Wednesday, 22 June 2016

கடன் கொடுத்துக் கலங்கும் சீன வங்கிகள்


சீனாவின் வங்கித் துறை 29ரில்லியன் டொலர்கள் பெறுமதியானது அதாவது 29இலட்சம் கோடி. சீன வங்கித் துறையின் கடன்களின் 20 விழுக்காடு அறவிட முடியாத நிலையில் இருக்கின்றது. சீனாவின் கிராமிய வர்த்தக வங்கிகளின் அறவிட முடியாக் கடன்கள் அதிகரித்துக் கொண்டே போக வங்கிகளின் இலாபங்களும் குறைந்து கொண்டே போகின்றன. சீன வங்கிகளின் அறவிடமுடியாக் கடன்களை உலக நிதி ஊடகங்கள் non-performing loans என்ற பெயரும் NPLs என்ற சுருக்கப் பெயரும் இட்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தைச் சூழும் கடன் ஆபத்தை சீனா சரியாகக் கையாளாவிடில் அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என IMF எனப்படும் பன்னாட்டு நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

உலகத்தில் தங்கியிருக்கும் சீனா
1980களின் ஆரம்பத்தில் இருந்து முழு அரச உதவியுடன் மலிவான ஊதியத் தொழிலாளர்களுடன் உருவாக்கப் பட்ட தொழிற்சாலைகள் மலிவான பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்ததால் சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. பொருளாதாரத்தில் அதிகமான அரச முதலீடும் அளவிற்கு மிஞ்சிய அரசியல் தலையீடும் ஒரு திறனற்ற உற்பத்தித் துறையை சீனாவில் உருவாக்கியது . இதனால் 2008-ம் 2009-ம் ஆண்டுகளின் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியால். சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது. எப்போதும் வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போடும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருந்த சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றது.  இதனால் ஏற்படும் சமூக பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க சீன ஆட்சியாளர்கள் பெரும் சிரமப் படுகின்றார்கள். சீன மக்களின் கொள்வனவு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 34 விழுக்காடு மட்டுமே.  இந்த விழுக்காடு அமெரிக்காவில் 70 ஆகவும் ஜப்பானில் 61 ஆகவும் தென் கொரியாவில் 50 ஆகவும் இந்தியாவில் 59 ஆகவும் இருக்கின்றது. இதனால்தான் உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது சீனாவின் வர்த்தக வங்கித் துறை சீன நிதித்துறையின் மோசமான வலுவின்மைப் புள்ளியாக இருக்கின்றது. Liuzhou Bank என்னும் வர்த்தக வங்கியில் 4.9பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஊழல் நடந்துள்ளது. இது அதன் மொத்த சொத்துப் பெறுமதியின் மூன்றில் ஒரு பங்காகும். சீனாவின் வங்கித் துறையில் நிலவும் ஊழல் வங்கிகளின் கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதற்கு Liuzhou Bank உதாரணமாகக் காட்டப்படுகின்றது.

மூடிமறைக்கும் திட்டம் - debt-for-equity swap
கூட்டாண்மைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை அந்தக் கூட்டாண்மைகளில் வங்கிகளின் பங்குகளாக மாற்றும் முயற்ச்சியை சினா 2016-ம் ஆண்டு ஆரம்பித்தது. இதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டன. ஆனால் வங்கிகளின் நிதி நிலை இருப்பில் அறவிட முடியாக் கடன்களை முதலீடுகளாக மாற்றுவது பிரச்சனையை மூடி மறைக்கும் செயல் மட்டுமே. அது பிரச்சனையைத் தீர்க்காது. வங்கிகள் தாம் கடன் கொடுத்த கூட்டாண்மைகளின் பங்குகளை உலகச் சந்தையில் விற்பது சீனாவின் உபாயமாகும். இதன் மூலம் தனது உள்நாட்டுக் கடன் பிரச்சனையை 7.6பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளாக உலகச் சந்தைக்குத் தள்ள சீனா முயற்ச்சிக்கின்றது. உலக முதலீட்டு முகாமையாளர்கள் சீனாவின் பங்குகளாக மாற்றப்பட்ட செயற்படாக் கடன்களில் (non-performing loans) அதிக அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது நிச்சயம். அதனால் அடிமாட்டு விலைக்கு அப் பங்குகள் விற்கப்படலாம். முதலீடுகளைத் தரவரிசைப் படுத்தும் நிறுவனங்கள் சீனாவின் இப் புதிய பங்குகளைத் தரவரிசைப் படுத்த மறுத்துள்ளன. அதுவும் இப்பங்குகளின் விலையை குறைக்கும். இதனால் சீனாவின் இப் புதிய பங்கு விற்பனைத் திட்டத்தை பன்றிக்கு உதட்டுச் சாயம் பூசும் செயல் என ஒரு நிதித் துறை விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். இது கடன் கொடுத்த வங்கிகளின் இருப்பு நிலைக்குறிப்பை (balance sheet) மாற்றியமைக்கலாம் ஆனால் அவற்றின் அடிப்படைக் கடன் பிரச்சனையை மாற்றாது.


சீன மக்கள் பட்ட கடனும் படும் தொல்லைகளும்
சீனாவின் மக்கள் பலர் தாம் பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அவர்க மேலும் கடன் பட்டு தமது கடன்களைச் செலுத்த வேண்டியுள்ளது. கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் பெண்களுக்கு வழங்கும் கடனிற்கான உறுதிப் பத்திரமாக அவர்களது நிர்வாணப் படங்களை கேட்டு வாங்குகின்றார்கள். பின்னாளில் அவர்களை மிரட்டிப் பணம் வாங்க அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் தம்மிடம் கடன் பட்டவர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் அவர்களது வீடுகளை உடைத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களைச் செய்கின்றார்கள். சில மாணவிகள் படிப்பதற்கு வாங்கிய கடனுக்கு மீளளிப்பாக தமது உடலையே கொடுக்க வேண்டியும் இருக்கின்றது. நிழல் வங்கிகள் எனப்படும் பதிவு செய்யப் படாத வங்கிகளின் அடாவடித்தனத்தை அடக்க சீன அரசு பெரு முயற்ச்சி எடுத்து வருகின்றது.

உடன் நிவாரணம்
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கடன்களைப் பங்குகளாக மாற்றும் திட்டத்தை அறிவித்த சீனா ஏப்ரல் மாதம் தனது உள்நாட்டுக்கடன் 60விழுக்காட்டால் குறைந்ததாக அறிவித்தது. அத்துடன் ஏப்ரல் மாதம் புதிய கடன்கள் சீன் நாணயத்தில் 556பில்லியன்கள் மட்டுமே. இது எதிர்பார்த்திருந்த 900பில்லியன்களடுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே.  ஆனால் 2016-ம் ஆண்டு சீனாவில் புதிய முதலீடுகள், தொழிற்சாலை உற்பத்திகள், சில்லறை விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததிலும் பார்க்கக் குறைந்திருந்தன. அதனால் அந்தக் கடன் வீழ்ச்சி நம்பமுடியாத ஒன்றாக இருக்கின்றது.

எச்சரிக்கும் South China Morning Post
2016-ம் ஆண்டு மே மாதம் 8-ம் திகதி South China Morning Post என்னும் ஊடகம் "Why you should avoid Chinese bank stocks" என்னும் தலைப்பில் வெளிவிட்ட செய்தியில் சீன வங்கிகளின் செயற்படாக் கடன்களின் தொகை அதிகரித்துக் கொண்டு போவதாகவும் அவை விற்கும் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது. ஏற்கனவே ஹொங்கொங்கில் இருந்து வெளிவரும் அந்த South China Morning Post சீன வங்கிகளின் செயற்பட முடியாக் கடன் அரசு தெரிவிக்கும் தொகையிலும் பார்க்க எட்டு மடங்கானது எனப் போட்டு உடைத்திருந்தது. உண்மையான செயற்படாக் கடன் வங்கிகளின் மொத்தச் சொத்தின் 1.6விழுக்காடு என சீன அரசு சொல்வது பொய் என்றும் உண்மையான விழுக்காடு 15 முதல் 19 விழுக்காடு என அடித்துச் சொல்கின்றது South China Morning Post. சீனாவின் மொத்தக் கடன் பளு 2020-ம் ஆண்டு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 300விழுக்காடாக அதிகரிக்கும் எனவும் அது எச்சரிக்கின்றது. சீனப் பொருளாதார வளர்ச்சி தனது வேகத்தைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கையில் சீன வங்கிகளின் செயற்படாக் கடனும் அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் அது எதிர்வு கூறுகின்றது. சீன அரசு அதன் பொருளாதாரத்தைத் தூண்ட எடுக்கும் முயற்ச்சிகள் அவற்றின் செயற்திறனை இழந்து வருகின்றன என மேலும் அது தெரிவிக்கின்றது.

கைக்காசு நிறையவுடைய சீன வங்கி
சீனாவின் ஏற்றுமதி அதிகரிப்பு 2008-ம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கியதால் ஏற்பட்ட உற்பத்தி இடைவெளியை நிரப்ப சீனா உள்நாட்டில் பல திட்டங்களிற்கு கடன் வழங்கும் படி அதன் வங்கிகளைப் பணித்தது. இதனால் இலாபத் திறனற்ற பல முதலீடுகளுக்கு கடன்கள் வங்கிகளால் வழங்கப் பட்டன. இந்தக் கடன் வழங்கலில் ஊழல் மற்றும் பொதுவுடமைக் கட்சியினரின் தலையீடுகள் நிறைந்திருந்தன. சீனாவின் உள்ளகக் கடன் பளு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதில் பல பொருளியல் நிபுணர்கள் ஒத்து வருகின்ற போதிலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதில் ஒரு பொதுவான உடன்பாடு அவர்களிடையே இல்லை. சீனாவில் ஏற்பட்டது போன்ற கடன் அதிகரிப்பு நடந்த பல நாடுகளில் நிதி நெருக்கடி அல்லது தொடர் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது என்பது சரித்திர உண்மை என்கின்றனர் பொருளியல் நிபுணர்கள். ஒரு பிரிவினர் சீனாவின் தற்போதைய நிலை அமெரிக்காவில் லீமன் பிரதர்ஸ் முறிவடைந்த போது உருவான நிலை போன்றது. அது வங்கிகள் பல முறிவடையும் நிலையை உருவாக்கும் என்கின்றனர். வேறு சிலர் இது ஜப்பானில் ஏற்பட்ட நிலை போன்றது என்றும் இதனால் பல பத்து ஆண்டுகள் சீனா பொருளாதார மந்த நிலையில் இருக்கும் என எச்சரிக்கின்றனர். வேறு சிலர் சீன மைய வங்கியான சீன மக்கள் வங்கி வங்கித் துறைக்கு அதிக நிதியை வாரி இறைக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. அதனால் பிரச்சனை பெரிதாக வெடிப்பது சாத்தியமில்லை என்கின்றனர். சீனாவின் கடன் பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 237 விழுக்காடு என சீன அரசு சொல்கின்றது. சீனாவின் தகவல்கள் நம்பத் தகுந்தவை அல்ல அதன் கடன் பழு 280 விழுக்காட்டிற்கு மேல் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன.

