Friday, 23 December 2016

உலகமயமாதல் இனி பின்வாங்குமா?

உலகமயமாதல் என்பது தொழில்நுட்பம், பொருளாதாரம், கலாச்சாரம், சூழல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களினதும் வளர்ச்சிகளினதும் விளைவாக உருவானது. நாடுகள் இவற்றை தமக்கிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் தமது செல்வத்தைப் பெருக்க முயல்வதே உலகமயமாதலாகும்ஆனால் பெரு முதலாளிகள் உலகெங்கும் தமது ஆதிக்கத்தை விரிவாக்குவதே உலகமயமாதலின் உண்மையான நோக்கமாகும்.

உலகமயமாதலின் வரலாறு
உலகமயமாதல் என்ற சொல் 1970களில் உருவானது. அப்போது அதிகரித்துக் காணப்பட்ட உலக வர்த்தகம், முதலீடு, பயணங்கள், தகவற்பரிமாற்றம் போன்றவை தொடர்பான ஆய்வுகளின் விளைவாக இந்தச் சொல் உருவானது. உண்மையான உலகமயமாதலின் ஆரம்பப் புள்ளியாக எதைக் கொள்வது என்பதில் சில முரண்பாடுகள் நிலவுகின்றன. சிலர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததுதான் உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர். வேறு சிலர் கைத்தொழிற்புரட்சியே உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர் இற்றைக்கு இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளிடையேயான வர்த்தகம் உருவானது.   உலக வர்த்தகத்தின் முதலாம் கட்டத்தில்   நறுமண உணவுப் பொருட்களும் அறிவுமே அதிகம் பண்டமாற்று அடிப்படையில் பரிமாறப்பட்டன. ஆனால் 1400களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே உலக வர்த்தகத்தை பெரிய அளவில் வளரச் செய்தது.  மனிதர்களும் பண்டங்கள் போல் பாவிக்கப்பட்டு அடிமை வியாபாரம் செய்யப்பட்டனர். இது உலக வர்த்தகத்தின் இரண்டாம் கட்டம். இதில் படைவலு மிக்க நாடுகள் மற்ற நாடுகளை ஆக்கிரமித்தன. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையிலான போரே முதலாம் இரண்டாம் உலகப் போர்களாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒரு புதிய உலக ஒழுங்கு” உருவானது. அது உலக வர்த்தகத்தின் மூன்றாம் கட்டமாகும். 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியாவே உலகின் பெரு வல்லரசாகவும் பெரிய செல்வந்த நாடாகவும் இருந்தது. அதன் நாணயமே உலக நாணயமாக விளங்கியது

தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாதலும்.
1765இல் ஜேம்ஸ் வற் அவர்கள் நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தது உலக வர்த்தகத்தின் முக்கிய அம்சமாகும். அது உலக வர்த்தகத்தை மேம்படுத்தியதுடன் பிரித்தானியாவின் உலக ஆதிக்கத்திற்கு உந்து வலுவானது. தொழில்நுட்பத்தால் இலகுவாக்கப் பட்ட போக்கு வரத்து வசதிகளும் தொடர்பாடல் வசதிகளும் உலகமயமாக்குவதை கொண்டிருக்கின்றன.  1830களில் கண்டு பிடிக்கப்பட்ட மின்சாரத் தந்தியும் உலக வர்த்தகத்தை மேம்படுத்தப் பயன்பட்டதுகைத்தொழிற் புரட்சியின் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகெங்கும் விற்பனை செய்யவும் அந்த உற்பத்திகளுக்கு தேவையான மலிவான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் நீராவியில் இயங்கும் கப்பல்களும் மின்சாரத் தந்திகளும் பெரிதும் பயன்பட்டது. 1971இல் கண்டு பிடிக்கப்பட்ட மைக்குறோ புறொசெஸர் (Micro processor) தற்போது இணைய வெளியூடான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பணப்பரிமாற்றங்களுக்கும் வழிவகுத்தது

உலகமயமாதலுக்கான அமைப்புக்கள்
1946-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டு நாணய நிதியம் (IMF), 1947இல் செய்யப்பட்ட வரிகளுக்கும் வர்த்தகத்துக்குமான பொது உடன்படிக்கை, 1947இல் உருவாக்கப்பட்ட உலகவங்கி, 1957இல் உருவாக்கப் பட்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஆகியவை நாடுகளிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையே. பல பன்னாட்டு மாநாடுகள் கூட்டங்கள் உலகமயமாக்குதலை இலகுவாக்குவறகான உடன்படிக்கைகளைச் செய்வதற்க்கு கூட்டப்பட்டன. பல நாட்டு ஆட்சியாளர்களின் உலகப் பயணங்கள் வர்த்தக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.

சொன்னவை வேறு நடந்தவை வேறு
உலகமயமாதல் சூழல் பாதுகாப்பிற்கு உகந்தது என வாதிடப்பட்டது. ஆனால் சூழல் பாதுகாப்பு பற்றி நிறையப் பேசினார்கள் ஆனால் செயலில் ஏதும் இல்லை. சூழல் பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. வளர்முக நாடுகளின் மூளைவளங்களை கடத்துவதே வளர்ச்சியடைந்த நாடுகளின் பணியாக இருக்கின்றது. உலகமயமாதலினால் மகிழ்ச்சியடைந்த அமெரிக்காவின் புதிய-தாராண்மைவாதிகள் உலகம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படும் என நம்பினார். உலகெங்கும் ஒரேமாதிரியான ஆட்சி முறைமை, ஒரேமாதிரியான பொருளாதாரக் கொள்கை, ஒரேமாதிரியான வெளியுறவுக் கொள்கை வருமென நம்பினர். ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா, மார்கிரெட் தச்சர், ரொனி பிளேயர் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் மென்வலு அழுத்தங்கள் சரிவராத இடங்களில் இவர்கள் தாராண்மைத் தலையீட்டாளர்களாக மாறினார்கள். முதலாவது தலையீடு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது. இது இவர்களின் உலகமயமாதல் கொள்கை தொடர்பான ஐயங்களை உலகெங்கும் ஏற்படுத்தியது. உலகமயமாதல் என்னும் போர்வையில் இவர்கள் உலகெங்கும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.
உலகமயமாதலால் சீனா பெரும் நன்மையடைந்ததா?
1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னர் சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டது. அதனால் தனது பொருளாதாரத்தை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தையும் உலக வர்த்தகத்தில் தான் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சீனாப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் உணர்ந்து உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்காக வளர்ந்துள்ளதுசீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும்இலகுவான உலக வர்த்தகத்தால் சீனா கைத்தொழில்நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது. மேற்கு நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வது என்னும் பெயரில் சீனத் தொழிலாளர்களை மிகக் குறைந்த ஊதியம் வழங்கி தமது உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொண்டன. உலகத்தின் தொழிற்சாலை (factory of the world) உலக உற்பத்திவலுவின் நிலையம் (the world’s manufacturing powerhouse) ஆகிய பட்டங்கள் சீனாவிற்குச் சூட்டப்பட்டன. 19-ம் நூற்றாண்டு பிரித்தானியாவிற்கு இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிரித்தானியா தனது கண்டுபிடிப்புக்கள் மூலம் இந்தப் பட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் உலக உற்பத்தி நிறுவனங்கள் பொருத்து நிலையமாகவே (assembly plant of the world) சீனா உண்மையில் இருக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதனால் சீனாவின் உள்நாட்டுக் கண்டுபிடிப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டன. உலக அரங்கில் போட்டி போட்டு வர்த்தகம் செய்யக் கூடிய உயர் தொழில்நுட்பத் திறன் பெறாத நாடுகள் கைத்தொழில் மயமாக்கப்பட முடியாத நாடுகளாகும். சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் ஏற்றுமதியில் தங்கியிருப்பது சீனாவையே கவலையடைய வைத்துள்ளது. சீனாவின் தொழிலாளர்கள் குறைந்த அளவு ஊதியம் பெறுவதால் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவு மிகவும் தாழ்ந்த நிலையிலேயா உள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு கொள்வனவு அதன் தேசிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கையில் சீனாவில் அது மூன்றில் ஒரு பங்காக இருக்கின்றது. இதனால உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடையும் போது அது சீனாவை மோசமாகப் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டில் இருந்து சீனா இதில் அதிக அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளது.

