Tuesday, 3 November 2015

உலகப் பொருளாதாரத்தை வளர்முக நாடுகள் முன்னேற்றுமா?

2007-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் உலகப் பொருளாதாரத்தை மீளவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்முக நாடுகள் பக்கம் தம் பார்வையைத் திருப்பின. அப்போது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து வளர்முக நாடுகளான சீனாவும் இந்தியாவும் விரைவில் தம்மைச் சுதாகரித்துக் கொண்டன. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பும் துருக்கி, இந்தோனேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளும் வளர்ச்சிப் பாதையில் இயங்கி உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு உந்து வலுவைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் 2015-ம் ஆண்டு நிலைமை வேறுவிதமாக இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் சில மேற்கு உலக நாடுகளும் தமது பொருளாதாரங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றன. ஆனால் வளர்முக நாடுகள் தமது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றன.



2015-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.5 விழுக்காடு வளரும் என 2015 ஏப்ரலில் எதிர்வு கூறிய பன்னாட்டு நாணய நிதியம் அதை ஒக்டோபரில் 3.1 எனக் குறைத்துள்ளது.

ஏற்றுமதியும் முதலீடும்
2007-ம் ஆண்டின் பின்னர் எல்லா நாடுகளும் ஏற்றுமதி மூலம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபட முயன்றன. எல்லோரும் ஏற்றுமதி செய்வதாயின் யார் இறக்குமதி செய்வது? இந்த ஏற்றுமதிப் போட்டியால் இன்றுவரை பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி குன்றிப் போய் இருக்கின்றன. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 19 முன்னணி வளர்முக நாடுகளில் இருந்து தொண்ணூறு கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் வெளியேறியுள்ளன. மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 9700மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை 2015-ம் ஆண்டில் விற்றுள்ளனர். ஆசியாவிலேயே அதிக அளவு முதலீட்டு வெளியேற்றம் இந்த மூன்று நாடுகளில்தான் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு மலேசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. அதன் ரிங்கிட் நாணயத்தின் பெறுமதியும் அமெரிக்க டொலருக்கு எதிராக இருபது விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் மலேசிய ஆட்சியாளர்கள் தங்களிடம் இன்னும் 100பில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருப்பதாகவும் தமது நாட்டின் வெளியகக் கடன்பளு மொத்தத் தேசிய உற்பத்தியின் 70 விழுக்காடு மட்டுமே என்கின்றனர். அத்துடன் தமது நாட்டின் கடன்படு திறனை எந்த ஒரு நிறுவனமும் குறைத்து மதிப்பிடவில்லை என்கின்றனர். தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தோனேசியாவின் கடன்பளு மொத்தத் தேசிய உற்பத்தியின் 32 விழுக்காடு மட்டுமே. அத்துடன் அது 112பில்லியன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பைக் கொண்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிலிப்பைன்ஸின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சிறந்த நிலையில் இருக்கின்றது. வெளிநாடுகளில் பண்புரியும் பிலிப்பைன்ஸ் குடிமக்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தால் அதன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சிறந்த முறையில் இருக்கின்றது.  மலேசியாவில் அரசியல் சூழ் நிலையும் உகந்ததாக இல்லை. மலேசியத் தலைமை அமைச்சரின் கணக்கில் 700மில்லியன் அமெரிக்க டொலர்கள்ள் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தை அதிக அளவு கொண்ட மலேசியாவின் பொருளாதாரத்தை சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தமை மட்டுமல்ல எரிபொருள் விலை வீழ்ச்சியும் பெரிதாகப் பாதித்துள்ளது. மலேசியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 40 விழுக்காடு எரிபொருள் ஏற்றுமதியில் இருந்தே கிடைக்கின்றது.

இந்தோனிசியாவில் வெளிநாட்டு நாணயம்
இந்தோனிசியாவில் வெளிநாட்டு நாணயங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துச் சென்றன.  இது ஆண்டு ஒன்றிற்கு 73 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. மொத்தத் தேசிய உற்பத்தி 900 பில்லியன் டொலர்களைக் கொண்ட இந்தோனிசியாவிற்கு இது ஒரு அதிகமான தொகையாகும். பல முதலீட்டாளர்கள் அடிக்கடி பெறுமதி மாறும் இந்தோனேசிய நாணயமான ருப்பியாவில் தமது நாணய இருப்பை வைத்திருக்காமல் வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருக்க விரும்பியதால் இந்த நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்தோனேசியாவின் நாணய மதிப்பும் வீழ்ச்சி கண்டது. 2014-இந்தோனேசியாவின் பொருளாதாரம் அதற்கு முன்னைய ஐந்து ஆண்டுகளில் மிக்கக் குறைவான வளர்ச்சியைக் கண்டது. ருப்பியா நாணயத்தின் மதிப்பு கடந்த 17 ஆண்டுகளில் மோசமான தாழ்நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. இந்தோனேசிய மைய வங்கி அது ஏற்றுமதிக்கு உதவும் என நம்பியது. ஆனால் நிலக்கரியையும் சமையல் எண்ணெய்யையும் ஏற்றுமதி செய்வதில் அதிக ஏற்றுமதி வருமானம் ஈட்டும் இந்தோனெச்சியாவிற்கு உலக எரிபொருள் விலை வீழ்ச்சியும் பண்டங்களின் விலை வீழ்ச்சியும் மோசமான விளைவுகளைக் கொடுத்தன.

விலைகள் அதிகரிக்கவில்லை என்றதும் கவலைதான் 
 உலகில் பல நாடுகள் போதிய பணவீக்கம் இன்றி அல்லது எதிர்மறையான பணவீக்கத்தால் அவதிப் படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பணவீக்கம் 1.5விழுக்காடாகவும் 2017-ம் ஆண்டு 1.8விழுக்காடாகவும் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இரண்டு விழுக்காட்டிலும் சற்றுக் குறைவான ஒரு பணவீக்கத்தையே ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்கள் விரும்புகின்றார்கள். பொருளாதாரத்தில் பணப் புளக்கத்தை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றிய மைய வங்கி 1.2 ரில்லியன் டொலர்கள் பெறுமதியான தனது கடன் முறிகளை வாங்க இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் மற்ற வளார்ச்சியடைந்த நாடுகளும் தமது பொருளாதாரத்தை வளர்முக நாடுகளிற்கான ஏற்றுமதி மூலம் சீர் செய்யலாம் என 2010-ம் ஆண்டு நம்பியிருந்தன. 2015-ம் ஆண்டு அவர்களின் நம்ப்பிக்கை ஈடேறவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா
சீனப் பொருளாதாரம் சீன மக்களின் அதிக சேமிப்பாலும் சீன அரசின் மிகையான முதலீட்டாலும் கிராமப்புறத்து மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து  உற்பத்தித் திறன்மிக்க துறைகளில் வேலைகள் பெற்றதலும், மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்தாலும் வளர்ந்து கொண்டிருந்தது. பொருளாதாரம் பெரிதும் ஏற்றுமதியில் தங்கியிருந்தது. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்ததால் சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அரச நிறுவனங்களின் இலாபம் 24.7 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததாக சீன அரசு அறிவித்திருந்தது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததால் உலகச் சந்தையில் சீனா தனது உற்பத்திக்காக வாங்கும் மூலப்பொருளகளின் விலை குறைந்தது. சீனாவிற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வருமானம் குறைந்தது. இதனால் இந்த நாடுகளின் கொள்வனவு குறைந்தன. இதனால் வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஏற்றுமதி குறைந்தது. அவற்றின் வருமானம் குறைந்ததால் வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் செய்யும் ஏற்றுமதி குறைகின்றது. இப்படி ஒரு சுழற்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

