Monday, 26 October 2015

இரசியக் குண்டு வீச்சிலும் சிரியப் படைகள் பின் வாங்குகின்றனவா?


இரசிய விமானங்களில் இருந்தும் உழங்கு வானூர்திகளிலும் இருந்தும் செய்யப் படும் குண்டு வீச்சுக்கள் மத்தியில் சிரிய அரச படைகள் எதிரிகள் மீது தரைவழித் தாக்குதல் நடாத்தி முன்னேறாமல் இருப்பது இரசியப் படைத்துறை நிபுணர்களை விரக்தியடைய வைத்துள்ளது. சிரியாவில் நடந்த படைத்துறை நிபுணர்களின் கூட்டம் ஒன்றில் ஈரானிய நிபுணர்கள் சிரியப் படையினர்மீது பெரும் கூச்சலிட்டுக் குற்றம் சுமத்தினர்.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைத் தக்க வைக்க அவரது சிரிய அரபுப் படை என்னும் பெயர் கொண்ட அரச படைகளுடன் இரசியப் போர் வீரர்கள் இரண்டாயிரம் பேர், லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரானியப் படைகள் ஆகியவை போர் புரிகின்றன. 2015 செப்டம்பர் 30-ம் திகதியில் இருந்து இரசியப் போர் விமானங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போர் புரியும் அமைப்புக்களின் நிலைகள் மீது குண்டுகளை வீசி வருகின்றன.

மூன்று இலட்சம் உயிர்களைப் பலிகொண்டும் பத்து இலட்சம் பேருக்கு மேற்பட்டோரை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் இரசியத் தலையீடு நிலைமை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றது. இரசியா நேரடியாகத் தலையிட முன்னர் இருந்தே ஐக்கிய அமெரிக்கா நான்கு வகைகளில் சிரியப் போரில் தலையிடத் தொடங்கி விட்டது.

முதலாவது நேரடியாக ஐ எஸ் அமைப்பின் நிலைகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல் செய்வது. ஓராண்டுகளாகச் செய்யும் தாக்குதல் பெரியளவில் ஐ எஸ் அமைப்பினருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

 இரண்டாவது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் சுதந்திர சிரியப் படை என்னும் அரச எதிர்ப்புக் குழுவினருக்கும் அதன் ஆதரவுக் குழுவினருக்கும் ஐந்து மில்லியன் டொலர் செலவில் பயிற்ச்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது.  இக்குழுக்களிடையே இருந்து போராளிகளைத் தெரிவு செய்து பயிற்ச்சியளித்து துருக்கி ஊடாக  அனுப்பப் பட்ட 60 போராளிகள் சிரியாவிற்குள் நுழைந்தவுடன் அவர்கள் மேல் சிரியக் கிளர்சிக் குழுக்களில் ஒன்றான  ஜபத் அல் நஸ்ரா அவர்கள் மீது ஓர் அதிரடித் தாக்குதல்களைச் செய்தது. முதலாவது தாக்குதலில் அவர்களின் தலைவரான நதீம் அல் ஹஸன் உட்படப் 18 பேரைக் கைப்பற்றிக் கடத்திச் சென்றது. அவர்களிடமிருந்து படைக்கலன்கள் பாதுகாப்பு வண்டிகளையும் தனதாக்கியது. இரண்டாவது தாக்குதலில் ஐந்து பேரைக் கொன்று 16பேரைப் படுகாயப் பட்டுத்தியது. அமெரிக்கா சிரியாவிற்கு பயிற்ச்சி கொடுத்து அனுப்பிய இன்னும் ஒரு தொகையினர் அரச படைகளிடம் சரணடைந்தனர். இத்துடன் பெண்டகன் தனது 500மில்லியன் பயிற்ச்சியும் படைக்கலன் வழங்குதலும் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தது.