மாறுகிறது நெஞ்சங்கள்
 தற்போது 161 நாடுகள் இறக்குமதிகளுக்கு பெறுமதிசேர் வரிகள் விதிக்கின்றன. அமெரிக்கா சீனாவில் இருந்து செய்யும் இறக்குமதியால் அமெரிக்காவின் 3.2,மில்லியன் பேர்கள் வேலைகளை இழந்ததாகவும் ஜப்பானிடமிருந்து செய்யும் இறக்குமதியால் 896,000இற்கு மேற்பட்டவர்கள் வேலைகளை இழந்ததாகவும் அமெரிக்காவில் இருந்து கூச்சல்கள் எழுகின்றன. உலகமயமாதல் அமெரிக்காவை கைதொழிலற்றதாக்குகின்றது (deindustrializing) எனவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 2008-ம் ஆண்டில் உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து யூரோநாணய வலயத்தில் ஏற்பட்ட நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றமை, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலதுசாரிகளின் செல்வாக்கு அதிகரித்தமை, டொனால்ட் டிரப்பின் வெற்றி ஆகியவை உலகமயமாதல் செல்வந்த நாடுகளான வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களையும் பொருளாதார ரிதியாகப் பாதித்துள்ளது 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வெற்றியைக் கொடுத்ததில் முக்கியமானது உலக வர்த்தகம் தொடர்பாக அவர் முன்வைக்க கருத்துக்களே. உலகமயமாதல் எமது தொழிற்சாலைகளையும் எமது செல்வங்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டன என்றார் அவர். ஹிலரி கிளிண்டன் வென்றிருக்க வேண்டிய பென்சில்வேனியா, மிச்சிக்கன், விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்களில் டிரம்ப் பெரு வெற்றியீட்டியமைக்குக் காரணம் அந்த மாநிலங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டமையே.

மக்களின் விசனமும் டிரம்பின் வெற்றியும்.
உலகமயமாதல் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளின் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் பல நாடுகளில் செயற்படுவதால் பல வருமான வரி ஏய்ப்புக்களைச் செய்யக் கூடியதாக இருந்தது. இந்த நாடுகளில் பலர் வேலைகளை இழந்ததால் அவர்கள் செலுத்தும் வரியும் இல்லாமல் போனது. இவற்றால் அரச வருமானங்கள் குறைந்து கொண்டே போனது. அதனால் சமூக நலக் கொடுப்பனவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. உட்கட்டுமானங்களின் பராமரிப்புகளும் மேம்படுத்துதல்களும் மோசமடைந்தன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் பல பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர். உலகமயமாதல் அமெரிக்காவிற்கு நன்மையளிக்கவில்லை சில செல்வந்தர்களுக்கு மட்டும் நன்மையளித்தன என அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கி விட்டனர் என்பதை உணர்ந்த டொனால்ட் டிரம்ப் அதற்கு ஏற்பத் தனது தேர்தல் பரப்புரை வியூகத்தை வகுத்து வெற்றி கண்டார். இதையே Robert Putnam தனது Bowling Alone  என்னும் நூலில் American elites had been building an empire at the expense of a nation எனக் குறிப்பிட்டார். இதுதான் உலகமயமாக்குதலை இப்போது பின்வாங்கச் செய்கின்றது. அமெரிக்கா பல நாடுகளுடன் செய்த மற்றும் செய்ய முயன்று கொண்டிருக்கும் வர்த்தக உடன்படிக்கைகள் இனிச் செல்லுபடியற்றதாக்கும்.

தேவை ஒரு புதிய உலக ஒழுங்கு
உலக நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டிற்கு ஒன்றின் மீது ஒன்று தங்கியிருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. உலகெங்கும் உள்ள வர்த்தக நிறுவனங்களை உலகளாவிய  போட்டி போடவைத்து தரமான மலிவான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு சில நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மட்டும் உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்த வைக்கும் நிலையை மாற்றி உலங்கெங்கும் உள்ள நிறுவனங்கள் உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமது வர்த்தகங்களைச் செய்து உலகெங்கும் நன்மையளிக்கும் வகையில் செயற்பட்டு இலாபமீட்டும் புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.


Saturday, 17 December 2016

அமெரிக்காவின் UNDERWATER DRONEஐ சீனா அபகரித்தது



 அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு புதியவர் வரும்போது அவருக்கு சவால் விடும் வகையில் சீனா செயற்படுவதுண்டு என அமெரிக்கா குற்றம் சாட்டுவதுண்டு. 2001-ம் ஆண்டு ஜோர்ஜ் புஷ் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் EP-3 என்னும் வேவு விமானத்துடன் சீனாவின் போர் விமானம் வானில் மோதல் செய்து அந்த வேவு விமானத்தையும் அதன் ஊழியர்களையும் இரண்டு வாரங்கள் தடுத்து வைத்திருந்தது. பின்னர் அரசுறவியல் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பராக் ஒபாமா பதவி ஏற்ற பின்னர் தென் சீனக் கடலில் USS Impeccable என்னும் அமெரிக்காவின் கடற்படைக்கலத்திற்கு சவால் விடும் வகையில் சீனாவின் கரையோரக் காவல் கப்பல்களும் மீன் பிடிக் கப்பல்களும் செயற்பட்டன.

2016- ம் ஆண்டு டிசம்பர் 16-ம் திகதி அமெரிக்காவின் UNDERWATER DRONE  அதாவது ஆளில்லாமல் கடலடியில் செயற்படக் கூடிய சிறு நீர்மூழ்கிக் கப்பலை சீனக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இது ஒரு திருட்டு என அமெரிக்க ஊடகங்கள் விபரித்துள்ளன. உலகச் சட்டங்களுக்கு அமைய சீனா தான் கைப்பற்றிய UNDERWATER DRONE உடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவின் படைத்துறை நிறுவனமான பெண்டகன் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸின் சூபிக் பே என்னும் கடற்கரைக்கு வட மேற்காக 200மைல் தொலைவில் இச்சமபவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் Bowditch வேவுக் கப்பலில் இருந்து இயக்கப்பட்ட இந்த UNDERWATER DRONE அந்தக் கப்பலில் பணிபுரிபவர்களின் கண் முன்னே அவர்களின் வானொலியூடான ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் சீனக் கடற்படையினர் ஒரு படகில் சென்று அதைக் கைப்பற்றினர்.  

அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பும் சீனா அமெரிக்கவின் UNDERWATER DRONE திருடியதாகத் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

என்ன இந்த UNDERWATER DRONE?
நீருக்குக் கீழான வானொலித் தொடர்புகள் சிரமமானவை என்பதால் அவற்றை இலகுவாக்குவது UNDERWATER DRONE இன் பணிகளில் முக்கியமானதாகும். இதனுள் கணனிகளும் உணரிகளும் தொடர்பாடல் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும். எதிரியின் கடற்கலன்களின் நடமாட்டங்களை அறிவதற்கும் UNDERWATER DRONE பயன்படுத்தப்படுகின்றன. 2015-ம் ஆண்டின் இறுதியில் இருந்து அமெரிக்கா இவற்றைச் சேவையில் ஈடுபடுத்தியது.

