Monday, 4 June 2018

இரசியாவிற்கு கிறிமியா புலி வாலா கவசமா?


2018 மே மாதம் 16-ம் திகதி இரசியாவிற்கும் கிறிமியாவிற்கும் இடையிலான 19கிலோ மீட்டர் நீளமான பாலத்தைத் திறந்து வைத்தார். கருங்கடலூடாகச் செல்லும் இப்பாலம் ஐரோப்பாவிலேயே மிக நீண்ட பாலமாகும். போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள வாஸ் கொட காமா பாலத்தை இரசியா 3.69பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணித்த கிறிமியாப் பாலம் இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டது. கிறிமியாவின் கிழக்குக்கரை நகரமான கேர்ச்சை இரசியப் பெருநிலப்பரப்புடன் இணைக்கின்ற இந்தப் பாலம் உக்ரேனின் கப்பற் போக்குவரத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பல கருங்கடல் துறைமுகங்கள்மீதான ஆதிக்கத்தை இரசியா இழக்க வேண்டிய நிலை உருவானது. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் வசமிருந்த கிறிமியாத் தீபகற்பத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

தனிமைப்பாலம் தகர்ந்தது
கிறிமியாவில் வாழும் மக்களில் பலர் தாங்கள் பன்னாட்டு அரங்கில் தனிமைப்படுத்தியதை கிறிமியப் பாலம் இல்லாமற் செய்துவிட்டதாகக் கருதுகின்றனர். இரசியர்கள் அதிக அளவில் கிறிமியாவிற்கு உல்லாசம் பயணம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பாலம் கட்டப்பட்டது. ஆனால் கிறிமியாவில் வசதிகள் தேய்வடைந்து வருவதால் இரசியர்கள் அங்கு செல்வதைக் குறைத்து இரசியாவின் இன்னும் ஒரு பிரச்சனைக்கு உரிய பிராந்தியமான செஸ்னியாவிற்கு செல்வதை விரும்புகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிருந்த உக்ரேன்
ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோப் படைக்கூட்ட்மைப்பிலும் இணையவிருந்த உக்ரேனை அடக்குவதற்கு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் எடுத்த நடவடிக்கைகளில் கிறிமியாவை உக்ரேனிடம் இருந்து கைப்பற்றியது ஒன்று. மற்றது உக்ரேனில் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு பிரிவினைவாதப் போரை ஆரம்பித்து வைத்ததாகும். கிறிமிய ஆக்கிரமிப்பின் பின்னர் இரசியாவின் புட்டீனின் செல்வாக்குப் பெருமளவு அதிகரித்திருந்தது. உலக அரங்கில் இரசியாவின் செல்வாக்கு மீண்டும் நிலைநாட்டுப்பட்டுவிட்டதாக இரசியர்கள் நம்பினர், பெருமிதம் கொண்டனர். கிறிமிய இணைப்பின் முன்னர் இரசியாவில் புட்டீனிற்கு எதிரான பல கருத்துக்களும் விமர்சனங்களும் இருந்தன. அவரது அவரது சகாக்களும் ஊழல் மூலம் பெருமளவு செல்வம் சேர்த்திருந்தனர். 2014-ம் ஆண்டு புட்டீன் உலகின் முதற்தரச் செல்வந்தராக இருந்தார்.

உக்ரேன் வீறு கொண்டு எழுமா?
சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்த படைக்கலன் உற்பத்தி செய்யும் பிரதேசமாக உக்ரேன் இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள் உக்ரேனில் தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உக்ரேனியர்களிடம் இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன் தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa எனப் பெயரிடப்பட்டுள்ள உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக ஏழு மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில் பறக்கக் கூடியவை. கிறிமியாவை இரசியா உக்ரேனிடமிருந்து பிரித்தெடுத்த பின்னர் உக்ரேனியர்கள் மத்தியில் இரசியாவிற்கு எதிரான கருத்து வலுவடைந்தது. உக்ரேன் இரசியாவின் எதிரிகளுடன் இணைந்தால் அது இரசியாவைப் படைத்துறை அடிப்படையில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரேன் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்ற கருத்தை உக்ரேனிய அதிபர் பெட்றோ பொறஷெங்கோ முன்வைத்தார். அதற்கான செயற்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார். 2017-ம் ஆண்டு உக்ரேனில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி 69 விழுக்காடு உக்ரேனியர்கள் நேட்டோவுடன் இணைவதை விரும்புகின்றனர். ஆனால் நேட்டோவில் இணைவதற்கு உக்ரேனில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். பல பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். மேலும் நேட்டோவில் இணையும் ஒரு புதிய நாட்டில் பிராந்திய அடிப்படையிலான மோதல்கள் ஏதும் இருக்கக் கூடாது.  சில படைத்துறை நிபுணர்கள் 2020-ம் ஆண்டளவில் உக்ரேன் நேட்டோவில் இணையலாம் என எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே தனது எல்லையில் உள்ள லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா போன்ற போல்ரிக் நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இருந்ததை தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இரசியர்கள் பார்க்கின்றனர். ஜோர்ஜியா நேட்டோவில் இணைய முற்பட்டபோது அதை ஆக்கிரமித்த இரசியா அதன் ஒரு பகுதியை தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. ஏற்கனவே உக்ரேனில் செய்யப் பட்ட 13 அரசியல் கொலைகளின் பின்னால் இரசியா இருப்பதாக உக்ரேனில் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.