சீனாவும் பில்ம் காட்டப்போகின்றது.
சீனாவின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் வேளையில் சீனாவின் ஒரு புள்ளி விபரம் முன்னேற்றத்தைக் காட்டியது. சீனாவின் திரைப்படத் துறையே அதுவாகும். சீனத் திரைப்படத்துறையின் வருமானம் அமெரிக்காவின் திரைப்படத் துறையின் வருமானத்தை 2020-ம் ஆண்டு முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தனது பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த சீனா முயல்கின்றது. தனது நிபுணர்களை அமெரிக்காவின் ஹொலிவூட்டிற்கு அனுப்பி திரைப்படத்துறையை எப்படி முன்னேற்றலாம் என ஆய்வும் செய்தது.   Demand Institute இன் கணிப்பீட்டின் படி சீனப் பொருளாதாரம் அடுத்த பத்து ஆண்டுகளில் 60 விழுக்காடு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கருத்துப் படி சீனாவில் நிகழ்ந்த பங்குச் சந்தை விலை வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தமையும் சீனப் பொருளாதாரத்திற்குத் தேவையான ஒன்றாகும் என்கின்றது.  சீனாவில் ஒரு பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது எனச் சொல்ல இது தருணம் அல்ல என்கின்றது ப நா நிதியம். சீனாவின் அடுத்த ஐந்தாட்டுத் திட்டம் சீனப் பொருளாதாரம் ஒரு கடுமையான தரையிறக்கத்தைத் தடுப்பதையும் சீன நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதையும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வைத்திருப்பதையும் நோக்க மாகக் கொண்டிருக்கும். சீனாவின் இந்த 13வது ஐந்தாண்டுத் திட்டம் அதற்கு ஒரு திருப்பு முனையாக அமையும்

சொன்னதைச் செய்யாத மோடி
இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. ஊழல் ஒழிக்கப்படவில்லை, சிவப்பு நாடா தளர்த்தப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகளுக்கு உரிய சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை இந்தியப் பொருளாதாரத்திற்கு இன்னும் உந்து வலுவைக் கொடுக்கவில்லை.

பிரேசிலினதும் இரசியாவினதும் பொருளாதாரம் 2015-ம் ஆண்டு சுருங்கும் என்பது உறுதியாகிவிட்டது. இரசியப் பொருளாதாரம் 2016-ம் ஆண்டிலும் சுருக்கமடையும். இரசியா தன்வசமுள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு மூலம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றது. பிரச்சனைக் குரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி முதலாம் இடத்தில் இருக்கின்றது. ஆனால் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்தியைத் துருக்கியில் செய்கின்றன.

ஆபிரிக்கா
சீனாவின் பொருளாதாரத்தால் பாதிக்கப்படாத பிரதேசமாக ஆபிரிக்கா இருக்கின்றது.  சேரா லியோன் மட்டும் விதி விலக்காக இருக்கின்றது. ஆபிரிக்காவின் அமெரிக்கா செய்யும் முதலீட்டிலும் பார்க்க மூன்று மடங்கு முதலீட்டை சீனா செய்கின்றது. ஆனால் பல ஆபிரிக்க நாடுகள் தமது நாட்டின் பாதீட்டைச் சமன் செய்ய முடியாமல் திண்டாடுகின்றன.
2007-ம் ஆண்டு எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்ததால் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்ததாகச் சொல்லப்பட்டது. இப்போது எரிபொருள் விலை ஐம்பது விழுக்காட்டிலும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதை வைத்து உலக மக்களின் கொள்வனவுகளோ அல்லது உலக உற்பத்தியோ அதிகரிக்க வில்லை. அது மட்டுமல்ல மைய வங்கிகள் வட்டி விழுக்காட்டை பூச்சியம் வரை குறைத்தல்,  கடன் முறிகளை வாங்கிப் பணப்புளக்கத்தை அதிகரித்தல் என பல நடவடிக்கைகளை எடுத்தும் பொருளாதார வளர்ச்சி இன்னும் எட்டப்படாத ஒன்றாகவே இருக்கின்றது.
பன்னாட்டு நாணய நிதியம் 2015-ம் ஆண்டு வளர்முக நாடுகளின் பொருளாதாரம் 4.2விழுக்காடாக மட்டுமே இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வளர்முக நாடுகள் 7.4 விழுக்காட்டில் வளர்ந்தது.

2050-ம் ஆண்டு வளர்முக நாடுகளின் கொள்வனவு உலகக் கொள்வனவில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். அப்போது உலகப் பொருளாதாரம் வளர்முக நாடுகளினுடையதாக

Wednesday, 28 October 2015

சீனாவின் தீவுகளுக்கு சவால் விடச் சென்ற அமெரிக்க நாசகாரிக் கப்பல்

தென் சீனக் கடலின் பவளப் பாறைகள் மீது கடலடி மணலை வாரி இறைத்து சீனா உருவாக்கிய தீவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. ஸ்பிரட்லித் தீவுக்  கூட்டத்தில்
(Spratly Island chain ) உள்ள Subi and Mischief reefs என்னும் பவளப்பாறைகளில் உருவாக்கப் பட்ட தீவுகளைச் சுற்றி உள்ள 12 கடல் மைல்கள் கொண்ட கடற்பரப்பு தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என சீனா தெரிவித்திருந்தது.  

ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல் நீளக் கடற்பரப்பு  அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். கடல் வற்றும் போது தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கியும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது. ஏற்கனவே தமக்குச் சொந்தமான தீவை நாம் மேடுறுத்தியுள்ளோம் என்கின்றனர் சீனர்கள். ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தை சீனர்கள் Nansha Islands என அழைக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் முன்னரே சீனா தென் சீனக்கடல் தன்னுடையது எனச் சொல்லியிருந்தது. 1980களில் சீனர்கள் அங்கு குடியிருந்தார்கள்.

இரசியா கிறிமியாவில் செய்தது நில அபகரிப்பு என்றும் சீனா தென் சீனக் கடலில் செய்வது கடல் அபகரிப்பு என்றும் சொல்கின்றனர் அமெரிக்கர்கள்.

தென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா ஒரு வலிமை மிக்க நாசகாரிக் கப்பலை அனுப்பியது தென் சீனக் கடல் தொடர்பாக அதன் உறுதிப் பாட்டை எடுத்துக் காட்டுகின்றது என்றனர் படைத் துறை ஆய்வாளர்கள்.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும்  ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா
கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி  அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனும்தி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது.  அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம்  சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களை சீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன.  தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா?

2015-ம் ஆண்டு ஒக்டோபர் 27-ம் திகதி உள்ளூர் நேரம் காலை 06-40இற்கு அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் USS Lassen தனது ஆதிக்கக் கடற்பரப்பினுள் வந்தமை சட்ட விரோதமானது என்றும் தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தாலனது என்றும் சீன அதிகாரிகள் சினத்துடன் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா  தனது சுதத்திரக் கடற்பயண நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது. பன்னாட்டு விதிகளுக்கு ஏற்ப "ஒழுங்கை" நிலைநாட்டுவது தமது பணி என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் படைத்துறை உயர் அதிகாரிகள் இப்படி நாசகாரிக் கப்பல்களை அனுப்புவது சீனாவின் தீவு கட்டும் பணியைப் பாதிக்காது என்கின்றனர்.

