Tuesday, 5 April 2022

உக்ரேன் போர் தாங்கிகளை செல்லுபடியற்றதாக்கிவிட்டதா?

  


உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion Tactical Groupsஐ இரசியா நகர்த்தியுள்ளது. ஒரு பட்டாலியன் குழுவில் 10 தாங்கிகள் மற்றும் 30 கவச வண்டிகள் இருக்கும். மொத்தம்1200 தாங்கிகளையும் 3600 கவச வண்டிகளையும் இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. உக்ரேனிடம் 2,500 தாங்கிகள் உள்ளன. ஐரோப்பாவில் 5,000இற்கும் மேற்பட்ட போர்த்தாங்கிகள் உள்ளன. உலகெங்கும் மொத்தம் 54,000 உள்ளன. பெரிய துப்பாக்கி, துருப்புக்களுக்கு பாதுகாப்பு கடினமான நிலத்தில் பயணித்தல் போன்றவை தாங்கிகளின் முக்கிய அம்சங்களாகும். எதிரியின் காலாட் படைகளை எதிர்கொள்ள சிறந்தவையாக தாங்கிகள் கருதப்படுகின்றன. அவர்களின் காப்பரண்களை தாங்கிகளால் அழிக்க முடியும். எண்பது ஆண்டுகளாக காலாட் படையினரின் முக்கிய படைக்கலன்களாக இருந்த எழுபது தொன் எடை கொண்ட தாங்கிகள் உக்ரேன் போரின் போது செல்லுபடியற்றதாகிவிட்டனவா எனற கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இரசியப் படையினர் உக்ரேனினுடனான முதல் மூன்று வாரப் போரில் 270 தாங்கிகளை இழந்துள்ளனர். இவை தாங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து ஐயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் மேலும் 326 தாங்கிகளை இழந்தனர். இதனால் தாங்கிகளை தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகளும் ஆளிலிவிமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளும் தாங்கிகளின் வலிமை மீது ஐயத்தை எழுப்பியுள்ளது.

தானூர்தி அணியும் (Motorised Unit) இயந்திரமய அணியும் (Mechanised Unit)

முதலில் போர்த்தாங்கிகளைப் பாவித்த நாடு பிரித்தானியா. 1916-ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவால் போர்த்தாங்கிகள் பாவிக்கப்பட்டன. தாங்கிகளை தரையில் நகரும் போர்க்கப்பல்கள் என பிரித்தானியவர் அப்போது விபரித்தனர். முதலில் அவற்றின் பாவனையைக் கைவிட்ட நாடு நெதர்லாந்து 2011இல் கைவிட்டது. பின்பு அது ஜெர்மனியிடமிருந்து குத்தகைக்கு 18 தாங்கிகளைப் பெற்றுள்ளது. சுடுதிறன், தப்புதிறன், நகரும் திறன், தகர்க்கும் திறன் ஆகியவை தாங்கிகளின் சிறப்பு அம்சங்களாகும். தானூர்தி அணி (Motorised Unit) பார ஊர்திகளால் நகர்த்தப்படுபவை. இயந்திரமய அணி (Mechanised Unit) கவச வண்டிகள் மூலம் நகரும் காலாட் படையணியாகும். கவச வண்டிகளின் மிகச் சிறந்த வடிவம் தாங்கிகளாகும். 2014-ம் ஆண்டு இரசியர்கள் தமது T-72 தாங்கிகளுடன் இலகுவாக உக்ரேனை ஆக்கிரமித்தனர். பெரும்பாலான தாங்கிகள் 120மிமீ குண்டுகளை வீச வல்லன. இரண்டாம் உலகப் போரில் விமானங்களை அழிக்கவும் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் Battle of Kursk

உலக வரலாற்றில் அதிக தாங்கிகள் இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயன்ற போது பயன்படுத்தப்பட்டன. 1943-ம் ஆண்டு இரசியாவின் Kursk நகரில் இரண்டு நாடுகளிடையே நடந்த போரில் ஆறாயிரம் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. இரசியர்கள் ஜெர்மன் தாங்கிகளுக்கு அண்மையில் சென்று கண்ணி வெடிகள அவற்றின் சில்லுச் சங்கிலிகளின் இடையே வீசி அவற்றைச் செயலிழக்கச் செய்தனர். ஹிட்லரின் படையினர் Tiger, Panther, Ferdinand ஆகிய தாங்கிகளையும் இரசியர்கள் T-14 தாங்கிகளையும் பாவித்தனர். ஹிட்லரின் படையினரின் தாங்கிகள் வலிமை மிக்கனவாயும் பெரிய அளவிலான குண்டுகளை வீசக் கூடியவையாகவும் இருந்தன. வலிமை குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் இரசியர்கள் ஜெர்மனியரிலும் பார்க்க இரண்டு மடங்கு தாங்கிகளைப் பாவித்தனர். ஜெர்மனியர்களிடம் 1400 தாங்கிகளும் இரசியர்களிடம் 3600தாங்கிகளும் இருந்தன. இரசியர்கள் தங்கள் தாங்கிகளை நிலைத்தின் கீழ் மூடி வைத்து சுடு குழாயை மட்டும் வெளியில் தெரிய வைத்திருந்து ஜெர்மனியர்கள் அண்மையில் வரும்போது சுட்டுத்தள்ளினார்கள்.

தங்கிகளின் வலிமையற்ற தன்மைகள்

கரந்தடிப் படையினருக்கு எதிராக தாங்கிகள் முன்பு சிறப்பாக செயற்பட்டன. கரந்தடிப் படையினர் வலிமை மிக்க கண்ணிவடிகளால் செயலிழக்கச் செய்யப்படக் கூடியவை. ஈழ மண்ணிற்கு அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலைப்படையினர் கண்ணி வெடிகளைத் தவிர்ப்பதற்காக தெருக்களால் பயணிப்பதைத் தவிர்த்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டு பயணித்தன. ஒரு கட்டத்தில் அகப்படும் பொது மக்களை தாக்கி வீழ்த்தி விட்டு அவர்கள் மேல் தாங்கிகளைச் செலுத்திக் கொன்றன. ஈழப் போராளிகள் கண்ணி வெடிகளால் எதிரிகளின் தாங்கிகளைத் தகர்த்தனர். கைப்பற்றியும் உள்ளனர். ஆர்.பி.ஜீ என்னும் வீசு குண்டுகள் மூலமும் பழைய தாங்கிகளை அழிக்க முடியும். தாங்கிகளில் இருந்து வெளிவரும் உயர் வெப்பம் அவற்றை இனம்காண இலகுவானதாக இருக்கின்றது. அதனால் வெப்பத்தைத் தேடியழிக்கும் ஏவுகணைகள் (Heating seeking missiles) அவற்றை இலகுவாக அழிக்கின்றன.  அமெரிக்காவின் Javelin, பிரித்தானியாவின் NLAW ஆகிய தோளில் வைத்துச் செலுத்தப்படும் ஏவுகணைகளும் துருக்கியின் TB-2 Drones என்னும் ஆளிலிவிமானங்களில் இருந்து ஏவும் சிறிய ஏவுகணைகளும் இரசிய தாங்கிகளை வேட்டைக்காரன் பன்றைகளைச் சுடுவது போல் சுட்டு அழிக்கின்றன. அது மட்டுமல்ல அது பயணிக்கும் இடங்களில் தாங்கிகள் விட்டுச் செல்லும் தடயங்கள் அவற்றை இனம் காண உதவுகின்றன. அமெரிக்காவின் ஒரு தாங்கி பத்து மில்லியன் பெறுமதியானது. இரசியாவின் தாங்கிகளான T-14 Armata நான்கு மில்லியன் பெறுமதியானது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் Fallujah மீட்புப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக் ஆகிய நாடுகளின் படைகள் வெற்றி பெற்றமைக்கு அமெரிக்காவின் ஏப்ராம் தாங்கிகள் முக்கிய பங்கு வகித்தன.  ஆனாலும் அமெரிக்காவின் ஏப்ராம் (M1Abrams) தாங்கிகளையும் பிரட்லி (M2 Bradley) தாங்கிகளையும் நூறு டொலர் பெறுமதியான வெடிபொருட்களால் இஸ்லாமியப் போராளிகள் தகர்த்தனர். போரியல் நிபுணராகிய Michael Peck: Tanks may be the star player, but war is a team game. அமெரிக்காவின் Apache உலங்கு வானூர்திகள் தாங்கிகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவை. தாங்கிகள் அதிக அளவு எரிபொருளைப் பாவிப்பன. அவற்றிற்கு எரிபொருள் மீள்நிரப்ப எரிபொருள் தாங்கிகள் அவற்றைத் தொடந்து கொண்டிருக்க வேண்டும்.

