Monday, 11 March 2019

கேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை

சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச் 3-ம் திகதி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வானில் எதிரி விமானங்கள் போரிட்டுக் கொள்வதை நாய்ச் சண்டை என அழைப்பார்கள். இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் 2019 பெப்ரவரி இறுதியில் வானில் நடந்த மோதல்களை அடிப்படையாக வைத்தே இந்த ஐயம் எழுந்துள்ளது. இந்தியாவின் படைவலுவிலும் அரைப்பங்கு படைவலுவைக் கொண்ட பாக்கிஸ்த்தானால் எப்படி ஒரு இந்திய விமானத்தைச் சுட்டு வீழ்த்த முடிந்தது எனப் பல படைத்துறை நிபுணர்கள் ஆச்சரியப் படுகின்றார்கள் என்கின்றது நியூயோர்க் ரைம்ஸ். இந்தியப் படையினர் ஒரு மிகவும் பழைய துருப்புக் காவி வண்டியில் பயணிப்பதை கட்டுரையின் முகப்புப் படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அவன் போட்ட கணக்கொன்று இனவ போட்ட கணக்கொன்று
2019 பெப்ரவரி நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் மோதலில் இந்தியா சிறப்பாக செயற்பட்டது என இந்திய ஊடகங்களில் இந்தியப் படைத்துறை நிபுணர்களும் முன்னாள் படைத்துறை அதிகாரிகளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் கட்டுரை நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. பெப்ரவரி 26-ம் திகதி இந்திய விமானங்கள் பாக்கிஸ்த்தானுக்குள் செய்த தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தான் பதிலடி கொடுக்கும் என இந்தியப் படையினர் கண்காணிப்புடன் இருந்தனர். கஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லையில் ரோந்துப் பணியாக் அபிநந்தன் தனது மிக்-21 பைஸன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் அவர் பாக்கிஸ்த்தானிய விமானங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. பாக்கிஸ்த்தான் 24 விமானங்களைக் கொண்ட ஒரு படையணியை வேறு வேறு வான்பரப்பில் பறக்க விட்டிருந்தது, அவற்றில் எட்டு அமெரிக்கத் தயாரிப்பு F-16  விமானங்கள், நான்கு பிரெஞ்சு தயாரிப்பு மிராஜ்-3 விமானங்கள், நான்கு Mirage-3 நான்கு சீனத் தயாரிப்பு JF-17 விமானங்கள் என 12 விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் உள்ள இந்தியப் படைத்துறை நிலைகளை தாக்க முயன்றன.அதை எதிர் கொண்ட அபிநந்தனின் மிக்-21 பைஸன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தன் ஒரு F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என இந்தியா சொல்ல தாம் F-16ஐப் பயன்படுத்தவே இல்லை என்றது பாக்கிஸ்த்தான். பாக்கிஸ்த்தான் படையினர் வீசிய ஏவுகணைகளின் அலைவரிசைகளைக் குழப்பி அவற்றை இலக்கில் விழாமல் செய்தோம் என்றது இந்தியா. இந்தியாவின் SU-30 விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்த்தான் சொல்லியது. அபிநந்தன் என்கின்ற இந்திய விங் கொமாண்டர் பறந்த விமானம் சுட்டுவீழ்த்தப்படதும் அவரி பாக்கிஸ்த்தானில் கைது செய்யப்பட்டதும் இந்தியாவால் மறுக்க முடியாத உண்மை. நியூயோர்க் ரைம்ஸ் “இந்திய பாக்கிஸ்த்தான் மோதல் பொய்களின் அணிவகுப்பு” என இன்னும் ஒரு ஆசிரியக் கட்டுரையையும் வெளிவிட்டிருந்தது.

2015 டிசம்பரில் இரசியாவின் SU-24 போர்விமானம் ஒன்று தனது எல்லைக்குள் பறந்ததாகச் சொல்லி துருக்கி அதைச் தன்னிடமுள்ள அமெரிக்கத் தயாரிப்பு F-16 விமானத்தில் இருந்து வீசிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 

பின்னடைவு நிறைந்த இந்தியப் படைத்துறை
இந்தியாவுடனான படைத்துறை ஒத்துழைப்பு பற்றி ஆய்வு செய்த அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்களில் மூன்று முக்கியமானவை:
  1. இந்தியப் படைத்துறை தடித்த மேலாண்மை கட்டுப்பாடு (bureaucracy) உள்ள ஒரு அமைப்பு. அது பல செயற்பாடுகளைத் தாமதப்படுத்துகின்றது.
  2. இந்தியப் படைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை.
  3. அரசு செய்யும் நிதி ஒதுக்கீட்டுக்கு மூன்று படைத்துறையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதால் அவர்களிடையேயான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் படைகளுடன் பயிற்ச்சியில் ஈடுபட்ட இஸ்ரேலியப் போர்வீரர்கள் அவர்களின் பயிற்ச்சியையும் துணிவையும் பாராட்டி இருந்தார்கள். அவர்களும் இந்தியாவின் படையினரைத் தாங்கிச் செல்லும் கவச வாகனங்கள் மிகவும் பழையனவாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து மிகச் சொற்ப அளவு படைக்கலன்களை மட்டும் கொள்வனவு செய்த இந்தியா தற்போது 15பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை வாங்குகின்றது.

சாதனைகள் பல படைத்த இந்திய விமானப்படை
இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் நடந்த நான்கு போர்களிலும் வலிமை மிக்க பாக்கிஸ்த்தானின் பல விமானங்களை இந்திய விமான்கள் அவற்றிலும் பார்க்க வலிமை குறைந்த விமானங்களில் பறந்து சென்று சுட்டு வீழ்த்திய சம்பவங்கள் பல உள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த விமானிகளில் ஒருவராகக் கருதப்படும் பாப்பையா தேவய்யா 1965-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் நடந்த போரின் போது பாக்கிஸ்த்தானின் சர்கோடா விமானத் தளத்தைத் தாக்குவதற்கு தனது Mystere என்ற ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் பறக்கும் விமானத்தில் சென்றார். அவரது விமானத்தை அப்போது உலகின் சிறந்த விமானமாகக் கருதப்பட்ட அமெரிக்காவின் F-104 star fighter ஒலியிலும் வேகமாகப் பறந்து வந்து இடைமறித்து அவரது விமானத்தின் மீது ஏவுகணையை வீசியது. தனது பறக்கும் திறனால் அவர் அந்த ஏவுகணையில் இருந்து தப்பினார். பின்னர் அவரது விமானத்தை நோக்கி பல வேட்டுக்களை பாக்கிஸ்த்தான் விமானி வீசினார். அவற்றால் சிதைவடைந்த நிலையிலும் பறந்து சென்று எதிரி விமானத்ஹ்டை தேவய்யா சுட்டு வீழ்த்தி விட்டு தன் விமானத்துடன் விழுந்து மடிந்தார். அமெரிக்காவின் F-104 விமானததை முதலில் சுட்டு வீழ்த்திய பெருமை அதிலும் ஒரு வலிமை குறைந்த விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்திய பெருமை அவருக்கு கிடைத்தது. அவர் இறந்து 30 ஆண்டுகளின் பின்னர் அவருக்கு உயர் விருது அளித்து இந்திய அரசு கௌரவித்தது. அவர் தென் இந்தியர் என்பதாலா? 1999கார்கில் போரின் போது பாக்கிஸ்த்தானின் F-16 போர்விமானிகள் இந்திய விமானிகளின் தாக்குதலுக்குப் பயந்து எல்லையை தாண்டி பறக்க மறுத்தார்கள். பங்களாதேசத்தை பாக்கிஸ்த்தானில் இருந்து பிரிக்கும் போரில் முதல் இரண்டு நாட்களுக்குள் பாக்கிஸ்த்தான் விமானப்படை முற்றாக அழிக்கப்பட்டது என்று சொல்லுமளவிற்கு இந்தியர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். 

