Friday, 30 November 2018

அமெரிக்க சீனப் போர் எப்படி இருக்கும் ?


அமெரிக்காவின் ஐரோப்பாவிற்கான படைத்தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பென் கொட்ஜெஸ் 2018 ஒக்டோபர் மாதம் 24-ம் திகதி போலாந்து தலைநகரில் நடந்த வார்சோ பாதுகாப்பு மன்றத்தில் உரையாற்றும் போது அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவும் சீனாவும் போர் புரிவது தவிர்க்க முடியாதது என்றார். 1990-ம் ஆண்டு சீனா செய்த படைத்துறைச் செலவிலும் பார்க்க பத்து மடங்கு தற்போது செலவு செய்கின்றது. நீண்ட காலமாக எந்தவிதப் போர் முனை அனுபவமும் இல்லாமல் இருக்கும் சீனா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு காத்திரமான எதிரியுடன் மோதி வெற்றி பெற வேண்டும்.

மாநாட்டில் மோதல்
பப்புவா நியூகினியில் நடந்த ஆசிய - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க துணை அதிபர் சீனாமீது கடும் சாடலைச் செய்திருந்தார். ஆசிய பசுபிக் நாடுகள் சீனாவிடமிருந்து கடன் வாங்கி தங்களது உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ். மேலும் அவர் அக் கடன் பத்திரங்களில் மறைமுகமான நிபந்தனைகள் இருக்கின்றன என்றார். அதற்கு முன்னர் இன்னும் ஒரு மாநாட்டில் உரையாற்றும் போது மைக் பென்ஸ் சீனாவை அமெரிக்காவின் எதிரி நாடு எனப் பிரகடனப் படுத்தினார்.

தூங்கும் புலியை இடறாதீர்கள்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாவீரன் நெப்போலியன் சீனாவைத் தூங்க விடுங்கள் அது விழிப்படையும் போது உலகை உலுப்பும் என்றார். வயல்களுக்குள் முடங்கிக் கிடந்த விழிப்படைந்தது மட்டுமல்ல அது உலகின் தொழிற்சாலையாக மாறிவிட்டது. சீனா உலகை உலுப்பினால் அதன் தொழிற்சாலைகளும் பாதிக்கப்படும் என்பதால் அது அமைதியாக எழுச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அந்த அமைதியான எழுச்சியில் சீனா போர்களைத் தவிர்த்து வந்தது. அதனால் சீனா ஒரு போர் அனுபவம் இல்லாத நாடாக இருக்கின்றது. 1971-ம் ஆண்டு சீனாவும் இந்தியாவும் 13 நாட்கள் போர் புரிந்தன. அமெரிக்கா உருவான நாளில் இருந்து தொடர்ச்சியாகப் போரில் ஈடுபடுகின்றது. அது தனது சரித்திரத்தில் 134இற்கு அதிகமான போர்களைக் கண்டுள்ளது. போரில் ஈடுபடாமல் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்திய சீனா தனது மிகையான அந்நியச் செலவாணி இருப்பைப் பயன்படுத்தி உலகெங்கும் பல துறைமுகங்களை தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பியத் துறைமுகங்களில் 10 விழுக்காடு சீனாவிற்கு சொந்தமானது. உலகின் முதற் பதினெட்டு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் தனக்கு என ஒரு துறைமுகம் இல்லாத நாடு ஒன்று கூட இல்லை. அந்த அளவிற்கு துறைமுகங்களும் பொருளாதாரமும் தொடர்புபட்டுள்ளன.  

சாட்சியாக சரித்திரமும் துசிடைட் பொறிக் கோட்பாடும்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் நடக்கும் என்பதற்கு பல சரித்திர நிகழ்வுகள் ஆதாரமாக இருக்கின்றன அத்துடன் கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி (Thucydides’s trap) என்னும் கோட்பாடும் அதை உறுதி செய்கின்றது. புதிதாக ஒரு பெரு வல்லரசு உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் பெருவல்லரசுடன் மோதலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது. சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரத்தில் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தன. அதனால் அவை இரண்டுக்கும் இடையில் நேரடிப் போர் நடக்கவில்லை. பனிப்போர் என்னும் பெயரில் பெரும் போட்டி நிலவியது. ஆனால் உலகப் பெருவல்லரசாக நிலைப்பதற்கு தேவையான பொருளாதார வலு சோவியத் ஒன்றியத்திடம் இல்லாததால் அது சிதைந்து போனது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வல்லரசாக உருவெடுத்த போது ஸ்பெயினிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் பெரும் கடற்போர் நடந்து ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டது. நெப்போலியன் பிரான்சை பெரு வல்லரசாக்க முயன்றபோது இரசியாவுடனும் பிரித்தானியாவுடனும் போர் புரிந்து தோற்கடிக்கப்பட்டர். உதுமானியப் பேரரசு உலகை ஆள முற்பட்டதால் முதலாம் உலகப் போரும் ஹிட்லர் உலகை ஆள முற்பட்டதால் நடந்தன. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் பெருவல்லரசாக முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கும் ஏற்கனவே உலகப் பெருவல்லரசாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு போர் நடப்பது தவிர்க்க முடியாது என்பது 2400 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி என்னும் கோட்பாடு எதிர்வு கூறியுள்ளது.

அமெரிக்க சீனக் கடற்போர்
2017-ம் ஆண்டு சீனக் கடற்படையினரிடம் 328 கப்பல்கள் இருந்தன. 2018இல் அது 350 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் சீனாவிடம் தற்போது அமெரிக்காவிலும் பார்க்க அதிக அளவு கப்பல்கள் உள்ளன. உலகிலேயே அதிக அளவு கப்பல் உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதனால் விரைவில் சீனாவின் கடற்படைக் கப்பல்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கும். சீனா ஆண்டு தோறும் மூன்று நீர் மூழ்கிக் கப்பல்களை உற்பத்தி செய்கின்றது. 2020-ம் ஆண்டு சீனாவிடம் எழுபதிற்கும் அதிகமான நீர்முழ்கிக் கப்பல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சீனாவின் கப்பல்கள் நவீனமடைந்து வருகின்றன. 2018-ம் ஆண்டில் அமெரிக்காவின் கடற்படையின் மொத்தக் கலன்களின் எண்ணிக்கை 280ஆகும். ஆனால் அமெரிக்காவிடம் பத்து நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பயிற்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தக் கூடியது. எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமல்ல தர அடிப்படையிலும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் மேம்பட்டவையாகும். அமெரிக்கா தனது நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அகற்றிவிட்டு அவற்றின் இடத்திற்கு ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்து விட்டது. CVN -21 என்னும் குறியீட்டுப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் USS Gerald R Ford (CVN 78), USS John F Kennedy (CVN 79) ஆகிய இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உருவாக்கம் தொடங்கி விட்டன. ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் விமானம் தாங்கிப் பெருங்கப்பல்கள் என அழைக்கப்படுகின்றன.  2058-ம் ஆண்டு அமெரிக்கா பத்து ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா கொண்டிருக்கும். கடற்போரில் சீனா பின்னடைவைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றது.            

தென் சீனக் கடல்தான் போர் முனையா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் தென் சீனக் கடலில் ஆரம்பிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இரசியா கிறிமியாவை 2014 மார்ச் மாதம் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்த போது அமெரிக்காவால் தென் சீனக் கடலில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலையை சீனா தனக்கு சாதகமாகப் பாவித்து சீனா தென் சீனக் கடலில் தானது செயற்கைத் தீவு உருவாக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்தியது. ஆரம்பத்தில் அச் செயற்கைத் தீவில் படைக்கலன்கள் நிறுத்தப் பட மாட்டாது என அறிவித்த சீனா பின்னர் நாளடைவில் பல படைக்கலன்களை அத் தீவுகளில் நிறுத்திக் கொண்டிருக்கின்றது. 2014இல் சீனா கடலுக்குள் எழுப்பும் பெரும் சுவர் என அத்தீவுகள் விமர்சிக்கப்பட்டன. இப்போது சீனா அத்தீவுகளில் பெருமளவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளான சாம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. சீனா கடலுக்குள் எழுப்பும் சாம் பெருஞ்சுவர் என தென் சீனக் கடல் தீவுகள் தற்போது அழைக்கப்படுகின்றன. பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஜப்பான், குவாம் தீவு ஆகியவற்றில் அமெரிக்கா வைத்திருக்கும் படைத்தளங்களை எதிர் கொள்ளவே சீனா தனது ஏவுகணைகளை தென் சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. சீனா அமெரிக்க ஏவுகணைகளில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமயை வாங்கியுள்ளது.