வரவுள்ளமை முதலீடுகள் (investment receivables)
சீன வங்கிகள் கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரம் விழுக்காடு வளர்ச்சியை அடைந்து தற்போது 34.5 ரில்லியன் டொலர்கள் மொத்தப் பெறுமதியுள்ளவையாக உருவெடுத்துள்ளன. சீனாவின் செயற்படாத கடன்கள் வங்கிகளின் பெறுமதியில் 1.75 விழுக்காடு என சீன அரசு கூறுகின்றது ஆனால் உண்மையில் அந்த விழுக்காடு பல மடங்கு அதிகமாகும் என்பதுதான் உண்மை. ஒரு தாராள மதிப்பீடு அது மூன்று விழுக்காடு எனக் கூறுகின்றது. அதன்படி 34.5ரில்லியனின் 3 விழுக்காடு ஒரு ரில்லியன் ஆகும். காலப் போக்கில் இந்தக் கடன்கள் அறவிட முடியாத கடன்கள் என நிலைப்படுத்தப்படும் போது சீன அரசு தன்னிடமுள்ள ஒதுக்கீட்டு நிதியான மூன்று ரில்லியன் டொலர்களில் ஒரு ரில்லியன்களை தனது வங்கிக் துறைக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செய்த பின்னர் சீன வங்கிகளில் மீள் முதலீடு செய்ய முடியாத நிலை சீன அரசுக்கு ஏற்படும். கைல் பாஸ் என்னும் அமெரிக்க முதலீட்டாளர் சீனாவின் நாணயம் கடுமையாக மதிப்புக் குறைக்கப் படும் என்கின்றார். பல சீன வங்கிகள் தம்மால் அறவிட முடியாத கடனகளைப் வரவுள்ளமை முதலீடுகள் (investment receivables) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளன. சீன நாணயமான ரென்மின்பியில் சீன வங்கிகளின் வரவுள்ளமை முதலீடுகள் 2012இல் 2.32ரில்லியின் ஆக இருந்தது தற்போது அது 8.96 ரில்லியன்களாக உயர்ந்து விட்டது.

சீன வழி தனி வழி
சீனாவின் கடன் பளு வேறு மேற்கு நாடுகளின் கடன் பளு வேறு
நெப்போலியனுக்கு எதிரான போர் முடியும் போது பிரித்தானியாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக இருந்தது. அதன் பின்னர் பிரித்தானிய உலகப் பெரு வல்லரசாக மாறியது. அது உலகின் முதல் தர பொருளாதார நாடாகி அதன் நாணயம் உலக நாணயமானது. சீனாவின் கடன் பளு பெரும்பாலும் உள் நாட்டு நாணயத்திலேயே உள்ளது. அதன் வெளிநாட்டு நாணயக் கடன் உள்நாட்டுக் கடனின் 5 விழுக்காடு மட்டுமே. உலகைப் பொறுத்தவரை சீனா கடன் கொடுத்த நாடு மட்டுமே அமெரிக்காவைப் போல் கடன் பட்ட நாடு அல்ல. 2016-ம் ஆண்டு மே மாதம் 5-ம் திகதிய கணக்கின் படி ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக்கடன் $19,188,102,413,248ஆகும். சீனாவின் கடன் இதன் பத்தில் ஒரு பங்கு அளவு மட்டுமே. சீனாவின் மொத்தக் கடன் பளு அதன் தேசிய உற்பத்தியில் 237விழுக்காடாக இருக்கையில் அதன் வெளிநாட்டுக்கடன் 16விழுக் கடன் கொடுத்துக் கலங்கும் சீன வங்கிகள் காடு மட்டுமே. இதனால் பல ஆசிய நாடுகளில் 1977ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி போன்று சீனாவில் ஏற்பட வாய்ப்பில்லை. மேற்கு நாட்டு மக்களுடன் ஒப்பிடுகையில் சீனர்கள் அதிக அளவு சேமிக்கின்றார்கள். பிரச்சனை என்று வரும் போது கடுமையான சிக்கனத்தையும் கடைப்பிடிக்கத் தயாராக அவர்கள் உள்ளார்கள். சீன அரசு தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை உள்நாட்டு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தயங்காமல் பாவிக்கத் தயார் நிலையில் உள்ளது என்பதை சீனப் பங்குச் சந்தை 2015ம் ஆண்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்த போது நிரூபித்தது. சீனாவின் வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகுப் போது சீன அரசு கைகொடுக்கத் தயங்காது. இதனால் தான பிரித்தானியப் பைனான்சியல் ரைம்ஸ் நாளேடு 2016-ம் ஆண்டு மே மாதம் 25-ம் திகதி சீன வங்கிகள் தொடர்பான கட்டுரைக்கு "பீதியடையத் தேவையில்லை, சீன வங்கிகள் நல்ல நிலையில் உள்ளன" எனத் தலைப்பிட்டது.


Sunday, 19 June 2016

கருத்துக் கணிப்பு: ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும்

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் காப்புவரியை (Tariff)இல்லாமற் செய்தால் நாடுகளிடையேயான வர்த்தகம் அதிகரிக்கும். இந்தக் காப்புவரி ஒழிப்பிற்கான முயற்ச்சி பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. உலக வர்த்தக அமைப்பு (THE World Trade Organisation WTO) இதற்கென உருவாக்கப்பட்டது. பொதுவுடமைப் புரட்சியின் பின் இந்த அமைப்பில் இருந்து விலகிய சீனா மீண்டும் அதில் இணைய 1980-ம் ஆண்டு விண்ணபித்து 21ஆண்டுகளின் பின்னர் இணைக்கப்பட்டது. சீனாவும் பிரேசிலும் WTOஇல் உறுப்புரிமை பெற்ற பின்னர் அமெரிக்காவின் அதிகாரம் அதில் குறைந்ததால் அதற்கு வெளியே பசுபிக் தாண்டிய வர்தககப் பங்காண்மை, அட்லாண்டித் தாண்டிய வர்த்தக்ப் பங்காணமை என அமைப்புக்களை உருவாக்கி காப்புவரியில்லாமல் பல நாடுகளுடன் வர்த்தகம் செய்யப் பெரு முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கையில் பிரித்தானியா அதே நோக்கத்திற்காக உருவாக்கப் பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது பற்றி பிரித்தானியா ஒரு கருத்துக் கணிப்பை 2016 ஜூன் 23-ம் திகதி எடுக்க விருக்கின்றது. இது சட்ட பூர்வக் கருத்துக் கணிப்பீடு அல்ல ஒரு ஆலோசனை கோரும் கருத்துக் கணிப்பு மட்டுமே.

மரம் பழுக்க வௌவாலாக வந்த பிரித்தானியா.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய நிலகரி-உருக்கு சமூகம் 195-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, லக்சம்பேர்க், ஆகிய ஆறு நாடுகளும் இணைந்து பரிஸ் உடன்படிக்கை மூலம் இந்த சமூகத்தை உருவாக்கின. இதை உருவாக்கும் போது இதில் இணைந்து கொள்ளும் படி பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அது நிராகரித்தது. பிரித்தானியாவும் இணைவதை பிரான்ஸ் பெரிதும் விரும்பியது.   ஒன்றுபட்ட, போரில்லாத, வர்த்தகத் தடையற்ற, பொதுசந்தையுடைய ஐரோப்பாவை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சமூகம் உருவாக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து 1957-ம் ஆண்டு ரோம் உடன்படிக்கை மூலம் ஐரோப்பியப் பொருளாதார சமூகம் உருவாக்கப் பட்டது. இந்த நாடுகள் இதன் மூலம் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்தன. இரண்டாம் உலக் போரின் பின்னர் பொருளாதார அடிப்படையில் ஐரோப்பாவின் நோயாளி என விபரிக்கப் பட்ட பிரித்தானியாவும் ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் வளர்ச்சியைக் கண்டு அதில் இணைய விரும்பியது. 1961-ம் ஆண்டு பிரித்தானியா செய்த விண்ணபத்தை பிரான்ஸ் நிராகரித்தது. மீண்டும் ஒரு விண்ணப்பம் செய்யப் பட்டது அதுவும் பிரான்ஸால் நிராகரிக்கப் பட்டது. ஆனால் பிரான்ஸின் எதிர்ப்பால் அது கைகூடவில்லை. பின்னர் 1973-ம் ஆண்டு பிரித்தானியாவும் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்து கொண்டது. அப்போதில் இருந்தே பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கு பிரித்தானியாவின் சில பகுதியினரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் 1975-ம் ஆண்டு தலமை அமைச்சராக இருந்த ஹரோல்ட் வில்சன் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தி அதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு 67விழுக்காடிற்கும் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்றார். அப்போது பிரித்தானிய ஊடகங்கள் எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதற்கான ஆதரவை வழங்கின.

அற்ற குளத்தில் அறிநீர்ப் பறவையாக பிரித்தானியா?
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருந்ததால் அதன் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டது. 2008-ம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்தானியா மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க முதலில் தப்பிக் கொண்டது. பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாலும் அவை அதிலிருந்து விடுபடும் நாள் அண்மையில் இல்லை என்பதாலும் அதிலிருந்து வெளியேறவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களின் ஆதிக்கம் பிரித்தானியாவின் கொன்சர்வேர்டிவ் எனப்படும் பழமைவாதக் கட்சியினரிடையே அதிகரித்தது. 2010-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி பழமைவாதக் கட்சியினரின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாலும் பழமைவாதக் கட்சியினரிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்ற கருத்து மேலும் வலுப்பெற்றது. இதனால் 2010-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் பொதுத் தேர்தலின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருப்பதா இல்லையா என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற உறுதி மொழியை வழங்கினார்.