ஏன் சீனா அபகரித்தது?
ஐக்கிய அமெரிக்காவின் படைத்துறை இரகசியங்களை திருடுவதில் சீனா எந்த வித தயக்கமோ கூச்சமோ காட்டுவதில்லை. அமெரிக்கா பல பில்லியன்கள் செல்வு செய்து கண்டு பிடிக்கும் தொழில்நுட்பங்களை சீனா இலகுவாக இணையவெளியூடாக ஊடுருவித் திருடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. சினா தானும் ஒரு UNDERWATER DRONEஐ உருவாக்குவதற்கும் அமெரிக்காவின் கடலடித் தகவல் திரட்டும் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அபகரிப்பு உதவும். இந்தச் சிறு நீர்முழ்கிக் கப்பலிலும் பார்க்க அதில் உள்ள கருவிகளின் தொழில்நுட்பம் படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பல்கள் போக முன்னர் அந்தன் தட்ப வெப்ப நிலைகள் உப்புத்தன்மை போன்றவற்றை அறிந்து வைத்தல் முக்கியமானதாகும். இதற்கும் இந்த UNDERWATER DRONEகள் பாவிக்கப்படுகின்றன. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை ஊடகம் ஒன்றில் இந்தத் தகவல் இருந்தது:-

  • "The USNS Bowditch (T-AGS 62) and the UUV -- an unclassified "ocean glider" system used around the world to gather military oceanographic data such as salinity, water temperature, and sound speed - were conducting routine operations in accordance with international law about 50 nautical miles northwest of Subic Bay, Philippines, when a Chinese Navy [People's Republic of China] DALANG III-Class ship (ASR-510) launched a small boat and retrieved the UUV. 



திருப்பிக் கொடுக்கப்படும்
இரசிய ஊடகம் ஒன்றில் வெளியான தகவலின்படி சீனா இந்த நட்பா பகையா என்ற சோதனை identification friend or foe (IFF) checks
 செய்த பின்னர் திருப்பிக் கொடுப்பதாக அமெரிக்காவிடம் கூறியுள்ளது. அது அதில் உள்ள கருவிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கான கால அவகாசத்தை சீனாவிற்கு வழங்கலாம்.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி அமெரிக்கப் படைத்துறை நிறுவனமான பெண்டகன் சீனா தான் கைப்பற்றிய UNDERWATER DRONEஐத் திருப்புக் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 


Monday, 12 December 2016

சிறந்த பத்து புலப்படாப் போர் விமானங்கள் (Stealth Fighter Jets



தற்போது பல நாடுகள் புலப்படாப் போர் விமானங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவை ரடார் எனப்படும் கதுவிகளால் உணர்ந்து அறிய முடியாதவகையில் பூச்சடிக்கப் பட்டிருப்பதுடன் அதன் வெளிவடிவமும் அதற்கு ஏற்ப அமைக்கப் பட்டிருக்கும். ராடார்கள் அல்லது கதுவிகள் வானொலி அலைகளை வீசி அது தேவையான இலக்கில் பட்டுத் தெறித்து வரும் அலைகளை உணர்ந்தறிந்து இலக்கின் உருவம், இடம், வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும். உடனடியாக அந்த இலக்கை நோக்கித் தாக்குதல் தொடுக்கலாம்.  கதுவிகள் அனுப்பும் வானொலியலைகளை உறிஞ்சக் கூடிய பூச்சு கதுவித் தவிர்ப்பு விமானங்களில் பூசப்பட்டிருக்கும். பெரும்பாலான புலப்படப் போர் விமானங்கள் தட்டை வடிவமானதாக இருக்கும். தற்போது உருவாக்கப் பட்டிருக்கும் பல போர்விமானங்கள் புலப்படாப் போர்விமானங்களாக இருக்கின்றன. ஆனால் ஒரு விமானத்தை வானில் வைத்து இனம் காணும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே போகின்றது. இதனால் புலப்படாத் தொழில்நுட்பத்துக்கும் விமானங்களை இனம்காணும் பலவிதமான உணரிகளின் தொழில்நுட்பத்திற்கும் இடையில் கடும் போட்டி தற்போது நிலவுகின்றது. புலப்படாத் தொழிநுட்பத்தை உணரித் தொழில்நுட்பம் விஞ்சி நிற்கின்ற போதிலும் பல நாடுகள் தொடர்ந்தும் புலப்படாப் போர்விமானங்களை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றன.

கதுவித் தொழில் நுட்பம்

Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே ரடார் அல்லது கதுவி ஆகும். கதுவிக்குத் தேவையான வானொலியலைகளை Magnetron என்னும் கருவி பிறப்பிக்கும். இந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும். அதனால் கணப் பொழுதில் எதிரி விமானங்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். விமான நிலையங்களில் விமானப் போக்கு வரத்தைக் கட்டுப்படுத்த கதுவிகள் பயன்படுத்தப்படுகின்றன. காவற்துறையினர் அளவிற்கு மிஞ்சிய வேகத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தை அறியவும் கதுவிகளைப் பயன்படுத்துகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்களும் புயல் சூறாவளி போன்றவற்றை அறிய கதுவிகளைப் பாவிக்கின்றனர்.

வானொலியலைகளை மட்டும் வைத்து போர் விமானங்கள் வானில் வைத்துக் கண்டறியப்படுவதில்லை. போர்விமானத்தில் இருந்து வரும் வெப்பக் கதிர்கள், ஒலியலைகள், போன்றவற்றை உணர்ந்து கொள்ளும் கருவிகள் மூலமாகவும் போர்விமானங்களின் நிலையறிந்து அவற்றைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டன.

முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியா மௌனிக்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட போர் விமானங்களை உருவாக்கியது. அவை இரவில் செயற்படும் போது மட்டும் எதிரியால் இனம் காண முடியாதவையாக இருந்தன. ஆனால் போரில் அது போதிய பலனளிக்கவில்லை. ஜேர்மன் எல்லைக்குள் சென்ற அப்போர் விமானங்களால் போதிய தகவல்களைத் திரட்ட முடியவில்லை. இலக்குகளையும் துல்லியமாக இனம் கண்டு தாக்கவும் முடியவில்லை. புலப்படாத் தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்களை ஜேர்மனி இரண்டாம் உலகப் போரின் போது பாவனைக்குக் கொண்டு வந்தது. பின்னர் ஐக்கிய அமெரிக்க 1981-ம் ஆண்டு F-117 Nighthawk என்னும் புலப்படாப் போர்விமானத்தை உருவாக்கியது. தொடர்ந்து 1982-ம் ஆண்டு அதிபரான ஜிம்மி கார்ட்டர் இதில் அதிக கவனம் செலுத்தி 1989-ம் ஆண்டு B-2 என்னும் புலப்படாப் போர்விமானங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. பின்னர் ரொனால்ட் ரீகனும் அமெரிக்க விமானப் படையை மேன்மையாக்குவதில் அதிக அக்கறை காட்டினார். தற்போது அமெரிக்கா மட்டுமே புலப்படாப் போர் விமானங்களை சேவையில் வைத்துள்ளது. F-22 ரப்டர், F-35 lightening -2 ஆகியவை அமெரிக்கா சேவையில் வைத்துள்ள அந்தப் போர் விமாங்களாகும். மேன்மையான புலப்படாத் தொழில்நுட்பம்தான் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சமாகும். புலப்படாத் தன்மைக்காக ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களில் குண்டுகள் விமானத்திற்குள் பொருத்தப்பட்டிருக்கும்.

பத்தாமிடம் ஈரான் - F-313 Qaher

தலைசிறந்த கதுவித் தவிர்ப்புப் போர் விமானங்களில் 10-ம் இடத்தில் இருப்பது ஈரானின்  F-313 Qaher போர் விமானங்களாகும். இவை சிறிய ஓடுபாதைகளில் இருந்து மேலெழுந்து செல்லவும் தரையிறங்கவும் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈரான் இன்னும் F-313 Qaher போர் விமானங்களை உற்பத்தி செய்து முடிக்கவில்லை. 2013-ம் ஆண்டு இவற்றை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. சில படைத்துறை நிபுணர்கள் இதை ஈரானின் ஏமாற்று வேலை என்கின்றனர். ஒரு கதுவித் தவிர்ப்பு விமானத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் ஈரானிடம் இல்லை என்கின்றார்கள் அவர்கள்.

