Sunday, 2 November 2014

அமெரிக்காவின் அளவுசார் தளர்ச்சியும்(Quantitative Easing) பொருளாதார வளர்ச்சியும்

2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தில் அளவுசார் தளர்ச்சியைச் செய்து வந்த ஐக்கிய அமெரிக்கா 29-10-2014இல் இருந்து அதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. 2008-ம் ஆண்டிற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி(Federal Reserve) எண்ணூறு பில்லியன் டொலர்களுக்குக் குறைவான ஆவணங்களை (Bonds)மட்டும் வைத்திருந்தது. 2008இல் இருந்து அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) செய்யவதற்காக தொடர்ந்து ஆவணங்களை வாங்கிக் குவித்ததால் அமெரிக்க மைய வங்கியிடம் இப்போது நான்கரை ரில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்கா தனது பொருளாதாரத்தை தூண்டி வளரச்செய்ய எடுத்த இந்த முயற்ச்சியான அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.

அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்தியவுடன் உலகின் முன்ன்ணி நாணயங்களான யூரோ, பவுண்ஸ், யென் ஆகியவற்றிற்கு எதிராக டொலர் பெறுமதி ஏற்றம் அடைந்தது. 600 பில்லியன் டொலர்களுக்கு ஆவணங்கள் வாங்கப்பட்டால் அது நீண்டகாலக் கடன்களுக்கான வட்டிவிழுக்காட்டை 0.15 முதல் 0.25 வரை குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மையவங்கியானது தனது வட்டி விழுக்காட்டை (federal funds rate) 0.75 முதல் ஒரு விழுக்காடுவரை குறைப்பதற்கு ஒப்பானதாகும். பன்னாட்டு நாணய நிதியம்(IMF) செய்த மதிப்பீடு இப்படிக் கூறுகின்றது: 

“In the US, the cumulative effects of bond purchase programs are estimated to be between 90 and 200 basis points
(0.9 and 2 percentage points) . . . In the UK, cumulative effects range from 45 basis points to 160 basis points.”

என்ன இந்த அளவுசார் தளர்ச்சி?
நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்ட நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாட்டில் வட்டி விழுக்காடு குறைக்கப் பட வேண்டும். வட்டி விழுக்காட்டைக் குறைக்க மைய வங்கி குறுங்காலக் கடன் பத்திரங்களை(ஆவணங்கள்) வர்த்தக வங்கிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) என அழைப்பர். இதைத் தொடர்ந்து செய்ய பொருளாதாரம் வளர்ச்சியடையலாம். இப்படி நாட்டின் வட்டி விழுக்காடு குறைந்து சென்று பூச்சியத்தை அண்மித்தும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாவிடில் மைய வங்கி நீண்டகாலக் கடன் பத்திரங்களை வர்த்தக வங்கிகளிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை அளவுசார் தளர்ச்சி என்பர். இதனால் நீண்டகால வட்டி விழுக்காடு வீழ்ச்சியடையும்.

அளவுசார் தளர்ச்சி எப்படி வேலை செய்கின்றது?விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) நாட்டில் பணத்தின் விலையை (அதாவது வட்டி விழுக்காட்டைக்) குறைக்கும். அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மைய வங்கி நாட்டில் ஆவணங்களை(அரசக் கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கும்போது ஆவணங்களின் விலை அதிகரிக்கும். இதனால் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் உறுதிறன் (வருமான விழுக்காடு yield) குறையும். இதனால் முதலீட்டாளர்கள் 9முக்கியமாக வர்த்தக வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியங்கள்) இந்த ஆவணங்களை வாங்குவதைத் தவிர்த்து வேறு துறைகளில் முதலீடு செய்வார்கள். மைய வங்கியிடம் ஆவணங்களை விற்றுப் பெற்ற பணத்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலக் கடனாக உற்பத்தி நிறுவனங்கள், கட்டிடம் கட்டும் நிறுவனங்கள், பொதுமக்கள் இப்படிப் பலதரப்பினருக்கு கொடுக்க முடியும். மைய வங்கிக்கு ஆவணங்களை விற்ற தனியார் நிறுவனங்கள் தமக்குக் கிடைத்த பணத்தை பொருளாதாரத்தில் முதலீடு செய்வர். இதனால் பங்குகளின் விலைகள் அதிகரிக்கும். நாட்டில் முதலீடு அதிகரித்து உற்பத்தி வேலை வாய்ப்பு என்பன அதிகரிக்கும். இது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனால் அவர்கள் செலவு செய்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் மேலும் அதிகரிக்கும்.


அமெரிக்கா என்ன செய்தது?
2008-ம் ஆண்டு நவம்பரில் இருந்து ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி (Federal Reserve) ஈட்டுக்கடன் ஆவணங்களை வாங்கத் தொடங்கியது. இதனால் அதனது ஆவண இருப்பு800 பில்லியன் டொலர்களில் இருந்து  1.75 ரில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தொடர்ந்து செய்த ஆவணக் கொள்வனவால் 2010 ஜூனில் ஆவணக் கையிருப்பு 2.1 ரில்லியன் டொலர்களாக உயர்ந்தது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற படியால் ஆவணக் கொள்வனவு நிறுத்தப்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை என உணர்ந்ததால் பின்னர் மாதம் தோறும் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இரண்டாம் சுற்று ஆவணக் கொள்வனவு 2010 நவம்பரில் செய்யப்பட்டது. இதில் 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான திறைசேரிக் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதிலும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாததால் 2012 செப்டம்பரில் மூன்றாம் கட்ட அளவுசார் தளர்ச்சி செய்யப்பட்டது. இதில் மாதம் தோறும் 40 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களை அமெரிக்க மைய வங்கி வாங்க முடிவு செய்தது.

 அமெரிக்க மைய வங்கியின் அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்காவில் 2008 அளவுசார் தளர்ச்சியை ஆரம்பித்து வைத்த அமெரிக்க மைய வங்கியில் முன்னாள் பென் பேர்னார்க் "Quantitative Easing works in practice but does not work in theory" என்றார் நகைச்சுவையாக.

அமெரிக்காவில் செய்யப்பட்ட அளவுசார் தளர்ச்சிக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துக்கள்:


1. அளவுசார் தளர்ச்சி 2008இல் உருவான பொருளாதாரச் சரிவு (recession) பொருளாதாரம் மந்த (depression)நிலையை அடைவதைத் தடுத்தது.
2. அளவுசார் தளர்ச்சி நாட்டில் விலைவாசி அளவிற்கு அதிகமாக வீழ்ச்சியடைவதைத் தடுத்தது.
3. அளவுசார் தளர்ச்சி விலைவாசியை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
4. அளவுசார் தளர்ச்சி  நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரித்தது.
5. அளவுசார் தளர்ச்சி மிகைப்பணவீக்கத்தைக்(hyper inflation) கொண்டு வரும் என்ற கூற்றுப் பொய்யாக்கப்பட்டுள்ளது.
6. அளவுசார் தளர்ச்சி அமெரிக்க டொலரின் பெறுமதியை உயர்த்தியது.

அமெரிக்க மைய வங்கி எப்போது ஆவணங்களை விற்கும்?

அமெரிக்க மையவங்கி வாங்கிக் குவித்துள்ள ஆவணங்களை விற்க வேண்டும். அதன் கால அவகாசம் வரும்போது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும். இதைச் செய்யும் போது நாட்டில் மீண்டும் வட்டி விழுக்காடு அதிகரிக்கும். அமெரிக்கா 2015-ம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குப் பின்னர்தான் ஆவணங்களை விற்பது பற்றி யோசிக்கும்.

ஜப்பானில் தொடரும் அளவுசார் தளர்ச்சி
அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்துவதாக அறிவித்த மறுநாள் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சியைச் செய்யப் போவதாக அறிவித்தது. இதுவரை மாதம் தோறும் அறுபது முதல் எழுபது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கி வந்த ஜப்பானின் மைய வங்கி இனி மாதம் ஒன்றிற்கு எண்பது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கப் போவதாக முடிவு செய்துள்ளது. ஜப்பானில் பணவிக்கம் இரண்டு விழுக்காடாக  இப்போதைக்கு அதிகரிக்கப் போவதில்லை என உணரப்பட்டதாலேயே இந்த அளவுசார் தளர்ச்சி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இது ஜப்பானிய ஏற்றுமதியை ஊக்குவிக்கலாம். பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சி செய்யப் போவதாக அறிவித்ததால் அமெரிக்காவில் பங்கு விலைகள் உயர்ந்தன.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அளவுசார் தளர்ச்சி பொருளாதாரம் சரிவு நிலையிலும், பணவிக்க்கம் வலுவிழந்த நிலையிலும் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலும் சிறப்பாக வேலை செய்யும் என அமெரிக்க மைய வங்கி நிரூபித்து விட்டது என இப்போது நம்பலாம். 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி 3.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்திருந்த 3 விழுக்காட்டிலும் அதிகமானதாகும்.  அளவுசார் தளர்ச்சியின் செயற்படு திறனை சரியாக அறிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் எடுக்கும்.

பிரித்தானியாவின் கசப்பான அனுபவம்
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானிய மைய வங்கி அளவுசார் தளர்ச்சியை மேற் கொண்டது. 375 பில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆவணங்களை அது வாங்கியது. இதனால் ஆவணங்களின் உறுதிறன் குறைந்தது. இது பல ஓய்வூதிய நிதியங்களைப் பாதித்தது. இந்த ஓய்வூதி நிறுவனங்களின் பற்றாக் குறை 312பில்லியன்களை எட்டியது.


செல்வந்தர்களுக்கு மட்டும் இலாபம்
ஆவணங்களை மைய வங்கி வாங்கும் போது அதன் விலை அதிகரிப்பால் செல்வந்தர்கள் இலாபம் அடைவார்கள். வட்டி விழுக்காடு குறைவதால் சிறு சேமிப்புக்களைச் செய்துள்ள வறியவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

Monday, 27 October 2014

சீனாவின் பளபளக்காத பட்டுப் பாதை

சீனாவின் கப்பல் போக்குவரத்து மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதில் உலகிலேயே சிறந்த கப்பல் கட்டுமானிகளாக சீனர்கள் இருந்தனர். 11-ம் நூற்றாண்டிலேயே சீனாவிடம் 52,000 கடற்படையினர் இருந்தனர். இவர்களின் முக்கிய பணி சீனாவின் கடல் வர்த்தகத்தைப் பாதுகாப்பதே. சீனாவின் கடல் வாணிபப் பாதை பட்டுப் பாதை எனப்படும். சீனா முக்கியமாக பட்டை ஏற்றுமதி செய்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்று சீனா கணனிகளை ஏற்றுமதி செய்தாலும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்தாலும் அவை போகும் பாதை பட்டுப்பாதை எனப்படுகின்றது. இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனக் கடற் பட்டுப்பாதை  4,000 மைல்கள் (6,437 கிலோ மீட்டர்கள்) நீளமானதாக இருந்தது. இந்தப் பட்டுப்பாதை கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான வர்த்தகப்பாதையக  மட்டுமல்ல ஒரு கலாச்சாரப் பரிவர்த்தனைப் பாதையாகவும் இருந்தது.