தீவு மனப்பாங்கும் ஏகாதிபத்திய மீத்தங்கலும் (hangover)
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பிரித்தானிய ஊடகங்களும் நகைச்சுவைக் கலைஞர்களும் மற்ற ஐரோப்பிய நாடுகளை மோசமாகத் தாக்குவதில் பின்னிற்பதில்லை. இதில் பெரும் தாக்குதலுக்கு உள்ளாபவை ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் தான். ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவை ஆக்கிரமிக்க வந்த பெரும் கடற்படையை முறியத்தமை, நெப்போலியனைத் தோற்கடித்தமை, இரு பெரும் உலகப் போரில் ஜேர்மனியைத் தோற்கடித்தமை எல்லாம் பிரித்தானியர்களை தாம் மற்ற ஐரோப்பியர்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் என எண்ண வைக்கின்றது. பனிப்போரில் அமெரிக்காவுடன் இணைந்து சோவியத் ஒன்றியத்தை தோற்கடித்தமையும் பிரித்தானியர்களின் திமிரைக் கூட்டுகின்றது. உலகக் கடலலைகளை ஆண்ட பிரித்தானியா என்ற நினைப்பும் இன்னும் பிரித்தானியரை விட்டு அகலவில்லை. 2014-ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவைப் பற்றி எழுதிய சாம் வில்சன் என்ற ஆய்வாளர் Perhaps it is Britain's island mentality, combined with that imperial hangover, that is at play - Britain is used to giving orders, not taking them. எனக் குறிப்பிட்டார். பிரித்தானியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடையோர் ஐரோப்பிய ஒன்றியம் சட்டங்களை இயற்றி எம்மீது திணிக்கக் கூடாது என்றும் எமது நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றங்கள் மாற்றியமைக்கக் கூடாது என்றும் திமிருடன் கூறுவதற்கான காரணம் இதுவாக இருக்கலாம்.

உள்கட்சி மோதல்களும் கட்சிகளிடை மோதல்களும்
ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான விவாதம் பிரித்தானியக் கட்சிகளிடையே மட்டுமல்ல கட்சிகளுக்குள்ளும் பெரும் விவாதப் பொருளாக ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகின்றது. பழமைவாதக் கட்சியின் தீவிர வலது சாரிகளும் தொழிற்கட்சியின் தீவிர இடதுசாரிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தை விரும்பவில்லை. தேசிய அரசுகள் என்பது முதலாளித்துவச் சிந்தனை மட்டுமே உண்மையான சமூகவுடமைவாதி (சோசலிசவாதி) தேசிய அரசுகளைப்பற்றிக் கவலைப்படமாட்டான். அவன் உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்ப்பான். பெருமுதலாளிகளுக்குத்தான் தமது சுரண்டல்களிற்கான பிரதான தளமாக ஒரு தேசிய அரசு அதிகம் தேவைப்படும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகின்றது. சமூகவுடமைவாதிகள் தங்களுக்குள் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொளவில்லை. ஆனால் இரண்டாம் போருக்குப் பின்னரான பிரித்தானியாவில் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையில் உள்ள மோதலிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்பிக்கையற்றவர்களுக்கும் (Eurosceptic) ஆதரவானவர்களுக்கும் (Europhile) இடையில் உள்ள மோதல்களே பிரித்தானிய அரசியலில் பெரிதாக அடிபட்டது.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள இடதுசாரிகள் பிரித்தானிய இடதுசாரிகளுடன் இணைய விரும்பினர்.

பிரித்தானியாவின் முட்டாள்த்தனமான முடிவும் கீழ்த்தரமான அரசியலும்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா இல்லையா என்பதைப் பற்றிய கருத்துக் கணிப்பை பற்றிக் கருத்து வெளியிட்ட ஐரிஸ் ரைம்ஸ் என்னும் ஊடகம் பிரித்தானிய வரலாற்றில் ஒரு தலைமை அமைச்சர் எடுத்த முட்டாள்த்தனமான முடிவு எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என பழமைவாதக் கட்சியினர் கருதினால் அதை கட்சிக்குள் கூடி ஒரு முடிவை முதலில் எடுக்க வேண்டும். வெளியேறவேண்டும் என்ற கொள்கையுடையவர்களின் வாயை அடைக்க தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் கருத்துக் கணிப்பு என்ற படைக்கலனைக் கையில் எடுத்தார். இருக்க வேண்டும் என்ற கருத்துக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என அவர் நம்பினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் ஏற்படவிருக்கும் பொருளாதார விளைவுகளை பெரும் பொருளாதார நிபுணர்களாலேயே தீர்மானிக்க முடியாமல் இருக்கையில் சாதாரண வாக்காளர்களால் எப்படி முடிவு செய்ய முடியும்?  பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றால் பழமைவாதக் கட்சியில் பெரும் பிளவு ஏற்படும். ஏற்கனவே கருத்துக் கணிப்பால் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் பதவி விலகி பாராளமன்றம் கலைக்கப்பட்டு ஒரு திடீர் பொதுத் தேர்தல் நடக்கலாம். பிளவு பட்ட பழமைவாதக் கட்சிக்கு எதிராக தொழிற்கட்சி வெற்றி பெறலாம் என கணக்குப் போட்ட தொழிற்கட்சியின் தலைவர் பிரித்தானியா ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு காத்திரமான பரப்புரை செய்வதைத் தவிர்த்துக் கொண்டார்.அடுத்த தலமை அமைச்சர் கனவுடன் இருக்கும் முன்னாள் நகரபிதா பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியா விலவேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாக தீவிரப் பரப்புரை செய்யத் தொடங்கினார். பழமைவாதக் கட்சியினரான டேவிட் கமரூனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் இடையிலான பதவி போட்டி ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான காத்திரமான விவாதத்தை மக்கள் முன் வைக்காமல் உண்மைக்கு மாறான வியாக்கியானங்களை மக்கள் முன் வைக்கத் தொடங்கினர். விலகவேண்டும் என்ற பிரிவினர் பிரித்தானிய மக்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு குடிவரவுப் பிரச்சனையை கையில் எடுத்ததால் கருத்துக் கணிப்பு திசை திருப்பப்பட்டு குடிவரவை விரும்புகிறாயா இல்லையா என்பதற்கு மக்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு நிலைமை உருவாகிவிட்டது. மறுபுறம் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவானவர்கள் விலகினால் பொருளாதாரம் சரிந்து விடும் எனச் சொல்லி பொருளாதாரச் சரிவா இல்லையா என்பதற்கான கருத்துக் கணிப்பு போல் திருப்பிவிட்டார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைந்தவுடன் 77மில்லியன் துருக்கிய இஸ்லாமியர்கள் பிரித்தானியாவிற்கு வந்துவிடுவார்கள் என்ற பரப்புரையும் முன்வைக்கப் பட்டது.

நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
பன்னாட்டு நாணய நிதியம் சொல்கின்றது பிரித்தானியா வெளியேறினால் அதன் பொருளாதாரம் பாதிக்கப் படும் என்று. பிரித்தானிய நடுவண் வங்கியும் அதையே சொல்கின்றது. பிரித்தானிய உளவுத் துறையின் முன்னாள் அதிபர் சொல்கின்றார் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று. பிரித்தானியாவின் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பெரிதும் பாதிக்கும். அது உலகப் பொருளாதார மீட்சிக்கான முயற்ச்சியைப் பாதிக்கும். அது பிரித்தானியாவின் பொருளாதாரதையும் பாதிக்கும். இந்த மறுதாக்கம் அளவிடப்பட முடியாத ஒன்றாகும். பிரித்தானிய வெளியேற்றத்தால் உருவாகவிருக்கும் உறுதியற்ற நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எதிர்வு கூறமுடியாததாக இருக்கும். Nigel Farrage என்னும் பிரித்தானிய சுதந்திரவாதி பிரித்தானியா வெளியேறிய பின்னர் என்ன செய்வது என்று தனக்குத் தெரியாது என்றார்.

பிழையான சூழல் பிழையான நேரம்
சிரியாவில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் புகலிடத்தஞ்சம் கோருவோர் பெருமளவில் ஐரோப்பாவை நோக்கி நகர்வது ஒறுபுறம், தீவிரவாதத் தாக்குதல்கள் ஐரோப்பாவில் நடப்பது மறுபுறம், இரசியாவின் அச்சுறுத்தல் இன்னொரு புறம் எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பொருளாதாரப் பிரச்சனையும் அதனால் பெரிதாகப் பாதிக்கப் பட்ட ஐரோப்பிய நாடுகள் இன்னொரு புறமாக இருக்கும் சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துக் கணிப்புச் செய்வது மிக முட்டாள்தனமான ஒன்றாகும்.

அந்நியர்களின் ஊடகங்கள்
பல பிரித்தானிய ஊடகங்கள் விலக வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கின்றன. பைனான்சியல் ரைம்ஸ், எக்கொனமிஸ்ற் ஆகிய ஊடகங்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றன. பிபிசி மறைமுகமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கும் ஸ்கை நியூஸ் விலக வேண்டும் என்ற கருத்துக்கும் மறைமுக ஆதரவு வழங்குகின்றன. 1975-ம் ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பின் போது எல்லா ஊடகங்களும் ஒருமனதாக நின்றன. அப்போது பெரும்பாலான ஊடகங்களின் உரிமையாளர்களாக பிரித்தானியர்களே இருந்தனர். இப்போது நிலைமை அப்படி இல்லை.

பிரித்தானியா தன் மென்வல்லரசு நிலையை இழக்கும்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினால் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் வட அயர்லாந்து போன்ற பிரதேசங்கள் பிரித்தானியாவில் இருந்து விலகும் வாய்ப்பு உண்டு. பிரிய பிரித்தானியா சிறிய இங்கிலாந்து ஆகும். தற்போது வல்லரசாக இருக்கும் பிரித்தானிய உலகின் முன்னணி மென்வல்லரசாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிரித்தானியாவிற்கு உலக அரங்கில் உறுதுணையாக 27 நாடுகள் இருப்பதால் பிரித்தானிய உலக அரங்கில் அரசுறவியல் பேச்சு வார்த்தை மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இது உலகை முதற்தர மெல் வல்லரசாக்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் இந்தப் பாணியைக் கையாண்டது. கியூபாவில் அமெரிக்கா இந்த உபாயத்தைக் கையாண்டு வெற்றி கண்டு கொண்டிருக்கின்றது.

வர்த்தக உடன்படிக்கைகளும் நிதிப் பங்களிப்பும்.
ஐரோப்பிய ஒன்றியம் பல நாடுகளுடன் செய்த வர்த்தக உடன்படிக்கைகள் பிரித்தானியாவிற்கு நன்மையளிக்கின்றது. பிரித்தானிய ஒன்றியத்தில் இருந்து விலகும் போது புதிய உடன்படிக்கைகளைச் செய்ய வேண்டியிருக்கும். பிரித்தானியாவிற்கு வெளியில் இருக்கும் நோர்வேயை வெளியேற்றவாதிகள் (பிரித்தானியா விலக வேண்டும் என்ற கொள்கையுடையோர்) உதாரணம் காட்டுகின்றார்கள். ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து பொது வர்தகப் பிரான்டிய அமைப்பில் இருக்கும் நோர்வேயும் ஒன்றியத்தின் பாதீட்டிற்கு தனது பெரும் நிதிப் பங்களிப்பைச் செய்கின்றது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் நிதி தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுச் சந்தைக் கட்டமைப்பில் பிரித்தானியா ஈட்டும் இலாபத்தின் ஒரு பகுதியே பங்களிப்பாக வழங்கப்படுகின்றது. ஒன்றியத்தில் இருப்பதால் பிரித்தானியாவிற்கு கிடைக்கும் வருமானம் கணக்கிடுவதற்கு மிகவும் சிரமமானது. அது போலவே விலகினால் வரும் பொருளாதார இழப்புக்களும் கணக்கிட மிக மிகச் சிரமமானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் சீனாவினது பொருளாதாரத்திலும் பார்க்கப் பெரியதாகும். 53கோடி மக்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 7.3 விழுக்காடாகும் ஆனால் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி உலக உற்பத்தியின் 24 விழுக்காடாகும்.