சீனாவின் பாதை வேறு
2018-ம் ஆண்டு சீனா செய்த படைத்துறைச் செலவு 175பில்லியன் டொலர்கள் அதே வேளை இந்திய செய்த செலவு வெறும் 45 பில்லியன்கள் மட்டுமே. உலகின் நான்காவது பெரிய படைத்துறைச் செலவைச் செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. இந்தியாவின் அந்தப் படைத்துறைச் செலவில் பெருமளவு படையினரின் ஊதியம் ஓய்வூதியப் போன்றவற்றிற்கும் மற்ற செலவுகளுக்கும் போக போர்த்தளபாடங்கள் வாங்குவதற்கு அதில் 14பில்லியன் மட்டும் படைத் தளபாடங்கள் வாங்குவதற்கு செலவிடப்படுகின்றது. உலகில் படைக்கலன் இறக்குமதிக்கு அதிகம் செலவு செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. அதற்கு அடுத்த படியாக சவுதி அரேபியா, சீனா, ஐக்கிய அமீரகம், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் அதிக படைக்கலன்களை இறக்குமதி செய்கின்றன. பலநாடுகள் தமது படைக்கலன்களின் தரத்தையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தவும் உளவுத்துறையை திறன் மிக்கதாக்கவும் அதிகம் செலவு செய்கின்றன.  சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது படையினரின் எண்ணிக்கையை குறைத்து படைக்கலன்களின் திறனை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. சீனா கடந்த முப்பது ஆண்டுகளாகக் கண்ட பொருளாதார வளர்ச்சி பல கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து வருமான வரி செலுத்தும் மத்தியதர மக்களாக மாற்றியமையால் அது அதிக பணத்தை செலவிடுகின்றது. மரபு வழி முப்படைகளுக்கும் மேலதிகமாக பல நாடுகள் இணையவெளிப் படையணி, விண்வெளிப்படையணி, இலத்திரனியல் போர்ப்படையணி என பல புதிய படையணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றன.

அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்படும் இந்தியா
இந்தியாவின் பூகோள இருப்பும் அதன் படையினரின் எண்ணிக்கையும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் படைத்துறை ஒத்துழைப்பை அவசியமாக்கின்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா ஒரு சமநிலைப்படுத்தும் வல்லமை மிக்க நாடாக இருக்கின்றது. அதாவது இந்தியா எந்த வல்லரசுடன் இணைந்து செயற்படுகின்றதோ படைத்துறைச் சமநிலை அதற்கு சாதகமாக அமையும். 2024-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை சீனாவையும் மிஞ்சி இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும். 2030இல் இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி அமெரிக்காவினதிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் சீனாவிற்கு எதிரான படைத்துறைக் கூட்டமைப்பைப் பெரிதும் விரும்புகிறது.

பழைய படைத்துறைத் தளபாடங்கள்.
இந்தியப் பாராளமன்றத்தின் படைத்துறைக்கான நிலையியற்க் குழுவின் உறுப்பினர் கௌரவ் கோகொய் இந்தியப் படையினர் பழைய போர்த் தளபாடங்களை வைத்துக் கொண்டு 21-ம் நூற்றாண்டு போரை எதிர்கொள்கின்றார்கள் என்றார். 2018-ம் ஆண்டின் படைவலுப் பட்டியலில் இந்தியா அமெரிக்கா, இரசியா, சீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் படைக்கலன்களில் 70 விழுக்காடு இரசியாவில் இருந்து வாங்கப்பட்டவை. இந்தியாவின் படைக்கலன்களில் 68 விழுக்காடு பழையவை என இந்திய அரச மதிப்பீடு சொல்கின்றது. அவை புரதான பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட வேண்டியவை என நியூயோர்க் ரைம்ஸ் சொல்லியிருப்பது ஆச்சரியப்பட வைக்கின்றது. 2015 மே மாதம் இந்தியாவின் அரச கணக்காய்வாளர்கள் ஒரு போர் நடந்தால் 10 நாட்களுக்கு போதுமான சுடுகலன்கள் மட்டும் இந்தியப் படையினர் வசம் இருப்பதாக அறிவித்தது.  பாக்கிஸ்த்தானின் படைக்கலன்களில் பெரும் பகுதி அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டவை.

ஊழல் நிறைந்த படைத்துறைக் கொள்வனவு
இந்தியாவின் படைத்துறைக் கொள்வனவு தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. போபஸ் பீராங்கிக் கொள்வனவு, ரஃபேல் விமனக் கொள்வனவு போன்றவை பிரபல ஊழல் குற்றச் சாட்டுகளாகும். விமானி அபிநந்தன் ஓட்டிச்சென்று பக்கிஸ்த்தானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அல்லது விபத்தினால் விழுந்த மிக்-21 போர் விமானங்களைச் சேவையில் இருந்து நீக்கிவிட்டு ரஃபேல் விமானம் கொள்வனவு செய்யும் முடிவை இந்திய அரசு செய்திருந்தது. காங்கிரசு அரசு செய்த ஒப்பந்தத்தை பாரதிய ஜனதாக் கட்சி அரசு மாற்றியதால் கொள்வனவில் தாமதம் ஏற்பட்டது.

வெறும் படைக்கல விற்பனையாளர்களின் சதியல்ல
நியூயோர்க் ரைம்ஸ் ஓர் அமெரிக்க ஊடகம் அது இந்தியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யும் முகவர்களால் வழிநடத்தப்பட்டு இந்தியாவை அதிக அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கத் தூண்டுகின்றது என்று சொல்லலாம். ஆனால் ஜப்பானிய ஊடகமான த டிப்ளோமட் என்னும் இணைய வெளிச் சஞ்சிகையில் இரு இந்தியப் படைத்துறை ஆய்வாளர்கள் (அவர்களில் ஒருவர் ஜப்பானியப் பல்கலைக்கழப் பேராசிரியர்) பாக்கிஸ்த்தானுடன் நடந்த மோதலின் பின்னர் இந்தியா தனது படையை நவீன மயப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது என எழுதியுள்ளனர். இன்னும் ஒரு அமெரிக்க ஊடகமான போரின் பொலிசி என்ற ஊடகத்தில் நிலைமையை நேரடியாகப் போட்டு உடைத்துள்ளார்கள். “வான் சண்டையில் இந்தியாவின் தோல்வி அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனங்களின் வெற்றி” என்ற தலைப்பில் கட்டுரையை வெளிவிட்டுள்ளது. அதில் இந்தியா அவசரமாக தனது பழைய விமானங்களை கைவிட்டு புதிய விமானங்களை வாங்க வேண்டிய அவசர நிலைமை தோன்றியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவையும் சமாளிக்க வேண்டும்
பாக்கிஸ்த்தானுக்கும் இந்தியாவிற்கும் நடந்த எந்த ஒரு போரிலும் சீனா காத்திரமான உதவியைச் செய்யவில்லை. பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் சீனாவைத் தலையிடும்படி செய்த தீவிர வற்புறுத்தலுக்கு சீனா மசியவில்லை. குறைந்தது சீனப் படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தும் படி கேட்டதையும் சீனா நிராகரித்தது. ஆனால் இந்த நிலை தொடரும் என இந்தியா எதிர்பார்க்க முடியாது. சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவிற்கு எதிராகப் போர் புரியும் நிலையை இந்தியா சமாளிக்க வேண்டும் என வசப்ஜித் பனர்ஜீயும் பிரசாந்த் சுஹாஸும் த டிப்ப்ளோமட் சஞ்சிகையில் எழுதியுள்ளனர். இந்த மூன்று வெளி நாட்டு ஊடகங்களையும் ஒரு புறம் தள்ளினாலும் இந்தியப் படைத்துறை நிபுணர்களின் கட்டுரைகள் அதிகமாக வெளிவிடும் ஜோபொலிரிக்ஸ் சஞ்சிகையில் பாக்கிஸ்த்தானுடன் நடந்த மோதலுக்கு முன்னர் வெளிவந்த 2019-பெப்ரவரிப் பதிப்பில் இந்திய வான்படையில் உள்ள பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது 31 தாக்குதல் படையணியைக் கொண்ட இந்திய வான்படை 40 படையணிகளாக அதிகரிக்க வேண்டியதன் அவசியம் அதில் விபரிக்கப்பட்டதுடன் மிக்-21 பைஸன் விமானங்களை சேவையில் இருந்து நீக்கி விட்டு அதற்குப் பதிலாக புதிய ரக விமானங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அச் சஞ்சிகையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருமானம் 2010அளவில் பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிகமாகி. இப்போது இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இரு நாடுகளும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது. இரண்டு நாடுகளின் தனி நபர் வருமானம் இலங்கை, மாலை தீவு போன்ற நாடுகளிலும் குறைவானதே. படைத்துறைச் செலவுகளை அதிகரிப்பது வறியவர்கள் நிறைந்த நாட்டுக்கு உகந்ததல்ல.