ஒன்பதாம் இடம் சுவீடன் - Flygsystem-2020

ஒன்பதாம் இடத்தில் இருப்பது சுவீடனின் Flygsystem-2020 போர் விமாங்களாகும். இவை 2020-ம் ஆண்டு சேவைக்குக் கொண்டு வரப்படும். இதை ஓர் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக சுவீடன் உருவாக்கவிடுக்கின்றது. இது பற்றிய தகவல்களை சுவீடன் இரகசியமாக வைத்திருக்கின்றது. இந்த விமான உருவாக்கம் தற்போது எந்த நிலையில் இருக்கின்றது என்பது பற்றிக் கூட சரியான தகவல் இல்லை. இது ஒரு பற்பணிப் (multi-role) போர்விமானமாகும். இது தனது குண்டுகளை உட்புறம் வைத்துக் கொள்ளக் கூடியது.

எட்டாம் இடம் தென் கொரியா/இந்தோனேசியா KF-X/IF-X-2025

எட்டாம் இடத்தில் இருப்பது தென் கொரியாவும் இந்தோனேசியாவும் இணைந்து உருவாக்கும் KF-X/IF-X-2025 போர்விமானங்களாகும். தென் கொரியா தனது போர் விமானங்களை உருவாக்கியதில் பெற்ற அனுபவம் அதை புலப்படாப் போர் விமானங்களை உருவாக்கத் தூண்டியது. அதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்தோனேசியாவுடன் இணைந்து பிரான்சின் Dassault Rafale அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் Eurofighter Typhoon போர் விமானங்களைப் போன்றாதகவும் மேலும் புலப்படாத் தன்மை மிக்கதாகவும் உள்ள போர்விமானத்தை 2025-ம் ஆண்டு உருவாக்கும் திட்டம் 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்போர் விமானங்கள் நான்காம் தலைமுறைக்கு மேலானதாகவும் ஐந்தாம் தலைமுறைக்குக் குறைவானதாகவும் இருக்கும்.

ஏழாம் இடம் துருக்கி – TAI TFX

பிரித்தானியாவின் BAE Systems நிறுவனத்துடன் இணைந்து துருக்கு உருவாக்கும் ஐந்தாம் தலைமுறைப்ப் போர்விமானம் TAI TFX. வானில் இருந்து வானில் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் போர் விமானங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன.

ஆறாம் இடம் இந்தியா - HAL AMCA

இந்தியா 2008-ம் ஆண்டு இரகசியாமாகத் தொடங்கிய ஐந்தாம் தலைமுறைப் புலப்படாப் போர்விமானங்களை உருவாக்கும் திட்டம் 2011-ம் ஆண்டு பகிரங்கப்படுத்தப்பட்டது. HAL AMCA ஒற்றை இருக்கை, உயர்செலுத்தும் தன்மை (supermaneuverable), இரட்டை இயந்திரம் கொண்டமையாக இருக்கும் 2023 அல்லது 2024இல் இவை பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தியாவின் திட்டம் இதை ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜாவாக்குவதே. வான் தாக்குதல், வான் ஆதிக்கம், தரைத்தாக்குதல், இடைமறிப்புத்தாக்குதல் போன்றவற்றைச் செய்யக் கூடியதும் எல்லாக் கால நிலைகளில்ம் செயற்படக்க் கூடியதுமான  பற்பணிப் போர்விமானமாகும். இதற்கு இந்தியப் பாதுகாப்புத் துறை இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஐந்தாம் இடம் ஜப்பான் – மிற்சுபிஸி X-2

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பான் அமெரிக்காவின் F-22 புலப்படாப் போர்விமானங்களைய வாங்க முயன்றது. F-22இன் தொழில்நுட்ப இரகசியத்தைப் பேணும் முகமாக அமெரிக்கப் பாராளமன்றம் அந்த விற்பனையைத் தடுத்தது. இதைத் தொடர்ந்து ஜப்பான் தானே புலப்படாத் தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்களை உருவாக்கும் திட்டத்தை வரைந்தது. அத்திட்டத்தின் வெற்றியாக 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜப்பானின் மிற்சுபிஸி X-2 போர் விமானத்தின் முதற்பறப்புச் செய்யப்பட்டது.

நான்காம் இடம் சீனா J-31

சீனாவின் J-31 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக உருவாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதன் இரண்டு முன்மாதிரிகளை ஏற்கனவே சீனா தயாரித்துள்ளது. 2018 அல்லது 2019இல் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட J-31 புலப்படாப் போர்விமானம் பாவனைக்கு வரலாம். இந்த விமானத்தை இரசிய ஊடகங்கள் புகழ்ந்த போது மேற்கு ஊடகங்கள் அதிக எரிபொருள் பாவிக்கின்றது எனக் குறை கூறின.

மூன்றாம் இடம் சீனா J-20

சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட J-20 புலப்படாப் போர்விமானங்களும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். ஏற்கனவே இது பரீட்சிக்கப்பட்டுள்ளது. விரையில் இவை பாவனைக்கு வரலாம்.

இரண்டாம் இடம் இரசியா -  PAK FA

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக 2018-ம் ஆண்டு வெளிவர இருப்பது T-50 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் PAK FA என்னும் புலப்படாப் போர்விமானங்களாகும். இதை இந்தியாவுடன் இணைந்து இரசியா தயாரிக்கின்றது, அடுத்த 35 ஆண்டுகள் இரசியாவினதும் இந்தியாவினதும் வான்படைகளின் முதுகெலும்பாக இந்தப் போர் விமானங்கள் இருக்கப்  போகின்றன. ஒற்றை இருக்கையும் இரட்டை இயந்திரங்களும் இதில் இருக்கும்.

முதலாமிடம் இந்தியா-இரசியா FGFA/ PMF

தற்போது உருவாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் போர் விமானங்களுக்குள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கும் Sukhoi/HAL Fifth Generation Fighter Aircraft (FGFA) or Perspective Multi-role Fighter (PMF) என்னும் போர்விமானாங்களாகும். இரு நாடுகளும் இணைந்து உருவாக்கும் T-50 போர் விமானங்களிற்கு 43 வகையான மேம்பாடுகளைக் கொடுத்து இப்போர் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து இரு நாடுகளும் 2007-ம் ஆண்டு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்க ஒத்துக் கொண்டன.

சும்மா விடுமா அமெரிக்கா

அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் தற்போது பாவனையில் உள்ள சிறந்த போர்விமானமாகக் கருதப்படும் போதிலும் அது இன்னும் போர்முனையில் ஒரு முழுமையான பாவனைக்கு வரவில்லை. அமெரிக்கா தனது வான் படையின் மேலாதிக்கத்தைத்ட் தொடர்ந்து பேண ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்கள் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் இவற்றால் கருக்கி விழுத்தப்படும் இவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக இருக்கும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control முறைமை மிக உன்னதமானதாக இருக்கும்.

Thursday, 1 December 2016

தேவை ஒரு உலகத் தலைமை

அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் போர்வையில் செய்யும் அட்டூழியங்களால் மோசமான உள்நாட்டுப் போருக்குள் அகப்பட்டிருக்கும் ஈராக், சிரியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளால் அமைதி குலைந்து போன மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் ஒருபுறம், புட்டீன் தலைமையில் மீள் எழுச்சியுற்று உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த இரசியா மீண்டும் தம்மை ஆக்கிரமிக்குமா என அச்ச முற்றிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மறுபுறம் பிராந்திய ஆதிக்கத்தையும் விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவால் அச்சமுற்றிருக்கும் ஆசியநாடுகள் இன்னொரு புறம் என உலகம் ஒரு சீரற்ற அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களில் மாட்டியிருக்கின்றது. இது போதாது என வெள்ளைத் தேசியவாதம் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தலைதூக்கியுள்ளது. 2008-ம் ஆண்டில் உருவான உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வழிதெரியாமல் பல நாடுகள் தடுமாறிக்கொண்டே இருக்கின்றன.




