Saturday, 22 February 2014

தெலுங்கானா ஏன் பிரிந்தது?

இசைக்கு ஏற்ற இனிய மொழியான தெலுங்கைப் பேசும் மக்கள் ஒரே மாநிலத்தில் ஒன்றாக வாழ முடியாமல் இரண்டாகப் பிரிந்துள்ளனர். இந்தியப் பாராளமன்றத்தின் வரலாற்றில் ஒரு மோசமான நிகழ்வாக தெலுங்கானாவை தனி மாநிலமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதைத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. ஆனால் காங்கிரசுக்குப் பயந்து எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்தது.

தன் கட்சிக்காரர்களின் கால்வாரிய காங்கிரசு.
தற்போது ஆந்திர மாநிலத்தில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியே நடக்கின்றது. முதலமைச்சர் கிரான் குமார் ரெட்டியும் தெலங்கானாப் பிரிவை எதிர்த்தார் காங்கிரசுக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் சிரஞ்சீவி தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்படுவதை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவருடன் ஆந்திரப் பிரதேசத்தின் காங்கிரசுப் பிரபலங்களும் துணை அமைச்சர்களுமான பல்லம் ராஜு, புரந்தேஸ்வரி, எள்ளூர் கே எஸ் ராஜா, அரக்கு கே சி டியோ ஆகிய தெலங்கானாப் பிரிவினையை எதிர்த்தனர்.தெலங்கானாப் பிரிவினையை ஆதரித்த மாயாவதி உத்தரப் பிரதேச மாநிலத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் என்றார்.

ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த தெலங்கானாவை (தெலுங்கான எனவும் கூறுவர்) இந்திய அரசு ஒரு தனி மாநிலமாப் பிரித்து இந்திய அரசின் 29வது மாநிலத்தை உருவாக்கியுள்ளது. தெலங்கானவில் மக்கள் ஆர்பரித்து மகிழ்ச்சியாக தமது புதிய மாநிலத்தின் உதயத்தைக் கொண்டாட எஞ்சிய ஆந்திரப் பிரதேசமான சீமந்திரா மக்கள் தமது மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை துக்க நாளாக கழித்தனர். 1969-ம் ஆண்டு ஆரம்பித்த தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை பல போராட்டங்களின் பின்னர் நிறைவேறியுள்ளது.

Cut & Paste.
1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்ற போது ஐதராபாத்தின் நிசாம் தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசம் இந்திய அரசுடன் இல்லாமல் ஒரு தனி நாடாக இருக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை பிரித்தானியா ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்தியா1948-ம் ஆண்டு ஐதராபாத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதுவே தெலங்கானா ஆகும். 1956இல் இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களின் எல்லைகள் வகுக்கப்பட்ட போது ஆந்திரப் பிரதேசம் உருவானது. அப்போது தெலங்கானா மக்களுக்கும் சீமாந்திரா மக்களுக்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தெலங்கானாவா சீமந்திராவா? ஏன் இந்தப் பிரிவு?
அரை நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த ஒரு மொழி பேசும் மக்கள் ஏன் பிரிந்தனர்? தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஒன்பது மாவட்டங்கள், மதராஸ் மாகாணத்தில் இருந்து பன்னிரண்டு மாவட்டங்கள், ஒன்று பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த ஏனாமில் இருந்து ஒரு மாவட்டம் ஆகியவற்றை இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழி ஒன்றாக இருந்த போதிலும் சீமந்திரா மக்கள் என்றும் தெலங்கானா மக்கள் என்றும்  இரு பிரிவினரும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக் கொண்டனர்.சீமந்திரா மக்கள் தாம் தெலங்கானா மக்களிலும் பார்க்க கலாச்சாரத்தால் கல்வியால் பண்பாட்டால் உயர்ந்தவர்கள் என்றும் கருதினார்கள். ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் சீமந்திரா மக்கள் கதாநாயகர்களாகவும் தெலங்கான மக்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தனர்.  தெலங்கான மக்கள் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தெலங்கானா மக்க்களின் பட்டுக்கம என்னும் பண்டிகையை அரசு புறக்கணித்தது. தெலங்கானா மக்கள் சீமந்திரா மக்களை ஏமாற்றுக்காரர்களாகவும் பணத்தாசை பிடித்தவர்களாகவும் கருதுகின்றனர். தெலங்கானா மக்கள் தாம்மை கள்ளம் கபடமற்றவர்களாகவும் மரபு வழி முறையில் ஒழுகுபவர்களாகும் கருதுகின்றனர். சீமந்திரா மக்கள் தாம் கடின உழைப்பாளிகள் எனவும் தெலங்கானா மக்கள் சோம்பேறிகள் எனவும் கருதுகின்றனர். சீமந்திராவில் உள்ள தலித்துக்கள் தாம் தெலங்கானாத் தலித்துக்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் எனக் கருதுகின்றனர்.  தெலங்கான மக்கள் நவராத்திரி விழாவிற்கும் சீமந்திரா மக்கள் தைமாதத்தில் வரும் மகர சங்கிராந்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தெலங்கானா மும்பையத் தலைநகராகக் கொண்ட மகாராஸ்ட்ரா மாநிலத்திற்கு அண்மையாகவும் சீமந்திரா பிரதேசம் தமிழ்நாட்டுக்கு அண்மையாகவும் இருப்பதால் இவர்களின் மொழிவழக்கில் சிறிய வேறுபாடு உண்டு. தெலங்கானா மக்களின் தெலுங்கு மொழியில் உருது மொழி கலந்துள்ளதாகக் குற்றம் சாட்டுவதும் உண்டு. சீமாந்திரா மக்கள் தம்மைச் சுரண்டுவதாகவும் தெலங்கானா மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம்
தெலங்கானா என்பதன் பொருள் தெலுங்கர்களின் நாடு என்பதாகும். 1969-ம் ஆண்டு தெலங்கானா கோரிக்கையை முன்வைத்து ஒஸ்மானியாப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடங்கினர். இதில் மற்ற மாணவர்களும் இணைய காவற்துறை துப்பாக்கிச் சூடு நடாத்திய போது முன்னூற்று ஐபம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். போராட்டம் அடக்கப்பட்டாலும் தெலங்கான மக்கள் தமது தனி மாநிலக் கோரிக்கையைக் கைவிடவில்லை. 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி உருவாக்கப்பட்டது. 19900-ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் தனித் தெலங்கான மாநிலம் உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தனர். பின்னர் காங்கிரசுக் கட்சியும் அதற்குப் போட்டியாக தனித் தெலங்கானக் கோரிக்கையை ஆதரித்தது. தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.

