Friday, 26 May 2017

சீனாவின் புதிய பட்டுப்பாதையும் மென்வல்லரசாகுதலும்

29 நாடுகளின் அரசுத் தலைவர்கள், உலக வங்கி, பன்னாட்டு நாண்டிய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பல நாடுகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட வலயமும் பாதையும் மாநாடு (Belt and Road Forum)  ஒன்றை சீனா 2017-ம் ஆண்டு மே 14-ம் திகதி அமர்க்களமாக நடத்தியது. டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பிடியும் தலைமையும் ஆட்டம் காணும் வேளையில் அவற்றைத் தான் பிடிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்பதை இந்த மாநாடு சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காணமைத் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்ததமையை சீனா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றது. கொழும்பு பன்னாட்டு நிதி நகரம், கென்யா தொடருந்து திட்டம் போன்றவை எல்லாம் புதிய பட்டுப்பாதையின் பகுதிகளே.

புதியவகைக் கூட்டுறவுத் திட்டம்
மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் பொருளாதார அபிவிருத்திக்கான் முக்கிய இயந்திரம் வர்த்தகமே என்றார். புதிய பட்டுப்பாதைத் திட்டம் சீனாவின் உலக ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை. ஒருவருக்கு ஒருவர் நன்மை செய்யக் கூடிய ஒரு புதியவகைக் கூட்டுறவுத் திட்டமே பட்டுப்பாதைத் திட்டம் என்றார். பங்கு பற்றும் எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் சீனா நன்கு சிந்தித்து இந்தப் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாம். மேலும் சீன அதிபர் சீனா தனது பொருளாதார அபிவிருத்தி அனுபவத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றது; அடுத்த நாடுகளில் தலையிடுவது எமது நோக்கமல்ல; எமது ஆட்சிய் முறைமையையோ சமூக முறைமையையோ நாம் ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை என வலியுறுத்திக் கூறினார்.

உட்கட்டுமானங்களும் சீனாவும்
சீனா தனது நாட்டின் உட்கட்டுமானங்களை பெருமளவு அபிவிருத்தி செய்து உலகை வியக்கவைத்தது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியே இந்திய உட்கட்டுமானங்களில் சீன முதலீட்டை விரும்பும் அளவிற்கு சீனாவின் உட்கட்டுமான வளர்ச்சி அமைந்திருக்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதையின் Belt என்பது பொருளாதார வலயங்களைக் குறிக்கும். பாதை செல்லும் நாடுகளில் சீனா உட்கட்டுமானங்களில் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யவுள்ளது. ஆனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ்கத்தின் Atif Ansar, Bent Flyvbjerg, Alexander Budzier, and Daniel Lunn ஆகிய நிபுணர்கள்  செய்த ஆய்வின்படி சீனாவின் கட்டுமானங்கள் பொருளாதாரத் திறன்மிக்கவை அல்ல எனத் தெரிவிக்கப் படுகின்றது. நைஜீரியா, இந்தோனேசியா, மியன்மார், இலங்கை, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சீனா செய்த உட்கட்டுமான வேலைகளை இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா நிர்மானித்த விமான நிலையம், விளையாட்டு மைதானம் போன்றவை பயனற்றுப் போனதை இலங்கையர் அனைவரும் அறிவர்.