பல நாடுகள் தாங்கிகளைக் கைவிடுவதிலும் பார்க்க அவற்றை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடுத்த தலைமுறை தாங்கிகளை உருவாக்குகின்றன. 1980களில் உருவாக்கிய தாங்கிகள் பெரிஸ்கோப்களை பாவித்தன. தற்போது தாங்கிகளில் 360பாகையும் சுற்றிப் பார்க்கக் கூடிய உணரிகள் உள்ளன. எதிர் காலத்தில் போர்த்தாங்கிகளில் இருந்து பறந்து செல்லும் சிறிய ஆளிலி வானூர்திகள் தாங்கிகளின் கண்களாக மூலை முடுக்கு மேடு பள்ளம் எல்லாம் மறைந்து இருக்கும் எதிரிகளை இனம் காணும். பெரிய காத்திரமான உருவம் கொண்ட தாங்கியுடன் செல்லும் படையினருக்கு மனவலிமை கிடைக்கின்றது என்பது உண்மை. அதே போல எதிரிக்கு அச்சத்தையும் கொடுக்கக் கூடியது. போரை விரும்பும் நாடுகள் மேலும் வலிமைப்படுத்தப் பட்ட இலத்திரனியல் போர் செய்யக் கூடிய புதிய தாங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இன்னும் பல பத்து ஆண்டுகளில் காலட்படையினரின் கவசமாக இருக்கும்.

இரசியாவின் மிகச் சிறந்த தாங்கியான T-14 Armata உக்ரேன் போரில் பயன்படுத்தப்படவில்லை. இரசியாவிடம் போதிய அளவு T-14 கையிருப்பில் இல்லை. 

Sunday, 3 April 2022

உக்ரேனில் இரசியாவின் நிலை சீனாவின் தைவான் கொள்கையை மாற்றுமா?

  


உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்ததுடன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்களில் ஒரு நாடாக உறுப்புரிமை பெற்றுள்ளது. தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. வத்திக்கான உட்பட 15 நாடுகள் மட்டும் தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எந்த ஒரு நேட்டோ நாடும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் போரை சீனாவும் தைவானும் உன்னிப்பாக கவனிக்கின்றன. இரசியா வேறு சீனா வேறு அது போலவே உக்ரேன் வேறு தைவான் வேறு. 1992இல் சீனாவினதும் இரசியாவினதும் பொருளாதாரம் ஒரே அளவிலானதாக இருந்தன ஆனால் 2022இல் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க சீனாவினது பத்து மடங்கு பெரியது. 

வளம் மிக்க சீனா

உக்ரேனில் ஒரு நீண்ட காலப் போர் செய்ய இரசியாவால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தைவான் மீது போர் தொடுத்தால் அது எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் சீனாவால் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவிடம் பல தரப்பட்ட புதிய படைக்கலன்கள் இருந்தாலும் அவை போதிய எண்ணிக்கையில் இல்லை. ஆனால் சீனாவிடம் தைவானுடன் போர் செய்யக் கூடிய அளவு படைக்கலன்கள் இருக்கின்றன. போர் என்று ஆரம்பித்தால் மேலும் படைக்கலன்களை குறுகிய கால எல்லைக்குள் உற்பத்தி செய்து குவிக்கும் வளங்கள் சீனாவிடம் உள்ளன.

இரசியாவின் நகர்விலும் பார்க்க சீன நகர்வு கடினமானது

உக்ரேனுக்கு இரசியா தரைவழியாக படைகளை நகர்த்தியது. ஆனால் சீனா தைவானிற்கு 160கிலோ மீட்டர் நீளக் கடலை தாண்ட வேண்டியுள்ளது. கடல் தாண்டி படைகளை கொண்டு போய் இறக்க முன்னரே கடலில் வைத்து ஒரு போரை தைவானால் தனித்தும் செய்ய முடியும். உக்ரேன் இரசியா மீது ஏவுகணைகளை வீசவில்லை. ஆனால் தைவான் சீனாவின் ஹொங் கொங் மற்றும் ஷங்காய் உட்பட பொருளாதார கேந்திரோபாய நிலைகளை தாக்குவதற்கு என தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேன் போரை  தைவானியர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று உக்ரேன் நாளை தைவான் என்ற தலைப்பில் பல கலந்துரையாடல்களை தைவானியர்கள் செய்து வருகின்றார்கள். சீனா தலையிடுமா? தைவான் தயாரா? அமெரிக்கா உதவி செய்யுமா? என்பவை பற்றிய விவாதங்களே தைவானில் பரவலாக அடிபடுகின்றது. தங்கள் தற்பாதுகாப்பிற்கு தற்சார்பு நிலை அவசியம் என்பதை தைவானியர்கள் உணர்ந்துள்ளனர். அமெரிக்காவை நம்பியிருக்காமல் தாம்மைத்தாமே பாதுகாக்க வேண்டும் என பல தைவானியர்கள் நினைக்கின்றார்கள். உக்ரேனிற்கு புட்டீன் படை அனுப்பியவுடன் தைவானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உக்ரேனியர்கள் தனியே இல்லை தைவானியர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள் என்ற பதாகையும் காணப்பட்டது.

ஆழமறியாத இரசியா போல் ஆழமறியாத சீனாவா?

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்தால் அது அமெரிக்காவின் கவனத்தை சிதறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டுரைகள் மேற்கு நாட்டு ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா பகுதியாக ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனியர்களிடையே இரசிய குரோதத்தை அமெரிக்கா வளர்த்து வைத்துள்ளது என்பது இரசியப் படையினர் உக்ரேனுக்குள் சென்ற பின்னர்தான் இரசிய அதிபர் புட்டீன அறிந்து கொண்டார். இரசியப் படைகளை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று புட்டீன எதிர்பார்ந்திருந்ததாக மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏமாற்றத்தால் இரசிய உளவுத்துறையின் இயக்குனரையும் அவரது உதவியாளரையும் புட்டீன் வீட்டுக் காவலில் வைத்தார் என்று கூடச் சொல்லப்படுகின்றது. தைவானியர்களின் நிலைப்பாடு தொடர்பாக சீனா எந்த அளவு அறிந்து வைத்திருக்கின்றது?

உன்னிப்பாக அவதானிக்கும் சீனா

உக்ரேன் எல்லையில் இரசியப் படைகள் 2021-22இல் குவிக்கப்பட்ட போது சீனாவின் முன்னணி ஊடகங்களான Xinhua, CGTV, People’s Daily ஆகியவை மௌனமாகவே இருந்தன. ஆனால் உக்ரேன் போர் நிலவரங்களை சீனா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. இரசியப் படைகள் உக்ரேனில் இருந்து தோல்வியடைந்து வெளியேறினால் அது இரசியப் பாதுகாப்பு மற்றும் கேந்திரோபாய நலன்களைப் பொறுத்தவரை பாதிக்கிணறு தாண்டியது போலாகும். இரசியா இலகுவில் உக்ரேனில் இருந்து வெளியேற மாட்டாது. அல்லது ஏதாவது ஒரு போலி வெற்றியைச் சொல்லிக் கொண்டு இரசியா அங்கிருந்து வெளியேறலாம். அது இன்னும் சில வாரங்களில் இரசியா செய்ய வேண்டும். இரண்டும் தைவான் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சீனாவை ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வைக்கும். வலிமை மிக்க காத்திரமான தயாரிப்பை செய்த பின்னரே சீனா தைவானை ஆக்கிரமிக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.

உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்த மேற்கு

அமெரிக்கா உட்பட எல்லா மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்துள்ளன. தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதே நிலைப்பாடு இருக்குமா? தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை வலியுறுத்தி அங்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லந்து ஆகிய நாடுகள் தம் கடற்படையை அனுப்பியதுடன் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை நடத்தின. அமெரிக்காவின் நேட்டோ பங்காளிகளின் உக்ரேன் தொடர்பான நிலைப்பாட்டிலும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டில் தைவான் தொடர்பாக ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் எடுத்துள்ளன. இருபத்தியாறு துறைமுகங்களைக் கொண்ட தைவான் தீவை சீனா கைப்பற்றுவது பசுபிக் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஒரு கடற்படையை சீனா உருவாக்கி அதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஜப்பான் தைவானை சீனா கைப்பற்ற முயன்றால் அதன் மீது தாக்குதல் செய்வதற்கு தயாராக தைவானிற்கு அண்மையாக உள்ள தீவுகளில் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தனது கடற்படையையும் வலிமைப் படுத்தியதுடன் தனது துறைமுகங்களை ஒஸ்ரேலியா பாவிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இரசியர்களுக்கு இருக்கும் போர் முனை அனுபவம் சீனர்களுக்கு இல்லை என்பதையும் சீனா நன்கறியும். இரசியாவை சுற்றி வர உள்ள அமெரிக்கப் படைத்தளங்களிலும் பார்க்க வலிமை மிக்க படைத்தளங்கள் சீனாவை சுற்றி வர அமெரிக்கா வைத்திருக்கின்றது. நீண்ட காலப் போரில் ஈடுபடும் தைவானால் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதில் சீனாவிற்கு தான் பெருமளவு பாதிப்பு இருக்கும். உக்ரேன் மீது இரசியா படையெடுத்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னள் படைத்துறை அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் தைவானுக்கு அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் அழிவைப் போல் சீனாவிற்கு எதிரான போர் உருவக்க மாட்டாது.

