அமெரிக்காவின் ஐரோப்பாவிற்கான
படைத்தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பென் கொட்ஜெஸ் 2018 ஒக்டோபர் மாதம் 24-ம் திகதி போலாந்து தலைநகரில் நடந்த
வார்சோ பாதுகாப்பு மன்றத்தில் உரையாற்றும் போது அடுத்த 15 ஆண்டுகளுக்குள்
அமெரிக்காவும் சீனாவும் போர் புரிவது தவிர்க்க முடியாதது என்றார். 1990-ம் ஆண்டு சீனா செய்த படைத்துறைச்
செலவிலும் பார்க்க பத்து மடங்கு தற்போது செலவு செய்கின்றது. நீண்ட காலமாக
எந்தவிதப் போர் முனை அனுபவமும் இல்லாமல் இருக்கும் சீனா அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்குள் ஒரு காத்திரமான எதிரியுடன் மோதி வெற்றி பெற வேண்டும்.
மாநாட்டில் மோதல்
பப்புவா
நியூகினியில் நடந்த ஆசிய - பசிஃபிக் பொருளாதார
ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க துணை அதிபர் சீனாமீது கடும் சாடலைச்
செய்திருந்தார். ஆசிய பசுபிக்
நாடுகள் சீனாவிடமிருந்து கடன் வாங்கி தங்களது உட்கட்டுமானங்களை அபிவிருத்தி
செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார் அமெரிக்கத் துணை அதிபர் மைக்
பென்ஸ். மேலும் அவர் அக் கடன் பத்திரங்களில் மறைமுகமான நிபந்தனைகள் இருக்கின்றன
என்றார். அதற்கு முன்னர் இன்னும் ஒரு மாநாட்டில் உரையாற்றும் போது மைக் பென்ஸ்
சீனாவை அமெரிக்காவின் எதிரி நாடு எனப் பிரகடனப் படுத்தினார்.
தூங்கும் புலியை இடறாதீர்கள்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்
மாவீரன் நெப்போலியன் சீனாவைத் தூங்க விடுங்கள் அது விழிப்படையும் போது உலகை
உலுப்பும் என்றார். வயல்களுக்குள் முடங்கிக் கிடந்த விழிப்படைந்தது மட்டுமல்ல அது
உலகின் தொழிற்சாலையாக மாறிவிட்டது. சீனா உலகை உலுப்பினால் அதன் தொழிற்சாலைகளும்
பாதிக்கப்படும் என்பதால் அது அமைதியாக எழுச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அந்த
அமைதியான எழுச்சியில் சீனா போர்களைத் தவிர்த்து வந்தது. அதனால் சீனா ஒரு போர்
அனுபவம் இல்லாத நாடாக இருக்கின்றது. 1971-ம் ஆண்டு சீனாவும் இந்தியாவும் 13
நாட்கள் போர் புரிந்தன. அமெரிக்கா உருவான நாளில் இருந்து தொடர்ச்சியாகப் போரில்
ஈடுபடுகின்றது. அது தனது சரித்திரத்தில் 134இற்கு அதிகமான போர்களைக் கண்டுள்ளது. போரில்
ஈடுபடாமல் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்திய சீனா தனது மிகையான அந்நியச் செலவாணி
இருப்பைப் பயன்படுத்தி உலகெங்கும் பல துறைமுகங்களை தனதாக்கிக் கொண்டிருக்கின்றது.
ஐரோப்பியத் துறைமுகங்களில் 10 விழுக்காடு சீனாவிற்கு சொந்தமானது. உலகின் முதற்
பதினெட்டு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் தனக்கு என ஒரு துறைமுகம் இல்லாத
நாடு ஒன்று கூட இல்லை. அந்த அளவிற்கு துறைமுகங்களும் பொருளாதாரமும்
தொடர்புபட்டுள்ளன.
சாட்சியாக சரித்திரமும் துசிடைட் பொறிக் கோட்பாடும்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் நடக்கும்
என்பதற்கு பல சரித்திர நிகழ்வுகள் ஆதாரமாக இருக்கின்றன அத்துடன் கிரேக்க
சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி (Thucydides’s
trap) என்னும் கோட்பாடும் அதை உறுதி செய்கின்றது. புதிதாக ஒரு பெரு வல்லரசு
உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் பெருவல்லரசுடன் மோதலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது.
சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரத்தில் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தன.