ஆளில்லாப் போர்
இனி வரும் காலங்களில் ஆளில்லாப் போர் விமானங்கள் போரில் அதிகம் பாவிக்கப்படும். 2018 நவம்பர் 6-ம் திகதியில் இருந்து 11-ம் திகதி வரை நடந்த வான் கண்காட்சியில் சீனா காட்சிப்படுத்திய ஆளில்லா விமாங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. சிலர் சீனா ஆளில்லா விமான உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சிவிட்டது என்றனர். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடந்தால் ஆளில்லாப் போர் விமானங்கள் பெருமளவில் பயன் படுத்தப்படும். 2023-ம் ஆண்டில் இருந்து சீனா பெரும் மக்கள் தொகைக் கட்டமைப்பை சந்திக்க வேண்டியிருக்கும். நாட்டில் வயோதிபர்களே அதிகம் இருப்பார்கள். அதனால் இனி வரும் காலங்களில் அமெரிக்கா இயந்திர மனிதர்களை போரில் ஈடுபடுத்தும். செயற்கை விவேகத் துறையில் அமெரிக்காவும் கடுமையாகப் போட்டியிடுகின்றன. டென்மார் நாட்டில் இருந்து சீனா போர்க்களத்தில் பாவிப்பதற்கான மென்பொருளை வாங்கியுள்ளது. அமெரிக்க சீனப் போரில் மரபு வழிப் போர் தொடங்க முன்னர் இணையவெளிப் போர் நடக்கும்.                                    

சீனப் பொருளாதாரத்தின் கழுத்தில் அமெரிக்க கத்தி
சீனாவைச் சுற்றிவர அமெரிக்கா அமைத்துள்ள கடற்படைத் தளங்களுக்குள் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள கடற்படைத் தளங்கள் முக்கியமானவையாயும். அமெரிக்காவிற்கு சொந்தமான குவாம் தீவிலும் அமெரிக்கா பெரும் கடற்படைத் தளத்தை வைத்துள்ளது. மலேசியாவில் இருக்கும் அமெரிக்கக் கடற்படை சீனாவின் பொருளாதாரத்தின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள கத்தி எனச் சொல்லலாம். மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்க நீரிணையைத் தாண்டி சீனக்கப்பல்கள் பயணிக்காமல் அமெரிக்காவால் தடுக்கலாம்.

போரில் நட்பு முக்கியம்
அமெரிக்காவிற்கு எதிரான போரில் சீனா வெற்றியடைந்தால் இந்தியாவின் வட கிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா ,சிக்கிம் திரிபுரா ஆகிய மாநிலங்களை சீனா அபகரிக்கும். அதனால் அமெரிக்க சீனப் போரில் சீனா வெற்றியடையாமல் இருப்பத இந்தியா உறுதி செய்வது மிகவும் அவசியம். இதே நிலைமைதான் ஜப்பானுக்கும். சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொள்வதில் ஜப்பான் அதிக விருப்பம் கொண்டுள்ளது. சீன பாக்கிஸ்த்தான் உறவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைய வளர்ச்சியடைய இந்தியா சீனாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணையும் வாய்ப்புக்களும் அதிகரித்துக் கொண்டே போகும்.

சீனப் பொருளாதார வளர்ச்சி தொடருமா?
அமெரிக்காவுடன் போரில் வெல்வதற்கு சீனாவிடம் உறுதியான பொருளாதாரம் அவசியம். தொடர்ந்து நான்கு பத்தாண்டுகளாக வெற்றிகரமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் ஒரு முற்றுப் புள்ளிக்கு வரலாம். அது தேய்வடையலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் கருத்தை சீனப் பொதுவுடமைக் கட்சியினர் மறுக்கின்றனர். தமது திட்டமிட்ட பொருளாதாரம் முதலாளித்துவப் பொருளாதாரம் போல் தளம்பாது என்கின்றனர். அமெரிக்க சீனப் போர் தொடங்குவதற்கான சூழல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும் என உறுதி செய்யப்பட்ட பின்னர் வருவதை சீனா விரும்பும். அதற்கு முன்னர் போரைத் தொடங்க அமெரிக்கா விரும்பும்.

Monday, 12 November 2018

அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள்



அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அதிபர் தேர்தல் நடக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பாராளமன்றத் தேர்தல் நடக்கும். அதிபர் தேர்தல் நடக்கும் போது பாராளமன்றத்திற்கும் தேர்தல் நடந்தால் அது பொதுத் தேர்தல் என்று அழைக்கப்படும். அதிபர் தேர்தல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் பாராளமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படும். இடைக்காலத் தேர்தல் அதிபராக இருப்பவரின் ஆட்சிமீதான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாகக் கருதப்படும். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் இருந்து ஒரு மாநிலத்திற்கு இரு உறுப்பினர் என்ற அடிப்படையில் மூதவைக்கு நூறு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு கால சுழற்ச்சி முறையில் தெரிவு செய்யப்படுவர்.

இரண்டு அவைகள் கொண்ட பாராளமன்றம்
அமெரிக்கப் பராளமன்றம் மக்களவை, மூதவை என இரு அவைகளைக் கொண்டது. இரண்டுக்கும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். மக்களவையின் மொத்த 435 உறுப்பினர்களுக்குமான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும். மொத்தம் 100 உறுப்பினர்களைக் கொண்ட மூதவையின் மூன்றில் ஒரு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும். தெரிவு செய்யப்பட்ட மூதவை உறுப்பினர் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கலாம் ஆனால் மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. 2018 நவம்பர்-6-ம் திகதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மூதவை உறுப்பினர் 03-01- 2019 முதல் 0-01-2025 வரை பதவியிலிருப்பார்.

மாறிய மக்களவை
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை மூதவை ஆகிய இரண்டும் 2018 நவம்பர் தேர்தலுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. குடியரசுக் கட்சி மக்களவையில் 235 தொகுதிகளையும் மூதவையில் 51 தொகுதிகளையும் வைத்திருந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவு 2018 நவம்பர் 6-ம் திகதி நடந்த இடைக்காலத் தேர்தல் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அக்கறையுடன் நோக்கப்பட்டது. அதில் மக்களவையை டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சி கைப்பற்ற மூதவையை டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சி கைப்பற்றிக் கொண்டது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 101 பெண் உறுப்பினர்கள் மக்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் இரு இஸ்லாமியர்கள் உட்பட 87 பெண்களை மக்களாட்சிக் கட்சியினர் வெற்றி பெற வைத்தனர். மக்களாட்சிக் கட்சியின் வெற்றியில் ஆபிரிக்கர், ஆசியர், லத்தின் அமெரிக்கர் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

டிரம்ப் பதவிக்கு வந்து செய்தவை:
1. பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இரத்து செய்தமை
2. செல்வந்தர்களுக்கான வரியைக் குறைத்தமை.
3. மெக்சிக்கோவுடனான எல்லையில் படையினரை நிறுத்தி சட்ட விரோதக் குடியேற்றக்கார்களை தடுப்பமை.
4. இஸ்ரேலுக்கு சார்பாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியமை.
5. பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் இறக்குமதிகளுக்கு வரிகளை அதிகரித்து வர்த்தகப் போரை ஆரம்பித்தமை.
6. ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிமை.
7. மற்ற நேட்டோ நாடுகள் பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியமை.
8. முன்னணி நாடுகளிடையேயான சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கெடுத்தமை.
9. அமெரிக்காவின் அணுக்குண்டு கொள்கையை மாற்றியமை.

