Thursday, 5 August 2021

ஆப்கானிஸ்த்தானில் இனி சீனாவா?

  


2021 ஜூலை மாத இறுதியில் ஆப்கானிஸ்த்தான் தலிபான் அமைப்பினரின் தூதுக் குழு ஒன்று சீன அரசின் அழைப்பை ஏற்று சீனா சென்று அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வங் ஜீயைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்த்தானின் மீளிணக்கத்திலும் மீள்கட்டுமானத்திலும் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தலிபானின் குழுவினரிடம் தெரிவித்தார். 2007-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள மெஸ் அய்னாக் பாரிய செப்பு படிமங்களை அகழ்வு செய்யும் உரிமம் சீனாவிற்கு ஆப்கானிஸ்த்தானிய அரசால் வழங்கப்பட்டது. சீனா அதில் செய்த மூன்று பில்லியன் டொலர் முதலீடு ஆப்கானிஸ்த்தான் வரலாற்றில் மிகப் பெரிய முதலீடாகும். இந்த முதலீட்டை எதிர்த்த ஆப்கானிஸ்த்தான் அமைச்சர் ஒருவரின் வாயை சீன பெருமளவு இலஞ்சம் கொடுத்து மூடியதாகவும் கூறப்படுகின்றது. அந்த முதலீட்டை தொடர்ந்து பேணுவதற்கு சீனாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட வேண்டும்.

சீன தலிபான் உறவு

ஒரு பொதுவுடமை(?) அரசுக்கும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கும் பொதுவானது என்று ஏதுமே இல்லாத நிலையில் தலிபானை ஆதரிக்க வேண்டிய நிலையில் சீனா இருக்கின்றது. சீனா தனது நாட்டின் எல்லையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடிய ஓர் அரசு அமைவதை விரும்பாது என்றாலும் ஆப்கானிஸ்த்தானின் உறுதிப்பாட்டை தலிபானகள் தலைமையிலாவது நிலைநிறுத்துவதை சீனா எதிர்க்காது. சீனாவின் புதிய பட்டுப்பாதைக்கு ஆப்கானிஸ்த்தானில் ஓர் உறுதியான அரசு அமைவது அவசியம். சீனா தனது பட்டுப்பாதைத் திட்டத்தை வரையும் போது அதில் ஆப்கானிஸ்த்தான் உள்ளடக்கப்படவில்லை. இப்போது அதையும் உள்ளடக்கி முன்னர் மத்திய ஆசியாவில் உள்ளடக்கப்படாத பிரதேசங்களையும் உள்ளடக்கி மேலும் பல பொருளாதார வளையங்களை (Economic Belts) சீனா உருவாக்க முடியும். ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்கள் சீனாவைப் பொறுத்தவரை ஒரு தங்கச் சுரங்கமாகும். தலிபான்களுடன் இணைந்து செயற்படும் சில அமைப்புக்கள் சீனாவின் இஸ்லாமியர்கள் வாழும் உய்குர் இன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றன. தலிபான்களுடன் உறவு வைப்பதாயின் தனது நாட்டு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு தலிபான்களோ அல்லது அதன் இணை அமைப்புக்களோ ஆதரவு வழங்கக் கூடாது என்ற நிபந்தனையை சீனா விதித்துள்ளது. அதிலும் முக்கியமாக கிழக்கு துருக்கிஸ்த்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற போராளி அமைப்பை சீனா அறவே வெறுக்கின்றது.

பேரரசுகளின் புதைகுழி

முன்பு கிரேக்கர், மங்கோலியர், மொகாலயர் பின்பு பிரித்தானியர், இரசியர் இன்று அமெரிக்கர் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமிக்க முயன்று தோல்வி கண்டனர். அதனால் ஆப்கான் பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படுகின்றது. இந்த நாடுகள் தங்கள் படைகளை அங்கு அனுப்பி போர் புரிந்தன. ஆனால் சீனாவின் போர் வேறுவிதமாக இருக்கும். தன்னுடைய பேரழிவு விளைவிக்கும் படைக்கலனான உட்கட்டுமானங்களுக்கான கடன் மூலம் ஆப்கானை சீனா ஆக்கிரமிக்க திட்ட மிட்டுள்ளது. தலிபான் உட்பட பல்வேறு படைக்கலனிகள் ஏந்திய அமைப்புக்களும் அமெரிக்காவின் ஆதரவுடன் காபூலில் இருந்து ஆப்கானிஸ்த்தானை ஆட்சி செய்யும் அஸ்ரஃப் கானியின் படையினருக்கும் இடையில் நடக்கும் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினரின் ஆதரவால் காபூல் அரசு தாக்கு பிடித்துக் கொண்டிருந்தது.

படைகள் விலகாவிடில் கடும் ஆபத்து

அமெரிக்கப் படைகள் விலகுகின்ற இடங்களில் ஆப்கான் அரச படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் மூண்ட போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச படையினர் அயல் நாடான தஜிகிஸ்த்தானுக்கு தப்பி ஓடினர். இது போல பல ஆயிரம் அரச படைகள் 2021 செப்டம்பர் 11இன் முன்னர் தப்பி ஓடுவார்கள். இதனால் அஸ்ரஃப் கானியின் அரசு நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் சரிந்துவிடும் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் கட்டார் (கத்தார்) தலைநகர் டோகாவில் செய்த பேச்சு வார்த்தைகளின் இறுதியில் 2019 ஜூலையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 2021 செப்டம்பர் 11-ம் திகதி (இரட்டைக் கோபுர தாக்குதல்) நேட்டோப் படையினர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கடும் ஆபத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் என தலிபான் பேச்சாளர் 2021 ஜுலை 6-ம் திகதி எச்சரித்துள்ளார். ஆப்கானின் 407 மாவட்டங்களின் 188இற்கு மேலானவை தலிபான்களிடம் இருக்கின்றன, இன்னும் பத்துக்கு மேற்பட்டவையை அவர்கள் வெகு விரைவில் கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தொடர்ந்து பெருமளவு படைக்கலன்களையும் போர்த்தளபாடங்களையும் அரச படையினரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவை விரும்பும் காபூல்

காபூலில் உள்ள ஆட்சியாளரான அஸ்ரஃப் கானி இந்தியாவுடன் நல்லுறவை விரும்புபவர். தலிபான்களில் பெரும்பான்மையானவர்கள் பஷ்ரூன் இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். 3.2 மில்லியன் பஷ்ரூன்கள் இந்தியாவின் வாழ்கின்றனர். இந்தி திரைப்படத்துறயில் இஸ்லாமியப் பெயர்களுடன் இருக்கும் நடிக நடிகைகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்த்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பஷ்ரூன்களே. அதனால்  தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிக் கொண்டு தலிபான்களுக்கு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பாக்கிஸ்த்தான் பல உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் அஸ்ரஃப் கானி பாக்கிஸ்த்தான் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். ஆனாலும் 2021 செப்டம்பரில் நேட்டோப் படைகள் வெளியேறிய பின்னர் தனது இருப்பை உறுதி செய்ய கானி இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகளுடன் நல்லுறவு அவசியம் எனக் கருதுகின்றார். இந்தியாவிற்கும் ஆப்கானித்தானிற்கும் இடையில் தரைவழித் தொடர்பு மேற்கொள்வதாயின் அது பெரும்பாலும் பாக்கிஸ்த்தானூடாகவே செய்ய வேண்டும். 

பாக்கிஸ்த்தானின் கரிசனை

ஆப்கானிஸ்த்தானில் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அரசு அமைவது தமது நாட்டு ஆட்சி முறைமைக்கு ஆபத்தாகும் என பாக்கிஸ்த்தான் தலைவர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே பாக்கிஸ்த்தானுடன் எல்லையைக் கொண்ட ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாத அரசு உள்ளது. ஆப்கானிஸ்த்தானில் தலிபான்கள் இஸ்லாம்ய அடிப்படைவாத அரசை உருவாக்கி அது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க சிறப்பாக ஆட்சி செய்தால் பாக்கிஸ்த்தானியர்கள் தமக்கும் அது போன்ற ஆட்சி வேண்டும் என விரும்பலாம். ஏற்கனவே ஆப்கானுடன் எல்லையைக் கொண்ட பாக்கிஸ்த்தானியப் பிரதேசங்களில் பாக்கிஸ்த்தானிற்கான தெஹ்ரிக் ஐ தலிபான் என்ற அமைப்பு செயற்படுகின்றது. 2019இல் பாக்கிஸ்த்தானியப் படையினர் அமெரிக்க நிர்ப்பந்தத்துடன் செய்த படை நடவடிக்கையால் அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஒரு சில ஆயிரம் தலிபான்களாவது பாக்கிஸ்த்தானில் எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனால் பாக்கிஸ்த்தான் ஆப்கானைக் கையாள சீன உதவியை நாடியுள்ளது. தலிபான் அமைப்பில் உள்ள பலர் பாக்கிஸ்த்தானில் உள்ள பஷ்ரூன் இனத்தவர்களுக்கு எதிராக பாக்கிஸ்த்தான் எடுக்கும் நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதுடன் பாக்கிஸ்த்தானில் உள்ள பஷ்ரூன் மக்கள் வாழும் பகுதிகளையும் இணைத்து அகன்ற ஆப்கானிஸ்த்தான் உருவாக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் பாகிஸ்த்தான் தலிபான் உறவு மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். நேட்டோப் படையினர்ன் வெளியேற்றத்தின் பின்னர் தலிபான்களைன் ஆட்சி அமைந்தால் அதற்கு அவசியம் தேவைப்படுவது நிதி. அது பாக்கிஸ்த்தானிடம் இல்லாததால் ஆப்கானின் உட்கட்டுமான அபிவிருத்திக்கு சீனா உதவி செய்யும் என்பதை தம்மால் உறுதி செய்ய முடியுமென்கின்றது பாக்கிஸ்த்தான்.