Tuesday, 12 February 2019

மீண்டும் போட்டிக்களமாகும் கருங்கடல்


ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் (Inhospitable Sea) என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எதிர்ப்புக் காட்டுபவர்களாக இருந்ததாலும் அப்பெயர் சூட்டப்பட்டது. பின்னர் கிரேக்க குடியேற்ற ஆட்சியாளர்கள் கரையோரங்களை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து அதன் பெயரை உபசரிப்புள்ள கடல் (Hospitable Sea) என மாற்றினர். உடைந்த இரும்புகள், இறந்த மரங்கள், விலங்குகள் போன்றவற்றால் உருவான கரும் சேறு நிறைந்திருந்ததாலும், பயணிப்பதற்கு கடுமையான கால நிலையைக் கொண்டிருந்ததாலும் அது கருங்கடல் என்னும் பெயரை பின்னர் பெற்றுக் கொண்டது. பல்கேரியா, ஜோர்ஜியா, இரசியா, ருமேனியா, துருக்கி உக்ரேன் ஆகிய நாடுகளுடன் கரையைக் கொண்டது கருங்கடல். இதன் மீதான ஆதிக்கத்தில் அதிக அக்கறை காட்டியவை இரசியாவும் துருக்கியுமே. பல நூற்றாண்டுகளாக அவை கருங்கடலின் ஆதிக்கத்திற்காக பல தடவைகள் போர் புரிந்தன.

தடையற்ற கருங்கடல் வர்த்தகம்
கருங்கடல் துருக்கியர்களின் உதுமானியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் 1354-ம் ஆண்டில் இருந்து 1700-ம் ஆண்டு வரை இருந்தது. கருங்கடலின் வடகரையில் அதிக அளவு மக்கள் தொகை இல்லாததால் அங்கு மிகையாக உற்பத்தி செய்யும் அரிசி மற்றும் இறைச்சி போன்றவையும் அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட தென் கரையில் உற்பத்தியாகும் ஒலிவ் எண்ணெய், மதுரசம், பருத்தி போன்றவையும் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. பல போர்களில் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்த போதெல்லாம் கருகடல் வடிநிலத்து வர்த்தகங்கள் தடையின்றி நடந்து கொண்டிருந்தன, நடந்து கொண்டிருக்கின்றன.

கருங்கடலும் கிறிமியாவும்
இரசியாவிற்கு வடக்கே உள்ளது பனி நிறைந்த வட துருவம். கிழக்குப் பகுதி நிலப்பரப்பைக் கொண்டது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இரசியாவிர்கு இருக்கும் இரு சிறு கடற்தொடர்புகளில் ஒன்று கருங்கடலூடாக இருக்கின்றது. பல இரசியா உட்படப் பல ஐரோப்பிய நாடுகள் கடற்கரையில் இருந்து 200 முதல் 300 மைல்கள் தொலைவில் இருக்கின்றன. இரசியாவின் கடற்தொடர்பிற்கு கருங்கடல் முக்கியம். அத்தொடர்பிற்கு கிறிமியாவின் ஸ்வெஸ்ரப்பொல் துறைமுகத்தில் இருக்கும் அதன் கடற்படைத்தளம் முக்கியத்துவம் வாய்ந்தது.

கிறிமியாவை இரசியா இலகுவில் கைவிடாது.
கிறிமியாவை துருக்கி தேசத்தவர்களின் உதுமானிய (ஒட்டோமன்) பேரரசு ஆண்டு வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து கிறிமியாவை 1774-ம் ஆண்டு போரின் மூலம் இரசியர்கள் கைப்பற்றிக் கொண்டனர். 1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறிமியாவைப் பறிக்க ஒட்டோமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறிமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா  பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறிமியாவைத் தனதாக்கியது. 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறிமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது. 1921-ம் ஆண்டு கிறிமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது.  1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறிமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறிமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது. 1944-ம் ஆண்டு கிறிமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறிமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர்.  1945-ம் ஆண்டு கிறிமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது. 1954-ம் ஆண்டு கிறிமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறிமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறிமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார். 1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறிமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் திகதி கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதன்படி கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புச் செல்லாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு 100நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 11நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

திரிக்கும் மேற்கு நாடுகள்
2014-ம் ஆண்டு இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்த பின்னர் கருங்கடல் பெரும் முக்கியத்துவம் பெற்றதாக மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனல் கிறிமியாவில் இரசியா உக்ரேனின் சம்மதத்துடன் வைத்திருந்த கடற்படைத் தளத்தை நீக்குவதற்கு செய்த சதியை முறியடிக்கவே இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்தது. சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்த போது இரசியர்களிடம் அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும் கிழக்கு ஜேர்மனியை மட்டும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கப்படும் என உறுதியளித்திருந்தன. ஆனால் 1991-ம் ஆண்டின் பின்னர் இரசியா வலுவிழந்திருந்த நிலையில் அல்பேனியா, போலாந்து, ருமேனியா ஹங்கேரி பல்கேரியா, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவெனியா, சுலோவேக்கியா, சுலோவேனியா, குரோசியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட்டன. இவற்றை எல்லாம் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த இரசியா ஜோர்ஜியாவையும் உக்ரேனையும் நேட்டோவில் இணைக்க முயன்றபோது தனது படை நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இரசியா தானமாக வழங்கிய கிறிமியாவைக் கொண்ட உக்ரேனை நேட்டோ தன்னுடன் இணைக்க சதி செய்தபோது இரசியா வெகுண்டெழுந்தது. உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததுடன் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கின்றது. இரசியாவை புவிசார் கேந்திரோபாய ரீதியிலும் புவிசார் பொருளாதார ரீதியிலும் முடக்கச் செய்யும் நகர்வுகளை நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்வதகாகக் கரிசனை கொண்ட இரசியாவின் எதிர்வினையா உக்ரேனிற்கு எதிராக இரசியா செய்யும் நடவடிக்கைக்களாகும்.

எங்கள் கடல்
நேட்டோவினது படை நகர்வுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் கிழ்க்கு ஐரோப்பாவில் தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவு படுத்துவதற்கும் எதிரடியாக சீனா தென் சீனக் கடலை தனது ஆதிக்கத்தின்கீழ் முழுமையாகக் கொண்டு வர முயல்வது போல இரசியா கருங்கடலை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயல்கின்றது. ரோமப் பேரரசு மத்திய தரைக் கடலை “எங்கள் கடல்” (mare nostrum) என்றது போல் கருங்கடலை இரசியா தன் கடல் ஆகக் காட்ட முயல்கின்றது. இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு ஒரு பாலத்தை அஜோவ் கடலில் அமைத்து உக்ரேனின் கருங்கடலுக்கான தொடர்பில் தடைகளை ஏற்படுத்துகின்றது, கடந்த பத்து ஆண்டுகளாக லித்துவேனியா ஊடாக மத்திய ஐரோப்பாவை இரசியா ஆக்கிரமிக்க முயற்ச்சிப்பது போல பாசாங்கு காட்டிக் கொண்டிருந்தது இரசியா. அதனால் நேட்டோ நாடுகள் அங்கு கவனம் செலுத்திக் கொண்டிருக்க கருங்கடலில் தனது நடமாட்டங்களை இரசியா அதிகரித்தது.

கருங்கடலில் இரசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இரசியாவிற்கு துருக்கியின் நட்பு மிக அவசியம். துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள சிறு நீரிணையூடாகவே இரசியக் கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் செல்ல முடியும். இரசியாவின் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியங்களின் மீதான ஆதிக்கத்தை துருக்கி அமெரிக்காவுடன் இணைந்து கட்டுப்படுத்த முடியும். இந்த நிலையில் அமெரிக்காவின் USS Fort McHenry என்ற தரையிறங்கற் கப்பல் 2019 ஜனவரி 6-ம் திகதியும் USS Donald Cook என்ற நாசகாரிக் கப்பல் கருங்கடலில் உள்ள ருமேனியாவினதும் ஜோர்ஜியாவினதும் துறைமுகங்களுக்கு 2019 ஜனவரி 19-ம் திகதி பயணம் செய்தன. இக்கப்பல்களை இரசியாவின் கரைசார் கப்பல்கள் நிழலாகத் தொடர்ந்தன. உக்ரேனின் கப்பல்களுக்கு இரசியா தடை விதிக்கும் வகையில் நடந்த போது சீனாவின் செயற்கைத் தீவிற்கு சவால் விடக் கூடிய வகையில் தென் சீனக் கடலுக்கு அமெரிக்கக் கப்பல்களும் விமானங்களும் பயணித்தது போல் இரசியாவிற்கு கருங்கடலில் சவால் விடும் வகையில் அமெரிக்கக் கப்பல்கள் பயணிப்பது இலகுவான ஒன்றல்ல எனப் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தமைக்கு மாறாக அமெரிக்கா மேற்படி இரண்டு கப்பல்களையும் கருங்கடலுக்கு அனுப்பியிருந்தது.