வ்உக்ரேனில் இரசியாவுடன் நேரடி மோதலை அமெரிக்கா தவிர்த்துக் கொண்டிருப்பது. தைவானைக் கைப்பற்ற முயற்ச்சிக்கும் சீனாவுடன் நேரடி மோதலை செய்வதற்காகவா என்பதை சீனா சிந்திக்கும். சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உக்ரேனின் அனுபவத்தை வைத்து மீள் பரிசீலனை செய்து பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையை உக்ரேனியர்களின் உறுதிப்பாடும் இரசியாவின் திட்டமிடல் தவறுகளும் ஏற்படுத்தியுள்ளன. பல பாடங்களை போர் அனுபவமில்லாத சீனா கற்றுக் கொள்ல வேண்டியிருக்கும். சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியா இணைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் நாளை தள்ளிப்போடும். அந்தக் கால இடைவெளியில் தைவானியர்களும் உக்ரேனிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.


Saturday, 2 April 2022

புட்டீன் இரும்பு வேலி அமைக்கின்றாரா? பொறியில் சிக்கினாரா?

  


உக்ரேனில் நடப்பது அயோக்கிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி என்பதை மனதில் கொண்டு அங்கு நடப்பதைப் பார்ப்போமாக. London School Economics என்னும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் உக்ரேனை புட்டீனை மாட்ட வைக்கும் பொறியாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில நேட்டோ நாடுகள் பாவிக்கின்றன என ஒரு கட்டுரையை உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade எழுதியுள்ளார். அவரின் கருத்துப் படி உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கத் தூண்டும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அவரை அங்கு சிக்க வைத்து இரசியப் பொருளாதாரத்தை சிதைத்து அவருக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்வது புட்டீனின் எதிரிகளின் நோக்கம் என்கின்றார் Robert H Wade.

வல்லரசுகளுக்கு கவசம் அவசியம்.

ஒரு வல்லரசு நாட்டைச் சுற்றிவர ஒரு கவசப் பிரதேசம் இருத்தல் அவசியம். அப்பிரதேசத்தில் இருக்கும் அரசுகள் நட்பாக அல்லது நடுநிலையாக இருக்க வேண்டும். வலிமை மிக்க இரண்டு போட்டி நாடுகளிடையே இருக்கின்ற நாடுகள் எந்த நாட்டுக்கு கவச நாடாக இருப்பது என்ற போட்டி இடையில் இருக்கும் நாட்டிற்கு மிகவும் பாதகமாக அமையும். இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் இருக்கும் நேப்பாளம் உருப்பட முடியாமல் இரண்டு நாடுகளும் சதி செய்கின்றன. நேப்பாளத்தின் நிலை இரண்டு யானைகள் சண்டை பிடித்தாலும் காதல் செய்தாலும் காலடியில் இருக்கின்ற புற்களுக்குத்தான் அழிவு என்பது போன்றது. சோவியத் ஒன்றியத்தின் இரும்பு வேலி நாடுகளாக போலாந்து, கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, அல்பேனியா ஆகிய நாடுகள் இருந்தன. இவை சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளல்ல ஆனால் இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகள் என ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவிற்கு சவால் விடும் நாடுகளாக இருந்தன. அந்த இரும்பு வேலி 1991இல் வார்சோ கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் தகர்ந்து போனது. “கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள்” என்னும் படைத்துறைக் கூட்டமைப்பை 1994-ம் ஆண்டு இரசியா ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான், ஆர்மீனியா, பெலரஸ், கஜக்கஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து உருவாக்கியது. ஆனால் அதில் இருந்து ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான் பின்னர் விலகி விட்டன. அந்த பாதுகாப்பு கூட்டமைப்பில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் இருத்தல் அவசியம். உக்ரேனியர்களை நேட்டோ கூட்டமப்பு தனது பரப்புரைகள் மூலம் தம் பக்கம் கவர்ந்து விட்டது. நேட்டோவில் இணையக் கூடிய தகமை உக்ரேனுக்கோ அல்லது ஜோர்ஜியாவிற்கோ இல்லை. இருந்தும் அவை இரண்டையும் தாம் வரவேற்பதாக நேட்டோ நாடுகள் அறிவித்தன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனை போன்ற இரசியாவுடன் முறுகலை விரும்பாத நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதில் அக்கறை காட்டவில்லை.

நட்பற்றவர்களால் சூழப்பட்ட இரசியா

உலகிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைச் சூழ பதினைந்திற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. வட துருவத்தில் அமெரிக்காவின் அலாஸ்க்கா மாகாணம் எல்லையாக இருக்கின்றது கிழக்கில் நேட்டோ நாடுகளான லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா, நோர்வே, போலாந்து ஆகிய நேட்டோ நாடுகள் உள்ளன. தூர கிழக்கில் அமெரிக்காவின் நெருங்கிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. தற்போது இரசியாவுடன் பல ஒத்துழைப்பைச் செய்யும் வல்லரசான சீனா இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அணுகுண்டு வைத்திருக்கும் வட கொரியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. உக்ரேனும் ஜோர்ஜியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்ட நாடுகள். 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து அதன் நிலப்பரப்பில் இரு பகுதிகளை தனி நாடாக்கியது இரசியா. 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள இரண்டு மாகாணங்களையும் பிரித்து இரசியா தனி நாடாக்கியது. கஜகஸ்த்தானும் மொங்கோலியாவும் பிரச்சனை இல்லாத இரசியாவின் அயல் நாடுகள் எனக் கருதலாம். இரசியாவின் ஒரே நட்பு நாடு பெலாருஸ் மட்டுமே. இந்த சூழலில் இரசிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கொள்கை வகுப்பாளர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றார்கள்.

புட்டீனின் சோவியத்-2.0 கனவு

தற்போதைய இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் 1991-ம் ஆண்டில் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியம் உடைந்ததை 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார்-அரசியல் விபத்து எனக் கருதுகின்றார். மீண்டும் இரசியா தலைமையில் சோவியத் ஒன்றியம்-2ஐக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவுடன் 1999-ல் ஆட்சிக்கு வந்த புட்டீன் 2020-ம் ஆண்டு இரசியா உலகின் முதற்தர வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டவர். சோவியத் ஒன்றியம் போல் பொருளாதாரம் மீது அதிக கவனம் செலுத்தாமல் படைத்துறையை மட்டும் கட்டி எழுப்பினால் போதாது என்பதை நன்கு உணர்ந்தவர். படைத்துறையை சிக்கனத்துடன் கட்டி எழுப்ப வேண்டும் என நினைப்பவர். இரசியாவை முன்பு ஆண்ட பொதுவுடமைக் கட்சியினர் படைக்கல உற்பத்தியில் சிக்கனத்தையோ பொருளாதாரத் திறனையோ கடைப்பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை கட்டி எழுப்ப இரசியாவிற்கு மிகவும் அவசியமான நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் ஆகும். இரண்டு நாடுகளையும் நேட்டோ கூட்டமைப்பில் இணைப்பது போல அமெரிக்கா நடிக்கின்றது. இரண்டு நாடுகளும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைய விரும்புகின்றன. அப்படி இணைய முற்பட்டால் இரசியா அதைக் கடுமையாக எதிர்க்கும் என நேட்டோ நாடுகள் அறியும். இன்னொரு நாட்டுடன் போர் புரியக் கூடிய நிலையில் இருக்கும் ஒரு நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது. உறுதியான அரசு, அமைதி, மனித உரிமைகளைப் பேணுதல், காத்திரமான பொருளாதாரம் போன்றவை உள்ள நாடுகள் மட்டுமே நேட்டோவில் இணையலாம். ச் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முயன்றமை விளடிமீர் புட்டீனைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2022 பெப்ரவரி மாதம் 24-ம் திகதி இரசியாவை சுற்றி ஒரு இரும்பு வேலி போடும் நோக்கத்துடன் இரசியப் படைகளை புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பினார்.