போர் தொடுக்க முடியாத பங்காளிகள்
சீனாவின் மிகப்பெரிய வர்தகப் பங்காளி அமெரிக்காவாகும். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கும் அணுப் படைக்கலன்களின் பரவலாக்கத் தடைக்கும் சீனா பங்காளியாகும்.  அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஒஸ்ரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தாய்வான் சீனாவின் ஸ்பிர்ட்லி தீவிக் கூட்டங்களுக்கான உரிமையை நிராகரித்துள்ளது.  கடந்த 18 மாதங்களாகா சீனா இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தில் மீட்டுள்ளது. தென் சீனக் கடலை ஒட்டிய மற்ற நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலால் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பராட்டுகின்றன. இரு பெரும் வர்த்தகப் பங்காளிகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிவதைத் தவிர்க்கும். தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு தீவை நிர்மாணித்தால் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கும்? அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்தை நோக்கிய நகர்வு பசுபிக் நாடுகளுடன் செய்து கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தத்தால் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது. நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை கூட்டணியும் அங்கு உருவாகும் போது சீனாவின் நிலை மேலும் சிக்கலாகும். 

அமெரிக்கத்தூதுவரை அழைத்த சீனா
சீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது. 

தென் சீனக் கடலின் 80 விழுக்காடு கடற்பரப்பை சீனா தன்னுடையது என அடம் பிடிப்பதற்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஹொலண்ட் நகர் ஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பாயத்திற்கு தென் சீனக் கடல் தொடர்பாக விசாரிக்கும் நியாய ஆதிக்கம் இல்லை என்றது சீனா. ஆனால் 22015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29-ம் திகதி Permanent Court of Arbitration  தீர்ப்பாயத்திற்கு விசாரிக்கும் உரிமை உண்டு எனத் தீர்மானித்துள்ளது. அதன் தீர்ப்புக்கு சீனா கட்டுப்படவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.  இறுதித் தீர்ப்பு 2016-ம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவரும்.  ஆனால் அதன் தீர்ப்பிற்ற்கு சீனா கட்டுப்படுமா?

Tuesday, 27 October 2015

ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கடலோனியர்கள்

இங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கடலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும் பிரிந்து செல்ல வேண்டும் என அவ்வப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள்.  இதில் அண்மைக்காலங்களாக செய்திகளில் கடலோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கடலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு 48விழுக்காட்டினர் ஆதரித்தனர்.

மொழிப்பிரச்சனைதான் முதற்பிரச்சனை
பொருளாதார அடிப்படையில் உலகின் 14வது நாடான ஸ்பெயின் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியில் மோசமாகப் பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றாகும். அந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கையில் அங்கு கடலோனிய மக்களின் பிரிவினைவாதம் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. 1714-ம் ஆண்டு கடலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கடலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கடலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். இவருக்கு இத்தாலியிலும் ஜேர்மனியிலும் உள்ள பாசிஸ்ட்டுகளின் ஆதவரவும் இருந்தது. ஸ்பெயினில் 190 சித்திரவதை முகாம்களை வைத்திருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ நான்கு இலட்சம் பேரைக் கொன்று குவித்தவர். பொது இடங்களில் கடலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கடலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கடலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்க்ளின் பெயர்கள் உட்பட எல்லாக் கடலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கடலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சிக்கு நாஜிகள் ஆதரவு வழங்கினாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது.

வருமான மீள்பங்கீடு

ஏனைய ஸ்பானியப் பிரதேசத்தை மேற்கிலும் பிரான்சை வடக்கிலும் மத்திய தரைக் கடலைக் கிழக்கிலும் கொண்ட ஒரு முக்கோண வடிவப் பிராந்தியமே கடலோனியா ஆகும். ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு மாகாணமாகும். அங்கு 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயற்பட வேண்டும் என்ற விருப்பம் 19-ம் நூற்றாண்டில் இருந்து உருவாகியது. இதற்கான போராட்டங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. 2012-ம் ஆண்டு ஸ்பானியத் தலைமை அமைச்சர் ரஜோய்யிற்கும் கடலோனிய மாநில ஆட்சியாளர் ஆதர் மார்ஸிற்கும் இடையிலே முறுகல் நிலை தோன்றியது. தலைமை அமச்சர் கடலோனிய மாநிலத்தின் வருவாயில் இருந்து ஸ்பெயின் வறுமை மிக்க மற்றப் பிராந்தியங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என வேண்டியது முறுகலை உருவாக்கியது.

வளம் மிக்க கடலோனியா
ஸ்பெயின் மற்றப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கடலோனியாவில் தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள பார்சலோனாவில் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய விமான நிலையம் உள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3 ஆவது பெரிய துறைமுகமாகும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் மத்தியதரைக்கடற் கரைப் பிரதேசமும் கடலோனியாவில் உண்டு. ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகையில் கடலோனியர்கள் 16 விழுக்காடாகும். ஆனால் அவர்களது உற்பத்தி மொத்தத் தேசிய உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். ஸ்பானிய ஏற்றுமதியில் இருபத்தைந்து விழுக்காடு கடலோனியாவினதாகும். கடலோனியா பிரிந்து சென்றால் ஸ்பெயின் நாட்டின் கடன் பளு அதிகரிக்கும் எனச் சொல்லப் படுகின்றது. ஸ்பெயின் நாட்டின் கடன்பளுவில் எத்தனை விழுக்காட்டை கடலோனியா ஏற்கும் என்பது பேச்சு வார்த்தைகளால் மட்டும் தீர்கப்பட வேண்டிய ஒன்று. ஸ்பானிய அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத நிலையில்  பேச்சு வார்த்தை மூலம் கடன் பளு பகிரப்படாமல் விட்டால் ஸ்பெயினின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 125 விழுக்காடாக அதிகரிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனையால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் மோசமாகலாம்.

கலந்தாலோசனையான கருத்துக் கணிப்பு

2014-ம் ஆண்டு கடலோனியப் பிராந்திய அரசு ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த முன்வந்தது. அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அரசமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு என்ற் பெயரை பொதுக் கலந்தாலோசனை என்னும் பெயரில் கடலோனியா பிரிந்து செல்வதா இல்லையா என வாக்கெடுப்பு நடந்தது. அதையும் அரசு தடை செய்த போது கடலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடாத்தியது. வாக்களித்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் கடலோனியப் பிராந்திய அரசு எத்தனை விழுக்காடு மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர் என்பதை அறிவிக்கவில்லை. மொத்தக் கடலோனிய மக்களில் 42 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்கு பற்றியதாகச் சொல்லப் படுகின்றது. பதினெட்டு வயதிற்குக் குறைந்தோரும் வந்தேறு குடிகளும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

 Barcelonaவை மிரட்டும் Madrid
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலோனியப் பிராந்தியக் கட்சிகள் தமக்குள்ளே ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. அதில் முக்கியமாக வலதுசாரி கொன்வேர்ஜென்சியாக் மக்களாட்சிக் கட்சியும் எஸ்கியூரா குடியரசு இயக்கமும் ஒத்துழைக்க முடிவு செய்தது முக்கியமானதாக அமைந்தது. அவர்கள் 2015 செப்டம்பர் 27-ம் திகதி நடந்த பிராந்திய அவைக்கான தேர்தலை தாம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக கருதி மக்கள் தமக்கு ஆணையத் தரவேண்டும் எனச் சொல்லிப் போட்டியிட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் அவர்கள் காத்திரமான வெற்றியைப் பெறவில்லை என ஸ்பானிய நடுவண் அரசு அறிவித்தது. ஆனால் கடலோயினப் பிரிவினைவாதிகள் தேர்தல் முடிந்தவுடன் தாம் 18 மாதங்களுக்குள் தனிநாட்டுப் பிரகடனம் செய்வோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் ஸ்பானிய நடுவண் அரசு அப்படி ஒரு பிரகடனம் செய்யுமிடத்து நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோயினியப் பிராந்திய அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தது. அத்துடன் வாக்கெடுப்புச் செய்தமைக்காக கடலோனிய அதிபர் ஆதர் மாஸிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொது நிதியைத் தவறாகக் கையாண்டமை போன்ற குற்றங்களுக்காக ஆதர் மாஸ் மீது வழக்கும் தொடுத்துள்ளது.