வாக்குவேட்டை அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள்
2004ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக வாக்குறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. காங்கிரசுக் கட்சி தனி மாநிலம் உருவாக்காதமையினால் கூட்டணி இரண்டு ஆண்டுகளில் உடைந்தது. 2009 பொதுத் தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்தது. புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா உருவாக்குவோம் என வாக்குறுதி கொடுத்தது. நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தது.மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தனித் தெலங்கானக் கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார். இதை ஒட்டி பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை அப்போதைய இந்திய மைய அரசின் உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம்  வெளியிட்டார். இந்த வாக்குறுதியன் படி தெலங்கானா 2014 பெப்ரவரி மாதம் தனிமாநிலமாக்கப்பட்டது. காங்கிரசுக் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிந்த படியால் காங்கிரசின் செல்வாக்கு தெலங்கானாவில் அதிகரிக்கப்படும் என்றும் சீமன்திராவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கள்ளத்தனமாக நிறைவேற்றப்பட்டதா?
தெலங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இந்திய மக்களவையில் நிறைவேற்ற விடாமல் சீமந்திரா பாராளமன்ற உறுப்பினர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். பாராளமன்றத்தில் மிளகுத்தூள் வீசப்பட்டது. அவைத் தலைவரின்(சபாநாயகர்) ஒலிவாங்கி பிடுங்கி எறியப்பட்டது. பாராளமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. பாராளமன்ற நிகழ்வுகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதைத் தடை செய்து விட்டு குரல் மூலமான வாக்கெடுப்பினால் நிறைவேற்றப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநில சட்ட சபை தெலங்கானாவைப் பிரிப்பதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

சட்டச் சிக்கல் தொடரலாம்
இந்தியப் பாராளமன்றத்தின் லோக் சபா எனப்படும் மக்களவையில் நிறைவேற்றிய தெலங்கானாவைத் தனி மாநிலமாக்கும் தீர்மானத்தை ராஜ்ய சபா எனப்படும் மேலவை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியது. இதனால் இந்தச் சட்டம் மீண்டும் மக்களவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். சில அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெலங்கான சட்டத்திற்காக அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்கின்றனர். இதனால் இந்தப் பிரச்சனை நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம். பாரதிய ஜனதாக் கட்சி தெலங்கானாவிற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும் எனச் சொல்கின்றது. ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராகச் சிலகாலம் வைத்திருப்பதானால் அதற்கு இந்திய அரசிய்லமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது அது ஒரு யூனியன் பிரதேசமாக்கப்படவேண்டும் என அரசமைப்புச் சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

பேரினவாதிகள் பிரித்து ஆளுகின்றார்களா?
இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. அதன் மக்கள் தொகை ஜேர்மனியின் மக்கள் தொகைக்கு ஒப்பானது. மற்ற நான்கு பெரிய மாநிலங்களும் வடக்கில் இருக்கின்றன. இந்த மாநிலத்தைப் பிரிப்பது வட இந்தியர்களின் பேரினவாதக் கொள்கைக்கு உகந்ததாகும். ஒன்றிணைந்த ஆந்திரப்பிரதேசத்தில் 84.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதில் தெலங்கான மக்கள் தொகை 35.28 மில்லியன்கள். இரு மாநிலங்களும் சிறிது காலம் ஹைதராபாத்தை பொதுவான தலைநகராகக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சீமந்திரா தெலுங்கர்கள் பாரிய முதலீட்டைச் செய்துள்ளனர். ஹைதராபாத்தை ஒட்டியும் நதிநீர்ப்பங்கீட்டை ஒட்டியும் இரு பிரிவினருக்கும் இடையில் பெரும் மோதல் வெடிக்கலாம். இப்போது சீமந்திரா தலைநகர் ஒன்று இல்லாமல் இருக்கிறது. சீமந்திராவில் இரு பிரதேசங்கள் இருக்கின்றன.  ஒன்று ராயசீலம் எனப்படும். மற்றது கரையோர ஆந்திரப் பிரதேசம் ஆகும். ராயசீலப் பிராந்தியத்தில் பகுதியில் வாழும் மக்கள் சீமந்திராவின் தலைநகராக ராயசீலத்தின் குர்னூல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Friday, 14 February 2014

காதலும் ஜெனீவாத் தீர்மானம் போலே!!!