வெறுப் பட்டுப்பாதை மட்டுமல்ல
சீனா தான் 2013-ம் ஆண்டு ஆரம்பித்த Belt and Road, One Belt One Road எனப் பல பெயர்களால் அழைத்தாலும் அதன் நோக்கம் உலக வர்த்தகத்திலும் போக்கு வரத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. பொதுவாக இதைப் புதிய பட்டுப்பாதை என பலரும் அழைக்கின்றார்கள். சீனாவின் பழைய பட்டுப்பாதை ஆசியாவில் உள்ள நாடுகளிற்கும் மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளிற்கும் சீனாவின் பட்டை விற்பனை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. அந்தப் பெரும் பாதை வலையமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய சிறந்த கடற்படையையும் சீனா கொண்டிருந்தது. சீனாவின் புதிய பட்டுப்பாதை இரு வழிகளைக் கொண்டுள்ளது. ஒன்று கடல்வழியானது மற்றது தரைவழியானது. இது ஆசியா ஐரோப்பா தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை உள்ளடக்கியது. துறைமுகங்கள், பெருந்தெருக்கள், தொடருந்துப்பாதைகள், பொருளாதார வலயங்கள், எரிபொருள் வழங்கு குழாய்கள் போன்ற பலவற்றைக் கொண்டது. சீனா 124பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு முதலீடு செய்யவுள்ளது. இதில் ஒன்பது பில்லியன் டொலர்கள் வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது விநியோகம் மற்றும் கொள்வனவிற்கான பாதைகளின் பாதுகாப்பும் சீனா வெளியில் சொல்லாத திட்டம் என பல ஐரோப்பிய அரசுறவியலாளர்கள் கருதுகின்றனர். புதியபட்டுப் பாதையில் தனது படைத்தளங்களையும் சீனா நிறுவும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பியப் பெரு நிலப்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை அதிலும் படைத்துறை ஆதிக்கத்தை ஒரு சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கலாம்.

சீனாவின் மென்வலு முன்னெடுப்பு
பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் மூலம் மற்ற நாடுகளைத் தனக்கு ஏற்புடையதாக்கும் நாடு மென்வல்லரசு எனப்படும். சீனா தனது முதலீடு, கடன் போன்றவை மூலம் பல நாடுகளுடனான தனது உறவை மேம்படுத்த முயல்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்த முயல்கின்றது. ஏற்கனவே சீனா தனது மென்வலு முன்னெடுப்பிற்காக ஆண்டொன்றிற்கு  உலகில் அதிக மக்கள் தொகையும், இரண்டாவது பெரிய பொருளாதாரத்தையும், படைத்துறைத் தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டையும் கொண்ட சீனா உலகின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்கவேண்டும் என்பது தற்போதைய சீன ஆட்சியாளர்களின் கனவு. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த நிலையில் இருந்து அமெரிக்காவை அகற்றுவதும் சீனா ஆட்சியாளர்களின் இரகசியத் திட்டமாகும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனா உலக அரங்கின் தனது பிம்பத்தை சீர் செய்யப் பலவழிகளில் முயல்கின்றது.

மென்வல்லரசிற்கு அவசியமானது காலாச்சார உறவு
பரிஸ், மொல்ரா, பேர்லின், மொஸ்க்கோ, கொப்பெனஹன், பிரசல்ஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நகரங்களில் சீனா கலாச்சார நிலையங்களை நிறுவியுள்ளது. 2013-ம் ஆண்டு சீனா தனது 16+1 முன்னெடுப்பு என்னும் திட்டத்தை வரைந்தது இதன் படி 16 நாடுகளுடன் சீனா தன்னை அரசுறவியல் ரீதியில் நெருங்கி இணைத்துக் கொள்ளப் போவதை அறிவித்தது. பல்கேரியா, குரோசியா, செக் குடியரசு, எஸ்த்தோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, போலாந்து, ருமேனியா, சுலோவேக்கியா, சுலோவேனியா, அல்பேனியா, பொஸ்னியா, ஹெர்ஜெகொவினா மொண்டினிகுரோ, சேர்பியா, மசடோனியா ஆகியவை அந்தப் பதினாறு நாடுகளாகும். இதில் பதினொரு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கொண்ட நாடுகளாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் சீனா தன் வசப்படுத்துவது இலகுவானதல்ல. 202 நாடுகளிலிருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் கல்வி பயில்கின்றனர். சீன அரசின் புலமைப்பரிசில் பயிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கொரியா, அமெரிக்கா, தாய்லாந்து, இந்தியா, இரசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இது சீனா உலகெங்கும் தனது கலாச்சார உறவை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கையாகும்.