பொருளாதாரத்தால் இரசியாவை விழுத்தினார்களாம்

பொருளாதாரப் பிரச்சனையால் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்தமைக்கு அது ஆப்கானிஸ்த்தானில் படையெடுத்தமை முக்கிய காரணமாகும். சோவியத்-2.0ஐக் கட்டி எழுப்பும் முயற்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய அமெரிக்கா திட்டம் போட்டிருக்கலாம். அமெரிக்கா உக்ரேனுடன் ஒரு தொடர்ச்சியான போரை நடத்துவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் காத்திருந்த வேளையில் 2014-ம் ஆண்டு புட்டீன் ஒரு சில நாட்கள் செய்த படை நடவடிக்கையின் மூலம் இரசியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவைக் கைப்பற்றினார். அப்போரில் இரசியாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படாமல் புட்டீன் பார்த்துக் கொண்டார். அதை சாட்டாக வைத்து உக்ரேனியர்களை நேட்டோவில் இணையத் தூண்டும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. உக்ரேனியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களும் போதிய பயிற்ச்சியும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளால் வழங்கப்பட்டது. 2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவில் உக்ரேன் இணையவேண்டும் என அதன் அரசியலமைப்பு யாப்பை திருத்தியது. இது புட்டீனுக்கு போடப்பட்ட தூண்டிலாக இருக்கலாம். 2020இல் சோவியத்-2.0 கட்டி எழுப்பும் திட்டத்துடன் இருந்த புட்டீனுக்கு இது பெரும் சினத்தை மூட்டியது. அப்போது பரவிய கொவிட்-19 பெருந்தொற்று அவருக்கு தடையாக இருந்தது. அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களும். லேசர் படைக்கலன்களும் தொலைதூர தாக்குதல் விமானமான B-21 போன்றவை போர்க்களத்தில் முழுமையான பாவனைக்கு தயாராக முன்னர் 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்கு தன் படைகளை அனுப்பினார்.

உண்மையை உளறிக் கொட்டினாரா ஜோ பைடன்?

அமெரிக்க அதிபர் 2022 மார்ச் 26-ம் திகதி போலந்து தலைநகர் வார்சோவில் தயாரிக்காத உரை ஒன்றை ஆற்றும் போது “கடவுளிற்காக அந்தாள் (புட்டீன்) அதிகாரத்தில் இருக்கக் கூடாது” என்றார். இது அவர் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லவில்லை என்பதை உலகை நம்ப வைக்க அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் உட்பட பலர் சிரமப் பட்டார்கள். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிலிங்கன் தங்களிடம் இரசியாவில் ஆட்சி மாற்றம் செய்யும் உபாயம் இல்லை என்றார். ஆனால் புட்டீன் உக்ரேனுக்கு படையனுப்பிய 2022 பெப்ரவரி 24-ம் திகதி தனது வெள்ளை மாளிகையில் உரையாற்றைய ஜோ பைடன் இரசியாமீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையல்ல மாறாக இரசியாவைத் தண்டிக்கச் செய்யப்பட்டவை. அதனால் இரசியர்களுக்கு புட்டீன் எதைக் கொண்டு வந்தார் என்பதை உணரவைக்க முடியும் என்றார். அதன் பின்னர் மூன்று நாள்கள் கழித்து பிரித்தானியப் படைத்துறை அமைச்சர் எழுதிய கட்டுரை ஒன்றில் புட்டீனின் தோல்வி முழுமையானதாக இருக்க வேண்டும். உக்ரேனிய இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இரசியர்கள் புட்டீன் தங்களைப்பற்றி என்ன எண்ணுகின்றார் என்பது உணர்த்தப் படவேண்டும். அதன் மூலம் புட்டீனின் நாட்கள் எண்ணப் படவேண்டும். புட்டீனுக்குப் பின்னர் இரசியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்ய முடியாத அளவிற்கு அவர் அதிகாரத்தை இழக்க வேண்டும் என்றார். 2022 மார்ச் முதலாம் திகதி பிரித்தானிய தலைமை அமைச்சரின் பேச்சாளர் இரசியா மீது கொண்டு வரப்பட்டுள்ள தடை புட்டீனின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வரும் என்றார். இந்த அறிக்கைகள் உக்ரேனை நடுவணாக வைத்து மாஸ்க்கோவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அமெரிக்க உபாயத்தைப் பிரதிபலிக்கின்றன என்றார் உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade. இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு உக்ரேனை புதைகுழியாக்கக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனியரகளுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறத்தில் இரசியப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரத் தடைகளை இரசியாமிது விதிக்கின்றன நேட்டோ நாடுகள். அதே வேளை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் புட்டீனை ஒரு கொடூரமானவராகவும் மன நிலை சரியில்லாதவராகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

Consortium News என்னும் இணையத் தளத்தில் Joe Lauria எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கு நாடுகளின் இறுதி நோக்கம் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றி தமக்கு இணக்கமாக நடக்கக் கூடிய ஒருவரை இரசியாவின் ஆட்சி பீடத்தில் என்றார். ஆனால் இரசிய மக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள்.

Tuesday, 29 March 2022

உக்ரேன் போரால் உலகம் படும்பாடு

 

 


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டிலும் எங்காவது ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. உலகின் ஒரு பகுதியில் நடந்த போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்துவது அரிது. கொரியப் போர், வியட்னாம் போர், ஈராக் போர் போன்றவை உலகின் மறுபகுதிகளில் செய்திகளாக மட்டுமே அடிபட்டன. ஆனால் உக்ரேன் மீது இரசியா தொடுத்த போருக்கு எதிராக நேட்டோ நாடுகள் தொடர்ச்சியாக எடுத்து வரும் பொருளாதார தடைகள் உலகெங்கும் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொவிட்-19 பெரும் தொற்றால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உக்ரேன் போரும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகை ஆட்டிப்படைக்கின்றது. எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் தவிக்கின்றன. சிதறிப்போயிருந்த உலக சரக்கு விநியோகச் சங்கிலி மேலும் சிதைவடைகின்றது. எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அமெரிக்க டொலரில் வைத்திருந்த வைப்பீடுகளின் பெறுமதி தேயுமா என கரிசனை கொண்டுள்ளன.

மானம் இழக்கும் இரசியா

போரில் வெற்றி பெறுவதற்கு வான்படையின் வலிமை அவசியம் என்று புவிசார் அரசியல் கோட்டாளர்களின் ஒருவரான அலெக்சாண்டர் பி டி செவேர்ஸ்கி வான் வலிமையே போரை வெல்லும் என்றார். உக்ரேனிலும் பார்க்க பதினைந்து மடங்கு பெரிய இரசிய வான்படையால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்த்தானில் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க, ஒன்பது ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க இருமடங்கு எண்ணிக்கையான படையினரை ஒரு மாதத்தில் இரசியா உக்ரேனில் இழந்து விட்டது. சிறந்த ஒருங்கிணைப்பின்மை, வழங்கல் குறைபாடு, படையினரிடம் மன உறுதியின்மை, உகந்த உளவுத் தகவல் பெறமுடியாமை. எதிரியின் வலுவை மதிப்பிடத் தவறியமை என பல குற்றச் சாட்டுகள் இரசியப்படையினர் மீது சுமத்தப்படுகின்றது. உக்ரேன் போரில் இரசியா உலக அரங்கில் மானம் கெட்டு நிற்கின்றது. தன் எதிரிகளிடையே ஓர் உறுதியான ஒற்றுமையையும் அது உருவாக்கியுள்ளது.

கையாலாகாத நேட்டோவும் செல்லாக் காசான ஐநாவும்

உக்ரேனில் நடக்கும் போரின் நடுப்புள்ளி நேட்டோவாகும். உக்ரேன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த போது அது சுவீடன் போல் ஒரு நடுநிலை நாடாக இருப்பதே உகந்தது அல்லாவிடில் பேரழிவு ஏற்படும் என உக்ரேனுக்கு உண்மை நிலையை உணர வைக்காமல் உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கான கதவு திறந்திருக்கின்றது என அதை ஊக்குவித்தது நேட்டோ. இப்போது உக்ரேனில் பெரும் சொத்தழிவும் உயிரிழப்புக்களும் நடக்கும் போது அதைத் தடுக்க முடியாமல் நிற்கின்றது நேட்டோ. ஐநா பாதுகாப்புச் சபையில் புட்டீனின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க முடியவில்லை. பொதுச்சபையில் உக்ரேன் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் வெறும் காகிதம் மட்டுமே.

தூங்கிய ஜெர்மனியை இடறி எழுப்பிய புட்டீன்

தனது பொருளாதார வலிமையையும் புவிசார் சூழலையும் கருத்தில் கொள்ளாமல் குறைந்த அளவு நிதியை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிக் கொண்டு இரசியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து இரசியாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்து கொண்டு சிவனே என இருந்த ஜெர்மனி உக்ரேன் போரால் தனது பாதுகாப்பு செலவை அதிகரித்ததுடன் அமெரிக்காவிடமிருந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35A வாங்கவுள்ளது. மேலும் தன்னிடமுள்ள Eurofighter போர்விமானங்களை இலத்திரனியல் போர் புரியக் கூடிய வகையில் மேம்படுத்தவுள்ளது. இரசிய ஆக்கிரமிப்பிற்கு ஒரே பதில் நேட்டோ ஒற்றுமையும் படைவலிமையும் என்றது ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை. இரசியாவிற்கு அண்மையாக ஒரு வலிமை மிக்க அரசாக ஜெர்மனி உருவாகின்றது.

