Monday 28 June 2021

நேட்டோ புதிய திசையில் பயணிக்குமா?

  


1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும்ம வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் தற்போது ஐரோப்பியாவினதும் வட அமெரிக்காவினதும் 30 நாடுகளின் ஒரு பில்லியன் மக்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமையைப் பரப்பல் என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்து சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சீனாவினதும் இரசியாவினதும் ஒத்துழைப்பு என்றுமில்லாத அளவு வளர்ந்துள்ள நிலையில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு பெல்ஜியத் தலைநகரான பிரஸல்ஸ்ஸில் 2021 ஜூன் மாதம் 14-ம் திகதி நடைபெற்றது. தற்போதைய உலகச் சூழலுக்கு ஏற்ப நேட்டோ தன்னை மாற்றிக் கொள்ளும் என்றார் நேட்டோவின் தலைமை செயலர்.

அமெரிக்காவின் செல்வமும் பொதுவுடமைவாதமும்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதிமறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. பொதுவுடமைவாதம் உலகெங்கும் பரவினால் அது அமெரிக்காவின் செல்வத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் நேட்டோ உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. தமக்கு வேண்டாதவர்களான சதாம் ஹுசேய்ன், மும்மர் கடாஃபி போன்றவர்களை ஆட்சியில் இருந்து நேட்டோ அகற்றியது. இவர்கள் இருவரும் உலக நாணயமாக அமெரிக்க டொலர் இருப்பதை எதிர்த்தவர்கள்.

மேம்படுத்திய முன்னோக்கிய இருப்பு (Enhanced Forward Presence)

இரசிய எல்லையில் உள்ள நோட்டோ நாடுகளில் நேட்டோ நாடுகளின் படைகளை சிறிய அளவில் நிறுத்துதல் மேபடுத்திய முன்னோக்கிய இருப்பு எனப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியா ஆகக் கூடிய அளவில் 894 படையினரை நிறுத்தியுள்ளது. பெல்ஜியம் ஒருவரை மட்டும் நிறுத்தியுள்ளது. எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகள் இரசிய எல்லையில் உள்ள சிறிய நாடுகளாகும். அவற்ற ஒரு சில மணித்தியாலங்களில் இரசியாவால் கைப்பற்ற முடியும். இம்மூன்று நேட்டோ நாடுகளிலும் கணிசமான அளவு இரசியர்கள் சோவியத் ஒன்றிய காலத்தில் குடியேறி வசிக்கின்றனர். அதனால் கிறிமியாவில் நடந்த து இந்த நாடுகளிலும் நடக்கலாம் என்ற அச்சம் 2014-ம் ஆண்டின் பின்னார் போலாந்து, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உருவாகியது.

 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் போலாந்து, ஹங்கேரி, அல்பேனியா போன்ற நாடுகளும் சோவியத் ஒன்றிய காலத்து கசப்பான அனுபவங்களை இன்னும் மறக்கவில்லை.

வளைக்க முயன்ற நேட்டோவும் வளைய மறுத்த இரசியாவும்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோவில் இணைத்து ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை விலக்கி படைத்துறைச் செலவைக் குறைக்கும் திட்டமும் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. யூக்கோஸ்லாவியாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான போக்கன் போர் அந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டது. பராக் ஒபாமா ஐரோப்பாவில் அமைதி நிலவுகின்றது என இரு படைப்பிரிவுகளை ஐரோப்பாவில் இருந்து அகற்றினார். ஆனால் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் அவ்விரு படைப்பிரிவுகளையும் மீள அனுப்பினார்.