டொனால்ட் டிரம்ப் செய்த வருமான வரிச் சீர்திருத்தம் அமெரிக்கர்கள் செலுத்தும் வரியை 1.5ரில்லியன் டொலர்களால் குறைத்தது. அதனால் பல முதலீடுகள் அமெரிக்காவில் செய்யப்பட்டன. அதை டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையில் முன்வைத்தபோது மக்களாட்சிக் கட்சியினர் அது செல்வந்தர்களுக்கு மட்டும் நன்மையளிப்பது என்ற பரப்புரையை முன்வைத்தனர். டிரம்பினுடைய வர்த்தகப் போரால் பல அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும் அது அவரின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தவில்லை மாறாக பல அமெரிக்கர்கள் மத்தியில் அவரது மதிப்பை உயர்த்தியது. தாம் ஆட்சிக்கு வந்தால் டிரம்ப் 2016 தேர்தலின் போது இரசியாவுடன் இணைந்து செயற்பட்டமைக்காக அவரைப் பதவி நீக்கம் செய்வோம் என்பதை தமது தேர்தல் பரப்புரையாக மக்களாட்சிக் கட்சியினர் முன் வைக்கவில்லை. அப்படிப் பரப்புரை செய்தால் அமெரிக்காவில் உள்ள தேசியவாதிகளும் வலதுசாரிகளும் திரண்டு வந்து டிரம்பிற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் எனற கரிசனையால் அவர்கள் அதை முன்வைக்கவில்லை.

டிரம்பிற்கு எதிரான விசாரணை
புதிய மக்களவையால் டிரம்பிற்கு பெரும் பிரச்சனையாக அமையப் போவது 2016 அவர் வெற்றி பெற்ற தேர்தலில் இரசியத் தலையீடு தொடர்பான விசாரணையே. 2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்றபோது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. FBI டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது அமெரிக்க FBI நீதித்துறையின் கீழ் செயற்படுகின்றது. அதன் தலைமை இயக்குனரான ஜேம்ஸ் கொமி டிரம்ப் பதவி ஏற்க முன்னரே டிரம்பினது தேர்தல் பரப்புரைக்குழுவிற்கும் இரசிய உளவுத் துறைக்கும் தொடர்புகள் இருந்ததா என்பதைப் பற்றி துப்பறியத் தொடங்கினார். டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் தொடர்பு கொண்டு மைக்கேல் ஃபிளைன் அருமையான மனிதர் எனச் சொல்லி அவரை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் ஜேம்ஸ் கொமியை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு அழைத்த டிரம்ப் தான் விசாரணக்கு உட்படுத்தப்படவில்லை என பகிரங்கமாக அறிக்கை ஒன்றை விடும்படி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் தனக்கு விசுவாசமாக நடப்பதாக ஒரு உறுதிமொழி வழங்கும் படியும் டிரம்ப் ஜேம்ஸ் கொமியைக் கேட்டுக் கொண்டார்.  ஃபிளைன் மீதான குற்றச்சாட்டுக்கள் பல ஊடகங்களில் அடிபட டிரம்ப் மைக்கேல் ஃபிளைனை பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று. ஆனால் ஜேம்ஸ் கொமி டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களினதும் செயற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை நீதித்துறையிடம் கோரினார். இது டிரம்ப்பிற்கு தெரிய வந்தது. டிரம்ப் வழமையான செயற்பாடுகளுக்கு மாறாக ஜேம்ஸ் கொமியைப் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் ஏற்பட்ட பரபரப்புக்களுக்கு மத்தியில் அமெரிகாவின் துணைச் சட்டமா அதிபர் டேவிட் முல்லரை 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டதா என்பது தொடர்பாக சிறப்பு விசாரணையாளராக நியமித்தார். அவர் டிரம்பின் பல ஆதரவாளர்கள் மீது வழக்குத் தாக்குதல் செய்தார். டிரம்ப் டேவிட் முல்லரை பதவி நீக்கம் செய்யும் படி சட்டமா அதிபரைக் கோரினார். அவர் செய்யவில்லை. 2018 நவம்பர் தேர்தல் முடிந்தவுடன் டிரம்ப் முதல் செய்த வேலை சட்டமா அதிபரைப் பதவி விலகும்படி வேண்டியதே. அவரும் பதவி விலகினார். புதிதாக வரும் சட்டமா அதிபர் சிறப்பு விசாரணையாளர் டேவிட் முல்லரை பதவி நீக்கம் செய்யலாம். ஆனால் அவர் மட்டும் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இரசியத் தலையீடுபற்றியும் இரசியர்களுடன் டிரம்பின் தேர்தல் பரப்புரையாளர்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும் டேவிட் முல்லர் மட்டும் விசாரிக்கவில்லை. மக்களவை மூதவை ஆகிய இரண்டினதும் புலனாய்விற்குப் பொறுப்பான தெரிவுக் குழுக்களும் விசாரணைகள் செய்கின்றன. முல்லரின் விசாரணைகள் நிறுத்தப் படுவதை டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை.

பிடியாணை மிரட்டல்
புதிய சட்டமா அதிபரால் சிறப்பு விசாரணையாளர் டேவிட் முல்லர் பதவி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நிறுத்தப் பட்டால் மக்களவை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தும். மக்களவையின் புலனாய்விற்கான தெரிவுக்குழு டேவிட் முல்லர் விட்ட இடத்தில் இருந்து விசாரணையைத் தொடங்கும் இத் தெரிவுக் குழுவிற்கு முல்லரிலும் பார்க்க அதிகாரங்கள் உண்டு. எந்த நேரத்திலும் எவர் மீதும் விசாரணைக்கான பிடியாணையைப் பிறப்பிக்க முடியும். மக்களவை பிடியாணைகளை பிறப்பித்தால் தானும் பதிலடியாக பிடியாணைகளைப் பிறப்பித்து அரச இயந்திரத்தை செயற்படாமல் செய்வேன் எனவும் டிரம்ப் மிரட்டியுள்ளார். “அவர்கள் விளையாடலாம். ஆனால் நாம அவர்களிலும் பார்க்க சிறப்பாக ஆடுவோம்” என்றார் டிரம்ப். அமெரிக்க நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட டிரம்பின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் மக்களாட்சிக் கட்சியினர் விசாரணைகளை நடத்துவர்.

மீண்டும் மருத்துவக் காப்புறுதி
அமெரிக்காவின் பாதீடு தொடர்பாக மக்களவைக்கு இருக்கும் அதிகாரம் டிரம்பிற்கு பெரும் தலையிடியாக அமையும். ஒபாமா ஆட்சியில் இருக்கும் போது அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை டிரம்ப் இரத்துச் செய்தார். அதை அல்லது அதற்கு ஈடான புதிய ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டங்களை மக்களாட்சிக் கட்சியினர் மக்களவையில் மீண்டும் கொண்டு வருவார்கள். அது அமெரிக்க அரச நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பு சுமத்தப்படலாம். ஆனால் பல முதலீட்டாளர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் புதிய வரிச்சட்டங்கள் ஏதும் இயற்றப்படமாட்டாது என நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கை தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் பங்குச் சந்தையில் பெரும் விலை அதிகரிப்பாக வெளிப்பட்டது.

சீனாவின் நிம்மதிப் பெருமூச்சு
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளால் அதிகம் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சீனாவாகத்தான இருக்க முடியும். டிரம்ப் தான் தோன்றித்தனமாக நடக்க முடியாமல் மக்களவையால் இனி தடைகள் போட்டு அவரது விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கு தாமதம் ஏற்படுத்த முடியும். ஆனால் சீனா அமெரிக்காவிற்குச் செய்யும் மிகையான ஏற்றுமதியையிட்டும் அமெரிக்க படைத்துறை மற்றும் உற்பத்தித் துறை இரகசியங்களை சீனா திருடுகின்றது என்பதையிட்டும், சீனா அமெரிக்காவிற்கு உலக அரங்கில் சவாலாக உருவெடுப்பதையிட்டும் டிரம்பைப் போலவே மக்களாட்சிக் கட்சியினரும் அதிக கரிசனை கொண்டுள்ளனர்.