இரசியப் பொருளாதாரம்
2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்ததில் இருந்து உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் சரியத் தொடங்கின. அத்துடன் மேற்கு நாடுகள் உக்ரேனில் தலையிட்ட இரசியாவிற்கு எதிராக பொருளாதார்த் தடைகளைக் கொண்டு வந்தன. இரசியாவை அடக்குவதற்கு என்றே எரிபொருள் விலை 2014-ம் ஆண்டின் பின்னர் திட்டமிட்டு வீழ்ச்சியடையச் செய்யப்பட்டது என்பதும் உண்மையாகும். இதனால் இரசியப் பொருளாதார உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆனாலும் உக்ரேனை இரசியாவின் ஒரு பகுதியாக பெரும்பாலான இரசியர்கள் இப்போதும் கருதுகின்றனர். அதனால் இரசியர்கள் தமது பொருளாதாரச் சுமைகளைத் தாங்கிக் கொள்ளவும் தயாராகினர். பொருளாதாரத் தடை மேற்கு நாடுகள் இரசியர்களை புட்டீனுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்யும் என எதிர்பார்த்திருந்தனர். 2014-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை 260,000 படையினரை இரசியா உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்துடனான எல்லையில் ஆக்கிரமிப்பிற்குத் தயாரான நிலையில் வைத்திருக்கின்றது. அதில் 1000தாங்கிகள், 2300 தாக்குதல் வாகனங்கள் (combat vehicles) 1100இற்கும் மேற்பட்ட பீரங்கித் தொகுதிகள், 400 பல்குழல் ஏவுகணைகள் போன்றவையும் அடங்கும். இவற்றிற்கான மேலதிகச் செலவையும் இரசியா செய்ய வேண்டியுள்ளது. 2016-ம் ஆண்டுவரை சுருக்கமடைந்த இரசியப் பொருளாதாரம். 2017-ம் ஆண்டில் 1.7விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது. 2018-ம் ஆண்டும் இரசியப் பொருளாதாரம் அதே அளவு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியாவின் மக்கள் தொகை சுருக்கமடைந்து கொண்டிருப்பதால் பொருளாதார வளர்ச்சியும் குறைவடைய வாய்ப்புள்ளது. உலக முதலீட்டாளர்கள் இரசியாவில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இரசியப் பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத் தடைகளும் 70 டொலருக்கு கீழ் நிற்கும் எரிபொருள் விலைகள் தள்ளாடுவதும் உக்ரேனுடன் போர் ஆபத்து நிலவுவதும் பொருளாதாரச் சீர்திருத்தம் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. 

கிறிமியப் பொருளாதாரம்
சோவியத் ஒன்றியம் இருந்த போது உக்ரேனில் இருந்து கிறிமியாவிற்கு கால்வாய்கள் வெட்டி அதனூடாக கிறிமியாவிற்கு குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் நீர் வழங்கப்பட்டது. 2014 கிறிமியாவை இரசியா தனதாக்கிய பின்னர். அக்கால்வாய்களை உக்ரேனிய அரசு அணைகள் கட்டி நீர் விநியோகத்ததைத் துண்டித்தனர். பின்னர் நிலத்துக்கடி நீர் பெருமளவில் பாவிக்க நீரில் உப்புத்தன்மை அதிகரித்தது. விவசாயப் பாதிக்கப்பட்டது. குடிநீரின்மையால் பல இரசியர்கள் இரசியாவில் குடியேறினர். இதனால் கிறிமியாவின் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. 2014-ம் ஆண்டின் முன்னர் கிறிமியா உக்ரேனுக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருந்தது. இப்போது அந்தச் சுமையை இரசியா தாங்குகின்றது. 2014-ம் ஆண்டின் முன்னர் உக்ரேனின் பணமுதலைகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் இரசிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றாக நிற்கின்றனர்.

இரண்டாம் ஆக்கிரமிப்பு நடக்குமா?
2014-ம் ஆண்டிலிருந்து உக்ரேனை அடக்க இரசியா எடுத்த முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. அது நேட்டோவில் இணையும் தனது திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் டொன்பாஸ் பிராந்தியம் என அழைக்கப்படும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தைல் வாழும் இரசியர்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என உக்ரேனின் படைத்துறையின் துணைத் தளபதி எதிர்வு கூறியுள்ளார். இன்னொரு நாட்டுடன் போர் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது. இரசியாவின் ஆக்கிரமிப்பின் முதுகெலும்பாக அமையப்போவது அதன் தாங்கிகள். இரசியாவின் Armata T-14 தாங்கிகளை எதிர் கொள்ள அமெரிக்கா தனது ஜவலின் என்ற தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. பராம் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது உக்ரேனுக்கு தாக்குதற் படைக்கலன்களை வழங்குவதில்லை என்ற கொள்கை பேணப்பட்டது. அப்படிச் செய்தால் அமெரிக்காவிற்கு எதிராகப் போராடும் நாடுகளுக்கோ அல்லது தீவிரவாத அமைப்புக்களுக்கோ இரசியாவும் ஆபத்தான படைக்கலன்களை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அப்படிச் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டில் இருந்தே உக்ரேன் பலவிதமான படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து பெற முயற்ச்சி செய்து கொண்டிருந்தது. அது 2018-ம் ஆண்டில் ஓரளவு நிறைவேறியுள்ளது. 2020-ம் ஆண்டு தனது படைத்துறையை உலகின் முதற்தரப் படைத்துறையாக மாற்றும் திட்டத்தை இரசியா கடந்த பத்து ஆண்டுகளாக நிறைவேற்றி வருகின்றது. அதற்கென அது உருவாக்கிய படைக்கலன்களை பரீட்சித்துப் பார்க்க ஒரு காத்திரமான போர் முனை இரசியாவிற்குத் தேவை. சிரியாவில் சுமான் இருநூறு புதிய படைக்கலன்களை பரீட்சித்துப் பார்த்தது இரசியா. ஆனால் அது ஒரு காத்திரமான போர்முனை அல்ல. சிரியாவில் இரசியாவின் Armata T-14 தாங்கிகளை அமெரிக்க ஆதரவுப் படைக்குழுக்கள் குறுகிய காலப் பயிற்ச்சியுடன் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகளால் அழித்தன. மரபுவழிப் படையினரைக் கொண்டுள்ள உக்ரேனியப் படையினரால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.