அதனால் அவை இரண்டுக்கும் இடையில் நேரடிப் போர் நடக்கவில்லை. பனிப்போர் என்னும் பெயரில்
பெரும் போட்டி நிலவியது. ஆனால் உலகப் பெருவல்லரசாக நிலைப்பதற்கு தேவையான பொருளாதார
வலு சோவியத் ஒன்றியத்திடம் இல்லாததால் அது சிதைந்து போனது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின்
வல்லரசாக உருவெடுத்த போது ஸ்பெயினிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் பெரும் கடற்போர்
நடந்து ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டது. நெப்போலியன் பிரான்சை பெரு வல்லரசாக்க முயன்றபோது
இரசியாவுடனும் பிரித்தானியாவுடனும் போர் புரிந்து தோற்கடிக்கப்பட்டர். உதுமானியப் பேரரசு
உலகை ஆள முற்பட்டதால் முதலாம் உலகப் போரும் ஹிட்லர் உலகை ஆள முற்பட்டதால் நடந்தன. அமைதியான
எழுச்சி என்னும் பெயரில் பெருவல்லரசாக முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கும் ஏற்கனவே
உலகப் பெருவல்லரசாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு போர் நடப்பது தவிர்க்க
முடியாது என்பது 2400 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த
துசிடைட் பொறி என்னும் கோட்பாடு எதிர்வு கூறியுள்ளது.
அமெரிக்க சீனக் கடற்போர்
2017-ம் ஆண்டு சீனக் கடற்படையினரிடம் 328 கப்பல்கள் இருந்தன. 2018இல் அது
350 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் சீனாவிடம் தற்போது அமெரிக்காவிலும்
பார்க்க அதிக அளவு கப்பல்கள் உள்ளன. உலகிலேயே அதிக அளவு கப்பல் உற்பத்தி செய்யும் நாடாக
சீனா இருக்கின்றது. அதனால் விரைவில் சீனாவின் கடற்படைக் கப்பல்களின் எண்ணிக்கை 400
ஆக அதிகரிக்கும். சீனா ஆண்டு தோறும் மூன்று நீர் மூழ்கிக் கப்பல்களை உற்பத்தி
செய்கின்றது. 2020-ம் ஆண்டு சீனாவிடம் எழுபதிற்கும் அதிகமான நீர்முழ்கிக்
கப்பல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சீனாவின் கப்பல்கள்
நவீனமடைந்து வருகின்றன. 2018-ம் ஆண்டில் அமெரிக்காவின் கடற்படையின் மொத்தக்
கலன்களின் எண்ணிக்கை 280ஆகும். ஆனால் அமெரிக்காவிடம் பத்து நிமிட்ஸ் வகை விமானம்
தாங்கிக் கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று பயிற்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தக் கூடியது. எண்ணிக்கை
அடிப்படையில் மட்டுமல்ல தர அடிப்படையிலும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள்
மேம்பட்டவையாகும். அமெரிக்கா தனது நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை
அகற்றிவிட்டு அவற்றின் இடத்திற்கு ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை
உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்து விட்டது. CVN -21 என்னும் குறியீட்டுப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் USS
Gerald R Ford (CVN 78), USS John F Kennedy (CVN 79) ஆகிய இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உருவாக்கம் தொடங்கி
விட்டன. ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் விமானம் தாங்கிப் பெருங்கப்பல்கள்
என அழைக்கப்படுகின்றன. 2058-ம் ஆண்டு
அமெரிக்கா பத்து ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா
கொண்டிருக்கும். கடற்போரில் சீனா பின்னடைவைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகக்
காணப்படுகின்றது.
தென் சீனக் கடல்தான் போர் முனையா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும்
இடையிலான போர் தென் சீனக் கடலில் ஆரம்பிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இரசியா
கிறிமியாவை 2014 மார்ச் மாதம் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்த போது அமெரிக்காவால்
தென் சீனக் கடலில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலையை சீனா தனக்கு சாதகமாகப்
பாவித்து சீனா தென் சீனக் கடலில் தானது செயற்கைத் தீவு உருவாக்கும் வேலைகளைத்
தீவிரப்படுத்தியது. ஆரம்பத்தில் அச் செயற்கைத் தீவில் படைக்கலன்கள் நிறுத்தப் பட
மாட்டாது என அறிவித்த சீனா பின்னர் நாளடைவில் பல படைக்கலன்களை அத் தீவுகளில் நிறுத்திக்
கொண்டிருக்கின்றது. 2014இல் சீனா கடலுக்குள் எழுப்பும் பெரும் சுவர் என அத்தீவுகள்
விமர்சிக்கப்பட்டன. இப்போது சீனா அத்தீவுகளில் பெருமளவில் விமான எதிர்ப்பு
ஏவுகணைகளான சாம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. சீனா கடலுக்குள் எழுப்பும் சாம்
பெருஞ்சுவர் என தென் சீனக் கடல் தீவுகள் தற்போது அழைக்கப்படுகின்றன. பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஜப்பான்,
குவாம் தீவு ஆகியவற்றில் அமெரிக்கா வைத்திருக்கும் படைத்தளங்களை
எதிர் கொள்ளவே சீனா தனது ஏவுகணைகளை தென் சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. சீனா
அமெரிக்க ஏவுகணைகளில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக இரசியாவின் எஸ்-400 ஏவுகணை
எதிர்ப்பு முறைமயை வாங்கியுள்ளது.