அகமென்றும் புறமென்றும்
காதலும் வீரமும் தமிழர்
வாழ்வியலில் இரு கண்கள் அன்றோ
இந்திர விழா மன்மதன் விழா - எனக்
காதலுக்கு விழா எடுத்தவர் நாம் அன்றோ

அறம் பொருள் இன்பம் என
மூன்றில் ஒரு பகுதியைக்
காதலுக்குக் கொடுத்தவரும் தமிழர் அன்றோ
இரவுக்குறி பகற்குறி என
காதலர் சந்திப்புக்களுக்கு
கோட்பாடுகள் வகுத்தது தமிழ்ப்பண்பாடு அன்றோ
நகக்குறியென்றும் பற்குறியென்றும்
இணைந்த இன்பத்தை நினத்துப் பார்த்து மகிழ்ந்தவர்
எம் தமிழ்ப் பெண்கள் அன்றோ

ஏறு தழுவி மணம்முடித்தல்
கல் தூக்கி மணம்முடித்தல்
பரிசல் கொடுத்து மணம்முடித்தல்
மடலேறி மணம்முடித்தல்
போரில் வென்று மணம்முடித்தல்
என காதலரை இணைத்தவர் நாம் அன்றோ
ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கத்தை வலியுறுத்தி
மனம் விரும்பியவரை தடையின்றி அடைய
திணைக்கலப்பு மணமும் செய்தவர் நாம் அன்றோ

எந்தையும் நிந்தையும் அந்நியரானாலும்
யாயும் ஞாயும் அறியாதவரானாலும்
மண்ணோடு நீர்போல் மனங்களைக்
காதலில் இணைய அனுமதித்தோர் தமிழர் அன்றோ

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமாக
வந்திருந்து மணம் பேசி
முன்னறியாதவரை இணைத்தல்
ஆரியம் தந்த அறிவீனமன்றோ

ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும்
உள்ளத்தால் இணைவதைக் காதலென்கின்றனபழம்பெரும் தமிழிலக்கியங்கள்
இன்று எம் எல்லோரினதும் ஒத்த நிலையா
அன்பை நாம் பொழிய வேண்டியதும்
எம் தேசியத்தில் அன்றோ

மழைதரு மேகங்கள் கருங்குழலாய்
கடலலைகள் மல்லிகை மாலைகளாய்
வண்ண வானவில்லே நெற்றியாய்
நீர் நிலைகளில் கதிரும் நிலவும்
தரும் விம்பங்கள் கண்களாய்
புள்ளினங்கள் ஆங்கே காதோரக் குழலாய்
உப்பளங்கள் வதனமாய்
முக்கனிகளும் இதழ்களாய்
நீரோடைகள்தான் கழுத்து நகையாய்
பசுமையான வயல்கள்
மரகத மணி பதித்த ஆடையதாய்
வன்னி விருந்தோம்பல் மார்பதாய்
தேன் மலர்களும் மீன்வளங்களும் கரங்களாய்
வழிபாட்டிடங்கள் வளையல்களாய்
வற்றாக் குளங்களும்இடைகளாய்
கரும்பு வளமும் கனிம வளமும் கால்களாய்
இயற்கைத் துறைமுகங்கள் பாதங்களாய்
பாடும்புள்ளினங்கள் மேகலையாய்
ஆடும் மயில்கள் மெட்டிகளாய் - அழகிய எம்
தேசமகள் ஆங்கே துணையின்றி வாடுகின்றாள்
காதலிப்போம் காதலிப்போம் அவளை
மனதாரக் காதலிப்போம்

அழகிய எம் தேசிய மகளை
அலங்கரித்த தன்னாட்சி
என்னும் அணிகலன்கள் - அன்று
படைக்கலன்கள் எல்லாம்
மௌனித்துப் போனதால்
கலைந்து போனதன்றோ

ஜெனிவாக் கிலுகிலுப்பையை நம்பியிராமல்
தனியாய் ஓர் அரசு என்னும் திருமண பந்தத்தில்
எம் தேசமகளை கைப்பிடிப்பது எம் கடன் அன்றோ

அமெரிக்கரும் பிரித்தானியரும் யாராகினரோ
இந்தியரும் சீனரும் எம்முறைக் கேளிர்
அவர்தம் ஆதரவும் எதிர்ப்பும்
எம் தேசமகளையும் தன்னாட்சியையும்
இணைக்கும் என நம்புதல் மடமையன்றோ

திங்கள் இல்லா மாலை கருங்குடையான்
பயங்கரவாதம் என அன்று ஓதி
எம் விடுதலையின் கால்வாரி
சிங்களம் தன்னைப் புணர்ந்தாலும்
அறிவாய் நன்றாய் ஆரிய நரித்தனம்

ஜெனிவா தன்னில் தீர்மானித்தாலும்
தீராது ஒழியாத் துயரென்பதாலும்
தேச மங்கை இடர் பெரும் தீயேன்பாய்
அறிந்தோம் என தோழா நீ முழங்கு

என்றும் மாறா அயோக்கியத்தனம்
இத்தாலி கொடுக்கோல் வெள்ளைச்சி
தேர்தலோடு தோற்று ஓடினாலும்
ஆரிய அயோக்கியத்தனம்
மாறாது தொடரும் வழக்கமென
அறிவாய் நீ என் தோழா

தமிழர்க்கு உதை மாறாத உதை
நிறுத்து அதை உன் கடன்
என உன் மனம் கொள்
ஈழவர் உதை இனித் தொடங்க
தேசமகளை நீ காதலி தோழா

அக நூலகத்தில் முகநூலாவாள்
இணைய முகவரி கொடுப்பாள்
இணைந்து முக வரி தொடுப்பாள்
மின்னஞ்சல் விடுத்து என்நெஞ்சில்
பொன்னூஞ்சல் ஆடிடுவாள்
ஆனாலும் அக்காதலிலும்
தேசிய மகளைக் காதலித்தல்
பெருங்கடன் என்றுணர்வாய் தோழா

சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடிப்பதால்
ஆசை காட்டி ஏமாற்றிச் சாகடிப்பதால்
இறுதியில் பொய்யாய் முடிவதால்
சிலர் காதலும் ஜெனிவாத் தீர்மானம்போலே
தேசியத்தின் மீது வைக்கும் காதல்
என்றும் இனிக்கும் சரித்திரத்தில் நிலைக்கும்
என்றுணர்வாய் என் தோழா

Monday, 10 February 2014

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள நீர்மூழ்கிக் கப்பல் போட்டி

2014-ம் ஆண்டு சீனா தனது புதிய ரக நீர் மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் தாக்கும் திறனை அதிகரிக்கவுள்ளது. சீனாவின் JL-2 நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு ஏவுகணைகள் 14,000 கிலோமிட்டர் அதாவது 8,699 மைல்கள் வரை பாயக் கூடியவை. இவற்றால் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய், அலஸ்கா போன்ற மாநிலங்கள் மீது அணுக்குண்டுத் தாக்குதல்களை செய்யும் திறனை சீனா பெறுகின்றது.