கிரேக்கம், ஆர்மீனியா, பல்கேரியா, சேர்பியா ஆகிய நாடுகளில் இரசியா தனக்கு ஆதரவான கட்சிகள் ஆட்சிக்கு வரச் செய்யும் மென்வலு நகர்வுகளையும் செய்கின்றது. அதன் மூலம் கருங்கடலையும் கிழக்கு ஐரோப்பாவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியும் என அது நினைக்கின்றது. ஆனால் வெளியில் இருந்து திணிக்கப்படும் ஆட்சி மாற்றங்கள் கலவரங்களில் முடியும் என்பதுடன் பிராந்திய அமைதிக்கு குந்தகமாகவும் அமையும். கருங்கடல் ஆதிக்கப் போட்டி அதை செங்கடலாக மாற்றாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.


Monday, 14 January 2019

அமெரிக்க இஸ்ரேலிய உறவின் நடுவில் பலஸ்த்தீனம்


இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எனது நண்பன் என்றே விளிப்பார். டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமித்த நிக்கி ஹேலி இஸ்ரேலில் தேர்தலில் போட்டியிட்டால் பெரு வெற்றி பெறும் அளவிற்கு இஸ்ரேலியர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். 31-12-2018 பதவியில் இருந்து விலகிய அவர் தன் பதவிக் காலத்தில் இஸ்ரேலுக்கு மிகவும் சாதகமாக நடந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜெரார்ட் குஷ்ணர் யூதர். அவர் யூத மரபுகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதுடன் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர். அத்துடன் அவர் சவுதி அரேபிய இளவரசன் பின் சல்மனுடன் நெருங்கிய நட்பானவரும் ஆவார்.

அமெரிக்க அதிபராக இஸ்ரேலின் கையாள்
நிக்கி ஹேலி அமெரிக்காவின் ஐநாவிற்கான தூதுவர் பதவியில் இருந்து விலகியது டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ரனையும் வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோவையும் ஆச்சரியப்பட வைத்தது. டிரம்ப், போல்ரன் பொம்பியா ஆகிய மூவரையும் முந்திக் கொண்டு நிக் ஹெலி இரசியாவிற்கு எதிராக மேலதிக பொருளாதாரத் தடை கொண்டு வரப்படும் என நிக்கி அறிவித்திருந்தார். இது அவருக்கு எதிராக பல வெள்ளை மாளிகை அதிகாரிகளைத் திருப்பியது. அதனால் அவர் பதவி விலக வேண்டிய சூழல் உருவானது எனச் சில செய்திகள் சொல்கின்றன. இருந்தும் இஸ்ரேலுக்கு மிக வேண்டியவரான நிக்கி ஹேலி அமெரிக்க அதிபராக்க யூதப் பெரும் செல்வந்தர்கள் ஆயத்தம் செய்கின்ரார்கள். அதற்கான வேலைகளைக் கவனிக்கவே நிக்கி ஹேலி பதவி விலகினார் என்றும் சில செய்திகள் அடிபடுகின்றன.

மேற்குகரைக் குடியேற்றங்களை டிரம்ப் ஆதரிக்கின்றாரா?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக  தெரிவு செய்யப்படுவதற்கு முந்திய 22 மாதங்களில் பலஸ்த்தீனிய மேற்குக் கரையில் யூதர்களுக்கு 4476 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன. டிரம்ப் அமெரிக்க அதிபராகிய பின்னரான 21 மாதங்களில் அங்கு 4476 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதாவது பலஸ்த்தீனிய நிலங்களை அபகரித்து யூதர்கள் குடியேறுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயற்படுவதுதான். இரசியாவில் உள்ள யூதப் பெரும் செல்வந்தர்கள் டிரம்பை அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்ல வைக்க இரசிய அதிபர் புட்டீனுக்கு ஊக்கம் கொடுத்தனர் எனவும் சில செய்திகள் குற்றம் சாட்டுகின்றன. 1949-ம் ஆண்டு உலக நாடுகள் கையொப்பமிட்டு உருவாக்கிய ஜெனிவா நான்காவது உடன்படிக்கையின் படி ஆக்கிரமித்த ஒரு நாடு ஆக்கிரமித்த நாட்டில் தனது மக்களைக் குடியேற்ற முடியாது.

இஸ்ரேலியத் தலைநகராக ஜெருசேலம்
ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக்குவதை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். 2017-ம் ஆண்டு டிசம்பரில் இதை அமெரிக்கா திரும்பப் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் எகிப்த்தால் முன்மொழியப்பட்டது.  பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவைத் தவிர எல்லா நாடுகளும் அதை ஆதரித்தன. அப்போது ஐநாவிற்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த நிக்கி ஹேலி தன் கைவளையல் கலகலவென ஒலிக்க சுட்டு விரல் நீண்டிருக்க தன் வலது கையை உயர்த்தி அத்தீர்மானத்தை நிராகரித்தார்.

பலஸ்த்தீனத்தின் ஐநா முழு உறுப்புரிமை முயற்ச்சி
2014-ம் ஆண்டு 29-ம் திகதி பலஸ்த்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளும் முன் மொழிவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஜோர்தான் முன்வைத்தது. இந்த முன்மொழிவில் இஸ்ரேல் பலஸ்த்தீனத்துடனான பேச்சு வார்த்தைகளை ஓராண்டுக்குள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், (ஜோர்தானிய ஆற்றின்) மேற்க்கும் கரையிலும் கிழக்கு ஜெருசலத்தில் இருந்தும் இஸ்ரேலியப் படைகள் மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும், கிழக்கு ஜெருசலம் பலஸ்த்தீனத்தின் தலைநகராக்கப்பட வேண்டும், பலஸ்த்தீனியர்களில் நிலங்களில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஜோர்தானின் முன்மொழிவை இரசியா, சீனா, பிரான்ஸ், ஆர்ஜெண்டீனா, சாட், சிலி, லக்சம்பேர்க், ஆகிய எட்டு நாடுகள் ஆதரித்தன. ஐக்கிய இராச்சியம், லித்துவேனியா, நைஜீரியா, கொரியக் குடியரசு, ருவண்டா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் எதிர்த்து வாக்களித்தன. ஐந்து வல்லரசு நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகவும் பத்து நாடுகளை தற்காலிக உறுப்பினர்களாகவும் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் ஜோர்தானின் முன் மொழிவு நிராகரிக்கப்பட்டது. 2017 டிசம்பரில் ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக்குவதற்கு எதிரான தீர்மான முன்மொழிவு தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கான பலஸ்த்தீன தூதுவர் டானி டன்னும் பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட் அப்பாஸும் ஐக்கிய நாடுகள் சபையில் முழு உறுப்புரிமை பெறும் எனச் சூளுரைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் பன்னாட்டரங்கில் தமது உறுப்புரிமைக்கு ஆதரவாக ஆதரவு திரட்ட கடும் முயற்ச்சி மேற்கொண்டனர். இதற்கு எதிராக இஸ்ரேல் செய்த பரப்புரையால் அந்த முயற்ச்சியை பலஸ்த்தீனியர்கள் கைவிட்டனர்.

பன்னாட்டு நீதிமன்றில் இஸ்ரேலை நிறுத்த முடியாது
பலஸ்த்தீனிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட் அப்பாஸ் பலஸ்த்தீனத்தை பன்னாட்டு நீதிமன்றில் ஓர் உறுப்பு நாடாக 2015இல் இணைத்தார்.ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தி வந்தன. பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும் நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு மிரட்டியது. இவற்றின் மத்தியில் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் தன் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. 2018 மே மாதம் பலஸ்த்தீனியர்கள் பன்னாட்டு நீதி மன்றில் இஸ்ரேலை விசாரிக்கும் படி முறையிட்டனர். 2017-ம் ஆண்டு ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளரின் அறிக்கையையும் தமக்கு ஆதரவாக அவர்கள் முன்வைத்தனர். ஏற்கனவே (2015)பன்னாட்டு நீதி மன்ற வழக்குத் தொடுனர் (Prosecutor Fatou Bensouda) பலஸ்த்தீனத்தில் நடப்பவை தொடர்பாக விசாரணையை ஆரம்பித்திருந்தார். பன்னாட்டு நீதி மன்ற விசாரணையாளருக்கு இஸ்ரேலுக்கு எதிரான ஆதாரம் நிறைந்த தகவல்களைத் திரட்டுவதி சிரமம் இருக்கின்றது. அல் ஹக் என்ற பலஸ்த்தீனிய தன்னார்வ மனித உரிமைகள் அமைப்பு தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது. பன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம் உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம் (விசாரிக்கும் உரிமை) இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் அதன் மீது இந்த நீதிமன்றில் குற்றம் சாட்ட ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பும் தேவைப்படும். பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பைப் பெறாமல் பார்த்துக் கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா இருக்கின்றது.