ஆளில்லாப் போர்
இனி வரும் காலங்களில் ஆளில்லாப்
போர் விமானங்கள் போரில் அதிகம் பாவிக்கப்படும். 2018 நவம்பர் 6-ம் திகதியில்
இருந்து 11-ம் திகதி வரை நடந்த வான் கண்காட்சியில் சீனா காட்சிப்படுத்திய ஆளில்லா
விமாங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. சிலர் சீனா ஆளில்லா விமான உற்பத்தியில்
அமெரிக்காவை விஞ்சிவிட்டது என்றனர். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடந்தால்
ஆளில்லாப் போர் விமானங்கள் பெருமளவில் பயன் படுத்தப்படும். 2023-ம் ஆண்டில்
இருந்து சீனா பெரும் மக்கள் தொகைக் கட்டமைப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
நாட்டில் வயோதிபர்களே அதிகம் இருப்பார்கள். அதனால் இனி வரும் காலங்களில் அமெரிக்கா
இயந்திர மனிதர்களை போரில் ஈடுபடுத்தும். செயற்கை விவேகத் துறையில் அமெரிக்காவும்
கடுமையாகப் போட்டியிடுகின்றன. டென்மார் நாட்டில் இருந்து சீனா போர்க்களத்தில்
பாவிப்பதற்கான மென்பொருளை வாங்கியுள்ளது. அமெரிக்க சீனப் போரில் மரபு வழிப் போர்
தொடங்க முன்னர் இணையவெளிப் போர் நடக்கும்.
சீனப் பொருளாதாரத்தின்
கழுத்தில் அமெரிக்க கத்தி
சீனாவைச் சுற்றிவர
அமெரிக்கா அமைத்துள்ள கடற்படைத் தளங்களுக்குள் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள கடற்படைத்
தளங்கள் முக்கியமானவையாயும். அமெரிக்காவிற்கு சொந்தமான குவாம் தீவிலும் அமெரிக்கா
பெரும் கடற்படைத் தளத்தை வைத்துள்ளது. மலேசியாவில் இருக்கும் அமெரிக்கக் கடற்படை சீனாவின்
பொருளாதாரத்தின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள கத்தி எனச் சொல்லலாம். மலேசியாவை
ஒட்டியுள்ள மலாக்க நீரிணையைத் தாண்டி சீனக்கப்பல்கள் பயணிக்காமல் அமெரிக்காவால்
தடுக்கலாம்.
போரில் நட்பு முக்கியம்
அமெரிக்காவிற்கு எதிரான போரில் சீனா
வெற்றியடைந்தால் இந்தியாவின் வட கிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா ,சிக்கிம் திரிபுரா ஆகிய மாநிலங்களை சீனா அபகரிக்கும். அதனால் அமெரிக்க சீனப் போரில் சீனா
வெற்றியடையாமல் இருப்பத இந்தியா உறுதி செய்வது மிகவும் அவசியம். இதே நிலைமைதான்
ஜப்பானுக்கும். சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொள்வதில் ஜப்பான்
அதிக விருப்பம் கொண்டுள்ளது. சீன பாக்கிஸ்த்தான் உறவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு
வளர்ச்சியடைய வளர்ச்சியடைய இந்தியா சீனாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன்
இணையும் வாய்ப்புக்களும் அதிகரித்துக் கொண்டே போகும்.
சீனப் பொருளாதார வளர்ச்சி தொடருமா?
அமெரிக்காவுடன் போரில் வெல்வதற்கு சீனாவிடம்
உறுதியான பொருளாதாரம் அவசியம். தொடர்ந்து நான்கு பத்தாண்டுகளாக வெற்றிகரமாக
வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் ஒரு முற்றுப் புள்ளிக்கு வரலாம். அது
தேய்வடையலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் கருத்தை சீனப் பொதுவுடமைக்
கட்சியினர் மறுக்கின்றனர். தமது திட்டமிட்ட பொருளாதாரம் முதலாளித்துவப்
பொருளாதாரம் போல் தளம்பாது என்கின்றனர். அமெரிக்க சீனப் போர் தொடங்குவதற்கான சூழல்
சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும் என உறுதி செய்யப்பட்ட பின்னர் வருவதை சீனா
விரும்பும். அதற்கு முன்னர் போரைத் தொடங்க அமெரிக்கா விரும்பும்.
No comments:
Post a Comment