உலகிலேயே படைத்துறைச் செலவு அதிகரிப்பு ஆசிய நாடுகளில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஆசியப் படைத்துறைச் செலவு 2011இலும் பார்க்க 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் சீனாவின் படைத்துறைச் செலவு மற்றா ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கிறது.

சீனா உருவாக்கியுள்ள அதிவேகமாகச் செல்லும் ஏவுகணைகள் அமெரிக்கா பல பில்லியன்கள் செலவி உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செல்லுபடியற்றதாக்கியுள்ள வேளையில் சீனா தனது புதிய தர நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ள. சீனாவிடம் மொத்தமாக 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆறு அணுவலுவில் இயங்கிக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக் கூடியவை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட துறைமுகங்களான அம்பாந்தோட்டை, சிட்வே, சிட்டகொங், குவாடர் ஆகிய துறை முகங்கள் ஆழ்கடல் துறைமுகங்களாக இருக்கின்றன. சீனா தனது எதிர்கால கடற்படை வலுவில் நீர் மூழ்கிக் கப்பல்களிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என இது சுட்டி நிற்கின்றது. சீனா தனது நீர் மூழ்கிகளில் இருந்து வீசக் கூடிய ஏவுகணைகளில் வலுவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக அக்கறை காட்டுவதன் மற்ற நொக்கம் நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவல்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்பதாகும்.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் வலுவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா 35 பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கிய P-8A Poseidon என்னும் ஏவுகணைகளை வேட்டையாடும் போர் விமானங்கள் பரீட்சித்துப் பார்த்த வேளையில் அவை வெற்றி அளிக்கவில்லை. இந்த P-8A Poseidon விமானங்கள் எட்டை இந்தியாவும் வாங்கியிருந்தது.



தாய்லாந்தின் கடற்படையினருக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பயிற்ச்சிகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் தாய்லாந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவிருக்கின்றது.  வியட்னாம் ஏற்கனவே இரசியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிவிட்டது. பிலிப்பைன்ஸ்சும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. மியன்மார் இந்தியாவிடமிருந்து நீர் மூழ்கிக்கப்பல்களைக் கண்டறியும் உணரிகளை வாங்கியுள்ளது. ஜப்பான் தனது நாட்டில் உள்ள தளங்களில்  அமெரிக்க நீர்மூழ்கி வேட்டை விமானங்களை நிறுத்த அனுமதித்துள்ளது. சீனாவிற்கு கிழக்கேயும் தென் கிழக்கேயும் உள்ள இந்தச் சிறிய நாடுகளின் நிதிவளம் பெரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடமளிக்காத வேளையில் இவை தமது கடற்படைப்படகுகளின் திறனையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கின்றன. இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து நீர்மூழ்கி போர் ஒத்திகையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் மேலும் பல படைத்துறைகளில் இணைந்து செயற்படலாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாய்வான் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஒத்திகையைச் செய்துள்ளது. இதில் நீர்மூழ்கிகளை அழிக்கும் முறைமை பரீட்சிக்கப்பட்டது. மியன்மார் 2015-ம் ஆண்டில் இருந்து தனக்கு என ஒரு நீர்மூழ்கிப் படையை உருவாக்கவிருக்கின்றது. மலேசியாவிடமும் சிங்கப்பூரிடமும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன அவை தமது நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் வலுவையும் அதிகரிக்கவிருக்கின்றன. சீனாவிற்கு சவால் விடும் வகையில் ஜப்பானிடம் பெரிய நீர்மூழ்கிப்படை இருக்கின்றது.

அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல்
2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் புதிப்பிக்கப்பட்ட ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானில் நிலை கொள்ளவிருக்கின்றது. தற்போது ஜப்பானில் இருக்கும் ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலுக்குப் பதிலால ரொனால்ட் ரீகன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்ஷா திட்டம்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டனத்தில் இருந்து 200 கிலொ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்தில் உயர் தொழில் நுட்ப கடற்படைத் தளம் ஒன்று சீன அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் கடற்படையின் கிழக்குக் கட்டளையகத்தின் கீழ் வரும் இந்தத் தளத்தில் நிலத்துக் கடியில் இந்தியாவின் அணுக்குண்டுகள் தாங்கிய அரிகாந்த் நீர்மூழ்கிக் கப்பலை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இந்தியக் கடற்படையின் கிழக்குக்கட்டளையகத்தின் கீழ் அரிஹாந்த் நீர்மூழ்கிக்கப்பல், ஜலஷ்வா என்னும் ஈருடகக் கப்பல், சக்ரா என்னும் அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட ஐம்பது கடற்கலன்கள் இருக்கின்றன. இந்தத் துறைமுகத்தில் எதிரிப்படைகளின் தாக்குதல்களிலும் கண்காணிப்பிலும் இருந்து கடற்படைக்கலன்களை மறைத்து வைக்கக் கூடிய வசதிகள் உண்டு. இந்தியா தனது கடற்படை வலுவை நிதானமாகவும் உறுதியாகவும் வளர்த்து வருகின்றது.

