இந்து சமுத்திரத்தின் நடுவில் பூ மத்திய ரேகைக்கு சற்று தெற்காக உள்ள 58 பவளத் தீவுகளை பிரித்தானியா 1965 -ம் ஆண்டு மொரீசியஸிடமீருந்தும் சீசெல்ஸிடமிருந்தும் அபகரித்தது. பிரித்தானியா இன்றுவரை வைத்திருக்கும் அந்த 58 பவழத்தீவுகளில் ஒன்றுதான் தியாகோ காசியா. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்த குத்தகையின் அடிப்படையில் அங்கிருக்கும் அமெரிக்கப் படைத்தளம் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் பிராந்திய ஆதிக்கத்திற்கு முக்கியமான ஒன்றாகும். அத்தீவை அமெரிக்கப்படையினர் “சுதந்திரத்தின் காலடிச்” சுவடு என அழைக்கின்றனர். பிரித்தானியர் தமது 58 பவழத்தீவுகளையும் பிரித்தானிய இந்துமாக்கடல் நிலப்பரப்பு என்கின்றனர். அதன் உண்மையான உரிமையாளர்களான மொறீசியஸ் நாட்டவர்கள் அதை சாகோஸ் தீவுக் கூட்டம் என்கின்றனர்.
பிரித்தானியாவின் பச்சைப் பொய்
நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 1814இல் பிரான்ஸும் பிரித்தானியாவும் செய்த பரிஸ் ஒப்பந்தப்படி சாகோஸ் தீவுக் கூட்டம் பிரித்தானியாவின் வசமானது. பிரித்தானியா மொறீசியஸுக்கு சுதந்திரம் வழங்கும் போது சாகோஸ் தீவுக்கூட்டத்தை பிரித்து தனதாக்கிக் கொண்டது, அதற்காக நான்கு மில்லியன் பவுண்களை மொறீசியஸுக்கு பிரித்தானியா வழங்கியது. அதில் ஒரு பவழத் தீவான தியாகோ காசியாவில் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு அம்மண்ணின் ஆதி மக்களான சாகோசியர் குடியிருந்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து பிரித்தானியா வெளியேற்றி சூழ உள்ள நாடுகளில் வலுக்கட்டாயமாக கொண்டு போய் கரையிறக்கியது. அதில் பெற்றோரை ஒரு தீவிலும் பிள்ளைகளை வேறு தீவிலும் தரையிறக்கியது. அத்தீவு முற்றாக கடலுக்குள் அமிழ்ந்துவிடப் போவதாக பிரித்தானியா ஒரு பச்சைப் பொய்யையும் அவிழ்த்துவிட்டது. பிரித்தானியால் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்து மீண்டும் இணைவதற்கு இருபது ஆண்டுகள் எடுத்தன
தியாகோ காசியா தீவு பதினேழு சதுர மைல் நிலப்பரப்பு கொண்டது. ஆனால் அமெரிக்காவின் படைத்துறைக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்காவின் கடல்சார் படையினரின் எதிர்பாராத சூழல்களைக் சாமாளிக்க என உருவாக்கப் பட்ட பிரிவினரின் பெரும்பகுதியினர் தியாகோ காசியாவில் நிலை கொண்டுள்ளனர். அங்கு பல தொலைதூரத் தாக்குதல் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன
மொறீசியஸ் இந்திய உறவு
மொறீசியஸின் மக்கள் தொகையில் இந்தியாவில் இருந்து சென்ற இந்துக்களின் வம்சாவழியினரே பெரும்பான்மையினர். மொறீசியஸில் படைத்தளம்அமைக்க சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டன. ஆனால் 2015-ம் ஆண்டு மொறீசியஸின் அகாலிகா தீவில் இந்தியாவின் வான்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டது. மொறீசியஸில் சீனாவினதும் இந்தியாவினதும் முதலீடுகள் அவசியம் என அந்நாட்டு ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். 2017-ம் ஆண்டு பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியா தனது நட்பு நாடான மொறீசியஸ் தியாகோ காசியாமீதான பிரித்தானியாவின் உரிமை தொடர்பான தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். அதை இந்தியா நிராகரித்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மொறீசியஸை தனது பக்கம் இழுக்க சீனா தொடர்ந்து முயற்ச்சித்துக் கொண்டிருக்கின்றது. மற்றது பனிப்போர் காலத்தில் இருந்தே தியாகோ காசியாவில் அமெரிக்கப் படைகள் இருப்பதை இந்தியா எதிர்த்து வந்துள்ளது. இந்து மாக்கடலில் அந்நிய கடற்படையினர் நிலை கொள்ளக் கூடாது என்பது இந்தியாவின் நீண்ட காலக் கொள்கை.