மத்திய ஆசியாவில் சீன-இரசிய ஆதிக்கப் போட்டி

ஏற்கனவே பல மத்திய ஆசிய நாடுகளின் சீனா தனது ஆதிக்கத்தை உட்கட்டுமான உதவிகளாலும் தனது Belt and Road Initiative என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தாலும் அதிகரித்து வருவதை இரசியா விரும்பவில்லை. ஆனாலும் தற்போதைய சூழலில் சீனாவுடன் இரசியா ஒத்துப் போகவேண்டி உள்ளது. ஈரான், சீனா, இரசியா ஆகிய மூன்றும் இணைந்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படுவது சிறந்த தீர்வாக அமையலாம். பாக்கிஸ்த்தானுடன் தனது உறவை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டிருக்கும் சீனா பாக்கிஸ்த்தானை ஓரம் கட்டுவதை விரும்பாது.

சீனாவிற்கு நல்வாய்ப்பு

கடந்த பல பத்தாண்டுகளாக சீனாவில் பெரும் உட்கட்டுமானங்களை சீன அரசு செய்தது. அதற்குப்பாவிக்கப்பட்ட அத்தனை இயந்திரங்களும் உபகரணங்களும் தற்போது சும்மா இருக்கின்றது. அவற்றை வேறு ஒரு நாட்டில் பாவிக்கும் போது மூலதனச் செலவின்றி சீனாவால் பல உட்கட்டுமானங்களைச் செய்ய முடியும். அதனால் சீனாவிற்கு போட்டியாக குறைந்த செலவில் எந்த ஒரு நாட்டாலும் உட்கட்டுமான அபிவிருத்திகளை எந்த நாட்டிலும் செய்ய முடியாது. இருபது ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டுப் போரால் ஆப்கானில் பல உட்கட்டுமானங்கள் சிதைந்து உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்து கொண்டு அதற்குப் பதிலாக ஆப்கானிஸ்த்தானில் உள்ள கனிம வளங்களை சுரண்டுவது சீனாவின் நோக்கமாகும். தலிபான ஆப்கானில் அமைக்கவிருக்கும் புதிய அரசுக்கு போதிய நிதியை சீனாவால் கடனாக வழங்கி அந்த அரசையும் தன் கடன் பொறிக்குள் இலகுவாக விழவைக்க முடியும். தலிபான் அமைக்கவிருக்கும் புதிய அரசு மேற்கு நாடுகளிடமோ, உலகவங்கியிடமோ அல்லது பன்னாட்டு நாணய நிதியத்திடமோ கடன் அல்லது உதவி என்று கேட்டால் அவை மனித உரிமை, பெண் உரிமை எனப் பல நிபந்தனைகளை விதிக்கும். ஆனால் சீனா கடன் கொடுக்கும் போது அப்படிப்பட்ட நிபந்தனைகளை விதிக்காமல் ஆப்கானிஸ்த்தானை பகுதி பகுதியாக கபளீகரம் செய்யும் நீண்டகாலத் திட்டத்துடன் கடன்களை அதிக வட்டிக்கு வழங்கும்.

சீனாவின் ஆதரவுடன் ஊழல் ஆட்சி நடக்குமா?

சீனாவின் உதவியுடன் ஆட்சி செய்பவர்கள் பலர் மோசமாக ஊழல் செய்பவர்களாக இருக்கின்றனர். தலிபான்கள் ஊழலை தொடர்வார்களா அல்லது உண்மையான இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டுவார்களா என்பதில் ஆப்கானிஸ்த்தானின் எதிர்காலம் தங்கியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாத நாடான ஈரானும் ஊழலில் திளைக்கும் பாக்கிஸ்த்தானும் ஆப்கானிஸ்த்தானின் அயல் நாடுகளாகும். சீனா வெளிநாடுகளில் முதலீடு என்னும் பெயரில் வைக்கும் கடன் பொறிக்கு இலங்கையை பலரும் உதாரணமாக முன்வைக்கின்றார்கள். அதிலும் மோசமான உதாரணமாக ஆப்கானிஸ்த்தான் அமைய வாய்ப்புண்டு.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினரின் விலகலால் ஆப்கானில் போர் முடிந்துவிடும் என்றோ அல்லது அமைதி வரப்போகின்றதோ என்று தலிபான்களே எதிர்பார்க்க மாட்டார்கள். ஆப்கானில் தலிபான்கள் மட்டுமல்ல பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் இருக்கின்றன. எல்லோரும் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில் அடுத்து ஏறுபவர் கதி?

Monday, 2 August 2021

இரசியாவின் புதிய எஸ்-யூ-75 செக்மேற் போர்விமானம்

  


இரசியாவில் 2021 ஜூலை 20-ம் திகதியில் இருந்து 25-ம் திகதி வரை நடந்த மக்ஸ்-2021 வான் காட்சியில் இரசியாவின் சுக்கோய் விமான உற்பத்தி நிறுவனம் காட்சிப்படுத்திய எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் முக்கியத்துவம் பெற்றது. இரசியா தனது போர் விமான உற்பத்தித் துறையில் பின் தங்கிவிடவில்லை முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பதை அந்த விமானம் உரத்து உரைத்தது. தற்போது விமானங்கள் உருவாக்கப்படும்போது அவை வானாதிக்கம் (
Air Dominance) மற்றும் வான்மேன்மை (Air superiority) போன்றவைக்கு உகந்தவையாக வடிவமைக்கப்படுகின்றன. ஒரு விமானம் ஒரு குறித்த வான்பரப்பில் பறக்கும்போது அது மற்ற விமானங்களை அவ்வான்பரப்பில் பறக்க அனுமதிக்காது என்றால் அவ்விமானம் வானாதிக்க விமானமாகும். ஒரு குறித்த விமானம் எதிரியின் விமானங்களிலும் பார்க்க மேன்மயானதாக இருந்தால் அது வான்மேன்மை விமானமாகும். அமெரிக்காவின் முன்னணி விமானங்கள் இவ்விரண்டிலும் சிறந்து விளங்குவதால் அவற்றிற்கு சவால் விடக்கூடிய வகையிலும் உலகப் போர்விமானச் சந்தையில் இரசியாவின் இடத்தை தக்கவைக்கவும் இரசியா எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) விமானத்தை உருவாக்கியுள்ளது.

ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்கள்

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களில் மிகச்சிறந்த கதுவிகள் (ரடார்கள்), மிகச்சிறந்த உணரிகள் (Sensors), எதிரியின் ரடார்களுக்கு புலப்படாத்தன்மை, விமானியால் எல்லாத் திசைகளிலும் வெகு தூர அவதானிப்பு – அதாவது சிறந்த தொலைநோக்கிகளால் பார்க்கக் கூடிய தூரத்திற்கு அப்பாலும் இருப்பவற்றை பார்கக்கூடிய திறன், சிறந்த பற்ப்புச் செயற்பாடு, முற்றிலும் கணினி மயமான செயற்பாடு, இலத்திரனியல் போர் புரியும் திறன் போன்ற அம்சங்கள் இருக்கும். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களில் படைக்கலன்கள் விமானத்தின் உட்பகுதியில்தான் வைக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா முதலில் தயாரித்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-22 இன்றுவரை எந்த ஒரு எதிரிகளாலும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து அமெரிக்கா F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. அமெரிக்காவின் F-22இன் தொழில்நுட்பத்தை இணையவெளியூடாக திருடி சீனா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான J-20ஐ உருவாக்கியதாக அமெரிக்கரகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு விமானம் எதிரியின் இலக்கின் மீது குண்டுகளை வீசிவிட்டு திரும்பி வந்து தரையிறங்கிய பின்னர் அந்த விமானத்தின் இயந்திரத்தை நிறுத்திய பின்னரே அதில் குண்டுகளை மீள் ஏற்றம் செய்ய முடியும் ஆனால் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35இல் இயந்திரத்தை நிறுத்தாமலே மீள் ஏற்றம் செய்ய முடியும். Hot Loading எனப்படும் இம்முறையால் துரிதமாக மறு பறப்பிற்கு விமானம் தயாராக முடியும். அமெரிக்காவின் முதலாவது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகிய F-22 2005-ம் ஆண்டு முதன்முறையாக பாவனைக்கு வந்தது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்க முயன்றன. உற்பத்தி செலவு எதிர்பார்த்ததிலும் அதிகம் எனச் சொல்லி இந்தியா அத்திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டது. பின்னர் இரசியா தனது முதலாவது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான SU-35ஐ 2008-ம் ஆண்டு பாவனைக்கு விட்டது. அதன் புலப்படாத்தன்மை ஐயத்துக்கு உரியதாகவே இருக்கின்றது. பின்னர் இரசியா 2020-ம் ஆண்டு தனது அடுத்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான SU-57ஐ பாவனைக்கு விட்டது. அதன் உற்பத்திச் செலவு மிக அதிகம் என்பதால் இரசியாவால் போதிய SU-57 விமானங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதைத் தொடர்ந்து இரசியா உற்பத்தி செலவு குறைந்த எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) என்ற விமானத்தை உற்பத்தி செய்துள்ளது.