ஜப்பானைச் சுற்றியுள்ள நாடுகள் தமது படைத்துறை வலுவை சீனாவிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடனேயே வளர்த்து வருகின்றன. இந்த நாடுகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சீனாவின் சவாலை சமாளிக்க முடியும்.

ஆசிய ஆட்சியாளர்களுக்கு படைத்துறைப் போட்டி அவசியமாக இருக்கலாம். ஆனால் ஆசிய மக்களுக்குத் தேவைப்படுவது அமைதியும் அபிவிருத்தியுமே.

Friday, 7 February 2014

கவிதை: மறக்கப்படுவது வாழ்கையையே கெடுக்கும்


 தேவைப்படும் அளவு கிடைக்காதது
தேவை தீர்கக் கொடுக்க முடியாதது
காதல்

கண்வழி நடந்து
காலொடிந்தது
இதயவழி நடந்து
இணைந்தது.

எல்லோரும் பிழையாகிப் போயினர்
பலர் பொய்யாகியும் போயினர்
எதுவும் தெரியாதது போல் இருக்கும் சிலர்
எதுவுமே தெரியாமல் இருக்கும் பலர்
விலை கொடுத்தோர் பலர்
விலையாகிப் போனோர் பலர்
நிகழ்காலத்தைத் தேடினோம்
எதிர் காலத்தைத் தொலைத்தோம்
எல்லாம் இழந்தோம்
மறக்க முடியாத சரித்திரம்
தாங்க முடியாத நிகழ்காலம்
தீர்மானிக்க முடியாத எதிர்காலம்
தமிழர் வாழ்வு
வலுவைத் தருவது வெற்றிகளல்ல
போராட்டங்களே வலுவாகும்


எலும்பாலான கூடு
உள்ளே சிறகடிக்கும் பறவை
இதயம்

அருகிருந்தால்  கண்ணால் பார்ப்பது
தொலைவில் இருந்தால் கண் மூடிப்பார்ப்பது
அன்பு

மீண்டும் வரமுடியாதது
நினைத்தால் இனிக்கும்
பாடசாலை நாட்கள்

எதிரியாய் இருக்கும் தகமை
மிக இலகுவானது
நண்பனாய் இருக்கும் தகமை
மிகச் சிரமமானது

இலகுவான வாழ்கையை
கடினமாய்ப் போனது
ஆசைகள்

உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
அன்பு காட்டச் சிலர்
இனிய குடும்பம்


காதலிப்பது துணிவைத் தரும்
காதலிக்கப்படுவது வலுவைத் தரும்
மறக்கப்படுவது வாழ்கையையே கெடுக்கும்

தூக்க ஆள் தேடும் குழந்தைகள்
விளையாட் ஆள் தேடும் பிள்ளைகள்
காதலிக்க ஆள் தேடுக் இளசுகள்
கதைக்க ஆள் தேடும் முதியவர்வர்கள்

தாயிடம் மறைக்க முடியாதது
பசியும் காதலும்

Monday, 3 February 2014

உக்ரேயினிலும் "வெள்ளை வான்"

83இலட்சம் இரசியர்கள் உக்ரேயினில் வாழ்கிறார்கள்
ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி உக்ரேயினைப் பற்றித் தெரிவித்த கருத்து உக்ரேயின் பிரச்சனையை மேலும் உக்கிரமடையப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இணைந்து உக்ரேயின் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் வாழும் முயற்ச்சிக்கு உதவி செய்யும் என்றார் ஜோன் கெரி. ஜோன் கெரி இப்படிச் சொன்னதுடன் நிற்கவில்லை ஜேர்மனியில் உக்ரேயின் எதிர்க் கட்சியைச் சேர்ந்த மூவரைச் சந்திக்கவும் செய்தார். உக்ரேயின் மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு அமெரிக்கா உதவி செய்யும் எனவும் ஜோன் கெரி உறுதி அளித்தார்.

எந்தக் கூட்டுடன் கூடுவது
உக்ரேயின் நாடும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தி வந்தன. இரு தரப்பும் Ukraine-EU Association Agreement என்னும் உக்ரேய்ன் - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திட முயன்றன. இதை விரும்பாத இரசியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரேயின் இணைவதை உக்ரேயின் அதிபர் மீது அழுத்தம் கொடுத்துத் தடுத்தது. உக்ரேயின் நாடு தனது எரிவாயுத் தேவைக்கு இரசியாவிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இரசியா உக்ரேயினுக்கு பத்து மில்லியன் டொலர்கள் நிதி உதவியும் குறைந்த விலையில் எரிவாயு வழங்குவதாயும் உறுதி வழங்கியது. அத்துடன் இரசியா உக்ரேயினைத் தனது யூரோஆசிய பொருதார சமூகத்தில் இணையும் முடிவை எடுக்க வைத்தது. இதற்கு உக்ரேயினில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. உக்ரேயினில் மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.  2013-ம் ஆண்டு நவம்பர் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இன்று வரை தொடர்கின்றது.