கரிசனை கொண்ட இரசியா
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் அதிக கரிசனை கொண்ட நாடாக இரசியாதான் இருக்கும். 2016 நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் சோவியத்தின் கேஜிபி உளவாளியாகச் செயற்பட்ட விளாடிமீர் புட்டீன் ஒரு மனிதப் பிறவியாக இருக்க முடியாது எனச் சொன்னபடியாலும் புட்டீனை அடக்க வேண்டும் என்ற கொள்கையை ஹிலரி கொண்டிருந்தமையாலும் அவரை சதி செய்து தோல்வியடைய வைத்தது புட்டீனின் இரசியா எனக் கருதி ஆத்திரமடைந்துள்ள மக்களாட்சிக் கட்சியினர் தற்போது மக்களவையில் பெரும்பான்மையினராக உருவெடுத்துள்ளனர். இரசியத் தலையீட்டை எப்படியாவது அம்பலப்படுத்த எல்லா முயற்ச்சிகளையும் மக்களாட்சிக் கட்சியினர் எடுப்பார்கள்.

இஸ்ரேல் அசையாது
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அதிபரும் மூதவையுமே அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் சட்டவாக்கல் அதிகாரம் கொண்ட மக்களவையை கையில் வைத்திருக்கும் மக்களாட்சிக் கட்சியினரால் இஸ்ரேலுக்கு சாதகமான சட்டங்களை இயற்ற முடியும். இருந்தும் வாஷிங்டனில் செயற்படும் வலிமை மிக்க யூதப் பரப்புரைக் குழுவினர் யார் ஆட்சியிலிருந்தாலும் இஸ்ரேலுக்கு சாதகமாக அமெரிக்காவை வைத்திருப்பர்.

இந்தியா இலங்கை மாற்றம் இருக்காது.
டிரம்ப் அமெரிக்காவை ஜெனீவா மனித உரிமைக்கழகத்தில் இருந்து விலக்கியது இலங்கை ஆட்சியாளர்களை பெரும் நிம்மதியடைய வைத்தது. அமெரிக்காவை மீண்டும் மனித உரிமைக்கழகத்தில் சேர்க்க மக்களவையால் முடியாது. முன்பு இல்லாத வகையில் டிரம்பின் ஆட்சியில் அமெரிக்காவும் இந்தியாவும் படைத்துறை அடிப்படையில் அதிகம் நெருங்கியுள்ளன.


அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கும் மக்களவைக்கும் இடையில் அவ்வப்போது இழுபறி நடப்பதுண்டு. ஆனால் அமெரிக்க வரலாற்றில் என்றுமே இல்லாத மோசமான இழுபறி விடாக்கண்டனான டிரம்பிற்கும் பல கொடாக்கண்டர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களவைக்கும் இடையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும்.

Monday, 5 November 2018

விசாரணைக்கு உள்ளாகும் இந்திய சிபிஐ அதிகாரிகள்


ஆந்திரப் பிரதேச நிதி அமைச்சர் நரேந்திர மோடி சிபிஐ, ஆர்பி ஐ போன்றவற்றை விழுங்குகின்ற ஒரு மலைப்பாம்பு என விமர்சிக்கும் அளவிற்கு இந்தியாவில் நிலைமை மாறியுள்ளது. இந்தியாவின் உச்ச குற்றத் தடுப்பு அமைப்பான சிபிஐ (Central Bureau of Investigation) எனப்படும் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குனர் அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். இந்தியாவில் முறை கேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் திடீர் சோதனை செய்வதை வழமையாகக் கொண்ட அதன் அதிகாரிகள் தமது தலைமைச் செயலகத்திலேயே திடீர் சோதனை நடத்தி சாதனை படைத்துள்ளனர். இது சிபிஐயின் 55 ஆண்டுகால வரலாற்றில் நடக்காத ஒன்றாகும்.  இவர்களில் சிறப்பு இயக்குனர் ராகேஸ் அஸ்தானா மோடியின் செல்லப் பிள்ளை என விமர்சிக்கப்படுகின்றார். சிபிஐயை ஒரு நம்பகரமான, பக்கச் சார்பற்ற சுதந்திரமான அமைப்பாக இயங்குவதை நரேந்திர மோடி உறுதி செய்யத் தவறிவிட்டார் என காங்கிரசுக் கட்சி குற்றம் சுமத்துகின்றது.

என்ன இந்த சிபிஐ?
பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் (1941) உருவாக்கப் பட்ட சிறப்பு காவற்துறை அமைப்பு (Special Police Establishment) என்ற குற்றத் தடுப்புப் பிரிவு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் சிபிஐயாக மாற்றப்பட்டது. சிபிஐ என்றவுடன் மனதில் தோன்றுவது அமெரிக்காவின்  FBIஎனப்படும் FederalBureau of Investigation ஆகும். அமெரிக்காவில் Federal எனப் பாவிக்கப்படும் இடங்களில் இந்தியாவில் Central என்ற சொல் பாவிக்கப்படுவது உண்டு. ஆனால் இரண்டு அமைப்புக்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. FBI நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் விசாரணை நடத்தவும் நடுவண் அரசினதோ அல்லது மாநில அரசினதோ அனுமதியின்றிச் சோதனையிடம் அதிகாரம் உண்டு. ஆனால் சிபிஐ நடுவண் அரசு, நீதிமன்றம், மாநில அரசு ஆகியவற்றின் அனுமதியுடன் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள முடியும். FBI நீதித் துறையின் கீழ் உள்ள அமைப்பாகும். சிபிஐ தற்போது தலைமை அமைச்சரின் கீழ் உள்ள அமைப்பாகும். FBI இயக்குனரை அமெரிக்க அதிபர் மூதவையின் அனுமதியுடன் நியமிப்பார். அவரது பதவிக் காலம் 7 ஆண்டுகள் ஆகும். சிபிஐயின் உயர் பதவிகளை தலைமை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நிதிபதை ஆகிய மூவரையும் கொண்ட குழு நியமிக்கும். உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிபிஐ மாநில அரசுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

கூண்டுக்கிளியான சிபிஐ
2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது சிபிஐயை அரசின் கூண்டுக் கிளி என இந்திய உச்ச நீதிமன்றம் விபரித்திருந்தது. இப்போது உச்ச நீதி மன்றமே அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு மாறிவிட்டது எனச் சிலர் குற்றம் சுமத்துகின்றனர். தகவலறியும் சட்டத்தில் இருந்து சிபிஐயிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் சிபிஐயிற்கு நியமிக்கப்படுவர். ப சிதம்பரம், சதீஷ் தரூர், நிராவ் மோடி போன்ற பல பிரபலங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை செய்து கொண்டிருக்கின்றது.

சிபிஐயில் மோடியின் செல்லப்பிள்ளை
சதீஷ் பாபு சானா என்ற வர்த்தகர் இறச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் கிடைத்த வருமானத்திற்கு வரிகட்டாமல் ஏமாற்றினார் என்ற குற்றச் சாட்டில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதிலிருந்து அவரை விடுவிக்க சிபிஐயின் சிறப்பு இயக்குனரும் மோடியின் செல்லப் பிள்ளையுமான ராகேஷ் அஸ்தானா இலஞ்சம் பெற்றுக் கொண்டார் என சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மா குற்றம் சுமத்தி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். சிபிஐயின் சிறப்பு இயக்குனராக ராக்கேஷ் அஸ்தானா நியமிக்கப்படும் போதே அவர் மீது பல குற்றவிசாரணை நடந்து கொண்டிருப்பதால் அவரை நியமிக்க வேண்டாம் என அரசை சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மா கேட்டுக் கொண்டிருந்தார்.