தேசியவாதிகளைத் தூண்டிய வெளியேற்றவாதிகள்
பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவானவர்கள் உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர் 2010-ம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகள் எங்கும் தேசியவாதிகளும் நாஜிகளும் அதிகரித்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்ட வெளியேற்றவாதிகள் குடிவரவுப் பிரச்சனையை தமது கையில் எடுத்தனர். அது பிரித்தானியத் தேசியவாதிகளையும் புதிய நாஜிகளையும் ஊக்கப்படுத்தியது. விளைவு இருக்கவேண்டும் தரப்பில் உள்ள ஒரு பெண் பாராளமன்ற உறுப்பினரான ஜோ கொக்ஸ் கொல்லப்பட்டார். குடிவரவாளர்களால் ஐக்கிய அமெரிக்கா கனடா ஆகிய நாடுகள் தம் பொருளாதாரத்தை மேம்படுத்தின. ஒஸ்ரேலியா தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்குப் புகலிடத் தஞ்சம் கோரிச் செல்பவர்களுக்கு உடனேயே வேலை செய்யும் அனுமதி வழங்கப்படுகின்றது. இதனால் அவர்கள் அமெரிக்க சமூகத்துடன் இணைந்து விடுகின்றார்கள். அது அவர்களை தேசப்பற்றாளர்களாக மாற்றுகின்றது. அவர்களுக்கான சமூகநலக் கொடுப்பனவுகளும் செய்யத் தேவையில்லாமல் போகின்றது. ஆனால் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப் பல ஆண்டுகள் எடுக்கின்றன. இதனால் அவர்களுக்கு சமூகநலக் கொடுப்பனவுகள் செய்ய வேண்டி இருக்கின்றது. போதிய பணம் கையில் இல்லாததால் அவர்கள் ஏமாற்று வேலைகள், சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைச் செய்யத் தூண்டப்படுகின்றார்கள். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பலர் பிரித்தானியாவில் வந்து குடியேற்கின்றார்கள் என்ற விவாதம் வெளியேற்றவாதிகளால் முன்வைக்கப் படுகின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்புடன் செயற்பட்ட நாடு பிரித்தானியாவாகும். இரசியாவை மனதில் வைத்து பிரித்தானியா அப்படிச் செயற்பட்டது. ஆனால் அதன் விளைவுகளைச் சுமக்க அது தயாராக இல்லையா?

மாறிவிட்டது ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப் பட்ட போது அங்கு ஜேர்மனியின் ஆதிக்கம் நிலவும் என்ற கருத்து பிரித்தானியாவில் இருந்தது. ஜேர்மனியிலும் பிரித்தானியாவிற்கு எதிரான நிலைப்பாடு இருந்தது. 1992 செப்டம்பர் 16-ம் திகதி புதன்கிழமை பிரித்தானியாவின் கறுப்புப் புதன்கிழமையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சதியால் பிரித்தானிய நாணயம் பெரும் பெறுமதித் தேய்விற்கு உள்ளானது பிரித்தானிய நடுவண் வங்கி 3.4பில்லியன் பவுண்கள் இழப்பீட்டைச் சந்தித்தது. ஆனால் இப்போது ஜேர்மனிக்கு இது போன்ற சதி வேலைகள் ஐரோப்பிய ஒற்றுமைக்கு உதவாது என்ற உண்மை புலப்பட்டுவிட்டது. பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து விலகக் கூடாது என்ற கருத்து ஐரோப்பிய நாடுகளில் மேலோங்கி இருக்கின்றது. சதாம் ஹுசேயினிற்கு எதிரான போரின் போது பிரித்தானியா மீது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் புட்டீன் தலைமியிலான இரசிய மீள் எழுச்சி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுவடையச் செய்து விட்டது. புட்டீனிற்கு எதிரான பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாடு மேற்கு ஐரோப்பியர்களை பிரித்தானியாமிது விருப்பமடையச் செய்துவிட்டது. ஜப்பானில் இருந்து அமெரிக்காவரை உள்ள பிரித்தானியாவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை விரும்புகின்றனர்.

இறைமை பிரச்சனை
ஐரோப்பிய ஒன்றியம் ஓர் அரசாக உருவெடுக்க வேண்டும் என்ற கருத்து முன்பு இருந்தது ஆனால் அது இப்போது மறைந்து அதிகரித்த அரசியல் ஒன்றியமாக மாறவேண்டும் என்ற கருத்துத்தான் உள்ளது. பிரித்தானியா ஒரு இறைமை உள்ள நாடு என்றபடியால்தான் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. இறைமையில்லாத நாடுகள் இணைக்கப்பட மாட்டாது. பிரித்தானியா தனது இறைமையை மற்ற நாடுகளின் இறைமையுடன் இணைது மற்றய நாடுகளின் இறைமையையும் பாதிக்கக் கூடிய வகையில் செயற்படுவது இறைமை இழப்பல்ல இணைப்பு மட்டுமே. ஐரோப்பாவிற்கு என ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கையும் பொதுவான படையும் பாதுகாப்புக் கொள்கையும் இருக்க வேண்டும் என்ற கருத்து பிரித்தானியாவின் கடுமையான எதிர்ப்பால் கைவிடப்பட்டது. பிரித்தானிய நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்துச் செய்தமை பிரித்தானிய நீதித் துறையையும் சட்டத் துறையையும் சேர்ந்த சிலரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. பெரும்பாலான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் அதிக மனிதாபிமான அடிப்படியில் அமைந்திருந்தன. பிரித்தானிய நித்துறையில் முதலாளித்துவச் சிந்தனையின் தாக்கம் உள்ளது என்பதை மறுக்க முடியுமா?

முன்னாள் அசிங்கங்களின் எச்சங்கள்
பிரித்தானியாவில் ஏகாதித்தியவாதிகள் இருந்தனர் என்பதையோ நிறவெறியர்கள் இருந்தார்கள் என்பதையோ இனவாதிகள் இருந்தார்கள் என்பதையோ பிரித்தனியாவில் பேரினவாதிகள் இருந்தார்கள் என்பதையோ மறுக்க முடியாது. இவர்களின் எச்சங்கள் அல்லது தொடர்ச்சிகள் பிரித்தானிய சுதந்திரவாதிகள் என்னும் பெயரில் இப்போது ஐரோப்பிய விரோதக் கொள்கையை முன்வைக்கின்றார்கள் உலகின் மிகப்பெரியாநாடும் உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடும் உலகின் முன்னணிப் படைவலுவைக் கொண்ட நாடுமான இரசியாவின் அச்சுறுத்தலை ஓர் ஒன்றுபட்ட மேற்கு ஐரோப்பாவால் தான் சமாளிக்க முடியும்.

சிறுபான்மை இனங்கள்
இரண்டாம உலகப் போரின்போது ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்த யூதர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்பட்டது. இடி அமீனின் ஆட்சியில் ஆபிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்த ஆசியர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்பட்டது. பிரித்தானியாவில் உள்ள முன்னணி மருத்துவர்கள் ஈரானிலும் ஈராக்கிலும் இருந்து வந்து குடியேறியவர்கள். தமிழர்கள் போல் பிரித்தானியாவில் வாழும் சிறுபான்மை இனங்களின் நலன் ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதுகாக்கப் படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவது பிரித்தானிய இனவாதிகளுக்கு வெற்றியும் ஊக்கமும் கொடுக்கும். இன்றைய ஐரோப்பிய எதிர்ப்பு நாளை வெளிநாட்டவர்களுக்கு எதிரான எதிர்ப்பாக மாறும். ஆசியர்களும் யூதர்களும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Monday, 13 June 2016

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும். குறைந்த தூரம் ஓடி மேல் எழும்பிப் பறக்கக் கூடிய விமாங்கள் இதற்கெ உருவாக்கப் பட்டன. பின்னர் விமாங்களை கவண்கள் மூலம் செலுத்தும் முறைமை உருவாக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா ஒரு படி முன்னேறி மின் காந்தத் தொழில் நுட்பம் மூலம் பாரமான போர்விமானங்கள் குறைந்த தூரம் ஓடி மேல் எழும்பும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அமெரிக்கா 10 விமானம் தாங்கிக் கப்பல்களையும் இந்தியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், சீனா, இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. 

உலகின் முன்னணி விமானம் தாங்கிக் கப்பல்கள்:
1. Gerald Ford-USA
2. Queen Elizabeth - U. K
3. Admiral Kuznetsov - Russia
4. Liaoning - China
5. Charles De Gaulle - France
6. Vikramaditya - India
7. Cavour Italy
8. Sao Paulo - Brazil
9. Juan Carol - Spain
10. Chakri Naruebet - Thailand
வேறு வேறு படைத்துறை நிபுணர்கள் வேறு வேறு விதமான தரவரிசையைக் கொண்டுள்ளனர்.

சிங்கிளாக வராத சிங்கம்
விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதுமில்லை அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். இதில் பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரி விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். 

உலகின் முதற்தர விமானம் தாங்கிக் கப்பல்
அமெரிக்கா உருவாக்கியுள்ள USS Gerald R. Ford விமானம் தாங்கிக் கப்பல் மற்ற நாடுகளின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறைகள் முந்தி விட்டது என சீன ஊடகம் ஒன்று கருத்துத் தெரிவித்தது. 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கப்பல் 2013 ஒக்டோபர் 11-ம் திகதி மிதக்க விடப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டுதான் அது முழுமையான பயன்பாட்டுக்கு விடப்படும். முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அவர்களின் நினைவாக இந்த விமானம் தாங்கிக் கப்பல் பெயரிடப்பட்டுள்ளது. அவர் அமெரிக்கக் கடற்படையின் தளபதியாகவும் இருந்தவர்.  ஆயிரத்து நூற்று ஆறடி நீளமான USS Gerald R. Ford அணுவலுவில் இயங்குகின்றது. 12.8 பில்லியன் டொலர்கள் செலவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கப் படைத் துறை வரலாற்றில் மிக அதிகம் செலவு செய்து உருவாக்கப்பட்ட ஒரு படைக்கலனாகும்.