சதுரங்க விளையாட்டு

இரசியர்களுக்கும் குறிப்பாக இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு சதுரங்க விளையாட்டு மிகவும் பிடிக்கும். அதில் எதிரியின் இராசாவை அசைய முடியாமல் செய்து வெற்றி பெறும் நிலையை Checkmate எனச் சொல்வார்கள். அதனால் இரசியா தனது புதிய ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கு Checkmate எனப் பெயரிட்டுள்ளது. சதுரங்க விளையாட்டில் குதிரை எதிர்பாராத திசைகளில் நகர்வதைப் போல இரசியாவின் Checkmate விமானம் எதிர்பாராத திசைகளில் பறக்கக்கூடியது. இரசியாவின் SU-35 மற்றும் SU-57 போர்விமானங்களிலும் பார்க்க எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) விமானம் சிறந்த புலப்படாத் தன்மை கொண்டது. 2023-ம் ஆண்டு இந்த விமானம் அறிமுகப்படுத்தப்பட்டு 2026-ம் ஆண்டு முழுமையான உற்பத்தி ஆரம்பிக்கப்படும். இந்த விமானம் தன் துணைவிமானங்களாக பல ஆளில்லா விமானங்களையும் இயக்கிக் கொண்டு பறக்கக்கூடியது. காலப்போக்கில் எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) விமானங்களும் ஆளில்லாமல் (விமான ஓட்டியில்லாமல்) பறக்கக்கூடியதாக உருவாக்கும் திட்டம் இரசியாவிடமுண்டு. ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்கள் குண்டுகளை உள்ளே வைத்தபடியும் வெளியே வைத்த படியும் பறக்க வேண்டும். குண்டுகளை வெளியே வைத்துக்கொண்டு பறக்கும் போது அவை எதிரியில் ரடார்களுக்கு புலப்படும். எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) சிறந்த கணினிச் செயற்பாட்டையும் இலத்திரனியல் போர் முறைமையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறுந்தூர அவசரப் பணிகளுக்கு இவை சிறந்த விமானமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வானிலிருந்து வானிற்கும், வானில் இருந்து தரைக்கும் மற்றும் கடற்பரப்பிற்கும் இவை குண்டுகளை வீசக் கூடியவை. எதிரியின் மின்காந்த அலைகளால் இவற்றின் பறப்பைக் குழப்ப முடியாது. குறுகிய தூரம் ஓடிச்சென்று வானில் பறக்கக் கூடிய எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) விமானம் தாங்கிக் கப்பல்களிலும் பாவிக்கக் கூடியவை. இது இரசியக் கடற்படைக்கு பெரும் வாய்ப்பாகும். அமெரிக்க ஊடகம் ஒன்று இதை புலப்படாக் கடுதாசிப்புலி என விமர்சித்திருந்தது. 

விற்பனைக்கான எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate)

இரசியாவின் நிலப்பரப்பு கிழக்கிலிருந்து மேற்காக 5600மைல்கள் (9000கிமீ) அகலமானது அந்தப் பெருநிலப்பரப்பை பாதுகாப்பதற்கு ஒற்றை இயந்திரம் கொண்ட எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) போதுமானதல்ல. இரசியாவின் SU-35 மற்றும் SU-57 விமானங்கள் இரட்டை இயந்திரங்களைக் கொண்டவை. அவை ஏழு தொன் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் சென்று ஒரேயடியாக ஆறு இலக்குகள் மீது தாக்குதல் செய்யக் கூடியவை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டே எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) ஒற்றை இயந்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் போது அவற்றை இந்தியா, வியட்னாம், ஐக்கிய அமீரகம், பிரேசில் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியும். அந்த நாடுகளின் வான் எல்லைப் பாதுகாப்பில் எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) சிறப்பாக செயற்பட முடியும். இந்த நாடுகளுக்கு 300 விமானங்களை விற்பனை செய்ய முடியும் என இரசிய துணைத் தலைமை அமைச்சர் யூரி பொறிஸ்சோவ் இரசியாவின் மக்ஸ்-2021 வான் காட்சியில் தெரிவித்திருந்தார். ஒரு எஸ்-யூ-75 செக்மேற்றின் விலை இருபத்தைந்து முதல் முப்பது மில்லியன் டொலர்களாக இருக்கும். அமெரிக்காவின் F-35 விமானம் ஒன்றின் விலை நூறு மில்லியன் டொலர்களாகும். எஸ்-யூ-75 செக்மேற் விமானங்கள் பிரான்சின் ரஃபேல் மற்றும் சுவீடனின் கிறைப்பன் JAS-39 போன்றவற்றை உலகச் சந்தையில் ஒரம் கட்டலாம். செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி உற்பத்தி செய்தமையாலும் ஏற்கனவே உருவாக்கிய SU-35 மற்றும் SU-57 ஆகியவற்றின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாலும் எஸ்-யூ-75 செக்மேற் விமானங்கள் குறைந்த செலவில் துரித காலத்தில் உற்பத்தி செய்யப்படுள்ளன.

மிகைப்படுத்தப்பட்ட பெயர்

அமெரிக்கப் படைத்துறை ஆய்வாளர்கள் எஸ்-யூ-75 செக்மேற்றை இலகுதர தாக்குதல் போர்விமானம் என வகைப்படுத்தியுள்ளனர். அத்துடன் விமானங்களின் பெயர்களின் வரும் இலக்கங்கள் அதன் பாரத்தன்மையைப் பொறுத்து சூட்டப்படும். ஒற்றை இயந்திரம் கொண்ட எஸ்-யூ-75 விமானம் இரசியாவின் இரட்டை இயந்திரம் கொண்ட எஸ்-யூ- 57 விமானத்திலும் பார்க்க சிறியது என்றபடியால் எஸ்-யூ-75இல் உள்ள 75 தவறு என்றும் அது 57இலும் பார்க்க குறைவாக இருக்க வேண்டும் என்கின்றனர் மேற்கு நாட்டு படைத்துறை ஆய்வாளரகள். இரசியா எஸ்-யூ-75ஐ மிகைப்படுத்தி காட்டவே 75என்ற இலக்கம் இடப்பட்டதா? எஸ்-யூ-75 செக்மேற் விமானத்தின் இயந்திரம் பற்றிய தகவல்களை இரசியா இன்னும் வெளிவிடவில்லை. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சம் புலப்படாத்தன்மை (Stealth) ஆகும். மேம்பட்ட எந்திரத்தால் மட்டுமே விமானத்தின் புலப்படாத்தன்மை உறுதி செய்யப்படும். மேலும் எஸ்-யூ-75 செக்மேற் விமானத்தின் பின்புறத்தை வடிவமைக்கும் போது உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு சில முக்கிய அம்சங்கள் தவறவிடப்பட்ட படியால் அதன் பின்புறம் எதிரியின் ரடாரகளுக்கு இலகுவில் புலப்படக்கூடியதாக இருக்கும் எனவும் மேற்கு நாட்டினர் குற்றம் சுமத்துகின்றனர். 25மில்லியன் டொலர்களுக்கு  ஓர் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்ய முடியாது எனவும் அவர்கள் கருதுகின்றனர். 

2020-ம் ஆண்டே அமெரிக்கா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிவிட்டது. பிரித்தானியா, சுவீடன். இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து தமது ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் இரசியாவின் எஸ்-யூ-75 செக்மேற் (SU-75 Checkmate) தாக்குப் பிடிக்க வேண்டும்.

Thursday, 29 July 2021

தியாகோ காசியா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

  


இந்து சமுத்திரத்தின் நடுவில் பூ மத்திய ரேகைக்கு சற்று தெற்காக உள்ள 58 பவளத் தீவுகளை பிரித்தானியா 1965 -ம் ஆண்டு மொரீசியஸிடமீருந்தும் சீசெல்ஸிடமிருந்தும் அபகரித்தது. பிரித்தானியா இன்றுவரை வைத்திருக்கும் அந்த 58 பவழத்தீவுகளில் ஒன்றுதான் தியாகோ காசியா. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்த குத்தகையின் அடிப்படையில் அங்கிருக்கும் அமெரிக்கப் படைத்தளம் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் பிராந்திய ஆதிக்கத்திற்கு முக்கியமான ஒன்றாகும். அத்தீவை அமெரிக்கப்படையினர் “சுதந்திரத்தின் காலடிச்” சுவடு என அழைக்கின்றனர். பிரித்தானியர் தமது 58 பவழத்தீவுகளையும் பிரித்தானிய இந்துமாக்கடல் நிலப்பரப்பு என்கின்றனர். அதன் உண்மையான உரிமையாளர்களான மொறீசியஸ் நாட்டவர்கள் அதை சாகோஸ் தீவுக் கூட்டம் என்கின்றனர்.