ஆத்திரமடையும் இரசியா
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் நட்பு நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது இரசியாவைக் கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது. இரசியா இதை ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதுகிறது. போல்ரிக் நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமை இரசியாவை ஆத்திரப்படுத்தியது. 01/07/2013இல் இருந்து குரோசியாவும் 28வது நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

 தூபமிடுவது யார்?
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேயின் கிளர்ச்சிக்கு தூபமிடுவதாக இரசியா குற்றம் சாட்டுகிறது. உக்ரேயின் மக்கள் சுதந்திரமாகச் செயற்படாமல் இரசியா தடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது. ஜோன் கெரி அமெரிக்கா உக்ரேயின் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தமை உக்ரேயினின் ஒரு இரசியாவிற்கும் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மோதல் களமாக உக்ரேயினை மாற்றியுள்ளது. உக்ரேயின் அதிபர் விக்டர் யனுக்கோவிச் தேர்தலில் ஊழல் செய்து ஆட்சிக்கு வந்து ஊழலுடன் ஆட்சி செய்து கொண்டிருப்பவர் என்பது மேற்கு நாடுகளின் கருத்தாக இருக்கிறது. தேர்தலின் போது விக்டர் யனுக்கோவிச் வெற்றி பெற இரசியா முன்னூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் உக்ரேய்னில் செலவு செய்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அத்துடன் பல இரசியர்கள் உக்ரேயின் சென்று தேர்தலின் போது செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. இரசியா இதே கைங்கரியங்களை அஜர்பைஜான், பெலரஸ் ஆகிய நாடுகளிலும் செய்ததாகவும் கருதப்படுகின்றது. இந்த நாடுகளிலும் இரசியாவின் ஒரு பகுதியான செஸ்னியக் குடியரசிலும் இரசியாவிற்கு சார்பான வேட்பாளர்கள் வெற்றி பெறச்செய்ய வாக்குப் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகள் திணிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு நிலவுகின்றது.

இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின்.        இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேயின் அதன் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒரு நாடாகும். உக்ரேயின் நாடு இரசியாவுடன் இல்லாவிடில்  இரசியா தனது வல்லரசு நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் 90 விழுக்காடு உக்ரேய்னூடாகச் செல்லும் குழாய்களூடாக விநியோகிக்கப்படுகின்றது. இரசியாவின் கருங்கடல் கடற்படைப் பிரிவு உக்ரேய்னிடமிருந்து குத்தகைக்கு இரசியா எடுத்த செவெஸ்டப்போல் துறைமுகத்திலேயே இருக்கிறது. உக்ரேய்ன் இரசியப் பிடியில் இருந்து விலகி நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இரசியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லியன் அதாவது நூறு கோடி அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பீடு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமது நாட்டின் ஒரு பகுதி உக்ரேயின்.
இரசிய மக்களிடையே உக்ரேய்ன் தொடர்பாக இரசியா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வருகின்றது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இரசியர்கள் உக்ரேய்னைத் தமது நாட்டின் ஒரு பகுதி என்ற மனப்பாங்குடன் இருக்கின்றனர். உக்ரேய்ன் மக்கள் செய்யும் எழுச்சி வெற்றி பெற்றால் அது இரசியாவிலும் மக்களாட்சி முறைமையை வேண்டி நிற்கும் பெரும் தொகையான மக்களுக்கு ஓர் உந்து வலுவாக அமையலாம் என்பதை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் நன்கு அறிவார். இதனால் இரசியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என நிச்சயம் நம்பலாம்.
கவண் கொண்டு பெட்ரோல் குண்டு வீசும் ஆர்ப்பாட்டக்காரர்

திருப்தியடையாத ஆர்ப்பாட்டக்காரர்கள்
உக்ரேய்னின் தலைமை அமைச்சரும் அமைச்சரவையும் பதவி விலகி ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான சட்டம் அரசால் திரும்பப் பெறப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்தியடையவில்லை. உக்ரேய்ன் அதிபரும் பதவி விலகி புதிதாகத் தேர்தல் நடாத்த வேண்டும் அரசமைப்பு மாற்றப் படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரேய்னில் அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டு படைத்துறையினர் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்பவர்களை விரைவில் அடக்க விரைவில் முயலலாம். ஜனவரி 31-ம் திகதி உக்ரேய்னின் படைத்துறையினர் நாட்டில் அமைதி உடனடியாக நிலை நாட்டப்பட வேண்டும் என்றனர். சுகயீன விடுப்பில் சென்ற உக்ரேயின் அதிபர் 03/02/2014இல் இருந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

உக்ரேயினிலும் "வெள்ளை வான்"
உக்ரேயினிலும் குடிமக்கள் போல் உடையணிந்த பாதுகாப்புத் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்வது, காணாமற் போகச் செய்வது பரவலாக நடக்கின்றது. இந்தக் கடத்தற்காரர்களை plain-clothed kidnappers என மக்கள் அழைக்கின்றனர்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்  உக்ரேயின் எதிர் கட்சியினருகு உதவி செய்தால் உக்ரேய்னில் இப்போது நடந்து கொண்டிருக்கும் எழுச்சி பெரும் உள்நாட்டுப் போராக வெடிக்கலாம்

Monday, 27 January 2014

அமெரிக்காவில் பேரழிவு விளைவிக்கும் குண்டுடன் பிடிபட்ட இரசிய இளைஞர்

ஐக்கிய அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தின் அல்ரூனா நகரில் ஓர் இரசிய இளைஞர் பேரழிவு விளைவிக்கக் கூடிய குண்டு செய்யும் மூலப்பொருள்களுடன் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்ரூனா நகர் காவற்துறையினர் தாம் கைது செய்தது விளடிச்லாவ் மிஃப்டகோவ் (Vladislav Miftakhov) என்னும் பெயருடைய 19வயது இரசிய இளைஞர் என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் அல்ரூனா நகரின் பென் பல்கலைக்கழக மாணவராவார்.

விளடிச்லாவ் மிஃப்டகோவிடம் கைப்பற்றப்பட்டவற்றுள் a pound of atomized magnesium, Chinese potassium perchlorate, potassium nitrate powder, containers of compressed air and fuses, ஆகியவை இருந்தன. அவர் தனது வீட்டில் போதைப் பொருள்களையும் பயிரிட்டிருந்தார். அந்த இளைஞரின் நோக்கம் என்ன எந்த இடத்தை தாக்க முற்பட்டார் போன்ற விபரங்களை அல்ரூனா நகரக் காவற்துறையினர் வெளிவிட மறுத்து விட்டனர். கைசெய்யப்பட்ட இரசிய இளைஞர் விளடிச்லாவ் மிஃப்டகோவ் கலிபோர்ணியாவில் தனது குண்டுகளை வெடித்துப் பரிசோதனை செய்ததாகவும் தெரிவித்தனர். அத்துடன் குண்டு செய்யத் தேவையான பொருட்களை விளடிச்லாவ் மிஃப்டகோவ் இணையத்தில் வாங்கியதாகத் தெரிவித்தார் என்கின்றனர் காவற்துறையினர்.