பொருளாதாரத் தாராண்மை வாதமும் அரசியற் தாராண்மை வாதமும்
பொருளாதாரத் தாராண்மை வாதம் என்பது பொருளாதார நடவடிக்கைகளை பொதுமக்களே தீர்மானிப்பது. அவர்களின் தேவைக்கும் வலிமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப நாட்டின் பொருளாதாரம் செயற்படும். இது கோட்பாடு மட்டுமே. நடைமுறையில் இப்படி முழுமையாக நடப்பதில்லை. அரசியற் தாராண்மைவாதம் என்பது தனிநபரின் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் அரசு உத்தரவாதமளிக்க வேண்டும் என்ற கொள்கையுடையது. அது மதசார்ப்பற்றது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னர் அரசியற் தாராண்மைவாதம் மேற்கு நாடுகள் என அழைக்கப்படும் வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் செல்வாக்கிழக்கத் தொடங்கியுள்ளது. இதன் முதல் அறிகுறி குடிவரவுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாக வெளிப்பட்டது. பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியமையும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி பெற்றமையும் அரசியற் தாராண்மைவாதம்
நெருக்கடிக்குள்ளாகியிருப்பதை உறுதி செய்தது. ஏற்கனவே
பழமைவாதிகளான நரேந்திர மோடியும் சின்சே அபேயும் இந்தியாவிலும் ஜப்பானிலும் ஆட்சிக்கு வந்திருந்தனர். 2017-ம் ஆண்டில் பிரான்சிலும் ஜேர்மனியிலும் நடக்கவிருக்கும் தேர்தலை அரசியற் தாராண்மைவாதிகள் அச்சத்துடன் எதிர் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பொருளியற் பாதுகாப்புக் கொள்கையை தனது தேர்தல் பரப்புரையின் போது முன்வைத்ததுடன் சீனாவுடனான வர்த்தகத்தை மீள் பரிசீலனை செய்வேன் எனவும் அமெரிக்கா செய்த மற்றும் செய்ய முயலும் வர்த்தக உடன்படிக்கைகளை இரத்துச் செய்வேன் எனவும் சூளுரைத்திருந்தார். இது பொருளாதாரத் தாராண்மைவாதத்திற்கு பேரிடியாக விழுந்தது. உலகமயமாதல் அமெரிக்கப் பெருமுதலாளிக்கு மட்டுமே நன்மையளித்தது அமெரிக்காவின் சாதாரணக் குடிமக்களுக்கு அல்ல என்ற எண்ணம் அமெரிக்காவில் மட்டுமல்ல மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வலுப்பெறுவது பொருளாதாரத் தாராண்மைவாதிகளைச் சிந்திக்க வைத்துள்ளது. நாடுகளிடையேயான வர்த்தகம் இன்றி பொருளாதார செழிப்பு சாத்தியமாக மாட்டாது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் முடிவு செய்த பின்னர் பிரித்தானியத் தலைமை அமைச்சர் எந்த எந்த நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். அவரது இந்தியப் பயணமும் அந்த நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது.


விலக விரும்பும் மேற்குலக மக்கள்
சிரியாவில் படைத்துறை ரீதியான தலையீட்டை பிரித்தானியாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் பாராளமன்றங்கள் நிராகரித்த போதே மேற்கு நாட்டு மக்கள் தமது நாட்டு அரசும் படைகளும் மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிட்டு பணத்தையும் உயிர்களையும் வீணடிக்கக் கூடாது என்ற எண்ணம் அவர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியது. அதைத்தான் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தனது கொள்கையாக முன்வைத்தார். கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக தாக்குதல் தொடுக்க உக்ரேன் ஆதரவு வேண்டியபோது நேட்டோ நாடுகள் அதற்கு ஆதரவு கொடுக்காமல் இரசியாவுடன் மோத வேண்டாம் என உக்ரேனுக்கு அறிவுறுத்தலும் விடுத்தது. பல படைத்துறை நிபுணர்கள் உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கையில் இரசியா அதிரடியாக சிரியாவில் தலையிட்டு அங்கு அதிபர் அல் அசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாமல் செய்துவிட்டது. யேமனில் உள்நாட்டுப் போர் மோசமடைந்த போது உனது பிராந்தியம் உனது பொறுப்பு உனது படையினரே பார்த்துக் கொள்ளட்டும் என சவுதி அரேபியாவிடம் ஐக்கிய அமெரிக்கா சொல்லிவிட்டு தான் தொழில்நுட்ப உதவிகளையும் நிபுணத்துவ ஆலோசனையையும் வழங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட உலகத் தலைமைப் பதவி உலகிற்கும் நன்மையைக் கொண்டு வரவில்லை என்பது உறுதி. அமெரிக்காவிற்கும் நன்மையைக் கொண்டு வரவில்லை என அமெரிக்க மக்களும் கருதத் தொடங்கிவிட்டனர்.
 

மேற்காசியாவும் வட ஆபிரிக்காவும்
சவுதி அரேபிய அரசின் ஆதரவுடன் அமெரிக்கா சென்று படித்த இலட்சக் கணக்கான இளையோர் இப்போது சவுதி அரேபியாவில் வேலை இன்றி இருக்கின்றார்கள். பொறியியல் படித்தவர் வாடகைக் கார் ஓட்டுனராக வேலை செய்ய வேண்டிய நிலை தோன்றியுள்ளது. பல சவுதி செல்வந்தர்கள் தமது பெரு நிதிகளை வெளிநாடுகளுக்கு மாற்றுகின்றார்கள். எரிபொருள் உற்பத்தியில் மட்டுமல்ல மற்றப் பல துறைகளிலும் உற்பத்தி விழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசமான பொருளாதார நிலையில் சவுதி அரேபியா இருக்கின்றது. அதனால் மேற்காசியாவில் ஒரு பிராந்தியத்திற்குத் தலைமை தாங்கிச் செல்லும் ஆற்றல் இல்லை. டொனால்ட் டிரம்ப்பிற்கு முன்னரே அமெரிக்கா மேற்காசியாவில் தனது எரிபொருள் தேவைக்குத் தங்கியிருக்காத நிலையில் அங்கு அதிக அக்கறை செலுத்துவதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் உருவாகிவிட்டது. சிரியாவிலும் ஈராக்கிலும் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர்கள் முடிவுக்கு வந்தாலும் அவற்றால் பல்வேறு இனங்களுக்குள் ஏற்பட்டுள்ள பகைமை இன்னும் பல ஆண்டுகளுக்கு அங்கு குழப்ப நிலையை அடிக்கடி உருவக்கிக் கொண்டிருக்கும். ஈரானுக்கும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டி மேற்காசியாவில் மேலும் பல இரத்தக் களரிகளை ஏற்படுத்தலாம்.

இடைவெளியால் குழப்பம்
2016-ம் ஆண்டு உலகப் பொருளாதார உற்பத்தியில் சீனாவின் பங்கு 15 விழுக்காடு. மொத்த ஆசிய நாடுகளின் பங்கு 31விழுக்காடு. அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பங்கு 47 விழுக்காடு. இறக்குமதி என்று பார்ப்போமானால் உலக இறக்குமதியில் சீனாவின் பங்கு 12 விழுக்காடாகவும் மொத்த ஆசியாவின் பங்கு 36 விழுக்காடாகவும் அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பங்கு (ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையேயான வர்த்தகத்தை விட்டுப் பார்த்தால்) 31 விழுக்காடாகவும் இருக்கின்றன. இந்தத் தரவுகள் இன்னும் உலகப் பொருளாதாரத்தில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் அதிக்மாக இருப்பதைக் காட்டுகின்றது. இந்தப் பின்னணியில் உலகமயமாதல் பின்னடைவைச் சந்தித்து தாராண்மை அரசியல்வாதமும் தாராண்மை பொருளாதாரவாதமும் உலக அரங்கில் தோல்வியடையும் போது ஏற்படும் ஒரு இடைவெளி உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்தும் நாடுகளிடையேயான சுதந்திர வர்த்தகத்தில் இருந்தும் பின்வாங்கும் போது ஏற்படும் இடைவெளி உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் இடைவெளியை மற்ற நாடுகள் எப்படி நிரப்பப் போகின்றன?