பாடம் கற்ற பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனித்துவத்தைப் பேண வேண்டும் இரசியாவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனப் போதித்து வந்தது. புட்டீனை 2022 பெப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்த பின்னர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உக்ரேன் நெருக்கடியை தான் மோசமாக்க மாட்டேன் என புட்டீன் தனக்கு உறுதிமொழி வழங்கியதென்றார். புட்டீன் ஒரு புரியாத புதிர் என அவர் பாடம் கற்றிருப்பார் என நம்பலாம். பிரான்ஸிடம் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி படைக்கலன்கள் உதவி முக்கியமாக போர்த்தாங்கிள் வழங்கும் படி கேட்ட போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மறுத்துவிட்டார். அவர் இரசியாவிற்கு அஞ்சுகின்றார் என ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியதுடன் பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்ஸனின் துணிச்சலைப் பாராட்டினார்.

ஒற்றைக் கம்பியில் நடக்கும் இந்தியா

காலத்தால் மாற்றமடையாத எச்சூழலிலும் நட்பும் உதவியும் செய்த இரசியா இந்தியாவின் சிறந்த நட்பு நாடு. படைக்கலன் கொள்வனவு, படைத்துறைத் தொழில்நுட்ப வழங்கல், எரிபொருள் வழங்கல், தேவையான போதெல்லாம் நிபந்தனையின்றி ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சார்பாக தன் இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவிப்பது போன்றவற்றை இரசியா செய்து வந்தது. அந்த இரசியாவைப் பகைக்க கூடாது. பகைத்தால் இரசியா, பாக்கிஸ்த்தான், சீனா ஆகியவற்றின் கூட்டு இந்தியாவிற்கு மோசமான ஆப்பு என்பதையும் இந்தியா அறியும். சீனாவை சமாளிக்கவும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் முன்னேற்றமான நிலையை அடையவும், புதிய தொழில்நுட்பங்களைப் பெறவும் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்த இந்தியா முயன்று கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசு இந்தியாவின் நிலையைப் புரிந்து கொண்டாலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்த்தி தெரிவித்துள்ளனர். இரசியா இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளது..

அணுக்குண்டைக் கொண்டுவா என்ற ஜப்பான்

அணுக்குண்டால் தாக்கப்பட்ட ஒரே ஒரு நாடாகிய ஜப்பான் உக்ரேனை புட்டீன் ஆக்கிரமித்தவுடன் தனது நாட்டில் அமெரிக்காவின் அணுக்குண்டுகளைக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றார் ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் சின்சோ அபே. இது சீனாவை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. ஜப்பானும் பிரித்தானியாவைப் போல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நிழல் போல் தொடர்கின்ற ஒரு நாடு. இரசியாவை போரில் தோற்கடித்த ஒரே ஒரு ஆசிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் எல்லை முரண்பாட்டைக் கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜப்பான் தனது தெருவிளக்குகள், விளப்பரங்கள் ஆகியவற்றின் ஒளி அளவைக் குறைத்துள்ளது.

சீனாவின் காட்டில் மழை

இதுவரை காலமும் இரசியா தன்னை Batmanஆகவும் சீனாவை Robinஆகவும் பார்த்து வந்தது. உக்ரேனுக்குள் அனுப்பிய தனது படையினருக்கு போதிய உணவை வழங்க முடியாமல் சிரமப்படும் இரசியா சீனாவிடம் தயாரித்த உணவுகளை கொடுக்கும் படியும் ஆளிலிவிமானங்களையும் வழிகாட்டல் ஏவுகணைகளையும் அவசரமாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டது. இரசியாவில் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை சீனா வாங்கப் போகின்றது. இரசிய நாணயம் வீழ்ச்சியடைவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிக்கும் சீனா இனி இரசியாவில் தவித்த முயல் அடிப்பது போல் பல சொத்துக்களை வாங்கக் காத்திருக்கின்றது. அமெரிக்க எதிர்பாளர்களின் வண்டியில் ஓட்டுனர் இருக்கையில் இப்போது சீனா.

கல்லாக் கட்டும் அமெரிக்கா

எங்கு நாடுகளிடையே போர் மற்றும் முறுகல்கள் நடக்கும் அங்கு தனது படைக்கலன்களை விற்கவும் படைத்தளங்களை அலைகின்ற அமெரிக்காவிற்கு உக்ரேன் போர் சிறந்த வாய்ப்பாகும். தன்னிடமுள்ள காலம் கடந்த படைக்கலன்களை உக்ரேனுக்கு உதவியாக பாதி பாதி என வழங்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலன்களை வாங்குகின்றன. இரசியத் தாங்கிகளுக்கு எதிராக அமெரிக்காவின் ஏவுகணைகள் சிறப்பாக செயற்படுவது அமெரிக்காவிற்கு சிறந்த விளம்பரம்.

செல்வாக்கிழந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் எரிபொருள் விலையேற்றமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பும் அமெரிக்கர் மத்தியில் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கைக் குறைத்துள்ளது. 2022இன் இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் எல்லா மக்களவை தொகுதிகளிலும் மூன்றில் ஒரு மூதவை தொகுதிகளிலும் அவரது மக்களாட்சிக் கட்சி பின்னடைவைச் சந்திக்கலாம். அதனால் குடியரசுக் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலிமை பெற்றால் நினைத்தபடி ஆட்சி நடத்த முடியாத ஜோ பைடன் LAME DUCK President ஆவார்.

இலங்கையின் நிலையை பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் எனச் சொல்வதிலும் பார்க்க மாடேறி மிதித் தவன் மேல் பனை மரம் விழுந்தது போல் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை மீண்டும் எரியலாம்.


Monday, 28 March 2022

வெளிநாடு வாழ் தமிழர்கள் இலங்கையில் முதலிடலாமா?

  


நெசவு செய்யும் திறமைமிக்க தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் ஒரு நெசவுத்தறி போட கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் முன்வரலாம். இன்னொரு நெசவுத் தொழிலாளி தனது வருமானத்தில் தினமும் மது அருந்தி கைநடுக்கம் ஏற்பட்ட பின்னர் அவரால் போதிய அளவு நெய்ய முடியாத நிலையில் அவரது வருமானம் குறைந்து உணவிற்கு திண்டாடும் போது அவர் தனக்கு கடன் தரச் சொல்லி கேட்டால் யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். இலங்கையும் இனக்கொலைப் போருக்கு அளவிற்கு மிஞ்சி கடன் பட்டு பின் பட்ட கடனுக்கு வட்டி கொடுக்க புதிய கடன் பட்டு விட்டு மேலும் கடன் பட முடியாத நிலையில் அங்கு வந்து முதலீடு செய்யுங்கள் என்று இனக்கொலைக்கு உள்ளான இனத்தைச் சேர்ந்தவர்களை கேட்க முடியுமா? சொல்லுவார் சொல்ல கேட்ப்பார்க்கு மதியென்ன?

யோக்கியன் வாறான் செம்பை எடுத்து வை

எனக்கு தெரிந்த ஒருவர் இலங்கை நாணயம் பெறுமதி இழந்துள்ளமையால் அங்கு இப்போது முதலீடு செய்வது உகந்தது என எண்ணி முதலீடு செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தான் பாலமாக இருக்கத் தயார் என அறிவித்தவுடன் தன் முடிவை மாற்றிக் கொண்டார். பாலமே இந்தளவு கேவலமானதாக இருக்கையில் அதை நம்பி பயணித்தால் என்ன நடக்குமோ என அவர் அஞ்சுகின்றார். 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டு அதற்கும் அப்பால் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என்றாராம் சுமந்திரன். 2009 நடந்த போரின் போது மருத்துவமனைகளும் சட்ட பூர்வமான குண்டு வீச்சு இலக்கு எனச் சொல்லிய கோத்தபாய ராஜபக்ச கூட்டிய கூட்டத்தில் தான் சுமந்திரன் இந்தக் கருத்தை முன்வைத்தார். பாலம் மட்டும் கேவலமானதல்ல பாலம் சொல்லும் படகான 13 ஓட்டை மிகுந்தது அதை நம்பி யாரையா இறங்குவார்? புலிகள் இனச்சுத்தீகரிப்பு செய்தனர் ஆனால் சிங்களவர் இனக்கொலை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற யோக்கியரின் கூற்றை நம்பி யார் இலங்கையில் முதலீடு செய்வார்.

விடுதலை வேட்கைக்கு எதிராக சுமந்திரனின் சதியா?