Saturday, 25 January 2014

சிரிய "சமாதான" பேச்சு வார்த்தையும் பான் கீ மூனின் சறுக்கலும்

ஜெனிவா - 2 பேச்சு வார்த்தை என அழைக்கப்படும்  சிரியாவில் மோதிக்கொள்ளும் தரப்பினர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை ஜனவரி 22-ம் திகதியில் இருந்து சுவிஸ் நகர் மொன்ரெக்ஸில் நடந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவும் 2013 மே மாதம் சந்தித்து சிரியாவில் போர் புரியும் தரப்புக்களை பேச்சு வார்தைக்கு கொண்டுவருவது என ஒத்துக் கொண்டனர்.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  21-ம் திகதி சிரியாவில் மேற்கொள்ளபப்ட்ட வேதியியல் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவினதும் இரசியாவினதும் வெளியுறவுத் துறையினர் சிரியாவில் சமாதானப் பேச்சு வார்த்தையில் அதிக கவனம் செலுத்த ஒத்துக் கொண்டனர். சிரியா தொடர்பான ஜெனிவா - 1 பேச்சு வார்த்தை 2012-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடந்தது அதில் சில அடிப்படை விதிகள் ஒத்துக் கொள்ளப்பட்டன: அவற்றில் முக்கியமானவை:
  • சிரியாவில் எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையிலான அணுகுமுறை ஒன்றை உருவாக்கல்
  • அந்த அணுகுமுறையைச் செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஒரு கால அட்டவணை அடிப்படையில் எடுத்தல்.
  • எல்லோருக்கும் பாதுகாப்பு, அமைதி, திடமான நிலை உருவாகக் கூடிய வகையில் அணுமுறையை செயற்படுத்தல்.
  • இனியும் இரத்தக் களரி வன்முறை இன்றி விரைந்து செயற்படல்

எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்:
  • அரசு தரப்பினரையும் எதிர்த் தரப்பினரையும் கொண்ட முழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால அரசை எல்லோர் சம்மதத்துடன் உருவாக்குதல்.
  • எல்லாத்தரப்பினரையும் கொண்ட அர்த்தமுள்ள ஒரு தேசியப் பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தல்
  • அரசமைப்பு யாப்பையும் சட்ட முறைமையையும் மீள் பரிசீலனை செய்தல்
  • சுதந்திரமானதும் நீதியானதுமான பல கட்சிகள் பங்கு பற்றும் தேர்தலை நடாத்துதல்
  • எல்லா மாற்றங்களிலும் பெண்களையும் ஈடுபடுத்துதல்

இந்த அடிப்படையில் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி சிரியாவில் போர் புரியும் தரப்பினரை அமெரிக்காவும் இரசியாவும் வற்புறுத்தி அழைத்தன இதற்கான பின்புலப் பணிகளை சிரியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவர் லக்தர் பிராஹ்மி மேற்கொண்டிருந்தார். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பேச்சு வார்த்தைக்கு முன்னர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்றும் இடைக்கால அரசில் அவர் இடம்பெறக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் மீது நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்பட்டு பேச்சு வார்த்தைக்கு வரச் செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தை 22-ம் திகதி ஆரம்பமாக முன்னர் சிரிய வெளிநாட்டமைச்சர் எந்த வித அதிகாரங்களையும் சிரிய அரசு விட்டுக் கொடுக்காது என்று சொன்னதும் பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் அவர் எதிர்த்தரப்பினர்களை பயங்கரவாதிகள் என அழைத்ததும் நிலமையைச் சிக்கலாக்கியது. முதல் நாள் ஜனவரி 22-ம் திகதி புதன் கிழமை அவர்க ஒரே மண்டபத்தில் கூடிப் பேசினர். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதில்லை எனக் கூறினார்கள்.

பேச்சு வார்தையில் ஐக்கிய நாடுகள் சபை, அரபு லீக் நாடுகள், சீனா,  அமெரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், துருக்கி, ஈராக், குவைத், கட்டார், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் வெள்நாட்டமைச்சர்களும் கலந்து கொண்டனர். சிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு பெரும் ஆதரவு வழங்கிவரும் ஈரானைப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அழைத்திருந்தார். இதற்கு ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க பான் கீ மூன் ஈரானுக்கு தான் விடுத்த அழைப்பை மறுநாளே இரத்துச் செய்தார். இதற்கு இரசியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பான் கீ மூனிற்கும் ஒரு அவமானமாக இருந்தது. ஈரான் ஜெனிவா -2 பேச்சு வார்த்தைக்கான அடிப்படை விதிகளாக ஜெனிவா - 1 பேச்சு வார்த்தையில்  ஒத்துக் கொள்ளப் பட்டவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அது பேச்சு வார்தையில் ஈடுபடக் கூடாது என அமெரிக்கா தெரிவித்தது.  ஜெனிவா - 2 பேச்சு வார்த்தையில் தானும் ஈடுபட வேண்டும் என ஈரான் நீண்ட காலமாக முயன்று கொண்டிருந்தது. ஈரான் தன்னை ஒரு பிராந்திய வலு மிக்க நாடாக காட்ட இது ஒரு வாய்ப்பு எனவும் தான் பங்கு பற்றினால் அது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஒரு ஆதரவாக அமையும் என்றும் இந்த இராசதந்திர வலு ஈரான் வல்லரசு நாடுகளுடன் நடாத்தும் அணுக் குண்டு உற்பத்தி தொடர்பான பேச்சு வார்த்தைக்கு சாதகமாக இருக்கும் எனவும் ஈரான் கருதி இருந்தது. ஈரானியப் படைகள் அதிபர் அசாத்திற்கு பெரும் உதவிகள் செய்வதாலும் ஈரானின் வற்புறுத்தலில் லெபனானிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அசாத்தின் படைகளுடன் இணைந்து போர் புரிவதாலும் ஈரானும் சிரியப் பிரச்சனையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