மலேசிய விமானப் பிரச்சனை
2018 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் டச்சு வெளியுறவுத் துறை அமைச்சர் தமது நாட்டு நிபுணர்களின் மலேசியாவின் விமானம் உக்ரேனில் சுட்டுவீழ்த்தியது தொடர்பான விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் மலேசியாவின் MH-17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இரசியாவே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரசியாவைப் பொறுத்தவரை கிறிமியாவில் உள்ள அதன் கடற்படைத்தளம் மிகவும் தேவைப்படுகின்ற ஒன்று. அதை அது விட்டுக்கொடுக்க மாட்டாது என்பதை உக்ரேனும் அறியும். மேற்கு நாடுகளும் அறியும். ஆனால் நேட்டோவில் உக்ரேன் இணைவதைத் தடுக்க இரசியா போரைக் கையில் எடுக்குமானால் அது பெரும் பொருளாதாரப் பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

Tuesday, 29 May 2018

எரிபொருள் அரசியலும் வெடி பொருள் அரசியலும்

2018 மே மாதம் 18-ம் திகதி வரையான தொடர்ந்து ஆறு வாரங்களாக எரிபொருளின் விலை அதிகரித்து வந்தது. 2018 மே 29-ம் திகதி 66டொலர்களாக இருக்கும் ஒரு பீப்பா மசகு எண்ணெய் விலைஇன்னும் சில மாதங்களில் நூறு டொலர்களாக அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2020இல் இரசியாத தனது படைத்துறையை உலகின் முதற்தரப் படைத்துறையாக மாற்றும் திட்டத்தைக் குழப்புவதற்கென உலகச் சந்தையில் திட்டமிட்டு எரிபொருள் விலை வீழ்ச்சி உருவாக்கப் பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இணைந்து செயற்பட்டன. இரசியாவின் வெடிபொருட்கள் அதிகரிக்காமல் இருக்க எரிபொருள் விலை மீது தாக்குதல் செய்யப்பட்டது.

யூரேனிய ஒப்பந்தம்
ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்தமையும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மீளவும் கொண்டிவரவிருப்பதும் ஈரானிய எரிபொருள் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானிய எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இலாப்திறன் மிக்கதாக்குவதற்கும் அதிக முதலீடு தேவைப்படுகின்றது. யூரோனியம் பதப்படுத்தல் ஒப்பந்தம் செய்யப் பட்ட பின்னர் ஈரானுக்குக் கிடைத்த அதிக வருமானத்தில் பெரும்பகுதியை அது ஈராக்கிலும் சிரியாவிலும் யேமனிலும் நடக்கும் உள்நாட்டுப் போரின் வெடிபொருட்களுக்குச் செலவிட்டு அந்த நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க ஈரான் முயன்றது.

 உலகெங்கும் எரிபொருள் காய்ச்சல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி கண்ட ஜப்பான் 2018இன் முதலாம் காலாண்டில் சுருக்கமடைந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு அதன் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வெனிசுவேலாவிலும் நைஜீரியாவிலும் லிபியாவிலும் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பு குறைந்துள்ளது. மெக்சிக்கோவிலும் கஜகஸ்த்தானிலும் எரிபொருள் உற்பத்தி குறைந்துள்ளது. சவுதி அரேபியாவை நோக்கி யேமனில் இருந்து அவ்வப் போது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. எரிபொருள் விலை உயர்ந்தால் ஈரானின் வருமானத்தை அது அதிகரிக்கும். அவை ஈரானால் ஹூதி கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஈரான் தனது ஏவுகணைகளின் திறனை அதிகரித்து வருகின்றது. அது மேலும் வலிமை மிக்க ஏவுகணைகளை ஹூதி கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கினால் அது சவுதி அரேபியாவில் எரிப்பொருள் உற்பத்தியையும் இருப்பையும் பெரிதும் பாதிக்கும். 2018 நவம்பரில் அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவையின் எல்லாத் தொகுதிகளுக்கும் மூதவையின் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையிலும் பாதகமான தேர்தல் முடிவுகள் அதிபர் டொனால்ட் டிரம்பைப் பதவியில் இருந்து விலக்கப்படும் ஆபத்தைக் கொண்டுவரும் சூழலிலும் டிரம்ப் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுப்பார் என எதிர்பார்க்கலாம். எதிர்பாராத முடிவுகளை சடுதியாக எடுக்கும் குணம் மிக்க டிரம்ப் அமெரிக்காவின் ஷேல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க அரசு உதவி செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் புதிய கிணறுகளைத் தோண்டி இலாபம் ஈட்டுவதற்கு உலகச் சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பா 53 டொலர்களுக்கும் அதிகமாக இருக்க வேண்டும். 2018 மேமாதம் நடுப்பகுதியில் மசகு எண்ணெய் விலை 70 டொலர்களாக உயர்ந்தமை ஷேல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவிருக்கின்றது. இரசியாவிற்கு நிதி நெருக்கடி கொடுக்க இரு நாடுகளும் தமது நாடுகளில் ஷேல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் கொடுக்கலாம். இரசியப் பொருளாதாரம் நல்ல நிலையிற் செயற்பட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை குறைந்தது 70டொலர்களகாக இருக்க வேண்டும்.

ஈராக்கில் குழப்பம் தொடரும்
ஈராக்கியத் தேர்தல் முடிவுகள் மேற்காசியாவின் உறுதித் தன்மையை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஈராக்கில் ஈரானும் அமெரிக்காவும் தத்தமக்குச் சார்பானவர்கள் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக முயற்ச்சி செய்தனர். ஆனால் ஈராக்கிய மக்கள் தமக்கு அமெரிக்க சார்பானவர்களோ அல்லது ஈரான் சார்பானவர்களோ ஆட்சியில் வேண்டாம் ஈராக்கில் நலனில் அக்கறை உள்ளவர்களே வேண்டும் என அமெரிக்காவை ஈரானையோ சாராத மதகுரு முக்தடா அல் சதர் (Muqtada al-Sadr) தலைமையிலான கூட்டணி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஈரானுக்கு ஆதரவான அணி இரண்டாவதாகவும் அமெரிக்காவிற்கு ஆதரவான அணி மூன்றாவதாகவும் வந்தது. ஈராக்கில் இனி ஈரானின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படும் என நம்பப்படுகின்றது. அது ஈராக்கில் ஓர் அமைதியற்ற சூழலை உருவாக்கும். அது எரிபொருள் விலையை அதிகரிக்கலாம்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜெருசேலம்
ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக் கொண்டமையும் அங்கு தனது இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை நிறுவியைமையும் மேற்காசியாவில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதம் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உக்கிரமடைவதற்கு இதனால் வாய்ப்புண்டு. அது அப் பிராந்திய உறுதிப்பாட்டைக் குலைத்து எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யலாம்.

