இசைக்கு ஏற்ற இனிய மொழியான தெலுங்கைப் பேசும் மக்கள் ஒரே மாநிலத்தில் ஒன்றாக வாழ முடியாமல் இரண்டாகப் பிரிந்துள்ளனர். இந்தியப் பாராளமன்றத்தின் வரலாற்றில் ஒரு மோசமான நிகழ்வாக தெலுங்கானாவை தனி மாநிலமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதைத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. ஆனால் காங்கிரசுக்குப் பயந்து எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்தது.
தன் கட்சிக்காரர்களின் கால்வாரிய காங்கிரசு.
தற்போது ஆந்திர மாநிலத்தில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியே நடக்கின்றது. முதலமைச்சர் கிரான் குமார் ரெட்டியும் தெலங்கானாப் பிரிவை எதிர்த்தார் காங்கிரசுக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் சிரஞ்சீவி தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்படுவதை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவருடன் ஆந்திரப் பிரதேசத்தின் காங்கிரசுப் பிரபலங்களும் துணை அமைச்சர்களுமான பல்லம் ராஜு, புரந்தேஸ்வரி, எள்ளூர் கே எஸ் ராஜா, அரக்கு கே சி டியோ ஆகிய தெலங்கானாப் பிரிவினையை எதிர்த்தனர்.தெலங்கானாப் பிரிவினையை ஆதரித்த மாயாவதி உத்தரப் பிரதேச மாநிலத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் என்றார்.
ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த தெலங்கானாவை (தெலுங்கான எனவும் கூறுவர்) இந்திய அரசு ஒரு தனி மாநிலமாப் பிரித்து இந்திய அரசின் 29வது மாநிலத்தை உருவாக்கியுள்ளது. தெலங்கானவில் மக்கள் ஆர்பரித்து மகிழ்ச்சியாக தமது புதிய மாநிலத்தின் உதயத்தைக் கொண்டாட எஞ்சிய ஆந்திரப் பிரதேசமான சீமந்திரா மக்கள் தமது மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை துக்க நாளாக கழித்தனர். 1969-ம் ஆண்டு ஆரம்பித்த தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை பல போராட்டங்களின் பின்னர் நிறைவேறியுள்ளது.
Cut & Paste.
1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்ற போது ஐதராபாத்தின் நிசாம் தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசம் இந்திய அரசுடன் இல்லாமல் ஒரு தனி நாடாக இருக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை பிரித்தானியா ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்தியா1948-ம் ஆண்டு ஐதராபாத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதுவே தெலங்கானா ஆகும். 1956இல் இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களின் எல்லைகள் வகுக்கப்பட்ட போது ஆந்திரப் பிரதேசம் உருவானது. அப்போது தெலங்கானா மக்களுக்கும் சீமாந்திரா மக்களுக்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தெலங்கானாவா சீமந்திராவா? ஏன் இந்தப் பிரிவு?
அரை நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த ஒரு மொழி பேசும் மக்கள் ஏன் பிரிந்தனர்? தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஒன்பது மாவட்டங்கள், மதராஸ் மாகாணத்தில் இருந்து பன்னிரண்டு மாவட்டங்கள், ஒன்று பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த ஏனாமில் இருந்து ஒரு மாவட்டம் ஆகியவற்றை இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழி ஒன்றாக இருந்த போதிலும் சீமந்திரா மக்கள் என்றும் தெலங்கானா மக்கள் என்றும் இரு பிரிவினரும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக் கொண்டனர்.சீமந்திரா மக்கள் தாம் தெலங்கானா மக்களிலும் பார்க்க கலாச்சாரத்தால் கல்வியால் பண்பாட்டால் உயர்ந்தவர்கள் என்றும் கருதினார்கள். ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் சீமந்திரா மக்கள் கதாநாயகர்களாகவும் தெலங்கான மக்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தனர். தெலங்கான மக்கள் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தெலங்கானா மக்க்களின் பட்டுக்கம என்னும் பண்டிகையை அரசு புறக்கணித்தது. தெலங்கானா மக்கள் சீமந்திரா மக்களை ஏமாற்றுக்காரர்களாகவும் பணத்தாசை பிடித்தவர்களாகவும் கருதுகின்றனர். தெலங்கானா மக்கள் தாம்மை கள்ளம் கபடமற்றவர்களாகவும் மரபு வழி முறையில் ஒழுகுபவர்களாகும் கருதுகின்றனர். சீமந்திரா மக்கள் தாம் கடின உழைப்பாளிகள் எனவும் தெலங்கானா மக்கள் சோம்பேறிகள் எனவும் கருதுகின்றனர். சீமந்திராவில் உள்ள தலித்துக்கள் தாம் தெலங்கானாத் தலித்துக்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் எனக் கருதுகின்றனர். தெலங்கான மக்கள் நவராத்திரி விழாவிற்கும் சீமந்திரா மக்கள் தைமாதத்தில் வரும் மகர சங்கிராந்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தெலங்கானா மும்பையத் தலைநகராகக் கொண்ட மகாராஸ்ட்ரா மாநிலத்திற்கு அண்மையாகவும் சீமந்திரா பிரதேசம் தமிழ்நாட்டுக்கு அண்மையாகவும் இருப்பதால் இவர்களின் மொழிவழக்கில் சிறிய வேறுபாடு உண்டு. தெலங்கானா மக்களின் தெலுங்கு மொழியில் உருது மொழி கலந்துள்ளதாகக் குற்றம் சாட்டுவதும் உண்டு. சீமாந்திரா மக்கள் தம்மைச் சுரண்டுவதாகவும் தெலங்கானா மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம்
தெலங்கானா என்பதன் பொருள் தெலுங்கர்களின் நாடு என்பதாகும். 1969-ம் ஆண்டு தெலங்கானா கோரிக்கையை முன்வைத்து ஒஸ்மானியாப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடங்கினர். இதில் மற்ற மாணவர்களும் இணைய காவற்துறை துப்பாக்கிச் சூடு நடாத்திய போது முன்னூற்று ஐபம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். போராட்டம் அடக்கப்பட்டாலும் தெலங்கான மக்கள் தமது தனி மாநிலக் கோரிக்கையைக் கைவிடவில்லை. 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி உருவாக்கப்பட்டது. 19900-ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் தனித் தெலங்கான மாநிலம் உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தனர். பின்னர் காங்கிரசுக் கட்சியும் அதற்குப் போட்டியாக தனித் தெலங்கானக் கோரிக்கையை ஆதரித்தது. தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.
