம் குண்டு விழும் பூமியிலும் உண்டு
தறிகெட்டோடும் பெயர்ந்த புலத்திலும் தாராளமாய் உண்டு
நெறிகெட்ட நெஞ்சினரையும் நெகிழ வைக்கும் திறனுண்டு
மாசற்ற மனத்தாரையும் தினம் மகிழ வைப்பதுமுண்டு

சிந்து நதிக்கரை யொரம் மலர்ந்தனவாம்
தென் பொதிகை மலையிலும் தவழ்ந்தனவாம்
குமரி முனையையும் கடந்தனவாம்
கதிர மலையிலம் கமழ்ந்தனவாம்
இன்று பாரெங்கும் வீசும் எம் கலைகள்.

மாயா மாருதியென தேயாத் திங்களென
காயா ஞாயிறென சாயாக் குன்றென
மேயா வேங்கையென பாயாக் கடலென
ஓயாதெம் கலைகள் அகிலம் உள்ளவரை

நீ ஒரு தமிழிலக்கியம்.


புறந்தள்ளினாய் எனை நானூறு தடவை
அதனால் நீயொரு புறநானூறு.
மனம் மாறினாய் நானூறு தடவை
அதனால் நீயொரு அகநானூறு
என் மனமெனும் சிலம்புடைத்தாய்
அதனால் நீயொரு சிலப்பதிகாரம்.
எனை ஏழரைச் சனியாக ஆட்டினாய்
அதனால் நீயொரு கலித்தொகை.
என் காதல் கவி கேட்டு குதிரை போல் குதித்தாய்
அதனால் நீயொரு பரிபாடல்.
என் வாழ்வில் தொலைந்த காப்பியம் நீ
அதனால் நீயொரு தொல்காப்பியம்.
மனதில் மணியாகப் உனைப் பதித்தேன்
அதனால் நீயொரு மனோன்மணியம்.
உனை எட்ட நினைத்தேன் பல முறை
அதனால் நீ ஒரு எட்டுத்தொகை
எதற்கும் வளையாமல் நின்றாய் நீ
அதனால் நீ ஒரு வளையாபதி
மனதில் பதித்து உன் மேல் பக்திவைத்தேன்
அதனால் நீ ஒரு பதிற்றுப்பத்து
மலையாகப் பாடல்கள் படித்தேன் உன்பால்
அதனால் நீ ஒரு குறிஞ்சிப்பாட்டு
எனை விரும்பாதது போல் கணக்குவிட்டாய்
அதனால் நீயும் பதினெண் கீழ்க்கணக்கு
மொத்தத்தில் நீயொரு தமிழிலக்கியம்.

Sunday, 4 January 2009

தெருக் குறள் - 1


அகர முதல எழுத்தெல்லாம் யூனிக்கோட்டில்
போடுவதே வேப் உலகு.

நல் ஆலயம் தொழாள் நற்கணவன் தாள் தொழுதெழுவாள்
நில்லென நிற்கும் பேருந்து.

நிறை பேருந்து போக வெறும் பேருந்து
வரும் வரை காத்திருக்குமாம் கற்பு

பிட் அடித்து பரீட்சைக்குப் போவார் மேலோர் – மற்றோர்
கண்விழித்துக் கரைச்சல் படுவோர்

நச்சு நதி


ஆரிய மாயை என்றொரு மலை
அதிலிருந்து ஊற்றெடுத்தது
கொடியதொரு நச்சு நதி
பெண்ணிய சமவெளியை அது
நாறும் குட்டையாக்கியது
இந்த நதிக்கரையிலும்
கலாச்சாரங்கள் உருவானது
இந்துத்துவ கள்ளிப்பால் கலாச்சாரம்
அது இன்று புத்துருப் பெற்றுள்ளது
ஸ்கான் செய் கருவில் கொல் கலாச்சாரம்.
தீட்டென்றும் தீண்டாமை என்றும்
ஆலயங்களிலும் பெரும் பேதம் பேசும்
எங்கும் எதற்கும் தட்சணை கேட்கும்
பஞ்சணைக்கும் தட்சணை விலை பேசும்

Saturday, 3 January 2009

Forever


சுதந்திரம்

தாத்தா சுதுமலையில் கொடியேற்றினார்
பேரன் கீரிமலையில் கப்பலோட்டினார்
தகப்பன் திருமலையில் கோபுரம் கட்டினார்
மகன் பாரெங்கும் அலைகின்றான்.

செந்நீர் பாய்ச்சி
உயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்து
இடர்பல பட்டு
நாம் வளர்த்த
விடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டு
சுதந்திரப் போர்ப் பயிர்
வளரத்தோர்க்கு
புரியாமல் போனதென்ன

முடிவென்பது எங்கே? எப்போ?


பாரா முகங்கள் பாரெங்கும்
தீராப் பிரச்சினைகள் திசையெங்கும்
வாராத்துணைகள் வழியெங்கும்
ஊரா இது? உறவுதான் ஏது?

பங்காளிகள் பகையாளிகளாயினர்
போராளிகள் துரோகிகளாயினர்
நீதிபதிகள் நிலை தடுமாறினர்
தீர்க்க வந்தவர் தீர்த்துக் கட்டினர்

இரத்தத்தின் இரத்தம் மறைந்து விட்டது
உடன் பிறப்போ மறந்து விட்டது
தொண்டர்கள் தொலைவில் நிற்கின்றனர்
உறவெல்லாம் பெயர்ந்த புலத்தில்

மானிடம் இங்கே மரித்து விட்டது
இயற்கை இங்கே இறந்து விட்டது
விடியல் இங்கே விலகி நிற்கிறது
முடிவென்பது எங்கே? எப்போ?

வேண்டும் ஓரு புரிந்துணர்வு ஒப்பந்தம்



அவசரமாகச் செல்லும் பயணி நான்
அலுப்படிக்கும் சோதனைச் சாவடி நீ
முன்னேறத் தள்ளப்படும் படை நான்
முழங்காலைத் துண்டிக்கும் கண்ணி வெடி நீ
கண் விழித்துக் காத்திருக்கும் ராடார் நான்
கண்ணில் படாமல் பறக்கும் விமானம் நீ
ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என் மனம்
நமக்குள் ஏன் இந்த யுத்த முனைப்பு
வேண்டும் ஓரு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Friday, 2 January 2009

நவரசக் காதல்


உனைக் கண்டதும் என் மனதில்
வந்தது பெரும் ஆச்சரியம்.

தொடர்ந்தது என்னுடலெங்கும்
கடும் நோயாகக் காதல்

என் விழுங்கும் பார்வை
கொடுத்தது உனக்கு கோபம்.

விளைவு என் மனமெங்கும்
தாங்க வொணாச் சோகம்.

உணர்ந்து கொண்டாய் அதை நீ
மாறிக் கொண்டாய் சாந்தமாய்.

என் இரத்தத்தில் உறைந்திருந்தது
உருப்பெற்றது பெரு வீரமாக.

அங்கு மறைந்தது என்
மனதிலிருந்து பயம்.

நீயும் ஒத்திசைத்தாய் என்னோடு
வந்தது என் மேல் கருணை.

இருவர் மனதும் இணைந்தது
முடிந்தது திருமணத்தில் ஆனந்தமாய்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...