எரிபொருள் சந்தையில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம்
உலகின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தியாளராக அமெரிக்கா உருவெடுக்கின்றது. அமெரிக்கா நாளொன்றிற்கு 12பில்லியன் பீப்பாய் எரிபொருளை உற்பத்தி செய்கின்றது. அமெரிக்காவின் எரிபொருள் இருப்பு சவுதி அரேபியா, இரசியா ஆகியவற்றிலும் பார்க்க அதிகமாகும். அமெரிக்காவின் எரிபொருள் இருப்பு அதிகரித்திருப்பதால் உலக எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் பாவிப்பதற்கு என அமெரிக்கா வைத்திருந்த காப்பொதுக்கத்தில் அரைப் பகுதியை 2027இற்குள் படிப்படியாக விற்பனை செய்து முடிப்பது என அமெரிக்கா 2018 பெப்ரவரியில் முடிவெடுத்தது. இந்த விற்பனை முடிவு இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று எரிபொருள் விலை அதிகரிப்பதைத் தடுப்பதன் மூலம் இரசியாவிற்கு நிதி நெருக்கடியைக் கொடுப்பது. இரண்டாவது விற்பனை மூலம் அமெரிக்காவால் ஆறுபில்லியன்களுக்கு மேற்பட்ட நிதியை திரட்ட முடியும். அது அமெரிக்க அரசின் வரவு செலவின் பற்றாக்குறையைக் குறைக்கும்.

தென் சீனக் கடலும் சீனாவும்
தென் சீனக் கடலில் எந்த நாடோ, நிறுவனமோ எரிபொருள் ஆராய்ச்சியோ அகழ்வோ தனது அனுமதியின்றிச் செய்யக் கூடாது என சீனா அறிவித்தது. அத்துடன் தென் சீனக் கடலில் தான் நிர்மாணித்த தீவுகளை தொடர்ந்து படைத்துறை மயப்படுத்தி வருகின்றது. தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன.  முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. தென் சீனக் கடலின் எரிபொருள் வளத்தை தனதாக்குவதற்கு சீனாவிற்கு நிறைய வெடிபொருட்கள் தேவைப்படுகின்றது. அங்கு அவ்வப்போது வரும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பற்குழுக்களை சீனா சமாளிப்பதற்காவும் ஒரு போர் என்று வந்தால் அவற்றை அழிப்பதற்காகவும் பல ஆண்டுகள் ஆய்வு செய்து ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. அந்த ஏவுகணைகளால் உலகின் எப்பாகத்திலும் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பற்குழுவை சீனாவால் அழிக்க முடியும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்துள்ளது.

சீனாவின் எரிபொருள் தேவையை இரசிய தனக்குச் சாதகமாக்க முயல்கின்றது. கிறிமியாவை இரசியா 2014il ஆக்கிரமித்து தனதாக்கிக் கொண்டதன் பின்னர் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் கொண்டு வந்த போது இரசியா தனது ஏற்றுமதிக்கு இந்த நாடுகளில் தங்கியிருப்பதைத் தவிர்த்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் தனது எரிவாயு விற்பனையை அதிகரிப்பதில் அதிக அக்கறை காட்டியது.

மோடிக்கு பேரிடி
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய நல்வாய்ப்பு உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததே. மோடி பெரிய அளவில் உள்ளூர் எரிபொருள் விலையைக் குறைக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவரை தேர்தலில் வெற்றியடைய வைத்த இந்தியப் பெருமுதலாளிகள் எரிபொருள் விற்பனையால் பெரும் பணம் சம்பாதிக்க வழிவகுப்பது. மற்றது அரச நிதி நெருக்கடியை எரிபொருள் வரியை அதிகரித்து சீர் செய்வது. இந்தியாவின் அரச நிதி இருப்பை வீழ்ச்சியடைந்த எரிபொருள்விலை அதிகரித்தது. இதனால் இந்தியா உலகச் சந்தையில் பெருமளவு படைக்கலன்களை தொடர்ந்து கொள்வனவு செய்யக் கூடியதாக இருந்தது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை தற்போது இருக்கும் 72டொலரில் இருந்து நூறு டொலராக அதிகரித்தால் அது 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மோடிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியாவின் மசகு எண்ணெய் பதனிடும் நிலையங்கள் ஈரானிய மசகு எண்ணெய்களை பதனிடுவதற்கு உருவாக்கப்பட்டவை. ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டால் ஈரானின் விலைக்கு சமமான வகையில் இந்தியாவிற்கு எரிபொருள் வழங்கப்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சவுதி சாதகமாகப் பதிலளித்துள்ளது.

டொலரும் எரிபொருளும்
2018-ம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி இந்த ஆண்டு குறையும் என எதிர்பார்க்கப் பட்டது. டொலரின் பெறுமதி அதிகரிப்பு வளர்முக நாடுகளுக்கு தலையிடியாகவே அதிகம் அமைகின்றது. அவை பட்ட கடன்களுக்கான வட்டியும் தவணைப்பணமும் டொலரிலேயே செலுத்த வேண்டியிருப்பதால் அவை நிதி நெருக்கடியை எதிர் நோக்கும். அத்துடன் எரிபொருள் இறக்குமதி அதிகம் செய்யும் வளர்முக நாடுகள் தமது எரிபொருள் கொள்வனவிற்கான பணத்தை டொலரிலேயே செலுத்து கொன்றன. எரிபொருள் விலை அதிகரிப்பும் டொலரின் பெறுமதி அதிகரிப்பும் எரிபொருள் கொள்வனவிற்கு வளர்முக நாடுகள் செலுத்தும் பணம் அதிகரிக்கும். இப்படி இரட்டிப்புப் பாதிப்பு எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அதிகரிக்கும் போது. எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இரட்டிப்பு நன்மையடைகின்றன.