இலங்கையில் தமிழரகளுக்கு சுதந்திரம் வழங்காமல் சிங்களத்தால் இழுத்தடிக்க முடியாது. சிங்களத்தின் அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் நிச்சயம் பொங்கி எழுவார்கள். தந்தை செல்வாவின் போராட்டத்தை அடக்குமுறையால் இல்லாமல் செய்தார்கள். பின்ன அதிலும் பார்க்க வலிமை மிக்க போராட்டம் வந்தது. அது போல சிங்களத்தை சிதறடிக்கக் கூடிய ஒரு போராட்டம் இனி எந்த நேரத்திலும் ஆரம்பமாகலாம். அடுத்த தீபாவளி, அடுத்த பொங்கல், அடுத்த ஆடி அமாவாசை எனப் பலவற்றைக் கேட்டு விரக்தியடைந்திருக்கும் மக்கள் செய்யும் கிளர்ச்சி அபாயகரமானதாக இருக்கும். புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்தால் அம் முதலீடு மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான அடக்கு முறையால் அழிக்கப்படும். அதனால் மக்கள் கிளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என சிங்களமும் சுமந்திரனும் கணக்குப் போடுகின்றார்கள். அடுத்த விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்கள் உதவி செய்யாமல் தடுப்பதற்காக சுமந்திரன் செய்யும் சதிதான் வெளிநாடு வாழ் தமிழர்களை முதலீட்டுக்கு அழைக்கின்ற செயலா?வ்

ஒரு நாளில் ஒரு இலட்சம் டொலர் இழப்பீடா?

இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு ஒருவர் ஒரு மில்லியன் டொலரை முதலீடு செய்யும் போது முதலில் டொலரை ரூபாவாக மாற்றும் போது ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின்னர் ரூபாவின் பெறுமதி மேலும் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தால் முதலிட்டவருக்கு ஒரு இலட்சம் டொலருக்கு மேல் இழப்பீடு ஏற்படும். தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இனி வீழ்ச்சியடைய இடமில்லை. இலங்கையில் செய்த முதலீட்டை இலகுவில் மீண்டும் வெளிநாட்டுக்கு கொண்டு வர முடியாது. இலங்கைப் பொருளாதாரம் இனி மீழவும் எழும் (Rebound) என யாரும் சொல்லாத நிலையில் நிதித்துறையில் அறிவில்லாத சுமந்திரன் எந்த ஒரு நிதி ஆலோசனையும் பெறாமல் எப்படி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் செய்யும் முதலீட்டிற்கான பாலமாக தன்னை முன்னிறுத்த முடியும்?

தரம் தாழ்த்திய நிறுவனங்கள்

இலங்கையில் ஏற்கனவே முதலீடு செய்த பன்னாட்டு தனியார் முதலீட்டாளரகள் இலங்கைக்கு கொடுத்த கடனை எப்படி மீளப் பெறுவது என்பது தொடர்பாக பன்னாட்டு சட்ட நிறுவனமான White & Case LLP என்னும் பன்னாட்டு சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளனர். இலங்கையில் பொருளாதார சூழலை அடிப்படையாக வைத்து. S&P, Fitch, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கைய தரம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவை இன்னும் இலங்கையின் தரத்தை மீளவும் உயர்த்த முன்னர் சுமந்திரன் ஏன் அங்கு முதலீடு செய்வது பற்றி சிந்திக்கின்றார்?  உலக நாடுகளுக்கான ஊழல் பட்டியலில் இலங்கை எத்தனையாவது இடத்தில் இருக்கின்றது என சுமந்திரனுக்கு தெரியுமா? பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சுமந்திரனைச் சந்திக்கும் போது இலங்கைக்கு ஜீஎஸ்பி+ வரிச்சலுகையை நிறுத்தும் படி மேற்கு நாட்டு அரசுகளிடம் பரப்புரை செய்வது பற்றி பேசிய போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தான் செய்ய மாட்டேன் எனச் சொல்லிய சுமந்திரன், மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க போராடிய சுமந்திரன் இப்போது இலங்கைக்கான முதலீட்டு தரகராக செயற்படுகின்றாரா?

அரசியல் உறுதிப்பாடில்லாத இலங்கை

ஒரு நாட்டில் முதலீடு செய்வதாயின் அங்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். இலங்கையில் பொருட்கள் விலை ஏற ஏற மக்கள் அரசுக்கு எதிராக போராடுவது அதிகரிக்கும். அத்துடன் 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் அதற்கு எதிராக பௌத்த அமைப்புக்களும் பிக்குகளும் ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுவர். வலிமையற்று தலையெடுக்க முடியாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் இனவாத தீயை மூட்டுவார்கள். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது ஆட்சியாளர்களை சுட்டுக் கொல்லவும் சிங்களவர்கள் தயங்க மாட்டார்கள். அதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டு படைத்துறையினர் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் உண்டு. இத்தகைய இடர்(Risk) மிகு சூழலில் எந்த முட்டாள் இலங்கையில் முதலீடு செய்ய பாலமாக இருப்பான்?

பணச்சலவைக்கு வழியா?

2009 ஆண்டில் நடந்த போரின் பின்னரும் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டது. இலங்கையில் பெருந்தொகை பணத்தைக் கொள்ளை அடித்து வைத்திருந்தவர்கள் அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு வழியாக அது இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. அதன் படி வெளிநாடு வாழும் இலங்கையர் ஒரு மில்லியன் டொலரை வெளிநாட்டு வங்கி ஒன்றில் இலங்கையில் கொள்ளை அடித்தவர்களின் பெயரில் வைப்பிலிட்டால் அதற்கு உரிய இலங்கை ரூபாக்களை கொள்ளையர்கள் அந்த வெளிநாட்டுப் பேர்வழியின் பெயரில் இலங்கையில் வைப்பிலிடுவார்கள். ராஜபக்சேக்களின் வெளிநாட்டு சொத்து பற்றி இந்த இணைப்பில் காணலாம்:

https://www.theguardian.com/world/2015/mar/20/sri-lanka-says-mahinda-rajapaksa-officials-hid-more-than-2bn-in-dubai

விளடிமீர் புட்டீனினதும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக பொருளாதார தடை என்னும் பெயரில் அவர்களின் சொத்துக்களை முடக்குவது போல் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இப்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் அவர்களது பணத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இப்போது இன்னொரு முதலீட்டு அழைப்பு விடப்படுகின்றதா? அதற்கான தரகர் வேலையை பார்ப்பவர் யார்?

இலங்கை நடுவண் வங்கியும் மூலதனக் கணக்கும்

இலங்கை நடுவண் வங்கி இலங்கையில் இருந்து மூலதனம் வெளியேறுவதற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலங்கையில் முதலிடுபவர்கள் தேவை ஏற்படும் போது அந்த முதலீட்டை வெளியே எடுத்து வர முடியாது. திரவத்தன்மை (liquidity) குறைந்த முதலீட்டை சுமந்திரனின் முட்டாள்தனமான ஆலோசனையைக் கேட்ட்டு யாரும் செய்ய மாட்டார்கள்.

தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற இடத்தில் அவர் முதலீட்டுக்கு?

இனக்கலவரம் என்று அவ்வப்போது தோற்றுவித்து தமிழர்கள் சொத்தை கொள்ளை அடிப்பதையும் அழிப்பதையும் சிங்களவர்கள் தங்கள் பொழுது போக்காக கொண்டுள்ளனர். தமிழர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க அறிவுகெட்ட சுமந்திரனால் முடியுமா? இலங்கை அரசு தமிழர்களின் முதலீட்டை அரசுடமையாக்க மாட்டாது என சிங்களத்தின் வால் பிடியான சுமந்திரனால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? 

பழைய சத்தியஜித் ராயின் திரைப்படமொன்றில் ஒரு செல்வந்த வயோதிபர் கடும் நோய் வாய்ப்பட்டுவிட்டார். மருத்துவர் இனி ஆள் தப்பாது என்று சொல்லி விடுவார். அந்த நிலையில் அவரது குடும்பத்தினர் சோதிடரை அணுகுவார்கள் அவர் பார்த்துவிட்டு இவருக்கு ஆயுள் முடிந்து விட்டது ஆனால் ஒரு வழி இருக்கிறது என்றார். குடும்பத்தவர்கள் ஆவலுடன் என்ன எனக் கேட்கும் போது சோதிடர் சாதகத்தில் நல்ல மாங்கல்ய வலிமையுள்ள ஒரு பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணின் பலனால் இவர் தப்புவார் என்பார்கள். அது போலத்தான் எந்த நேரமும் மண்டையைப் போடலாம் என்ற நிலையில் இருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுமந்திரன் சொல்லும் அறிவுரை. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் வாழ வழியற்று இருக்கும் ஏழைப் பெண்களல்ல.

