Monday, 12 December 2016

சிறந்த பத்து புலப்படாப் போர் விமானங்கள் (Stealth Fighter Jets



தற்போது பல நாடுகள் புலப்படாப் போர் விமானங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவை ரடார் எனப்படும் கதுவிகளால் உணர்ந்து அறிய முடியாதவகையில் பூச்சடிக்கப் பட்டிருப்பதுடன் அதன் வெளிவடிவமும் அதற்கு ஏற்ப அமைக்கப் பட்டிருக்கும். ராடார்கள் அல்லது கதுவிகள் வானொலி அலைகளை வீசி அது தேவையான இலக்கில் பட்டுத் தெறித்து வரும் அலைகளை உணர்ந்தறிந்து இலக்கின் உருவம், இடம், வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும். உடனடியாக அந்த இலக்கை நோக்கித் தாக்குதல் தொடுக்கலாம்.  கதுவிகள் அனுப்பும் வானொலியலைகளை உறிஞ்சக் கூடிய பூச்சு கதுவித் தவிர்ப்பு விமானங்களில் பூசப்பட்டிருக்கும். பெரும்பாலான புலப்படப் போர் விமானங்கள் தட்டை வடிவமானதாக இருக்கும். தற்போது உருவாக்கப் பட்டிருக்கும் பல போர்விமானங்கள் புலப்படாப் போர்விமானங்களாக இருக்கின்றன. ஆனால் ஒரு விமானத்தை வானில் வைத்து இனம் காணும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே போகின்றது. இதனால் புலப்படாத் தொழில்நுட்பத்துக்கும் விமானங்களை இனம்காணும் பலவிதமான உணரிகளின் தொழில்நுட்பத்திற்கும் இடையில் கடும் போட்டி தற்போது நிலவுகின்றது. புலப்படாத் தொழிநுட்பத்தை உணரித் தொழில்நுட்பம் விஞ்சி நிற்கின்ற போதிலும் பல நாடுகள் தொடர்ந்தும் புலப்படாப் போர்விமானங்களை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றன.

கதுவித் தொழில் நுட்பம்

Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே ரடார் அல்லது கதுவி ஆகும். கதுவிக்குத் தேவையான வானொலியலைகளை Magnetron என்னும் கருவி பிறப்பிக்கும். இந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும். அதனால் கணப் பொழுதில் எதிரி விமானங்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். விமான நிலையங்களில் விமானப் போக்கு வரத்தைக் கட்டுப்படுத்த கதுவிகள் பயன்படுத்தப்படுகின்றன. காவற்துறையினர் அளவிற்கு மிஞ்சிய வேகத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தை அறியவும் கதுவிகளைப் பயன்படுத்துகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்களும் புயல் சூறாவளி போன்றவற்றை அறிய கதுவிகளைப் பாவிக்கின்றனர்.

வானொலியலைகளை மட்டும் வைத்து போர் விமானங்கள் வானில் வைத்துக் கண்டறியப்படுவதில்லை. போர்விமானத்தில் இருந்து வரும் வெப்பக் கதிர்கள், ஒலியலைகள், போன்றவற்றை உணர்ந்து கொள்ளும் கருவிகள் மூலமாகவும் போர்விமானங்களின் நிலையறிந்து அவற்றைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டன.

முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியா மௌனிக்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட போர் விமானங்களை உருவாக்கியது. அவை இரவில் செயற்படும் போது மட்டும் எதிரியால் இனம் காண முடியாதவையாக இருந்தன. ஆனால் போரில் அது போதிய பலனளிக்கவில்லை. ஜேர்மன் எல்லைக்குள் சென்ற அப்போர் விமானங்களால் போதிய தகவல்களைத் திரட்ட முடியவில்லை. இலக்குகளையும் துல்லியமாக இனம் கண்டு தாக்கவும் முடியவில்லை. புலப்படாத் தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்களை ஜேர்மனி இரண்டாம் உலகப் போரின் போது பாவனைக்குக் கொண்டு வந்தது. பின்னர் ஐக்கிய அமெரிக்க 1981-ம் ஆண்டு F-117 Nighthawk என்னும் புலப்படாப் போர்விமானத்தை உருவாக்கியது. தொடர்ந்து 1982-ம் ஆண்டு அதிபரான ஜிம்மி கார்ட்டர் இதில் அதிக கவனம் செலுத்தி 1989-ம் ஆண்டு B-2 என்னும் புலப்படாப் போர்விமானங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. பின்னர் ரொனால்ட் ரீகனும் அமெரிக்க விமானப் படையை மேன்மையாக்குவதில் அதிக அக்கறை காட்டினார். தற்போது அமெரிக்கா மட்டுமே புலப்படாப் போர் விமானங்களை சேவையில் வைத்துள்ளது. F-22 ரப்டர், F-35 lightening -2 ஆகியவை அமெரிக்கா சேவையில் வைத்துள்ள அந்தப் போர் விமாங்களாகும். மேன்மையான புலப்படாத் தொழில்நுட்பம்தான் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சமாகும். புலப்படாத் தன்மைக்காக ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களில் குண்டுகள் விமானத்திற்குள் பொருத்தப்பட்டிருக்கும்.