காவற்றுறைப் பணம் கட்சிக்குத் தாவியதா?
முன்னாள் காவற்றுறை துணை ஆய்வாளர் (retired police sub-inspector) ஒருவர் தனது மின்னஞ்சலில் மூலம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா குஜராத்தில் காவற்றுறை ஆணையாளராகக் கடமை புரியும் போது காவற்றுறை ஊழியர்களின் நலன் நிதியத்தில் இருந்து இருபது கோடி ரூபாயை பாரதிய ஜனதக் கட்சியின் தேர்தல் நிதிக்கு மாற்றினார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். இது நடந்தது குஜராத்தின் முதல்வர்காக நரேந்திர மோடி இருந்த போதாகும். அது மட்டுமல்ல 2012-ம் ஆண்டு காவற்றுறை அதிகாரி சதீஷ் வர்மா என்பவர் ராகேஷ் அஸ்தானா பல அரச செயற்பாடுகளில் தலையிட்டிருந்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 2015-ம் ஆண்டு சேவையில் இருக்கும் போது கொல்லப்பட்ட ஒரு கவற்துறைப் பணியாளரின் குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்க ஊழியர் நல நிதியத்தில் பணம் இருக்கவில்லை. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அந்த நிதியத்தின் பணத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்வியை ஒரு காவற்றுறை அதிகாரி எழுப்பியபோது அவருக்குப் பதில் வழங்கப்படவில்லை.

பிரஷாந்த் பூஷண்
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் என்பவர் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்திருந்தார். அவர் நேர்மையற்றவர் எனத் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. ராகேஸ் அஸ்தானா ஐந்து தடவைகள் இலஞ்சம் பெற்றிருந்தார் எனக் கருதப்படுகின்றது. 2018 ஒக்டோபர் 15-ம் திகதி ராகேஷ் அஸ்தானா தேவேந்தர் குமார் ஆகிய இருவர்மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தேவேந்தர் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தான கைது செய்யப்படாமைக்கு அவரது அரசியல் செல்வாக்கு எனக் குற்றம் சாட்டப்பட்டது. பிரஷாந்த் பூஷண் இந்தியா பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது எனப் போராடி வருபவர். மோடி தலைமியிலான அரசு 126 விமானங்களுக்குக் கொடுக்க வேண்டிய விலையை 36 விமானங்களுக்கு கொடுத்து இந்திய விமானப் படையின் முதுகெலும்பை உடைத்தது என்பது அவரது கருத்தாகும். ரஃபேல் கொள்வனவு தொடர்பான எல்லாப் பத்திரங்களையும் பாராளமன்றக் கூட்டுக் குழுவிற்கு சமர்ப்பித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குரல் கொடுத்து வருகின்றார்.

நடுவண் கண்காணிப்பு ஆணையத்திடம்(CVC) முறையீடு
சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மாவிடம் ரஃபேல் விமான ஊழல் தொடர்பாக பல புகார்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை விசாரிக்க்க வர்மா ஆரம்பித்த போது மோடியின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் சிபிஐயின் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாமீது ஊழல் குற்றம் சுமத்தினார். ராகேஸ் அஸ்தானா அலோக் வர்மாவிற்கு எதிராக நடுவண் கண்காணிப்பு ஆணையத்திடம்(CVC) முறையீடு செய்தார். நடுவண் கண்காணிப்பு ஆணையத்திடம்(CVC) என்பது இந்திய அரச உயர் மட்டத்தில் நடக்கும் ஊழல்களைப் பார்த்துக் கொள்வதற்காக 1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அது சிபிஐ போல ஒரு விசாரணை செய்யும் அமைப்பல்ல. அலோக் வர்மா உச்ச நீதிமன்றம் சென்றார். உச்ச நீதிமன்றம் நடுவண் கண்காணிப்பு ஆணையம்(CVC) இரண்டு வாரங்களுக்குள் அலோக் வர்மா மீதான குற்றச் சாட்டை விசாரித்து முடிக்க வேண்டும் என 2018 ஒக்டோபர் 27-ம் திகதி உத்தரவிட்டது. அத்துடன் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ கே பட்நாயக்கை நடுவண் கண்காணிப்பு ஆணையத்தின்(CVC) விசாரணையாளராகவும் நியமித்தது. 2018 ஒக்டோபர் 30-ம் திகதி ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச் சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவரை விசாரித்து பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட சிபிஐ அதிகாரியான ஏ கே பஸ்ஸீ உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்தார். மனோஜ் பிரசாத் என்னும் துபாய் வர்த்தகருக்கும் ராகேஷ் அஸ்தானாவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் அங்கு சமர்க்கிப்பட்டன.
 .
சிபிஐ அதிகாரிகள் சீசரின் மனைவி போன்றவர்கள்
அலோக் வர்மா, ராகேஸ் அஸ்தானா ஆகிய இருவரையும் இந்திய அரசு கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இருவரும் சிபிஐயில் ஓர் உள் மோதலை உருவாக்கியுள்ளனர். அவர்கள் சீசரின் மனைவிபோல் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றா இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. சிபிஐயின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஷ்வர் ராவ் பொறுப்பேற்றதும் முதற்செய்த வேலை அலோக் வர்மாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படுக் சிபிஐ அதிகாரிகள் 13 பேர் சிபிஐயில் இருந்து வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த 13 பேரில் ராகேஷ் அஸ்தானாவின் ஊழலை விசாரிப்பவர்களும் அடங்குவர். ரஃபேல் விமானம் வாங்குவதில் மோடி செய்த ஊழலை மறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

சத்தியக் கடுதாசி கேட்கும் உச்ச நீதிமன்றம்
பிரான்ஸிடமிருந்து கொள்வனவு செய்யும் 36 ரஃபேல் போர்விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான தகவல்களை உச்ச நீதிமன்றம் கேட்ட போது இந்திய அரசு சார்பில் அதில் பாதுகாப்பு இரகசியம் தொடர்பு பட்டிருப்பதால் அத் தகவல்களைப் பாராளமன்றத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ சமர்ப்பிக்க முடியாது என அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏன் அத்தகவல்களை உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியாது என்பதற்கான விளக்கத்தை ஒரு சத்தியக் கடுதாசி மூலம் தெரிவிக்கும் படி உச்ச நீதி மன்றம் இந்திய அரசைக் கோரியுள்ளது. பின்னர் 2018 நவம்பர் 2-ம் திகதி காங்கிரசுக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்கியது சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளார். நடுவண் கண்காணிப்பு ஆணையத்திற்கு(CVC) சிபிஐ இயக்குனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை என்பது அவரது விவாதமாகும்.

சிபிஐயை அடுத்து ஆர்பிஐ
ரஃபேல் கொள்வனவில் ஊழல் உண்டு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிக் கொள்வது ஒரு புறம் இருக்க சிபிஐயில் ஊழல் நடப்பது உட்பூசலும் அம்பலமானது. அது ரஃபேல் தொடர்பான விசாரணையுடம் சம்பந்தப்பட்ட உட்பூசல் எனக் குற்றம் சாட்டப்படும் வேளையில் நரேந்திர மோடியின் இந்திய அரசுக்கு இன்னும் ஒரு தலையிடி தொடங்கியுள்ளது. இந்தியாவின் வட்டி விழுக்காடு குறைக்கப்பட வேண்டும் என இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருதுகின்றார். ஆனால் ஆர்பிஐ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய நடுவண் வங்கியான ரிசேர்வ் வங்கி இந்திய நாணயமான ரூபா வலிவிழந்திருக்கும் வேளையில் அப்படி ஒன்றைச் செய்ய மறுக்கின்றது. இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தல் 2019 மே மாததில் வரவிருப்பதால் இப்போதிருந்தே மக்கள் கைகளில் அதிக பணம் புழங்கச் செய்தால் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என அருண் ஜெட்லி கருதலாம். இதனால் இந்திய அரசுக்கும் நடுவண் வங்கியான ஆர்பிஐயிற்கும் இடையில் ஒரு முறுகல் நிலை தோன்றியுள்ளது. ரிசேர்வ் வங்கியின் துணை ஆளுநர் பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து ஆர்பிஐயின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது எனத் தெரிவித்தார். அத்துடன் இந்த முறுகலால் ஆளுநர் பதவி விலகலாம் எனச் செய்திகள் வெளிவருகின்றன. இது இந்தியாவின் நாணய மதிப்பைப் பாதிக்கலாம். அது ஆளும் கட்சிக்கு தேர்தல் தோல்வியைக் கொண்டு வரலாம்.