Monday, 21 May 2018

இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா?


இஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது. இஸ்ரேலை எதிர்த்து நின்ற இந்தியா பல துறைகளிலும் அதனுடன் இணைந்து செயற்படுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக ஒத்துழைக்கின்றன. இஸ்ரேலில் தன்னிலும் பார்க்க பல மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட அயல் நாடுகளுடன் பகையான நாடாக இருக்கின்றது. அவற்றில் நிலங்களை அபகரித்து வைத்திருக்கின்றது. அயல்நாடுகளிலும் பார்க்க இஸ்ரேலில் வித்தியாசமான கலாச்சாரம், வித்தியாசமான ஆட்சி முறை இருந்தும் இஸ்ரேல் தன் அயல்நாடுகளுக்கு அஞ்சாமல் இருக்கின்றது. உலக அரங்கில் இஸ்ரேல் ஒரு அசைக்க முடியாத நாடாக மாறிவருகின்றதா?

இஸ்ரேலுக்கு வேண்டியவர் சிரியாவில் ஆட்சியில்
ஈரானுடன் P5+1 என்னும் பெயர்கொண்ட அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா என்ற ஐந்து வல்லரசு நாடுகளுடன் ஜேர்மனியும் இணைந்த குழு யூரேனியம் பதப்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக இரத்துச் செய்ததின் பின்னணியில் இஸ்ரேல் நின்று செயற்பட்டு வெற்றி பெற்றது. இஸ்ரேலுடன் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளும் இணைந்து செயற்பட்டன. 2011-ம் ஆண்டு சிரியாவில் அரபு வசந்தம் என்னும் பெயரில் ஆரம்பித்த போது பஷார் அல் அசாத் ஆட்சியி இருந்து அகற்றப்படக் கூடாது என்பது இஸ்ரேலின் நிலைப்பாடாகும். அதுதான் இன்றுவரை நடக்கின்றது.

இஸ்ரேல் நினைப்பதை அமெரிக்கா செய்கின்றது
ஐக்கிய நாடுகள் சபை ஜெருசலம் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை அது ஒரு பன்னாட்டு நகரம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. 1947-ம் ஆண்டு ஜெருசலேம் நகர் தொடர்பாக ஐநா சபையில் தீர்மானம் -181 நிறைவேற்றப்பட்டது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறுநாட் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம்த்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் பின்னர் 1980-ம் ஆண்டு இஸ்ரேல் ஜெருசலேம் சட்டம் 1980ஐ தனது பராளமன்றத்தில் நிறைவேற்றி முழு ஜெருசலேமும் தனது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம்-478 நிறைவேற்றப்பட்டது. ஜெருசேலம்தான் இஸ் ரேலின் தலைநகர் அங்குதான் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரகம் அமைக்கப்பட வேண்டும் எனச்சொல்லும் ஜெருசேலம் தூதுவரகச் சட்டம் (Jerusalem Embassy Act) 1995-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அதை 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நடை முறைப்படுத்தப் பட்டமை இஸ்ரேலுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

ஈராக்கில் இஸ்ரேலுக்குப் பாதகம் இல்லை
ஈராக்கியத் தேர்தலில் 329 பாராளமன்றத் தொகுதிகளுக்கு 87 கட்சிகள் 6990 வேட்பாளர்களைக் களமிறக்கின. மொத்தத் தொகுதிகளில் 25விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப் பட்டன. சுனி முஸ்லிம்கள் சார்பில் இரண்டு அணியினரும், சியா முஸ்லிம்கள் சார்பில் 5 அணியினரும் குர்திஷ் மக்கள் சார்பில் 4 அணியினரும் தேர்தலில் போட்டியிட்டனர். 2005-ம் ஆண்டில் இருந்து அமெரிக்க ஆதரவு சியா முஸ்லிம்கள் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 2018 மே மாதம் நடந்த தேர்தலில் அமெரிக்க ஆதரவு சியா முஸ்லிம்கள், ஈரான் ஆதரவு சியா முஸ்லிம்கள், ஈராக்கை ஈராக்கியர்களே ஆளவேண்டும் அமெரிக்கர்களோ ஈரானியர்களோ அல்ல என்ற கொல்கையுடைய சியா முஸ்லிம்கள் என மூன்று பிரிவாகப் பிரிந்துபோட்டியிட்டனர். அதில் மூன்றாம் வகை சியாக்கள் வெற்றி பெற்றனர். இஸ்ரேலைப் பொறுத்தவரை ஈரானுக்கு சார்பானவர்கள் ஈராக்கில் ஆட்சியைக் கைப்பற்றாதது ஒரு வெற்றியே.