பத்தாமிடம் ஈரான் - F-313 Qaher

தலைசிறந்த கதுவித் தவிர்ப்புப் போர் விமானங்களில் 10-ம் இடத்தில் இருப்பது ஈரானின்  F-313 Qaher போர் விமானங்களாகும். இவை சிறிய ஓடுபாதைகளில் இருந்து மேலெழுந்து செல்லவும் தரையிறங்கவும் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈரான் இன்னும் F-313 Qaher போர் விமானங்களை உற்பத்தி செய்து முடிக்கவில்லை. 2013-ம் ஆண்டு இவற்றை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. சில படைத்துறை நிபுணர்கள் இதை ஈரானின் ஏமாற்று வேலை என்கின்றனர். ஒரு கதுவித் தவிர்ப்பு விமானத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் ஈரானிடம் இல்லை என்கின்றார்கள் அவர்கள்.

ஒன்பதாம் இடம் சுவீடன் - Flygsystem-2020

ஒன்பதாம் இடத்தில் இருப்பது சுவீடனின் Flygsystem-2020 போர் விமாங்களாகும். இவை 2020-ம் ஆண்டு சேவைக்குக் கொண்டு வரப்படும். இதை ஓர் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக சுவீடன் உருவாக்கவிடுக்கின்றது. இது பற்றிய தகவல்களை சுவீடன் இரகசியமாக வைத்திருக்கின்றது. இந்த விமான உருவாக்கம் தற்போது எந்த நிலையில் இருக்கின்றது என்பது பற்றிக் கூட சரியான தகவல் இல்லை. இது ஒரு பற்பணிப் (multi-role) போர்விமானமாகும். இது தனது குண்டுகளை உட்புறம் வைத்துக் கொள்ளக் கூடியது.

எட்டாம் இடம் தென் கொரியா/இந்தோனேசியா KF-X/IF-X-2025

எட்டாம் இடத்தில் இருப்பது தென் கொரியாவும் இந்தோனேசியாவும் இணைந்து உருவாக்கும் KF-X/IF-X-2025 போர்விமானங்களாகும். தென் கொரியா தனது போர் விமானங்களை உருவாக்கியதில் பெற்ற அனுபவம் அதை புலப்படாப் போர் விமானங்களை உருவாக்கத் தூண்டியது. அதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்தோனேசியாவுடன் இணைந்து பிரான்சின் Dassault Rafale அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் Eurofighter Typhoon போர் விமானங்களைப் போன்றாதகவும் மேலும் புலப்படாத் தன்மை மிக்கதாகவும் உள்ள போர்விமானத்தை 2025-ம் ஆண்டு உருவாக்கும் திட்டம் 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்போர் விமானங்கள் நான்காம் தலைமுறைக்கு மேலானதாகவும் ஐந்தாம் தலைமுறைக்குக் குறைவானதாகவும் இருக்கும்.

ஏழாம் இடம் துருக்கி – TAI TFX

பிரித்தானியாவின் BAE Systems நிறுவனத்துடன் இணைந்து துருக்கு உருவாக்கும் ஐந்தாம் தலைமுறைப்ப் போர்விமானம் TAI TFX. வானில் இருந்து வானில் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் போர் விமானங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன.