Wednesday, 23 March 2022

உக்ரேன் போரும் இந்திய அமெரிக்க உறவும்

 


அமெரிக்காவுடன் குவாட் அமைப்பில் இணைந்து நிற்கும் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் உக்ரேனை ஆக்கிரமித்த இரசியாவிற்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்த நிலையில் அதன் நான்காவது உறுப்பு நாடான இந்தியா நடுநிலை வகிக்கின்றது. இந்தியாவிற்கு பயணம் செய்த ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபியுமியோ கிஷிடா உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பு உலக ஒழுங்கின் அத்திவாரத்தை அதிர வைத்துள்ளமையால் அதற்கு எதிரான காத்திரமான கருத்து வெளிப்பாடு அவசியம் என்றார். இந்திய தலைமை அமைச்சருடன் இணையவெளியூடாக உரையாடிய ஒஸ்ரேலிய தலைமை அமைச்சர் ஸ்கொட் மொரிசனால் கூட இரசியா தொடர்பான இந்திய நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்க இந்திய உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது.

இந்திய அமெரிக்க உறவின் விரிசலின் ஆரம்பம் பாண்டூங்

1929-ச்ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி லாகூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தலைமை உரையாற்றிய ஜவகர்லால் நேரு இந்தியா ஒரு சமூகவுடமை (சோசலிச) நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். சுதந்திரமடைந்த இந்தியாவைச் நேரு ஒரு சமூகவுடமை நாடு போல ஆட்சி செய்தார். ஆனாலும் 1976-ம் ஆண்டு இந்தியாவின் அரசியலமைப்பிற்கான 46-வது திருத்தத்தில் முன்னுரையில்  மட்டும்தான் இந்தியா ஒரு மதசார்பற்ற சமூகவுடமைக் குடியரசு என்ற பதம் உட்புகுத்தப்பட்டது. இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா தலைமையிலான பொதுவுடமைவாத்ததிற்கு எதிரான அணியில் இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. 1955 பாண்டூங் நகரில் நடந்த அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கும் மாநாட்டில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தில் பாக்கிஸ்த்தான் பங்கு பெறவில்லை. அமெரிக்க நிப்பந்தத்தையும் மீறி இந்தியா பங்கு பற்றியது. அதனால் அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு நெருக்க மடைந்தது. இந்திய அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டது.

பாக்கிஸ்த்தானில் மையம் கொண்ட உறவுப் புயல்

கடந்த 65 ஆண்டுகளாக அமெரிக்கா பல படைக்கலன்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வருவது இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 1962-ம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா கேட்ட உதவியை அமெரிக்கா வழங்காமல் மட்டுப்படுத்தப் பட்ட உதவியை வழங்கியது. 1971ல் நடந்த பங்களாதேசப் போரில் இரசியா இந்தியாவிற்கு முழுமையான ஆதரவையும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு முழுமையான ஆதரவையும் வழங்கின. இந்தியா மீது தாக்குதல் தொடுக்க USS Enterprise என்ற விமானம் தாங்கிக் கப்பலுட்பட அமெரிக்காவின் ஏழாவது கடற்படை வங்காள விரிகுடா வந்த போது இந்தியவை அமெரிக்காவிடமிருந்து பாதுகாக்க இரசிய நீர்முழ்கிகள் அங்கு முன் கூட்டியே தயாராக இருந்தன. இந்தியா நோக்கி நகர்ந்த பிரித்தானிய கடற்படை அணியை இரசிய நீர்மூழ்கிகள் மத்திய தரைக் கடலில் வைத்தே தடுத்துவிட்டன. இதன் பின்னர் இரசிய இந்திய உறவு மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. இரசியாவின் உயர் தொழில்நுட்ப படைக்கலன்கள் முக்கியமாக அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதலில் இரசியா பெரும் பங்காற்றியது. இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பமும் இரசிய உதவியால் வளர்ந்தது. இரசிய மக்களிடயே இந்தியாமீதும் இந்திய மக்களிடையே இரசியாமீதும் பெரு விருப்பு உண்டு. 1971-ம் ஆண்டு இந்திய சோவியத் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது அமெரிக்க சீன பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு பதிலடியாகவே செய்யப்பட்டது.

காலம் கடந்து நிற்கும் இரசிய இந்திய உறவு

இந்தியாவிற்கு படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இரசியா வழங்குவதுடன் தேவை ஏற்படும் போதெல்லாம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்காக நிபந்தனை இன்றி தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தை இந்தியா பாவிக்கின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த போது சீனாவை இரசியாவிடமிருந்து பாதுகாப்பதற்கும் அமெரிக்க சீன உறவை வளர்ப்பதற்கும் பாக்கிஸ்த்தான் முக்கியமானது எனக் கருதினார். இந்திய இரசிய படைத்துறை ஒத்துழைப்பின் மகுடமாக இருப்பது பிரம்மோஸ் ஏவுகணைகள் ஆகும். இரண்டும் இணைந்து உருவாக்க முயன்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி இடையில் நின்று போனது. 2000-ம் ஆண்டு பராக் ஒபாமா – ஹிலரி கிளிண்டன் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்பட்டது. இரு நாடுகளும் சீனாவின் வளர்ச்சியையிட்டு கொண்ட கரிசனைகள் அந்த உறவு மேம்பாட்டிற்கு வழி வகுத்தது.

அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம்

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய தொழில்நுட்பத்தின் பின்னடைவு உணரப்பட்டது. இரசிய தயாரிப்பு போர் விமானங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டின்மையும் உணரப்பட்டது. அங்கு நேரடியாக இந்தியாவிற்கு உதவ விரும்பாத அமெரிக்கா இஸ்ரேலுடாக இந்தியாவிற்கு உதவி வழங்கியது. GPS என்னும் இடம் அறி முறைமையை இந்தியா பயன்படுத்த இஸ்ரேலிய போர் நிபுணர்கள் நேரடியாக களத்தில் நின்று உதவி செய்தனர். இதன் பின்னர் இந்திய அமெரிக்க உறவு வளரத் தொடங்கியது. 2001-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியது. 2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் 2020இல் கையொப்பமிட்டன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும். விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து விமானங்களைப் பறக்க விடும் தொழில்நுட்பம், நீர்மூழ்கிகளை வேட்டையாடும் கப்பல்கள், உழங்கு வானூர்திகள் என பல படைக்கலன்களும் தொழில்நுட்பங்களும் 2000-ம் ஆண்டின் பின்னர் இந்தியாவிற்கு அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. ஆண்டு தோறும் இந்தியாவிற்கு $6.2மில்லியன் பெறுமதியான படைக்கலன்களை அமெரிக்கா விற்பனை செய்து வந்தது. இது டொனால்ட் டிரம்பினுடைய ஆட்சியில் $3.4பில்லியன்களாக அதிகரித்தது.

அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டில் இல்லை.

இரசியாவின் எரிபொருள் இறக்குமதிக்கு ஒரு மாற்று வழி இருப்பது நல்லது. 2022 மார்ச் 16-ம் திகதி Indian Oil Corporation இரசியாவின் Rosenet Oil Coவிடமிருந்து மூன்று மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உலகச் சந்தை விலையிலும் 20% குறைவான விலைக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்தியாவி எரிபொருள் பாவனை நாள் ஒன்றிற்கு 4.5மில்லியன் பீப்பாய்களாகும். இந்திய ரூபாவிற்கும் இரசிய ரூபிளிற்கும் இடையிலான கொடுப்பனவு முறைமை உருவாக்கப்பட்டால் இந்தியா மேலும் அதிக எரிபொருளை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். உக்ரேனுக்கு எதிரான இரசியப் போர் பற்றி இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தண்டனை விளைவிக்கக் கூடிய நடவடிக்கை எதையும் அமெரிக்கா எடுக்கவில்லை. எடுக்கவிருப்பதாக அறிவிக்கவும் இல்லை. உக்ரேன் போர் பற்றிய வரலாற்றுப் பதிவில் இந்தியாவைப் பற்றி என்ன எழுதப்படும் என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது பற்ரி அமெரிக்கா ஏதும் கூறாமல் இருக்கின்றது.