பன்னாட்டு நீதிமன்ற தீர்ப்பு
2019-ம் ஆண்டு பெப்ரவரி 25-ம் திகதி நீதிக்கான பன்னாட்டு மன்றம் பிரித்தானியா உடனடியாக 58 பவழத்தீவுகளையும் மொரிசீயஸுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு கூறியது. அதே ஆண்டு மே மாதம் 22-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நீதிக்கான பன்னாட்டு மன்றத்தின் தீர்ப்பை வரவேற்றதுடன் பிரித்தானியா அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற குறிப்பையும் நிறைவேற்றியது. அக்குறிப்பிற்கு ஆதரவாக 116 நாடுகள் வாக்களித்தன, 56 நாடுகள் வாக்களிக்கிப்பில் கலந்து கொள்ளவில்லை, பிரித்தானியா, அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஹங்கேரி, இஸ்ரேல், மாலைதீவு ஆகிய ஆறு நாடுகள் மட்டும் எதிர்த்து வாக்களித்தன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் குறிப்பு பிரித்தானியாவைக் கட்டுபடுத்த முடியாத வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிக்கான பன்னாட்டு மன்றம் தனது தீர்ப்பில் 1968-ம் ஆண்டு பிரித்தானியா மொறீசியஸுக்கு சுதந்திரம் வழங்கிய போது சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதனால் பன்னாட்டுச் சட்டம் மீறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐநா பொதுச்சபையின் தீர்மானத்தை பிரித்தானியா முற்றாக நிராகரித்து விட்டது.
விதிகளின் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விகளின் அடிப்படையினால் பன்னாட்டு ஒழுங்கை (Rule Based International Order) வலியுறுத்துபவர். அதன்படி ஐநா சபை, அதன் துணை அமைப்புகள், பன்னாட்டு வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புகளின் விதிப்படி உலக நாடுகள் செயற்பட வேண்டும். நீதிக்கான பன்னாட்டு மன்றத்தின் தீர்ப்பை பிரித்தானியா நிராகரித்து விட்டது. அமெரிக்கா பெரும் எதிர்ப்பை காட்டவில்லை. ஆனால் தீர்ப்பை மதித்து அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என அமெரிக்கா அறிவிக்கப் போவதில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன பன்னாட்டு அரங்குகளில் விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு பற்றிப் போதிக்க முடியாது. ஆனால் எதிலும் மாற்றி யோசிக்கும் திறமையுள்ள அமெரிக்கா மொறீசியஸுடன் இரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. மொறீசியஸ் அமெரிக்கப்படைகள் தொடர்ந்து இருப்பதை விரும்புகின்றது. ஆனால் அமெரிக்கா எதிர் காலத்தில் மொறீசியஸில் ஆட்சிக்கு வருபவர்கள் அதையே கடைப்பிடிப்பார்களா என்பதும் ஐயமே.
அமெரிக்க இந்திய உறவு
அமெரிக்கா தன் ஆசிய பசுபிக் கொள்கையை இந்தோ பசுபிக் கொள்கை என மாற்றிக் கொண்டது இந்தியாவை தன் இந்தோ பசுபிக் பாதுகாப்பு பங்களியாக இணைத்துக் கொள்ளவே. சீனா இந்து மாக்கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தாமல் தடுப்பதற்கு அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியம். அமெரிக்காவை தியாகோ காசியாவில் இருந்து வெளியேற்றினால் அது தொடர்ச்சியாக நடுநிலையாக இருக்குமா என்பது ஐயமே. மொறீசியஸில் சீனாவுக்கு சார்பாக ஓர் அரசு அமைந்து அது தியாகோ காசியாவில் சீனப் படைத்தளம் அமைய வாய்ப்புண்டு. அது இந்தியாவிற்கு மிக அச்சுறுத்தலாக அமையும். 2016-ம் ஆண்டு இண்டியாவும் அமெரிக்காவும் செய்து கொண்ட Logistics Exchange Memorandam Agreement (LEMOA)இன் படி தேவை ஏற்படின் இந்தியாவின் படைத்தளங்களை அமெரிக்காவும் அமெரிக்கப்படைத்தளங்களை இந்தியாவும் பயன்படுத்தலாம். அதன்படி தியாகோ காசியப் படைத்தளத்தை தேவை ஏற்படின் இந்தியாவும் பயன்படுத்தலாம். இன்று சீனா பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் அமெரிக்காவிற்கு சவாலாக வளர்ந்திருப்பாதால் சீனாவை அடக்க அமெரிக்க முயல்கின்றது அதே போல் நாளை இந்தியாவும் வளர்ந்து நிற்கையில் இன்று இந்தியாவை பங்காளியாக விரும்பும் அமெரிக்கா பகையாளியாகலாம். இதை நன்குணர்ந்த இந்தியா தியாகோ காசியா தொடர்பான தன் நிலைப்பாட்டை கவனமாகவே எடுக்கும். தியாகோ காசியா தொடர்பாக மொறீசியஸ் எடுத்த அரசுறவியல் நடவடிக்கைகள் இந்தியாவின் ஆதரவினால் வெற்றி பெற்றன.
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா ஆகியவற்றின் இடையே உள்ள கோந்திரோபாய நகர்வுகள் தியாகோ காசியாவின் தலைவிதியை முடிய்வு செய்யும்
No comments:
Post a Comment