ஆந்திரப்
பிரதேச நிதி அமைச்சர் நரேந்திர மோடி சிபிஐ, ஆர்பி ஐ போன்றவற்றை விழுங்குகின்ற
ஒரு மலைப்பாம்பு என விமர்சிக்கும் அளவிற்கு இந்தியாவில் நிலைமை மாறியுள்ளது. இந்தியாவின் உச்ச
குற்றத் தடுப்பு அமைப்பான சிபிஐ (Central Bureau of
Investigation) எனப்படும் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குனர்
அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது
ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். இந்தியாவில் முறை கேடுகளில் ஈடுபட்டவர்கள்
வீடுகளில் திடீர் சோதனை செய்வதை வழமையாகக் கொண்ட அதன் அதிகாரிகள் தமது தலைமைச்
செயலகத்திலேயே திடீர் சோதனை நடத்தி சாதனை படைத்துள்ளனர். இது சிபிஐயின் 55
ஆண்டுகால வரலாற்றில் நடக்காத ஒன்றாகும். இவர்களில்
சிறப்பு இயக்குனர் ராகேஸ் அஸ்தானா மோடியின் செல்லப் பிள்ளை என
விமர்சிக்கப்படுகின்றார். சிபிஐயை ஒரு நம்பகரமான, பக்கச் சார்பற்ற
சுதந்திரமான அமைப்பாக இயங்குவதை நரேந்திர மோடி உறுதி செய்யத் தவறிவிட்டார் என
காங்கிரசுக் கட்சி குற்றம் சுமத்துகின்றது.
என்ன இந்த சிபிஐ?
பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் (1941)
உருவாக்கப் பட்ட சிறப்பு காவற்துறை அமைப்பு (Special Police Establishment) என்ற குற்றத் தடுப்புப் பிரிவு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் சிபிஐயாக
மாற்றப்பட்டது. சிபிஐ என்றவுடன் மனதில் தோன்றுவது அமெரிக்காவின் FBIஎனப்படும் FederalBureau
of Investigation ஆகும். அமெரிக்காவில் Federal எனப் பாவிக்கப்படும் இடங்களில் இந்தியாவில் Central என்ற சொல் பாவிக்கப்படுவது உண்டு. ஆனால் இரண்டு
அமைப்புக்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. FBI நினைத்த மாத்திரத்தில் நினைத்த
இடத்தில் விசாரணை நடத்தவும் நடுவண் அரசினதோ அல்லது மாநில அரசினதோ அனுமதியின்றிச்
சோதனையிடம் அதிகாரம் உண்டு. ஆனால் சிபிஐ நடுவண் அரசு, நீதிமன்றம்,
மாநில அரசு ஆகியவற்றின் அனுமதியுடன் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள
முடியும். FBI நீதித் துறையின் கீழ் உள்ள அமைப்பாகும். சிபிஐ
தற்போது தலைமை அமைச்சரின் கீழ் உள்ள அமைப்பாகும். FBI இயக்குனரை
அமெரிக்க அதிபர் மூதவையின் அனுமதியுடன் நியமிப்பார். அவரது பதவிக் காலம் 7
ஆண்டுகள் ஆகும். சிபிஐயின் உயர் பதவிகளை தலைமை அமைச்சர், எதிர்க்கட்சித்
தலைவர், உச்ச நீதிமன்ற நிதிபதை ஆகிய மூவரையும் கொண்ட குழு
நியமிக்கும். உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிபிஐ மாநில
அரசுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
கூண்டுக்கிளியான சிபிஐ
2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது சிபிஐயை
அரசின் கூண்டுக் கிளி என இந்திய உச்ச நீதிமன்றம் விபரித்திருந்தது. இப்போது உச்ச
நீதி மன்றமே அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு மாறிவிட்டது எனச் சிலர் குற்றம்
சுமத்துகின்றனர். தகவலறியும் சட்டத்தில் இருந்து சிபிஐயிற்கு விதிவிலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும்
சிபிஐயிற்கு நியமிக்கப்படுவர். ப சிதம்பரம், சதீஷ் தரூர், நிராவ்
மோடி போன்ற பல பிரபலங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை செய்து கொண்டிருக்கின்றது.
சிபிஐயில் மோடியின்
செல்லப்பிள்ளை
சதீஷ் பாபு சானா என்ற
வர்த்தகர் இறச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் கிடைத்த வருமானத்திற்கு வரிகட்டாமல்
ஏமாற்றினார் என்ற குற்றச் சாட்டில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதிலிருந்து அவரை
விடுவிக்க சிபிஐயின் சிறப்பு இயக்குனரும் மோடியின் செல்லப் பிள்ளையுமான ராகேஷ்
அஸ்தானா இலஞ்சம் பெற்றுக் கொண்டார் என சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மா குற்றம்
சுமத்தி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். சிபிஐயின் சிறப்பு இயக்குனராக ராக்கேஷ்
அஸ்தானா நியமிக்கப்படும் போதே அவர் மீது பல குற்றவிசாரணை நடந்து கொண்டிருப்பதால்
அவரை நியமிக்க வேண்டாம் என அரசை சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மா கேட்டுக்
கொண்டிருந்தார்.