கடல் மாறும் தடங்கள்
சீனாவின் பட்டுப்பாதை இந்திய உப கண்டம், பாரசிகம்(ஈரான்) அரபு நாடுகள் ஆகியவற்றை இணைத்தது. ரோமாபுரியுடனும் வர்த்தகத்தை உருவாக்கியது. சீனாவின் பட்டு, தேயிலை, மட்பாண்ட்கள்  போன்றவை உலகெங்கும் விரும்பப்பட்டன. பின்னர் சீனக் கண்டு பிடிப்புக்களான காகிதம், அச்சுப்பொறி, வெடிமருந்து, திசையறிகருவி ஆகியவையும் உலகெங்கும் விரும்பப்பட்டன. டொமினோ போன்ற பல மேசை விளையாட்டுக்கள் கூட சீனவில் உருவாக்கப்பட்டவையே. 1500 ஆண்டில் உலக மொத்த உற்பத்தியின் 35 விழுக்காடு சீனாவினுடையது. அப்போது ஐரோப்பாவின் உற்பத்தி 17 விழுக்காடு மட்டுமே. ஆசிய நாடுகளின் உற்பத்தி உலக உற்பத்தியில் 77விழுக்காடு. இந்த நிலை மீண்டும் உருவாகும் நிலை இப்போது உருவாகியுள்ளது. அட்லாந்டிக் பெருங்கடலை ஒட்டி இருந்த அதிகாரப் போட்டி இப்போது பசுபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் மக்கள் தொகை 742.5மில்லியன்கள். ஆசியாவின் மக்கள் தொகை 4,427 மில்லியன்கள்.

மாற்றுக்கு மாற்று
தனது எரிபொருள் கொள்வனவு மாலாக்கா நிரிணையில் தடுக்கப்பட்டால் பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் இருந்து ஒரு தரைவழிப்பாதையையும், அதுவும் தடைபட்டால் பாங்களாதேசத்தின் சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து ஒரு தரைவழிப்பாதையையும் அதுவும் தடைபட்டால் பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து ஒரு தரவழிப்பாதையையும் இவை எல்லாம் தடைபட்டால் மத்திய ஆசியாவினூடான ஒரு விநியோகப்பாதையையும் அமைத்துள்ளது சீனா. தனது மூலப் பொருள்களுக்கே இத்தனை மாற்றுப் பாதைகளை உருவாக்கிய சீனா தனது ஏற்றுமதிகளுக்கு மாற்றுப் பாதைகளைத் தேடுவது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. திட்டமிடலில் சிறந்த சீனர்கள் மாற்றுவழிகளைத் தேடுவதிலும் முனைப்புக் காட்டுவது இயல்பே.

பட்டுப்பாதையல்ல முள்ளுப்பாதை
சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. சீன ஏற்றுமதியில்  பெரும்பகுதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கின்றது. சீனாவிற்கும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்துச் செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் நாளொன்றிற்கு ஒரு பில்லியன் யூரோ நாணயம் பெறுமதியானதாகும். சீனப் பொருட்கள் கடற்பாதையூடாக ஐரோப்பாவிற்குச் செல்வதாயின் மலாக்கா நிரிணையைக் கடந்து இந்து மாகடல் கடந்து சென்று ஏடன் வளைகுடாவுடாகச் சென்று சூயஸ் கால்வாயையும் கடந்து சென்று கிப்ரல்டர் நீரிணையில் (Strait of Gibraltar) புகுந்து இரு வல்லரசுகளான பிரான்சிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஊடாகப் பயணித்து ஐரோப்பாவை அடைய வேண்டும். இதற்கு சிங்கப்பூர், கொழும்பு, கெய்ரோ, லிஸ்பன்(போர்த்துகல்) ஆகிய துறைமுகங்கள் முக்கியமானவையாகும். சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கும் இந்தப் பாதையை புதிய பட்டுப்பாதை என அழைக்கிறார்கள். ஆனால் சீனாவின் பட்டுப்பாதை பட்டுப் போன்ற பாதை அல்ல. உலகின் மிக மோசமான திருகுப் புள்ளிகளைக் (choke points)  கொண்ட பாதையாகும். பல கப்பல் போக்குவரத்து அட்டவணைப் பிரச்ச்னைகள் கொண்ட பாதை மட்டுமல்ல பல படைத்துறைச் சவால்களையும் எதிர் நோக்க வேண்டும். இந்தக் கடற்பாதைக்கு மாற்றீடாக ஒரு தரைவழிப்பாதையை ஐரோப்பாவிற்கு உருவாக்க வேண்டும் என்பதே சீனாவின் அடுத்த திட்டமாகும்.

மாற்றுப்பட்டு - சீனாவின் மேற்கே போகும் ரயில்
சீனா ஐரோப்பாவிற்கான கடல் வழிப்பாதைக்கு மாற்றீடாக ஒரு தரை வழிப்பாதையூடாக ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி இறக்குமதியைச் செய்கின்றது. இந்தத் தொடரூந்துப் பாதை சீனாவிலிருந்து கஜகஸ்த்தான், இரசியா, பெலரஸ், போலாந்து ஆகியவற்றினூகாகச் செல்கின்றது.  இந்தத் தொடரூந்துப் பாதை கணனித் துறை நிறுவனங்களான ஹெச்.பி, ஜேர்மனிய வாகன உற்பத்தித் துறை நிறுவனமான பி.எம்.டபிளியூ, மெர்ஸெடிஸ் பென்ஸ் போன்றவை விரும்பிப் பாவிக்கின்றன. ஹெச்.பி தான் சீனாவில் உற்பத்தி செய்யும் கணனிதத் துறைப் பொருள்களை ஐரோப்பாவிற்கு அனுப்புவதற்கு இந்த தொடரூந்துப் பாதையைப் பயன்படுத்துகின்றன. கடல் வழியாக அனுப்பதிலும் பார்க்க தொடரூந்து வழி அனுப்புவது செலவு மிகுந்தது என்றாலும் துரிதமாகவும் தடைகளின்றியும் அனுப்பக் கூடியதாக இருக்கின்றது.  ஹெச்.பி நிறுவனத்தின் தகவல்களின்படி சீனாவில் இருந்து ஜேர்மனிக்கு 22 நாட்களில் பொருட்களை எடுத்துச் செல்லலாம். இது கடல் வழிப்பாதைக்கு எடுக்கும் காலத்திலும் அரைவாசியாகும். ஆனால் கடல் வழிப்பாதையிலும் பாக்க தொடரூந்து வழிப்பாதை இருபது முதல் இருபத்தைந்து விழுக்காடு செலவு அதிகமானதாகும். 2011-ம் ஆண்டில் இருந்து தரைவழி வாணிபப் போக்குவரத்துச் செலவு குறைந்து கொண்டு வருகின்றது என்பதும் மத்திய ஆசிய நாடுகளிடையான வர்த்தகம் 2009-ம் ஆண்டில் இருந்து 29 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது இங்கு கருத்தில் கொள்ளத் தக்கவையாகும்.


இரசியா போடும் சிவப்பு ரூட்டு
11,000 கிலோ மீட்டர் நீளமான இப்பாதையின் பெரும்பகுதி இரசியாவினூடாகச் செல்வதால் சீனாவின் வர்த்தகத்திற்கு இரசியாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இந்தத் தொடரூந்துப் பாதை இரசிய மற்றும் ஜேர்மனிய தொடரூந்து நிறுவனங்களின் கூட்டு உருவாக்கமாகும். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட உலகிலேயே பெரிய நாடாகிய இரசியா ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான தரைவழித் தொடர்பை கட்டுப்படுத்த விரும்புகின்றது. இந்த தொடரூந்துப் பாதையைப் பரவுபடுத்துவதும் தனது கனவுத் திட்டமான யூரோ ஏசியன் பொருளாதாரக்  கூட்டமைப்பை மேம்படுத்துவதும் இரசியாவின் கனவாகும். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மேற்குப் புறம் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக் ரீதியில் அபகரித்துக் கொள்ள கிழக்கு புறமாக  உள்ள மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை சீனா வேகமாக வளர்த்துக் கொள்ள இரசியா நடுவில் தடுமாறுகின்றது. கஜக்ஸ்த்தானில் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டையும், உஸ்பெக்கிஸ்த்தானில் 15 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டையும் செய்துள்ளது. மத்திய கிழக்காசியாவில் உள்ள கனிம வளங்களை யார் சுரண்டுவது என்பதிலும் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போட்டி உண்டு. மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பில் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை எப்பொழுதும் தொடங்குலாம் என்பதை சீனா நன்கு அறியும்.

சீனாவிடும் பட்டு நூல்
மத்திய ஆசியாவில் இரசியாவுடனான முறுகலைத் தவிர்கவும் தனது ஐரோப்பாவுடனான வர்த்தகம் தடையின்றி நடக்கவும் இரசியாவைத் தவிர்த்து ஒரு புதுப் பட்டுப்பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. சீனாவின் புதுப் பட்டுப்பாதை வெறும் போக்கு வரத்துக்கு மட்டுமல்ல பட்டுப்பாதையை ஒட்டிய நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன் சீனக் குடியேற்றங்களையும் இலக்காகக் கொண்டது. புதிய பட்டுப் பாதை மத்திய சீனாவில் ஆரம்பித்து சீனாவின் லன்ஞ்சௌ, உரும்கி, கோர்கஸ் ஆகிய மாகாணங்களூடாக கஜகஸ்த்தான், ஊடாக மத்திய ஆசியா சென்று ஈரானிற்கும் செல்லும். அங்கிருந்து ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. இன்னும் ஒரு பக்கம் வடதிசை போய் ஐரோப்பாவை அடையும். பல்கேரியா, ருமேனியா, செக் குடியரசு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிற்கும் செல்லும். இந்தப் புதுப் பட்டுப்பாதை திட்டத்தில் ஜேர்மனியை இணைக்க சீனா பெரிதும் விரும்புகின்றது.