F-35 விமானங்கள் இஸ்ரேலிற்கு தனித்துவமாக உருவாக்கப்பட்டன.
தற்போது உலகின் மிகச் சிறந்த போர்விமானமாகக் கருதப்படும் அமெரிக்காவின் F-35 விமானங்களை ஐக்கிய இராச்சியம், இத்தாலி, ஒஸ்ரேலியா, கனடா, நோர்வே, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்தது. அதில் இஸ்ரேல் மட்டும்தான் இரகசியமாக F-35 சிரியாவில் தாக்குதல் செய்யப் பயன்படுத்தியது. தனக்கு ஏற்ற வகையில் அந்த விமானங்களில் மாற்றங்கள் செய்து தரவேண்டும் என பல நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால் இஸ்ரேலுக்கு மட்டுமே அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் மாற்றங்கள் செய்யப்பட்ட விமானங்களை விநியோகிக்க ஒத்துக் கொண்டது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா
ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை டிரம்ப் ஒருதலைப்பட்சமாக வெளியேற்றினார். இது இஸ்ரேலினதும் சவுதி அரேபியாவின் தூண்டுதலின் பேரிலும் அமெரிக்கா மேற்கொண்ட நகர்வாகும். அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டதுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொண்டா அவற்றுக்கு தண்டம் விதிக்கின்றது.

பலஸ்த்தீனம் யுனெஸ்க்கோவில் இணைய அமெரிக்க எதிர்ப்பு.
யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம் இணைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்க்கோவில் இருந்து 2018இன் இறுதியில் இருந்து விலகிக் கொண்டன. ஐநாவின் ஒரு துணை அமைப்பான யுனெஸ்க்கோவை ஆரம்பித்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அதன் நிதி வரவில் 22விழுக்காட்டை பங்களிப்பாக செய்து வந்தது.

இஸ்ரேலை அதிருப்திப்படுத்தும் அமெரிக்காவின் நகர்வுகள்
இஸ்ரேலை அதிருப்திப் படுத்தும் சில நகர்வுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் செய்திருந்தார். ஒன்று சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்ற அறிவிப்பு. இரண்டாவது ஈரான் தனக்குத் தேவையானவற்றை சிரியாவில் செய்யலாம் என டிரம்ப் கருத்து வெளியிட்டது. முதலாவது நகர்வை பின்னர் டிரம்ப் சற்று மாற்றிக் கொண்டார். சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாகவே வெளியேறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நகர்வு டிரம்ப் வழமையாக டுவிட்டரில் செய்யும் அதிரடிகளில் ஒன்றாகும். இஸ்ரேலின் திருத்தியபதிப்பு F-16 (அமெரிக்க உற்பத்தி) போர் விமானங்களை குரோசியாவிற்கு இஸ்ரேல் விற்பனை செய்வதற்கு டிர்ம்பின் நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. இஸ்ரேல் வசமுள்ள 20 ஆண்டுகள் பாவித்த F-16 போர்விமானங்களை குரோசியாவிற்கு விற்பனை செய்ய முயன்றது. அதற்கு அமெரிக்காவின் அனுமதியை இஸ்ரேல் பெறாமல் விற்பனை செய்தமை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விற்பனை நிபந்தனைகளை மீறிய செயல் என அமெரிக்கா கருதியது.

மேற்காசியாவில் டொனால்ட் டிரம்பின் கொள்கை ஒபாமாவின் கொள்கையின் தொடர்ச்சியே. அமெரிக்காவின் மேனா பிரதேசம் என சுருக்கமாக அழைக்கப்படும் மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிரதேசத்திற்கான கொள்கை முக்கியமாக மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது:
1. உலக எரிபொருள் விநியோகம்
2. இஸ்ரேலின் பாதுகாப்பான இருப்பு
3. ஈரானையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அடக்குதல்.

2017-ம் ஆண்டே அமெரிக்கா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டது. எரிபொருளுக்காக மேனா பிரதேசத்தில் எரிபொருளுக்கான அமெரிக்காவின் கேந்திரோபாய முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் மற்ற நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் இந்தியாவும் சீரான எரிபொருள் விநியோகத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது.

Monday, 31 December 2018

2018இல் உலகம் பட்டபாடும் 2019இல் படப்போவதும்


பங்குச் சந்தை வீழ்ச்சி, எரிபொருள் வீழ்ச்சி, அமெரிக்கப் படைகள் சிரியாவில் இருந்து வெளியேற்றம், இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை, இஸ்ரேலியப் பாராளமன்றம் கலைப்பு, எனப் பல வியப்பூட்டும் நிகழ்வுகளுடன் 2018-ம் ஆண்டு முடிவடைகின்றது. அமெரிக்க சீன வர்த்தகப் போர், இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரண்டாம் பனிப்போர் ஆரம்பம் போன்ற பல பிரச்சனைகளை 2018-ம் ஆண்டு 2019இடம் விட்டுச் செல்கின்றது. 2018இல் கொதிநிலையில் இருந்த பிரதேசங்களில் முக்கியமானவை தென் சீனக் கடல், சிரியா, உக்ரேன், வெனிசுவேலா, யேமன் ஆகியவையாகும்.

மாறும் நூற்றாண்டு
இந்த நூற்றாண்டில் உலகை மாற்றிக் கொண்டிருப்பவை செயற்கை விவேகம், கணினிகள் போல் செயற்படும் கைப்பேசிகளும் அவற்றின் பாவனைகள் பரவலாகுதலும், முப்பரிமான் அச்சுக்கலை, தேசியவாதிகள் வெளிநாட்டில் உற்பத்தி செய்வதை நிறுத்தி உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு கொடுக்கும் ஊக்கம், தானாக இயங்கும் விமானங்கள் மற்றும் கார்கள், மூலப்பொருட்களை மாற்றும் விஞ்ஞானம், புதிதாக கண்டு பிடிக்கப்படும் எரிபொருட்கள் ஆகியவையாகும். இந்த நூற்றாண்டின் பெரும் சவாலாக அமைவது சூழல் பாதுகாப்பும் உலக வெப்பமாதலு ஆகும். நாடுகள் தமக்கிடையே இணைந்து அமைப்புக்களை உருவாக்கி செயற்படுவது சென்ற நூற்றாண்டில் பரவலாக நடந்தது. இந்த நூற்றாண்டில் அந்த அமைப்புக்கள் உடையும் ஆபத்தை எதிர் நோக்குகின்றன.

போர்க்களமாகும் விண்வெளி
2018-ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளிக்கு என ஒரு தனியான படைப்பிரிவை ஆரம்பித்தது. இரசியாவும் சீனாவும் விண்வெளியில் போர் புரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. 2018இல் அமெரிக்காவிலும் பார்க்க சீனா அதிக கலன்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. நீல் ஆம்ஸ்ரோங்க் அன்று சொன்னதை இப்போது இப்படி மாற்ற வேண்டும்:  “one small step for destruction; one giant leap to eliminate mankind.” 2019 ஆண்டு விண்வெளி படைத்துறை மயமாகும். ஒரு நாட்டின் செய்மதிகளை மற்ற நாடு அழிப்பது செய்மதிகள் மூலமான உளவு, வேவு, கண்காணிப்பு போன்றவற்றைச் செய்வது போன்றவை மட்டுமல்ல செய்மதிகளூடாக எதிரி நாட்டின் இணைவெளி ஊடுருவல் செய்து உட்கட்டுமானங்களையும், குடிசார் வசதிகளை நிர்மூலம் செயவதும் இனி இலகுவாக்கப்படும்.