USS Gerald R. Fordஇன் சிறப்பு அம்சங்கள்:
  • ஒரு நாளில் இரு நூற்றி இருபது பறப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தொண்ணூறு விமானங்களை இது தாங்கக் கூடியது. 
  • இதன் இயக்கங்கள் யாவும் எண்மியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கங்கக் கூடிய இந்த விமானம் தாங்கிக் கப்பலிற்குத் தேவையான மின்சாரம் அணுவலுவில் இருந்து பெறப்படுகின்றது. The comprehensive power system of the carrier refers to a wholly information-based digital system controlled by computer with electricity as the power.
  •  பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் அசைந்து பறக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்காக இதுவரை விமானம் தாங்கிக் கப்பல்களில்  நீராவிக் கவண் அதாவது steam catapult போன்ற தொழில் நுட்பம் பாவிக்கப்படுகின்றது. ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். ஆனால் இந்த விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் முதல் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்.
  • முப்பது கடல் மைல்களிற்கு அதிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. 112,000 எடையுள்ளது. இருபத்தைந்து மாடிகளைக் கொண்டது. 54 ஆண்டுகள் சேவையில் இருக்கக் கூடியது.
  • உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லக் கூடியது.
  • மற்ற வகை விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் முப்பது விழுக்காடு குறைந்த பணியாட்கள் இதற்குப் போதும்.
  • இதில் Sea Sparrow missile எனப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கப்பல்களைத் தாக்க வரும் உயர்வேக ஏவுகணைகளை அழிக்கக் கூடியவை.
  • அடுத்த தலைமுறை போர்விமானங்களையும் ஆளில்லாப் போர் விமானங்களையும் தாங்கக் கூடியது. இதன் மின்காந்த வீச்சு முறைமையால் சிறிய ரக ஆளில்லா விமானங்களும் இதில் உண்டு. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா உருவாக்கிய விமானம் தாங்கிக் கப்பல்கள் அதன் உலக ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன. ஐயாயிரம் படைவீரர்களையும் 90 விமானங்களையும் கொண்ட பத்து பெரு விமானம் தாங்கிக் கப்பல்கள்(supercarriers) மிதக்கும் விமானத் தளங்களாக உலகெங்கும் வலம் வருகின்றன. மூன்று கால்பந்தாட்ட மைதானங்களின் நீளம் கொண்ட இந்த விமானம் தாங்கிக்கப்பல்கள் அணுவலுவில் இயங்குகின்றன. பெரு விமானம் தாங்கிக் கப்பல்கள்(supercarriers) ஒரு இலட்சம் தொன் அல்லது 64,000 மெட்ரிக் தொன் எடையுள்ளவை. இவற்றால் ஒவ்வொரு முப்பது செக்கண்ட்களுக்கும் ஒரு விமானத்தை வானில் பறக்க விட முடியும். அமெரிக்கா ஆசியாவில் செலுத்தும் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் இருக்கும் சீனா முதலில் தகர்க்க வேண்டியது அதன் கடற்படை வலுவையே. பிரித்தானியா உலக ஆதிக்கம் செலுத்திய போது அதன் கடற்படை உலகின் முதற்தரம் வாய்ந்ததாக இருந்தது. உலகில் அரைவாசிக்கு மேற்பட்ட நாடுகளிடம் 90இற்கும் குறைவான போர்விமானங்களே இருக்கின்றன. அமெரிக்காவின் 10 விமானம் தாங்கிக் கப்பல்களில் 90இற்கு மேற்பட்ட விமானங்கள் இருப்பதால் அமெரிக்காவால் உலகில் ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது.

சீனாவைக் கலங்கடித்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள்
1995-ம் ஆண்டு சீனா தாய்வானை ஆக்கிரமிக்கத் திட்ட மிட்டிருந்த வேளையில் அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த பில் கிளிண்டன் சீனாவிற்கும் தாய்வானிற்கும் இடையில் உள்ள தாய்வான் நிரிணைக்கு USS Nimitz என்னும் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி அதை சீனக் கரையில் இருந்து 50 மைல் தொலைவில் நிலை கொள்ள வைத்தார். இரண்டாவது USS Independence என்னும் விமானம் தாங்கிக் கப்பலை தாய்வானின் கிழக்குக் கரைக்கும் அனுப்பினார். அமெரிக்காவின் இப்பெரும் படைவலுவைச் சமாளிக்க முடியாத சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் எண்ணத்தைக் கைவிட்டது. இதன் பின்னர் அமெரிக்காவின் விமானாம் தாங்கிக் கப்பல்களை எப்படிச் சமாளிப்பது என்பதில் சீனா அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் பதிலடியும் அமெரிக்காவின் அதிரடியும்
மேற்படி கிளிண்டனின் மிரட்டலுக்குப் பின்னர் சீன விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் நீர் மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டியது. சீனா உருவாக்கிய ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளும் இரகசியமாக உருவாக்கிய நீர்முழ்கிக் கப்பல்களும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை செல்லாக்காசாக்கி விட்டன எனப் படைத்துறை கருத்து வெளியிட்ட வேளையின் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் மூன்று புதிய Ford-class aircraft carriers வாங்க நிதி ஒதுக்கியது. ஒன்றிற்கான செலவு 13பில்லியன் டொலர்களாகும். இது அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவால் ஏதும் செய்ய முடியாத வகைக்கு அமெரிக்கா தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் நீர்முழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் விமானங்களையும் உருவாக்கி விட்டது என்பதைக் காட்டியது. 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் படைத்துறை உற்பத்தி நிறுவனமான போயிங் வானில் விமானம் போல் பறந்து சென்று பின்னர் கடலுக்குள் நீர்மூழ்கி போல் சென்று எதிரியின் நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்கும் குண்டுகளை உருவாக்கியது. இவை High Altitude Anti-Submarine Warfare Weapon Capability (HAAWC)  என அழைக்கப்படுகின்றன. தன்னகத்தே கணனியைக் கொண்ட இந்த குண்டுகள் விமானங்கள் செய்மதிகளின் உதவிகளுடன் தமது பறப்புப் பாதையை தாமே நிர்ணயித்துக் கொள்ளும் Smart Bombs ஆகும். 2015-ம் ஆண்டு இந்தக் குண்டுகளைத் தாங்கிச் செல்வதற்காக 29 Boeing P-8A Poseidon maritime patrol jets விமானங்களையும் அமெரிக்கப் படைத்துறை வாங்கியது. அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாக்க புதிய வகை ஆளில்லாப் போர்விமானங்களையும் பரீட்சித்துப் பார்த்துள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் 6,000 இறாத்தல் எடையுள்ள துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை தாங்கிக் கொண்டு இரண்டாயிரம் மைல்கள் பறக்கக் கூடியவை. இவை அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாக்க ஈடுபடுத்திய மிகவும் செலவு மிக்க F-35C விமாங்களிலும் பார்க்க மலிவானவையாகும். 

சீனாவின் குழவித் தாக்குதல் திட்டம்
பல விமானங்களில் சென்று பல ஏவுகணைகளை அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்கும் திட்டத்தையும் சீனா கொண்டுள்ளது. இது இலங்கைக் கடற்படை இஸ்ரேலிடமிருந்து வாங்கிய டோராப் படகுகளை விடுதலைப் புலிகள் பல சிறு படகுகளில் சென்று தாக்கும் போது ஒரு படகில் வெடி குண்டுகளை நிரப்பிக்கொண்டு தற்கொடை போராளிகள் டோராவில் மோது அதை மூழ்கடிக்கும் திட்டம் போன்றது. சீனாவைப் பொறுத்த வரை அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கு சிறு சேதத்தை ஏற்படுத்தினாலே அது பல மாதங்கள் செயற்பட முடியாமல் போகும் என நினைக்கின்றது. ஆனால் பல விமானங்களாள் செய்யப் படும் குழவித் தாக்குதலுக்கு அமெரிக்கா லேசர் படைக்கலன்களைப் பாவித்து முறியடிக்க முடியும். லேசர் படைக்கலங்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சி எதிரியின் விமானங்களையும் ஏவுகணைகளையும் எரித்துக் கருக்க முடியும். அமெரிக்கா தானியங்கிகளாகச் செயற்படக்கூடிய லேசர் படைக்கலங்களை உருவாக்கி வருகின்றது. அவற்றால் பல இலக்குகளை அழிக்க முடியும். உலகிலேயே அதிக அளவு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட நாடாக சீனா இருக்கின்றது. விமானம்தாங்கிக் கப்பல்களை அழிப்பதெற்கென ஓசை எழுப்பாத அதி மௌனமான(Ultra-silent) நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனா உருவாக்கியுள்ளது. அவை Carrier Killer என அழைக்கப் படுகின்றன.

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்
சீனாவின் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலுடன் நீர்மூழ்கிக்கப்பல்கள், ஃபிரிக்கேட் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், சேவைவழங்கு கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 2013 நவம்பர் நடந்த லியோனிங்கின் பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஏவுகணைகளை அழிக்கக் கூடிய இரு நாசகாரிக் கப்பல்களான Shenyang உம் Shijiazhuang உம் இணைந்திருந்தன. அத்துடன் ஏவுகணைகளை வீசும் கப்பல்களான Yantai உம் Weifangஉம் உடன் சென்றன. சில படைத் துறை நிபுணர்கள் இந்த நான்கு கப்பல்களும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல என்கின்றனர். பொதுவாக சீன நாசகாரிக் கப்பல்கள் மற்ற நாட்டுக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை என்கின்றனர். இதனால் போதிய அளவு படைக்கலன்களை இவற்றால் எடுத்துச் செல்ல முடியாது. அத்துடன் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் விமானங்களை இறக்கவும் பின்னர் அதிலிருந்து பறக்கச் செய்யவும் விமானிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்ச்சி தேவை எனப்படுகின்றது. இதனால் சீன விமானம் தாங்கிக் கப்பல் முழுமையான செயற்பாட்டில் இறங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கலாம். அமெரிக்காவின் முன்னணி விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான USS Ford 90 விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அத்துடன் அவற்றை இலகுவாக வானில் எழவைக்கும் தொழில்நுட்பமும் உண்டு. சீனாவின் லியோனிங் 40 விமானனங்களை மட்டுமே தாங்கிச் செல்லும். அதில் உள்ள படைக்கலன்கள் குறுந்தூரம் மட்டும் பாயக் கூடியவை.

இரசியாவின் விமானம் தாங்கிக் கப்பல்
 Kuznetsov  என அழைக்கப்படும் 40 விமானங்கள் தாங்கிச் செல்லக் கூடியது. இரசியாவின் இந்த விமானம் தாங்கிக் கப்பலில் கவண் மூலம் வீமானங்களை மேல் எழச் செய்யும் தொழில் நுட்பம் கூட இல்லாததால் அதன் விமானங்கள் பாரமான படைக்கலன்களை எடுத்துச் செல்ல முடியாது. மேலும் இது எரிபொருளால் இயங்கச் செய்யப் படுகின்றன அமெரிக்காவின் Nimitz class , Ford Class USS Washington Class ஆகிய விமானம் தாங்கிக் கப்பல்கள் அணுவலுவில் இயங்குபவை. பிரித்தானியாவின் Queen Elizabeth உம் அணு வலுவில் இயங்கும். இதனால் இரசியாவின் Kuznetsov  விமானம் தாங்கிக் கப்பல் அல்ல அது ஒரு பெரிய கப்பல் மட்டுமே என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் சொல்வதுண்டு. ஆனால் இரசியாவின் Kuznetsov  இல் சிறந்த தாக்குதல் விமானங்களான Su-33 இருக்கின்றன.

பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பல்
பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பலான  HMS Queen Elizabet  ஒரு supercarrier வகையைச் சார்ந்த விமானம் தாங்கிக் கப்பலாகும். இத்ஹு 2017-ம் ஆண்டு சேவையில் ஈடுபடுத்தப்படும். 2020-ம் ஆண்டு இதே வகையைச் சேர்ந்த  HMS Prince of Wales சேவைக்கு வரும். HMS Queen Elizabet இல்அமெரிக்காவின் F-35C விமானங்கள் இவற்றில் உள்ளடக்கப்படும்.  இவற்றால் குறுகிய தூர ஓட்டத்தின் பின்னர் வானில் எழும்ப முடியும். அத்துடன் மேலிருந்து கீழ் நோக்கித் தரையிறங்கவும் முடியும். அதை Short Take-Off and Vertical Landing (STOVL) என்பர். HMS Queen Elizabet ஆல் தரைமீது தாக்குதல், வேவுபார்த்தல், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஆகியவற்றைச் செய்ய முடியும்.    HMS Prince of Wales விமானம் தாங்கிக் கப்பலில் கவண் மூலம் அதாவது  Catapult Assisted Take Off Barrier Arrested Recovery (CATOBAR) விமானம் எழும்பச் செய்யப்படும்.

இந்தியா
இந்தியா 7500 கிலோ மீட்டர் தூரமான தனது கடற்கரையைப் பாதுகாக்க ஒரு வலிமை மிக்க கடற்படையை வைத்திருத்தல் அவசியம். இரசியக் கடற்படையில் 1987இல் இணைந்து கொண்ட Admiral Gorshkov பனிப்போர் முடிவிற்கு வந்த பின்னர் பெரும் பராமரிப்புச் செலவைத் தவிர்ப்பதற்காக 1996இல் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு தீவிபத்தில் சேதமடைந்த Admiral Gorshkov ஒரு கரையில் இருந்து துருப்பிடித்துக் கொண்டிருந்தது. இதில் இந்தியக் கடற்படையினர் தமது கண்ணை வைத்தனர். இதை இந்தியா பெருமளவு செலவழித்து திருத்தி புதுப்பித்து தனது விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றி அதற்கு விக்கிரமாதித்தியா எனப் பெயரிட்டனர். 12 ஒற்றை இருக்கை மிக்-29 விமானங்களும், 4 இரட்டை இருக்கை மிக்-29 விமானங்களும் விக்கிரமாதித்தியாவில் இருக்க முடியும்.

இந்தியாவின் விக்கிரமாதித்தியாவின் முக்கிய அம்சங்கள்
எடை    45,400 tons full load
நீளம்:     283.1 m
அகலம்:     51.0 m
ஆழம்:     10.2 m
உந்துவலு:     4 shaft geared steam turbines, 140,000 hp
வேகம்:     32 knots
வீச்சு:     13500 miles at 18 knots
சுடுகலன்கள்:     8 CADS-N-1 Kashtan CIWS guns
விமானங்கள்:     16 Mikoyan MiG-29K
உழங்குவானூர்திகள்:Ka-28 helicopters ASW,  Ka-31 helicopters AEW, HAL Dhruv ஆகியவற்றில் பத்து.
விமானம் இறங்கும் இடம்: 273m flight deck
விக்கிரமாதித்தயாவின் மிகப்பெரும் பலம் அதன் கதுவித் (Radar) திறனாகும்.
மின்காந்தத் தொழில்நுட்பம் மூலம் விமானங்களைச் செலுத்தும் தொழில்நுட்பம் பெற இந்தியா தீவிர முயற்ச்சி எடுக்கின்றது. ஆனால் அமெரிக்கா அதை வழங்க மறுக்கின்றது. ஆனால் இந்தியாவின் அடுத்த விமானம் தாங்கிக் கப்பலான INS Vishalஇற்கு அமெரிக்கா சில தொழில் நுட்பங்களை வழங்க ஒத்துக் கொண்டுள்ளது. INS Vishal அணுவலுவில் இயங்கக் கூடியதாக இருக்கும்.  

நிறைவேறுமா சீனக் கனவு?
சீனாவின்DF-21 "Carrier Killer" என்னும்  antiship ballistic missile என்ற ரக ஏவுகணைகளால் 810 கடல் மைல்கள் தொலைவில் உள்ள 1,100 அடி நீளமானதும் 70 விமானங்களைக் கொண்டதும் ஆறாயிரம் பேரைக் கொண்டதுமான ஒரு பெரிய விமானம் தாங்கிக் கப்பலை அழிக்க முடியும் எனச் சொல்லப் படுகின்றது. இதற்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு கவசமாக 40 கடற்கரைத் தாக்குதல் கப்பல்களை (littoral combat ships) இணைக்கின்றது. தொலைவில் உள்ள எதிரியின் இலக்குகளயும் படைக்கலன்களையும் இனம் காணக் கூடிய வகையில் இக்கப்பல்களில் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று 12 மணித்தியாலங்களுக்கு மேல் ஜப்பானை ஒட்டிய கடற்பரப்பில்ல் அமெரிக்காவின் USS Ronald Reagan என்னும் விமானம் தாங்கிக் கப்பலை அதற்க்குத் தெரியாமல் தொடர்ந்து பின்னர் கடலின் மேற்பரப்பிற்கு வந்து தன்னை விமானம் தாங்கிக் கப்பலுக்கு காட்டிக் கொண்டது. ஆனால் ஒரு போர்ச் சூழலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீது எந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பலாலும் தாக்குதல் நடத்த முடியாது என்றும் இந்த நிலை 2017வரை இருக்கும் என்றும் அமெரிக்கப் படைத்துறை ஆய்வு நிறுவனமான RAND  தெரிவிக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கித் தொழில்நுட்பம் இரண்டு தலைமுறைகள் அதன் எதிரி நாடுகளிலும் பார்க்க முந்தியவையாகும். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அணுவலுவில் இயங்கும் SNN வகையைச் சார்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பாதுகாக்கின்றன. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை அழிக்கக் கூடிய நீர்மூழ்கிக்கப்பல்களை சீனா உருவாக்க்கினால் அவற்றை இடைமறித்து அழிக்கும் முறைமையை உருவாக்குவது அமெரிக்காவிற்கு சிரமமான காரியமல்ல.

Friday, 10 June 2016

ஏவுகணை விற்பனையில் இந்தியா இனிக் கல்லா கட்டும்

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவை MTCR எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Missile Technology Control Regime என்னும் கூட்டமைப்பில் ஓர் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ள அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். MTCR அமைப்பு உறுப்பு நாடுகள் எந்த விதமான ஏவுகணைகளை மற்ற நாடுகளுக்கு விற்பது என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. MTCRஇல் இணைவதற்கு இந்தியா கொடுத்த விண்ணப்பத்திற்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நாள் 2016 ஜுன் மாதம் 6-ம் திகதியுடன் முடிவடைந்ததால் இந்தியாவின் உறுப்புரிமை இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெருங்கிவரும் இந்தியாவும் அமெரிக்காவும்
இந்திய ஆட்சியாளர்களுடனும் அரசுறவியலாளர்களுடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது கடினமான ஒன்று என அமெரிக்க வெளியுறவுத் துறையினர் கருதியிருந்தமை 2000-ம் ஆண்டு பில் கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இருந்து சிறிது சிறிதாக மாறத் தொடங்கி தற்போது இரு தரப்பினர்களிற்கும் இடயில் அந்நியோன்யம் துளிர்விடத் தொடங்கியுள்ளது என்பதை மோடி அமெரிக்காவிற்கு செய்த மூன்று நாட் பயணம் சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்கா இந்தியாவுடனான உறவிற்கு 2000-ம் ஆண்டில் இருந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பல கண்டனங்கள் எழுப்பப்பட்ட போதிலும் அவரது இந்தியாவுடனான உறவுக் கொள்கை வெற்றிகரமானது என பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.

நோக்கங்கள் வேறு
உலகில் தொழில்நுட்பப் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதெற்கு என Nuclear Suppliers' Group, the Missile Control Technology Regime, the Australian Group and the Wassenaar Arrangement ஆகிய நான்கு அமைப்புக்கள் இருக்கின்றன. இவை தமது தொழில்நுட்ப ஆதிக்கத்தை நிலைநிறுத சில நாடுகளால் உருவாக்கப் பட்டவையாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக  ஈரானிற்கு புதிய தொழில்நுட்பம் போகமல் தடுப்பதும்  இவற்றின் பகிரங்கப்படுத்தப்படாத நோக்கமாகும்.

MTCRஅமைப்பின் இரட்டை வேடம்
 1987-ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட MTCR ஏற்கனவே 34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஏவுகணைத் தொழில்நுட்பம் பல நாடுகளுக்கும் பரவுவதையும் அணுக்குண்டு தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை எல்லா நாடுகளும் உருவாக்கக் கூடாது என்பதிலும் இந்த MTCR அமைப்பு கவனம் செலுத்துகின்றது. வட கொரியா அணுக்குண்டை உற்பத்தி செய்த போதிலும் அவற்றைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைத் தொழில்நுட்பம் அதனிடம் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. MTCR உறுப்புரிமை இந்தியாவிற்கு இல்லாதிருந்த போது அதற்கு பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டிருந்தது. அதேவேளை பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை பாக்கிஸ்த்தானிற்கு சீனா வழங்கிக் கொண்டிருந்தது. 2003-ம் ஆண்டு அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பேய் இது தொடர்பாக MTCRஅமைப்பைக் கடுமையாகச் சாடியிருந்தார்.  இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் சிவ தானு பிள்ளை இந்தியா முழுக்க முழுக்க உள்ளூர் அறிவிலேயே தங்கியிருந்து ஏவுகணைகளை உருவாக்கியது இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டம் போல் கடினமானதாக இருந்தது என்றார். இந்தியாவின் Defence Research and Development Organisationஇற்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்க 15 ஆண்டுகள் எடுத்தன. MTCRஅமைப்பு 500கிலோ கிராமும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள குண்டுகளை 300கிலோ மீட்டர்களுக்கு மேல் எடுத்துச் செல்லும் கருவிகளின் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இது ஏவுகணைகளுக்கும் ஆளில்லாப் போர் விமானங்களுக்கும் பொருந்தும். இத் தொழில் நுட்பம் "பயங்கரவாதிகளின்" கைகளுக்குப் போக்கக் கூடாது என்பதில் "அரச பயங்கரவாதிகள்" அதிக கரிசனை காட்டினர். ஆனால் பிரான்ஸும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தக் கட்டுப்பாட்டை மீறி படைக்கலன்களை விற்பனை செய்திருந்தன. ஏவுகணைக் தொழில்நுட்பங்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான், ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டன. 