காவற்றுறைப் பணம் கட்சிக்குத்
தாவியதா?
முன்னாள் காவற்றுறை துணை
ஆய்வாளர் (retired
police sub-inspector) ஒருவர் தனது மின்னஞ்சலில்
மூலம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா குஜராத்தில் காவற்றுறை ஆணையாளராகக்
கடமை புரியும் போது காவற்றுறை ஊழியர்களின் நலன் நிதியத்தில் இருந்து இருபது கோடி
ரூபாயை பாரதிய ஜனதக் கட்சியின் தேர்தல் நிதிக்கு மாற்றினார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது நடந்தது குஜராத்தின் முதல்வர்காக நரேந்திர மோடி இருந்த போதாகும். அது
மட்டுமல்ல 2012-ம் ஆண்டு காவற்றுறை அதிகாரி சதீஷ் வர்மா என்பவர் ராகேஷ் அஸ்தானா பல
அரச செயற்பாடுகளில் தலையிட்டிருந்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 2015-ம்
ஆண்டு சேவையில் இருக்கும் போது கொல்லப்பட்ட ஒரு கவற்துறைப் பணியாளரின்
குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்க ஊழியர் நல நிதியத்தில் பணம் இருக்கவில்லை.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அந்த நிதியத்தின் பணத்திற்கு என்ன நடந்தது என்ற
கேள்வியை ஒரு காவற்றுறை அதிகாரி எழுப்பியபோது அவருக்குப் பதில் வழங்கப்படவில்லை.
பிரஷாந்த் பூஷண்
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த
வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் என்பவர் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிராக உச்ச
நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்திருந்தார். அவர் நேர்மையற்றவர் எனத்
தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. ராகேஸ் அஸ்தானா ஐந்து
தடவைகள் இலஞ்சம் பெற்றிருந்தார் எனக் கருதப்படுகின்றது. 2018 ஒக்டோபர் 15-ம் திகதி
ராகேஷ் அஸ்தானா தேவேந்தர் குமார் ஆகிய இருவர்மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்தது. தேவேந்தர் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தான
கைது செய்யப்படாமைக்கு அவரது அரசியல் செல்வாக்கு எனக் குற்றம் சாட்டப்பட்டது.
பிரஷாந்த் பூஷண் இந்தியா பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில்
ஊழல் நடந்துள்ளது எனப் போராடி வருபவர். மோடி தலைமியிலான அரசு 126 விமானங்களுக்குக்
கொடுக்க வேண்டிய விலையை 36 விமானங்களுக்கு கொடுத்து இந்திய விமானப் படையின் முதுகெலும்பை
உடைத்தது என்பது அவரது கருத்தாகும். ரஃபேல் கொள்வனவு தொடர்பான எல்லாப்
பத்திரங்களையும் பாராளமன்றக் கூட்டுக் குழுவிற்கு சமர்ப்பித்து விசாரணை நடத்தப்பட
வேண்டும் என அவர் குரல் கொடுத்து வருகின்றார்.
நடுவண் கண்காணிப்பு ஆணையத்திடம்(CVC) முறையீடு
சிபிஐயின் இயக்குனர் அலோக்
வர்மாவிடம் ரஃபேல் விமான ஊழல் தொடர்பாக பல புகார்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை
விசாரிக்க்க வர்மா ஆரம்பித்த போது மோடியின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும்
சிபிஐயின் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாமீது ஊழல் குற்றம் சுமத்தினார். ராகேஸ்
அஸ்தானா அலோக் வர்மாவிற்கு எதிராக நடுவண் கண்காணிப்பு ஆணையத்திடம்(CVC) முறையீடு செய்தார். நடுவண் கண்காணிப்பு
ஆணையத்திடம்(CVC) என்பது இந்திய அரச உயர் மட்டத்தில்
நடக்கும் ஊழல்களைப் பார்த்துக் கொள்வதற்காக 1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட
அமைப்பாகும். அது சிபிஐ போல ஒரு விசாரணை செய்யும் அமைப்பல்ல. அலோக் வர்மா உச்ச
நீதிமன்றம் சென்றார். உச்ச நீதிமன்றம் நடுவண் கண்காணிப்பு ஆணையம்(CVC) இரண்டு வாரங்களுக்குள் அலோக் வர்மா மீதான குற்றச் சாட்டை விசாரித்து
முடிக்க வேண்டும் என 2018 ஒக்டோபர் 27-ம் திகதி உத்தரவிட்டது. அத்துடன் ஓய்வு
பெற்ற நீதியரசர் ஏ கே பட்நாயக்கை நடுவண் கண்காணிப்பு ஆணையத்தின்(CVC) விசாரணையாளராகவும் நியமித்தது. 2018 ஒக்டோபர் 30-ம் திகதி ராகேஷ்
அஸ்தானா மீதான குற்றச் சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவரை விசாரித்து பின்னர்
இடமாற்றம் செய்யப்பட்ட சிபிஐ அதிகாரியான ஏ கே பஸ்ஸீ உச்ச நீதிமன்றில்
சமர்ப்பித்தார். மனோஜ் பிரசாத் என்னும் துபாய் வர்த்தகருக்கும் ராகேஷ்
அஸ்தானாவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் மற்றும் தகவல்
பரிமாற்றங்கள் அங்கு சமர்க்கிப்பட்டன.