ஸ்கொட்லாந்து பிரிவதா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு பிரித்தானிய அரசின் அனுமதியுடன் நடந்தது. அது கடலோனியர்களுக்கு ஒரு உந்து வலுவாக அமைந்தது. கடலோனியர்களின் பிரிவினை இனி ஸ்கொட்லாந்திற்கு உந்து வலுவாகலாம்.

Monday, 26 October 2015

இரசியக் குண்டு வீச்சிலும் சிரியப் படைகள் பின் வாங்குகின்றனவா?


இரசிய விமானங்களில் இருந்தும் உழங்கு வானூர்திகளிலும் இருந்தும் செய்யப் படும் குண்டு வீச்சுக்கள் மத்தியில் சிரிய அரச படைகள் எதிரிகள் மீது தரைவழித் தாக்குதல் நடாத்தி முன்னேறாமல் இருப்பது இரசியப் படைத்துறை நிபுணர்களை விரக்தியடைய வைத்துள்ளது. சிரியாவில் நடந்த படைத்துறை நிபுணர்களின் கூட்டம் ஒன்றில் ஈரானிய நிபுணர்கள் சிரியப் படையினர்மீது பெரும் கூச்சலிட்டுக் குற்றம் சுமத்தினர்.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைத் தக்க வைக்க அவரது சிரிய அரபுப் படை என்னும் பெயர் கொண்ட அரச படைகளுடன் இரசியப் போர் வீரர்கள் இரண்டாயிரம் பேர், லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரானியப் படைகள் ஆகியவை போர் புரிகின்றன. 2015 செப்டம்பர் 30-ம் திகதியில் இருந்து இரசியப் போர் விமானங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போர் புரியும் அமைப்புக்களின் நிலைகள் மீது குண்டுகளை வீசி வருகின்றன.

மூன்று இலட்சம் உயிர்களைப் பலிகொண்டும் பத்து இலட்சம் பேருக்கு மேற்பட்டோரை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் இரசியத் தலையீடு நிலைமை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றது. இரசியா நேரடியாகத் தலையிட முன்னர் இருந்தே ஐக்கிய அமெரிக்கா நான்கு வகைகளில் சிரியப் போரில் தலையிடத் தொடங்கி விட்டது.

முதலாவது நேரடியாக ஐ எஸ் அமைப்பின் நிலைகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல் செய்வது. ஓராண்டுகளாகச் செய்யும் தாக்குதல் பெரியளவில் ஐ எஸ் அமைப்பினருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

 இரண்டாவது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் சுதந்திர சிரியப் படை என்னும் அரச எதிர்ப்புக் குழுவினருக்கும் அதன் ஆதரவுக் குழுவினருக்கும் ஐந்து மில்லியன் டொலர் செலவில் பயிற்ச்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது.  இக்குழுக்களிடையே இருந்து போராளிகளைத் தெரிவு செய்து பயிற்ச்சியளித்து துருக்கி ஊடாக  அனுப்பப் பட்ட 60 போராளிகள் சிரியாவிற்குள் நுழைந்தவுடன் அவர்கள் மேல் சிரியக் கிளர்சிக் குழுக்களில் ஒன்றான  ஜபத் அல் நஸ்ரா அவர்கள் மீது ஓர் அதிரடித் தாக்குதல்களைச் செய்தது. முதலாவது தாக்குதலில் அவர்களின் தலைவரான நதீம் அல் ஹஸன் உட்படப் 18 பேரைக் கைப்பற்றிக் கடத்திச் சென்றது. அவர்களிடமிருந்து படைக்கலன்கள் பாதுகாப்பு வண்டிகளையும் தனதாக்கியது. இரண்டாவது தாக்குதலில் ஐந்து பேரைக் கொன்று 16பேரைப் படுகாயப் பட்டுத்தியது. அமெரிக்கா சிரியாவிற்கு பயிற்ச்சி கொடுத்து அனுப்பிய இன்னும் ஒரு தொகையினர் அரச படைகளிடம் சரணடைந்தனர். இத்துடன் பெண்டகன் தனது 500மில்லியன் பயிற்ச்சியும் படைக்கலன் வழங்குதலும் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தது.

மூன்றவதாக அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களுக்கு படைக்கலங்களை வழங்குதல்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய BGM-71 TOW என்னும் ஏவுகணைகளே சிரியாவில் அரச படைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தன.  இந்த ஏவுகணைகளுக்கு அசாத்தை அடக்கிகள் எனப் பெயரிடப்பட்டன. சிரியாவின் வடபிராந்தியத்தில் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பெரிதும் பயன்படுத்தினர். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பாவிக்கும் காணொளிகள் யூரியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அரச படையினரின் இரசியத் தயாரிப்பு தாங்கிகளையும் கவச வண்டிகளையும் துவம்சம் செய்தனர். இந்த ஏவுகணைகளைப் பாவிக்கத் தொடங்கிய முதல் நாளிலேயே 24 தாங்கிகளும் கவச வண்டிகளும் கிளர்ச்சிக்காரர்களால் அழிக்கப்பட்டன.  BGM-71 TOW என்னும் ஏவுகணைகள் சவுதி அரேபியாவின் படைக்கல இருப்பில் இருந்தே துருக்கியூடாக கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட படைக்கலன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு கவனமாகத் திட்டமிடப்பட்டே வழங்கப்படுகின்றன. அவர்கள் ஒரு முழுமையான வெற்றி ஈட்டி அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றாமல் அசாத்தின் படைகளுக்கு இழப்பை ஏற்படுத்தி ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசத் பதவியில் இருந்து விலகுவதை அமெரிக்கா விரும்பியது. சிஐஏயின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சிரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தையை மையப்படுத்தியதாக இருந்தன.  எண்பதுகளில் சோவியத் படைகளுக்கு எதிராக சிஐஏ முஜாஹிதீன் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய Stinger என்னும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சோவியத்தை நிலை குலையச் செய்தது போல் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்குக் கொடுத்த BGM-71 TOW ஏவுகணைகள் சிரியப் படைகளைத் திக்கு முக்காட வைத்தன.

 நான்காவதாக ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் போராளி அமைப்புக்கும் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களை வழங்கியது. ஆனால் துருக்கி தனது எல்லையில் குர்திஷ் மக்கள் தமது கட்டுப்பாட்டில் ஒரு பிராந்தியத்தையும் படையினரையும் வைத்திருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. ஐ எஸ் போராளிகள் வெற்றி பெறுவதையே துருக்கி விரும்பியது.சிரியாவில் உள்ள எல்லாப் போராளிக் குழுக்களிலும் சிறந்த முறையில் போராடுவது குர்திஷ் பெண்போராளிகளே.