இந்தியாவிற்கு விதிவிலக்கு
அணுப்படைக்கலப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகள் மட்டுமே MTCRஇல் உறுப்புரிமை பெறலாம் என்ற நியதியில் இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா பலவிதமான படைக்கலங்களை அமெரிக்காவிடமிருந்து விலைக்கு வாங்கலாம். அமெரிக்க உளவுத் துறை பரவலாகப் பயன்படுத்தும் Predator drone என்னும் ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்கலாம். ஆனால பாக்கிஸ்த்தானியப் படைட்த்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பாக்கிஸ்த்தானுக்குள் சென்று அங்குள்ள தலிபான் தலைவர்களைக் கொல்லக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்களை அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு விற்பனை செய்யாது என எதிர்பார்க்கலாம்.

இந்திய ஏவுகணை வியாபாரம் இனிக் கல்லாக் கட்டும்
இந்தியாவின் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பாயக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டில் இருந்தே வியட்நாம் ஆர்வம் காட்டி வருகின்றது. பிரம்மோஸ் இரசியாவுடன் இந்தியா இணைந்து தயாரித்த supersonic cruise missile ஆகும். இனி இந்தியா  வியட்நாமிற்கு பிரம்மோஸ்களை விற்பனை செய்யலாம். இந்தோனேசியா, தென் ஆபிரிக்கா, பிரேசில், சிலி ஆகிய நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க அக்கறை கொண்டுள்ளன. மேலும் பிலிப்பைன்ஸ், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து ஆகிய நாடுகளும் பிரம்மோஸை வாங்கலாம். வெளிநாடுகளுக்கு படைக்கலன்கள் விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகும் போது உற்பத்தித்திறன், தரம் ஆகியவை மேம்படும். உலகிலேயே அதிக படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா இனி படைக்கலன்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னேறலாம். இனிப் படைத்துறை ஏற்றுமதியில் இந்தியா சீனாவிற்கு சவாலாக அமையும். மேலும் இந்தியாவின் விண்வெளித் திட்டமும் தனக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில்  வாங்கலாம்.

விண்வெளியிலும் இந்தியாவிற்கு வாய்ப்பு
செவ்வாய்க் கிரகத்திற்கு செய்மதி அனுப்புவதில் சீனாவை முந்திய இந்தியாவிற்கு பல விண்வெளித் தொழில்நுட்பங்களை இதுவரை இரசியாவால் விற்பனை செய்ய முடியாமல் MTCR அமைப்பின் விதிகள் தடை செய்திருந்தன. இனி இரசியா இந்தியாவிற்கு விண்வெளிப் பயணத்தில் முன்னணி வகிக்கும் cryogenic rocket engineஐ இரசியாவிற்கு விற்பனை செய்யும்.  இந்தியாவும் இரசியாவும் இணைந்து ஏவுகணைப் பாதுகாப்பு முறைமைகளை உற்பத்தி செய்தால் பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டுகள் செல்லாக் காசாகிவிடும்.

என்ன இந்த பிரம்மோஸ்?
 இந்தியாவும் இரசியாவும் இணைந்து 2004-ம் ஆண்டு முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை (Cruise Missiles) உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது. பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை. அதிகரித்த உயர நிலையில் பாயும் 400 கிலோ மீட்டர் தூரம் பாயக்கூடியது.  ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட பாதையில் மட்டும் பயணிக்கும் இடையில் தனது பாதையை மாற்றாது. இடைமறிப்பு ஏவுகணைகளை தவிர்க்கும் நுட்பம் இதில் இல்லை. ஒரு பிரம்மோஸ் ஏவுகணையை இலக்குத் தப்பாமல் அழிக்க அமெரிக்காவின் Sea Sparrow Missiles நான்கை ஏவ வேண்டி இருக்கும். ஒரு அமெரிக்க நாசகாரிக் கப்பலால் 12 பிரம்மோஸ்களை மட்டுமே அழிக்கலாம். இந்தியாவின் கொல்கத்தா வகையைச் சேர்ந்த நாசகாரிக் கப்பலில் 49 பிரம்மோஸ்களும் இந்தியாவின் அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்கள் 24  பிரம்மோஸ் ஏவுகணைகளையும் கொண்டிருக்கும்.  2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.

ஆத்திரப்படும் பாக்கிஸ்த்தான்
இந்தியா MTCRஅமைப்பில் இணைவதற்கு எதிராக அதன் உறுப்பு நாடுகளிடம் பாக்கிஸ்த்தான் பெரும் பரப்புரைச் செய்தது. இந்தியாவை MTCRஅமைப்பில் இணைத்துக் கொள்வதையிட்டு பாக்கிஸ்தானிய மூதவை உறுப்பினர் முஷாஹிட் ஹுசேய்ன் சயிட் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா எல்லா அரசுறவியல் முனைகளிலும் எம்மைத் தோற்கடித்து எம்மைச் சுற்றி வளைக்கின்றது என்றார் அவர். ஈரானுடனும் ஆப்கானிஸ்த்தானுடனும் பாக்கிஸ்த்தானிற்கு நல்ல உறவு இல்லாத நிலையில் அந்த இரு நாடுகளுடனும் இந்தியா தனது உறவை அபிவிருத்தி செய்கின்றது என்றார் அவர் மேலும். நரேந்திர மோடியின் ஈரானிற்கான பயணத்தின் போது ஈரான், ஆப்கானிஸ்த்தான், இந்தியா ஆகிய நாடுகளிடையான முத்தரப்பு கடப்பு ஒப்பந்தம் ( Trilateral Transit Agreement) 2016-ம் ஆண்டு மே மாதம் -24-ம் திகதி கைச்சாத்திட்டமை பாக்கிஸ்த்தானியருக்குப் பேரிடியாகவும் அமைந்திருந்தத்து. சீனாவும் இந்தியா MTCRஅமைப்பில் இணைவதை விரும்பாத போதிலும் கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லை.

அடுத்த இலக்கு
இந்தியாவின் அடுத்த இலக்கு அணுவலு விநியோககர்கள் குழுவில் - Nuclear Suppliers Group (NSG) இணைவதாக இருக்கும். அதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. MTCRஅமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் Nuclear Suppliers Group (NSG) அமைப்பிலும் உறுப்பினர்களாக இருக்கின்றன. இதனால் NSG அமைப்பில் இணைந்து கொள்வது இந்தியாவிற்கு இலகுவாக இருக்கும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மெக்சிக்கோ, சுவிஸ் போன்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்தியா NSG அமைப்பில் இணைவதற்கு எதிராக சீனா கடும் பரப்புரை செய்கின்றது, நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென் ஆபிரிக்கா, ஒஸ்ரியா ஆகிய நாடுகளும் எதிர்ப்பதாக பாக்கிஸ்த்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து NSG அமைப்பின் விதிகளில் இருந்து இந்தியாவிற்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டன. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருக்கும் NSG அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவை அனுமதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி ஏற்கனவே NSG அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இந்தியாவை அனுமதிப்பதை எதிர்க்க வேண்டாம் எனக் கடித மூலம் கேட்டுள்ளார். NSG அமைப்பில் இந்தியாவை இணைத்தால் பாக்கிஸ்த்தானையும் இணைக்க வேண்டும் என சீனா அடம்பிடிக்கின்றது. ஆனால் அணுப்படைகலன்கள் பரவலாக்குதல் தொடர்பாக பாக்கிஸ்த்தானின் செயற்பதிவும் (track record) இந்தியாவின் செயற்பதிவும் வேறுபட்டவை. அணுக்குண்டு உற்பத்தித் தொழில்நுட்பம் பாக்கிஸ்த்தானிடமிருந்து ஈரானிற்கும் வட கொரியாவிற்கும் கைமாறியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இந்தியா தனது தொழில்நுட்பத்தை எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யவில்லை.

அடுத்த ஏவுகணை
இந்தியாவின் பிரம்மோஸ் திட்டத்தின் தலைவர் சிவதாணு பிள்ளை புராணங்களில் உள்ள அஸ்த்திரங்களைப் போலவே எமது ஏவுகணைகள் அமையும். திருமாலின் கையில் இருக்கும் சுதர்சனாம் என்னும் பெயர் கொண்ட சக்கரத்தைப் போன்று எதிரி இலக்கைத் தாக்கி விட்டு மீண்டும் எமது கையில் வந்து சேரும் ஏவுகணைகளையும் உருவாக்கவுள்ளோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். கடவுள்களின் கட்டிட அமைப்பாளரான விஸ்வகர்மா சூரியனின் துகள்களில் இருந்து சிவபெருமானுக்கு திரிசூலமும், திருமாலுக்குச் சக்கரமும், தேவர்களுக்கு புட்பகவிமானமும் அமைத்தார் எனக் கதைகள் சொல்கின்றன. சுதர்சன சக்கரத்தில் ஒரு கோடி கூர்கள் இருக்கின்றன. ஆனால் சிவபுராணத்தின் படி திருமாலுக்கு சிவபெருமான் சக்கரத்தை வழங்கினார்.

அமெரிக்கா ஏன் இந்தியாவை MTCRஇல் அனுமதித்தது?

இந்தியாவிற்கான அமெரிக்காவின் படைக்கல விற்பனை இனி அதிகரிக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியின்றி இந்தியாவால் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த முடியும். அதற்கு துணையாக இரசியா இருக்கின்றது. இது இரசிய இந்திய உறவை நெருக்கமாக்குவதுடன் இரசியாவின் படைக்கல விற்பனையை அதிகரிக்கும். இந்தியாவை MTCR அமைப்பின் உறுப்பினராக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பிடிக்காத நாடுகளிற்கு இந்தியா ஏவுகணைகளை விற்பனை செய்வதைத் தடுக்கலாம். மன்மோகன் சிங் - சோனியா ஆட்சியில் இந்தியாவிற்கு அணு வலு உற்பத்தித் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய அமெரிக்கா கடும் முயற்ச்சி எடுத்தது. அதை நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி கடுமையாக எதிர்த்தது. இனி அந்த விற்பனை நடக்கப் போகின்றது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடியாது எனத் தடைவிதிக்கப்பட்ட நரேந்திர மோடியை அமெரிக்க நாடாளமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்ற வைத்ததும், அதற்குப் பலத்தை கைதட்டல்கள் கொடுத்ததும், அவருக்குப் பிடித்த ஷெல்ஃபியை பல நாடாளமன்ற உறுப்பினர்கள் அவருடன் நின்று எடுத்தது எல்லாம் ஒரு திட்டமிட்ட செயலா?