இரசியாவின் மாற்றுத் திட்டங்கள்
இரசியாமீது எரிபொருள் கொள்வனவிற்குத் தங்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரேன் விவகாரத்தின் பின்னர் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கி விட்டன. இதனால் சீனாவிற்கு குழாய்கள் மூலம் எரிவாயுவை விநியோக்கிக்க இரசியா விரும்புகின்றது. சீனாவுடன் இணைந்து இந்த நீண்ட குழாய் பாதையை உருவாக்கினால் அது இந்தியா பாக்கிஸ்த்தான் போன்ற மற்ற ஆசிய நாடுகளுக்கும் எரிவாயு விநியோக்கிப்பதற்கு வசதியாக அமையும். ஆனால் இந்தக் குழாய் வழியும் தொடரூந்து வழியும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என இரசியா கருதுகின்றது. இரசியாவின் இன்னும் ஒரு கனவு ஜேர்மனியையும் சீனாவையும் இணைத்து ஒரு ஆசிய ஐரோப்பிய வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்துவது. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதும் பன்னாட்டு இராசதந்திரத்தில் ஒன்றுதான். ஜப்பானும் அமெரிக்காவும் இந்தியாவும் ஆசியாவில் சீனாவிற்கு எதிராகக் கை கோர்த்தால் சீனாவிற்கு இரசியாவுடன் இணைவதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை.

அமெரிக்க ஆமை புகுந்தது
சீனாவின் புதிய பட்டுப்பாதை ஆப்கானிஸ்த்தானூடாகச் செல்வதை அமெரிக்கா விரும்புகின்றது. அத்துடன் ஆப்கானிஸ்த்தானின் கனிம வளங்களை சீனா மூலம் தான் சுரண்டுவதற்கு அமெரிக்க முன்னுரிமை கொடுக்கின்றது. ஏற்கனவே சீனா பல கனிம வள அகழ்வு வேலைகள் ஆப்கானிஸ்த்தானில் செய்ய அமெரிக்கா அனுமதித்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சீனாவால் அமெரிக்காவிலும் பார்க்க குறைந்த செலவில் அகழ்வு செய்ய முடியும். இரண்டாவது அமெரிக்க நிறுவனங்கள் அகழ்வு செய்வது பெரும் பாதுகாப்புப் பிரச்ச்னையை உருவாக்கும். சீனாவின் புதிய பட்டுப்பாதையை ஆப்கானிஸ்த்தானூடாக இழுத்து ஆப்கானிஸ்த்தானை சீனாவின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா முயல்கின்றது. இதற்கு தூண்டுகோலாக இதே வாய்ப்பை இந்தியாவிற்கும் அமெரிக்கா வழங்க முன்வந்துள்ளது. சீனாவையும் ஜேர்மனியையும் தன்னுடன் இணைந்து ஒரு வர்த்தகக் கூட்டமைப்பை ஏற்படுத்த இரசியா எடுத்த முயற்ச்சி அமெரிக்காவை கலக்கமடைய வைத்தது. இத்திட்டம் தொடர்ப்பக இரசியாவிலும் சீனாவிலும் விரிவாக ஆராயப்பட்டது. ஜேர்மனியும் கவனத்தில் எடுத்தது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா உக்ரேன் பிரச்சனைக்கு தூபமிட்டது எனக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. ஆசியாவிலும் ஐரோப்பவிலும் அமெரிக்காவைப் ஓரம் கட்டும் வேலையை இரசியாவும் சீனாவும் இணைந்து செய்யலாம் என்பது அமெரிக்காவின் கருத்து. இதில் ஐரோப்ப ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இணைந்தால் அமெரிக்காவிற்கு நிச்சயம் பெரும் பின்னடைவு ஏற்படும். உக்ரேன் பிரச்சனையுடன் உருவாகிய இரண்டாம் பனிப்போர் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் உள்ளசில நாடுகளை ஒன்று படுத்தியதுடன் சில நாடுகளை வேறுபடவும் வைத்தது. சில நாடுகள் இரசியாவுடன் ஒரு முறுகல் நிலை உருவாகுவதை விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் இத்தாலியும் ஹங்கேரியும் இரசியாவுடன் உடன்பட்டுச் செல்வதை விரும்புகின்றன. பிரித்தானியா சுவீடன், போலாந்து, ருமேனியா மற்றும் போல்ரிக் நாடுகள் இரசியாவிற்கு எதிராக நிற்கின்றன. ஜேர்மனி கழுவும் மீன்களில் நழுவும் மீனாக நிற்கின்றது. ஏற்கனவே அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வை உக்ரேனும் ஈராக்கும் தடுத்து விட்டன. அமெரிக்கா ஆசிய பசுபிக் நாடுகளுடன் செய்ய முனையும் பசுபிக் தாண்டிய வர்த்தக் உடன்படிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்ய முனையும் அட்லாண்டிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கையும் இழுபடும் நிலையில் அமெரிக்கா ஜேர்மன் சீனாவுடனும் இரசியாவுடனும் இணைவது நிச்சயம் அமெரிக்கவிற்குப் பிரச்சனைக்கு உரியதாகும்.

ஊர் ஒன்றுபட்டால்
இந்தியாவின் புதிய ஆட்சியாளர்களும் சீனாவின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள்.  இந்திய சீன வர்த்தக உறவு இரு நாடுகளையும் பொறுத்தவரை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. சீனாவின் புதிய பட்டுப்பாதையில் இணைவது பற்றி இந்தியாவுக் பரிசீலித்து வருகின்றது. இந்தியாவைத் தொடர்ந்து தூர கிழக்கு நாடுகளும் இதில் இணைய முனையலாம். இப்படி ஆளுக்கு ஆள் ஊரில் ஒன்றுபட்டால் கூத்தாடி அமெரிக்கா என்ன செய்யும்?

நாடுகளிடையான பாதகளை மட்டும் இணைத்தால் போதாது நாடுகளும் முரண்பாடுகளைக் கடந்து இணைய வேண்டும்.


Sunday, 19 October 2014

மாறுபட்ட நிலைகளில் வேறுபட்ட தடங்களில் தடுமாறும் உலகப் பொருளாதாரம்

IMF எனப்படும்பன்னாட்டு நாணய நிதியம்2014-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி 3.7விழுக்காடாக இருக்கும் என ஏப்ரல் மாதம் எதிர்வு கூறியிருந்தது. இப்போது அதை 3.3 ஆகக் குறைத்துவிட்டது. தற்போது உலகின் பல நாடுகளில் போதுமான அளவு விலைவாசி அதிகரிப்பு இல்லை என்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது. அத்துடன் உலக நாணயமாகக் கருதப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டே போவதும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது.

இரு முனை ஏமாற்றங்கள்
2008-ம் ஆண்டும் 2009-ம் ஆண்டும் மேற்குலகப் பொருளாதாரங்கள் வீழ்ச்சியைச் சந்தித்த போது   அந்த நாடுகள் தம்மை    தமது தேக்க நிலையில் இருந்து சீனாவும் இந்தியாவும் மீட்கும் என நம்பின. அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் தமது பொருளாதாரங்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லலாம் என அவை எதிர்பார்த்திருந்தன. ஆனால் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார வளர்ச்சிகளின் வேகம் குறையத் தொடங்கின. உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி குன்றும் என்ற அச்சம் பொருளாதார நிபுணர்களைப் பீடிக்க முன்னர் நிதிச் சந்தையைப் பிடித்துவிடும். பத்தாண்டு ஆவணங்களின் yield எனப்படும் ஊறுதிறன் அதாவது இலகுவாகச் சொன்னால் இலாப விழுக்காடு 2.2 ஆகவும் முப்பது ஆண்டு ஆவணங்களின் ஊறுதிறன் (இலாப விழுக்காடு) மூன்றிலும் குறைந்துள்ளது. ஆசியாவின் இரு வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானின் நிலைமை மோசமாக உள்ளது.தென் கொரியா தனது பொருளாதார வளர்ச்சியை இரண்டாகக் குறைத்துள்ளது.

இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு வளர்ச்சி போதாது
உலகச் சந்தையில் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருட்களின் விலை வீழ்ச்சி இந்தியாவிற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எரிபொருள் விலை ஒரு அமெரிக்க டொலர் குறைந்தால் அது இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பில்லியன் வெளிநாட்டுச் செலவாணியை மீதமாக்கும். இந்த ஆண்டு எரிபொருள் விலை 25 டொலர்களுக்கு மேல் குறைந்துள்ளது. இதனால் இந்திய அரசு எரிபொருளுக்கு செலவு செய்யும் உதவிநிதியையும்(மானியம்) குறைக்கலாம். இது இந்திய அரசின் பாதிட்டுக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும். இந்த வாய்ப்பான நிலைமை இந்தியப் பொருளாதாரத்தை வளரச் செய்து அது உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படச் செய்ய இன்னும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் எடுக்கும். ஆனாலும் இந்தியாவிற்குத் தேவையான (ஆகக் குறைந்த) ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது. இந்திய மைய வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் 2014இல் இந்தியா 5 விழுக்காடு வளர்ச்சியையும் 2015இல் 6 விழுக்காடு வளர்ச்சியையும் எட்டும் என்கின்றார்.

சீனாவின் இருமுனைச் செயற்பாடு
பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது அரசு தனது செலவீனங்களை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்ய வேண்டும் என்பது கீன்சியப் பொருளியல் நிபுணர்களின் கருத்து. மாறாக நிதியியல் பொருளாதார நிபுணர்கள் அதாவது Monetarists அரச நிதிக் கொள்கைதான் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து வலுவாக அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். கீன்சியர்கள் வேலைவாய்ப்பு நிலையை உருவாக்க பொருளாதாரத்தை முகாமை செய்ய வேண்டும் எனக் கருதுகின்றனர். நிதியியலாளர்கள் நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு நிலை அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். 2008-09 ஆண்டுகளின் பொருளாதாரப் பின்னடைவின் பின்னர் மேற்கு நாடுகள் தமது பொருளாதாரங்களை நிதியியலாளர்களின் தத்துவங்களுக்கு ஏற்ப முகாமை செய்கின்றன. தமது நாடுகளில் பணப்புழக்கங்களை அதிகரிக்கச் செய்தனர். இதை அளவுசார் தளர்ச்சி அதாவது quantitative easing என்கின்றனர். சீனா பணப்புழக்கத்தை அதிகரித்ததுடன் அரச செலவீனங்களையும் அதிகரித்துக் கொண்டது. நாட்டின் உள்ளகக் கட்டுமானங்களில் அரச முதலீடுகளை பெருமளவில் அதிகரித்தது. சீன அரசின் இந்த இருமுனைச் செயற்பாடுகளை உலகப் பொருளாதார நிபுணர்கள் மிகவும் துணிச்சல் மிக்க நடவடிக்கை எனக் கருதினர். சீனா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரச் சீர்திருத்தம் என்று தொடங்கியதில் இருந்து சீனா தனது பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்தும் பணப்புழக்கத்தை அதிகரித்தும் அரச செலவீனங்களை அதிகரித்தும் வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது.  இந்த வளர்ச்சிக்கு சீனாவின் வட்டி விழுக்காடு பணவீக்கத்திலும் குறைவான நிலையில் இருக்கும்படியாக கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பேணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் இலகு கடன் பெற வாய்ப்பாக இருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளாக சீனா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை மிகவும் அதிகமாக வளரவைத்தது. இதற்கு சீன நாணயத்தின் பெறுமதி குறைந்த நிலையில் பேணப்பட்டது. மாறாக மேற்கு நாகள் பலவற்றில் நாணயங்களின் பெறுமதி உயர் நிலையில் பேணப்பட்டு வளர்முக நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் அந்த நாடுகளின் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டது.