இஸ்ரேலின் பின்னணி
பிரித்தானிய ஆணைக்குட்பட்ட பலஸ்த்தீனம் என்ற நாட்டின் 72 விழுக்காடு நிலப்பரப்பை யூதர்கள் தமது நாடு என 1948-ம் ஆண்டு பிரகடனப் படுத்திய போது அதை முதலில் அங்கீகரித்தது இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியமாகும். ஜோசேப் ஸ்டாலின் இஸ்ரேல் என்ற நாடு உருவாகுவதைத் தீவிரமாக ஆதரித்தார். அப்போது இஸ்ரேல் பொதுவுடமைவாதத்தை மேற்காசியாவில் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இரசியாவில் உள்ள யூதர்களை இஸ்ரேலில் குடியேற்றவும் இரசியா அப்போது விருப்பம் கொண்டிருந்தது. ஈராக்கிலும் சிரியாவிலும் பாத் கட்சியினர் இடதுசாரிக் கொள்கையுடைய படைத்துறையினர் புரட்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அந்த நாடுகளுடன் நட்புறவை சோவியத் ஒன்றியம் வளர்த்தாலும் இஸ்ரேலுடனான உறவைத் தொடர்ந்து பேணி வந்தது. 1967-ம் ஆண்டு நடந்த போரில் எகிப்து தலைமையிலான அரபு நாடுகளின் பக்கம் இரசியா நின்றது. பின்னர் இரசியா பெருமளவு படைக்கலன்களை அரபு நாடுகளுக்கு விற்பனை செய்தது. 1972-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் ஆரம்பத்தில் எகிப்திடமும் சிரியாவிடமும் இருந்த இரசியாவின் ஏவுகணைகள் இஸ்ரேலியப் போர்விமானங்களைச் செயற்படாமல் செய்தன. பின்னர் இஸ்ரேல் அந்த ஏவுகணை நிலைகளை அழித்த பின்னர்தான் இஸ்ரேலியப் போர்விமானங்கள் செயற்பட்டு போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது.

இஸ்ரேலுக்கு ஏற்ப மாறியது இரசியா
சோவியத் ஒன்றியத்தின் விழ்ச்சியின் பின்னர் உலக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருந்த இரசியாவை புட்டீன் மீண்டும் உலக ஆதிக்க நாடாக மாற்றத் தொடங்கிய பின்னர் இஸ்ரேலுக்கு எதிராக இரசியா செயற்படவில்லை. சிரியாவில் இரசியா தலையிடத் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலும் இரசியாவும் பலவகைகளில் ஒத்துழைத்து வருகின்றன. சிரியப் படையினரும் இரசியப் படையினரும் இரசியாவும் ஒரே வகையான போர் விமானங்களைப் பாவித்தன. வேகமாகப் பறக்கும் போது இரசியப் போர்விமானங்கள் அவ்வப் போது இஸ்ரேலிய வான்பரப்புக்குள் பறப்பதுண்டு. அவற்றின் மீது இஸ்ரேல் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இரு நாடுகளும் இரகசியமாக சமரசம் செய்து கொண்டன். ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால் இரசியா இஸ்ரேலின் பக்கம் நிற்கும் என இஸ்ரேலுக்கான இரசியத் தூதுவர் கருத்து வெளியிட்டது. மேற்காசியாவின் படைத்துறைச் சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்தே இரசியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருந்தது. பஷார் அல் அசாத் பதவியில் தொடர வேண்டும் என்பதிலேயே அந்த ஒற்றுமை நிலவியது. ஈரானியப் படைகள் சிரியாவில் நேரடியாகத் தலையிடுவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்தது. அசாத்தைப் பதவியில் தக்க வைப்பதற்கு ஈரானின் உதவி அவசியம் என்பதை இரசியா நன்குணர்ந்து ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. சிரியப் போரைச் சாக்காக வைத்துக் கொண்டு லெபனானுக்குள் பெருமளவு படைக்கலன்களை சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு எடுத்துச் செல்லாமல் தடுப்பதில் இஸ்ரேல் கண்ணும் கருத்துமாக இருந்தது. இதற்காகப் நூற்றுக் கணக்கான தடவை சிரியாவினுள்ளும் லெபனானிற்குள்ளும் இஸ்ரேலியப் போர் விமானங்கள் அத்து மீறிப்பறந்து சென்று தாக்குதல்களை நடத்தின. ஈரான் சிரியாவையும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு முன்னரங்க நிலையாக மாற்றுவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்தது. இஸ்ரேலியப் போர்விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு இரசியா எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இருந்தது. இரகசியமாக இஸ்ரேலுக்கு சிரியாவினுள் எப்போதும் நுழைந்து விமானத் தாக்குதல் நடத்த இரசியா அனுமதி வழங்கியிருந்தது.

ஐரோப்பியப் பாட்டுப் போட்டியில் இஸ்ரேல் வெற்றி
ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடத்தும் யூரோவிஷன் என்னும் பாடல் போட்டியில் இஸ்ரேலும் பல ஆண்டுகளாகக் கலந்து கொள்கின்றது. 2018இற்கான பாடல் போட்டியில் மக்களின் வாக்களிப்பாலும் நிபுணர்களின் வாக்களிப்பாலும் இஸ்ரேலியக் கலைஞர்கள் பாடிய பாடல் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இஸ்ரேல் வெற்றி பெற்றது முதலாவது தடவையாகும். ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராக மக்களிடையே உருவான எதிர்ப்பு இஸ்ரேலுக்கான ஆதரவாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஆசிய நாடாகிய இஸ்ரேல் ஐரோப்பியப் பாடல் போட்டியில் பங்குபெறக் கூடாது என்ற எதிர்ப்பு ஒரு காலத்தில் தீவிரமடைந்திருந்தது. போட்டியில் வெற்றி பெறும் நாட்டில் அடுத்த யூரோவிஷன் பாடல் போட்டி நடைபெறும். போட்டியில் வெற்றி பெற்ற இஸ்ரேலியப் பெண்மணி தனது வெற்றி உரையில் அடுத்து ஜெருசேலத்தில் சந்திப்போம் எனச் சொன்னது அரசியல் மயமானது. ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராகப் பரப்புரை செய்யும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. அவர் அப்படிச் சொன்னமைக்காக அவரது வெற்றியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

படைகல உற்பதியில் இஸ்ரேல்
2014-ம் ஆண்டின் பின்னர் இஸ்ரேல் தனது படைத்துறை ஏற்றுமதியை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் இஸ்ரேலின் படைத்துறை ஏற்றுமதி 9.2பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதில் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான ஏற்றுமதி 58 விழுக்காடாகும். இந்தியாவிற்கு இஸ்ரேல் செய்த ஏற்றுமது இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியானது. அமெரிக்க அதிபரின் நிர்ப்பந்தத்தினால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரிப்பதால் இஸ்ரேலின் படைத்துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

Oligarch எனப்படும் பெரும் பணக்காரர்கள் இரசிய அதிபர் புட்டீனைச் சூழ்ந்திருக்கின்றார்கள். அவர்களில் யூதர்களும் இடம்பெறுகின்றனர். இரசியாவில் உள்ள யூதச் செல்வந்தர்கள் புட்டீனின் செயற்பாடுகளில் அதிக செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். இரசியா 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு டொனால்ட் டிரம்பை வெற்றியடையச் செய்ததமைக்கு இந்த யூதர்கள்தான் பின்னணியில் நின்று செயற்பட்டனர் என நம்பப்படுகின்றது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா மறைமுக ஆதரவு கொடுப்பதற்கும் புட்டீனைச் சூழவுள்ள யூதர்களே காரணம் எனவும் சொல்லபப்டுகின்றது.   


டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஒரு யூதராவார். யூத மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கும் Jared Kushnerஐக் திருமணம் செய்வதற்காக டிரம்பின் மகள் இவங்கா யூத மதத்திற்கு மாறினார். மருமகன் Jared Kushner டிரம்பிற்கு தேர்தல் பரப்புரையின் போது பேருதவியாக இருந்து ஆலோசனைகள் வழங்கியவர். அவர் டிரம்ப்பின் ஆட்சியிலும் முக்கிய பங்கு வகிப்பார். அவர் வெள்ளை மாளிகையில் பணி புரிவதை பெரிதும் விரும்புகின்றார். இரசிய யூதச் செல்வந்தர்கள் ஜெரார்ட் குஷ்னரின் மாமனாரை தேர்தலில் வெற்றி பெறச் செய்து அதன் மூலம் இஸ்ரேலுக்கு சாதகமாக டிரம்பை செயற்படச் செய்கின்றனர் எனவும் சிலர் கருதுகின்றனர்.

தற்போது இஸ்ரேலை எதிர்க்கக் கூடிய வலிமையான ஒரே நாடாக ஈரான் மட்டுமே இருக்கின்றது. அதனால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல அரசுறவியல் நகர்வுகளை மேற்கொள்கின்றது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களை இரசியா மறைமுக ஆதரவு வழங்குகின்றது. இந்த வல்லரசுகளை யூத செல்வந்தர்கள் வசப்படுத்தி வைத்திருப்பதால் இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது.

Monday, 14 May 2018

மீண்டும் பல்துருவ ஆதிக்கம் உருவாகுமா?



பல வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் உலகம் இருப்பதை பல்துருவ உலகம் என்பர். 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான் நட்புறவை பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இருதுருவங்கள்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தமது உலக ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்வதில் போட்டி போட்டுக் கொண்டன. அவை இரண்டின் பின்னால் பல நாடுகள் ஆதரவாக இணைந்து கொண்டன. அது இரு துருவ உலகத்தை உருவாக்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த போது அதில் பங்கு பற்றிய பல நாடுகள் தமது படை வலிமையையும் பண வலிமையையும் இழந்திருந்தன. அப்போரில் அமெரிக்கா 400,000 படையினரை மட்டும் இழந்திருதது ஆனால் சோவியத் ஒன்றியம் பதினொரு மில்லியன் படையினரைப் பலிகொடுத்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் நடந்த கொரியப் போர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. முழுக்கொரியாவையும் பொதுவுடமை நாடாக்க சோவியத் ஒன்றியத்தாலும் அதனுடன் இணைந்து செயற்பட்ட சீனாவாலும் முடியவில்லை. அதே போல முழுக்கொரியாவையும் முதலாளித்துவ நாடாக்க அமெரிக்காவாலும் முடியவில்லை. அதனால் இருதுருவ உலக ஆதிக்கம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நிலை உருவானது. வியட்னாம் போரின் முடிந்த பின்னர் 1971இல் அமெரிக்காவின் முழுமையான உலக ஆதிக்கத்தைத் தொடர்ந்து பேண முடியாது என அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் எதிர்வு கூறியிருந்தார்.

காசேதான் வல்லரசடா
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி மொத்த உலக உற்பத்தியின் 60 விழுக்காட்டுக்கு மேலானதாக இருந்தது. 1862ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாகி விட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும், படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவை அமெரிக்காவில் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூட எட்டியதில்லை. பொருளாதார வலிமை மிக்க அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு படைத்துறைக்குச் செலவு செய்த சோவியத் ஒன்றியம் பெரும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆப்கானிஸ்த்தானில் இருந்த சோவியத் படையும் வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலையும் 1991இல் சோவியத் ஒன்றியத்தை வீழ்ச்சியடையச் செய்தது.

சீனத் துருவம்
சீனா அமெரிக்கா அளவு பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் இரசியா, கிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும், தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றது. தாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றது. அமெரிக்காவைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம் வலுவற்ற நாடுகளே. பிரச்சனைக்குரிய நாடாக இருந்த கியூபா அமெரிக்காவிற்கு எதிரான தனது செயற்பாடுகளை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் கைவிட்டது. தென் சீனக் கடலில் அமெரிக்கா பன்னாட்டுப் நீர்ப்பிராந்தியம் என வலியுறுத்திய இடத்தில் சீனா தீவுகளை நிர்மாணித்து படைத்தளங்களை அமைப்பதை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை. அதே வேளை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொல்லும் தைவான இன்னும் சீனா செயற்பாட்டு ரீதியாக தனதாக்க முடியவில்லை. தைவான் ஒரு முழுமையான சுதந்திர நாடு போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சரியாதப்பா! சரியா தப்பா?
உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்குச் சரிந்து கொண்டிருக்கின்றது எனச் சிலரும் ஏற்கனவே சரிந்து விட்டது எனச் சிலரும் வாதங்களை முன்வைக்கின்றார்கள். டொனால்ட் டிரம்ப்உம் அவரது ஆதரவாளர்களும் தமது தேர்தல் பரப்புரையின் போது அமெரிக்காவின் நிலை தாழ்ந்துவிட்டது அதை மீண்டும் உலகின் முதற்தர நாடாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். டிரம்பிற்கு எதிரான கருத்துடையோர் உலக அரங்கின் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை டிரம்ப் கெடுத்துவிட்டார் என்கின்றனர். ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு எதிராக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை ஏற்றுக் கொண்டது, ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தலுக்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்தது நீண்டகாலமாக பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றும் தறுவாயில் இருந்த பல வர்த்த உடன்படிக்கைகளை இரத்துச் செய்தது போன்றவை அமெரிக்காவின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்தது.