வரப்போகின்றன தீவிர மாற்றங்கள் 
இரசியா 2020இல் தனது படைத்துறையை நவீனமயப்படுத்தி முடித்துவிடும் என்கின்றது. சீனா 2030இல் படைத்துறை வலுவில் அமெரிக்காவை மிஞ்சும் திட்டத்துடன் இருக்கின்றது. 2070இல் உலகில் இஸ்லாமியர்களின் மொத்த மக்கள் தொகை கிறிஸ்த்தவர்களின் தொகையை மிஞ்சி விடும் என எதிர் பார்க்கப் படுகின்றது. இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் வேறு விதமாக இருக்கப் போகின்றது. உலக சூழல் பாதுகாப்பு, உலக நீர்த் தட்டுப்பாடு, மத சகிப்புத் தன்மையின்மை, பெண்ணடிமை, விடுதலைக்கு ஏங்கும் பல இனங்கள், ஆகியவற்றிற்கு மத்தியில் உலக நாடுகளை வழிநடத்த பொருளாதார ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் சிறந்து விளங்கும் ஒரு நாடு அல்லது நாடுகளின் கூட்டமைப்பு இப்போது அவசியம் தேவையாகின்றது.


இரசியா உலகை வழி நடத்துமா?
குறைந்து செல்லும் மக்கள் தொகையும் சரிந்து போய் இருக்கும் எரிபொருள் விலையும் ஊழல் நிறைந்த ஆட்சியும் அளவிற்கு மிஞ்சிய
அதிகாரம் கொண்ட தலைமையும் இரசியாவிற்கு உகந்தவை அல்ல.
சோவியத் ஒன்றியம் எப்படி மிதமிஞ்சிய படைத்துறைச் செலவால் சீரழிந்ததோ அதேபோல் தனது பொருளாதார வலுவிற்கு மிஞ்சிய நடவடிக்கைகளில் இரசியா தற்போது ஈடுபட்டுள்ளது. வெறும் அமெரிக்கப் பூச்சாண்டியை தனது மக்களுக்குப் போதித்து அதை தான் அடக்குவது போலவும் காட்டிக் கொண்டு இரசிய மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கும் விளடிமீர் புட்டீனிடம் இரசிய மக்கள் அமெரிக்காவை விட்டுத்தள்ளு எங்களுக்கான செழுமையான வாழ்க்கை எங்கே எனக் கேட்கும் காலம் புட்டீனின் வாழ்நாளில் ஏற்படும். ஏற்கனவே உலகை பொதுவுடமைத் தத்துவ அடிப்படையில் நடத்த முற்பட்டு பொதுவுடமைத் தத்துவத்திற்கே களங்கம் ஏற்படுத்தியது இரசியா. நிலப்பரப்பு ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் உலகில் முன்னணி நாடாக இருக்கும் இரசியா மற்ற நாடுகளை வழிநடத்துவதில் சிறந்து விளங்கியதில்லை. விளங்கப் போவதுமில்லை.


உலகை இந்தியா வழிநடத்துமா?
இளையோரை அதிகம் கொண்ட சிறந்த மக்கள் தொகைக் கட்டமைப்பு, வேகமாக வளரும் தொழில்நுட்பம் ஏழு விழுக்காடு வளரும் பொருளாதாரம், மேம்பட்டுவரும் கல்வியறிவு ஆகியவை இருந்தும் உலக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தத்துவார்த்த தலைமை இந்தியாவிடம் இல்லை. பெண்ணடிமையும் சாதிவாதமும் இந்தியாவின் கேவலமான அம்சங்களாகும். பிராந்தியங்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையும் மோசமாகிவரும் மதங்களுக்கு இடையிலான உறவும் மோசமாகிக் கொண்டு வரும் நீர்த்தட்டுப்பாடும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாதகமாக இருக்கின்றன. நேர்மையும் திறமையும் ஒன்றிணைந்த தலைமை இல்லாமையும் குடும்பநலவாதமும் இந்தியாவின் உலகத் தலைமைப் பண்பிற்கு உகந்ததல்ல.


சீனா சிறக்குமா?
உறுதியான ஆட்சி திடமான பொருளாதாரம் ஆளுமை மிக்க தலைமை ஆகியவை இருந்தும் சீனா உலகிற்குத் தலைமை தாங்கத் தயாரான நிலையில் இல்லை. சீனாவின் உட்கட்டுமான அரசுறவியல் சில நாடுகளின் அயோக்கிய ஆட்சியாளர்களுக்கே முண்டு கொடுக்கின்றது. சீனக் கலாச்சாரத்திலும் பெண்ணடிமை பின்னிப் பிணைந்துள்ளது.
அயல் நாடுகளுடனான மிரட்டல் அணுகு முறை சீனாவிற்கு ஒரு பிராந்தியத் தலைமைக்கு உரிய தகமையையயே இல்லாமற் செய்துவிட்டது.



தற்போதைய உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப தாடிக் கிழவனின் தத்துவத்திற்கு மீள் வடிவம் கொடுக்கும் நிலை வருமா?


Monday, 21 November 2016

அமெரிக்காவை டிரம்ப் வழிநடத்துவாரா அல்லது அவரை அமெரிக்கா ஒரு வழிப்படுத்துமா?

யாரும் எதிர்பாராத ஒரு வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் யாரும் எதிர்பாராத பாணியில் பரப்புரை செய்து பலரது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போடியிட்ட போது ஒரு டொனால்ட் டிரம்ப் உலகத்திற்குத் தெரிந்தார். அதில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட போது இன்னும் ஒரு டிரம்ப் உலகத்திற்குத் தெரிந்தார். தேர்தலில் அவர் ஹிலரி கிணிண்டனைத் தோற்கடித்து அமெரிக்க அதிபாராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மிகவும் வித்தியாசமான டிரம்ப்பாக அவர் காட்சியளித்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அவரது தன்மைகளும் கொள்கைக்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. அண்மைக் காலத்தில் எந்த ஒரு வெற்றி பெற்ற அதிபருக்கும் எதிராக நடக்காத ஆர்ப்பாட்டம் டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல முன்னணி நகரங்களில் நடந்தது. முதலில் டிரம்ப் ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாகத் தாக்கிப் பேசினார். பின்னர் அவர்களின் தேசப்பற்றை மெச்சினார். பராக் ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீட்டை கடுமையாக எதிர்த டிரம்ப் பின்னர் அதன் பகுதிய நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என்றார். முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை முற்றாகத் தடை செய்யும் நிலையில் இருந்தும் அவர் மாறினார். வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என்று சொன்ன டிரம்ப் பின்னர் அதைக் கைவிட்டார். அத்துடன் நிற்கவில்லை பின்னர் குற்றச் செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவரை வெளியேற்றுவேன் என்றார். மெக்சிக்கோ எல்லையில் சுவர் என்றார் பின்னர் வேலி என்கின்றார்.

டிரம்பின் முதற் கோணல்
எப்படியாவது தேர்தலில் வென்றிட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வந்த  டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெல்லும் வரை ஆட்சியை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக எந்தவித அக்கறையில்லாதவராகவும் யாரிடமும்  ஆலோசனை பெறாதவராகவும் இருந்தார். அவரது ஆட்சி எப்படி இருக்கப் போகின்றது என்பத அவரது அமைச்சரவையை வைத்தே கணிப்பிட முடியும் என நம்பியிருந்தவர்களுக்கு டிரம்ப் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சி கொடுத்தார். டிரம்பின் அமைச்சரவை உருவாக்கக் குழுவில் அவரது மூன்று பிள்ளைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். டிரம்பின் அமைச்சரவை உருவாக்கத்தில் பிரச்சனையின் முதலாம் கட்டம் அவரது மருமகன் ஜெரெட் குஷ்னருக்கும் புதிய அமைச்சரவையை அமைப்பதிற்குப் பொறுப்பாக இருந்த நியூ ஜேர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்றிக்கும் இடையிலான முறுகலில் ஆரம்பித்தது. கிறிஸ்றி டிரம்பின் மருமகனின் தந்தையை வருமான வரி ஏய்ப்பிற்காக சிறைக்கு அனுப்பியவர். இவர்களிடையான முறுகலால் கிறிஸ்றி பதவி விலக துணை அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்ற பென்ஸ் புதிய அமைச்சரவையை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். புதிய அமைச்சரவையை அமைப்பதில் டிரம்ப் பல சிக்கல்களையும் உள் மோதல்களையும் எதிர் கொள்கின்றார் என்ற செய்தியை டிரம்ப் மறுத்துக் கொண்டிருக்கையில் அவருக்கு அடுத்த அடி விழுந்தது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் உளவுத்துறைக் குழுவின் முன்னாள் தலைவர் மைக் ரொஜர் அடுத்ததாக டிரம்பின் அமைச்சரவையில் தேசிய பாதுகாப்புத் துறைப் பிரிவில் இருந்து விலகினார். அமெரிக்காவில் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் புதிய அமைச்சரவையை உருவாக்குவதில் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதுண்டு ஆனால் டிரம்பின் பிரச்சனைகள் உலக ஊடகங்களில் பெரும் செய்திகளாகவும் விமர்சனக் கட்டுரைகளாகவும் அடிபடுகின்றன. எந்த வித அரசியல் அனுபவமோ அல்லது அரச பதவி அனுபவமோ இல்லாத டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சிறப்பான அமைச்சரவை அவசியமான ஒன்றாகும்.