அளவுசார் தளர்ச்சி (quantitative easing - QE) பற்றிய விவாதம்
ஊடகங்களைப் பொறுத்தவரை அளவுசார் தளர்ச்சி மைய வங்கிகள் தமது இருப்புநிலைக் குறிப்புகளின் (ஐந்தொகை) அளவை அதிகரித்து நாட்டில் கடன் வழங்குதலை அதிகரிப்பதாகும். இதற்காக மையவங்கி புதிதாக நாணயங்களை உருவாக்கி அதாவது காசு அச்சிட்டு மற்ற வங்கிகளிடமிருந்து சொத்துக்களை வாங்கும். அந்தச் சொத்து விற்பனையால் தமக்குக் கிடைக்கும் நிதியை வங்கிகள் கடனளிக்கும். கடன் நாட்டில் அதிகரிப்பதால் நாட்டில் வட்டி விழுக்காடு குறையும். மக்கள் அதிகம் செலவளிப்பார்கள். இதனால் அவர்களது கொள்வனவு அதிகரிக்கும். அதிகரித்த கொள்வனவால் நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதிகம் பேர் வேலை செய்வதால் நாட்டின் கொள்வனவு மேலும் அதிகரிக்கும். இதனால் மேலும் கொள்வனவு அதிகரிக்கும். இந்தச் சுழற்ச்சி தொடரும். மைய வங்கி நேரடியாக வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை (கூட்டாண்மைக் கடன் ஆவணங்கள் – அதாவது corporate bonds வாங்குவது கடன் தளர்ச்சி எனப்படும். 2008-09 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியின் பின்னர் அமெரிக்கவின் அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்யப்பட்டன. அமெரிக்காவின் மைய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பு (ஐந்தொகை) ஒரு டிரில்லியன் டொலர்களில் இருந்து நான்கரை டிரில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மைய வங்கி 2009-ம் ஆண்டு அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்தபடியால் மோசமான ஒரு பொருளாதார மந்தம் தவிர்க்கப்பட்டது எனப்படுகின்றது. அதேவேளை அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. அமெரிக்காவைப் போல ஜப்பானும் தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொன்டுவர அளவுசார் தளர்ச்சியைப் பெருமளவில் மேற் கொண்டது. ஆனால் ஜப்பானில் அளவுசார் தளர்ச்சி பெரிய அளவில் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகின்றது. யூரோ வலய நாடுகள் விலைவாசி அதிகரிப்பின்மையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இரண்டு காலாண்டுகளாக பொருளாதாரச் சுருக்கத்தைக் கண்டுள்ளது. பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளும் பொருளாதார வளர்ச்சியின்றித் தவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கித் தலைவர் மரியோ திராகி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள யூரோ வலய நாடுகளில் உள்ள தனியார் பெரு வர்த்தக நிறுவனங்களின் கடன் பத்திரங்களைக் கொள்வனவு செய்து யூரோ வலய நாடுகளிடை ஓர் அளவுசார் தளர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதாரத் தூண்டலை ஏற்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியரான மரியோ திராகியின் திட்டத்திற்கு ஜேர்மனியைன் மைய வங்கி ஆளுநர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால் மரியோ திராகி எந்த அளவு நிதியை அளவுசார் தளர்ச்சி மூலமோ அல்லது கடன் தளர்ச்சி மூலமோ பொருளாதாரத்தினுள் செலுத்தப் போகின்றார் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை. யூரோ நாணய்த்தின் பெறுமதியை விழச்செய்வது பிரான்ஸினதும் இத்தாலியினதும் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க மைய வங்கிக்கு நிதிக் கொள்கையில் இருக்கும் சுதந்திரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கிக்கு இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தது ஒரு ரில்லியன் யூரோக்களையாவது தனது பொருளாதாரத்தினுள் செலுத்த வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வரைபடத்தின் மூலம் இங்கிலாந்தின் மைய வங்கி தனது சொத்துக் களின் பெறுமதியை அதிகரித்து அளவுசார் தளர்ச்சியை அதிகரித்தால்  பொருளாதார வளர்ச்சியடையும் தொடர்ந்து வரும் பணவிக்கம் சொத்துக்களின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்யும் பொருளாதார வளர்ச்சியையும் விழச் செய்யும் நாட்டில் பணப்புழக்கம் மட்டும் நிலையாக இருக்குன் எனக் காட்டியுள்ளது.

வளைய முடியாத யூரோவலயம்
அமெரிக்கப் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை எட்டாததும் ஜப்பான் இப்போதும் மோசமான நிலையில் இருப்பதாலும் அளவுசார் தளர்ச்சி எந்த அளவு வேலை செய்யும் என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்தமையைத் தொடர்ந்து அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அமெரிக்கா சவுதி அரேபியாவையும் மிஞ்சி உலகிலேயே அதிக அளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாறிவிட்டது. 27 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 நாடுகள் ஒன்று கூடி யூரோ என்னும் நாணயத்தை தமது பொது நாணயமாக்கின. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தி அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளின் உற்பத்தியிலும் அதிகமாகும்.  யூரோ அமெரிக்க டொலருக்கு எதிராக பெரு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் யூரோ வலய நாடுகளில் அளவுசார் தளர்ச்சி வயிற்றோட்டத்தில் தவிக்கும் யூரோவிற்கு பேதி மருந்து கொடுத்த கதையாகிவிடும். வேறு வேறு பொருளாதாரச் சூழ் நிலைகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில்  பொதுவானவையாக இருப்பவை விலைவாசி அதிகரிப்பின்மையும் பொருளாதார மந்தமுமாகும். பிரான்ஸில் ஐம்பது பில்லிய செலவீனக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஆனால் அந்த அளவு வெட்டு பெரும் பொருளாதாரத் தேய்வில் முடியும் என பிரெஞ்சு அரசு அஞ்சுகின்றது.

பிரித்தானியாவும் அயர்லாந்தும்
பிரித்தானியாவில் ஒரு நகைச்சுவை பிரபலம். ஆங்கிலேயனுக்கு தலை முடி உதிர்ந்தால் அவன் முடியை வளர வைக்க நிறையச் செலவு செய்வானாம். ஐரிஸ்காரனுக்கு முடி உதிர்ந்தால் தனது சீப்பை விற்றுவிடுவானாம். 2008-09 நிகழந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அயர்லாந்து அரசும் மக்களும் சிக்கன நடவடிக்கை மூலம் தமது பொருளாதாரத்தைத் தக்க வைத்துள்ளனர். பிரித்தானியாவில் மக்கள் தொடர்ந்து செலவு செய்து அதன் மூலம் நாட்டில் பொருளாதாரத்தை வளர வைத்தனர்.  இரட்டைப் வீழ்ச்சி பொருளாதாரத் தேக்கத்தின் (double dip recession) பின்னர் பிரித்தானியப் பொருளாதாரம் சற்று வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. ஆனால் பிரித்தானியாவின் பொருளாதார  வளர்ச்சி ஒரு சமநிலைப்படுத்தப்படாத வளர்ச்சியாக இருக்கின்றது. அங்கு உற்பத்தித் துறை (manufacturing) வளர்ச்சியடையாமல் தேய்வடைந்துள்ளது. பிரித்தானியப் பொருளாதார வளர்ச்சி கட்டிடத் துறையிலும் மக்களின் கொள்வனவிலும் பெரிதும் தங்கியுள்ளது. இதே வேளை சீனா தனது மக்களின் கொள்வனவை உயர வைக்க முடியாமல் திண்டாடுகின்றது. சீனா தனது பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது.

எரிபொருள் விலைவீழ்ச்சியால் பாதிப்படையும் நாடாக இரசியா இருக்கின்றது. இரசிய அரசின் வருமானத்தில் பெரும் பகுதி எரிபொருள் ஏற்றுமதியில் தங்கி இருக்கின்றது இரசியாவின் 2014-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 117 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் 2015-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 100 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தீட்டப்பட்டன

ஏமாற்றும் அமெரிக்கா
இந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அமெரிக்காவைப் பற்றி மற்ற நாடுகள் வளர்ச்சியடையலாம் என எதிர்பார்த்திருந்த வேளையில் அமெரிக்காவின் சில்லறை விற்பனை (2014) செப்டம்பர் மாதம் 0.1விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.

ஜேர்மன் மைய வங்கியின் கையில் நிறைய இருக்கின்றது
அமெரிக்கப் பொருளாதரம் வளர்ச்சியடைந்தாலும் யூரோ வலய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய ஓன்றியப் பொருளாதாரம் வளராமல்       உலகப் பொருளாதாரம் தேறாது. யூரோ வலய நாடுகளை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு வேண்டிய பணப்புழக்க அதிகரிப்பைச் செய்ய ஜேர்மனியின் மைய வங்கி தடையாக இருக்கின்றது. எரிபொருள் விலை வீழ்ச்சி எரிபொருள் பாவனை நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தாலும் எரிபொருள் ஏற்றுமதி நாடுகளுக்கு பாதகமான நிலையை உருவாக்கும். அதிலும் குறிப்பாக உலகின் முன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட இரசியா தனது வருமானத்திற்கு எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியுள்ளது. உலக நாடுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மட்டுமே  உலகத்தை தொடரும் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்க முடியும்.