உலக ஆதிக்கத்தில் உறுதியாக நிற்கும் இரசியா

2021 ஜூன் 25-ம் திகதி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் இரசியாவின் இரண்டு மிக்-31 போர்விமானங்கள் மத்திய தரைக்கடலில் போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டன. அதேவேளையில் பிரித்தானியாவின் HMS QUEEN ELIZABETH விமானம் தாங்கிக் கப்பL அமெரிக்க தயாரிப்பு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35களுடன் மத்திய தரைக்கடலில் ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான படைநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. உலகின் அதிவேக விமானங்களில் ஒன்றான மிக்-31 போர்விமானங்கள் தாங்கிச் சென்ற KNZHAL ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் வானில் இருந்து ஏவக்கூடிய எறியியல் ஏவுகணைகளாகும் (BALLISTIC MISSILES). இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்வீச்சினால் மட்டுமே அழிக்க முடியும். பிரித்தானியாவின் கடற்படைகளிடம் அவை இருப்பதாக தகவல் இல்லை. மத்தியதரைக்கடலில் இது நடப்பதற்கு இரண்டு நாட்களின் முன்னர் கருங்கடலில் பிரித்தானியாவின் HMS Defender நாசகாரிப் போர்க்கப்பலுக்கும் இரசிய விமானப்படைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது. இரசியக் கடற் பிராந்தியத்தில் பிரித்தானிய நாசகாரி நுழைய முற்பட்ட போது அதன் மீது எச்சரிக்கை வேட்டுக்களும் அதன் பாதையில் குண்டுகளும் வீசப்பட்டதாக இரசியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து தவறுதலாக தெருவோரத்தில் விடப்பட்ட இரகசிய தகவல்கள் அடங்கிய பத்திரங்களை கண்ட ஒருவர் அதை பிபிசியிடம் ஒப்படைத்தார். அதன் படி இரசியாவின் எதிர்வினைகளை அறியும் பொருட்டு கருங்கடலிற்கு பிரித்தானிய நாசகாரிக் கப்பல்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. இந்த இரண்டு சம்பவங்களும் இரசியாவின் உறுதிப்பாட்டை உரத்துப் பறைசாற்றுகின்றன. அமெரிக்காவின் ஆறவது கடற்படைப் பிரிவு உட்பட்ட நேட்டோவின் கடற்படைப் பிரிவான Maritime Group-2 உக்ரேனியக் கடற்படையினரும் இணைந்து ஜுன் 28 முதல் ஜூலை 10 வரை கிறிமியாவை ஒட்டிய கடற்பரப்பில் போர் பயிற்ச்சிகளை செய்கின்றன. இதில் முப்பது நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரம் படையினர், 32 போர்க்கப்பல்கள், 40 போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

நேட்டோவும் சீனாவும்

2019-ம் ஆண்டு நடந்த நேட்டோவின் மாநாட்டில் சீனாவுடன் ஒரு படைக்கலக் குறைப்பு ஒப்பந்தம் செய்வதாக முடிவெடுக்கப் பட்டது. ஆனால் அது தொடர்பான நகர்வுகள் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. 2021இல் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் மிக்க நாடாக கருதப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரை சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் பாயக்கூடியவையாக இருப்பதால் சீனாவை இட்ட கரிசனை அந்நாடுகளிடையே உருவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு இலண்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் சீனாவின் பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளமை பற்றி ஆராயப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் அதிகரிப்பது பற்றியும் ஆராயப்பட்டது. 2021 பெல்ஜியாவின் தலைநகர் பிரஸஸ்ஸில் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் நேட்டோ

மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சிறந்த நட்பு நாடுகளாக தென் கொரியா, ஜப்பான், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் நேட்டோவைப் பொறுத்தவரை சீனாவைக் கையாள்வதற்கான சிறந்த சொத்துக்களாகும். இந்தியாவை ஒரு வழிக்கு கொண்டு வருவது சிரமம் என்பதை மேற்கு நாடுகள் உணர்ந்துள்ளன. அதே வேளை சீனாவின் சவால்களைச் சமாளிக்க இந்தியாவிற்கு மேற்கு நாடுகளின் நட்பு அவசியமாகின்றது. சீன இரசிய உறவின் வளர்ச்சி தவிர்க்க முடியாது என்ற நிலையில் இந்தியா நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்புரிமை உள்ள நாடாக இணையாமல் நேட்டோவின் கேந்திரோபாய பங்காளியாக இணைய வாய்ப்புண்டு.

வட துருவத்தில் உருகும் பனியால் உருவாகும் கடற்பாதையை இரசியா தனது கட்டுப்பாட்டிலும் தென் சீனக் கடலை சீனா தனது கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முனைவது உலகெங்கும் சுதந்திரமான கடற்போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என பல மேற்கு நாடுகளின் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றார்கள். சீனாவயும் இரசியாவையும் முக்கிய போட்டி நாடுகளாகவும் தென் கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, ஒஸ்ரேலியா, வியட்நாம், தைவான், இந்தோனேசியா ஆகிய நாடுகளை பங்காளிகளாகவும் கொண்டு நேட்டோ தனது செயற்பாட்டை அத்லாண்டிக் மாக்கடலில் மட்டுப்படுத்தாமல் பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், வட கடல் ஆகியவற்றையும் உள்ளடக்கிய உலகளாவிய படைத்துறைக் கூட்டமைப்பாக நேட்டோ உருவெடுக்கலாம்.வ்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...