மெல்வல்லரசும் ஊடக ஆதிக்கமும்
பல மொழிகளில் தொலைக்காட்சிச் சேவைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீனா பற்றி உலகம் அறியாத பல தகவல்களை உலகிற்கு சீனா உணர்த்தி வருகின்றது. மேற்கு நாட்டு வல்லரசுகளின் உலக ஆதிக்கத்திற்கு ஊடகத் துறை பெரும் பங்களிப்பாற்றி வருகின்றது. போர் முனைகளில் கூட அவை பங்களிப்புச் செய்கின்றன. 1998-98-ம் ஆண்டுகளில் நடந்த கொசொவா போரின் போது நேட்டோ படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்த போதெல்லாம் அமெரிக்க சார்புத் தொலைக்காட்சிகள் அங்கு நீச்சலுடையில் கவர்ச்சிகரமான பெண்கள் பலர் நடிக்கும் பே வாச் என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் நாடகங்களின் அங்கங்களை ஒளிபரப்புச் செய்து மக்களை வீடுகளுக்குள் தங்க வைத்தன. சீனச் செய்தி நிறுவனமான சின்ஹுவா உலகெங்கும் 160 நிலையங்களை நிறுவியுள்ளது 2020-ம் ஆண்டுக்குள் மேலும் நாற்பது நிலையங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 2016-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் முன்னணித் தொலைக்காட்சி தனது CCTV என்ற பெயரை என்பதில் இருந்து China Global Television Network என மாற்றியுள்ளது. இது ஆறு அலைவரிசிகளில் ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இரசியமொழி, ஸ்பானிய மொழி ஆகியவற்றில் ஒளிபரப்புச் செய்கின்றது. சீன வானொளி 14 நாடுகளில் முப்பது ஒலிபரப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது.

சீனாவின் வறுமை ஒழிப்பு
1978-ம் ஆண்டில் தனது பொருளாதாரச் சீர்திருத்தத்தைத் தொடங்கியதில் இருந்து சீனா 800மில்லியன் மக்களை வறுமைக் கோட்டின் கீழ் இருந்து விடுவித்துள்ளது. உலக வரலாற்றில் எந்த நாடும் காணாத வேகமான பொருளாதார வளர்ச்சியை சீனா கண்டுள்ளது. சீனாவின் புள்ளி விபரங்கள் தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எப்போதும் உள்ளது. சீனாவில் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்கள் தொகை தொடர்பான தகவலில் உலக வங்கியும் சீன அரசும் முரண்பட்ட தகவல்களை வெளிவிடுகின்றன. உலக வங்கியின் அறிக்கையின் படி 16மில்லியன் மக்களின் நாளாந்த வருமானம் 1.9 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகப் பெறுகின்றனர். 150 மில்லியன் மக்கள் 3.10 டொலர்களுக்கு குறைவான நாளாந்த வருமானம் பெறுகின்றார்கள். சீன அரசின் புள்ளிவிபரங்களின் படி 43.4 மில்லியன் சீனர்கள் ஒரு டொலர்களுக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றார்கள். 2020-ம் ஆண்டு சீனாவில் வறுமை முற்றாக ஒழிக்கும் திட்டத்தை சீனா நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. இன்னும் 70 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றார்கள். சீனாவின் பொருளாதாரம் பெருமளவில் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. சீனாவின் உள்நாட்டு மக்களின் கொள்வனவு வலுவை அதிகரித்தால் மட்டுமே ஏற்றுமதியில் தங்கியிருப்பதைக் குறைக்க முடியும். ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் அது தனது ஏற்றுமதியை தொடர்ந்தும் தக்க வைத்திருக்கும் திட்டத்துடனேயே இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

புறக்கணித்த இந்தியா
சீனாவின் வலயமும் பாதையும் மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து செய்யும் பொருளாதாரப் பாதை திட்டம் இருக்கின்றது. இந்தப் பொருளாதரப் பாதையின் ஒரு பகுதியாக பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரும் இருக்கின்றது. முழுக் கஷ்மீரும் தனது நாட்டின் ஒரு பகுதியே என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கின்றது. அதனால் இந்தத் திட்டம் தனது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தக்கம் விளைவிக்கின்றது எனச் சொல்லி இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கின்றது. ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் முழுமையாக நிறைவேறினால் இந்தியா தனது உலக வர்த்தகச் செயற்பாட்டிற்கு சீனாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். பிலிப்பைன்ஸின் அதிபர் Rodrigo Duterte இந்த மாநாட்டுக்குச் செல்லாததும் கவனிக்கத் தக்கது. சீனாவின் மற்று மொரு அயல்நாடான ஜப்பானும் சீனாவில் நடந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தது. ஆனால் மாநாட்டில் சீன அதிபர் உரையாற்றிய போது முன் வரிசையில் இரசிய அதிபரும் துருக்கிய அதிபரும் அமர்ந்திருந்து அவ்வப்போது கைதட்டியது சீனாவிற்குப் பெருமை சேர்த்தது.