.
சிபிஐ அதிகாரிகள் சீசரின்
மனைவி போன்றவர்கள்
அலோக் வர்மா, ராகேஸ் அஸ்தானா ஆகிய இருவரையும் இந்திய
அரசு கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இருவரும் சிபிஐயில் ஓர் உள் மோதலை
உருவாக்கியுள்ளனர். அவர்கள் சீசரின் மனைவிபோல் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக
இருக்க வேண்டும் என்றா இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. சிபிஐயின் இடைக்கால
இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஷ்வர் ராவ் பொறுப்பேற்றதும் முதற்செய்த வேலை அலோக்
வர்மாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படுக் சிபிஐ அதிகாரிகள் 13 பேர் சிபிஐயில் இருந்து
வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த 13 பேரில் ராகேஷ் அஸ்தானாவின்
ஊழலை விசாரிப்பவர்களும் அடங்குவர். ரஃபேல் விமானம் வாங்குவதில் மோடி செய்த ஊழலை
மறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
சத்தியக் கடுதாசி கேட்கும்
உச்ச நீதிமன்றம்
பிரான்ஸிடமிருந்து கொள்வனவு
செய்யும் 36 ரஃபேல் போர்விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான தகவல்களை உச்ச
நீதிமன்றம் கேட்ட போது இந்திய அரசு சார்பில் அதில் பாதுகாப்பு இரகசியம் தொடர்பு
பட்டிருப்பதால் அத் தகவல்களைப் பாராளமன்றத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ
சமர்ப்பிக்க முடியாது என அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏன் அத்தகவல்களை உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியாது என்பதற்கான விளக்கத்தை ஒரு
சத்தியக் கடுதாசி மூலம் தெரிவிக்கும் படி உச்ச நீதி மன்றம் இந்திய அரசைக்
கோரியுள்ளது. பின்னர் 2018 நவம்பர் 2-ம் திகதி காங்கிரசுக் கட்சியின் மாநிலங்களவை
உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அலோக் வர்மாவை பதவியில் இருந்து
நீக்கியது சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றத்தில் மனு
சமர்ப்பித்துள்ளார். நடுவண் கண்காணிப்பு ஆணையத்திற்கு(CVC) சிபிஐ இயக்குனர்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை என்பது அவரது விவாதமாகும்.
சிபிஐயை அடுத்து ஆர்பிஐ
ரஃபேல் கொள்வனவில் ஊழல் உண்டு
என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிக் கொள்வது ஒரு புறம் இருக்க சிபிஐயில் ஊழல்
நடப்பது உட்பூசலும் அம்பலமானது. அது ரஃபேல் தொடர்பான விசாரணையுடம் சம்பந்தப்பட்ட
உட்பூசல் எனக் குற்றம் சாட்டப்படும் வேளையில் நரேந்திர மோடியின் இந்திய அரசுக்கு
இன்னும் ஒரு தலையிடி தொடங்கியுள்ளது. இந்தியாவின் வட்டி விழுக்காடு குறைக்கப்பட
வேண்டும் என இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருதுகின்றார். ஆனால் ஆர்பிஐ எனச்
சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய நடுவண் வங்கியான ரிசேர்வ் வங்கி இந்திய நாணயமான
ரூபா வலிவிழந்திருக்கும் வேளையில் அப்படி ஒன்றைச் செய்ய மறுக்கின்றது. இந்தியப்
பாராளமன்றத்திற்கான தேர்தல் 2019 மே மாததில் வரவிருப்பதால் இப்போதிருந்தே மக்கள்
கைகளில் அதிக பணம் புழங்கச் செய்தால் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என
அருண் ஜெட்லி கருதலாம். இதனால் இந்திய அரசுக்கும் நடுவண் வங்கியான ஆர்பிஐயிற்கும்
இடையில் ஒரு முறுகல் நிலை தோன்றியுள்ளது. ரிசேர்வ் வங்கியின் துணை ஆளுநர்
பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து ஆர்பிஐயின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது
எனத் தெரிவித்தார். அத்துடன் இந்த முறுகலால் ஆளுநர் பதவி விலகலாம் எனச் செய்திகள்
வெளிவருகின்றன. இது இந்தியாவின் நாணய மதிப்பைப் பாதிக்கலாம். அது ஆளும் கட்சிக்கு
தேர்தல் தோல்வியைக் கொண்டு வரலாம்.
No comments:
Post a Comment