Saturday, 18 October 2014

இந்தியாவின் வழிகாட்டல் ஏவுகணைகள் (Cruise Missiles)

இந்தியா அச்சமில்லை என்று பொருள்படும் நிர்பய் என்னும் வழிகாட்டல் (Cruise Missiles) ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி வெற்றீகரமாக ஏவிப் பரிசோதித்துள்ளது. எதிரியின் கதுவிகளுக்கு அதாவது ரடார்களுக்குப் புலப்படாமல் மிகவும் தாழ்வான உயரத்தில் பறக்க்கக் கூடிய நிர்பய் ஏவுகணைகள் ஆயிரம் கிலோ எடையுடையவை. அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவல்லவை. இந்தியாவின் முப்படைகளும் இவற்றைப் பாவிக்கப் போகின்றன.

2013-ம் ஆண்டு  இந்த ஏவுகணையைப் பரீட்சித்தது தோல்வியில் முடிவடைந்தது. இப்போது நிர்பய் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டதால் இந்தியாவும் வழிகாட்டல் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் ஒரு நாடாக மாறிவிட்டது. மற்ற நாடுகளிலும் பார்க்க இந்தியா மிகவும் சிக்கனமாக வழிகாட்டல் ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு நிர்பய் உருவாக்கப் பட்டுள்ளது.

ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டருக்குச் சற்று அதிகமான குறுக்களவும் கொண்ட நிர்பய் ஏவுகணைகள் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர்கள் தொலைவிற்குப் பாயக் கூடியவை. இவை ஒலியிலும் வேகம் குறைவாகவே பயணிக்கும். இவற்றில் இறக்கைகளும் வாற்புறம் செதில்களும் இருக்கும். நிர்பய் ஏவுகணைகள் சூட்டிகை  ஏவுகணைகள் எனப்படுகின்றது அதாவது smart ஏவுகணைகள். இவை Fire and forget என்னும் முறைமைப் படி செயற்படக்கூடியன. அதாவது இதை ஏவிவிட்டால் தானாகவே இலக்கை நோக்கிப் பயணிப்பதுடன் தேவை ஏற்படும் போது இலைக்கை நோக்கி திசையை நிலைமைக்கு ஏற்ப மாற்றுக் கொண்டு பறக்கும். ஒரு விமானத்தைப் போல் இலக்கைச் சுற்றிப் பறந்து சரியான இடத்தைத் தெரிவு செய்து அதில் விழுந்து வெடிக்கும். அத்துடன் எல்லாவிதக் கால நிலைகளிலும் செயற்படக்கூடியவை.

நிர்பய் ஏவுகணைகள் அமெரிக்காவின் Tomahawk  ஏவுகணைகளுக்கும் பாக்கிஸ்த்தானின் பாபர் ஏவுகணைகளுக்கும் இந்தியாவின் பதிலடியாகும்.

Monday, 13 October 2014

செல்வி ஜெயலலிதா வெளியில் வருவதற்குச் செய்ய வேன்டியவை என்ன?

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் பதவில் இருக்கும் போது நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியும் பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவராக செல்வி ஜெயலலிதா இருக்கிறார். அவர் இதில் இருந்து வெளியில் வர முடியுமா என்ற கேள்விக்கு விடை தேடும் போது  சாதியவாதத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்ய முடியாது. தமிழ்நாட்டு அரசியலில் சாதியவாதம் அப்படிப்பின்னிப் பிணைந்துள்ளது. மூதறிஞர் என திராவிட முன்னேற்றக் கழகத்தினரே போற்றிய ராஜகோபாலாச்சாரியாருக்குப் பின்னர் பார்ப்பனர்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்ல பார்ப்பனர்களால் அரசியலுக்குக் கொன்டுவரப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. துக்ளக் பத்திரிகையில் செல்வி ஜெயலலைதாவை ஓர் அரசியல் தொடர்கட்டுரை எழுதவைத்து அவரது அரசியல் நுழைவை ஆரம்பித்து வைத்தவர் சோ ராமசாமியாகும். முதலில் இந்திரா காங்கிரசிலும் பின்னர் எம் ஜீ இராமச்சந்திரனின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்து கொனடவர் செல்வி ஜெயலலிதா.

தோழியர் பிரிய வேண்டும்
அவர் தற்போது மாட்டியுள்ள சிக்கல்களில் இருந்து வெளியில் வருவதற்கு செய்ய வேன்டியவற்றில் முதலாவது சசிகலா குடும்பத்தினருடன் தனது தொடர்பைப் துண்டித்தல். செல்வி ஜெயலலிதாவிற்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் உள்ள உறவிற்குத் தடையாக இருப்பவர்கள் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே. இவர்களை பார்ப்பனர்கள் மன்னார்குடி மாஃபியா என அழைப்பர்.

பழி எங்கோ பவம் எங்கோ
சசிகலா குடும்பத்தினர் உடனான தொடர்புகளைத் துண்டிப்பது செல்வி ஜெயலலிதாவிற்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைக்கான தடையை தவிர்ப்பதுடன் செல்வி ஜெயலலிதாமீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை சசிகலா குடும்பத்தினர் தலைகள் மீது சுமத்தவும் வழி வகுக்கும். 1991ம் ஆண்டில் இருந்து 96ம் ஆண்டு வரை போயஸ் தோட்டத்தில் பணிபுரிந்த ஒருவரின் சாட்சியே செல்வி ஜெயலலிதாவிற்கு எதிரான வலுவான சாட்சியாக அமைந்தது. இவரிடம் சசிகலா அடிக்கடி பல ரூபா நோட்டுக்களைக் கொண்டு போய் பல்வேறு வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் படி கொடுப்பாராம். சரியான அரசியல் சூழ்நிலையில் இந்தச் சாட்சியை சசிகலா குடும்பத்தினருக்கு எதிராகத் திருப்ப முடியும். 

அக்ரஹாரத்தில் மீண்டும் கள்ளப் பூனை
இரண்டாவதாக செல்வி ஜெயல்லைதா செய்ய வேண்டியது பார்ப்பனர்களுடன் தனது உறவை புதுப்பித்துக் கொள்ள வேன்டும். அதற்கு செல்வி ஜெயலலிதா காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். செல்வி ஜெயலலிதாவிற்கு பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது அவர் ஜெயேந்திரரை ஒரு தீபாவளி தினத்தன்று கைது செய்து சிறையிலடைத்தமையே. செல்வி ஜெயலலிதாவிற்கு எதிராக கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வழங்கிய செவ்வியில் சுப்பிரமணியன் சுவாமி செல்வி ஜெயலலிதா ஜெயேந்திரருக்குச் செய்த பாவமே அவரைத் தண்டித்தது எனக் கூறியதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கிற்கு வழக்கு
சின்னக் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன், ஒரு பார்ப்பனர். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோவிலின் வசந்த மண்டபத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். செல்வி ஜெயலலிதாவிற்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராற்றுக்கு பழிவாங்க செல்வி ஜெயலலிதா இக் கொலையைச் செய்தவர் சங்கராச்சாரி ஜெயேந்திரர் என்று அவரைக் கைது செய்தார் எனக் கருதப்படுகின்றது. செல்வி ஜெயலலிதாவின் மீது விஸ்வ ஹிந்து பரிஸத், சிவசேனா போன்ற பல இந்து அமைப்புக்கல் ஆத்திரம் அடைந்தி

 ஆட்சி மாறினால் சாட்சி மாறும்
ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கின்போது ஆட்சிகள் மாறும் போது சாட்சிகளும் மாறிக் கொண்டனர். முன்பு கூறிய சாட்சிகள் தவறானவை எனக் கூறி மீள் சாட்சியங்கள் வழங்கினர். இப்படித்தான் ஜெயேந்திரர் தனக்கு எதிரான சங்கர் மடம் கொலை வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டார். சங்கர் மடத்தில் கொலை செய்யப்பட்டவரின் மகனே தனது சாட்சியை மாற்றிக் கொண்டனர். இன்றும் சோ ராமசாமி ஜெயலலிதாவின் மேல் மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார் என்பது செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும்

அடங்கு மச்சி
மூன்றாவதாக ஜெயலலிதா செய்ய வேண்டியது பாரதிய ஜனதாக் கட்சிக்கு அடங்கிப் போவது. 2014-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் செல்வி ஜெயலலிவின் அண்ணா திமுகாவுடன் ஒரு கூட்டணி அமைக்க பாரதிய ஜனதாக் கட்சி பெரிதும் விரும்பியிருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு நரேந்திர மோடி பயணம் செய்த போது அவரைச் சந்திக்கவே ஜெயலலிதா மறுத்து விட்டார். அவரது சோதிடர்கள் அவர் இந்தியாவின் தலைமை அமைச்சராகுவார் எனச் சொல்லியதை நம்பி செல்வி ஜெயலலிதா அதிக தன்னம்பிக்கையுடன் நடந்து கொண்டார். இந்த தலைமை அமைச்சர் கனவைப் புறந்தள்ளிவிட்டு அவர் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட வேண்டும். மாநிலங்களவையில் அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தலாம.


மீண்டும் காலை வாரவும்
நான்காவதாக செல்வி ஜெயலலிதா செய்ய வேண்டியது தமிழ்த் தேசியவாதத்தின் விரோதியாக மாற வேண்டும். அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டும். இது சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களைத் திருப்திப்படுத்தும்.

இந்த நான்கையும் செய்தால் செல்வி ஜெயலலிதா தனது தற்போதைய சிக்கலில் இருந்து விடுபடலாம்.

Monday, 6 October 2014

ஹொங் கொங்கில் குடைப்புரட்சி குடைசாய்ந்துவிட்டதா?

ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அங்கு நடக்கும் ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. ஏனைய சீனப் பகுதிகள் போல் அல்லாது ஹொங் கொங்கில் மக்களுக்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை உண்டு, சிறந்த பேச்சுரிமைய உண்ட, ஹொங் கொங்கிற்கு என்று சீனாவிலும் வேறுபட்ட பொதுச் சட்டம் உண்டு, தனித்துவமான நீதித் துறை உண்டு, ஓரளவு சுதந்திரமான ஊடகத் துறை உண்டு. சீன அரசு ஹொங் கொங் மக்களுக்கு  2017-ம் ஆண்டு ஒரு சுதந்திரத் தேர்தலுக்கான உறுதி மொழியை வழங்கியுள்ளது. ஹொங் கொங்கில் பொதுவுடமை ஆட்சி இல்லாமல் அங்கு ஒரு முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலவுகின்றது  எனச் சொல்லலாம். இதற்கான காரணம் 1997-ம் ஆண்டு வரை ஹொங் கொங் பிரித்தானியாவின் காலனித்துவ  ஆட்சியின் கீழ் இருந்ததமையாகும்.