புட்டீனின் பேரரசுக் கனவு
விளடிமீர் புட்டீன் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத் ஒன்றியம் போல் ஒன்றை உருவாக்க வேண்டும் என உறுதியாக இருக்கின்றார். சீனாவை உலகின் முதற்தர நாடாக்க வேண்டும் என்பதில் அதன் அதிபர் ஜி ஜின்பிங் அதிக முனைப்புடன் செயற்படுகின்றார். இருவரும் வலிமை மிக்க தலைவர்களாக தத்தம் நாடுகளில் திகழ்கின்றனர். இருவரும் முழுமையான ஒத்துழைப்பிற்கு தயாராக இல்லை. சீனாவை புட்டீன் மிகுந்த ஐயத்துடனே நோக்குகின்றார். மத்திய ஆசியாவை நோக்கிய சீனாவின் விரிவாக்கம் இரசியாவிற்கு ஆபத்தானது என புட்டீன் கருதுகின்றார். இரசியாவும் சீனாவும் வலிமையான நாடுகள். ஆனால் வலிமை மிகுந்த நாடுகள் அல்ல. இரசியாவின் பொருளாதாரமும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அசைக்கப் போதியதாக இல்லை. 2020-ம் ஆண்டு இரசியா தான் படைத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றது. அதற்கு அவசியமான ஐந்தாம் தரப் போர்விமானங்களையோ பாரிய கடற்படையையோ அதனால் உருவாக்க முடியவில்லை. இரசியாவின் SU-57 போர் விமான உற்பத்தி நிறைவடைந்த வேளையில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக அதை மாற்றுவதற்கான இயந்திரங்களை உருவாக்க இரசியாவால் முடியவில்லை. SU-57 போர் விமானங்களை பெருமளவில் உற்பத்தி செய்யக் கூட முடியவில்லை. 2017-ம் ஆண்டு இரசியா தனது பாதுகப்புச் செலவை 20விழுக்காட்டால் குறைத்தது.

முத்துருவ சாத்தியம்
மேற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் தேசியவாதப் பிரச்சனைகளையும் சமாளித்து எழுச்சியுறும் போது அவை அமெரிக்கா தலைமையில் ஒரு குழுவாக உலக அரங்கில் செயற்படும் போது அவற்றுக்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ உருவாகுவதற்கு இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது செல்லும்.. இன்னும் பத்து ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் படைத்துறை ரீதியிலும் பொருளாதார ரிதியிலும் தமக்கு இடையிலேயான ஒத்துழைப்பை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தை இரசியாவினதும் சீனாவினதும் படைத்துறை வளர்ச்சி  நிச்சயம் கொடுக்கும். இரசியாவினது படைத்துறை வளர்ச்சியும் சீனாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக வரும்போது நேட்டோ மேலும் தனது வலிமையை வளர்ப்பதுடன் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும். இந்த முத்தரப்பில் இந்தியாவும் ஜப்பானும் ஏதாவது ஒன்றுடன் சேரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தற்போது ஆசியாவில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இந்தியா இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் உலகப் படைத்துறைச் சமநிலையை தீர்மானிக்கக் கூடிய நாடாக இருக்கும்.

பிரேசில்
பிரேசிலின் மக்கள் தொகையும் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும் அது எதிர்காலத்தில் ஒரு வலிமை மிக்க நாடாக மாறும் எனச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் படைத்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அது இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது. ஊழலற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும். மக்கள் நாட்டின் பெருளாதார சுபீட்சத்திலும் பார்க்க காற்பந்தாட்டத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மோசமான கால நிலை அங்கு நிலவுவதில்லை. இயற்கை அனர்த்தங்கள் அங்கு இல்லை. 21-ம் நூற்றாண்டில் மற்ற நாடுகள் எதிர் கொள்ளும் நீர்த்தட்டுப்பாடு அங்கு இல்லை. உலகில் பிரேசில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற வசதிகள் உண்டு, வாய்ப்புக்கள் உண்டு. சிறந்த தலைமை வேண்டும். 
செயற்கை விவேகம் சாதிக்கும்
வல்லரசு நாடுகளின் உலக ஆதிக்கத்தை தீர்மானிப்பவையாக இணையவெளிப் போர்முறைமையும் செயற்கை விவேகமும் அடுத்து இருபது ஆண்டுகளுக்கு இருக்கும். செலுத்துனர் இன்றி செயற்கை விவேகத்துடன் செயற்படும் தாங்கிகள் எதிரி நாட்டின் எல்லையை கடந்து சென்று அங்கு உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப தாமே முடிவெடுத்துச் செயற்படும். அவற்றின் மீது ஆளில்லாப் போர்விமானங்கள் தாக்குதல் நடத்தும்.
மீண்டும் ஓரு பல்துருவ உலக ஆதிக்கம் உருவாகவிடினும் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் உலகம் ஒரு முத்துருவ ஆதிக்கத்திற்கு உள்ளாகும். இந்தியா நான்காவது துருவமாக உருவாக முடியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்தியா நான்காவது துருவமாக உருவெடுக்கும் எனக் காட்டுனாலும் அதன் தேசி ஒற்றுமையை மதவாதிகள் சிதைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்திய ஒன்றியத்திற்கு மதம் சாதி போன்றவை பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன இந்துத்துவாவின் மதவாதமும் இந்திப் பேரினவாதமும் இந்திய ஒன்றியத்தை உடைக்காமல் இருக்க வேண்டும்.



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...