வரலாறு முக்கியம் அதிபரே
அண்மைக்காலங்களாக அமெரிக்க அதிபராக இருந்தவர்கள் எல்லோரும் நூல்களை வாசித்து தமது அறிவை வளர்த்தவர்கள். அதிலும் முக்கியமாக சரித்திரம் பற்றி வாசித்தறிந்தவர்கள். சரித்திரம் தொடர்பாக சரியான புரிந்துணர்வு இல்லாமல் ஓர் அமெரிக்க அதிபரால் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாகச் சிறந்த முடிவுகளை எடுக்க முடியாது. டொனால்ட் டிரம்ப் நூலகள் வாசிப்பது இல்லை அவருக்கு சரித்திரம் தொடர்பான புரிந்துணரவு ஏதும் இல்லை. போட்டி நாடுகளிற்கு எதிரான அமெரிக்காவின் ஆதிக்கச் சமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக வைத்திருப்பது அமெரிக்க அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இதை டொனால்ட் டிரம்ப் சரித்திரம் தொடர்பான புரிந்துணர்வு இல்லாமல் செய்ய முடியாது.

இனவாத அரசு
டொனால்ட் டிரம்ப்பின் கேந்திரோபாய ஆலோசகராக ஸ்டீஃபன் கே பன்னன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டிரம்பின் தேர்தல் பரப்புரைக்கு தலைமை நிறைவேற்று அதிகாரியாகச் செயற்பட்டவர். வெள்ளை இனவாதியான இவரின் நியமனம் டிரம்ப் தேச ஒற்றுமையைப் பாதிக்கக் கூடியவகையில் செயற்படமாட்டார் என நம்பியிருந்தவர்களுக்கு முதல் இடியாக விழுந்தது.  இந்த நியமனத்திற்கு எதிராக யூத மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் கடும் அதிருப்தியை வெளிவிட்டன. ஒஹியோ மாநிலத்தில் டிரம்பின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜோன் கஸிஸ் இந்த நியமனத்தை கடுமையாகச் சாடினார். புதிய நாஜிகளின் இணையத்தளம் ஸ்டீஃபன் கே பன்னை வெள்ளை மாளிகையில் எம்மவர் என்றது.

உலக ஆதிக்க நாயகன்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டொனால்ட் டிரம்ப் அதன் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய சுமையைத் தாங்கி நிற்கின்றார். ஆனால் டிரம்ப் உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக இதுவரை காலமும் இருந்த அதிபர்களின் கொள்கைக்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளார். அவரது வெளிநாட்டுக் கொள்கையை அவரால் வகுக்க முடியுமா? டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியின் மூதவை உறுப்பினர் பென் கார்டின் அமெரிக்காவின் மரபுவழி வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து அது விலகாமல் இருப்பதை உறுதிசெய்வது எல்லா மூதவை உறுப்பினர்களும் பொறுப்பு என்று சொன்னதுடன் நிற்காமல் எல்லா மூதவை உறுப்பினர்களுக்கும் மத்தியில் தனது பரப்புரையைச் செய்கின்றார். தனது கருத்துக்கு ஆளும் கட்சியின் மூதவை உறுப்பினர்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருப்பதாக பென் கார்டின் உறுதியாகச் சொல்கின்றார்.


மேற்காசியா
ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோது அவர் அரபு இஸ்ரேலியப் பிரச்சனையில் அதிக அக்கறை காட்டமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. மேற்காசியா தொடர்பாக அவரது கொள்கை வித்தியாசமானதாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் மெனக்கெம் பெகினுக்கு ரீகன் சமர்ப்பித்த சமாதானத் திட்டத்தை அவர் ஏற்காத போது பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான தடையை ரீகன் நீக்கி அதன் தலைவர் யசீர் அரபாத்துடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். டிரம்ப் அமெரிக்கா தனது எரிபொருள் தேவைக்கு ஆபத்து மிக்க மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தங்கியிருப்பதிலும் பார்க்க அமெரிக்காவின் எரிபொருள் தேவையை உள்நாட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கருதுகின்றார். ஆனால் உலக நாடுகளைச் சுரண்டி தனது பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தனக்கு மட்டுமல்ல உலகெங்கும் எரிபொருள் விநியோகம் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். ஈரானுடன் டிரம்ப் கடுமையாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஈரானுடம் நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்து கொண்ட அணுப்படைக்கலன் தொடர்பான உடன்படிக்கையை டிரம்ப் ஏற்றுக் கொள்வதில்லை என்றார்.

முதல் பரிட்சை
டொனால்ட் டிரம்ப் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபேயை நவம்பர் 17-ம் திகதி வியாழக் கிழமைச் சந்தித்தார். டிரம்ப் வேட்பாளராக இருந்த போது அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட அபே அவரைச் சந்திப்பதைத் தவிர்த்திருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சந்தித்த முதல் வெளிநாட்டுத்தலைவர் சின்சோ அபேயாகும். தேர்தல் பரப்புரையின் போது ஜப்பானினதும் தென் கொரியாவினதும் பாதுகாப்பு அமெரிக்காவின் பொறுப்பல்ல அவை தமது பாதுகாப்பைத் தாமே உறுதி செய்ய வேண்டும் என்றார். டிரமபைச் சந்தித்த பின்னர் சின்சோ அபே அவருடன் இணைந்து செயற்படுவதில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். நவம்பர் 18 வெள்ளிக் கிழமை டிரம்ப் நேட்டோ செயலாளர் நாயகத்தையும் சந்தித்தார்.

அமெரிக்கப் பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் வெளி நாடுகளில் அல்ல என்பது டிரம்பின் கொள்கை ஆனால் அமெரிக்காவின் பிரபல படைத்துறை உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டீன் இந்தியாவில் F-16 போர் விமானங்களை உற்பத்தி செய்ய எடுத்த முடிவை மாற்றப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

 பசுபிக் தாண்டிய பங்காண்மையும் அமெரிக்க வர்த்தகமும்
பசுபிக் தாண்டிய பங்காண்மையை அமெரிக்கா ஜப்பான் உட்பட 11 நாடுகளுடன் பராக் ஒபாமா உருவாக்கிய இருந்தார். ஜப்பானியப் பாராளமன்றம் அங்கீகரித்து விட்டது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை வர்த்தக ரீதியாக ஒழிக்க இந்த உடன்படிக்கை பல ஆண்டுகள் பேச்சு வார்த்தை நடத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் மட்டுமல்ல அட்லாண்டிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களையும் தான் இரத்துச் செய்யப் போவதாக டிரம்ப் சூளுரைத்திருந்தார். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளான நிலையில் உலக நாடுகளுடனான வர்த்தகம் அவசியமான ஒன்றாகும்.