சீனாவின் ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி
பட்டுப்பாதையில் செய்யும் முதலீடுகளிற்காகவே சினா ஆசிய அபிவிருத்தி வங்கியை உருவாக்கியது. அதற்கு சீனா ஐம்பது பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. மேலதிகமாக தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு 40பில்லியன் டொலர்களையும், கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு 25பில்லியன் டொலர்களையும்பிரேசில், இரசியா, இந்தியா, சீனா தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட் பிரிக்ஸ் கூட்ட்மைப்புக்கு என உருவாக்கிய புதிய அபிவிருத்தி வங்கிக்கு 41 பில்லியன் டொலர்களையும் சீனா தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.

இரசியாவின் திட்டத்துடன் முரண்படுமா?
சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டம் மத்திய ஆசிய நாடுகளையும் உள்ளடக்கியது. அந்த நாடுகளின் சீனா பொருளாதார வலயங்களையும் பெரும் உட்கட்டுமானத் திட்டங்களையும் நிறைவேற்றவிருக்கின்றது. ஆனால் இரசியாவின் யூரோஏசியப் பொருளாதாரக் கூட்டமைப்பு மத்திய ஆசிய நாடுகளையும் உள்ளடக்கியது. இரசிய அரசுறவியலாளர்கள் இரசியா புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் முதலீடு செய்வதையும் இலாபத்தை ஈட்டுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் இத்திட்டத்தை சீனாவின் அரசியல் மற்றும் குறியீட்டிய (symbolism) நடவடிக்கையாகப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இரசியாவின் உள்கட்டுமான அபிவிருத்தியில் சீனாவின் முதலீட்டையும் இரசியா விரும்புகின்றது. இவற்றுக்காகத்தான் புட்டீன் இந்த மாநாட்டிற்கு சென்று இடைவேளையின் போது இனிமையாம பியானோ வாசித்தார்.

செயற்கை விவேகத்தினதும் முப்பரிமாண அச்சுக்கலையினதும் வளர்ச்சி சீனாவின் மலிவான தொழிலாளர்களுக்கான தேவையை பல பன்னாடு நிறுவனங்களுக்கு இல்லாமல் செய்துவிடும். இதை அடுத்த பத்தாண்டு காலத்தில் நாம் காணலாம். இந்த நிலையில் சீனாவின் புதிய பட்டுப்பாதை இந்தியாவினதும் ஜப்பானினதும் ஒத்துழைப்பின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப் படுமா?


Monday, 15 May 2017

Supercarrier என்னும் பெருவிமானந்தாங்கிக் கப்பல்கள்1991இல் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் கடற்படையும் கடல்சார் படையும் குறைந்த அளவு சவால்களையே எதிர் கொண்டிருந்தன. ஈரான், ஈராக், வட கொரியா மற்றும் சில தீவிரவாத அமைப்புக்கள் அமெரிக்கக் கடற்படைக்கு சிறிய அளவு அச்சுறுத்தலையே விடக்கூடிய நிலையில் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவினதும் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளும் தமது பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தன. ஆனால் சீனாவின் துரித வளர்ச்சியும் இரசியாவின் மீள் எழுச்சியும் நிலைமைகளைத் தலைகீழாக மாற்றிவிட்டன. இரசியா தனது படைத்துறையை 2020இலும் சீனா தனது படைத்துறையை 2030இலும் உலகின் முதற்தரப் படைத்துறைகளாக மாற்றத் திட்டமீட்டன. இதனால் அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிக்கதை வகையில் படைத்துறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தி சீனாவினதும் இரசியாவினதும் சவால்களை 2030இல் சமாளிக்கத் திட்டமிட்டது. அத்திட்டத்தின் முக்கியமான ஒன்று USS FORD வகை விமானம் தாங்கிக் கப்பல் உருவாக்கமாகும். முதலாவது USS FORD வகை விமானந்தாங்கிக் கப்பல் தற்போது தயார் நிலையில் உள்ளது