Monday, 22 October 2018

இரசியாவும் புட்டீனும் சவால்களும் சமாளிப்புக்களும்


இரசியாவைத் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் அமெரிக்காவும் மற்ற நேட்டோக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் 2014-ம் ஆண்டில் இருந்து கடுமையாக முயற்ச்சிக்கின்றன. 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவில் இரசியா தன்னுடன் இணைத்த கிறிமியா உக்ரேனுக்கு சொந்தமானது என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 100 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை 24 நாடுகள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இது இரசியாவைத் தனிமைப்படுத்தும் முதல் முயற்ச்சியாகப் பார்க்கப்பட்டது. இந்த நாடுகள் இரசியா மீது விதித்த பொருளாதாரத் தடை இரசியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தின. இரசிய நாணயமான ரூபிளின் வீழ்ச்சி பொருளாதார வளர்ச்சி குன்றியமை, பன்னாட்டுக் கடன்களை இரசியா பெற முடியாமற் போனமை எனச் சில பின்னடைவுகளை இரசியா சந்தித்தது. ஆனால் இரசியா வலுவிழந்த தனது நாணயப்பெறுமதியை தனக்கு சாதகமாக்கி தனது ஏற்றுமதியை அதிகரித்தது. மற்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து செயற்படுவதைத் தீவிரப்படுத்தியது. இரசியாவில் புட்டீனை விரும்புவோர் 85 விழுக்காடாக உயர்ந்தது.

இரசிய ஆட்சி முறைமைச் சவால்கள்
1993-ம் ஆண்டு வரையப்பட்ட இரசிய அரசியலமைப்புச் சட்டப்படி இரசியாவின் ஆட்சி முறைமை தலைவரால் நடத்தப்படும் கூட்டாட்சி குடியரசு (federal presidential republic) என விபரிக்கப்படுகின்றது. ஆனால் தனிமனித ஆதிக்கம், ஊழல் போன்றவற்றால் அது மாசு படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப்படுகின்றது. மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்படும் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. 2008-ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தப்பட்டு அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. பாராளமன்றத்தின் அனுமதியுடன் தலைமை அமைச்சரை அதிபர் நியமிப்பர். பாராளமன்றம் இரு அவைகளைக் கொண்டது கீழவைக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநில அரசுகளும் இரு உறுப்பினர்களை மேலவையான கூட்டாட்சித் சபைக்குத் தெரிவு செய்யும். இரசியர்கள் பொதுவுடமை ஆட்சியின் கீழ் 70 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி முறைமை பற்றிய அனுபவம் குறைவு. அதனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் அடக்கு முறையின் கீழ் வாழ்வது அவர்களுக்கு சிரமமல்ல. அதனால் ஊழல் குறைந்ததும் பொறுப்புக் கூறும் தன்மை மிக்கதுமான  ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடக் கூடிய மக்களாட்சி முறைமை இரசியாவில் இருக்கின்றது. ஆனால் அக்கட்சிகள் எவ்வளவு சுதந்திரமாகச் செயற்படுகின என்பது கேள்விக்குறியே. புட்டீனை எதிர்த்த அலெக்ஸி நவன்லி சிறையில் அடைக்கப்பட்டார் விமர்சித்த பொறிஸ் நெமொ மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புட்டீன் பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றார். 2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட புட்டீனின் ஐக்கிய இரசியக் கட்சி இரசியப் பாராளமன்றத்தின் 450 தொகுதிகளில் 335ஐக் கைப்பற்றி வைத்திருக்கின்றது.  பழைமை வாதத்தையும் தேசிய வாதத்தையும் கலந்த கொள்கையுடைய கட்சி இரு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. சில கட்சிகள் பல கட்சி முறைமை இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச் சாட்டையும் மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றார்கள்.
வெளிச் சவால்
இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தமை இரு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று இரசியப் பொருளாதாரத்தை சிதைத்து அதன் படைத்துறைச் செலவைக் குறைத்து அதனால் தமக்கு உள்ள அச்சுறுத்தலை இல்லாமற் செய்வது. இரண்டாவது பொருளாதாரச் சிதைவால் பாதிக்கப்பட்ட இரசிய மக்களை புட்டீனுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்து அவரைப் பதவியில் இருந்து அகற்றுவது. பொருளாதாரத் தடையால் இரசியாவின் 50 செல்வந்தர்களுக்கு 12பில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

உள்ளகச் சவால்
உலக அரங்கில் தனக்கு எதிராக நகர்த்தப்பட்ட காய்களை சரியாகக் கையாண்ட இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தற்போது சில உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார். சமூக வலைத்தளங்களூடாக உலகை இரசியர்கள் பார்ப்பது அதிகரித்துச் செல்லும் போது இரசியர்கள் தாமும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களைப் போல் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோப் படைக்கூட்டமைப்பிலும் இணைந்த முன்னாள் சோவியத் ஒன்றிய நாட்டு மக்களைப் போல் வாழவேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள். இது இரசிய ஆட்சியின் மீது விளடிமீர் புட்டீனின் பிடியைத் தளரச் செய்யும் என சில மேற்கு நாடுகளின் அரசுறவியலாளர்களும் ஆய்வாளர்களும் கருதுகின்றனர். 1999-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதவிக்கு வந்த புட்டீனின் 19 ஆண்டு கால ஆட்சி இரசியர்களுக்கு சலிப்புத் தட்டுவது இயற்கை. இப்போது புட்டீனின் ஆட்சியை விரும்புவோர் 60விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இது இரசியாவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. 2014-ம் ஆண்டின் பின்னர் இரசியர்கள் மீது அதிகரிக்கப்பட்ட பொருளாதாரச் சுமையை தமது நாட்டின் பெருமையைக் கருதி அவர்கள் பொறுத்துக் கொண்டனர். ஆனால் புட்டீன் ஓய்வூதியம் பெறும் வயதை ஆண்களுக்கு 65 ஆகவும் பெண்களுக்கு 55 ஆகவும் அதிகரித்ததை இரசியர்கள் பலர் வெறுக்கத் தொடங்கினர். மக்கள் தொகையில் அதிக வயோதிபர்களைக் கொண்ட இரசியாவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மெலும் இரசியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 என்பதால் ஓய்வ் என்பதே இல்லாத நிலை பல இரசியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு புட்டீன் ஓய்வூதிய வயதை தான் உயர்த்த மாட்டேன் என இரசிய மக்களுக்கு உறுதி மொழி வழங்கியிருந்தார். 2018 செப்டம்பர் மாதம் நடந்த மூன்று பிராந்திய ஆளுநர்களுக்கான தேர்தல்களில் புட்டீனின் ஐக்கிய இரசியக் கட்சி தோல்வியடைந்தது. தேசியவாதக் கட்சிகள் வெற்றியடைந்தன.