பிரித்தானியாவின் பச்சைப் பொய்

நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 1814இல் பிரான்ஸும் பிரித்தானியாவும் செய்த பரிஸ் ஒப்பந்தப்படி சாகோஸ் தீவுக் கூட்டம் பிரித்தானியாவின் வசமானது. பிரித்தானியா மொறீசியஸுக்கு சுதந்திரம் வழங்கும் போது சாகோஸ் தீவுக்கூட்டத்தை பிரித்து தனதாக்கிக் கொண்டது, அதற்காக நான்கு மில்லியன் பவுண்களை மொறீசியஸுக்கு பிரித்தானியா வழங்கியது. அதில் ஒரு பவழத் தீவான தியாகோ காசியாவில் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு அம்மண்ணின் ஆதி மக்களான சாகோசியர் குடியிருந்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து பிரித்தானியா வெளியேற்றி சூழ உள்ள நாடுகளில் வலுக்கட்டாயமாக கொண்டு போய் கரையிறக்கியது. அதில் பெற்றோரை ஒரு தீவிலும் பிள்ளைகளை வேறு தீவிலும் தரையிறக்கியது. அத்தீவு முற்றாக கடலுக்குள் அமிழ்ந்துவிடப் போவதாக பிரித்தானியா ஒரு பச்சைப் பொய்யையும் அவிழ்த்துவிட்டது. பிரித்தானியால் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்து மீண்டும் இணைவதற்கு இருபது ஆண்டுகள் எடுத்தன

தியாகோ காசியா தீவு பதினேழு சதுர மைல் நிலப்பரப்பு கொண்டது. ஆனால் அமெரிக்காவின் படைத்துறைக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்காவின் கடல்சார் படையினரின் எதிர்பாராத சூழல்களைக் சாமாளிக்க என உருவாக்கப் பட்ட பிரிவினரின் பெரும்பகுதியினர் தியாகோ காசியாவில் நிலை கொண்டுள்ளனர். அங்கு பல தொலைதூரத் தாக்குதல் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன

மொறீசியஸ் இந்திய உறவு

மொறீசியஸின் மக்கள் தொகையில் இந்தியாவில் இருந்து சென்ற இந்துக்களின் வம்சாவழியினரே பெரும்பான்மையினர். மொறீசியஸில் படைத்தளம்அமைக்க சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டன. ஆனால் 2015-ம் ஆண்டு மொறீசியஸின் அகாலிகா தீவில் இந்தியாவின் வான்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டது. மொறீசியஸில் சீனாவினதும் இந்தியாவினதும் முதலீடுகள் அவசியம் என அந்நாட்டு ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். 2017-ம் ஆண்டு பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியா தனது நட்பு நாடான மொறீசியஸ் தியாகோ காசியாமீதான பிரித்தானியாவின் உரிமை தொடர்பான தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். அதை இந்தியா நிராகரித்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மொறீசியஸை தனது பக்கம் இழுக்க சீனா தொடர்ந்து முயற்ச்சித்துக் கொண்டிருக்கின்றது. மற்றது பனிப்போர் காலத்தில் இருந்தே தியாகோ காசியாவில் அமெரிக்கப் படைகள் இருப்பதை இந்தியா எதிர்த்து வந்துள்ளது. இந்து மாக்கடலில் அந்நிய கடற்படையினர் நிலை கொள்ளக் கூடாது என்பது இந்தியாவின் நீண்ட காலக் கொள்கை.

பன்னாட்டு நீதிமன்ற தீர்ப்பு

2019-ம் ஆண்டு பெப்ரவரி 25-ம் திகதி நீதிக்கான பன்னாட்டு மன்றம் பிரித்தானியா உடனடியாக 58 பவழத்தீவுகளையும் மொரிசீயஸுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு கூறியது. அதே ஆண்டு மே மாதம் 22-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நீதிக்கான பன்னாட்டு மன்றத்தின் தீர்ப்பை வரவேற்றதுடன் பிரித்தானியா அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற குறிப்பையும் நிறைவேற்றியது. அக்குறிப்பிற்கு ஆதரவாக 116 நாடுகள் வாக்களித்தன, 56 நாடுகள் வாக்களிக்கிப்பில் கலந்து கொள்ளவில்லை, பிரித்தானியா, அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஹங்கேரி, இஸ்ரேல், மாலைதீவு ஆகிய ஆறு நாடுகள் மட்டும் எதிர்த்து வாக்களித்தன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் குறிப்பு பிரித்தானியாவைக் கட்டுபடுத்த முடியாத வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிக்கான பன்னாட்டு மன்றம் தனது தீர்ப்பில் 1968-ம் ஆண்டு பிரித்தானியா மொறீசியஸுக்கு சுதந்திரம் வழங்கிய போது சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதனால் பன்னாட்டுச் சட்டம் மீறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐநா பொதுச்சபையின் தீர்மானத்தை பிரித்தானியா முற்றாக நிராகரித்து விட்டது.

விதிகளின் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விகளின் அடிப்படையினால் பன்னாட்டு ஒழுங்கை (Rule Based International Order) வலியுறுத்துபவர். அதன்படி ஐநா சபை, அதன் துணை அமைப்புகள், பன்னாட்டு வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புகளின் விதிப்படி உலக நாடுகள் செயற்பட வேண்டும். நீதிக்கான பன்னாட்டு மன்றத்தின் தீர்ப்பை பிரித்தானியா நிராகரித்து விட்டது. அமெரிக்கா பெரும் எதிர்ப்பை காட்டவில்லை. ஆனால் தீர்ப்பை மதித்து அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என அமெரிக்கா அறிவிக்கப் போவதில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன பன்னாட்டு அரங்குகளில் விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு பற்றிப் போதிக்க முடியாது. ஆனால் எதிலும் மாற்றி யோசிக்கும் திறமையுள்ள அமெரிக்கா மொறீசியஸுடன் இரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. மொறீசியஸ் அமெரிக்கப்படைகள் தொடர்ந்து இருப்பதை விரும்புகின்றது. ஆனால் அமெரிக்கா எதிர் காலத்தில் மொறீசியஸில் ஆட்சிக்கு வருபவர்கள் அதையே கடைப்பிடிப்பார்களா என்பதும் ஐயமே.

அமெரிக்க இந்திய உறவு

அமெரிக்கா தன் ஆசிய பசுபிக் கொள்கையை இந்தோ பசுபிக் கொள்கை என மாற்றிக் கொண்டது இந்தியாவை தன் இந்தோ பசுபிக் பாதுகாப்பு பங்களியாக இணைத்துக் கொள்ளவே. சீனா இந்து மாக்கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தாமல் தடுப்பதற்கு அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியம். அமெரிக்காவை தியாகோ காசியாவில் இருந்து வெளியேற்றினால் அது தொடர்ச்சியாக நடுநிலையாக இருக்குமா என்பது ஐயமே. மொறீசியஸில் சீனாவுக்கு சார்பாக ஓர் அரசு அமைந்து அது தியாகோ காசியாவில் சீனப் படைத்தளம் அமைய வாய்ப்புண்டு. அது இந்தியாவிற்கு மிக அச்சுறுத்தலாக அமையும். 2016-ம் ஆண்டு இண்டியாவும் அமெரிக்காவும் செய்து கொண்ட Logistics Exchange Memorandam Agreement (LEMOA)இன் படி தேவை ஏற்படின் இந்தியாவின் படைத்தளங்களை அமெரிக்காவும் அமெரிக்கப்படைத்தளங்களை இந்தியாவும் பயன்படுத்தலாம். அதன்படி தியாகோ காசியப் படைத்தளத்தை தேவை ஏற்படின் இந்தியாவும் பயன்படுத்தலாம். இன்று சீனா பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் அமெரிக்காவிற்கு சவாலாக வளர்ந்திருப்பாதால் சீனாவை அடக்க அமெரிக்க முயல்கின்றது அதே போல் நாளை இந்தியாவும் வளர்ந்து நிற்கையில் இன்று இந்தியாவை பங்காளியாக விரும்பும் அமெரிக்கா பகையாளியாகலாம். இதை நன்குணர்ந்த இந்தியா தியாகோ காசியா தொடர்பான தன் நிலைப்பாட்டை கவனமாகவே எடுக்கும். தியாகோ காசியா தொடர்பாக மொறீசியஸ் எடுத்த அரசுறவியல் நடவடிக்கைகள் இந்தியாவின் ஆதரவினால் வெற்றி பெற்றன.

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா ஆகியவற்றின் இடையே உள்ள கோந்திரோபாய நகர்வுகள் தியாகோ காசியாவின் தலைவிதியை முடிய்வு செய்யும்

 

Wednesday, 28 July 2021

கியூபாவில் மக்கள் போராட்டம். வெற்றியளிக்குமா?