மூன்றவதாக அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களுக்கு படைக்கலங்களை வழங்குதல்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய BGM-71 TOW என்னும் ஏவுகணைகளே சிரியாவில் அரச படைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தன.  இந்த ஏவுகணைகளுக்கு அசாத்தை அடக்கிகள் எனப் பெயரிடப்பட்டன. சிரியாவின் வடபிராந்தியத்தில் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பெரிதும் பயன்படுத்தினர். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பாவிக்கும் காணொளிகள் யூரியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அரச படையினரின் இரசியத் தயாரிப்பு தாங்கிகளையும் கவச வண்டிகளையும் துவம்சம் செய்தனர். இந்த ஏவுகணைகளைப் பாவிக்கத் தொடங்கிய முதல் நாளிலேயே 24 தாங்கிகளும் கவச வண்டிகளும் கிளர்ச்சிக்காரர்களால் அழிக்கப்பட்டன.  BGM-71 TOW என்னும் ஏவுகணைகள் சவுதி அரேபியாவின் படைக்கல இருப்பில் இருந்தே துருக்கியூடாக கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட படைக்கலன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு கவனமாகத் திட்டமிடப்பட்டே வழங்கப்படுகின்றன. அவர்கள் ஒரு முழுமையான வெற்றி ஈட்டி அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றாமல் அசாத்தின் படைகளுக்கு இழப்பை ஏற்படுத்தி ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசத் பதவியில் இருந்து விலகுவதை அமெரிக்கா விரும்பியது. சிஐஏயின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சிரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தையை மையப்படுத்தியதாக இருந்தன.  எண்பதுகளில் சோவியத் படைகளுக்கு எதிராக சிஐஏ முஜாஹிதீன் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய Stinger என்னும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சோவியத்தை நிலை குலையச் செய்தது போல் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்குக் கொடுத்த BGM-71 TOW ஏவுகணைகள் சிரியப் படைகளைத் திக்கு முக்காட வைத்தன.

 நான்காவதாக ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் போராளி அமைப்புக்கும் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களை வழங்கியது. ஆனால் துருக்கி தனது எல்லையில் குர்திஷ் மக்கள் தமது கட்டுப்பாட்டில் ஒரு பிராந்தியத்தையும் படையினரையும் வைத்திருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. ஐ எஸ் போராளிகள் வெற்றி பெறுவதையே துருக்கி விரும்பியது.சிரியாவில் உள்ள எல்லாப் போராளிக் குழுக்களிலும் சிறந்த முறையில் போராடுவது குர்திஷ் பெண்போராளிகளே.



இரசியப் படைகள் சிரியவினுள் வந்த பின்னர் சிஐஏ தனது ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் படைக்கலன்களின் அளவை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. இவையாவும் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா  விற்பனை செய்யும் படைக்கலன்களில் இருந்தே செல்கின்றன. இதனால் அமெரிக்காவின் வருமானம் அதிகரிக்கின்றது. அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு எதிராக இப்போது ஐ எஸ் அமைப்போ  அல்லது ஜபத் அல் நஸ்ரா அமைப்போ தாக்குதல்கள் நடாத்துவது குறைவு. இரசியத் தலையீடு இவர்களுக்கு இடையிலான போரை நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தி முன்னேறி வருகின்றனர். லதக்கியாவில் தங்கியுள்ள மூன்று இரசியப் படையினரும் இவர்களின் எறிகணை வீச்சால் கொல்லப் பட்டுள்ளனர் என வெளிவந்த செய்தியை இரசியா மறுத்துள்ளது. அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படையினருக்கு மேற்கு நாடுகளினதும் பல அரபு நாடுகளினதும் உளவுத் துறையினர் பெருமளவில் உதவி செய்கின்றனர். சவுதி அரேபியா குரோசியாவிடமிருந்து வாங்கிய RBG-6 என்னும் பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் இப்போது கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


இரசியப் படைகள் சிரியா வந்த பின்னர் சுதந்திர சிரியப்படையினர் Meaar Kabi, Lahaya ஆகிய இரு நகரங்களை அரச படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த இரசியப் படையினர் இவர்களின் மருத்துவ மனைமீது தாக்குதல்களை நடாத்தியதாகக் கிளர்ச்சிக் காரர்கள் தெரிவித்தனர்.