பொருளாதாரச் சவால்
2018 ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இருந்து எரிபொருள் விலை 14 விழுக்காட்டால் அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை டொலரிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. டொலருக்கு எதிராக இரசிய ரூபிளின் பெறுமதி 2018 ஏப்ரலில் இருந்து 15விழுக்காடு குறைந்துள்ளது. அதிகரிக்கும் எரிபொருள் விலையும் வீழ்ச்சியடையும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதியும் இரசியாவிற்கு இரட்டிப்பு நன்மையைக் கொடுக்கின்றது. எரிபொருளால் கிடைக்கும் வருமானம் இரண்டாலும் அதிகரிக்கின்றது. ஒரு பீப்பாய் எரிபொருள் விற்பனையால் இரசியாவிற்கு 2017 இறுதியில் 3835ரூபிள்கள் கிடைத்தது. 2019 ஒக்டோபரில் அது 5262ரூபிளாக உயர்ந்துள்ளது. இது இரசியப் பொருளாதாரத்திற்கு பெரும் வாய்ப்பாகும். இரசியாவின் இரு பெரும் எரிபொருள் உற்பத்தி நிறுவனங்களான Rosneft Oil Co., Lukoil Oil Co. ஆகியவற்றின் பங்கு விலைகள் முறையே 56விழுக்காட்டாலும் 39 விழுக்காட்டாலும் உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு எந்த ஒரு மேற்கு நாட்டு எரிபொருள் உற்பத்தி நிறுவனத்தின் பங்கு விலையும் இப்படி உயர்ந்ததில்லை. இரசியாவின் பங்குச் சந்தை 2018 ஆண்டு செப்டம்பர் வரை அமெரிக்காவின் பங்குச் சந்தையிலும் பார்க்கவும் வளர்முக நாடுகளின் பங்குச் சந்தையிலும் பார்க்கவும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் இரசியா கடன்பட முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் இரசியா நன்மையைக் கண்டுள்ளது. இரசியாவின் வெளிநாட்டுக்கடன் இப்போது குறைந்துள்ளது. அது மொத்தத் தேசிய உற்பத்தியின் 32 விழுக்காடாக உள்ளது. பெறுமதி குறைந்த ஒரு நாணயத்தால் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும் என்பது பொதுவான விதி. இதற்கு இரசியா விதிவிலக்கல்ல. ரூபிளின் பெறுமதி குறைவடைததால் இரசியாவில் பணவீக்கம் 2019-ம் ஆண்டு 5.5விழுக்காடாக இருக்கும் என இரசிய நடுவண் வங்கி எதிர்பார்க்கின்றது. அதன் பணவிக்க இலக்கு 4 விழுக்காடாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இரசிய நடுவண் வங்கி வட்டி விழுக்காட்டை 0.25 ஆல் அதிகரித்து 7.5 விழுக்காடாக்கியது. உலக வங்கியின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு உலகின் ஆறாவது பெரிய நாடாக இரசியா இருக்கின்றது.

சவாலாக மாறிய சவுதிக்குச் சென்ற அமெரிக்கரும் இரசியர்களும்
2018 செப்டம்பர் 16-ம் திகதி அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ சவுதி அரேபியாவிற்கு ஒரு திடீர்ப் பயணத்தையும் இரசியாவின் சிரியாவிற்கான சிறப்புத் தூதுவர் சேர்கி வெர்சினின் உட்பட  வெளியுறவுத் துறை அதிகாரிகள் சவுதி அரேபியாவிற்கு ஒரு திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொனடனர். பொம்பியோவின் நோக்கம் துருக்கியில் காணாமற் போன பத்திரிகையாளர் கஷொக்கியோவைப் பற்றியது. இரசியர்கள் அந்த விவகாரத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. அவர்கள் மேனாப்(MENA) பிரதேசமாகிய மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நிலைமை தொடர்பானது. இந்த இரசியா சவுதியின் உள் விவகாரங்களில் தலையிடாதமைக் கொள்கை சவுதியை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கும். ஆனால் இரசியாவின் புதிய நட்பு நாடாகிய துருக்கியை அதிருப்திப் படுத்தியிருக்கும். துருக்கி வம்சாவளியில் சவுதியில் பிறந்த கஷோக்கி துருக்கிய அதிபருக்குப் பிடித்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை விரும்புபவர்.

பாதுகாப்புச் சவால்
2016-ம் ஆண்டு  நேட்டோப் படைத்துறை கூட்டமைப்பு நாடுகள் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் Tripwire Forces என்ற பெயரில் தமது சிறு படையணிகளை நிறுத்தியுள்ளன. இவை இரசிய ஆக்கிரமிப்பை முன் கூட்டிய அறிந்து பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நோர்வேயில் நேட்டோப் படைகள் Trident Juncture என்னும் பெயரில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலையும் உள்ளடக்கி ஒரு போர் ஒத்திகையை 2018 ஒக்டோபர் 25-ம் திகதியில் இருந்து நவம்பர் 7-ம் திகதி வரை செய்யவிருக்கின்றன. ஐம்பதினாயிரம் படையினரைக் கொண்டு செய்யப்படும் போர்ப்பயிற்ச்சி இரசியாவின் மேற்குப் பகுதியில் செய்யப்படும் மிகப் பெரிய போர் ஒத்திகையாகும். ஏற்கனவே இரசியா தனது மேற்குப் பகுதியில் சிறிய நாடான பெலரசுடனும் கிழக்குப் பகுதியில் பெரிய நாடான சீனாவுடன் இணைந்தும் இரு பெரும் போர்ப்பயிற்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

இரசிய வரலாற்றில் புட்டீனின் ஆட்சி சிறு புள்ளி மட்டுமே. தன் வரலாற்றில் ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி போன்றவற்றின் படையெடுப்புக்களை எல்லாம் தாண்டி நிமிர்ந்து நிற்கும் இரசியாவால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும்.

Monday, 15 October 2018

அமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)


2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்காவிடம் தரைப்படை, வான் படை, கடற்படை, கடல்சார் படை, கரையோரப் பாதுக்காப்பு என தனித்தனியான படைப் பிரிவுகள் உள்ளன. அவற்றுடன் விண்வெளிப்படை என மேலும் ஒரு தனிப் படைப்பிரிவு ஆரம்பிக்கும் திட்டத்தை மைக் பென்ஸ் வெளியிட்டுள்ளார். 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்பும் சொன்ன கருத்தை மைக் பென்ஸ் அதிகார பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்காவின் நோக்கம் விண்வெளியை படைத்துறை மயமாக்குதல் அல்ல ஆனால் விண்வெளியில் ஓர் ஆபத்து விளைவிக்கக் கூடிய மோதலைத் தவிர்ப்பதே என்றார் அமெரிக்கப் படைத்துறை ஆய்வாளர் ரொட் ஹரிசன். விண்வெளியில் உள்ள அமெரிக்காவின் வசதிகளை எதிரிகள் அழிக்காமல் தடுப்பது அமெரிக்காவிற்கு அவசியம் எனவும் அவர் சொல்லியுள்ளார்.

ரீகனின் நட்சத்திரப் போர் (Star War)
எதிரி நாட்டின் அணுக்குண்டில் இருந்து தமது நாட்டைப் பாதுகாப்பது எப்படி என்ற கேள்விக்கு Mutually Assured Destruction  என்னும் பதம் முன் வைக்கப்பட்டது. அப்பதத்தின் பொருள் என் மீது அணுக் குண்டு வீசினால் உன்மீது நான் அணுக்குண்டு வீசுவேன் அதனால் நானும் அழிவது நிச்சயம் நீயும் அழிவது நிச்சயம் என்பதாகும். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரீகன் இந்தப் பதிலை வெறுத்தார். இது இணை-தற்கொலை  ஒப்பந்தம் போன்றது என்றார். அதனால் கேந்திரோபாய பாதுகாப்பு முன்னெடுப்பு (Strategic Defence Initiative) என்ற திட்டத்தை அவர் 1983இல் முன்வைத்தார். அதை நட்சத்திரப் போர் (Star War) என அழைத்தனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் நட்சத்திரப் போர்த்திட்டத்தின் அபரிமிதமான செலவும், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனப் பதுகாப்பு அளவிற்கு மிஞ்சி இருந்தமையும் அத்திட்டத்தைக் கைவிடும் நிலையை உருவாக்கியது. கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தவுடன் அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக காய்களைத் தீவிரமாக நகர்த்திய போது இரசிய அரசுறவியலாளர்கள் அமெரிக்காமீது இரசியா அணுக்குண்டை வீசி முழு அமெரிக்காவையும் ஒரு கதிரியக்கம் மிக்க குப்பை மேடாக்க முடியும் எனப் பகிரங்கமாக மிரட்டினர். அதனால் அமெரிக்கா தனது பாதுகாப்பையிட்டு அதிக கரிசனை கொண்டது.