  


ஜுலை – 11-ம் திகதி கியூபாவில் பல் வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் ஆரம்பித்தது. இது 1959இல் நடந்த பொதுவிடமைப் புரட்சிக்குப் பின்னர் நடக்கும் பாரிய போராட்டமாகும். பிடல் கஸ்ரோ, ராஉல் காஸ்ட்ரோ ஆகியோரின் ஆட்சிக்குப் பின்னர் கியூப அதிபராக வந்த மிகுஏல் டயஸ் கனல் ஆட்சியில் நடக்கும் மக்கள் போராட்டத்தை பொதுவுடமைப் புரட்சி எதிர்ப்பு இயக்கம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கூலிப்படையினர் எனவும் முத்திரை குத்தியுள்ளார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரே நேரத்தில் பெரும் மக்கள் போராட்டம் வெடித்தமை கியூப வரலாற்றில் முன்பு நடந்ததில்லை.

எந்தையர் நாடு?

உலகில் இன்றும் பொதுவுடமைவாத ஆட்சி நிலவும் ஒரு சில நாடுகளில் கியூபாவும் ஒன்றாகும். கியூபாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்தபோது “எந்தையர் நாடு அல்லது இறப்பு” என்ற சுலோகத்தை புரட்சியாளர்கள் முன்வைத்தனர். இப்போது கிளர்ச்சி செய்பவர்கள் “எந்தையர் நாடும் வாழ்வும்” என்ற சுலோகத்தை முன்வைக்கின்றனர். சர்வாதிகாரம் ஒழிக சுதந்திரம் மலர்க என்பதும் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. தொலைக்காட்சியில் தோன்றிய கியூப அதிபர் மிகுஏல் டயஸ் கியூபா புரட்சியாளர்களுக்கு சொந்தமானது என முழங்கினார்.

1994இல் நடந்த கிளர்ச்சி

1990இல் சோவியத் ஒன்றியம் நெருக்கடிகளைச் சந்தித்த பின்னர் கியூபாவிற்கு அங்கிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் முற்றாக இல்லாமற் போயின. 1989இல் இருந்து 1993வரை கியூபாவின் மொத்த தேசிய உற்பத்தி 35% வீழ்ச்சியடைந்திருந்தது. அப்போது உருவான பொருளாதார நெருக்கடியால் 1994இல் மக்கள் கிளர்ச்சி செய்தபோது அது இரும்புக் கரங்களால் நொருக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கியூபா தனது சமூக நலக் கொடுப்பனவுகளுக்கான செலவைக் கட்டுப்படுத்தியது. அதிகரித்த சமூக நலக் கொண்டுப்பனவுகள் மக்களிடையே வேலைசெய்யும் விருப்பத்தை குறைத்து விட்டதாக கியூப ஆட்சியாளர்கள் கருதினர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் பல பொதுவுடமை ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மேற்கு நாடுகளில் உள்ளது போன்ற ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால் கியூபாவின் பொதுவுடமை ஆட்சி இன்றுவரை தாக்கிப் பிடிக்கின்றது.

அமெரிக்க பொருளாதாரத் தடை

பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா வாழ் கியூபர்களின் ஆதரவை அவரது மக்களாட்சிக் கட்சிக்கு ஆதரவு தேடும் முகமாக கியூபா மீதான சில பொருளாதாரத் தடைகள் தளர்த்தப் பட்டன. டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா கியூபா மீதான பொருளாதாரத் தடை மேலும் இறுக்கப்பட்டது. ஜோ பைடன் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. 2021 ஜனவரியில் கியூப நாணயத்தின் பெறுமதி குறைக்கப்பட்டது. கியூபாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என கியூப அதிபர் மிகுஏல் டயஸ் குற்றம் சுமத்தினார்.

சிறந்த சமூக நலச்சேவைகள் கொண்ட கியூபா

2020இல் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் கியூப பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. உல்லாசப் பயணிகளின் வருகை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. வெளிநாடுகளில் வாழும் கியூபர்கள் அனுப்பும் பண வருகையும் வீழ்ச்சியடைந்தது. வளர்முக நாடுகளில் சிறந்த சமூக நலன்சார் திட்டங்களை பிடல் காஸ்ட்ரோ ஆரம்பித்து வைத்தார். அரிசி, பாண், பால், முட்டை, அவரைகள், போன்ற உணவுவகைகள் உலகில் மற்ற நாடுகளிலும் பார்க்க குறைந்த விலையில் கியூப மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. அதனால் மக்களின் அடிப்படைத்தேவைகள் அரசால் நிறைவேற்றப்பட்டது. 2017-ம் ஆண்டு கியூபா சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆய்வாளர் மரியா கிரேசியா ஜியாமரினாரோ கியூபாவின் சமூக நலத் திட்டங்களைப் பாராட்டியிருந்தார். கியூபாவின் இலவச மருத்துவ சேவை, இலவச கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை இட்டு அவர் தனது திருப்தியையும் வெளியிட்டிருந்தார். சிறந்த மருத்துவ சேவையைக் கொண்ட கியூபா கொவிட்-19 பெருந்தொற்றை கையாள முடியாமல் தடுமாறியது. நோயாளிகள் மருத்துவ மனைகளில் இடமில்லாத படியால் வீடுகளில் இருந்தே இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்கா எப்படிக் கையாளும்?

அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவை மற்றும் மூதவையின் உறுப்பினர்கள் 32பேர் கையொப்பம் இட்ட முன்மொழிவில் ஜூலை-11 கியூப ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்ததுடன் கியூப மக்கள் மீண்டும் இணையப் பாவனை கிடைப்பதற்கான வழிகளை உறுதி செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

இரும்புக்கரம்

கியூப அரசு படைத்துறையினர், காவற்றுறையினர் போன்றோரை மட்டுமல்லாது தனது ஆதரவாளர்களையும் போராட்டக்காரர்களுக்கு எதிராக களமிறக்கியது. போராட்டக்காரர்கள் குண்டாதடிகள் ஏந்திய குண்டர்களால் மோசமாக தாக்கப்பட்டனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் இறப்பர் குண்டுகளும் ஆர்ப்பாட்டக்கார ர்களை அடக்க பெருமளவு பாவிக்கப்பட்டன. பல இடங்களில் ஆர்ப்பாட்டக்கார ர்களிலும் பார்க்க அவர்களை அடக்க வந்தவர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கியூபாவில் இடை நிறுத்தப்பட்டிருக்கும் இணையவெளிச் சேவைகளை எப்படி மீண்டும் கிடைக்கச் செய்வது தொடர்பாக தான் ஆய்வுகள் செய்வதாகச் சொன்னார். கியூப அரசுக்கு எதிரான கடுமையான கண்டனங்களோ அல்லது கிளர்ச்சியாளர்களுகான பகிரங்க ஆதரவோ உதவியோ இன்னும் அமெரிக்காவில் இருந்து கிளம்பவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்கக் கைக் கூலிகளாக சித்தரிப்பதை அது இலகுவாக்கும் என அமெரிக்க ஆட்சியாளர்கள் கருதலாம். நேட்டோ நாடுகளின் மாநாடு 2021இல் நடந்தபோது சர்வாதிகாரிகளுக்கு எதிராக பெருமளவு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது மத்திய அமெரிக்காவில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வாழும் கியூபர்கள் கியூப கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

கியூப அரசின் சிறிய விட்டுக்கொடுப்பு

ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் பரவிய நிலையில் கியூப அதிபர் மிகுஏல் டயஸ் வெளிநாடுகளில் இருந்து கியூபாவிற்கு வருபவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் மருந்து வகைகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார். சுங்க வரி கொடுக்காமல் எந்த அளவு உணவையோ மருந்தையோ கியூபாவிற்கு செல்பவர்கள் எடுத்துச் செல்ல முடியும். கொவிட்-19 தொற்று நோயைத் தடுக்க கியூபாவிற்கு வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இத்தடை நீக்கம் கியூபாவிற்கு வரும் உணவுகளை பெருமளவு அதிகரிக்க மாட்டாது.

வெனிசுவேலாவில் 2019 ஏப்ரலில் ஆரம்பித்த பெரும் மக்கள் போராட்டம் இன்றுவரை அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. ஹொங் கொங்கில் மக்கள் செய்த போராட்டத்தை சீன அரசு வெற்றிகரமாக முறியடித்தது.

Tuesday, 27 July 2021

மோடியா யோகியா பாஜகவின் உட்பூசல்

  




2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்திய நாடாளமன்றத் தேர்தலில் இந்தியாவின் தலைமை அமைச்சராக மோடி தொடர்வாரா அல்லது உத்தரப் பிரதேச (உ.பி) மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மோடியை ஓரம் கட்டி விடுவாரா என்பதை 2022-ம் ஆண்டின் முற்பகுதியில் நடக்கவிருக்கும் உத்திரப் பிரதேச சட்ட மன்றத் தேர்தல் முடிவு செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. கொவிட்-19 தொற்று நோயை தலைமை அமைச்சராக மோடியும் மாநில முதலமைச்சராக யோகியும் மோசமாக கையாண்டு கொண்டிருப்பவர்கள். புது டில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம்.

