Wednesday, 28 October 2015

சீனாவின் தீவுகளுக்கு சவால் விடச் சென்ற அமெரிக்க நாசகாரிக் கப்பல்

தென் சீனக் கடலின் பவளப் பாறைகள் மீது கடலடி மணலை வாரி இறைத்து சீனா உருவாக்கிய தீவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. ஸ்பிரட்லித் தீவுக்  கூட்டத்தில்
(Spratly Island chain ) உள்ள Subi and Mischief reefs என்னும் பவளப்பாறைகளில் உருவாக்கப் பட்ட தீவுகளைச் சுற்றி உள்ள 12 கடல் மைல்கள் கொண்ட கடற்பரப்பு தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என சீனா தெரிவித்திருந்தது.  

ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல் நீளக் கடற்பரப்பு  அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். கடல் வற்றும் போது தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கியும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது. ஏற்கனவே தமக்குச் சொந்தமான தீவை நாம் மேடுறுத்தியுள்ளோம் என்கின்றனர் சீனர்கள். ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தை சீனர்கள் Nansha Islands என அழைக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் முன்னரே சீனா தென் சீனக்கடல் தன்னுடையது எனச் சொல்லியிருந்தது. 1980களில் சீனர்கள் அங்கு குடியிருந்தார்கள்.

இரசியா கிறிமியாவில் செய்தது நில அபகரிப்பு என்றும் சீனா தென் சீனக் கடலில் செய்வது கடல் அபகரிப்பு என்றும் சொல்கின்றனர் அமெரிக்கர்கள்.

தென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா ஒரு வலிமை மிக்க நாசகாரிக் கப்பலை அனுப்பியது தென் சீனக் கடல் தொடர்பாக அதன் உறுதிப் பாட்டை எடுத்துக் காட்டுகின்றது என்றனர் படைத் துறை ஆய்வாளர்கள்.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும்  ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா
கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி  அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனும்தி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது.  அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம்  சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களை சீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன.  தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா?

2015-ம் ஆண்டு ஒக்டோபர் 27-ம் திகதி உள்ளூர் நேரம் காலை 06-40இற்கு அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் USS Lassen தனது ஆதிக்கக் கடற்பரப்பினுள் வந்தமை சட்ட விரோதமானது என்றும் தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தாலனது என்றும் சீன அதிகாரிகள் சினத்துடன் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா  தனது சுதத்திரக் கடற்பயண நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது. பன்னாட்டு விதிகளுக்கு ஏற்ப "ஒழுங்கை" நிலைநாட்டுவது தமது பணி என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் படைத்துறை உயர் அதிகாரிகள் இப்படி நாசகாரிக் கப்பல்களை அனுப்புவது சீனாவின் தீவு கட்டும் பணியைப் பாதிக்காது என்கின்றனர்.

போர் தொடுக்க முடியாத பங்காளிகள்
சீனாவின் மிகப்பெரிய வர்தகப் பங்காளி அமெரிக்காவாகும். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கும் அணுப் படைக்கலன்களின் பரவலாக்கத் தடைக்கும் சீனா பங்காளியாகும்.  அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஒஸ்ரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தாய்வான் சீனாவின் ஸ்பிர்ட்லி தீவிக் கூட்டங்களுக்கான உரிமையை நிராகரித்துள்ளது.  கடந்த 18 மாதங்களாகா சீனா இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தில் மீட்டுள்ளது. தென் சீனக் கடலை ஒட்டிய மற்ற நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலால் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பராட்டுகின்றன. இரு பெரும் வர்த்தகப் பங்காளிகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிவதைத் தவிர்க்கும். தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு தீவை நிர்மாணித்தால் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கும்? அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்தை நோக்கிய நகர்வு பசுபிக் நாடுகளுடன் செய்து கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தத்தால் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது. நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை கூட்டணியும் அங்கு உருவாகும் போது சீனாவின் நிலை மேலும் சிக்கலாகும். 

அமெரிக்கத்தூதுவரை அழைத்த சீனா
சீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது. 

தென் சீனக் கடலின் 80 விழுக்காடு கடற்பரப்பை சீனா தன்னுடையது என அடம் பிடிப்பதற்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஹொலண்ட் நகர் ஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பாயத்திற்கு தென் சீனக் கடல் தொடர்பாக விசாரிக்கும் நியாய ஆதிக்கம் இல்லை என்றது சீனா. ஆனால் 22015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29-ம் திகதி Permanent Court of Arbitration  தீர்ப்பாயத்திற்கு விசாரிக்கும் உரிமை உண்டு எனத் தீர்மானித்துள்ளது. அதன் தீர்ப்புக்கு சீனா கட்டுப்படவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.  இறுதித் தீர்ப்பு 2016-ம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவரும்.  ஆனால் அதன் தீர்ப்பிற்ற்கு சீனா கட்டுப்படுமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...