ஹொங் கொங்கின் வரலாற்றுப் பின்னணி
ஹொங் கொங் சீனாவை ஒட்டிய 1104 சதுர கி.மீ நிலப்பரப்புக் கொண்ட ஒரு தீவாகும். இதன் வர்த்தக முக்கியத்துவம் 1557-ம் ஆண்டு போர்த்துக்கேயரால் அறியபப்ட்டது. அன்றில் இருந்து பல ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் அங்கு செல்லத் தொடங்கின. பின்னர் போர்த்துக் கேயர் அங்கு ஒரு சிறு குடியேற்றத்தையும் வர்த்தக நிலையத்தையும் உருவாக்கினர். பின்னர் 17-ம் நூற்றாண்டில்  பிரித்தானியாவின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி அங்கு வர்த்தகத்தை ஆரம்பித்தது. இதன் ஆபத்தை உணர்ந்த சீனப் பேரரசு பல கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது. அந்தக் கட்டுப்பாடுகள் “கண்டோன் முறைமை” என அழைக்கப்பட்டது. அம்முறைமையின் படி கண்டோன் துறை முகத்தில் மட்டும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய முடியும். வெளிநாட்டு வர்த்தகர்கள் சீன மொழியைக் கற்கக் கூடாது. வெளிநாட்டு வர்த்தகர்கள் சீனச் சில்லறை வர்த்தகர்களுடன் வர்த்தகம் செய்ய முடியாது. வெளிநாட்டு வர்த்தகர்கள் சீன அரசினால் அங்கீகரிக்கப் பட்ட பெரு வர்த்தகர்களுடன் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி கண்டோன் பகுதியில் ஒரு களஞ்சியசாலையையும் கைத்தொழிற்ச்சாலையையும் அமைத்துக் கொண்டது. ஐரோப்பியரை சீனர்கள் செம்மயிர்க் காட்டுமிராண்டிகள் என அழைத்தனர். சீனாவின் பட்டு, மட்பாண்டங்கள்(பீங்கான்) தேயிலை ஆகியவை ஐரோப்பியரை மிகவும் கவர்ந்தது. அவற்றைப் பெருமளவில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி வாங்கியது. இதற்காக பெருமளவு வெள்ளிகளை சீனர்களுக்கு கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த வர்த்தகச் சமநிலை இன்மையைச் சமாளிக்க பிரித்தானியாவில் பயிரிட்ட அபின் போன்ற போதைப் பொருட்களை கிழக்கிந்திய வர்த்கக் கம்பனி சீனர்களுக்கு விற்கத் தொடங்கியது. இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை சீனப் பேரரசு தடை செய்த போதிலும் இரகசியமாக அந்த விற்பனை தொடர்ந்தது. சீனர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையானதால் பெருமளவு வெள்ளிகள் சீனாவில் இருந்து வெளியேறின. இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட ஹொங் கொங் தூர கிழக்கு நாடுகளுக்கும்  மற்றும் அவுஸ்த்திரேலியா, நியூசீலாந்து ஆகிய நாடுகளுக்குமான கடற்போக்குவரத்திற்கும் வாணிபத்திற்கும் அவசியமான ஒன்றாகியது.

அபின் போர்கள்
சீனர்களின் போதைப் பழக்கத்தால் பொருளாதாரரீதியில் சீனா பாதிக்கப்பட்டிருந்தது. போதைப் பொருள் விற்பனையை சீன அரசு தடை செய்த போதிலும் அந்த வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டது. இது அபின் போர் என அழைக்கப்படுகின்றது. இந்தப் போர் இரண்டு தடவை நடைபெற்றது. இந்தப் போர்களைத் தொடர்ந்து சீனா ஹொங் கொங்கை பிரித்தானியாவிற்கு குத்தகைக்கு வழங்கியது. இதற்காக நான்கு ஒப்பந்தங்கள் 1841, 1842, 1860,1898 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்டன. பாரிய விக்டோரியாத் துறைமுகத்தை பிரித்தானியா ஹொங் கொங்கில் நிர்மானித்தது. சீனாவில் பொதுவுடமை ஆட்சி ஏற்பட்ட போது ஹொங் கொங்கிலும் எழுச்சிகள் உருவாகி அது பிரித்தானியாவால் அடக்கப்பட்டது. பின்னர் சீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் பல அங்கு நடந்தன. 1960இற்கும்  1990இற்கும் இடையில் ஹொங் கொங் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்தது.  ஹொங் கொங், தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆசியாவின் சிறு புலிகள் என அழைக்கப்பட்டன. ஹொங் கொங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு அது சீனாவுடன் செய்த வர்த்தகமும் காரணமாக இருந்தது.

கை மாறிய ஹொங் கொங் ஆட்சி முறைமை மாற்றத்தை வேண்டி நின்றது.
1997-ம் ஆண்டு பிரித்தானியா ஹொங் கொங்கை சீனாவிடம் கையளித்தது. 155 ஆண்டுகள் ஹொங் கொங்கை மக்களாட்சி இன்றி ஆளுநர் மூலம் ஆண்டு வந்த பிரித்தானியா சீனாவிடம் கையளிக்க முன்னர் ஹொங் கொங்கில் மக்களாட்சி வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியது. சீனா ஹொங் கொங்கை ஒரு நாடு இரு ஆட்சி முறைமைகள் என்ற அடிப்படையில் தன்னுடன் இணைத்தது. பிரித்தானியா ஹொங் கொங்கை ஆளுநர் மூலம் ஆண்டு வந்தது. சீனா ஹொங் கொங்கை தலைமைச் செயலர் மூலம் ஆள்கின்றது. பெயர் மட்டும்தான் வித்தியாசம் எனச் சொல்லலாம்.. இந்தத் தலைமைச் செயலரை தேர்தல் குழு தெரிவு செய்கின்றது. ஹொங் கொங்கின் அரசியலமைப்பு அடிபடைச் சட்டம் என அழைக்கப்படுகின்றது. 2004-ம் ஆண்டு ஹொங் கொங்கில் முழுமையான மக்களாட்சிப்படி தேர்தல் நடாத்த முடியாது எனச் சொல்லிவிட்டது. அத்துடன் ஹொங் கொங்கில் தேர்தல் விதிகளை மாற்றுவதாயின் அது சீன அரசின் அனுமதியுடனேயே செய்யப்பட்ட வேண்டும் என அறிவித்தது. ஹொங் கொங்கின் சட்ட சபை உறுப்பினர்கள் பல கட்சிகள் கொண்ட அரசியல் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படுகின்றனர். தலைமைச் செயலர் எண்ணூறு பேர்களைக் கொண்ட ஒரு சபையால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருதடவை தெரிவு செய்யப்படுகின்றனர். 2017-ம்  ஆண்டிலிருந்து ஹொங் கொங்கின் தலைமைச் செயலரை பொது வாக்களிப்பின் மூலம் மக்கள் தெரிவு செய்யலாம் என்றும் 2020-ம் ஆண்டில் இருந்து ஹொங் கொங்கின் பாராளமன்றம் பொதுத் தேர்தல் மூலம்  தெரிவு செய்யப்படும் என்றும் சீனா ஹொங் கொங் மக்களுக்கு 2007-இல் உறுதியளித்திருந்தது. 2013 ஜனவரி மாதம் "அமைதியுடனும் அன்புடனும் மையத்தை ஆக்கிரமித்தல்" என்னும் இயக்கத்தை பேராசிரியர் பெனி தாய் ஆரம்பித்தார்.

வெள்ளை அறிக்கையும் கருத்துக் கணிப்பும்
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ஹொங் கொங்கின் ஆட்சி முறைமை மாற்றம் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையைச் சமரிப்பித்தது. அது மீண்டும் ஒரு நாடு இரு ஆட்சி முறைமைகள் என்ற தத்துவத்தை வலியுறுத்தியது. தலைமைச் செயலரை 2017-ம் ஆண்டு எப்படித் தெரிவு செய்வது என்பது தொடர்பாகப் பிரச்சனை எழுந்தது. தேர்தலில் நியமனக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டும் போட்டியிடலாம் என்பது சீன அரசின் நிலைப்பாடாகியது. இந்த நியமனக் குழுவை சீன அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் என அஞ்சப்பட்டது. 1997-ம்  ஆண்டிலிருந்து தலைமை அமைச்சரை நியமிக்கும் குழு சீன அரசு சார்பானதாகவே இருக்கின்றது. இதனால் இந்த நிலைப்பாட்டிற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. "மையத்தை ஆக்கிரமித்தல்" என்னும் அமைப்பு தலைமைச் செயலர் வேட்பாளர் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இந்த உத்தியோகப்பற்றற்ற தேர்தலில் முழுமையான மக்களாட்சி முறைமைப் படியான தேர்தலுக்கும் மக்கள் பேராதரவு வழங்கினர். "UNIVERSAL SUFFRAGE" என்ற பதம் எல்லோரும் வாக்களிக்கும் உரிமையை மட்டுமே குறிப்பிடுகின்றது. யார் வேட்பாளரைத் தெரிவு செய்வது என்பதையல்ல என்பது சீன ஆட்சியாளர்களின் வியாக்கியானமாக இருக்கின்றது. அது யாரும் வேட்பாளராக நிற்கலாம் என்பதையும் உள்ளடக்கியது என்பது கிளர்ச்சிக்காரர்களின் நிலைப்பாடாகும்.

மாணவர் எழுச்சி மக்கள் எழுச்சியானது.
2011-ம் ஆண்டு சீனாவின் கல்வி முறைமையை ஹொங் கொங் தீவிலும் அறிமுகம் செய்ய சீன அரசு முயன்றபோது ஜொஷுவா வொங் என்னும் ஒரு பதினைந்து வயது மாணவன் அதற்கு எதிராகக் கிளர்ந்த் எழுந்தான். "அறிஞரியல்" என்னும் அமைப்பையும் அவன் ஆரம்பித்தான். இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை அவன் தெருவில் இறக்கிப் போராடினான். இப்போது ஹொங் கொங்கில் முழுமையான சுதந்திரத் தேர்தல் வேண்டும் எனப் போராடுபவர்களில் அவன் முக்கியமானவனாக இருக்கின்றான். இவனுடன் மாணவர் பேரவை என்னும் அமைப்பு 24 வயதான அலெக்ஸ் சோ என்பவன் தலைமையில் இணைந்து செயற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் முன்னணியில் நின்று போராடுகின்றார்கள்."மையத்தை ஆக்கிரமித்தல்" என்னும் அமைப்பு 50வயதான சட்டத் துறைப் பேராசிரியர் பெனி தாய் யூ ரிங்கின் தலைமையில் இவர்களுடன் இணைந்து போராடுகின்றது. இவரகளுடன 70 வயதான சான் கின் மான் என்னும் மதகுருவும் இணைந்து செயற்படுகின்றார். இவர்களின் முதல் கோரிக்கையாக ஹொங் கொங்கின் தலைமைச் செயலர் சி வை லியூங் பதவி விலக வேண்டும் என்பதாகும்.