முக்கியத்துவம் வாய்ந்த உபி

2014-ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளமன்றத்தின் மக்களவைக்கான (லோக் சபா) தேர்தலில் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உத்தரப் பிரதேசத்தின் வர்ணாசி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் வதோதரா தொகுதியில் பெற்ற வெற்றியை தலைமுழுகி விட்டு உத்தரப் பிரதேச மகனாக தன்னை நிலை நிறுத்தினார். 2019இல் நடந்த தேர்தலிலும் வர்ணாசியில் போடியிட்டு வெற்றி பெற்றார். கஷ்மீரைச் சேர்ந்த நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட உத்தரப் பிரதேசத்தில் இருந்தே அரசியல் செயற்பாடுகளை மேற் கொள்கின்றனர். ஜவகர் லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சர்களாகினார்கள். உ.பி எண்பது உறுப்பினர்களை இந்தியாவின் மக்களவைக்கு தெரிவு செய்கின்றது.

மோடியும் யோகியும்

மோடி திருமணமாகி துறவறம் பூண்டவர். யோகி திருமணமாகாமல் துறவறம் பூண்டு காவியுடை தரித்தவர். மோடி சிறிய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர். யோகி இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். மோடி பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். யோகி உயர் சாதி பிராமணர். இந்தியாவின் வரலாற்றின் பெரும்பகுதியில் தம்மை பிராமணராகச் சொல்பவர்களே தலைமை அமைச்சர்களாக இருந்துள்ளனர். உ.பியின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தெரிவான பின்னர் அவர் புது டில்லியின் தலைமை அமைச்சர் பதவிக்கு குறிவைக்கலாம் என ஐயம் கொண்ட மோடி தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான அரவிந்த் குமார் ஷர்மா என்பவரை குஜராத்தில் இருந்து உ.பியிற்கு கொண்டு போய் அவரை உ.பி சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக நியமித்தார். அத்துடன் உ.பி மாநில பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) துணைத்தலைவராகவும் ஆக்கினார் மோடி. அத்துடன் நிற்காமல் அரவிந்த் குமார் ஷர்மாவை உ.பியின் துணை முதல்வராகவும் ஆக்க முயன்றார். அதற்கு யோகி ஆதித்யநாத் எதிர்ப்பு காட்டி மறுத்த போது மோடி – யோகி மோதல் உருவானது.

சாதிப் போட்டி நிறைந்த உத்தரப் பிரதேசம்

தமிழ்நாட்டு சட்ட மன்றத் தேர்தலில் இலவசங்கள் முக்கியத்துவம் பெறுவது போல உ.பி சட்ட மன்றத் தேர்தலில் சாதி முக்கியத்துவம் பெறுகின்றது. தேசியக் கட்சிகள் சாதியை அடிப்படையாக வைத்தே தெரிவு செய்கின்றன. சாதியை முன்வைத்தே மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றோர் தமது கட்சியை நடத்தி வெற்றி பெறுகின்றனர். பத்து விழுக்காடு பிராமணர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரு வெற்றி ஈட்டியதற்கு மோடி-அமித் ஷா வகுத்த உபாயங்களே காரணமாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியை அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதக் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தடுத்தார் அமித் ஷா. பார்ப்பனர்களின் வாக்குகள் காங்கிரசுக் கட்சிக்கு போகாமல் இருக்கவே பார்ப்பனரான யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

2022 சட்ட மன்றத் தேர்தல் வேறு பிரச்சனைகளைக் கொண்டது

2022இன் முற்பகுதியில் நடக்க விருக்கும் உ.பி சட்ட மன்றத் தேர்தலில் சாதிப் போட்டி மட்டும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை. யோகி ஆதித்யநாத் கொவிட்-19 தொற்று நோயைக் கையாண்ட விதம் உலகெங்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. புனித நதியான கங்கையில் தொற்று நோயால் இறந்தவர்களின் உடலங்கள் வீசப்பட்டமை உலக அரங்கில் இந்தியாவின் பிம்பத்தை பெரிதும் பாதித்தது. அத்துடன் உ.பியில் ஆளும் பாஜக கட்சிக்குள் பெரிய உட் பூசல்களையும் உருவாக்கியுள்ளது. இதனால் 2021 மே மாதம் நடந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2022இல் நடக்கவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் அவரது தலைமை அமைச்சர் பதவி மீதான விருப்பம் மேலும் தீவிரமடையும்.

தன் புகழை விட்டுக் கொடா மோடி

தனது புகழிலிலும் மக்களிடையே உள்ள தனது விம்பத்திலும் அதிக கவனம் செலுத்தும் மோடி உ.பியில் அதிக கவனம் செலுத்தவுள்ளார். அதனால் மாதம் தோறும் உ.பியிற்கு பயணம் செய்து பல அரச திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஜூலை 15-ம் திகதி உ.பி சென்ற மோடி அங்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்கும் பணியை ஆரம்பித்து வைத்துள்ளார். பாஜகவின் உ.பி சட்ட மன்ற உறுப்பினர்கள் பலரிடையே முதல்வர் யோகி தமது வேண்டுகோள்களுக்கு செவி சாய்ப்பதில்லை என்றும் அவர் தம்மிலும் பார்க்க அரச அதிகாரிகளிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கருத்து நிலவுகின்றது. அதையும் மோடி தனக்கு சாதகமாக்க முயலலாம். பல சட்ட மன்ற உறுப்பினர்கள் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் உயர் மட்டத் தலைவர்களிடம் யோகி மீது தமக்கு இருக்கும் அதிருப்தியை எடுத்துரைத்துள்ளனர்.

2024 தலைமை அமைச்சர் வேட்பாளர் யார்?

நரேந்திர மோடியும் நடாளவிய அடிப்படையில் வெறுப்புக்கு உரியவராக மாறியுள்ளார். ஆனாலும் காங்கிரசுக் கட்சியின் தலைமை மீதான நம்பிக்கையின்மை மோடியை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 2021 ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி மோடி மீதான மக்களின் விருப்பம் 22விழுக்காடு குறைந்தாலும் மோடியை இப்போதும் 63விழுக்காடு இந்தியர்கள் விரும்புகின்றார்கள். மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் மோடி தீவிர பரப்புரை செய்தும் அங்கு பாஜக தோல்வியடைந்ததுடன் அங்கு வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியால் மானபங்கப்படுத்தப் பட்டார். தேசியவாத காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் பாஜகவிற்கும் சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கும் மாற்றாக ஒரு மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது வீட்டில் நடந்த கூட்டத்தில் பல் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்னாள் நீதியரசர்கள் போன்ற பல பிர்முகர்களும் கலந்து கொண்டனர். ஆனால் சிவசேனா, சமாஜ்வாத கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, திமுக போன்ற முக்கிய பிராந்தியக் கட்சிகள் பங்கு பெறவில்லை. சோனியாவின் காங்கிரசையும் இணைத்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்து அங்கு பரவலாக முன்வைக்கப்பட்டது. அதனால் 2024 தேர்தலில் பாஜக பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டும். யோகி ஆதித்யநாத் தாழ்த்தப் பட்ட சமூகத்தினராலும் மாட்டிறைச்சி உண்பவர்களாலும் கடுமையாக வெறுக்கப்படுபவர். அவர் இந்தியாவின் தலைமை அமைச்சராவது உலகில் இந்தியாவின் விம்பத்தை பெரிதும் பாதுக்கும். 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் நாடளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மோடியே தலைமை அமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புண்டு. மோடியின் செல்வாக்கு மேலும் மோசமடைந்தால் மாற்று வேட்பாளராக நிதின் கட்காரியை நிறுத்தப்படலாம்.

Monday, 28 June 2021

நேட்டோ புதிய திசையில் பயணிக்குமா?

  


1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும்ம வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் தற்போது ஐரோப்பியாவினதும் வட அமெரிக்காவினதும் 30 நாடுகளின் ஒரு பில்லியன் மக்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமையைப் பரப்பல் என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்து சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சீனாவினதும் இரசியாவினதும் ஒத்துழைப்பு என்றுமில்லாத அளவு வளர்ந்துள்ள நிலையில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு பெல்ஜியத் தலைநகரான பிரஸல்ஸ்ஸில் 2021 ஜூன் மாதம் 14-ம் திகதி நடைபெற்றது. தற்போதைய உலகச் சூழலுக்கு ஏற்ப நேட்டோ தன்னை மாற்றிக் கொள்ளும் என்றார் நேட்டோவின் தலைமை செயலர்.

அமெரிக்காவின் செல்வமும் பொதுவுடமைவாதமும்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதிமறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. பொதுவுடமைவாதம் உலகெங்கும் பரவினால் அது அமெரிக்காவின் செல்வத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் நேட்டோ உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. தமக்கு வேண்டாதவர்களான சதாம் ஹுசேய்ன், மும்மர் கடாஃபி போன்றவர்களை ஆட்சியில் இருந்து நேட்டோ அகற்றியது. இவர்கள் இருவரும் உலக நாணயமாக அமெரிக்க டொலர் இருப்பதை எதிர்த்தவர்கள்.