அலெப்பே பிராந்தியத்தில் ஐ எஸ் போராளிகள் பல முனைகளில் சிரியப் படைகளைக் குழப்பும் விதத்தில் தாக்குதலைத் தொடுத்து சில பகுதிகளில் முன்னேறி சிரியப் படைகளை விரட்டியடித்தனர். மஸ்கோவில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்த விளடிமீர் புட்டீன் சிரியப் படைகளின் தரை நகர்வை வலியுறுத்தினார். அவரைச் சந்தித்த பின்னர் எகிப்த்தின் அல் சிசி, சவுதி அரசர் சல்மன், ஜோர்தானிய அதிபர் அப்துல் ஃபட்டா, துருக்கியத் தலைமை அமைச்சர் எர்டோகன போன்ற சுனி முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இரசிய விமானங்கள் ஒக்டோபர் 23-ம் திகதிவரை 934 பறப்புக்களைச் (sorties) செய்து "பயங்கரவாதிகளின்" 819 நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தியுள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப காத்திரமான முன்னகர்வுகள் எதையும் சிரிய அரச படைகள் செய்யவில்லை. இரசிய வான் தாக்குதல்களுக்குப் பின்னர் தரை நகர்வு செய்யும் சிரியப் படைகளுக்குக் காத்திருப்பவை நிலக் கண்ணி வெடிகளும் இரசியத் தயாரிப்பு Konkurs ஏவுகணைகளும் அமெரிக்காவின் சிஐஏ வழங்கிய TOW ஏவுகணைகளும் ஆகும். இரசிய விமானிகள் பாலைவனப் புழுதியில் விமானங்களை ஓட்டுவதற்குச் சிரமப் படுகின்றார்கள் தாக்குதல் விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அடிக்கடி இடையில் தமது பறப்புக்களைத் திசை மாற்றி தளம் திரும்புகின்றன. படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் விமானங்களில் பாதி தமது பறப்பை முழுமையாக மேற்கொள்ளாமல் இடையில் திரும்புகின்றன. இரசிய விமனங்களிற்கான உதிரிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றன. அமெரிக்கப் படைத்துறையினர் தமது விமானங்கள் 80 விழுக்காடு பறப்புக்கள் முழுமையாக நடக்கின்றன என்கின்றனர்.

அமெரிக்காவின் தரைநகர்வு ஆதரவு விமானங்களான சுடுதிறன்மிக்க  A-10 Warthogs துருக்கியில் வந்து இறங்கியுள்ளன. இவை சிரியக் குர்திஷ் போராளிகள் ஐ எஸ் அமைப்பினரின் சிரியத் தலைமையகம் இருக்கும் ரக்கா நகரைக் கைப்பற்ற உதவி செய்யும். இவர்களுடன் சிரிய கிறிஸ்த்தவப் போராளிகளும் இணைந்து கொள்வார்கள்.

இரசியப் படைகள் சிரியாவிற்கு வரும்வரை இஸ்ரேல் அசாத் ஆட்சியில் இருப்பதை விரும்பியது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைகளிற்கு சிரியா போவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆனால் இரசியப் படையினரின் வருகையின் பின்னர் இஸ்ரேல் கலக்கமடைந்துள்ளது. ஒன்று சிரியா கோலான் குன்றுகளைக் கைப்பற்றுமா என்ற அச்சம். மற்றது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிக படைக்கலங்களை லெபனானிற்கு எடுத்துச் செல்லப் போகின்றார்கள் என்ற அச்சம். 

இந்தப் பன்னாட்டுத் தலையீடுகள் சிரியப் போரை எந்த விதத்திலும் முடிவுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு ஒரு விடிவையோ விமோசனத்தையோ தரப்போவதில்லை. மாறாக சிரியா பல துண்டுகளாகப் பிளவுபடப்போகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...