இந்திய மக்கள் இரசியாவை விரும்பலாம்

வளர்முக நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளையும் மேற்கு நாடுகளில் ஏற்படும் பிரச்சனையையும் மேற்கு நாடுகள் வேறு விதமாக அணுகுகின்றன என வளர்முக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் நினைக்கின்றனர். மேலும் அவர்கள் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடையால் தாமது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக நினைகின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கு நாடுகள் நினைப்பது போல் புட்டீனைக் குற்றவாளியாக நினைக்கவில்லை. வளர்முக நாடுகள் கடன் அல்லது நிதி உதவி கேட்டால் பல நிபந்தனைகள் விதித்து காலத்தை இழுத்தடிக்கும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் உக்ரேனுக்கு $700மில்லியன் நிதியை வாரி வழங்கின. பன்னாட்டு நாணய நிதியம் வழமையான நியமங்களை ஒதுக்கி விட்டு $1.4 பில்லியன் அவசர நிதியை உக்ரேனுக்கு மேலும் வழங்கவுள்ளது. இப்படிப்பட்ட ஓரவஞ்சனையை வளர்முக நாடுகளில் வாழும் மக்களுக்கு மேற்கு நாடுகள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இந்த நூற்றாண்டில் இந்தியா அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி வறுமைக் கோட்டின் கீழ் இருந்த பலரை நடுத்தர வர்க்கமாக்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கப் பிரியர்களாகவும் அமெரிக்க ஆடம்பரத்தை விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். இருந்தும் அவர்களில் அரசியல் சிந்தனை முற்போக்கானது. இந்துத்துவாவைப் பின்பற்றுபவர்கள் கிரிஸ்த்தவத்தின் மீது வெறுப்புடையவர்களாகவும் இருக்கின்றனர். SWIFT என்னும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கொடுப்பனவு தொடர்பாடல் முறைமையில் இருந்து இரசியாவை விலக்கிய படியால் இரசியா தனது உர ஏற்றுமதியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பல வளர்முக நாடுகளைப் பாதித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு நன்மையளிக்க இந்தியா இரசியாவிடமிருந்து உரம் வாங்குவது அவசியம். எரிபொருள் விலையேற்றம் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது. அதைத் தவிர்க்க இந்தியா இரசியாவின் 20% கழிவு விலை எரிபொருள் வழங்கலைத் தட்டிக் கழிக்க முடியாது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு ஒன்றுக்கு ஒன்று தேவை என்ற நிலை உள்ளது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு இல்லை என்றாலும் அதன் மிக வலிமை மிக்க படைத்துறை ஆசியப் பிராந்தியத்தின் படைத்துறை வலிமையை முடிவு செய்யும் ஒரு நாடாக வைத்திருக்கின்றது. அதனால் படைத்துறை நிபுணர்கள் இந்தியாவை ஒரு Balancing Power எனக் கருதுகின்றனர். இந்தியா இரசியாவுடனும் சீனாவுடனும் கூட்டுச் சேர்ந்தால் ஆசியப் பிராந்திய படைத்துறைச் சமநிலை அமெரிக்காவிற்கு எதிராக மாறும்.

இந்தியாவை ஒதுக்கி விட்டு அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் ஆதிக்க திட்டம் நிறைவேறாது. பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் சீனா வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க சீன ஒத்துழைப்பு இல்லாமல் போய் இரண்டும் பகை நாடுகளாகியுள்ளன. இந்தியாவும் பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க இந்திய உறவும் முறிந்து விடும். இந்தியா உக்ரேன் தொடர்பான நடு நிலையே இந்தியாவின் நீண்டகால நன்மைக்கு உகந்தது.

Monday, 21 March 2022

ஆட்டம் இழப்பாரா இம்ரான் கான்?

 

ச்

பாக்கிஸ்த்தானின் நாடாளுமன்றமாகிய தேசிய சபையில் தலைமை அமைச்சர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2022 மார்ச் 28-ம் திகதி விவாதிக்கப்ச்படவுள்ளது. பாக்கிஸ்த்தானின் ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் அதன் படைத்துறையும் உளவுத்துறையும் மிக்கிய பங்கு வகிக்கின்றன. பாக்கிஸ்த்தானின் ஆட்சியின் வெளியுறவுக் கொள்கைக்கும் அதன் ஆட்சியாளர்களின் இருப்பிற்கும் தொடர்புண்டு. இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்பிய சுல்ஃபிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்காவைக் கடுப்பேத்திய இம்ரான்

இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்த்தானில் களம் அமைத்து அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தாக்குதல்களை நடத்தி வந்தது. பாக்கிஸ்த்தானில் சிஐஏ வைத்திருந்த தளம் 2011இல் வெளியேற்றப்பட்டது. 2020இல் அமெரிக்கா சடுமென ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் அமைக்க சிஐஏ விரும்பியது. அங்கிருந்து அல் கெய்தாவினர் உட்பட பல தீவிர வாத அமைப்புக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முக்கியமாக ஆளிலிவிமானத் தாக்குதல் நடத்த சிஐஏ விரும்பியது. ஆனால் இம்ரான் கான் அதற்கு மறுத்து விட்டார். இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளால் ஒரு படையணியாக மாறிவிட்ட சிஐஏயிற்கு பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் மிக அவசியமாக தேவைப்படுகின்றது. 2021 ஏப்ரலில் சிஐஏ இயக்குனர் வில்லியம்ஸ் பேர்ன் பாக்கிஸ்த்தான் சென்றிருந்த வேளையில் அவரைச் சந்திக்கக் இம்ரான் கான் மறுத்திருந்தார். 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனை ஆக்கிரமிக்க 25-ம் திகதி இம்ரான் கான் திட்டமிட்டபடி தனது இரசியப் பயணத்தை மேற் கொண்டு அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்தித்து உரையாடினார்.

படைத்துறையுடன் பகைமை

பாக்கிஸ்த்தானின் படைத்துறையினரின் ஆதரவுடன் தான் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு படைத் துறையினருடன் நல்லுறவு இல்லை எனவும் சொல்லப்படுகின்றது. இம்ரான் கானின் தகவற் துறை அமைச்சர் ஃபவார்ட் சௌத்திரி நம்பிக்கை இல்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அவர்களது PTI கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு மில்லியன் பேர் அங்கு திரண்டிருப்பார்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அவர்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என மிரட்டியிருந்தார்.

களமிறங்கிய அமெரிக்க மனித உரிமை அமைப்பு

எங்காவது ஆட்சியில் இருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வேண்டப்படாதவர்களாக மாறும் போது அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் அங்கு களமிறங்குவது வழக்கம். இம்ரான் கானிற்கு எதிராகவும் அமெரிக்காவின் மனித உரிமைக் கண்காணிப்பகம் (HRW) செயற்படுகின்றடு. அது இம்ரான் கானின் கட்சியினர் மேல் மிரட்டல், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்களாட்சி முறைமைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அது எந்தக்காலத்தில் அங்கு நடந்ததோ தெரியவில்லை!

யோக்கியவான் இம்ரான்

தன்னை பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்படி ஆலோசனைகள் வழங்கினார்கள் ஆனால் கையூட்டு கொடுத்து ஆட்சியை தக்கவைப்பது தன் கொள்கையல்ல என்றார் இம்ரான் கான். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தாம் நடுநிலை வகிப்பதாக பாக்கிஸ்த்தானியப் படையினர் தெரிவித்தமையை இம்ரான் கான் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர்கள் நல்லோர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதே அல்லாவின் ஆணை என்கின்றார் இம்ரான். அத்துடன் நிற்கவில்லை உணர்ச்சியற்ற மிருகங்கள் மட்டுமே நடுநிலை வகிக்கும் என்றார் இம்ரான். தனக்கு எதிராக திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக மீண்டும் தன்னிடம் வருவார்கள் என்றார் இம்ரான் கான்.

சிதறிக் கிடக்கும் உதிரிக் கட்சிகள்

இம்ரான் கானை எதிர்த்து நிற்பவர்கள் பாக்கிஸ்த்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷரிஃப், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜர்தாரி, ஜமியத் உலெமா ஐ இஸ்லாம் கட்சியின் தலைவர் ரஹ்மான் ஆகியோராகும். முஸ்லிம் லீக் கட்சியிடம் 64 உறுப்பினர்களும், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியிடம் 43 உறுப்பினர்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகள் இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்ற தமது வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டுள்ளனர். இம்ரான் கானின் PTI இடம் 116 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருபது பேர் கட்சி மாறியுள்ளனர். ஏனைய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 120 உறுப்பினர்கள் உள்ளனர். இம்ரான் கான் பதவியில் தொடர்வதற்கு பல்வேறு மாநிலக் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க வேண்டும். இம்ரான் கான் தமது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என அவரது கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இம்ரான் கானின் ஆளும் PTI கட்சியில் 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அறுதிப் பெரும்பான்மைக்கு 175 உறுப்பினர்கள் தேவை கூட்டணி  மேற்பட்ட ஆளும் கட்சியான இம்ரான் கானின் PTI என அழைக்கபடும் Tehriik-e-Insaf கட்சியின் நாடாளுமனற உறுப்பினரள் இம்ரானுக்கு எதிரான நம்பிக்கை இல்லத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது என முடிவு செய்தமை அவரது ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டது. ஆனாலும் அவரது கட்சி வேறு ஒருவரை தலைமை அமைச்சராக்கி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு உண்டு. பொதுவாக ஆட்சி மாற்றம் நம்பிக்கையில்லா பிரேரணைகள் மூலம் பாக்கிஸ்த்தானில் நடப்பதில்லை. படையினர் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் வழமை. பாக்கிஸ்த்தான் எதிர் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவில் அங்கு மக்களாட்சிக்கு விரோதமான செயல் நடப்பது நாட்டுக்கு உகந்தது அல்ல என படையினர் உணர்ந்துள்ளார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...