மேம்படுத்திய முன்னோக்கிய இருப்பு (Enhanced Forward Presence)

இரசிய எல்லையில் உள்ள நோட்டோ நாடுகளில் நேட்டோ நாடுகளின் படைகளை சிறிய அளவில் நிறுத்துதல் மேபடுத்திய முன்னோக்கிய இருப்பு எனப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியா ஆகக் கூடிய அளவில் 894 படையினரை நிறுத்தியுள்ளது. பெல்ஜியம் ஒருவரை மட்டும் நிறுத்தியுள்ளது. எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகள் இரசிய எல்லையில் உள்ள சிறிய நாடுகளாகும். அவற்ற ஒரு சில மணித்தியாலங்களில் இரசியாவால் கைப்பற்ற முடியும். இம்மூன்று நேட்டோ நாடுகளிலும் கணிசமான அளவு இரசியர்கள் சோவியத் ஒன்றிய காலத்தில் குடியேறி வசிக்கின்றனர். அதனால் கிறிமியாவில் நடந்த து இந்த நாடுகளிலும் நடக்கலாம் என்ற அச்சம் 2014-ம் ஆண்டின் பின்னார் போலாந்து, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உருவாகியது.

 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் போலாந்து, ஹங்கேரி, அல்பேனியா போன்ற நாடுகளும் சோவியத் ஒன்றிய காலத்து கசப்பான அனுபவங்களை இன்னும் மறக்கவில்லை.

வளைக்க முயன்ற நேட்டோவும் வளைய மறுத்த இரசியாவும்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோவில் இணைத்து ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை விலக்கி படைத்துறைச் செலவைக் குறைக்கும் திட்டமும் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. யூக்கோஸ்லாவியாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான போக்கன் போர் அந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டது. பராக் ஒபாமா ஐரோப்பாவில் அமைதி நிலவுகின்றது என இரு படைப்பிரிவுகளை ஐரோப்பாவில் இருந்து அகற்றினார். ஆனால் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் அவ்விரு படைப்பிரிவுகளையும் மீள அனுப்பினார்.

உலக ஆதிக்கத்தில் உறுதியாக நிற்கும் இரசியா

2021 ஜூன் 25-ம் திகதி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் இரசியாவின் இரண்டு மிக்-31 போர்விமானங்கள் மத்திய தரைக்கடலில் போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டன. அதேவேளையில் பிரித்தானியாவின் HMS QUEEN ELIZABETH விமானம் தாங்கிக் கப்பL அமெரிக்க தயாரிப்பு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35களுடன் மத்திய தரைக்கடலில் ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான படைநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. உலகின் அதிவேக விமானங்களில் ஒன்றான மிக்-31 போர்விமானங்கள் தாங்கிச் சென்ற KNZHAL ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் வானில் இருந்து ஏவக்கூடிய எறியியல் ஏவுகணைகளாகும் (BALLISTIC MISSILES). இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்வீச்சினால் மட்டுமே அழிக்க முடியும். பிரித்தானியாவின் கடற்படைகளிடம் அவை இருப்பதாக தகவல் இல்லை. மத்தியதரைக்கடலில் இது நடப்பதற்கு இரண்டு நாட்களின் முன்னர் கருங்கடலில் பிரித்தானியாவின் HMS Defender நாசகாரிப் போர்க்கப்பலுக்கும் இரசிய விமானப்படைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது. இரசியக் கடற் பிராந்தியத்தில் பிரித்தானிய நாசகாரி நுழைய முற்பட்ட போது அதன் மீது எச்சரிக்கை வேட்டுக்களும் அதன் பாதையில் குண்டுகளும் வீசப்பட்டதாக இரசியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து தவறுதலாக தெருவோரத்தில் விடப்பட்ட இரகசிய தகவல்கள் அடங்கிய பத்திரங்களை கண்ட ஒருவர் அதை பிபிசியிடம் ஒப்படைத்தார். அதன் படி இரசியாவின் எதிர்வினைகளை அறியும் பொருட்டு கருங்கடலிற்கு பிரித்தானிய நாசகாரிக் கப்பல்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. இந்த இரண்டு சம்பவங்களும் இரசியாவின் உறுதிப்பாட்டை உரத்துப் பறைசாற்றுகின்றன. அமெரிக்காவின் ஆறவது கடற்படைப் பிரிவு உட்பட்ட நேட்டோவின் கடற்படைப் பிரிவான Maritime Group-2 உக்ரேனியக் கடற்படையினரும் இணைந்து ஜுன் 28 முதல் ஜூலை 10 வரை கிறிமியாவை ஒட்டிய கடற்பரப்பில் போர் பயிற்ச்சிகளை செய்கின்றன. இதில் முப்பது நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரம் படையினர், 32 போர்க்கப்பல்கள், 40 போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

நேட்டோவும் சீனாவும்

2019-ம் ஆண்டு நடந்த நேட்டோவின் மாநாட்டில் சீனாவுடன் ஒரு படைக்கலக் குறைப்பு ஒப்பந்தம் செய்வதாக முடிவெடுக்கப் பட்டது. ஆனால் அது தொடர்பான நகர்வுகள் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. 2021இல் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் மிக்க நாடாக கருதப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரை சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் பாயக்கூடியவையாக இருப்பதால் சீனாவை இட்ட கரிசனை அந்நாடுகளிடையே உருவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு இலண்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் சீனாவின் பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளமை பற்றி ஆராயப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் அதிகரிப்பது பற்றியும் ஆராயப்பட்டது. 2021 பெல்ஜியாவின் தலைநகர் பிரஸஸ்ஸில் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் நேட்டோ

மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சிறந்த நட்பு நாடுகளாக தென் கொரியா, ஜப்பான், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் நேட்டோவைப் பொறுத்தவரை சீனாவைக் கையாள்வதற்கான சிறந்த சொத்துக்களாகும். இந்தியாவை ஒரு வழிக்கு கொண்டு வருவது சிரமம் என்பதை மேற்கு நாடுகள் உணர்ந்துள்ளன. அதே வேளை சீனாவின் சவால்களைச் சமாளிக்க இந்தியாவிற்கு மேற்கு நாடுகளின் நட்பு அவசியமாகின்றது. சீன இரசிய உறவின் வளர்ச்சி தவிர்க்க முடியாது என்ற நிலையில் இந்தியா நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்புரிமை உள்ள நாடாக இணையாமல் நேட்டோவின் கேந்திரோபாய பங்காளியாக இணைய வாய்ப்புண்டு.

வட துருவத்தில் உருகும் பனியால் உருவாகும் கடற்பாதையை இரசியா தனது கட்டுப்பாட்டிலும் தென் சீனக் கடலை சீனா தனது கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முனைவது உலகெங்கும் சுதந்திரமான கடற்போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என பல மேற்கு நாடுகளின் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றார்கள். சீனாவயும் இரசியாவையும் முக்கிய போட்டி நாடுகளாகவும் தென் கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, ஒஸ்ரேலியா, வியட்நாம், தைவான், இந்தோனேசியா ஆகிய நாடுகளை பங்காளிகளாகவும் கொண்டு நேட்டோ தனது செயற்பாட்டை அத்லாண்டிக் மாக்கடலில் மட்டுப்படுத்தாமல் பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், வட கடல் ஆகியவற்றையும் உள்ளடக்கிய உலகளாவிய படைத்துறைக் கூட்டமைப்பாக நேட்டோ உருவெடுக்கலாம்.வ்

Monday, 7 June 2021

புதிய பரிமாணம் பெறும் வான் போர்

  

ஆளில்லா விமான தொழில்நுட்ப வளர்ச்சி போர்விமான உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கின்றது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இயந்திர கற்கை (Machine learning) ஆகியவற்றை விமானப் பறப்பில் பாவிக்கும் போதும் இணையவெளி போர் முறைமையை போர் விமானங்களில் உள்ளடக்கும் போதும் வான் போர் முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போர்விமானம் தரையில் இருந்து கிளம்பும் போதும் பின்னர் தரையிறங்கும் போதும் மட்டும் விமானியின் செயற்பாடுகள் விமானத்திற்கு இப்போது தேவைப்படுகின்றது. வானில் கிளம்பிய பின்னர் விமானம் தானாகவே நிலைமையை உணர்ந்து செயற்படுகின்றது. விமானி குண்டு வீச்சுக்களில் அதிக கவனம் இப்போது செலுத்த முடியும்.