ஆறாம் இடம் இந்தியா - HAL AMCA

இந்தியா 2008-ம் ஆண்டு இரகசியாமாகத் தொடங்கிய ஐந்தாம் தலைமுறைப் புலப்படாப் போர்விமானங்களை உருவாக்கும் திட்டம் 2011-ம் ஆண்டு பகிரங்கப்படுத்தப்பட்டது. HAL AMCA ஒற்றை இருக்கை, உயர்செலுத்தும் தன்மை (supermaneuverable), இரட்டை இயந்திரம் கொண்டமையாக இருக்கும் 2023 அல்லது 2024இல் இவை பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தியாவின் திட்டம் இதை ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜாவாக்குவதே. வான் தாக்குதல், வான் ஆதிக்கம், தரைத்தாக்குதல், இடைமறிப்புத்தாக்குதல் போன்றவற்றைச் செய்யக் கூடியதும் எல்லாக் கால நிலைகளில்ம் செயற்படக்க் கூடியதுமான  பற்பணிப் போர்விமானமாகும். இதற்கு இந்தியப் பாதுகாப்புத் துறை இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஐந்தாம் இடம் ஜப்பான் – மிற்சுபிஸி X-2

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பான் அமெரிக்காவின் F-22 புலப்படாப் போர்விமானங்களைய வாங்க முயன்றது. F-22இன் தொழில்நுட்ப இரகசியத்தைப் பேணும் முகமாக அமெரிக்கப் பாராளமன்றம் அந்த விற்பனையைத் தடுத்தது. இதைத் தொடர்ந்து ஜப்பான் தானே புலப்படாத் தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்களை உருவாக்கும் திட்டத்தை வரைந்தது. அத்திட்டத்தின் வெற்றியாக 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜப்பானின் மிற்சுபிஸி X-2 போர் விமானத்தின் முதற்பறப்புச் செய்யப்பட்டது.

நான்காம் இடம் சீனா J-31

சீனாவின் J-31 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக உருவாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதன் இரண்டு முன்மாதிரிகளை ஏற்கனவே சீனா தயாரித்துள்ளது. 2018 அல்லது 2019இல் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட J-31 புலப்படாப் போர்விமானம் பாவனைக்கு வரலாம். இந்த விமானத்தை இரசிய ஊடகங்கள் புகழ்ந்த போது மேற்கு ஊடகங்கள் அதிக எரிபொருள் பாவிக்கின்றது எனக் குறை கூறின.

மூன்றாம் இடம் சீனா J-20

சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட J-20 புலப்படாப் போர்விமானங்களும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். ஏற்கனவே இது பரீட்சிக்கப்பட்டுள்ளது. விரையில் இவை பாவனைக்கு வரலாம்.

இரண்டாம் இடம் இரசியா -  PAK FA

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக 2018-ம் ஆண்டு வெளிவர இருப்பது T-50 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் PAK FA என்னும் புலப்படாப் போர்விமானங்களாகும். இதை இந்தியாவுடன் இணைந்து இரசியா தயாரிக்கின்றது, அடுத்த 35 ஆண்டுகள் இரசியாவினதும் இந்தியாவினதும் வான்படைகளின் முதுகெலும்பாக இந்தப் போர் விமானங்கள் இருக்கப்  போகின்றன. ஒற்றை இருக்கையும் இரட்டை இயந்திரங்களும் இதில் இருக்கும்.

முதலாமிடம் இந்தியா-இரசியா FGFA/ PMF

தற்போது உருவாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் போர் விமானங்களுக்குள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கும் Sukhoi/HAL Fifth Generation Fighter Aircraft (FGFA) or Perspective Multi-role Fighter (PMF) என்னும் போர்விமானாங்களாகும். இரு நாடுகளும் இணைந்து உருவாக்கும் T-50 போர் விமானங்களிற்கு 43 வகையான மேம்பாடுகளைக் கொடுத்து இப்போர் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து இரு நாடுகளும் 2007-ம் ஆண்டு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்க ஒத்துக் கொண்டன.

சும்மா விடுமா அமெரிக்கா

அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் தற்போது பாவனையில் உள்ள சிறந்த போர்விமானமாகக் கருதப்படும் போதிலும் அது இன்னும் போர்முனையில் ஒரு முழுமையான பாவனைக்கு வரவில்லை. அமெரிக்கா தனது வான் படையின் மேலாதிக்கத்தைத்ட் தொடர்ந்து பேண ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்கள் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் இவற்றால் கருக்கி விழுத்தப்படும் இவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக இருக்கும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control முறைமை மிக உன்னதமானதாக இருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...