வாக்குவேட்டை அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள்
2004ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக வாக்குறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. காங்கிரசுக் கட்சி தனி மாநிலம் உருவாக்காதமையினால் கூட்டணி இரண்டு ஆண்டுகளில் உடைந்தது. 2009 பொதுத் தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்தது. புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா உருவாக்குவோம் என வாக்குறுதி கொடுத்தது. நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தது.மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தனித் தெலங்கானக் கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார். இதை ஒட்டி பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை அப்போதைய இந்திய மைய அரசின் உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார். இந்த வாக்குறுதியன் படி தெலங்கானா 2014 பெப்ரவரி மாதம் தனிமாநிலமாக்கப்பட்டது. காங்கிரசுக் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிந்த படியால் காங்கிரசின் செல்வாக்கு தெலங்கானாவில் அதிகரிக்கப்படும் என்றும் சீமன்திராவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கள்ளத்தனமாக நிறைவேற்றப்பட்டதா?
தெலங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இந்திய மக்களவையில் நிறைவேற்ற விடாமல் சீமந்திரா பாராளமன்ற உறுப்பினர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். பாராளமன்றத்தில் மிளகுத்தூள் வீசப்பட்டது. அவைத் தலைவரின்(சபாநாயகர்) ஒலிவாங்கி பிடுங்கி எறியப்பட்டது. பாராளமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. பாராளமன்ற நிகழ்வுகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதைத் தடை செய்து விட்டு குரல் மூலமான வாக்கெடுப்பினால் நிறைவேற்றப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநில சட்ட சபை தெலங்கானாவைப் பிரிப்பதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
சட்டச் சிக்கல் தொடரலாம்
இந்தியப் பாராளமன்றத்தின் லோக் சபா எனப்படும் மக்களவையில் நிறைவேற்றிய தெலங்கானாவைத் தனி மாநிலமாக்கும் தீர்மானத்தை ராஜ்ய சபா எனப்படும் மேலவை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியது. இதனால் இந்தச் சட்டம் மீண்டும் மக்களவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். சில அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெலங்கான சட்டத்திற்காக அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்கின்றனர். இதனால் இந்தப் பிரச்சனை நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம். பாரதிய ஜனதாக் கட்சி தெலங்கானாவிற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும் எனச் சொல்கின்றது. ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராகச் சிலகாலம் வைத்திருப்பதானால் அதற்கு இந்திய அரசிய்லமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது அது ஒரு யூனியன் பிரதேசமாக்கப்படவேண்டும் என அரசமைப்புச் சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
பேரினவாதிகள் பிரித்து ஆளுகின்றார்களா?
இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. அதன் மக்கள் தொகை ஜேர்மனியின் மக்கள் தொகைக்கு ஒப்பானது. மற்ற நான்கு பெரிய மாநிலங்களும் வடக்கில் இருக்கின்றன. இந்த மாநிலத்தைப் பிரிப்பது வட இந்தியர்களின் பேரினவாதக் கொள்கைக்கு உகந்ததாகும். ஒன்றிணைந்த ஆந்திரப்பிரதேசத்தில் 84.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதில் தெலங்கான மக்கள் தொகை 35.28 மில்லியன்கள். இரு மாநிலங்களும் சிறிது காலம் ஹைதராபாத்தை பொதுவான தலைநகராகக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சீமந்திரா தெலுங்கர்கள் பாரிய முதலீட்டைச் செய்துள்ளனர். ஹைதராபாத்தை ஒட்டியும் நதிநீர்ப்பங்கீட்டை ஒட்டியும் இரு பிரிவினருக்கும் இடையில் பெரும் மோதல் வெடிக்கலாம். இப்போது சீமந்திரா தலைநகர் ஒன்று இல்லாமல் இருக்கிறது. சீமந்திராவில் இரு பிரதேசங்கள் இருக்கின்றன. ஒன்று ராயசீலம் எனப்படும். மற்றது கரையோர ஆந்திரப் பிரதேசம் ஆகும். ராயசீலப் பிராந்தியத்தில் பகுதியில் வாழும் மக்கள் சீமந்திராவின் தலைநகராக ராயசீலத்தின் குர்னூல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment