Wednesday, 3 January 2018

2018இல் உலகம் எப்படி இருக்கும்?

எரிந்து முடிந்து கொண்டிருக்கும் சிரியா, துள்ளும் வட கொரியா, பரிதவிக்கும் யேமன், 2008இல் தொடங்கி இன்னும் முடியாத உலகப் பொருளாதாரப் பிரச்சனை, திக்கற்று நிற்கும் குர்திஷ் மக்கள், பிராந்திய ஆதிக்கத்திற்கும் போட்டியிடும் ஈரானு, சவுதி அரேபியாவும், தொடர்ந்து வஞ்சிக்கப்படும் பலஸ்த்தீனியர்கள், அசைக்க முடியாத நிலையை உறுதி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல், தென் சீனக் கடலை மெதுவாகவும் உறுதியாகவும் ஆக்கிரமிக்கும் சீனா, சுயநலனை முன்வைப்பதை அதிகரித்த ஐக்கிய அமெரிக்கா, சமூக பொருளாதாரச் சிக்கல் மிகுந்த தென் அமெரிக்கா போன்றவற்றை உலகம் தலையில் சுமந்த படி 2018இல் காலடி எடுத்து வைக்கின்றது.

Cyber Pearl Harbour and Cyber NATO
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பைக் கொடுத்த Pearl Harbour தாக்குதல் போல அமெரிக்காமீது ஒரு இணையவெளித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் அமெரிக்கப் பாதுகப்புத் துறையினரை கடந்த சில ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துள்ளது. அது போன்ற நாடுகள் கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மீதும் செய்யப்படலாம் என்ற அச்சமும் பரவலாக உண்டு அதைத் தடுக்க ஒரு Cyber NATO உருவக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நாடுகள் இணையவெளிப் போர் புரியும் ஆற்றலுக்கும் இணையவெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் ஆற்றலுக்கும் அதிகம் செலவு செய்யும். எல்லா மேற்கு நாடுகளும் இணைந்து இணையவெளித் தாக்குதலுக்கு எதிராக NATO போன்ற ஒரு கூட்டமைப்பை உருவாகும்.

ஆசியா
ஜப்பான, சீனா என எழுச்சியுறும் வல்லாதிக்க நாடுகளான ஜப்பானிலும் சீனாவிலும் உறுதியான தலைவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். ஜி ஜின்பிங் தனக்குத்தானே சர்வாதிகாரியாக முடிசூடிக் கொண்டுள்ளார் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதன் உள்நாட்டுப் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபாட்டு இருப்பதும் அங்கு மக்கள் ஒரு பிராந்தியத்தில் இருந்து இன்னொரு பிராந்தியத்திற்கு குடி பெயர்வதற்கு அரச அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனை இருப்பதும் 2018இல் சீன அரசுக்கு தலையிடி கொடுக்கக் கூடிய மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கலாம்.  அதிக வயோதிபர்களைக் கொண்ட மக்கள் தொகை, பாதுகாப்புக்கு அமெரிக்காவில் தங்கியிருப்பு, சீன அச்சுறுத்தல்.
நீண்ட கால மந்த நிலையில் பொருளாதாரம். தென் கொரியாவின் மிரட்டல் ஆகிய பிரச்சனைகள் ஜப்பானை 2018இல் ஆட்டிப் படைக்கப் போகின்றது. இந்த நிலையில் ஜப்பான் தனது அரசுறவியல் கொள்கையை மாற்றி யோசிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் ஒரு பட்டி ஒரு தெரு என்னும் புதியபட்டுப்பாதை திட்டத்தில் ஜப்பான் தானும் இணைவதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. உலக நாடுகள் எங்கும் உட்கட்டுமானங்கள் தொடர்பான ஏற்றுமதி செய்தல் மற்றும் ஈடுபடுதல் போன்றவற்றில் சீனாவிடம் தனது வருமானத்தை ஜப்பான் இழந்து கொண்டிருக்கின்றது. அதை மீளக் கட்டி எழுப்புவதில் சீனாவின் போட்டியாளராக இருப்பதிலும் பார்க்க பங்காளியாக இருப்பதால் ஜப்பான் அதிக நன்மை பெற முடியும் என ஜப்பானியர்கள் கருதுகின்றார்கள். இதில் இணக்கம் கண்டால் அது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான முரண்பாட்டில் விட்டுக் கொடுப்புகள் அல்லது சமரசங்கள் ஏற்பட்டால் சீன விரிவாக்கத்தை தடுக்கும் அமெரிக்க, ஜப்பானிய, இந்தியக் கூட்டணி வலுவிழக்கலாம். ஆனால் ஜப்பான் தனது படைவலிமையை அதிகரிப்பதை நிறுத்தப் போவதில்லை. 2018-ம் ஆண்டில் ஜப்பான் தன்னுடைய உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை அமெரிக்காவின் அதிநவீனமான F-35-B விமானங்கள் தாங்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கவிருக்கின்றது. சீன ஆட்சியாளர்கள் மக்கள் மீதான தமது பிடியை மேலும் இறுக்கவிருக்கின்றார்கள். சீனாவின் காவற்துறை 2018இல் படைத்துறையின் கீழ் கொண்டு வரப்படவிருக்கின்றது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் பெப்ரவரி 9-ம் திகதி முதல் 25-ம் திகதிவரை நடை பெறவிருக்கின்றது. அங்கு வட கொரியாவின் பரப்பரப்புக்கள் பல நடைபெறலாம்.

இந்தியா 2018இல் பாக்கிஸ்த்தானுடனும் பங்களாதேசத்துடனுமான தனது எல்லைகளை அடைத்துக் கொள்ளவிருக்கின்றது. எல்லை தாண்டிய தீவிரவாதம் சட்ட விரோதக் குடிவரவு போன்றவற்றைத் தடுப்பதற்காக இந்தியா இதை முன்னெடுக்கவிருக்கின்றது. 2017-ம் ஆண்டின் இறுதி வாரத்தில் கூட இந்தியாவின் மூன்று படைவீரர்களை பாக்கிஸ்த்தானியப் ப9-டைகள் கொலை செய்தன. அதற்குப் பதிலடியாக இந்தியப் படையினர் எல்லை தாண்டிச் சென்று பாக்கிஸ்த்தானியப் படை நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பினர். அமெரிக்கா இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை வளர்ப்பதும் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் பாக்கிஸ்தானுடன் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதும், இந்தியா பாக்கிஸ்த்தானுடனான படை வலிமை இடைவெளியை தனக்கு சாதகமாக அதிகரிப்பதும் பாக்கிஸ்த்தானை சீனா பக்கம் அதிகம் சாய வைக்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதை பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீருடாகச் செல்வது இந்தியாவை கடும் விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியா தைவானுடன் படைத்துறைத் தொடர்புகளை ஏற்படுத்துவது சீனாவை ஆத்திரப்படுத்துகின்றது. இவற்றால் இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் 2018இல் கடுமையாக முரண்பட வேண்டியிருக்கும்.

ஈரான்
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகியவை தனித்தனியாகவும் இணைந்தும் ஈரானுக்கு பல தொல்லைகளைக் கொடுக்கலாம். எரிபொருள் விலையும் ஈரானுக்கு சாதகமாக இருக்காது. உள்நாட்டில் இயல்பாகவும் வெளிநாடுகளின் தலையீட்டுடனும் பல குழப்பங்கள் உருவாகலாம். 2018இல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளை ஈரான் எதிர் கொள்ளவேண்டியிருக்கும். லெபனான் வரை தனது ஆதிக்கத்தை நீட்டும் ஈரானின் திட்டம் பல சவால்களை எதிர்கொள்ளும். ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலிடமிருந்து பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

கிழக்கு ஐரோப்பியா
உக்ரேனில் பிரச்சனை உக்கிரமடையும். ஏற்கனவே உக்ரேனுக்கு ஜவலின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்யும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. உக்ரேனுக்கு தாக்கும் திறன் கொண்ட படைக்கலன்களை வழங்குவதில்லை என்ற கொள்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக 2017இன் இறுதியில் முடிவு செய்தது. இது இரசியாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உலகின் தரம் மிக்க தாங்கிகளை உற்பத்தி செய்யும் இரசியாவின் தாங்கிகளை எதிர்க்கக் கூடிய வகையில் அமெரிக்கா உருவாக்கிய ஜவலின் ஏவுகணைகளை உக்ரேனில் பரீட்சித்துப் பார்க்க அமெரிக்கா முயல்வதாகத் தெரிகின்றது. அமெரிக்காவின் FGM-148 Javelin ஏவுகணைகள் தனி ஒருவரால் தூக்கிச் செல்லக் கூடியது. அதனால் மறைந்திருந்து தாக்குவதற்கு இலகுவானதாகும். இவை அமெரிக்காவின் இரு பெரும் படைக்கல உற்பத்தி நிறுவனங்களான Raytheon, Lockheed Martin ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டவை. பெலரஸ் 2018இல் இரசியாவிடமிருந்து மின்சாரம் வாங்கப் போவதில்லை என 2017இன் இறுதியில் பெலரஸ் அறிவித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரசியாவுடன் படைத்துறை ரீதியில் அதிக ஒத்துழைப்புச் செய்யும் நாடு பெலரஸ் ஆகும். பெலரஸை ஒரு சர்வாதிகாரி போல் ஆண்டு கொண்டிருக்கின்றார் அலெக்சாண்டர் லுக்காஷெங்கோ. அவரது ஆட்சி முறைமை ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது நேட்டோவிலோ இணைவதற்கு ஏற்புடையதல்ல. ஆனால் இரசியாவிற்கான பெலரஸின் கேந்திர முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து அவர் இரசியாவுடன் பொருளாதார ரீதியில் பேரம் பேச முயல்வது எப்படி வெற்றியளிக்கும் என்பதை 2018 எமக்குச் சொல்லும். ஆனால் பெலரஸை தமது நாட்டின் ஒர் பகுதியாகப் பார்க்கும் விளடிமீர் புட்டீனின் கொள்கையை பெலரஸியர்கள் விரும்பவில்லை. தமது அயல் நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுமான லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைந்திருப்பதை. பெலரஸியர்கள் அக்கறையுடன் அவதானிக்கின்றார்கள். அந்த மூன்று போல்ரிக் நாடுகளின் அபிவிருத்தி பெலரஸை இரசியாவிடமிருந்து விலகத் தூண்டும் என்பதை புட்டீன் அறிவார். அதனால் அந்த போல்ரிக் நாடுகளுக்கு பிரச்சனை கொடுத்து பெலரஸை அடக்கும் முயற்ச்சியில் 2018இல் புட்டீன் ஈடுபடலாம்.

மேற்கு ஐரோப்பா
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, ஜேர்மனியில் உறுதியற்ற ஆட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களை மீறும் போலாந்து, அதை வழிமொழியும் ஹங்கேரி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல தலையிடிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுக்க விருக்கின்றது.

தேர்தல்கள் நிறைந்த அமெரிக்கா
2018-ம் ஆண்டு நவம்பரில் ஐக்கிய அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. மூதவையில் 33 தொகுதிகளுக்கான தேர்தலும் அத்துடன் நடக்கும். பிரேசிலிலும் மெக்சிக்கோவிலும் அதிபர் தேர்தல் 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கின்றது. மெக்சிக்கோ அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும். அமெரிக்காவின் 482,000 வேலைவாய்ப்புக்கள் மெக்சிக்கோவுடனான வர்த்தகத்தில் தங்கியிருக்கின்றது. கியூபாவின் தற்போதைய அதிபர் ராவுல் காஸ்ரோ 2018இல் ஓய்வு பெற உப அதிபர் Miguel Díaz-Canel அவரது இடத்திற்கு வரவிருக்கின்றார். பெருவில் நடைபெறவிருக்கும் தென் அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டிலும் ஆர்ஜெண்டீனாவில் நடை பெறவிருக்கும் G-20 நாடுகளின் மாநாட்டிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்கின்றது டிரம்பின் வித்தியாசமான நிலைப்பாடு மற்ற நாட்டுத் தலைவர்கள் பலரை அவர் நேரில் சந்திப்பதில் அவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும். ஹ்யூமோ சாவோஸ் 1999-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட உள் நாட்டுக் குழப்பம் அங்கிருந்து இரண்டு மில்லியன் மக்களை வெளியேற்றியுள்ளது. 2018-ம் ஆண்டிலும் பெருமளவு மக்கள் வெளியேறலாம். அது பிராந்திய அமைதிக்குப் பாதகமாக அமையலாம். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளிடையேயான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். 2018-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கைக்களுக்கு குறைவிருக்காது.

பங்குச் சந்தை
உலகப் பங்குச் சந்தை 2017இல் சாதனை மிகு வளர்ச்சியைக் கண்டபடியால் சில அதிக விலைகளைச் சரி செய்யும் வகையில் 2018இல் பங்குச் சந்தை வளவர்ச்சி மிதமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. உலகப் பொருளாதார வளர்ச்சி வளர்முக நாடுகளின் அதிலும் முக்கியமாக இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் தங்கியுள்ளது. 2018இல் 10முதல் 15 விழுக்காடு வளர்ச்சியை உலகப் பங்குச் சந்தை பெறலாம்.

தொழில்நுட்பமும் எரிபொருளும்
பட்டரி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து பட்டரியில் இயங்கும் வாகனங்களின் பாவனை அதிகரிக்கும். அது எரிபொருள் விலைகளுக்கு சவாலாக அமைவதல் எரிபொருள் விலை 2018இலும் மந்தமாகவே இருக்கும். எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் தலைமையை சவுதி அரேபியா இழக்கும் வாய்ப்பு உள்ளது. இரசியா தலைமை தாங்கலாம், ஒபெக் என்ற அமைப்பே செயலிழக்கலாம் அல்லது கலைக்கப்பட்டு புதிய அமைப்பு இரசியா தலைமையில் உருவாகலாம். 3D அச்சு, செயற்கை விவேகம் போன்ற தொழில் நுட்பங்களும் ஆளில்லா விமானங்கள் மூலமான விநியோகங்களும் 2018இல் மேன்மையடையும். மைக்குறோசொப்ட் இன் அதிபர் பில் கேட்ஸ்ஸின் கருத்துப்படி இனி வரும் காலங்களில் விஞ்ஞானம், இயந்திரவிய, பொருளாதாரம் ஆகியவற்றில் திறன் மிக்கவர்களுக்கே வேலை வாய்ப்புக்களின் முதலிடம் கிடைக்கும்.
 

ஊடகங்கள் – சமூகவலைத்தளங்கள்

பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கு சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படும் அவற்றிற்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பெரும் செல்வந்தர்கள் கைகளில் பல ஊடகங்கள் இருப்பதால் சமூகவலைத்தளங்களின் பாவனை 2018இல் அதிகரித்துக் கொண்டே போகும்.

மேற்காசியா
சவுதி அரேபியா பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் என்பது மட்டுமல்ல பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும். பல அபிவிருத்தித் திட்டங்களைக் கைவிட வேண்டி வரும். சவுதி அரேபியாவின் இஸ்ரேலை எதிர்க்காத நிலைமை வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பைப் பாதித்து மேற்காசிய கேந்திரோபாய சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பலஸ்தீனியர்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும். 2018இல் புதிய அணுகு முறைகளை பலஸ்த்தீனியர்கள் மேற்கொள்ளுவார்கள்.

Fintech என்னும் நிதித் தொழில்நுட்பம்
நிதித்தொழில்நுட்பம் என்பது நிதிச் சந்தை, பங்குச் சந்தை, வங்கித் துறை, மறைந்தநாணயங்கள் (crypto-currencies) ஆகியவற்றில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தை இணைத்து அதன் மூலம் அவற்றின் நடவடிக்கைகளை இலகு படுத்துவதும் துரிதப்படுத்துவதுமாகும். Fintech நிதித் தொழில்நுட்பத்தில் இலண்டன் தனது மேலாண்மையை உறுதி செய்யும் வகையில் 2017-ம் ஆண்டு பல முதலீடுகளைச் செய்துள்ளதுசன்பிரான்ஸிஸ்கோ, பீஜிங், நியூயோர்க் ஆகிய நகரங்கள் நிதித்தொழில்நுட்பத்தில் ஏற்கனவே முன்னணி நிலையில் உள்ளன. நிதித்தொழில்நுட்பத்தின் மூலம் இலண்டனில் 2.4பில்லியன் முதலீடுகள் நிதிச் சந்தையில் பெறப்பட்டுள்ளன. இது மற்ற ஐரோப்பிய நகரங்களான ஸ்ரொக்ஹொம், பரிஸ், அம்ஸ்ரடம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும். 2017-ம் ஆண்டு இந்தத் துறையில் பிரித்தானியா 825மில்லியன் பவுண் முதலீடு செய்துள்ளது.


இணையவெளிப் போர் முறைமை
2018இல் அதிகம் செய்திகளில் அடிபடவிருப்பது இணையவெளிப் போர் முறைமை, இணைய வெளித் திருட்டு மற்றும் ஊடுருவல்களே. இவற்றிற்கு எதிரான பாதுகாப்புக்களில் எல்லா நாடுகளும் அக்கறை செலுத்தும். இணையப் பாவனை தொடர்பான் நம்பிக்கையீனம் 2018இல் அதிகரிக்கும். நாடுகள் தமது தேர்தல்களை இணையவெளியூடான பாதிப்பில் இருந்து பாதுகாப்பதில் அதிக அக்கறைக் காட்டும். போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் போன்றவற்றில் இணையவெளித் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கான தொழில்நுட்பத்தை உள்ளடக்குதல் 2018இல் அதிகரிக்கும். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் இரசியா இணையவெளி மூலம் பரப்புரைகளைச் செய்தும் இணையவெளி ஊடுருவல் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்தும் தனக்கு சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்தும் முயற்ச்சியில் ஈடுபடலாம் என இரு அமைப்புக்களும் கரிசனை கொண்டுள்ளன. இதற்காக அந்த நாடுகளுடன் பாதுகாப்புத் துறையிலும் இணையவெளியிலும் பல ஒத்துழைப்புக்களை மேற்கொள்ளவிருக்கின்றன. அதில் முதற்படியாக 2018-ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியமும் போலாந்தும் பல ஒத்துழைப்புக்களைச் செய்யவதற்காக தலைமை அமைச்சர் தெரெசா மே 2018இன் முற்பகுதியில் போலாந்து செல்லவிருக்கின்றார்.


தேசியவாதங்களும் பிரபலவாதங்களும் அதிகரிக்கவிருக்கும் 2018இல் உலக வருமான சமமின்மை, போர்கள், போன்ற முக்கிய பிரச்சனைகளைத் தீர்வுகாண முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத்தனம் 2018இல் மேலும் அம்பலமாகும். 

Sunday, 31 December 2017

2017 ஒரு மீள் பார்வை

துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லின் இரவு விடுதியில் உஸ்பெக்கிஸ்த்தானிய இளைஞர் துப்பாக்கியால் சுட்டு 39 பேரைக் கொலை செய்ததுடன் 2017-ம் ஆண்டு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்று சாட், லிபியா, ஈரான், யேமன், சிரியா, சோமாலியா ஆறு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதை தடை விதிப்பது என்ற குண்டை வெடிக்க வைத்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சாதியையும் மதத்தையும் வைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்ய முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு மட்டும்தான். உலகத்திலேயே சாதியை ஏற்றுக் கொண்ட ஒரே அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்பு.

அசிங்கப்பட்டாண்டா அமெரிக்காக்காரன்
தனக்குச் சாதகமாக இல்லாதவை எல்லாம் போலிச் செய்திகள் என ஒரு புறம் டொனால்ட் டிரம்ப் அதிர்ந்து கொண்டிருக்க அவர் பதவி ஏற்ற முன்னரே அவரது தேர்தல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பித்துவிட்டன. உலகெங்கும் தேர்தல்கள் பலவற்றில் தலையிட்டு ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் அமெரிக்காவின் தேர்தலில் இரசியா தலையிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பது தொடர்பான விசாரணையும் பல குற்றப் பத்திரிகைகளும் 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. வெள்ளை மாளிகையில் ஒன்றுமாக டுவிட்டரில் ஒன்றுமாக டிரம்ப் இரண்டு ஆட்சிகள் செய்து கொண்டிருக்கின்றார். பாக்கிஸ்த்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

கலங்கடித்தார் கிம் ஜொங் உன்
2017இல் உலகைக் கலங்கடித்து அமெரிக்காவைத் திணறடித்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆவார். சீனா அவருக்கு எதிராக உருவாக்கலாம் எனக் கருதப் பட்ட அவரது மாற்றன் தாய் மகன் மலேசிய விமான நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது தொடர்ச்சியான அணுக்குண்டுப் பரிசோதனைகளையும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா தடுமாறுகின்றது. டிரம்ப் வட கொரியாவை முழுமையாக அழிக்கப்படும் என்ற மிரட்டல் கூட எடுபடவில்லை.

சரிந்த இஸ்லாமிய அரசு
2017இல் ரக்கா, ரமாடியா, மொசுல் எனப் பல நகரங்களை ஐ எஸ் அமைப்பு சிரியாவிலும் இழந்தது. அவர்களின் இஸ்லாமிய அரசு ஆட்டம் காண்கின்றது. அவர்களுக்கு எதிரான போரில் பாவிக்கப் பட்ட குர்திஷ் மக்கள் மீண்டும் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களது தனிநாடு கோரும் கருத்துக் கணிப்புக்கு வலிமையான மக்கள் ஆதரவு இருந்த போதும் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் எதிர்ப்பை மட்டும் பெற்றது. ஸ்பெயினில் இருந்து கடலோனியர்கள் பிரிந்து செல்வதற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கு எதிராக ஸ்பானிய அரசு கடுமையாக நடந்து கொண்டது. 

சறுக்கிய சவுதி
 2017இல் உலகத்தை அதிர வைத்தது சவுதி அரேபியா. யேமனில் இறப்பு வீடுகள், மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புக்கள் என கண்டபடி குண்டுகளை வீசி அப்பாவிகளைக் கொலை செய்து கொண்டிருக்கும் சவுதி அரேபியாவில் வழமைக்கும் மரபிற்கும் மாறாக மன்னர் தனது மகன் MBS என மேற்கு நாட்டு ஊடகங்கள் செல்லமாக அழைக்கும் மொஹமது பின் சல்மனை முடிக்குரிய இளவரசர் ஆக்கினார். அவர் தனது மேற்கு நாட்டு இரசிகர்களைத் திருப்திப் படுத்த பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையைத் தளர்த்தினார். சவுதிக்குப் போட்டியாக ஈரானும் பெண்களுக்கு சாதகமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஈரானுக்கும் சவுதிக்கும் இடையிலான பிராந்திய ஆதிக்கப் போட்டி சிரியாவில் இரத்தக் களரியை ஏற்படுத்தி அந்த நாட்டை சின்னா பின்னப் படுத்தியது. சவுதி விரும்பியது போல் சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை உருவாக்க முடியாமல் போனது அதற்கு பெரும் தோல்வியே. அடுத்து லெபனான் தலைமை அமைச்சரைப் பதவி விலக்க சவுதி எடுத்த முயற்ச்சியும் தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து எரிபொருள் விலை மந்தமாக இருப்பது சவுதிக்கு அடுத்த பேரிடியாக 2017இல் அமைந்தது.

ஆக்கிரமிப்பைத் தொடரும் இஸ்ரேல்
 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரின் ஐம்பதாண்டு நிறைவு 2017இல் வந்தது. அப்போது இஸ்ரேல் ஜோர்தானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசலேமையும் தன்னிடம் ஏற்கனவே இருந்த மேற்கு ஜெருசலேமையும் இணைத்த நகரில் தனது இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை அமைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதற்கு எதிராக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்படப் பல நாடுகள் குரல் கொடுத்தன.