அரச நிதி
அமெரிகாவில் அரச நிதி நெருக்கடி நீண்ட காலமாகப் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. டிரம்ப் அமெரிக்கா வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தனது உள்கட்டுமானங்களில் பாரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர். ஆனால் அவரது கொள்கை. அமெரிக்க அரச நிதியில் அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவை ஆதிக்கம் செலுத்தக் கூடியது. எல்லா அரச நிதி ஒதுக்கீடுகளும் மக்களவையின் அங்கிக்காரம் அவசியம். தேவை ஏற்படின் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒன்று சேர்ந்து அதிபரின் கைகளைக் கட்டிப்போடும் சட்டங்களை உருவாக்க முடியும்.

பருந்துகளைப் பிடித்த டிரம்ப்
அமெரிக்க அரசியல்வாதிகளை பல விதங்களாக வகைப்படுத்துவர். அதின் ஒன்று பருந்துகளும் புறாக்களுமாக வகைப்படுத்தல். பருந்துகள் என்போர் போரையும் அடுத்த நாடுகளில் தலையிடுவதையும் விரும்புபவர்கள். புறாக்கள் சண்டையைத் தவிர்த்து வேறு வழிகள் மூலம் மற்ற நாடுகளை தமது வழிக்குக் கொண்டு வர முயல்வார்கள்.  டொனால்ட் டிரம்ப் தேர்தலுக்கு முன்னர் இருந்த கடுமையான நிலைப்பாட்டில் இருந்து தேர்தலில் வென்ற பின் மாறுவார் என நம்பியிருந்தவர்களுக்கு டிரம்ப் முக்கிய பதவிகளிற்கு பருந்துகள் பிரிவில் இருந்து ஆட்களை நியமித்தது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. சட்டமா அதிபராக அலபாமா மாநிலத்திற்கான மூதவை உறுப்பினர் ஜெஃப் செஷன்ஸை டிரம்ப் நியமித்துள்ளார். முன்பு அமெரிக்கப் படைத்துறையிலும் பணி புரிந்த இவர் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு குடியேறியவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதைக் கடுமையாக எதிர்த்தவர் வேலைகளைச் செய்வதற்கு தேவையான வெளிநாட்டவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கும் திட்டத்தையும் கடுமையாக எதிர்க்கும் ஜெஃப் செஷன்ஸ் முன்பு இனக்குரோதக் கருத்துகளை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுபவராகும். அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின் இயக்குனராக டிரம்ப் மைக் போம்பியை நியமித்துள்ளார். தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் ஃபிலினை டிரம்ப் தெரிவு செய்துள்ளார். இந்த நியமனங்களை டிரம்பின் குடியரசுக் கட்சியினர் வரவேற்ற போதிலும் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரும் மனித உரிமை அமைப்புக்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர். சட்டமா அதிபராக நியமிக்கப் பட்ட செஷனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கப் பட்ட ஃபிலினும் குடிவரவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரானவர்களாகும். ஆனால் டிரம்ப் இந்த நியமனங்கள் அமெரிக்கர்களை உள்நாட்டிலும் உலகிலும் பாதுகாப்பாய் இருப்பதை உறுதிச் செய்யும் என்றார். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் சிறுபானமைக் குழுவின் தலைவர் இந்த நியமனங்கள் அமெரிக்காவின் எதிரிகள் தமது தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆட்சேர்ப்பதை இலகுவாக்கும் என்றார். ஏற்கனவே ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், ஈராக், சிரியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைத்துறையினர் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றனர். டிரம்பின் பருந்துக்கள் இப்போர்களில் மேலும் தீவிரமாக ஈடுபடுவார்களா?

இரசியாவால் தற்போது நேட்டோக் கூட்டமைப்பில் உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய  நாடுகளை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். நேட்டோ தொடர்பான டிரம்பின் கொள்கை அவரது தேர்தல் பரப்புரையின் போது இந்த நாட்டு ஆட்சியாளர்களை அச்ச முறவைத்தது. டிரம்ப் 2017-ம் ஆண்டு பதவி ஏற்க முன்னர் சிரியாவை முழுமையாக பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இரசியா அதிக முனைப்புக் காட்டுகின்றது. சீனா ஆசிய பசுபிக் நாடுகளுடனான வர்த்தகத்தை தனக்கு சாதகமாக்கி அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்திற்கு ஆப்பு வைக்க முயல்கின்றது.

மூச்சடக்கிய நாய்க்கு முக்கிய பதவி
2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னி டிரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போது அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார். பதிலுக்கு டிரம்ப் மிட் ரோம்னியை முச்சடக்கிய நாய்க்கு ஒப்பிட்டுப் பேசி இருந்தார். தற்போது இருவரும் சந்தித்து ஒரு மணித்தியாலம் உரையாடியுள்ளனர். அது மட்டுமல்ல அமெரிக்காவின் முக்கிய த் துறைச் செயலர் பதவி மிட் ரோம்னிக்கு வழங்கப்படும் எனச் செய்தி அடிபடுகின்றது. 

அமெரிக்க மூதவை டிரம்பிற்குக் கொடுக்கும் ரோதனை
100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 52 பேர் உள்ளனர்.  இது அமெரிக்க்காவைப் பொறுத்தவரை ஒரு அதிபரின் சிறப்பான செயற்பாட்டுக்கு உகந்த பெரும்பான்மை அல்ல. போதாக் குறைக்கு அந்த 52 பேரில் 12 பேர் டிரம்பிற்கு எதிரானவர்கள். பல சட்டங்களை நிறைவேற்றவும் பல நியமனங்களைச் செய்யவும் மூதவையில் 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எல்லா குடியரசுக் கட்சியினரும் கட்சியின் கொள்கைப்படி நடப்பவர் அல்லர். சிலர் தமக்கு என ஒரு கொள்கை உடையவர்கள். இவர்கள் பல கட்டங்களில் டிரம்ப்பிற்கு எதிராக வாக்களிக்கலாம். குடியரசுக் கடியின் 7 உறுப்பினர்கள் ஹிஸ்பனிக் சமூகன் எனப்படும் ஸ்பானிய வம்சா வழியினராகும். இவர்கள் டிரம்பின் குடிவரவுக் கொள்கைகளை எப்படி ஆதரிக்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும். 

கீழ்க்காணும்  பதவிகளுக்கு இன்னும் டிரம்ப் ஆட்களை நியமிக்கவில்லை:
Secretary of State
Secretary of the Treasury
Secretary of Defense
Secretary of the Interior
Secretary of Agriculture
Secretary of Commerce
Secretary of Labor
Secretary of Health and Human Services
Secretary of Housing and Urban Development
Secretary of Transportation
Secretary of Energy
Secretary of Education
Secretary of Veterans Affairs
Secretary of Homeland Security
Administrator of the Environmental Protection Agency
Director of the Office of Management & Budget
United States Trade Representative
United States Ambassador to the United Nations
Chairman of the Council of Economic Advisers
Administrator of the Small Business Administration

வழிக்கு வராவிடில் ஒழிக்கப்படுவார் – trump will be over trumped
டிரம்பின் பல கொள்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆட்டிப் படைக்கக் கூடியதாக இருக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது அதன் அதிபரோ பாராளமன்றமோ இரு பெரும் கட்சிகளோ அதன் படைத்துறையோ அல்ல. அது உணர்ந்து கொள்ள முடியாத வலிமை மிக்க ஒன்று. இனம் காணக் கடினமான கட்டமைப்பு. பல பல்தேசியக் நிறுவனங்களின் நலன்கள்தான் அதன் அடிப்படை. அதன் வழிக்கு வராமால் டிரம்ப் தன் பாட்டுக்கு அமெரிக்காவை வழிநடத்த முற்பட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் சும்மா இருக்காது. துணை அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்ற பென்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உகந்தவராகக் கருதப்படுகின்றார். தேவை ஏற்படின் அமெரிக்க ஏகாதிபத்தியம் பராளமன்றத்தின் உதவியுடன் டிரம்பைப் பதவி நீக்கம் செய்ய முடியும். அது முடியாமல் போனால் சித்த சுவாதீனமற்ற ஒருவரால் டிரம்ப் கொலைசெய்யப்படும் வாய்ப்புகள் இல்லை எனச் சொல்ல முடியாது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...