அமெரிக்காவின் திட்ட விபரம்
விண்வெளியில் உள்ள அமெரிக்க சொத்துக்களைப் பாதுகாத்தல், அமெரிக்கச் சொத்துக்களுக்கு ஆபத்து விளைவிக்க முயலும் எதிரிகளின் விண்வெளித் தாக்குதல் கருவிகளை அழித்தல், விண்வெளியில் பாரிய ஆகாயக் கற்கள் போன்ற இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பூமியைப் பாதுகாத்தல் போன்றவற்றை அமெரிக்காவின் விண்வெளிப் படை நோக்கமாகக் கொண்டிருக்கும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் விண்வெளிப் படைத் திட்டத்தை முதலில் அறிவித்த போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனே ஆச்சரியப் பட்ட்டது. நாம் வெறுமனவே விண்வெளியில் இருப்பது மட்டுமல்ல எமது ஆதிக்கமும் அங்கு நிலவ வேண்டும் என டிரம்ப் சூளுரைத்தார். ("It is not merely enough that we have American presence in space, we must have American dominance in space."). விண்வெளிப் படையை உருவாக்கும் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது:
1 விண்வெளி அபிவிருத்தி முகவரகத்தை (Space Development Agency) உருவாக்குதல்.
2. விண்வெளி செயற்படு படையை (Space Operations Force) உருவாக்குதல்
3. அமெரிக்க கட்டளையகத்தை (United States Space Command) உருவாக்குதல்

சீனாவின் அச்சுறுத்தல்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம் தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த சீனா அமெரிக்காவின் படையின் வலிவின்ன்மைப் புள்ளிகளை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் படையினர் இலத்திரனியல் தொடர்பாடலில் பெரிதும் தங்கி இருப்பதை சீனா அறிந்து கொண்டது. அத் தொடர்பாடல்களுக்கு அமெரிக்காவின் செய்மதிகள் மிக அவசியம் என்பதை சீனா உணந்தது. அமெரிக்காவின் செய்மதிகளை அழிப்பதாலும் இணையவெளி ஊடுருவல்கள் மூலமும் அமெரிக்காவின் தொடர்பாடலை அழித்து அமெரிக்காவின் படைத்துறையை செயலிழக்கச் செய்யலாம் என சீனா நம்பியது. அதனால் 2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது.  சீனா வீசிய ஏவுகணை செங்குத்தாக விண்ணை நோக்கி 200 மைல்கள் பாய்ந்தது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா பரிசோதித்தது. அந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. சீனா தொடர்ந்து தனது செய்மதிகளை ஏவும் தளங்களை(space launchers ) மேம்படுத்தியும் வருகின்றது. சீனாவின் KZ-11 என்னும் தளத்தில் இருந்து செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இப்போது வீசப்படலாம் என நம்பப்படுகின்றது.  2016 ஜூலையில் சீனா விண்வெளிக்கு அனுப்பிய Roaming Dragon என்னும் செய்மதி விண்வெளியில் உள்ள சிதைந்த மற்றும் பழுதடைந்த செய்மதிகளை வாரி அள்ளி விண்வெளியைத் துப்பரவாக்க என சீனா தெரிவித்திருந்தது. ஆனால் அது மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கக் கூடியவை எனக் கருத்து வெளியானது. இரசியாவும் தரையில் இருந்து ஏவட்ட ஏவுகணை போன்ற ஒரு மர்மப் படைக்கலன்களால் தனது சொந்த செய்மதிகளை அழித்ததை அமெரிக்க செய்மதிகள் அவதானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. 1990-ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளியில் உள்ள மற்ற நாட்டுச் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் அது கைவிடப்பட்டது. 2018 மார்ச்சில் ஒஸ்ரேலிய ஊடகம் ஒன்று இரசியா தனது விமானங்களில் இருந்து வீசும் லேசர் கதிகளின் மூலம் மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்தது. வானில் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவுகணைகளை வீசி அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கும் ஆய்வுகளை இரசியா செய்து முடித்துள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பு கருதுகின்றது.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் கவனம் செலுத்தும் சீனா
சீனா ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை தொடர்ச்சியாகப் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிலும் அதிகமான வேகத்தில் பாயும் ஏவுகணைகளை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் என அழைப்பர். ஒலியிலும் பத்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளைக் கூட சீனா உருவாக்கியுள்ளது எனச் செய்திகள் வெளிவருகின்றன. ஹைப்பர் சோனி ஏவுகணைகளை தரையில் இருந்து செயற்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது என்ற நிலையில்தான விண்வெளிப்படையை உருவாக்குவதில் அமெரிக்கா திடீர்க்கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. அத்துடன் சீனாவும் இரசியாவும் தமது செய்மதி எதிர்ப்பு வல்லமைகளை ஒன்றிணைத்து செயற்படுகின்றன என அமெரிக்கா நம்புகின்றது.

அமெரிக்க வான்படைச் செயலரின் எதிர்ப்பு
அமெரிக்காவின் வான்படையில் ஏற்கனவே விண்வெளிக் கட்டளையகம் (U.S. Air Force Space Command) என்ற ஒரு பிரிவு உண்டு. அது ஏற்கனவே எதிரி நாடுகள் விண்வெளியில் அமெரிக்காவிற்கு விடுக்கும் அச்சுறுத்தல்களைக் கையாள்கின்றது. அதனால் புதிதாக ஒரு ஆறாவது படைப் பிரிவு தேவையில்லை என்பது அமெரிக்கப் படைத்துறையினரின் கருத்தாக இருக்கின்றது. அந்த கட்டளையகமே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அது போலவே அமெரிக்கக் கடற்படையிலும் விண்வெளியில் செயற்படக் கூடிய வசதிகள் உண்டு. அது மட்டுமல்ல அமெரிக்காவின் பல் வேறு உளவுத்துறைகளும் விண்வெளியில் செயற்படக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் தனது தனியான விண்வெளிப் படைப்பிரிவு அமைக்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் அமெரிக்க வான்படைக்குப் பொறுப்பான செயலாளர் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கும் எண்ணத்துடன் இருக்கின்றார். 2018 நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தலின் பின்னர் டிரம்ப் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கலாம்.

நிதி ஒதுக்கீடு
முன்பு எப்போதும் இல்லாத அளவில் அமெரிக்கா இரசியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் விண்வெளியில் ஆபத்துக்களை எதிர் நோக்குவதால் அதைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்கா பாதுக்காப்பிற்காக ஒதுக்கப்பட்ட செலவீனங்களில் மாற்றங்கள் செய்து ஐந்து பில்லியன் டொலர்களை விண்வெளிப் பாதுகாப்பிற்கு ஒதுக்கியது. அமெரிக்காவின் செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கப் பாராளமன்றமே செய்யும் அதிகாரம் கொண்டது. அமெரிக்காவின் வான் பாதுகாப்பிற்கு ஏற்கனவே பாராளமன்றம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 13பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் தனியாக ஒரு படைப்பிரிவை அமைக்கும் போது மேலும் செலவு அதிகமாகும். அதற்கான நிதி ஒதுக்கீட்டை பாராளமன்றம் அங்கிகரிக்க வேண்டும். விண்வெளிப்படைக்கு பதின்மூவாயிரம் படையினர் தேவைப்படலாம். அவர்களை மற்ற படைப்பிரிவுகளில் இருந்து எடுக்கும் போது அவை வலுவற்றதாக்கப்படலாம். ஆனால் தனியான ஒரு கட்டளையகத்தின் கீழ் செயற்பட்டால் மட்டுமே விண்வெளிப் படைப்பிரிவு திறன்படச் செயற்பட முடியும் என வெள்ளை மாளிகை நம்புகின்றது.
பன்னாட்டு நாணய நிதியம் 2018-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.9விழுக்காட்டால் வளரும் என முன்னர் நம்பியிருந்தது. ஆனால் அதை இப்போது 3.7விழுக்காடு எனக் குறைத்துள்ளது. இந்த நிலையில் முன்னணி வல்லரசுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு உங்கந்ததாக அமையாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...