திசை மாறிய ஊடகத்துறை 
சமூகவலைத்தளங்களின் ஆதிக்கம் உலகத் தொடர்பாடலில் 2017இலும் இருந்தது. அதற்கு எதிரான சதிகள் பல 2017இல் மேற்கொள்ளப்பட்டன. இரசியா அமெரிக்கத் தேர்தலில் தலையிட முகநூலைப் பாவித்தது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. 2017 பெண்களுக்கு எதிரான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட பலரை அம்பலப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் அம்பலப் படுத்தின. மியன்மாரில் நடந்த பல படுகொலைகளும் சமூகவலைத்தளங்களினால் அம்பலப்படுத்தப்பட்டன.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத சிம்பாப்பே
சிம்பாப்பேயில் தன் மனைவியை தனக்குப் பின்னர் ஆட்சியில் அமர்த்த முயன்ற முகாபேயை அவரது கட்சியினர் ஆட்சியில் இருந்து அகற்றினர்.
இந்தியப் படைகளும் சீனப் படைகளும் ஒன்றிற்கு ஒன்று அண்மையாக பூட்டான் எல்லையில் முறுகல் நிலையில் இருந்து பின்னர் போர் ஆபத்து தணிந்தது. நேப்பாளத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறையும் உளவுத் துறையும் செய்த தவறுகள் அங்கு இந்தியாவிற்குப் பாதகமான அரசை ஆட்சிக்கு கொண்டு வந்தது.

உக்கிரம் தணியாத உக்ரேன் 
2017-ம் ஆண்டு முழுவதும் உலகில் கொதிநிலையில் உக்ரேன் இருந்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் இரசியாவும் மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தின. சாதகமான முடிவு எட்டப்படவில்லை. ஔமெரிக்கா உக்ரேனுக்கு தாக்குதல் செய்யக் கூடிய படைக்கலன்களை விநியோகிக்க முடிவு செய்தது.

பரிதாபத்துக்குரிய பிரித்தானியா
2017இல் உலகின் முன்னணி நாடுகளில் பரிதாபத்திற்கு உரிய நிலையில் பிரித்தானியா இருந்தது. சிறப்பாகச் செயற்பட முடியாத தலைமை அமைச்சர். அவரை மாற்றினால் கட்சிக்குள் மோதல் தீவிரமடையும் என்பதால் அவரை மாற்ற முடியாமல் ஆளும் கட்சி தவிக்கின்றது. வீராப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்த பிரித்தானியா எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கின்றது. அதே வேளை பிரான்ஸ் சிறாப்பாக ஒரு புதிய அதிபரைத் தேர்ந்தெடுத்தது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நனமை எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்க மூன்றாவது முறையாகவும் ஜேர்மனியில் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்செலா மேர்கெல் உறுதியான ஆட்சியை அமைக்க முடியாமல் தவிக்கின்றார். போலாந்திலும் ஒஸ்ரியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாதகமான ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த போது பிரித்தானிய ஊடகங்கள் அவற்றின் உளவுத்துறைகள் மீது குற்றம் சாட்டின. ஆனால் இலண்டனிலும் மன்செஸ்டரிலும் மோசமான தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன.

அவலப் பட்ட ரொஹிங்கியர்கள்
2017-ம் ஆண்டின் மிகப் பெரும் பேரவலத்தை மியன்மாரில் வாழும் இஸ்லாமியர்களான ரொஹிங்கியர்கள் சந்தித்தனர். மேற்கு நாடுகளின் ஊடகங்களால் சமாதான தேவதையாக விமர்சிக்கப்பட்ட ஆங் சூ கீ அதைக் கண்டிக்காமல் நியாயப் படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார். மியன்மாரில் நடப்பதை இனச்சுத்தீகரிப்ப் என விபரித்தார் ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன். ஆனால் அவரது சுதந்திரமான செயற்பாட்டுக்கு பல இன்னல்கள் வருவதாக அவர் தனது பணிமையில் பணிபுரிவோருக்கு ஆண்டு இறுதியில் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்ததுடன் தான் 2018உடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் இரணாம் காலத்திற்கான பதவி முயற்ச்சியில் தான் ஈடுபடப் போவதிலலை எனவும் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய நாடுகள் கட்டாரைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டன. கட்டார் ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் உறவை வைத்திருப்பதும் அதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டது.

பங்குச் சந்தை
2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகப் பங்குச் சந்தை ஒரு சிறிய அளவு மட்டுமே விலை அதிகரிப்பைக் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டு சாதனை மிக்க ஓர் ஆண்டாகும். கடந்த இருபது ஆண்டுகளில் 2013-ம் ஆண்டும் 2017-ம் ஆண்டும்தான் Dow Jones சுட்டியின் சாதனை மிகு ஆண்டுகளாகும். Dow Jones 26%, S&P 20%, Nasdaq 30% என சுட்டெண் அதிகரிப்பைக் கண்ட ஆண்டு 2017 ஆகும்.  2017-ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை உலகப் பங்குச் சந்தையில் நிகர முதலீடு 149பில்லியன் டொலர்களாகும். இது 2016-ம் ஆண்டு முழுக்க முதலிட்ட தொகையிலும் பார்க்க 16பில்லியன் டொலர்கள் அதிகமானதாகும்.

நுண்நாணயம்(cryptocurrency)
2017-ம் ஆண்டு நுண்நாணயங்களின் ஆண்டாகும். நுண்நாணயங்களில் ஒன்றான Bitcoin 2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் $1000 ஆக இருந்து ஆண்டின் இறுதியில் $19,000 ஆக அதிகரித்தது. ஆண்டின் பிற்பகுதியில் சீனாவும் இறுதிக் பகுதியில் தென் கொரியாவும் நுண்நாணயங்களுக்கு தடை விதித்தமை அதன் பெறுமதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. வட கொரியா பொருளாதாரத் தடைகளை உடைத்தெறிய நுண்நாணயங்களைப் பயன்படுத்தியமை 2017இல் அதன் விலை அதிகரிப்புக்கு வழியமைத்தது.

பட்டுப்பாதை
29 நாடுகளின் அரசுத் தலைவர்கள், உலக வங்கி, பன்னாட்டு நாண்டிய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பல நாடுகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட வலயமும் பாதையும் மாநாடு (Belt and Road Forum)  ஒன்றை சீனா 2017-ம் ஆண்டு மே 14-ம் திகதி அமர்க்களமாக நடத்தியது. டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பிடியும் தலைமையும் ஆட்டம் காணும் வேளையில் அவற்றைத் தான் பிடிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்பதை இந்த மாநாடு சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காணமைத் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்ததமையை சீனா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றது. கொழும்பு பன்னாட்டு நிதி நகரம், கென்யா தொடருந்து திட்டம் போன்றவை எல்லாம் புதிய பட்டுப்பாதையின் பகுதிகளே.
F-35
அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457  F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது.

MiG-29
2017-ம் ஆண்டு ஜனவரி 26-ம்  Mig-35 போர் விமானங்களின் பறப்பை. இதற்கென ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் 3300 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். Mig-35 போர்விமானங்கள் MiG-29இல் இருந்து மேம்படுத்தப்பட்டவையாகும். இப்போர்விமானங்கள் ஆரம்பத்தில் thrust vectoring எனப்படும் திசைமாற்றுத் திறன் தொழில்நுட்பமும் AESA radarரும் இல்லாமல் இருந்தன. பின்னர் அவை Mig-35இல் இணைக்கப்பட்டன. இரசியாவின் RSK-MiG போர்விமான உற்பத்தி நிறுவனத்தின் தொடர் இருப்பை உறுதி செய்யும் வகையில் மிக்-35 போர் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வானில் இருந்து வானுக்கும் தரைக்கும் கடலுக்கும் ஏவுகணைகளையும் குண்டுகளையும் மிக்-35 போர்விமானங்கள் வீசக்கூடியவை. 2018-ம் ஆண்டிற்குள் 37 மிக்-35 போர்விமானங்கள் இரசிய வான்படையில் இணைக்கப்படும்பறப்பு வேகம், தாங்கிச் செல்லக் கூடிய படைக்கலன்களின் எடை(payloads) துரிதமாகத் திசைமற்றும் தன்மை(maneuverability), புலப்படாத்தன்மை (stealth), எதிரி இலக்குகளை இனம்காணும் தன்மை, வானாதிக்கம் செலுத்தும் திறன் (air superiority), பார்வைத் தொலைவு (Beyond Visual Range), எரிபொருள் மீள் நிரப்பும்வரை பறக்கக் கூடிய தூரம் ஆகியவை போர்விமானங்களின் முக்கிய அம்சங்களாகும்

தீவிரவாதம்
22-03-2017 பிற்பகல் 2.-40  ஒரு தாக்குதலாளி ஒரு மகிழூர்தியை ( a motor car that is classified as sport utility vehicle) வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்தின் மேலாக நடந்து சென்றவர்கள் மோதிக் கொண்டு சென்றார். அவரது வண்டி தெரு ஓரத்தில் மோதி மேலும் ஓட்ட முடியாத நிலை வந்தவுடன் கையில் இருந்த சமையலறைக் கத்தியுடன் பாராளமன்ற வளாகத்தினுள் Carriage Gates entrance ஊடாக ஓடினார். அவரைத் தடுக்க வந்த காவற்துறையாளரைக் குத்திய போது இன்னும் ஒரு காவற்துறையாளர் அவரைச் சுட்டுக் கொன்றார். கத்தியால் குத்தப்பட்ட காவற்துறையாளர் அமைச்சர் ஒருவரால் கொடுக்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். தெரு ஓரம் நடந்து சென்றவர்களில் இருவர் கொல்லப்பட்டன்னர் 39 பேர் மருத்தவ மனையில் சிகிச்சை அழிக்கப் படும் வகையில் காயமடைந்தனர். மன்செஸ்டர் நகரிலும் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. 



2017-ம் ஆண்டின் இறுதி அதிரடிகளாக இந்தியா தைவானுடன் தனது உறவுகளை வளர்ப்பதும், இரசியாவில் இருந்து மின்சார இறக்குமதி செய்வதை பெலரஸ் நிறுத்தியதும் அமைந்துள்ளது. 

Friday, 29 December 2017

தலை மோடியின் அலை ஓயப்போவதில்லையா?

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் இரு கட்டங்களாக 2017 டிசம்பர் 9-ம் திகதியும் 14-ம் திகதியும் நடந்தன. இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைக்கான 68 உறுப்பினர்களையும் தேர்தெடுக்கும் தேர்தல் 2017 நவம்பர் 9-ம் திகதி நடந்தது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜாரத்தில் கடந்த நான்கு தேர்தலில் அவரது பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. கடந்த இரண்டு தேர்தல்களில் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. தமிழ்நாடு ஆர் கே நகரில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வியிலும் மோசமான தோல்வையைச் சந்தித்தது.

75 வயது இளையோர்
சீனா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் தீபெத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று வாழ்பவாழும் பெற்றோர்களுக்கு 1950இற்குப் பின்னர் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியாவில் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை உடையவர்கள். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மஹாராஷ்ட்டிரா, ஹரியானா ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களின் போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் பாரதிய ஜனதாக் கட்சி தேர்தலை எதிர் கொண்டது. ஆனால் இமாச்சல் பிரதேசத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் தமுலை அது முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது முதல் ஆச்சரியம். இரண்டாவது ஆச்சரியம் பாரதிய ஜனதாக் கட்சியில் 75-வதுக்கு மேற்பட்டோர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்க முடியாது என்ற விதி இருந்தும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 75 வயதை அடையவிருக்கும் பிரேம்குமா தமுலை அது முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது இரண்டாவது ஆச்சரியம். காங்கிரசுக் கட்சி 83 வயதான வீர்பத்திர சிங்கை முதலமைச்சர் வேட்பாளராகவும் அவரது மகனை சாதரண வேட்பாளராகவும் களமிறக்கியது. இந்தக் களமிறக்கல்கள் அவரவர் சாதிகளைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டது காந்தி பிறந்த மண்ணிற்கு களங்கம் ஏற்படுத்துவதாகும்.