இரசியப் படைகள் சிரியவினுள் வந்த பின்னர் சிஐஏ தனது ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் படைக்கலன்களின் அளவை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. இவையாவும் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா  விற்பனை செய்யும் படைக்கலன்களில் இருந்தே செல்கின்றன. இதனால் அமெரிக்காவின் வருமானம் அதிகரிக்கின்றது. அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு எதிராக இப்போது ஐ எஸ் அமைப்போ  அல்லது ஜபத் அல் நஸ்ரா அமைப்போ தாக்குதல்கள் நடாத்துவது குறைவு. இரசியத் தலையீடு இவர்களுக்கு இடையிலான போரை நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தி முன்னேறி வருகின்றனர். லதக்கியாவில் தங்கியுள்ள மூன்று இரசியப் படையினரும் இவர்களின் எறிகணை வீச்சால் கொல்லப் பட்டுள்ளனர் என வெளிவந்த செய்தியை இரசியா மறுத்துள்ளது. அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படையினருக்கு மேற்கு நாடுகளினதும் பல அரபு நாடுகளினதும் உளவுத் துறையினர் பெருமளவில் உதவி செய்கின்றனர். சவுதி அரேபியா குரோசியாவிடமிருந்து வாங்கிய RBG-6 என்னும் பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் இப்போது கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


இரசியப் படைகள் சிரியா வந்த பின்னர் சுதந்திர சிரியப்படையினர் Meaar Kabi, Lahaya ஆகிய இரு நகரங்களை அரச படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த இரசியப் படையினர் இவர்களின் மருத்துவ மனைமீது தாக்குதல்களை நடாத்தியதாகக் கிளர்ச்சிக் காரர்கள் தெரிவித்தனர்.

அலெப்பே பிராந்தியத்தில் ஐ எஸ் போராளிகள் பல முனைகளில் சிரியப் படைகளைக் குழப்பும் விதத்தில் தாக்குதலைத் தொடுத்து சில பகுதிகளில் முன்னேறி சிரியப் படைகளை விரட்டியடித்தனர். மஸ்கோவில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்த விளடிமீர் புட்டீன் சிரியப் படைகளின் தரை நகர்வை வலியுறுத்தினார். அவரைச் சந்தித்த பின்னர் எகிப்த்தின் அல் சிசி, சவுதி அரசர் சல்மன், ஜோர்தானிய அதிபர் அப்துல் ஃபட்டா, துருக்கியத் தலைமை அமைச்சர் எர்டோகன போன்ற சுனி முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இரசிய விமானங்கள் ஒக்டோபர் 23-ம் திகதிவரை 934 பறப்புக்களைச் (sorties) செய்து "பயங்கரவாதிகளின்" 819 நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தியுள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப காத்திரமான முன்னகர்வுகள் எதையும் சிரிய அரச படைகள் செய்யவில்லை. இரசிய வான் தாக்குதல்களுக்குப் பின்னர் தரை நகர்வு செய்யும் சிரியப் படைகளுக்குக் காத்திருப்பவை நிலக் கண்ணி வெடிகளும் இரசியத் தயாரிப்பு Konkurs ஏவுகணைகளும் அமெரிக்காவின் சிஐஏ வழங்கிய TOW ஏவுகணைகளும் ஆகும். இரசிய விமானிகள் பாலைவனப் புழுதியில் விமானங்களை ஓட்டுவதற்குச் சிரமப் படுகின்றார்கள் தாக்குதல் விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அடிக்கடி இடையில் தமது பறப்புக்களைத் திசை மாற்றி தளம் திரும்புகின்றன. படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் விமானங்களில் பாதி தமது பறப்பை முழுமையாக மேற்கொள்ளாமல் இடையில் திரும்புகின்றன. இரசிய விமனங்களிற்கான உதிரிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றன. அமெரிக்கப் படைத்துறையினர் தமது விமானங்கள் 80 விழுக்காடு பறப்புக்கள் முழுமையாக நடக்கின்றன என்கின்றனர்.

அமெரிக்காவின் தரைநகர்வு ஆதரவு விமானங்களான சுடுதிறன்மிக்க  A-10 Warthogs துருக்கியில் வந்து இறங்கியுள்ளன. இவை சிரியக் குர்திஷ் போராளிகள் ஐ எஸ் அமைப்பினரின் சிரியத் தலைமையகம் இருக்கும் ரக்கா நகரைக் கைப்பற்ற உதவி செய்யும். இவர்களுடன் சிரிய கிறிஸ்த்தவப் போராளிகளும் இணைந்து கொள்வார்கள்.

இரசியப் படைகள் சிரியாவிற்கு வரும்வரை இஸ்ரேல் அசாத் ஆட்சியில் இருப்பதை விரும்பியது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைகளிற்கு சிரியா போவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆனால் இரசியப் படையினரின் வருகையின் பின்னர் இஸ்ரேல் கலக்கமடைந்துள்ளது. ஒன்று சிரியா கோலான் குன்றுகளைக் கைப்பற்றுமா என்ற அச்சம். மற்றது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிக படைக்கலங்களை லெபனானிற்கு எடுத்துச் செல்லப் போகின்றார்கள் என்ற அச்சம். 

இந்தப் பன்னாட்டுத் தலையீடுகள் சிரியப் போரை எந்த விதத்திலும் முடிவுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு ஒரு விடிவையோ விமோசனத்தையோ தரப்போவதில்லை. மாறாக சிரியா பல துண்டுகளாகப் பிளவுபடப்போகின்றது.

Monday, 19 October 2015

ஹாமஸிற்கு போட்டியாக ஈரான் உருவாக்கும் அல் சபிரின் அமைப்பு



ஈரானுக்கும் ஹமாஸிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக உறவு சீராக இல்லை. இருதரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டமைக்கு மூன்று முக்கிய  காரணங்கள் உள்ளன. முதலாவது சிரியாவில் ஈரானின் நட்பு ஆட்சியாளரான அல் அசாத்திற்கு உதவி செய்ய ஹமாஸ் மறுத்து விட்டது. மாறாக அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு ஹமாஸ் ஆதரவு வழங்கியது. இரண்டாவது ஹமாஸ் தனது தலைமயகத்தை இரகசியமாக துருக்கிக்கு மாற்றியது. மூன்றாவது ஹமாஸ் தலைவர்கள் ஈரானின் எதிரியும் சுனி முஸ்லிம்களின் நாடுமாகிய சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியது.

மதசார்பற்ற பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக அரபு வசந்தக் கிளர்ச்சி உருவான போது அதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு முக்கிய பாகம் வகித்தது. ஹமாஸ் அமைப்பின் தாய் வீடான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவு நிலையை ஹமாஸ் எடுத்தது ஈரானைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்த போது ஹமாஸ் ஈரானிலும் பார்க்கச் சிறந்த ஒரு நட்பு தனக்கு உருவாகிவிட்டது எனக் நம்பியது. ஆனால் அந்த நம்ப்பிக்கை ஓராண்டில் தகர்ந்துவிட்டது.

ஈரானில் தங்கியிருக்கும் ஹமாஸ்
அரபு சுனி அமைப்பான ஹமாஸிற்கு பாரசீக சியா நாடான ஈரான் நீண்டகாலமாக உதவி செய்து வருகின்றது. ஆண்டு ஒன்றிற்கு 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் ஈரான் ஹமாஸிற்கு உதவியாக வழங்குகின்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட பின்னர் அதற்கு மேலதிகமாக 100பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது. அந்த நிதியில் ஒரு பகுதி ஈரான் உதவி செய்யும் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் கணிசமான அளவு லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு யேமனில் செயற்படுக் ஹூதி மக்கஅமைப்பிற்குச் செல்லப் படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனால் இஸ்ரேலின் உளவுத்துறைத் தகவலின் படி ஹாமாஸ் அமைப்பிற்கு அண்மைக்காலமாக ஈரானிடமிருந்து பெருமளவில் பணமோ படைக்கலன்களோ செல்வதில்லை எனச் சொல்லப்படுகின்றது. ஹமாஸ் தனக்குத் தேவையான படைக்கலன்க்ளைத் தானே உற்பத்தி செய்கின்றது. அத்துடன் ஹமாஸ் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

உலகமயமான ஹமாஸ்
ஈரானின் வேண்டுதலின் பேரில் சியா முஸ்லிம்களின் அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் போராடுகின்றது. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் நடந்த மோதலின் போது அழிக்கப் பட்ட பல நிலக்கீழ் சுரங்கங்களை மீள நிர்மானிக்க ஈரான் நிதி உதவி செய்தது. ஹமாஸின் அரயற்துறைத் தலைவர் கலீட் மேஷால் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மன் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத்தை மட்டுமல்ல முன்னாள் பிரித்தானித் தலைமை அமைச்சர் ரொனி பிளேயரையும் சந்தித்து உரையாடினார். இதைத் தொடர்ந்து இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ், துருக்கியின் அதிபர் ரயிப் எர்கோடன் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார். இச் சந்திப்புக்கள் ஹமாஸை ஈரானிடம் இருந்து பிரிப்பதற்கான முயற்ச்சியா என எண்ணத் தோன்றுகின்றது.  