திசை மாறும் அமெரிக்கா
2018இன் இறுதியில் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என டிரம்ப் அறிவித்தது அமெரிக்காவின் நட்பு நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. துருக்கிய அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் டிரம்ப் இதை அறிவித்தார். அவரது பாதுகாப்புச் செயலரையே அது பதவி விலக வைத்தது.  ஒரு பெருமுதலாளி தன் உள்மன உந்தல்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துச் செயற்படுவது போல் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டையும் உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் டொனால்ட் டிரம்பை சமாளிக்க முயன்று தோல்வியடைந்து வெளியேறுபவர்கள் வரிசையில் அவரது பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மத்தீஸும் இணைந்து கொண்டார். இந்தச் செய்தியுடன் அமெரிக்காவின் 2018-ம் ஆண்டு முடிந்தது. 2019இல் டிரம்ப் அவருக்கு ஆமாம் எனத் தலை ஆட்டுபவர்களாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் சூழப்பட்டிருப்பார். 2019இல் அவரில் அதிகம் செல்வாக்கு செலுத்துபவராக அவரது யூத மருமகன் ஜெரார்ட் குஷ்ணர் திகழ்வார் என்பது பலஸ்த்தீனியர்களுக்கு ஆபத்தான ஒரு செய்தியாகும். 2018-ம் ஆண்டு டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டவர்களில் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த ரெக்ஸ் ரில்லர்சனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எச் ஆர் மக்மஸ்ரரும் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பாராளமன்றதின் மூதவை டிரம்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலும் மக்களவை மக்களாட்சிக் கட்சியின் கட்டுப்பாட்டிலும் 2019இல் இருக்கும். மக்களவை டிரம்பிற்கு எதிரான பல விசாரணைகளை முடுக்கி விடலாம். தனது கட்சிக்குள் தனக்கான ஆதரவுத் தளத்தை டிரம்ப் தக்க வைப்பாரா என்பது கேள்விக்குறி. 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றிக்கு டிரம்பின் செயற்பாடுகள் பாதகமாக அமையும் என அக்கட்சியினர் உணர்ந்தால் அவர்களில் பலர் 2019இல் டிரம்பிற்கு எதிராக திரும்புவர்

அசைக்க முடியாத புட்டீன்
இரசியாவில் தொடரும் பொருளாதாரப் பிரச்சனை இரசியர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொண்டே போகும். 2014 -ம் ஆண்டில் இருந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் அதன் மொத்த தேசிய உற்பத்திக்கு ஆறு விழுக்காடு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இரசியாவிடம் கணிசமான வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பு உண்டு. அதிபர் புட்டீனுக்கு ஆலோசனை சொல்ல சிறந்த பொருளாதார நிபுணர்கள் உள்ளனர் 2019இல் இரசியாவில் பெறுமதி சேர் வரி 18விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக அதிகரிக்கப் படவிருக்கின்றது. ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப் படவிருக்கின்றது. ஆரோக்கியமற்ற உணவுகள் கீதான வரி அதிகரிக்கப்படவிருக்கின்றது. இவற்றால் இரசிய மக்கள் புட்டீனுக்கு எதிராக 2019இல் கிளர்ச்சிகள் செய்வார்கள். ஆனால் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றக் கூடிய அளவு கடுமையான கிளர்ச்சியாக இருக்காது.

பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலும்
2018-ம் ஆண்டும் பலஸ்த்தீனியர்கள்குக்கு சோதனை மிகுந்த ஆண்டாகவே இருக்கும். மேற்குக் கரையில் அவர்களின் உரிமைகள் படிப்படையாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இனிப் பேச்சு வார்த்தையில் ஜெருசலத்திற்கு பலஸ்த்தீனியர்கள் உரிமை கொண்டாட முடியாது என்ற நிலைப்பாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்துள்ளன. 1948-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் போது அகதிகளாக்கப் பட்டவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் மீண்டும் தமது நிலத்திற்கு செல்ல உரித்துடையவர்கள் என்ற தீர்மானம்-194 1948 டிசம்பர் 11-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அகதிகள் என்ற வரைவிலக்கணத்தினும் பலஸ்த்தீனியர்கள் வரமாட்டார்கள் என்ற சதியை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உலக அரங்கில் நிலைநிறுத்த 2019-இல் செய்து முடிக்கும். தனது எதிரிகளை அடக்குவதில் வெற்றி கண்ட இஸ்ரேல் தன உள்நாட்டு அரசியலில் உள்ள குழப்ப நிலையை தெளிவாக்க முடியாத நிலையில் பாராளமன்றத்தைக் கலைத்துள்ளது. 2019 ஏப்ரல் மாதம் அங்கு பாராளமன்றத் தேர்தல் நடக்கும். சிரியாவில் இருக்கும் ஹிஸ்புல்லாவினதும் ஈரானின் நிலைகளில் இருந்து லெபனானுக்கு படைக்கலன்கள் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க இஸ்ரேல் பல விமானத் தாக்குதல்களை சிரியாவில் செய்து வந்தது. 2018 செப்டம்பரில் இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு எதிராக சிரியப் படைகளில் விமான எதிர்ப்பு முறைமை செயற்பட்ட போது இரசியப் போர்விமானம் ஒன்று தவறுதலாக சுட்டு வீழ்த்துப்பட்டு அதிலிருந்த 15 இரசியப் படையினர் கொல்லப்பட்டனர். அத்துடன் இரசியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சிரியா தொடர்பான எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவிற்கு வந்ததது. 2018இல் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா 2019இல் லெபனானில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்யும். அதை முறியடிக்க 2019இல் இஸ்ரேல் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும். மேற்குக் கரையிலும் காசா நிலப்பரப்பிலும் உள்ள பலஸ்த்தீனியர்கள் அடக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் 2019இல் ஹிஸ்புல்லாவை அடக்குவதற்காக பல நடவடிக்கைகளைச் செய்யும்.

மீண்டும் கால்வாரப்படும் குர்திஷ் மக்கள்
22 நாடுகளைக் கொண்ட மேற்காசியாவில் நான்காவது பெரிய இனமான குர்திஷ் மக்கள் 2018இல் மீண்டும் அமெரிக்காவால் கால்வாரப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தனிநாட்டுக்காகவும் இனக்கொலைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களை மீண்டும் அமெரிக்கா தன் தேவைக்காகப் பாவித்து விட்டு தூக்கி எறிந்துவிட்டது. ஈராக்கில் உள்ள குர்திஷ் மக்களுக்கும் ஒரு அதிகாரப் பரவலாக்கம் பெற்ற ஒரு பிரதேசம் உண்டு. ஆனால் சிரியாவில் உள்ள வை.பி.ஜி போராளிக் குழு 2019இல் பெரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. அவர்கள் மீது துருக்கி போர் தொடுக்கலாம். அவர்களுக்கு எதிராக சிரிய அரச படைகளும் தாக்குதல் செய்து அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டலாம். அவர்கள் எதிர்த்து போரடி பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டும் அல்லது மீண்டும் மலைகளுக்குள் பதுங்க வேண்டும்.

ஈடுகொடுத்து நிற்கும் ஈரான்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா பல நகர்வுகளை மேற்கொண்டது. ஈரானுடன் அமெரிக்காவும் மற்ற நான்கு வல்லரசுகளும் ஜேர்மனியும் செய்த யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டது. உலகச் சந்தையில் எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் செய்யும் நடவடிக்கைக்கள் இரசியாவிற்கும் ஈரானுக்கும் எதிரான நகர்வே. 20180ம் ஆண்டு பல தடவைகள் ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவினதும் இஸ்ரேலினிதும் திரைமறைவுச் சதிகள் அல்ல என்பதை மறுக்க முடியுமா? 2019-ம் ஆண்டு ஈரானிய மக்கள் பெரும் பொருளாதாரச் சுமையை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். ஈரானின் பொருளாதாரத்தை சீனா சுரண்டுவது 2019இல் அதிகரிக்கும். இரசியா ஈரானில் முதலீடு செய்வதுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் அதிகரிக்கும். ஈரானுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகள் கொடுக்கும் நெருக்கடிகளால் ஈரான் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வந்தாலும் அது அசைக்க முடியாத நாடு என்பது 2019இல் உறுதி செய்யப்படும்.

அமெரிக்க சீன வர்த்தகப்போர்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் 2018இல் உருவாகிய வர்த்தகப் போர் இரு நாட்டுப் பொருளாதாரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. உலகின் முன்னணி இறக்குமதி நாட்டுக்கும் முன்னணி ஏற்றுமதி நாட்டுக்கும் இடையில் தொடங்கிய வர்த்தகப் போர் 2019இலும் தொடரும் ஆனால் சில விட்டுக்கொடுப்புக்களை செய்து இரு நாடுகளும் போரைத் தணிக்கும் ஆனால் போர் முடிவிற்கு வராது. ஒரு நாட்டுப் பொருட்களின் இறக்குமதி மீது மற்ற நாடு வரி விதிப்பது தொடரும் ஆனால் அதிகரிக்கப்படாமல் இருக்கும். சிறிய குறைப்புக்கள் செய்யப்படலாம்.