சாதியும் மதவாதமும் நிறைந்த மாநிலம்
இந்தியத் தேர்தலைப் பற்றி அலசும் போது சாதியை முக்கிய காரணியாகக் கொள்ள வேண்டும். அதில் குஜராத் முன்னணி மாநிலம் எனச் சொல்லலாம். குஜராத மத நம்பிக்கை மிகுந்த இந்துக்களைக் கொண்ட மாநிலம். கோவில்களும் இந்து போதகர்களும் நிறைந்த நிலம். ஜவகர்லால் நேருவும் இந்திரா காந்தியும் தம்மை மதசார்பற்றவர்களாகக் காட்டியே அரசியலில் கொலுசோச்சினர். குஜராத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியினரும் ராகுல் காந்தியும் தம்மை மிதவாத இந்துத்துவாக்களாகக் காட்ட முயன்றனர். ராகுல் காந்தி குஜராத் தேர்தல் பரப்புரையின் போது பல இந்துக் கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். தன்னை ஒரு பிராமணர் எனச் சொல்லும் ராகுல் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்வாரா என்பது யாருக்கும் தெரியாது.

முழுப் பரிவாரங்களுடன் களமிறங்கிய மோடி
மோடியும் அவரது 41 துணையாட்களும் குஜராத்திலும் இமாச்சல் பிரதேசத்திலும் பெரும் பரப்புரைகள் செய்தனர். குஜராத்தில் மோடி 34 கூட்டங்களில் உரையாற்றினார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் போலிப் பரப்புரை செய்வதில் மோடி குழுவினர் பின்னிற்பதில்லை. மோடியின் தேர்தல் தளபதியான அமித் ஷா தேர்தலில் வெற்றி பெரும் கலையை தனதாக்கிக் கொண்டவர். காங்கிரசுக் கட்சி முஸ்லிம்களுக்கு ஆதரவானதும் இந்துக்களுக்கு எதிரானதுமான கட்சி என்ற பரப்புரை வெற்றீகரமாகச் செய்யப்பட்டது. உருது மொழி இரண்டாம் அரச மொழியாகக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கான தேர்தல் பரப்புரையின் போது பாக்கிஸ்த்தானுடன் காங்கிரசுக் கட்சி இணைந்து செயற்படுவதாக நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின் போது குற்றம் சுமத்தியிருந்தார். அது பொய்யானது என்றது காங்கிரசுக் கட்சி. காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படும் சிறுபான்மை இனக்குழுமங்கள் வாழும் பிரதேசங்களில் அரசு பல அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அமித் ஷா தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு அவர் இத் திட்டங்களை செயற்படுத்தினார்.
இந்துத்துவா இலத்திரனியல்
இலத்திரனியல் வாக்குப் பதிவு குளறுபடி மிக்கது என்ற கருத்து இந்தியாவில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஒருவர் தன்னிடம் அதற்கான காணொலி ஆதாரம் இருக்கின்றதென்றார். சில வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வாக்காளர் தொகையிலும் பார்க்க அதிகமானது என்ற கருத்தும் முன்வைக்கைப்பட்டு வருகின்றது. நடுவண் அரசும் மாநில அரசும் பாஜகவின் கையில் இருக்கும் போது அவர்களால் வளம் மிக்க தேர்தல் நடவடிக்கைகளைச் செய்ய முடிந்தது. தகவற் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிற்கும் இந்தியாவில் சிறந்த இலத்திரனியல் வாக்குப் பதிவு முறைமை உருவாக்கவும் முடியும். அதே வேளை அதில் குளறு படிகள் செய்யவும் முடியும். பட்டிடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 2015இல் மோடிக்கு எதிராக உள்ளூராட்சித் தேர்தலில் செயற்பட்டார்கள். அவர்கள் இப்போது மோடியின் பக்கம். பட்டிடர்களை பிற்படுத்தப் பட்டோர் வகுப்புப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் என்ற இளையவருக்கு எதிராக பல் பாலியல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு மக்கள் மத்தியில் அவரது பிம்பம் சிதைக்கப்பட்டது. சௌராஸ்டிரர்களில் பெரும் பகுதியினர் காங்கிரசை ஆதரித்தனர். கற்றவர்களும் நகர்ப்புறத்தினரும் பாஜகவிற்கு அதிக ஆதரவு வழங்க கிராமப் புறத்தினரும் பாமரர்களும் காங்கிரசுக் கட்சிக்கு அதிக ஆதரவு வழங்கினர். பெண்கள் மத்தியில் பாஜகவிற்கும் இளையோர் மத்தியில் காங்கிரசிற்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.

மாநிலம் எல்லாமும் மோடி அலையே
2014-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி இந்தியாவின் 13 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 7 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தது. 2017-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி 5 மாநிலங்களிலும் பாஜக 19 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கின்றது. இந்த வெற்றிகளுக்குக் காரணம் மோடி அலை என பாஜகவினர் மார்தட்ட முடியும். ராகுல் காந்தி பெருமளவில் பரப்புரை செய்த பல தேர்தல்களில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. குஜாராத் தேர்தலில் 2002-ம் ஆண்டு 127 தொகுதிகளிலும், 2007-ம் ஆண்டு 117 தொகுதிகளிலும், 2012-ம் ஆண்டு 115 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக 2017-ம் ஆண்டு 99 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றமை அங்கு அதன் செல்வாக்கு இறங்கு முகமாகச் செல்வதைச் சுட்டிக்காட்டுகின்றது. மாறாக 80 என ஏறுமுகமாகச் செல்வதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. 2012-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி 2002-ம் ஆண்டு 51, 2007-ம் ஆண்டு 59, 2012-ம் ஆண்டு 61 2017-ம் ஆண்டு 80 என அதனது வெற்று பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகின்றது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை 2012 தேர்தலில் 48 விழுக்காடு வாக்குகளையும் 2017-ம் ஆண்டு 49.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. காங்கிரசு 2012இல் 39விழுக்காடும் 2017இல் 41.4 விழுக்காடும் என தனது வாக்கு வங்கியை இரு கட்சிகளும் அதிகரித்துள்ளன. இதனால் இரு தரப்பினரும் தமக்குப் பின்னடைவு இல்லை என வாதிடுகின்றனர்.