Tuesday, 7 June 2016

ஒசையின்றி நடக்கின்றது ஓர் உலகப் போர்

தென் சீனக் கடலில் சீனா நிர்மாணித்த தீவுகளுக்குச் சவால் விட அமெரிக்கப் போர் விமானங்களும் நாசகாரிக் கப்பல்களும் செல்கின்றன. சிரியாவில் வல்லரசு நாடுகளின் படை  நடவடிக்கைகளின் நடுவில் ஒரு மோசமான மனிதப் பேரவலம் நடந்து கொண்டிருக்கின்றது.   போல்ரிக் கடலிலும் கருங்கடலிலும் இரசியப் படைகளும் நேட்டோப் படைகளும் ஒன்றின் மூக்கு வரை மற்றதன் கைகள் வீசப்படும் நிலைவரை சென்றுள்ளன. எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நேட்டோ உறுப்பு நாடுகளை இரசியா 60 மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்கலாம் அதைத் தடுக்க நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பால் ஏதும் செய்ய எனப் படைத்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முறுகல் நிலைகளும் போரும் ஒரு புறம் நடக்க ஓசையின்றி ஒரு போர் உலகில் நடக்கின்றது. அது பெரிதாக மக்களைச் சென்றடைவதில்லை.

நான்காம் முனைப்போர்
மற்றப் படைத்துறை நடவடிக்கைகளுக்கு என ஜெனிவா உடன்படிக்கை ஐக்கிய நாடுகளின் சாசனம் எனப் பல விதி முறைகள் இருப்பது போல் இணைய வெளிப் படைத்துறைக்கு என ஏதும் இல்லை. இதனால் இணையவெளிப் போர் கட்டுப்பாடின்றி நடக்கின்றது.  ஓசையின்றி நடக்கும் இப் போர் தரை, வானம், கடல் ஆகிய மூன்றிலும் நடக்கின்றன.  பல நாடுகளிடையேயும் தீவிரவாத அமைப்புக்களுக்கும் அரசுகளுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போரில் துப்பாக்கிகள் வெடிப்பதில்லை குண்டுகள் வீசப்படுவதில்லை. அந்தப் போர்தான் இணையவெளிப்போர். இணைய வெளியில் உளவுகள் பார்க்கப் படுவதுண்டு, தகவல்கள் கொள்ளை அடிக்கப் படுவதுண்டு. தாக்குதல்கள் நடத்தி பெரும் சேதங்கள் விளைவிக்கப் படுவதுண்டு. பல நாடுகளும் தீவிரவாத அமைப்புக்களும் இணையவெளிப் படைப்பிரிவை அமைத்துள்ளன.  தரைப்படை, கடற்படை, வான் படை போல் இணையவெளிப் படையும் போரின் இன்றியமையாத பிரிவாக உருவாகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. நாடுகள் கூட்டாகச் செய்யும் போர் ஒத்திகையில் இணைய வெளித் தாக்குதல்களும் ஒன்றாக அமைந்துள்ளன. தனிப்பட்ட ரீதியில் இணையவெளியில் தாக்குதல்கள் திருட்டுக்கள் செய்பவர்களை hacktivists என அழைக்கின்றனர்.

அமெரிக்காவின் 2018-ம் ஆண்டுத் திட்டம்
ஐக்கிய அமெரிக்கா 2018-ம் ஆண்டில் நிறைவேற்றப்படும் இணையவெளி படைத் திட்டம் ஒன்றை வரைந்துள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திடுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப்படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும்.

தகவல் வாரி அள்ளும் விமானம்
2016 மே மாத நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் EP-3E Aries என்னும் வேவு விமானம் சீன எல்லைக்கு அண்மையாக பன்னாட்டு வான் பரப்பில் பறந்து கொண்டிருக்கையில் சீனாவின் இரண்டு J-11 போர் விமானங்கள் அதற்கு 50 அடி அண்மையாகச் சென்று அதற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பறந்தன. ஐக்கிய அமெரிக்கா இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. EP-3E Aries என்பது நான்கு இயந்திரங்கள் உள்ள 105அடி நீளமும் 34 அடி உயரமும் கொண்ட இலத்திரனியல் வேவுவிமானமாகும். இது பறக்கும் இடத்தில் இருந்து பல சதுரமைல் பரப்பளவில் உள்ள இலத்திரனியல் தகவல்களை வாரி அள்ளக் கூடியது எனச் சொல்லப்படுகின்றது. இந்த விமானத்தில் இணையவெளிப் படை வீரர்களும் உள்ளடக்கப் பட்டுள்ளனர். அவர்கள் இலத்திரனியல் கருவிகளை இயக்கி எதிரியின் தகவல் தொடர்பாடல்களை அபகரித்துக் கொள்வர். இப்படிப் பட்ட விமானம் தனது நாட்டிற்கு அண்மையாகப் பறப்பது ஆபத்து என்ற படியால் சீனா அதை இடைமறித்தது

கூட்டுக் களவாணிகள்
சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சீனாவிடம் “இணையவெளி நீலப் படைப்பிரிவு” என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை “இரவு யாளி” என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில்
சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.
சீனாவின் இணையவெளிப் படைப்பிரிவு
இணைய வெளித் தாக்குதல், இணையவெளித் திருட்டு ஆகியவற்றில் சீனா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. ஒரு இலட்சம் படைவீரர்களைக் கொண்ட சீனாவின் இணையவெளிப் படைப்பிரிவு 12 பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அதில் மூன்று ஆராய்ச்சி மையங்களும் உண்டு. 2015-ம் ஆண்டு சீனா தனது படைத்துறையை மறுசீரமைத்த போது பல வேறுபட்ட துறையினரின் கட்டுப்பாடுகளில் இருந்த பல்வேறு இணைய வெளிப் படைப்பிரிவினர் ஒரு கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் Fortune எனப்படும் ஊடகம் சீனா அமெரிக்காவில்  இணையவெளி ஊடுருவல் செய்த இடங்களைக் கொண்ட ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அவ் ஊடுருவல்கள் மூலம் அமெரிக்காவின் வாகன உற்பத்தி தொடர்பான இரகசியங்கள், மருந்தாக்கல் இரகசியங்கள், படைத்துறை இரகசியங்கள், குடிசார் போக்கு வரத்துக் கட்டுப்பாட்டு முறைமைகள் பற்றிய தகவல்கள் உட்பட பல தகவல்களை சீனா திருடியதாக Fortune குற்றம் சாட்டியது. 500இற்கு மேற்பட்ட இணைய வெளி ஊடுருவல்கள் சீனாவில் இருந்து அமெரிக்காவில் 2005இலிருந்து 2015 வரை செய்யப்பட்டதாக Fortune தெரிவித்திருந்தது.  Boeing, Lockheed Martin ஆகிய விமான உற்பத்தி நிறுவனங்களின் கணனித் தொகுதிகளை சீனா ஊடுருவி அமெரிக்கப் போர் விமானங்களின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டது எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

வட கொரியாவின் இணைய வெளிப் படையணி
இணையவெளிப் போர் முறைமையில் முன்னணி்யில் இருக்கும் நாடுகளில் வட கொரியாவும் ஒன்றாகும். அது பல இளைஞர்களை கணனித் துறையில் பயிற்ச்சிக்கு என வெளி நாடுகளிற்கு அனுப்பி பின்னர் அவர்களை வைத்து தன் இணையவெளிப் படைப்பிரிவை உருவாக்கியது. பொருளாதாரப் பிரச்சனையில் இருக்கும் வட கொரியாவிற்கு மிகவும் குறைந்த செலவில் இணைய வெளிப் படைப்பிரிவை உருவாக்க முடிந்தது. வட கொரியாவின் இணைய வெளிப் படையில் 6,000 பேர் உள்ளனர். Bureau 121 என அழைக்கப்படும் இவர்களால் 2014-ம் ஆண்டு இலகுவாக Sony Picturesஇன் கணனிகளை ஊடுருவி உலகை உலுப்பக் கூடியதாக இருந்தது. வட கொரிய அதிபரை பேட்டி காண்பதை முக்கிய பங்காகக் கொண்ட Sony Picturesஇன் திரைப்படம அதிபரைக் கேலி செய்வதாக அமைந்ததால் ஆத்திரப்பட்ட வட கொரிய அரசு தனது இணைவெளிப்படையினரைக் கொண்டு Sony Picturesஇன் கணனிகளை ஊடுருவச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக்க பிரித்தானியாவின் தாக்குதல்
பிரித்தானியாவின் RAF Rivet என்னும் உளவு விமானம் லிபியாவின் சேர்டே நகரில் நிலை கொண்டுள்ள ஐ எஸ் போராளிகளின் தொடர்பாடல்களுக்கு எதிராக 2016 மே மாதம் 14-ம் திகதி ஒரு இணையவெளித் தாக்குதலை நடத்தியது. விமானத்தில் இருந்து ஒலிபரப்பப்பட்ட அலைவரிசைக் குழப்பி ஐ எஸ் போரளிகளின் தொடர்ப்பாடலை முற்றாக துண்டித்தது. தமது விமானத்தில் இருந்து வலு மிக்க்க ஒலிபரப்பிகளால் நாற்பது நிமிடங்கள் செய்யப் பட்ட இத் தாக்குதலால் ஐ எஸ் போராளிகள் கலவரமடைந்ததாக பிரித்தானியப் படையினர் தெரிவித்தனர். ஐ எஸ் போராளிகளுக்கு எதிராக ஒரு தரை அல்லது வான்வெளித் தாக்குதல் செய்யப்படும் போது இப்படிப்பட்ட தொடர்பாடல் துண்டிப்புக்கள் அவர்களை திக்கு முக்காடச் செய்யும். 2011-ம் ஆண்டு பிரித்தானியா தந்து இணையவெளி படைவலுவை 650மில்லியன் பவுண்கள் செலவில் பல ஆயிரம் இணையவெளி வல்லுனர்களை படைத்துறையில் இணைத்து அதிகரித்துக் கொள்வதாக அறிவித்தது.

எதிர்காலப் போரில் முதலில் களமிறங்குவது இணைய வெளிப்படை.
இணையவெளியில் பல தாக்குதல்களும் திருட்டுக்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரிலும் 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் போரிலும் வான்படையினரே முதலில் தாக்குதல்களைத் தொடுத்தனர். இனி வரும் காலங்களில் நடக்கும் போரில் இணையவெளிப் படையினரே முதலில் செயற்படுவர். 2014-இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைக்க முன்னர் பல இணைய வெளித் தாக்குதல்களை உக்ரேன் மீது மேற்கொண்டது. பொய்பரப்புரை, படைத்துறை வழங்கல் முறைமைகளைச் செயலிழக்கச் செய்தல், உட்கட்டுமானங்களைப் பராமரிக்கும் கணனிகளைச் செயலிழக்கச் செய்தல் ஆகியவை இரசியாவால் செய்யப்பட்டதாகக் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப் பட்டன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...