பாக்கிஸ்த்தானின் கள்ளத் தொடர்புகள்
ஆப்கானிஸ்த்தானில் உருவான இஸ்லாமியத் தீவிரவாதத்தால் பாக்கிஸ்த்தான் 77,000 படையினரையும் 107பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளது. அதற்கான நன்றியாக பாக்கிஸ்த்தானுக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது என பாக்கிஸ்த்தான் அதிருப்தியடைந்துள்ளது. பாக்கிஸ்த்தானுக்கு அமெரிக்கா செய்த நிதி உதவிக்கு பதிலாக தமக்குக் கிடைத்ததெல்லாம் பொய்யும் ஏமாற்றமும்தான் என 2018இல் அமெரிக்க அதிபர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு ஆப்க்கானிஸ்த்தானையோ அல்லது இஸ்லாமியத் தீவிரவாதத்தையோ மட்டும் கொண்டது அல்ல. இந்திய எழுச்சியை தடுப்பதற்கும் பயன்பட்டது. ஆனால் இப்போது சீன எழுச்சியை தடுக்க அமெரிக்காவிற்கு இந்தியா அவசியம் தேவைப்படுகின்றது. 208இல் மோசமாக இருந்த  அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு 2019இல் மேலும் மோசமடையும். ஆனால் முறிவடையாது.
இந்தியாவில் தேர்தலோ தேர்தல்!
இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் 2019 மே மாதம் நடக்கவிருக்கின்றது. அதற்கு முன்னோடியாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்த்தான், சதிஷ்கர், மிஸ்ரோம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. காங்கிரசுக் கட்சிக்கு செல்வாக்கு அதிகரிப்பதாக மாநிலக் கட்சிகள் உணர்ந்தால் அவை காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பலாம். தெலங்கானாவில் வெற்றி பெற்ற கே சந்திரசெகர் ராவ் பிற மாநிலங்களுக்குப் பயணம் செய்து மூன்றாம் அணி ஒன்றை அமைப்பதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே இப்படியான ஒரு முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜீ ஈடுபட்டுள்ளார். மூன்றாம் அணி என்பது காங்கிரசின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதற்கான ஒன்றே. சரக்கு மற்றும் சேவை வரியும் பண நோட்டுக்களைச் செல்லுபடியற்றதாக்கியதும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் சரித்தது. சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பில் மக்கள் விரும்பத்தக்க சில மாற்றங்களை பாஜக அரசு கொண்டு வரவிருக்கின்றது. அத்துடன் உலகச் சந்தையில் சரியும் எரிபொருள் விலையும் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையவிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை தாழ் நிலையில் 2019 மே மாதம் வரை இருக்க வேண்டும். பன்னாட்டு நாணய நிதியம் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றி சாதகமான அறிக்கையை வெளியிட்டதுடன் 2019-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி பிரித்தானியாவிலும் பார்க்க அதிகரித்து இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என எதிர்வு கூறியுள்ளது
பிரச்சனைகளைச் சமாளிக்கும் சீனா
2018இல் சீனா பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்தை சீர்திருத்த எடுக்கும் முயற்ச்சிகளுக்கான பயன்கள் மிக மெதுவாகவே பயன் தருகின்றன. தொழில்நுட்பத்திலும் படைத்துறையிலும் சீனாவின் மேம்பாடு 2019இலும் சிறப்பானதாகவே இருக்கும். தென் சீனக் கடலில் சீனாவை அசைப்பது கடினம் என உலகம் உணர்ந்து கொள்ளும் நிலை 2019இல் உருவாகும். அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மறைமுக எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். சீனாவும் இரசியாவும் பல துறைகளில் ஒத்துழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இரு நாடுள் மீதும் அவற்றின் எதிரிகளின் வளர்ச்சியும் சதியும் அதிகரிக்கும். சீனாவின் ஒரு வலயம் ஒரு பாதை என அழைக்கப்படும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கு நாடுகளால் தீவிரமாக மேற்கொள்ளும்.
சலங்கை அறுந்த இலங்கை.
அடிபட்ட புலியாக மஹிந்த 2018இன் இறுதிப் பகுதியில் மஹிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிரிசேனாவும் இணைந்து இலங்கை கலங்கடித்தனர். மஹிந்த தலைமை அமைச்சராக தொடர முடியாமல் போனது இருவருக்கும் அவமானகரமானதாகும். 2009-ம் ஆண்டின் பின்னர் உலக அரங்கில் ஒரு மோசமான தலைக்குனிவு இலங்கைக்கு 2018இல் ஏற்பட்டது. 2019இல் மஹிந்தவும் மைத்திரியும் ரணிலின் ஆட்சிக்கு 2019இல் தொல்லைகள் கொடுக்கலாம் ஆனால் தொலைக்க முடியாது. இதுவரை காலமும் சராசரியாக 4.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கண்ட இலங்கைப் பொருளாதாரம் தற்போது மூன்று விழுக்காடு மட்டுமே வளர்கின்றது.
இணையவெளியின் ஆண்டு
2018-ம் ஆண்டு இணைய வெளியின் ஆண்டாக இருந்தது. 2019-ம் அப்படியே தொடரும். 2019இல் இணையவெளிப் பாதுகாப்பில் எல்லோரும் அதிக கவனம் செலுத்துவர். சமுகவலைத்தளங்கள் தம்மீது மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையைக் களைய பல விதங்களில் முயற்ச்சி செய்யும்.
2018இன் சோதனைகள் 2019இலும் தொடரும் வேதனைகள் தீராது.

Friday, 30 November 2018

அமெரிக்க சீனப் போர் எப்படி இருக்கும் ?


அமெரிக்காவின் ஐரோப்பாவிற்கான படைத்தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பென் கொட்ஜெஸ் 2018 ஒக்டோபர் மாதம் 24-ம் திகதி போலாந்து தலைநகரில் நடந்த வார்சோ பாதுகாப்பு மன்றத்தில் உரையாற்றும் போது அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவும் சீனாவும் போர் புரிவது தவிர்க்க முடியாதது என்றார். 1990-ம் ஆண்டு சீனா செய்த படைத்துறைச் செலவிலும் பார்க்க பத்து மடங்கு தற்போது செலவு செய்கின்றது. நீண்ட காலமாக எந்தவிதப் போர் முனை அனுபவமும் இல்லாமல் இருக்கும் சீனா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு காத்திரமான எதிரியுடன் மோதி வெற்றி பெற வேண்டும்.

மாநாட்டில் மோதல்
பப்புவா நியூகினியில் நடந்த ஆசிய - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க துணை அதிபர் சீனாமீது கடும் சாடலைச் செய்திருந்தார். ஆசிய பசுபிக் நாடுகள் சீனாவிடமிருந்து கடன் வாங்கி தங்களது உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ். மேலும் அவர் அக் கடன் பத்திரங்களில் மறைமுகமான நிபந்தனைகள் இருக்கின்றன என்றார். அதற்கு முன்னர் இன்னும் ஒரு மாநாட்டில் உரையாற்றும் போது மைக் பென்ஸ் சீனாவை அமெரிக்காவின் எதிரி நாடு எனப் பிரகடனப் படுத்தினார்.

தூங்கும் புலியை இடறாதீர்கள்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாவீரன் நெப்போலியன் சீனாவைத் தூங்க விடுங்கள் அது விழிப்படையும் போது உலகை உலுப்பும் என்றார். வயல்களுக்குள் முடங்கிக் கிடந்த விழிப்படைந்தது மட்டுமல்ல அது உலகின் தொழிற்சாலையாக மாறிவிட்டது. சீனா உலகை உலுப்பினால் அதன் தொழிற்சாலைகளும் பாதிக்கப்படும் என்பதால் அது அமைதியாக எழுச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அந்த அமைதியான எழுச்சியில் சீனா போர்களைத் தவிர்த்து வந்தது. அதனால் சீனா ஒரு போர் அனுபவம் இல்லாத நாடாக இருக்கின்றது. 1971-ம் ஆண்டு சீனாவும் இந்தியாவும் 13 நாட்கள் போர் புரிந்தன. அமெரிக்கா உருவான நாளில் இருந்து தொடர்ச்சியாகப் போரில் ஈடுபடுகின்றது. அது தனது சரித்திரத்தில் 134இற்கு அதிகமான போர்களைக் கண்டுள்ளது. போரில் ஈடுபடாமல் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்திய சீனா தனது மிகையான அந்நியச் செலவாணி இருப்பைப் பயன்படுத்தி உலகெங்கும் பல துறைமுகங்களை தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பியத் துறைமுகங்களில் 10 விழுக்காடு சீனாவிற்கு சொந்தமானது. உலகின் முதற் பதினெட்டு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் தனக்கு என ஒரு துறைமுகம் இல்லாத நாடு ஒன்று கூட இல்லை. அந்த அளவிற்கு துறைமுகங்களும் பொருளாதாரமும் தொடர்புபட்டுள்ளன.  