ஐக்கிய அமெரிக்கா தனது விமானந்தாங்கிக் கப்பல்களின் தரத்தை தொழில்நுட்ப ரீதியாக அடிக்கடி மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. மென்பொருள் ரீதியாவும் வன்பொருள் ரீதியாகவும் இந்த மேம்படுத்துதல் தொடர்கின்றது. தனது போட்டி நாடுகளிலும் பார்க்க தான் எப்போதும் ஒரு படி முன்னே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படிச் செய்கின்றது. 

நாசகாரிகள் சூழ வலம்வர.....
விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ், நீர் மேற்பரப்பு, வான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரி விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

கப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்
இதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது  நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்


என்ன இந்த Supercarrier என்னும் பெருவிமானம்தாங்கிகள்?
கப்பல்களின் எடை அது கடலில் அமிழும்போது இடப்பெயர்வு செய்யும் நீரின் எடையை வைத்து அளவிடப்படும். Supercarrier என்னும் பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள்
1. 64,000மெற்றிக் தொன்களிலும் அதிக எடையை உடையவை.
2. அறுபதிற்கும் மேற்பட்ட விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை. 3. ஒரேயடியாக ஐந்து விமானங்கள் மேல் எழும்பிப் பறக்கும் வசதியுடவை. அமெரிக்காவிடம் தற்போது பத்து நிமிட்ஸ் வகையைச் சார்ந்த பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள் உள்ளன. இரசியாவும் சீனாவும் ஒவ்வொரு பெருவிமானம்தாங்கிக் கப்பலை உருவாக்குகின்றன. பிரித்தானியாவின் இரு பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள் 2018இல் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அடுத்த தலைமுறைப் பெருவிமானம்தாங்கிக் கப்பல்
அமெரிக்காவின் அடுத்த தலைமுறைப் பெருவிமானம் தாங்கிக் கப்பலாக USS Gerald R. Ford உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள்:
  • ஒரு நாளில் இரு நூற்றி இருபது பறப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தொண்ணூறு விமானங்களை இது தாங்கக் கூடியது. 
  • இதன் இயக்கங்கள் யாவும் எண்மியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கங்கக் கூடிய இந்த விமானம் தாங்கிக் கப்பலிற்குத் தேவையான மின்சாரம் அணுவலுவில் இருந்து பெறப்படுகின்றது. 13800 வோல்ற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை. இது நிமிட்ஸ் வகை விமானந்தாங்கிக் கப்பல்களிலும் பார்க்க மூன்று மடங்காகும்.
  •  
  •  EMALS முறைமை மூலம் விமானங்கள் இதிலிருந்து பறக்கும்
  • முப்பது கடல் மைல்களிற்கு அதிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. 112,000 எடையுள்ளது. இருபத்தைந்து மாடிகளைக் கொண்டது. 54 ஆண்டுகள் சேவையில் இருக்கக் கூடியது.
  • உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லக் கூடியது.
  • மற்ற வகை விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் முப்பது விழுக்காடு குறைந்த பணியாட்கள் இதற்குப் போதும்.
  • இதில் Sea Sparrow missile எனப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கப்பல்களைத் தாக்க வரும் உயர்வேக ஏவுகணைகளை அழிக்கக் கூடியவை.
  • அடுத்த தலைமுறை போர்விமானங்களையும் ஆளில்லாப் போர் விமானங்களையும் தாங்கக் கூடியது. இதன் மின்காந்த வீச்சு முறைமையால் சிறிய ரக ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படலாம்.
·         அமெரிக்காவின் முன்னணி விமானங்களான F-35 fighter FA-18E/F super hornet ஆகியவை இதில் உள்ளடக்கப்படும்.
  • கப்பலின் அடிப்பாகத்தில் இருந்து பத்து உயர்த்திகள் மூலம் குண்டுகளும் படைக்கலன்களும் விமானத்தின் மேற்பாகத்துக்கு கொண்டு வந்து விமானங்களில் துரிதமாக ஏற்றப்படும். ஒவ்வொரு உயர்த்தியும் இரண்டு இலட்சம் இறாத்தல் எடையைத் தூக்க வல்லவை. அவை மற்றைய கப்பல்களிலும் பார்க்க இரண்டு மடைங்கு வலுவுடையவை.
உலகவரலாற்றில் மிகவும் செலவு மிக்க Gerald R Ford விமானம் தாங்கிக் கப்பல் திட்டமாகும். பத்துக் கப்பல்களுக்குமான மொத்தத் திட்டச் செலவு 36பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உருவாக்கி முடிக்கும் போது ஒரு கப்பல் 13பில்லியன் டொலர்கள் பெறுமதியானவையாக இருக்கும். அவற்றில் இணைக்கப்படவுள்ள F-35C போர்விமானங்கள் அறுநூற்றைம்பது மைல்கள் பறப்புக் கொண்டது. மிகவும் தொலை தூரங்களுக்கு வேவுபார்க்கக் கூடியவை. உன்னதமான புலப்படாத்தன்மையைக் கொண்டவை.