ஆட்சியில் இருப்பவர்களுக்கான எதிர்ப்புணர்வு
குஜராத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தியதிலும் பார்க்க இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்குக்கும் காங்கிரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை பாஜக திறமையாகப் பயன்படுத்தியது. இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த வீர்பத்திர சிங்கிற்கு எதிராக பலத்த ஊழல் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. 1998 - 2003, 2007-2012 ஆகிய காலப்பகுதிகளில் பாஜக முதலமைச்சர் வேட்பாளரான பிரேம்குமா துமல் இமாச்சல் பிரதேச சட்டசபையின் முதலமைச்சராக இருந்தார். அவரது காலப்பகுதியில் நல்லாட்சி நிலவியதாகவும் வீர்பத்திர சிங் ஆட்சியில் ஊழல் மிக்க ஆட்சி நிலவியதாகவும் அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகவும் பாஜக வெற்றிகரமாகப் பரப்புரை செய்தது. காங்கிரசு ஆட்சியில் இமாச்சல் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்திருந்ததாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருந்ததாகவும் பாஜக செய்த பரப்புரைகள் பெண் வாக்காளர்களை அவர்கள் பக்கம் ஈர்த்தது. மற்ற மாநிலங்களில் நடப்பது போல இமாச்சல் பிரதேசத்திலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது எதிர்ப்பை ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு எதிராகக் காட்டினர். 2017 ஒக்டோபரில் இமாச்சல் பிரதேசத்திற்கு சென்ற நரேந்திர மோடி அங்கு பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் இமாச்சல் பிரதேசத்தில் வாழும் கங்கார, மண்டி ஆகிய இனக்குழுமங்களை தமது பக்கம் இழுப்பதில் பாஜக வெற்றி கண்டு பல தொகுதிகளைக் காங்கிரசிடமிருந்து பறித்துக் கொண்டது. காங்கிரசுக் கட்சிகளின் மாநிலப் பிரிவுகளில் உட்கட்சிப் பூசல்களுக்கு என்றும் பஞ்சமிருப்பதில்லை. அது இமாச்சல் பிரதேசத்தில் மிக மோசமாக இருந்தது. இமாச்சல் பிரதேச மக்கள் காங்கிரசையும் பாஜகவையும் மாறி மாறி தெரிவு செய்யும் பழக்கம் உள்ளவர்கள் இது பாஜகவின் முறை!
வரும் சட்ட மன்றத் தேர்தல்கள்
சதிஷ்க்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மெகாலயா, மிஸ்ரோம், நாகலாந்து, ராஜஸ்த்தான், திரிபுரா ஆகிய மாநில சட்ட சபைக்கான தேர்தல்கள் 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகா மாநிலத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வரவிருக்கின்றது. தற்போது சீத்தாரமையா 123 உறுப்பினர்களுடன் முலமைச்சர்காகவும் பி எஸ் எடியூரப்பா 44 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்றார். காங்கிரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஹிமந்த பிஸ்வா சர்மா தான் ராகுல் காந்தியைச் சந்திக்கச் சென்றிருந்த வேளை அவர் தம்மீது கவனம் செலுத்தாமல் தனது செல்லப் பிராணியான நாயுடன் விளையாடுவதில் அதிக அக்கறை காட்டினார் என்ற ஆத்திரத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து காங்கிரசுக் கட்சி வட கிழக்கு மாநிலங்களில் இல்லாமற் செய்வேன் என்ற சபதத்துடன் செயற்படுகின்றார். ராகுல் காந்தி தொடர்ந்து பல தேர்தல் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர். அவரை காங்கிரசுக் கட்சியின் தலைவராக முடி சூட்டும் வேளையில் குஜராத் தேர்தல் நடைபெற்றது. ராகுலின் கைகளில் மோடி நாணயத்தாள்களை செல்லுபடியற்றதாக்கியதும் அவர் அறிமுகம் செய்த விற்பனை வரி முறைமையும் வலிமை மிக்க பரப்புரைப் படைகலன்களாக மின்னியது. ஆனால் சரியான் முழக்கமாக முன்னெடுக்கும் திறமை ராகுலிடம் இருந்திருக்கவில்லை, இந்தப் படைக்கலன்களுக்கு எதிராக பாஜக முழு அமைச்சரவையையும் குஜராத்திலும் இமாச்சல் பிரதேசத்திலும் களமிறக்கியது.

பிற்போக்குத்தனம் தெற்கில் செல்லாது.
மோடி அலை கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வீசுவதற்கு வாய்ப்பே இல்லை. அவரினது பிற்போக்குத்தனம், மதவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாடு ஆகியவை கற்றவர்களை அதிகம் கொண்ட கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் எடுபடாது. கேரளாவில் பொதுவுடமைச் சிந்தனையையும் தமிழ்நாட்டில் பெரியாரின் போதனைகளையும் மனதில் கொண்ட மக்கள் பலர் வாழ்கின்றார்கள்.


மோடி அலை என்பது ஆரம்பத்தில் இருந்தே பொய்ப்பரப்புரைகள் என்னும் நுரைகள் மிக்கது. அதற்கு ராகுலின் திறமையின்மை என்ற காற்று அசைக்கின்றது. தற்போது காங்கிரசின் ஆட்சியில் இருக்கும் கர்நாடகா தேர்தலில் சிறப்பாகச் செயற்படும் ஊக்கத்தை இமாச்சல் பிரதேசத்திலும் குஜராத்திலும் பாஜகவினர் பெற்ற வெற்றி கொடுக்கவுள்ளது. தென் மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் சீத்தாராமையா நம்பிக்கையுடன் இருக்கின்றார். ஆனால் 2018-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னோடியாக 2017 மார்ச்சில் காங்கிரசின் முக்கிய தலைவரும் முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணாவை பாஜக தன் பக்கம் இழுத்துக் கொண்டது காங்கிரசுக்கு பெரும் இடியாகும். இது போன்ற சதிகள்தான் மோடி அலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...