சாட்சியாக சரித்திரமும் துசிடைட் பொறிக் கோட்பாடும்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் நடக்கும் என்பதற்கு பல சரித்திர நிகழ்வுகள் ஆதாரமாக இருக்கின்றன அத்துடன் கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி (Thucydides’s trap) என்னும் கோட்பாடும் அதை உறுதி செய்கின்றது. புதிதாக ஒரு பெரு வல்லரசு உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் பெருவல்லரசுடன் மோதலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது. சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரத்தில் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தன. அதனால் அவை இரண்டுக்கும் இடையில் நேரடிப் போர் நடக்கவில்லை. பனிப்போர் என்னும் பெயரில் பெரும் போட்டி நிலவியது. ஆனால் உலகப் பெருவல்லரசாக நிலைப்பதற்கு தேவையான பொருளாதார வலு சோவியத் ஒன்றியத்திடம் இல்லாததால் அது சிதைந்து போனது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வல்லரசாக உருவெடுத்த போது ஸ்பெயினிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் பெரும் கடற்போர் நடந்து ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டது. நெப்போலியன் பிரான்சை பெரு வல்லரசாக்க முயன்றபோது இரசியாவுடனும் பிரித்தானியாவுடனும் போர் புரிந்து தோற்கடிக்கப்பட்டர். உதுமானியப் பேரரசு உலகை ஆள முற்பட்டதால் முதலாம் உலகப் போரும் ஹிட்லர் உலகை ஆள முற்பட்டதால் நடந்தன. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் பெருவல்லரசாக முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கும் ஏற்கனவே உலகப் பெருவல்லரசாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு போர் நடப்பது தவிர்க்க முடியாது என்பது 2400 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி என்னும் கோட்பாடு எதிர்வு கூறியுள்ளது.

அமெரிக்க சீனக் கடற்போர்
2017-ம் ஆண்டு சீனக் கடற்படையினரிடம் 328 கப்பல்கள் இருந்தன. 2018இல் அது 350 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் சீனாவிடம் தற்போது அமெரிக்காவிலும் பார்க்க அதிக அளவு கப்பல்கள் உள்ளன. உலகிலேயே அதிக அளவு கப்பல் உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதனால் விரைவில் சீனாவின் கடற்படைக் கப்பல்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கும். சீனா ஆண்டு தோறும் மூன்று நீர் மூழ்கிக் கப்பல்களை உற்பத்தி செய்கின்றது. 2020-ம் ஆண்டு சீனாவிடம் எழுபதிற்கும் அதிகமான நீர்முழ்கிக் கப்பல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சீனாவின் கப்பல்கள் நவீனமடைந்து வருகின்றன. 2018-ம் ஆண்டில் அமெரிக்காவின் கடற்படையின் மொத்தக் கலன்களின் எண்ணிக்கை 280ஆகும். ஆனால் அமெரிக்காவிடம் பத்து நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பயிற்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தக் கூடியது. எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமல்ல தர அடிப்படையிலும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் மேம்பட்டவையாகும். அமெரிக்கா தனது நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அகற்றிவிட்டு அவற்றின் இடத்திற்கு ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்து விட்டது. CVN -21 என்னும் குறியீட்டுப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் USS Gerald R Ford (CVN 78), USS John F Kennedy (CVN 79) ஆகிய இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உருவாக்கம் தொடங்கி விட்டன. ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் விமானம் தாங்கிப் பெருங்கப்பல்கள் என அழைக்கப்படுகின்றன.  2058-ம் ஆண்டு அமெரிக்கா பத்து ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா கொண்டிருக்கும். கடற்போரில் சீனா பின்னடைவைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றது.            

தென் சீனக் கடல்தான் போர் முனையா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் தென் சீனக் கடலில் ஆரம்பிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இரசியா கிறிமியாவை 2014 மார்ச் மாதம் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்த போது அமெரிக்காவால் தென் சீனக் கடலில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலையை சீனா தனக்கு சாதகமாகப் பாவித்து சீனா தென் சீனக் கடலில் தானது செயற்கைத் தீவு உருவாக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்தியது. ஆரம்பத்தில் அச் செயற்கைத் தீவில் படைக்கலன்கள் நிறுத்தப் பட மாட்டாது என அறிவித்த சீனா பின்னர் நாளடைவில் பல படைக்கலன்களை அத் தீவுகளில் நிறுத்திக் கொண்டிருக்கின்றது. 2014இல் சீனா கடலுக்குள் எழுப்பும் பெரும் சுவர் என அத்தீவுகள் விமர்சிக்கப்பட்டன. இப்போது சீனா அத்தீவுகளில் பெருமளவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளான சாம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. சீனா கடலுக்குள் எழுப்பும் சாம் பெருஞ்சுவர் என தென் சீனக் கடல் தீவுகள் தற்போது அழைக்கப்படுகின்றன. பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஜப்பான், குவாம் தீவு ஆகியவற்றில் அமெரிக்கா வைத்திருக்கும் படைத்தளங்களை எதிர் கொள்ளவே சீனா தனது ஏவுகணைகளை தென் சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. சீனா அமெரிக்க ஏவுகணைகளில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமயை வாங்கியுள்ளது.

ஆளில்லாப் போர்
இனி வரும் காலங்களில் ஆளில்லாப் போர் விமானங்கள் போரில் அதிகம் பாவிக்கப்படும். 2018 நவம்பர் 6-ம் திகதியில் இருந்து 11-ம் திகதி வரை நடந்த வான் கண்காட்சியில் சீனா காட்சிப்படுத்திய ஆளில்லா விமாங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. சிலர் சீனா ஆளில்லா விமான உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சிவிட்டது என்றனர். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடந்தால் ஆளில்லாப் போர் விமானங்கள் பெருமளவில் பயன் படுத்தப்படும். 2023-ம் ஆண்டில் இருந்து சீனா பெரும் மக்கள் தொகைக் கட்டமைப்பை சந்திக்க வேண்டியிருக்கும். நாட்டில் வயோதிபர்களே அதிகம் இருப்பார்கள். அதனால் இனி வரும் காலங்களில் அமெரிக்கா இயந்திர மனிதர்களை போரில் ஈடுபடுத்தும். செயற்கை விவேகத் துறையில் அமெரிக்காவும் கடுமையாகப் போட்டியிடுகின்றன. டென்மார் நாட்டில் இருந்து சீனா போர்க்களத்தில் பாவிப்பதற்கான மென்பொருளை வாங்கியுள்ளது. அமெரிக்க சீனப் போரில் மரபு வழிப் போர் தொடங்க முன்னர் இணையவெளிப் போர் நடக்கும்.                                    

சீனப் பொருளாதாரத்தின் கழுத்தில் அமெரிக்க கத்தி
சீனாவைச் சுற்றிவர அமெரிக்கா அமைத்துள்ள கடற்படைத் தளங்களுக்குள் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள கடற்படைத் தளங்கள் முக்கியமானவையாயும். அமெரிக்காவிற்கு சொந்தமான குவாம் தீவிலும் அமெரிக்கா பெரும் கடற்படைத் தளத்தை வைத்துள்ளது. மலேசியாவில் இருக்கும் அமெரிக்கக் கடற்படை சீனாவின் பொருளாதாரத்தின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள கத்தி எனச் சொல்லலாம். மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்க நீரிணையைத் தாண்டி சீனக்கப்பல்கள் பயணிக்காமல் அமெரிக்காவால் தடுக்கலாம்.

போரில் நட்பு முக்கியம்
அமெரிக்காவிற்கு எதிரான போரில் சீனா வெற்றியடைந்தால் இந்தியாவின் வட கிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா ,சிக்கிம் திரிபுரா ஆகிய மாநிலங்களை சீனா அபகரிக்கும். அதனால் அமெரிக்க சீனப் போரில் சீனா வெற்றியடையாமல் இருப்பத இந்தியா உறுதி செய்வது மிகவும் அவசியம். இதே நிலைமைதான் ஜப்பானுக்கும். சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொள்வதில் ஜப்பான் அதிக விருப்பம் கொண்டுள்ளது. சீன பாக்கிஸ்த்தான் உறவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைய வளர்ச்சியடைய இந்தியா சீனாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணையும் வாய்ப்புக்களும் அதிகரித்துக் கொண்டே போகும்.

சீனப் பொருளாதார வளர்ச்சி தொடருமா?
அமெரிக்காவுடன் போரில் வெல்வதற்கு சீனாவிடம் உறுதியான பொருளாதாரம் அவசியம். தொடர்ந்து நான்கு பத்தாண்டுகளாக வெற்றிகரமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் ஒரு முற்றுப் புள்ளிக்கு வரலாம். அது தேய்வடையலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் கருத்தை சீனப் பொதுவுடமைக் கட்சியினர் மறுக்கின்றனர். தமது திட்டமிட்ட பொருளாதாரம் முதலாளித்துவப் பொருளாதாரம் போல் தளம்பாது என்கின்றனர். அமெரிக்க சீனப் போர் தொடங்குவதற்கான சூழல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும் என உறுதி செய்யப்பட்ட பின்னர் வருவதை சீனா விரும்பும். அதற்கு முன்னர் போரைத் தொடங்க அமெரிக்கா விரும்பும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...