ஹமாஸின் வரலாறு
ஹமாலின் தோற்றத்தை சற்றுப் பார்ப்போம். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு படைக்கலன் போராட்டத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு மதவாத அமைப்பு. அது பலஸ்த்தீனத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் மத சார்பற்ற பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கும் அதற்கும் இடயில் மோசமான முறுகல் நிலை உருவானது. அது மோதலாக மாறிய போது இஸ்ரேலிய உளவுத்துறையினர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்குப் படைக்கலன்கள் வழங்கினர். இதனால் 1987-ம் ஆண்டு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பலர் பிரிந்து சென்று தனியான அமைப்பை உருவாக்கினர். அதுவே இன்று இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பாகும்.  பலஸ்த்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக் கொண்ட போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் என ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை இன்றுவரை பேணி வருகின்றது. அத்துடன் பலஸ்த்தீனப் பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் தீக்கப்பட முடியாத ஒன்று அது புனிதப் போரின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடையது. இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்களைத் தேடித் தேடி அழிக்கத் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் அமைப்பு சிறு குழுக்கள் பலவற்றைக் கொண்ட ஒரு அமைப்பாக மாற்றம் பெற்றது. இதனால் தலைவர்கள் கொல்லப்பட்ட போதும் அது தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

ஹமாஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் நடந்த பலஸ்த்தீனியப் பாராளமன்றத் தேர்தலில் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. . பின்னர் 2007-ம் ஆண்டு இரு அமைப்புக்களும் போரிட்டுக் கொண்டன. பலஸ்த்தீனியத்தின் மேற்குக் கரையை பலஸ்த்தீனிய விடுதலை இயக்கமும் காசா நிலப்பரபபை காசாவும் தமதாக்கிக் கொண்டன.  தொடர்ந்து இன்றுவரை காசா பிரதேசத்தை ஆண்டு  வருகிறது. ஹமாஸிற்குப் படைக்கலன்களும் நிதி உதவியும் ஈரானிடமிருந்தே சென்றன..

அரபு வசந்தம் ஹமாஸ் இயக்கத்திற்கும் பாதிப்பு
அரபு வசந்ததம் என்னும் தன்னாட்சி ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி சிரியாவிற்கும் படர்ந்த போது ஈரானின் வேண்டுதலினால் ஹிஸ்புல்லா அரச படைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அது ஹமாஸ் இயக்கம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டது.  இதுதால் ஈரான் ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி உதவியை நிறுத்தி விட்டது. ஆனால் படைக்கல உதவிகளை நிறுத்தவில்லை. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம் சிரிய அதிபர் அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராகப் போராடுகிறது. எகிப்தியப் படைத்துறையினருக்கும் இஸாமிய சகோதரத்துவ அமைப்புடன் நல்ல உறவு பேணும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை.

எகிப்திய ஆட்சி மாற்றங்களும் ஹமாஸ் இயக்கமும்
எகிப்தில் முஹமட் மேர்சி தலைமையில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் சமாதானத்திற்குமான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஹமாஸ் இயக்கத்தினர் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மேர்சியின் ஆட்சி கலைக்கபட்டு படைத்துறையினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசாப் பிரதேசத்தில் எகிப்தியப் படையினருக்கு எதிராக பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சினாய் பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினருக்கு எதிராக தாக்குதல்களும் நடாத்தினர். ஹமாஸ் இயக்கத்தின் மத போதகர்கள் எகிப்தியப் படைத் துறையினருக்கு எதிராக பலத்த பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது எகிப்தியப் படைத்துறையினரை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.

நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகள்
காசா நிலப்பரப்பிற்கான வழங்கற் பாதை எகிப்திய எல்லையில் உள்ள நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகளினூடாக நடக்கிறது. சில கணிப்புக்கள் 1200 வரையிலான சுரங்கப் பாதை இருப்பதாகச் சொல்கிறன. இதனூடாக எரிபொருள் படைக்கலன்கள் உணவு எனப் பலவகையானவை எடுத்துச் செல்லப்படுகின்றன.  ஈரானில் இருந்து ஹமாஸ் இயக்கப் போராளிகளுக்கு ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்கள் இந்த சுரங்கப்பாதைகளூடாக கிடைக்கின்றன.  ஹமாஸ் இயக்கம் இந்தச் சுரங்கப்பாதையால் ஆண்டு ஒன்றிற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகவும் பெறுகின்றது. ஹமாஸ் இயக்கத்தினர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டமையால் ஆத்திரமடைந்த எகிப்தியப் படைத்துறையினர் காசாவிற்கான நிலக்கீழ் சுரங்கப்பாதைகளைச் சிதைத்தும் மூடியும் வருகின்றனர். இதனால் காசாப் பிரதேசத்தில் பொருடகளின் விலைகள் அதிகரித்ததுடன் மின்வெட்டும் கடுமையாக அமூல் செய்யப்படுகிறது. விழித்துக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் தலைமை தனது உறுப்பினர்களுக்கும் மத போதகர்களுக்கும் எகிப்தின் படைத்துறையினருக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு புறம் இஸ்ரேலும் மறு புறம் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தரைக் கடலும் இருப்பதால் எகிப்த்தின் சினாய் பாலைவனத்தினுடனான நிலக் கீழ் சுரங்கப்பாதையால் மட்டும் ஹமாஸ் வெளியுலகத் தொடர்பை வைத்திருக்கின்றது. இஸ்ரேலுடன் ஒரு நீண்ட கால மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தால் ஹாமாஸிற்கு மத்திய தரைக்கடலினூடாக போக்குவரத்து செய்ய இஸ்ரேல் அனுமதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ரொனி பிளேயர் ஹமாஸ் அரசியற் துறைத் தலைவருடன் நடத்திய பேச்சு வார்த்தை இது பற்றியதாகவே இருந்தது.