குடைப் புரட்சிக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட அடக்கு முறை
மையத்தை ஆக்கிரமித்தல் என்னும் பெயரில் ஹொங் கொங் வீதிகளை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது ஹொங் கொங் அரசு ஒரு மட்டுப்படுத்தப் பட்ட அடக்கு முறையையே பிரயோக்கித்தது. கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுதல் மிளகுப் பொடி வீசுதல் போன்றவற்றையே காவற் துறையினர் செய்தனர். இவற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளை கையில் வைத்திருந்தனர். இதனால் இவர்களது எழுச்சி குடைப்புரட்சி என அழைக்கப்படுகின்றது.

மௌனமான சீன ஆட்சியாளர்கள்
சீன அரசு ஹொங் கொங் தீவில் நடக்கும் கிளர்ச்சியை ஒரு சட்ட விரோத தீவிரவாதம் எனக் குற்றம் சாட்டுகின்றது. சீன அரச ஊடகங்கள் இந்தக் கிளர்ச்சியைப் பற்றி காட்டமான கண்டனத்துடன் விமர்சிக்கின்றன. சீன அதிபரோ அரச உயர் மட்டத்தினரோ இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. ஒரு சிறு இளைஞர் குழுபற்றி பல கோடி மக்களின் தலைவர் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் சீனாவின் அதிகார எல்லைக்குள் ஒரு மேற்கத்தைய பாணித் தேர்தல் நடக்கக் கூடாது என்பதில் சீன அதிபர் உறுதியாக இருக்கின்றார். சீன அரசு கடுமையான வன்முறைகளை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. ஹொங் கொங்கில் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி பெற்றால் இதே மாதிரிக் கிளர்ச்சி சீனா எங்கும் பரவலாம் என சீன ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். ஹொங் கொங்கில் நடக்கும் கிளர்ச்சியைப் பற்றி பல இருட்டடிப்புக்கள் சீனாவில் செய்யப்பட்டுள்ளது. கிளர்ச்சிக்காரர்களுக்கு இடையிலான தொடர்பாடல்களையும் சீன அரசு துண்டித்துள்ளது. அவர்கள் வை-ஃபை இன்றிச் செயற்படக்கூடிய ஒரு கைப்பேசிச் செயலியை உருவாக்கி அதன மூலம் தொடர்பாடலகளைச் செய்கின்றனர்.

ஹொங் கொங்கும் சீனர்களும் சீனச் சீனர்களும்
ஹொங் கொங் வாழ் சீனர்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருக்கும் போது தாம் மேலைத் தேசத்தவர்கள் போல் கனவான்கள் என்றும் சீனாவில் வாழும் சீனர்கள் படிக்காத பாமரர்கள் என்றும் கருதி இருந்தனர். அவர்கள் சீனாவில் வாழும் சராசரிச் சீனர்களிலும் பார்க்க பொருளாதாரச் செழிப்பு மிக்கவர்களாக இருந்தார்கள். ஆனால் பொருளாதார ரீதியில் பெரிது முன்னேறிய சீனாவைன் பெரும் செல்வந்தர்கள் இப்போது ஹொங் கொங் செல்வந்தர்களிலும் பார்க்க பல மடங்கு செல்வம் படைத்தவர்களாகவும் விடுமுறைக்கு அவர்கள் ஹொங் கொங் செல்லும்போது அங்குள்ள சீனர்களைக் கீழ்த்தரமாகப் பார்ப்பதும் உண்டு. சீனாவில் வாழும் சீனர்களில் பெரும்பான்மையானவர்கள்  மக்களாட்சி வயிற்றுக்குச் சாப்பாடு போடாது என நம்புகின்றார்கள். இதற்கு அவர்கள் தம்மைச் சூழவுள்ள நாடுகளில் உள்ள வறுமையை ஆதாரமாகக் கருதுகின்றனர். சீனாவில் நடக்கும் வேலை நிறுத்தங்களில் 60 விழுக்காடு ஹொங் கொங் தீவிற்கு அண்மையான சீன நகரங்களில்தான் நடக்கின்றது.

சீனத் தேசிய தினம்: நம்ம ஏரியா உள்ளே வராதே!
ஒக்டோபர் முதலாம் திகதி சீனத் தேசிய தினத்தன்று என்றுமில்லாத அளவு பெரும் தொகைக் கிளர்ச்சிக்காரர்கள் ஹொங் கொங் தெருக்களில் திரண்டனர். பெருமளவில் திரண்டாலும் எந்த வித வன்முறையும் இன்றி கிளர்ச்சிக்காரர்கள் கட்டுக் கோப்புடன் இருக்கின்றனர். ஹொங் கொங்கை தனக்கு எதிரான களமாகப் பாவிக்க வேண்டாம் என சீன அரசு மேற்குலக நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவின் தலைவர் பொப் மெனெண்டஸ் ஹொங் கொங்கின் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் ஹொங் கொங் மக்களின் மக்களாட்சி உரிமையை மதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அமெரிக்காவில் உள்ள சீனா பதிலளித்துள்ளது.  மையத்தை ஆக்கிரமித்தல் என்பது ஒரு சட்ட விரோத நடவடிக்கை. ஹொங் கொங் விவகாரம் சீனாவின் உள்விவகாரம். இதில் யாரும் தலையிட்டு இந்த சட்டவிரோதச் செயல் புரிபவர்களுக்கு தவறான சமிக்ஞைகளைக் கொடுக்க வேண்டாம் என்றது சீனா.  சீன ஊடகங்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அமெரிக்க உளவுத் துறையின் கைக்கூலிகள் என்று பரப்புரை செய்கின்றன

ஹொங் கொங்கில் வாழும் சீன அரசு சார்புடையவர்கள் நடக்கும் ஆர்ப்பாட்டங்களால் தமது நாளாந்த நிகழ்வுகள் வருமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்கள்; இவர்கள் ஒக்டோபர் 3-ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலும் நடாத்தினார்கள். சீனா இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மிளகுத் தூள் போன்றவற்றை வீசியது பின்னர் தனக்குச் சார்பானவரகளால் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹொங் கொங் அரசுடன் நடாத்து வந்த பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது. இனி சீனா ஒன்றில் இதை இப்படியே தொடரவிட்டு பொது மக்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சலிப்பு உருவாகச் செய்யலாம். பொது மக்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மேலும் மோதலைத் தூண்டலாம். தனது படையினரையே பொதுமக்கள் போல் ஆடையணியச் செய்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தலாம். இவற்றிலும் மோசமாக படையினர் பார படைத்துறை ஊர்திகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கலாம்

விலகி நிற்பது போல் சீன் போடும் சீனா
சீனாவின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவது. அதற்கு நன்கு வளர்ச்சியடைந்த நிதிச் சந்தையும் முன்னேற்றமடைந்த வங்கிகளும் அவசியம். சீனாவில் அப்படி இன்னும் உருவாகவில்லை. ஹொங் கொங்கில் அவை உள்ளது. சீனாவிலேயே உலக மயப்படுத்தப்பட்ட ஒரே நகரம் ஹொங் கொங் ஆகும். சீனாவின் எதிர்காலத் திட்டங்களுக்கு அமைதியான ஹொங் கொங் அவசியம். அமைதியற்ற ஹொங் கொங் சீனாவிற்கு மட்டும் பின்னடைவை ஏற்படுத்தாது சீனாவில் முதலீடு செய்ய  ஹொங் கொங்கை ஒரு வாயிலாகப் பயன்படுத்தும் மேற்கு நாடுகளுக்கும் தடையானதாக அமையும்.  இதானால் சீனா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வன்முறை பாவிக்காமல் இருந்தது. சீனா ஹொங் கொங்கில் நடப்பவற்றை ஹொங் கொங்கின் தலைமைச் செயலரே கையாள்கின்றார் போல வெளியில் காட்டிக் கொண்டு இருக்கின்றது.

எல்லாப் புரட்சியும் ஒரே பாணிதான்
எல்லாப் புரட்சிகளிலும் முதலில் உள்ளக வேறுபாடு உருவாகும். அது உள்ளக முறுகலைத் தோற்றுவிக்கும். பின்னர் பிளவு உண்டாகும். பிளவு பெரும் உள்ளக மோதல்களைத் தோற்றுவிக்கும். குடைப் புரட்சிக்குள் இப்போது ஒரு உள்ளக வேறுபாடு உருவாகியுள்ளது. இந்தச் சந்த்ரப்பத்தைப் பாவித்து 2014-ம ஆண்டு ஒக்டோபர் 6-ம் திகதி திங்கள் காலை ஹொங்கொங்கில் எல்லாப் பணிமனைகளுக் திறக்கப்படவேண்டும் அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை தலைமைச் செயலர் விடுத்தார். சில பிரிவினர் இதற்கு உடன்பட்டனர். சிலர் நாம் இதை ஏற்க மாட்டோம் இனி அரச பணிமனைக் கட்டிடகளுக்குள் நுழைந்து கட்டிடங்களையே ஆக்கிரமிப்போம் என எச்சரித்தனர். இது முதல் முரண்பாடாகியது. இதனால் பல கிளர்ச்சிக்காரர்கள் தாம் ஆக்கிரமித்திருந்த தெருக்களில் இருந்து விலகி விட்டனர்.எஞ்சியவர்கள் சில நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே. தம்மால் பணிமனைகளுக்கு ஊழியர்கள் செல்வதைத் தடுக்க முடியாது என உணர்ந்த  எஞ்சிய கிளர்ச்சிக்காரர்கள் பணிமனைக்குச் செல்லும் வழிகளை அடைக்காமல் வழி விட்டனர். இதனால் ஹொங் கொங் அரசின் முதற் தலையிடி நீங்கியது.  ஆனால் கிளர்ச்சிக்காரர்களின் இரு பெரும் கோரிக்கைகளான எவரும் தலைமைச் செயலர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ற கோரிக்கையும் தற்போது பதவியில் உள்ள தலைவமைச் செய்லர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குடைப் புரட்சியில் மேலும் தொய்வுகள் ஏற்பட்டு அது குடைசாயும் என்ற அச்சம் இப்போது அதிகரித்துள்ளது.