இந்தியாவின் விமானந்தாங்கிக் கப்பல்கள்
இந்தியாவின் தொடர்ச்சியான கடும் முயற்ச்சிகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு அமெரிக்கா EMALS முறைமையை விற்பனை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. இந்த வகையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாதான் இந்த முறைமையைக் கொண்ட விமானம்தாங்கிக் கப்பலை உருவாக்குகின்றது. இந்தியாவின் ஐ.என்.எஸ். விஷால் விமானம் தாங்கிக் கப்பலில் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்காக ஐ.என்.எஸ். விஷால் விமானம் தாங்கிக் கப்பலை இரசியா உருவாக்குகின்றது. ஆனால் முறைமைத் தொழில்நுட்பம் இரசியாவின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா விரும்பாது. 1990-ம் ஆண்டின் பின்னர் இரசியா விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குவது குறைவு. இதனால் இரசியாவின் அனுபவமின்மை விஷாலைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.

சீனாவின் பெருவிமானம்தாங்கிக் கப்பல்
சீனாவின் பெருவிமானம்தாங்கிக் கப்பல் 2021-ம் ஆண்டு சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு CV-18 எனத் தற்காலிகப் பெயரிடப்பட்டுள்ளது. சீனா லியோனிங் என்ற விமானம் தாங்கிக் கப்பலை ஏற்கனவே உருவாக்கிச் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் ஒரு விமானந்தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கக் கூடிய வலிமை சீனாவின் நாசகாரிக் கப்பல்களிடம் இல்லை எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனால் சீனாவிடம் தற்போது இருக்கும் லியோனிங் விமானம் தாங்கி
கப்பல் ஒரு பயிற்ச்சி விமானந்தாங்கிக்கப்பல் மட்டுமே எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் விமானந்தாங்கிக்கப்பற்துறையில் சீனா முக்கியமான முதற்படியை லியோனிங் மூலம் எடுத்து வைத்துள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் போய் சீனாவின் லியோனிங்கால் செயற்பட முடியாது.