2014-ம் ஆண்டில் இருந்து ஹமாஸ் அமைப்பிற்குப் போட்டியா இன்னும் ஒரு அமைப்பை ஈரான் காசா நிலப்பரப்பில் உருவாகி வருகின்றது. அதற்கு அல் சபிரின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சபிரின் என்னும் சொல் பொறுமை எனப் பொருள்படும். இதன் தலைவராக பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளிகள் என்னும் பெயர் கொண்ட அமைப்பின் தலைவர் ஹிஷாம் சலீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர். ஈரான் இப்போது  அல் சபிரினின் தலைவர் ஹிஷாம் சலீமிற்கு ஆண்டு தோறும் 10மில்லியன் டொலர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியை அவர் இஸ்ரேலியச் சிறையில் உள்ள பலஸ்த்தீனியர்களின் குடும்பத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றார். மேற்குக் கரையில் செயற்படும் பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளிகள் அமைப்பில் இருந்து விலகிப் பலர் அல் சபிரின் அமைப்பில் இணைந்து வருகின்றார்கள். ஆரம்பத்தில் தனது எதிரி அமைப்பான பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளி அமைப்பு வலுவிழப்பதை ஹமாஸ் விரும்பியது. பின்னர் தமக்குச் சவால் விடக்கூடிய அளவிற்கு அல் சபிரின் வளர்வதையிட்டு ஹமாஸ் கரிசனை கொள்ள ஆரம்பித்தது. ஹிஷாம் சலீம் பல சிறு அமைப்புக்களையும் தனது அல் சபிரின் அமைப்புடன் இணைத்து வருகின்றார். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் அல் சப்ரின் பலஸ்த்தீனியர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு பிரபலம் அடையவில்லை என ஈரானும் ஹிஸ்புல்லாவும் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால் அல் சபிரினின் வளர்ச்சி மூலம் ஈரான் ஹமாஸிற்குத் தனது செய்தியைத் தெளிவு படுத்தியுள்ளது. அதாவது தனது நிதி மற்றும் படைக்கல உதவி பெறும் அமைப்பு தனது சொற்படி நடக்க வேண்டும் என்பதே அச்செய்தி. ஆனால் பலஸ்த்தீனியர்களுக்கு தேவையே இல்லாத ஒன்று என்று சொன்னால் ஹமாஸிற்கும் அல் சபிரினிற்கும் இடையிலான சகோதரப் போர் ஆகும்.


Thursday, 15 October 2015

இஸ்லாமியத் திவிரவாதிகள் இரசியாவிற்கு எதிராகத் திரும்புவார்களா?

இஸ்லாமிய அரசு அமைப்பு இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் புனிதப் போர் தொடுக்கும்படி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு ஒலிப்பதிவின் மூலம் விடுக்கப்பட்ட இந்த அழைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவைப் போர் தொடுத்துள்ள இரு நாடுகளுக்கும் எதிராக இஸ்லமிய இளைஞர்களைக் கிளர்ந்து எழும் படி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை சிரியக் கிறிஸ்த்தவப் பேராயர் Jean-Clément Jeanbart மேற்கு நாடுகள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் சிரியாவில் இரசியத் தலையீட்டையும் வரவேற்றுள்ளார்.

மக்களாட்சி வேண்டி அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக உருவான அரபு வசந்தப் புரட்சி சுனி - சியா முஸ்லிம்களிடையேயான மோதலாக மாறி பிராந்திய நாடுகளின் போட்டிக்களமாகி இப்போது வல்லரசு நாடுகளின் நிகராளி மோதல் (Proxy war) களமாகவும் உருவெடுத்ததுடன் இஸ்லாமிற்கும் கிறிஸ்த்தவத்திற்கும் இடையிலான முறுகல் களமாகவும் திரிவு பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்தே அங்கு வாழும் கிறிஸ்த்தவர்கள் அசாத்தின் ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். அசாத் சிரியாவில் ஒரு மதவாத ஆட்சியை நடத்தவில்லை. 

இரசியத் தலைநகர் மஸ்கோவில் ஐ எஸ் அமைப்பு எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினால் பயிற்றுவிக்கப்பட்ட தாக்குதலாளிகளைக் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2015 ஒக்டோபர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மஸ்கோவில் உள்ள ஒரு தொடர் வீட்டுத் தொகுதியில் FSB எனப்படும் இரசிய உளவுத் துறையினர் திடீரெனப் புகுந்து சோதனை நடத்திய போது பதினொரு இறாத்தல் எடையுள்ள வெடி பொருட்களைக் கைப்பற்றினர். இவை கைப்பேசிகளில் வைத்து வெடிக்கச் செய்யத் தயாரான நினையில் இருந்தது. இது தொடர்பாக பத்து முதல் பதினைந்து வரையிலானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அதில் மூவர் சிரியர்கள் ஆகும் என்கின்றது FSB எனப்படும் இரசிய உளவுத் துறை. மஸ்க்கோவின் தொடரூந்துப் போக்குவரத்தை இலக்கு வைத்து இவர்கள் தாக்குதல் செய்யவிருந்தனர் என்றது FSB. இரசியா சிரியாவில் 2015 செப்டம்பர் 30-ம் திகதி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்க முன்னரே இத் தாக்குதலாளிகள் இரசியாவிற்கு சிரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரசியாவில் இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள்.

இரசியாவின் North Caucasus பிராந்தியத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிரியா சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்து போராடுகின்றார்கள். இவர்களை சிரியாவில் வைத்து அழிப்பதும் இரசியப் படைகள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதின் ஒரு நோக்கமாகவும் கருதப்படுகின்றது.


இரசியாவின் செஸ்னியப் பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமியப் போராளியான Abu Omar al-Shishani இறப்பதற்கு முன்னர் தனது தந்தையிடம் ஐ எஸ் போராளிகள் இரசியாவிற்குப் படையெடுப்பார்கள் எனச் சூழுரைத்திருந்தார்.                                                                                                                             

சிரியப் படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவால் இரசியப் படைகள் சிரியாவில் தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் சதியைக் குழப்பி விட்டது. இரசியப் படையினர் சிரியாவில் சென்று இறங்கியதுடன் முதல் வேலையாக இந்த ஏவுகணைகளும் அவற்றின் செலுத்திகளும் நிலை கொண்ட இடங்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தின. அதனால் மேற்கத்தைய ஊடகங்கள் இரசியா ஐ எஸ் "பயங்கரவாதிகள்" மீது தாக்குதல் நடத்தாமல் மிதவாதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன என்று குற்றம் சாட்டின. அமெரிக்க ஆதரவு பெற்ற் Tajamu al-Ezzah அமைப்பினரின் மீது இரசிய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது பல சிரியர்களை ஆத்திரப்படுத்தியது. வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள Talbiseh நகரில் இரசிய விமானங்கள் நடாத்திய குண்டு வீச்சில் பதினேழு அப்பாவிக கொல்லப்பட்டனர். முதலில் எம்மை சிரிய அரச படைகள் கொன்றன. பின்னர் எம்மை ஹிஸ்புல்லா கொன்றது, அதைத்தொடர்ந்து ஈரானியப் படைகள் கொன்றன, இப்போது இரசியர்கள் எம்மைக் கொல்கின்றார்கள். அடுத்து எம்மைக் கொல்ல யார் வருவார்கள். இப்படி ஆத்திர்படுகின்றனர் சிரியர்கள்.

அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜபத் அல் நஸ்ரா அமைப்பினர் இரசியாவின் சிரியத் தலையீட்டை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான போராகப் பார்க்கின்றார்கள். இரசியாவின் மரபுவழித் திருச்சபை இரசியப் படைகளின் சிரியத் தலையீட்டை ஒரு புனிதப் போர் எனக்கருதுவதையும் அவர்கள் ஆத்திரத்துடன் கருத்தில் கொண்டுள்ளார்கள். மேலும் ஆப்கானிஸ்த்தானிலும் செஸ்னியாவிலும் இரசியப் படைகள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல் செய்தமையையும் அவர்கள் ஆத்திரத்துடன் நினைவு கூர்கின்றனர். ஐ எஸ் அமைப்பு மட்டுமல்ல அல் கெய்தா அமைப்பும் இரசியாவிற்கு எதிராகத் திரும்புகின்றது, சிரியாவில் செயற்படுக் ஜபத் அல் நஸ்ராவின் தலைவர் Abu Mohammed al-Jolani இரசியர்களைக் கொல்லும் படி த போராளிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். சிரிய அல் நஸ்ரா அமைப்பில் உள்ள இரசியரான Abu Ubaid al-Madan இரசியர்களுக்கான தனது காணொளிச் செய்தியில் சிரியாவில் இருக்கும் உங்கள் மைந்தர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். அல் நஸ்ராவைத் தொடர்ந்து. நைஜீரியாவில் செயற்படும் பொக்கொ ஹரம், சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் ஆகிய அல் கெய்தாவின் இணை அமைப்புக்களும் இரசியாவிற்கு எதிராகத் திரும்பலாம்.