முதல் நாள் ஜனவரி 22-ம் திகதி புதன் கிழமை அவர்க ஒரே மண்டபத்தில் கூடிப் பேசினர். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதில்லை எனக் கூறினார்கள். இதனால் இரு தரப்பினருடனும் மற்றப் பாங்காளர்கள் தனித் தனியே பேச்சு வார்த்தை நடாத்தினர். பின்னர் ஜனவரி 25-ம் திகதி சனிக்கிழமை ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட ஒத்துக்கொண்டனர். பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் சிரிய வெளிநாட்டமைச்சரின் உரையின் நேரத்தை பான் கீ மூன் கட்டுப்படுத்த முயன்ற போது பான் கீ மூனும் சிரிய வெளிநாட்டமைச்சரும் கடுமையாக முரண்பட்டுக் கொண்டனர். சிரிய வெளிநாட்டமைச்சர் வலித் அல் மௌலம் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது ஆன்மாக்களை ஏலம் போட்டு விற்பனை செய்கின்றனர் என்றார்.

ஜெனிவா - 1 பேச்சு வார்த்தையின் பொது ஒரு இடைக்கால அரசு அமைப்பது பற்றிப் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஜெனிவா - 2இன் சிரிய வெளிநாட்டமைச்சர்

முதல் நாள் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி இவ்வளவு அழிவிற்கும் காரணமானவர் தொடர்ந்து பதவியில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அத்துடன் ஜோன் கெரி பஷார் அசாத் அதிபர் பதவியில் தொடர்ந்தால் சிரியா பிளவுபடுவதைத் தடுக்க முடியாது என்றார்.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை ஒரு போதும் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. அத்துடன் இரசியாவும் அசாத் அதிபர் பதவியில் இருந்து விலக்கப்படுவதற்கு சம்மதிக்கப் போவதில்லை.
இதனால் சிரியா பிளவு படுவதைத் தடுக்க முடியாது. சிரியா பிளவு படுவதை அமெரிக்கா விரும்புவது போல் தெரிகின்றது. அப்படி சிரியா பிளவு படும் வேளையில் இசுலாமியத் தீவிரவாதக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்து தம்மில் பலரைக் கொல்லலாம். ஏற்கனவே அல் கெய்தா ஆதரவு போராளிகள் தமக்குள் மோதிக் கொண்டதால் ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


 ஜனவரி 25-ம் திகதி சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின் போது மனிதாபிமான உதவிகளைப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு பாதுகாப்பான பாதை உருவாக்குவது பற்றிப் பேசப்பட்டது. அலெப்பே மாகாணத்தில் ஹொம்ஸ் நகரில் ஒரு பாதுகாப்பான வழங்கற்பாதை உருவாக்க சிரிய அரசு ஒத்துக் கொண்டது. அப்படி ஒரு பாதை உருவாக்குவதற்கு ஹொம்ஸ் மீதான முற்றுகையை சிரிய அரச படைகள் நிறுத்து வேண்டும் எனக் கிளர்ச்சிக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டது. சில மேற்கத்தைய ஊடகங்கள் பாதுகாப்பான வழங்கற்பாதை தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டுள்ள போதும் அரபு நாட்டு ஊடகங்கள் ஹொம்ஸ் நகரில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பல கிளர்ச்சிக்காரக் குழுக்கள் செயற்படுவதால் ஒரு உடன்பாடு எட்டுவது சிரமம் எனத் தெரிவித்துள்ளன.

கிளர்ச்சிக்காரர்கள் சிரிய அரசு கைது செய்து வைத்திருக்கும் பெண்களையும் சிறுவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 

சிரியாவில் முப்பதினாயிரத்துக்கு மேலான அல் கெய்தா ஆதரவு போராளிகள் இருப்பதாக இஸ்ரேல் அஞ்சுகிறது. இதுவரை காலமும் சிரியாவின் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேல் இப்போது அல் கெய்தா சிரியாவைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகக் கருதுகிறது. இது தனக்கும் பெரும் அச்சுறுத்தல் எனக் கருதும் இஸ்ரேல் சிரியா அல் கெய்தாவின் கைகளுக்கு மாறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. இதற்காக அல் கெய்தாவிற்கு எதிரான குழுக்களுடன் இணைந்து சிரியாவின் சில பகுதிகளை தான் ஆக்கிரமிக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் இருக்கிறது. தான் சிரியாவில் ஆக்கிரமிக்கும் பிரதேசம் தனக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என இஸ்ரேல் நம்புகிறது.  அத்துடன் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் இஸ்ரேல் ஆலோசித்து வருகிறது.

சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது உளவாளி ஒருவரை அரச காவற்துறையில் இணைத்து அவர் மூலமாக சிரியப் படைகளின் மோசமாக போர்க்குற்றம் மற்றும் மாநிடத்திற்கு எதிரான குற்றங்களை அம்பலப் படுத்தி உள்ளனர். அமெரிக்காவின் சிரிய அதிபர் அசாத்தை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு இது பெரிதளவில் வலுக் கொடுக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...