ஆறு தலைமுறைகள்

போர்விமானங்கள் இதுவரை ஆறு தலைமுறைகளைக் கண்டுள்ளன. முதலில் விமானங்களின் வேகங்களை அடிப்படையாக வைத்து புதிய தலைமுறைகள் உருவாகின. இரண்டாம் உலகப் போரில் பாவிக்கப்பட்ட முதலாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் பறப்பவை. 1953-1955 வரை நடந்த கொரியப் போரில் பாவிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியின் வேகத்தில் பறக்கக்கூடியவை. அவற்றால் வானில் இருந்து மற்ற போர்விமானங்கள் மீது ஏவுகணைகளை ஏவ முடியும். மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடியவை. அவற்றில் சிறந்த கதுவிகள் (ரடார்கள்) பொருத்தப்பட்டிருக்கும். தாக்குதல் விமானம், குண்டு விச்சு விமானம், வானாதிக்க விமானம், வேவு பார்க்கும் விமானம், கண்காணிப்பு விமானம் என தனித்தனியாக போர்விமானங்கள் உற்பத்தி செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் இவை யாவற்றையும் ஒரு விமானம் செய்யக்கூடியவையாக உருவாக்கப் பட்டன. அவை பற்பணி (Multi-role) போர்விமானங்கள் என அழைக்கப்பட்டன அவையே நான்காம் தலைமுறைப் போர்விமாங்கள். சென்ற நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளும் அவற்றில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பறப்புத்திறன், திசைதிருப்பும் திறன் போன்றவை தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டன. எதிரியின் கதுவிகளுக்கு (ரடார்களுக்கு) புலப்படாமல் எதிரியின் வான்பறப்பை ஊடறுத்துச் செல்லக் கூடிய F-117 போர்விமானங்கள் 1983-ம் ஆண்டளவில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து B-2 என்னும் புலப்படா விமானம் உருவாக்கப்பட்டது. சதாம் ஹுசேய்னுக்கு எதிராக அவை 1991இல் குண்டுகளை வீசிய போது அவை எங்கிருந்து வருகின்றன எப்படி வருகின்றன என உணர முடியாமல் இருந்தது. அதையிட்டு இரசியாவும் சீனாவும் அதிகம் கரிசனை கொண்டன. F-22 போர்விமாங்கள் முழுமையான புலப்படாத்தன்மையும் சிறந்த இலத்திரனியல் செயற்பாடும் கொண்டவையாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டன அவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமாங்களாகும். இப்போது பல நாடுகள் ஆறாம் தலைமுறைப் போர்விமாங்களை உருவாக்குகின்றன. அதிலும் அமெரிக்கா ஒரு படி முன்னேறி 2020-ம் ஆண்டு தனது ஆறாம் தலைமுறைப் போர் விமானத்தை உருவாக்கியுள்ளது. இரசியா, சீனா, இந்தியா, பிரித்தானியா, துருக்கி போன்ற நாடுகள் ஆறாம் தலைமுறைப் போர்விமாங்களை உற்பத்தி செய்யும் முயற்ச்சியில் இறங்கியுள்ளன.

அமெரிக்காவ்ன் ஆறாம் தலைமுறை விமானம்

நாலாம் தலைமுறையையும் கைவிடாத அமெரிக்கா

அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள் எந்த ஒரு வான் சண்டையில் சுட்டு விழுத்தப்படாதவை எனற சாதனை படைத்தவை. 40 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்த விமானங்கள் இப்போது மேம்படுத்தப்பட்டு F-15EX என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றால் முப்பதினாயிரம் இறாத்தல் எடியுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்ல முடியும். நான்காம் தலைமுறையைச் சார்ந்த F-15EX போர் விமானங்களை இயக்குவது ஐந்தாம் தலைமுறை F-35 போர் விமானங்களை இயக்குவதிலும் பார்க்க மலிவானதாகும்.

பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

2018-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர் விமான உற்பத்தி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. விமான இயந்திர உற்பத்தியில் நீண்ட அனுபவம் கொண்ட பிரித்தானியா அமெரிக்காவின் F-35 போர் விமானங்களிற்கு தேவையான மென்பொருளை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகித்தது. அதனால் அடுத்த தலைமுறை விமானங்களுக்கு தேவையான இலத்திரனியல் போர்முறைமைகள உருவாக்குவதில் பிரித்தானியா உலகில் முன்னணியில் உள்ளது. Tempest எனப்படும் பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. மேலும் சில நட்பு நாடுகளை இந்த உற்பத்தியில் இணைத்தால் உற்பத்திச் செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் எப்பாகத்திலும் தாக்கக் கூடிய B-21 Raider


அமெரிக்கா 2022-ம் ஆண்டு களமிறக்கும் B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி எந்த எதிரியின் ரடார்களுக்கும் புலப்படாமல் உலகின் எந்தப் பாகத்திலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. திடீர்த்தாக்குதலாளி என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த வகை விமானங்கள் ஆறாம் தலைமுறையை சார்ந்தவை. Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மைசிறந்தswept-wing fighter பொறிமுறைபல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன.

இரசியாவின் ஐந்தாம்/ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்

இரசியாவின் எஸ்-யூ-35 அதன் முதலாவது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அதைத் தொடர்ந்து எஸ்-யூ-57 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை இரசியா உருவாக்கியது. நிதிப் பற்றாக்குறையால் அதிக அளவு எஸ்-யூ-57 உற்பத்தி செய்யப்படவில்லை என்கின்றனர் மேற்கு நாட்டு ஆய்வாளர்கள். ஆனால் இரசியா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானமான மிக்-41 போர்விமான ங்களை உற்பத்தி செய்யும் முயற்ச்சியில் இறங்கிவிட்டது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் 1. முழுமையான புலப்படாத் தன்மை. 2. மிகச்சிறந்த இலத்திரனியல் செயற்பாடு. 3. இணையவெளிப் போர் முறைமை, 4. லேசர் படைக்கலன்கள் 5. செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

சீனாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

விமான இயந்திர உற்பத்தி துறையில் பிந்தங்கியிருக்கும் சீனா உருவாக்கிய J-20 மற்றும் J-31 போர்விமானங்கள் முறையே அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர்விமானங்களின் தொழிநுட்பங்களை சீனா இணையவெளி வழியே திருடி உருவாக்கப் பட்டவை என அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்க்ப்படுகின்றன. அவற்றை சீன கடுமையாக மறுத்தாலும் அந்த சீனப் போர் விமானங்கள் இன்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் அல்ல என பல போரியல் நிபுணர்கள் சொல்கின்றனர். சீனா இப்போது இரசிய விஞ்ஞானிகளின் உதவியுடன் தனது ஆறம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.

களமிறங்கும் துருக்கி

இதுவரை உள்நாட்டில் பெரியா போர்விமானத்தை உற்பத்தி செய்யாத துருக்கியும் ஆறாம் தலைமுறைப் போர் விமான உற்பத்தியில் இறங்கியுள்ளது. ஆரம்பத்தில் துருக்கியின் ஆறாம் தலைமுறைப் போர் விமானத்திற்கு பிரித்தானியாவின் BAE நிறுவனம் இயந்திரம் வழங்குவதாக இருந்தது. அதன் உற்பத்தியில் தாமதம் ஏற்படும் என BAE அறிவித்ததால் துருக்கி உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. துருக்கியின் ஆளில்லாப் போர் விமானங்கள் 2020-ம் ஆண்டு நடந்த ஆர்மீனிய-அஜர்பைஜான் போரில் சிறப்பாக செயற்பட்டு பல இரசிய தயாரிப்பு தாங்கிகளை அழித்தபடியால் துருக்கிக்கு உள்நாட்டு உற்பத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால் ஆளில்லா போர்விமான இயந்திர உற்பத்திக்கும் முழுமையான புலப்படாத் தன்மை கொண்டா ஆறாம் தலைமுறை போர்விமான இயந்திர உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி மிகப் பாரியது.

ஒரு படி மேலே செல்லும் அமெரிக்கா தொடரும் சினா

நாம் இதுவரை பார்த்தவை வான்வெளியில் செயற்படும் விமானங்கள். அமெரிகாவின் X-37B எனப்படுவது விண்வெளியில் பூமியை சுற்றிப்பறக்க வல்லது. அமெரிக்கா உருவாக்கிய இந்த விமானம் இதுவரை இரகசியமான நான்கு மிக நீண்ட தூரப்பறப்புக்களை இனம்தெரியாத படைக்கலன்களுடன் மேற்கொண்டுள்ளது. இரசியப் படைத்துறை நிபுணர்கள் அவை அணுக்குண்டுகளை தாங்கிச் சென்றன என்கின்றார்கள். இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ முறியடிக்க இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டிருக்கலாம். 2019இல் அமெரிக்கா தனது தரைப்படை, கடற்படை, கடல்சார்படை, வான்படை என்பவற்றிற்கு மேலாக விண்வெளிப்படை ஒன்றை உருவாக்கியிருந்தது. X-37B விமானம் ஒரு மீளப்பாவிக்கக் கூடிய விண்வெளி ஓடமாகும் (Space Shuttle). இது சூரியவலுவில் இயங்கக் கூடியது. இது உலங்கு வானூர்தி போல ஓடுபாதையில் ஓடாமல் செங்குத்தாக மேல் எழும்பக்கூடியது. தரையிறங்கும் போது மட்டும் அதற்கு ஓடுபாதை தேவை. சீனாவும் அமெரிக்காவின் X-37B விண்வெளி ஓடம் போன்றை ஒன்றை உருவாக்கி பரீட்சித்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை இணையவெளி ஊடுருவல் மூலம் சீனா திருடியதாக அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால வான் போரில் புலப்படாத்தன்மை, இணையவெளித்தாக்குதல், லேசர் படைக்கலன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

 


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...