இரசியவின் பெருவிமானம்தாங்கிக் கப்பல்
சோவியத் ஒன்றியத்தின் கப்பல் கட்டுமானத் துறை உக்ரேனில் பெருமளவு நிலை கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியா புதிதாக எந்த ஒரு விமானந்தாங்கிக் கப்பல்களையும் உருவாக்கவில்லை. இரசியா தனக்கு என இரு போர்க்கப்பல்களை நிர்மாணிக்கும் வேலையை பிரான்ஸிடம் ஒப்படைத்திருந்தது. அது நிறைவேறும் தறுவாயில் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தது. அதனால் இரசியாவிற்கான அந்தப் போர்க்கப்பல் விற்பனை நிறுத்தப்பட்டது. அந்த இரண்டு போர்க்கப்பல்களையும் எகிப்து வாங்கியது. ஆனால் இரசியாவின் Krylov State Research Center ஒரு பெருவிமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்தை வரைந்துள்ளது. அது அமெரிக்காவின் நிமிட்ஸ் வகைக் கப்பல்களுக்கும் போர்ட் வகைக் காப்பல்களுக்கும் இணையாகக் கூடிய வகையில் உள்ளன. ஆனால் இரசிய அரசு அதில் பெரும் அக்கறை காட்டவில்லை. இரசியாவிடம் தற்போது இருக்கும் விமானந்தாங்கிக் கப்பல் Admiral Kuznetsov சிரியாவிற்குச் செல்லும் போது அதனுடன் ஒரு இழுவைக் கப்பலும் சென்றது. உரிய பராமரிப்பு இன்மையால் அது பழுதடையலாம் என்ற அச்சமே அதன் காரணம். சிரிய அரசுக்கு ஆதரவான படை நடவடிக்கையின் போது பல தடவைகள் Admiral Kuznetsovஇல் இருந்து கிளம்பும் போதும் தரையிறங்கும் போதும் விபத்துக்கள் நடந்ததாகவும் சொல்லப்படுகின்றது

சீனாவின் பதிலடி
சீனாவின் DF-21 "Carrier Killer" என்னும்  antiship ballistic missile என்ற ரக ஏவுகணைகளால் 810 கடல் மைல்கள் தொலைவில் உள்ள 1,100 அடி நீளமானதும் 70 விமானங்களைக் கொண்டதும் ஆறாயிரம் பேரைக் கொண்டதுமான ஒரு பெரிய விமானம் தாங்கிக் கப்பலை அழிக்க முடியும் எனச் சொல்லப் படுகின்றது.  1995-ம் ஆண்டு அமெரிக்காவின் இரு விமானந்தாங்கிக் கப்பல்கள் தைவானை ஒட்டி நகர்தப்பட்டதால் சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தைக் கைவிட்டது. அதன் பின்னர் சீனா அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கியது. சீனா DF-21 "Carrier Killer" ஏவுகணைகள உருவாக்கிய பின்னர் இரசியா, சீனா, வட கொரியா போன்ற நாடுகளும் அதே மாதிரியான ஏவுகணைகளை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்கள் இனிச் செல்லாக்காசு ஆகிவிடும் எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர். சீனாவின் DF-21 "Carrier Killer" என்னும் ஏவுகணைகள் தரையில் இருந்து நகரக் கூடிய பார ஊர்திகளில் இருந்து ஏவப்படக் கூடியவை. அவை ஒலியிலும் பார்க்கப் பலமடங்கு வேகத்தில் பாயும். அதன் பின்னர் அமெரிக்கா அந்த ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கியழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கி 2016-ம் ஆண்டு வெற்றிகரமான பல பரிசோதனைகளைச் செய்தது. அதன் மூலம் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா பல நீர்மூழ்கி-வேட்டையாடும் விமானங்களயும் உலங்கு வானூர்திகளையும் உருவாக்கியது. அத்துடன் நீரின் கீழ் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்கியது.

சீனா, இந்தியா போன்ற நாடுகளால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஆகக் கூடியது ஐந்து பெருவிமானந்தாங்கிக் கப்பல்களை மட்டுமே வைத்திருக்க முடியும். தற்போது அமெரிக்கா வைத்துள்ள பத்து நிமிட்ஸ் வகை பெருவிமானந்தாக்கிக் கப்பல்களும் இனி உருவாக்கவிருக்கும் பத்து போர்ட் வகை பெருவிமானந்தாங்கிக் கப்பல்களும் எண்ணிக்கை அடிப்படையிலும் தொழில்நுட்ப மேம்பாட்டு அடிப்படையிலும் தந்நிகரில்லதவையாக இருக்கின்றன. இதனால் உலகக் கடற்பரப்பில் அமெரிக்க ஆதிக்கம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தொடரப் போகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...