Tuesday, 13 October 2015

துருக்கிக் குண்டு வெடிப்பு தேர்தலுக்கான சதியா?

துருக்கித் தலைநகர் அங்காராவில் தொழிற்சங்கங்களும் குர்திஷ் மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த சமாதானத்திற்கான ஊர்வலத்தில் இரண்டு குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததால் 95 பேர் கொல்லப்பட்டனர் இருநூற்றைம்பதிற்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டனர். ஊர்வலத்தின் நோக்கம் குர்திஷ்ப் போராளிகளுக்கும் துருக்கிப் படையினருக்கும் இடையில் நடக்கும் மோதலை நிறுத்த வேண்டும் என்பதாகும். அங்காராவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து நகரின் பல பகுதிகளூடாக ஊர்வலம் செல்ல ஏற்பாடாகி இருந்தது. ஊர்வலம் ஆரம்பிக்கும் வேளையில் குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அவசர சேவைகள் குண்டு வெடிப்புக்கள் நடந்த இடத்திற்கு செல்ல விடாமல் அரச படையினர் தடுத்ததாக ஊர்வலத்தில் சென்றவர்கள் குற்றம் சாட்டினர். துருக்கியில் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டு வெடிப்புக் காரணம் அரசுதான் என ஆத்திரப்பட்ட ஊர்வலத்திக் கலந்து கொண்ட மக்களில் சிலர் காவற்துறையினர் மீது தாக்குதல் நடாத்தினர்.

துருக்கியின் தலைமை அமைச்சர் அஹ்மட் டவுடொக்லு அவர்கள் இது ஒரு தற்கொடைத் தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். துருக்கி அரசு ஐ எஸ் போராளிகள் செய்த தற்கொடைத் தாக்குதல் எனச் சொல்கின்றது.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துருக்கியில் செயற்படும் குர்திஷ் மக்கள் தொழிலாளர் கட்சியினர் ஒருதலைப்பட்டமான போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனாலும் அவர்களது நிலைகள் மீது தொடர்ந்தும் துருக்கிய விமானப் படையினர் தாக்குதல்கள் நடத்துகின்றனர். குண்டு வெடிப்பைச் சாட்டாக வைத்துக் கொண்டு வலதுசாரி தேசியக் கட்சியினர் குர்திஷ் மக்கள் மீது தாக்குதலக்ள் செய்கின்றனர். குர்திஷ் மக்களின் உடமைகள் கொள்ளையிடபட்டன தீக்கிரையாகக்ப்பட்டன. இத்தாக்குதல்கள் குர்திஷ் தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்படு ஊக்க ஊதியம்.
முச்சந்தியில் துருக்கி
ஆசியா ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கு நடுவிலும் ஐரோப்பியர், அரபுக்கள், ஈரானியர் ஆகிய மூன்று ஒன்றுடன் ஒன்று முரண்படும் இனங்களுக்கு மத்தியிலும் துருக்கி இருக்கின்றது. சுனி இஸ்லாமியர், சியா இஸ்லாமியர், குர்திஷ் மக்கள் ஆகிய மூன்று ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருக்கும் பிரிவினருக்கு மத்தியில் துருக்கி இருக்கின்றது. ஈரான், ஈராக், சிரியா ஆகிய மூன்று ஐ எஸ் அமைப்பினருடன் மோதும் நாடுகளுடன் துருக்கி எல்லைகளைக் கொண்டுள்ளது. சிரியாவில் இருந்து பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

நேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார்.

துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார்.  550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. இந்தத் தோல்விக்குக் காரணம் துருக்கிய இடதுசாரிகளும் குர்திஷ் இன மக்களும் இணைந்து செயற்பட்டமையே. துருக்கியின் அரசமைப்பை மாற்றித் தனனை ஒரு பல அதிகாரம் கொண்ட ஒரு அரசத் தலைவராக மாற்ற எர்டோகன் எடுத்த முயற்ச்சி தோல்வி கண்டது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன.  
வாக்காளர்கள் தவறு செய்து விட்டனர் அடுத்த தேர்தலில் அவர்கள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் எனச் சொன்ன எர்டோகன் மறு தேர்தலுக்கு 2015 நவம்பர் முதலாம் திகதி மறுதேர்தலுக்கு உத்தரவிட்டார்.

எர்டோகன் தனது Justice and Development Party (the AKP) கட்சியால் மட்டுமே உறுதியான ஓர் ஆட்சியை உருவாக்க முடியுன் என்கின்றார்

மீண்டும் இடதுசாரிகளும் குர்திஷ் மக்களும் இணைவது எர்கோடனுக்கு உகந்த ஒன்றல்ல. சிலர் அரச உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றனர். சிலர் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர். அண்மைக் காலங்களாக நாட்டில் ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதற்கு அதிபர் ரிசெப் ரய்யிப் எர்டோகான்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குர்திஷ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை துருக்கியர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு ரிசெப் ரய்யிப் எர்டோகான் முயல்கின்றார் எனவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

துருக்கியில் குர்திஷ் மக்களுக்கு எதிராக துருக்கியிலும் ஈராக்கிலும் சிரியாவிலும் செய்யும் தாக்குதல்களால் அவர்கள் தீவிரவாதத் தாக்குதலை துருக்கியில் செய்ய அது துருக்கியப் பேரினவாதிகளையும் தேசியவாதிகளையும் தனது நீதிக்கும் அபிவிருத்துக்குமான கட்சிக்கு ஆதரவு வழங்கச் செய்யும் என எர்டோகன் மனதில் வைத்துச் செயற்படுகின்றார் எனவும் சிலர் வாதிருகின்றனர்.

ஆரம்பத்தில் துருக்கியப் பொருளாதாரத்தையும் அதன் படைத்துறைவலுவையும் பெரிதளவு அபிவிருத்தி செய்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரிசெப் ரய்யிப் எர்டோகான் பின்னர் ஒரு சர்வாதிகாரி போல் மாற்றம் பெற்றார். அதன் அடுத்த கட்டமாக தலைமை அமைச்சரின் ஆட்சியின் கீழ் இருக்கும் துருக்கியை அதிபர் ஆட்சிக்கு மாற்றி தனது அதிகாரத்தை அதிகரிக்கும் எண்ணம் அவரது மதிப்பை மக்கள் மத்தியில் குறைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தவுடன் நாடெங்கும் மக்கள் கொதித்து எழுந்தர்க்ள். இதனால் சமூக வலைத்தளங்கள் துருக்கிக் குண்டு வெடிப்புத் தொடர்பான செய்திகள் தடை செய்யப்பட்டு விட்டன. எர்டோகானின் ஊடக அடக்கு முறை உலகறிந்த ஒன்றாகும். துருக்கியின் விருது பெற்ற ஊடகவியலாளர் ஒருவர் எர்டோகனைப் பற்றிக் கேலி செய்து எழுதியமைக்காகத் தண்டிக்கப்பட்டார். நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி ஊடகங்களை அடக்கி தேர்தலில் குழறுபடி செய்வது இப்போது பல நாடுகளில் செய்யப்படுகின்றன. அது துருக்கித் தேர்தலிலும் நடக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...