Sunday, 5 October 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டமைப்பும் ஐ.எஸ்.ஐ.எஸின் தோற்றமும் வளர்ச்சியும்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்ப்பினர்  யஸிதியப் பெண்களைக் கடத்திக் கற்பழித்துவிட்டு பாலியல் அடிமைகளாக பொதுச் சந்தையில் விற்பனை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்ப்பினர் தம்மிடம் உள்ள கைதிகளைக் கொடூரமாகக் கொன்ற காணொளிகளை வெளிவிட்டதனால் உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில் மட்டும்  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தினால் போதாது சிரியாவிலும் அவர்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா உறுதியாக நம்பியது. ஆனால் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை விரும்பாத சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் அசாத்திற்கு எதிராகப் போராடும்  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீது தாக்குதல் நடாத்தத் தயக்கம் காட்டியிருந்தன.  ஐக்கிய அமெரிக்கா     ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்த பல நாடுகளையும் இணைத்த ஒரு பரந்த கூட்டணி அமைக்கத் தீவிர முயற்ச்சி எடுத்தது. இதில் ஈரானையும் இணைத்துக் கொள்ள பெரு முயற்ச்சி எடுக்கப்பட்டது. ஆனால் ஈரான் மறுத்து விட்டது.

முதலில் இணைந்த பிரான்ஸ்
ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக பிரான்ஸும் விமானக் குண்டுத் தாக்குதல்களை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் திகதியில் இருந்து ஆரம்பித்தது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இலக்குகள் மீது கடுமையான விமானக் குண்டுத்தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. பிரேஞ்சு விமானங்கள் ஈராக்கின் ஜுமார் நகரில் உள்ள ஐ,எஸ்.ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல்கள் நாடாத்தி அதன் உறுப்பினர்களைக் கொன்றன. சைப்பிரஸில் உள்ள பிரித்தானியப் படைத்தளத்தில் இருந்து அதன் விமானங்கள் ஈராக்கில் வேவு பார்க்கும் பறப்பில் முதலில் ஈடுபட்டன. பின்னர் பிரித்தானிய விமானப்படைகள் நேரடித் தாக்குதலில் ஈடுபட பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. டச்சு விமானப் படையினரும் பின்னர் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டனர்.

பிரான்ஸைத் தொடர்ந்தன அரபு நாடுகள்
பிரான்ஸைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகள் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக விமானத் தாக்குதலை செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஆரம்பித்தன. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த நாடுகளை இணைய வைத்தது பெரும் வெற்றியாகும். ஒரு இசுலாமிய அமைப்பிற்கு எதிராகப் போர் புரிவது சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ஐந்து அரபு நாடுகளில் ஐக்கிய அமீரகம் எனப்படும் UNITED ARAB EMIRATES ஒரு சிறந்த விமானப்படையைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பெண் போர்விமான ஓட்டுனராகச் செயற்படுகின்றார். அரபு நாடுகளில் முதல் பெண் விமானி எனப் புகழ் பெற்ற Mariam Al Mansouri ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடாத்தி வருகின்றார். இவர் அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானங்களை ஓட்டுவதில் திறமைசாலியாகும்

டச்சு விமானப் படையினரும் பின்னர் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டனர். இறுதியாக அவுஸ்த்ரேலியாவும் களத்தில் குதித்தது.


பிந்தி இணைந்த பிரித்தானியா
சைப்பிரஸில் உள்ள பிரித்தானியப் படைத்தளத்தில் இருந்து அதன் விமானங்கள் ஈராக்கில் வேவு பார்க்கும் பறப்பில் முதலில் ஈடுபட்டன. பின்னர் பிரித்தானிய விமானப்படைகள் நேரடித் தாக்குதலில் ஈடுபட பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. செப்டம்பர் 26-ம் திகதி ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது தாக்குதல் நடாத்த பிரித்தானியப் பாராளமன்றம் ஒத்துக் கொண்டது. பிரித்தானிய தற்போது சிரியாவிற்குள் தாக்குதல் நடாத்த மாட்டாது. அப்படி நடாத்துவதாயின் மீண்டும் அதற்குரிய அனுமதியை பாராளமன்றத்திடமிருந்து பெற வேண்டும். பிரித்தானியப் படையினர் ஒரு மாதத்திற்கு முன்னரே ஈராக்கில் தாக்குதல் நடாத்தத் தயார் நிலையில் இருந்தனர். பிரித்தானியாவின் ஆறு Tornado jets விமானங்கள் சைப்பிரஸ் தீவில் இருந்து சென்று ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தும். பிரித்தானியாவின் Brimstone ஏவுகணைகள் விரைவாக அசையும் இலக்குகளைக் கூடத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடிய Brimstone ஏவுகணைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிரான போரில் பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றன. பிரித்தானிய விமானப்படையினர் ஏற்கனவே ஈராக்கிலும் லிபியாவிலும் ஆபத்து மிக்க தாழப்பறப்புக்களை மேற்கொண்டு இலக்குகள் மீது தக்கக் கூடியவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பிரித்தானியா அமெரிக்காவிடமிருந்து 20 Tomahawk ஏவுகணைகளையும் வாங்கவிருக்கின்றது. இந்த Tomahawk ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடியவை. அத்துடன் தேவை ஏற்படும்போது பாதையை மாற்றி இலக்கை நோக்கிப் பாயவல்லன . பிரித்தானியாவைத் தொடர்ந்து டென்மார்க்கும் பெல்ஜியமும் ஐ.எஸ்.ஐ.எஸ்இற்கு எதிரான தக்குதல்களில் இணைந்து கொண்டன. மொத்தம் பத்து நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராக தாக்குதல் தொடுக்க மேலும் முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு வழங்க ஒத்துக் கொண்டுள்ளன

 குர்திஷ் பெஷ்மேர்கா படையினர்
லிபியாவில் உள்ளூர்ப் போராளிகள் அதிபர் மும்மர் கடாஃபியின் படையினருக்கு எதிராக தாக்குதல் நடாத்த நேட்டோப் படையினர் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடாத்தினர். இதில் கடாஃபியின் படையினர் அழிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டனர்.  இதே போல் தரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெஷ்மேர்கா படையினர் தாக்குதல் நடாத்த  விமானத் தாக்குதலை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் நடாத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளைத் தோற்கடிப்பதே அமெரிக்க வெள்ளை மாளிகையின் திட்டம். ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அமெரிக்கப்படைகள் ஒரு தரைவழிப் படையெடுப்பின் மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ அழிக்க முடியும் எனக் கருதுகின்றது. ஆனால் பராக் ஒபாமா அமெரிக்கப்படையினரின் காலடிகள் ஈராக்கில் பதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்.

 ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றம்.
2003-ம் ஆண்டு சதாம் ஹுசேயின் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை வைத்திருக்கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன.  அப்போது ஈராக்கிற்கான அல் கெய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்தானியரான அபு முசாப் அல் ஜர்காவி (Abu Musab al-Zarqawi) இனால் உருவாக்கப்பட்டு அது அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடியது. பின்னர் 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அது அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாக மாற்றப்பட்டது. சுனி முசுலிம் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பவர்களையும் சியா முசுலிம்களையும் கொன்று குவித்தது.  இந்த அமைப்பால் ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கும் சிய முசுலிம்களுக்கும் இடையிலான மோதல் உருவாகி அதில் பல அப்பாவிகள் கொல்லபப்ட்டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்குதல்களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தியது. ஈராக்கிற்கான அல் கெய்தா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக் கொண்டது.

 ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சி
சிரியாவில் அரபு வசந்தம் ஆரம்பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனால் அசாத்திற்கு எதிரான மத்திய கிழக்கு சுனி ஆட்சியாளர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு  பெரும் நிதியையும் படைக்கலன்களையும் பெற்றது. பின்னர் சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகப் போராடும் இன்னும் ஒரு அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜப்ரத் அல் நஸ்ராவிற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது. இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது பல ஐயங்களை ஏற்படுத்தியது. இதன் தலைவர் அபூபக்கலர் அல் பக்தாடி  ஒரு யூதர் என்றும் அவர் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் உளவாளி என்றும் செய்திகள் வந்தன. சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது.  2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரபபைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தரனர்.  ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள பெரு நிலப்பரப்பில் ஒரு இசுலாமிய அரசை அமைப்பதை தமது இலக்காகக் கொண்டுள்ளனர். முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பத்தாயிரம் பேர் வரை இருக்கலாம் என அமேரிக்கா மதிப்பிட்டிருந்தது. தற்போது இருபதினாயிரம் முதல் முப்பத்தோராயிரம் வரை இருக்கலாம் என அமெரிக்கா சொல்கின்றது. இசுலாமிய அரசு உருவாக்குவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பிரகடனம் செய்த பின்பு அதில் இணைவதில் பல இளைஞர்கள் அக்கறை காட்டி வருகின்றனர். ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து இளைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். இசுலாமிய அரசு என ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பினர் தம் பெயரையும் மாற்றிக் கொண்டனர். இதனால் இப்போது அவர்கள் ஐ.எஸ் என அழைக்கப்படுகின்றனர்.  மேற்கு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளையிட்டு அதிகம் கரிசனை காட்டுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கு நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் அதில் இணைந்திருப்பதுதான். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தம்மிடம் அகப்பட்டவர்களை கொலை செய்யும் காணொளியில் உரையாற்றுபவர்கள் பிரித்தானிய ஆங்கிலமும் வட அமெரிக்க ஆங்கிலமும் கதைப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர்களால் இலகுவாக அமெரிக்காவிற்கோ அல்லது பிரித்தானியாவிற்கோ சென்று தாக்குதல்களை நடத்த முடியும். இதனால் மத்திய கிழக்கில் இருந்து தமது நாட்டுக்கு வரும் பயணிகளையிட்டு இவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

கொரசன் அமைப்பு
அமெரிக்காவிற்குத் தலையிடி கொடுக்கும் ஒரு போராளி அமைப்பின் பெயர் இப்போது பிரபலமாக அடிபடுகின்றது. கொரசன் என்பது அதன் பெயராகும். அதன் தலைவர் குவைத் நாட்டைச் சேர்ந்த 33 வயதான முஹ்சின் அல் ஃபத்லி. இவர் அல் கெய்தாவின் முன்னிலைத் தளபதியாக இருந்தவர். இவருக்கு மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி முன் கூட்டியே தெரிந்த சிலரில் இவரும் ஒருவர். வட ஆப்கானிஸ்த்தானிலும் இரசியாவின் செஸ்னியாவிலும் திறன் மிக்க போராளியாகச் செயற்பட்டதனால் அல் கெய்தாவில் பிரபலமானவர் இவர். விமான எதிர்ப்புத் துறையில் இவர் நிபுணத்துவம் பெற்றவர் எனச் சொல்லப்படுகின்றது. 2012-ம் ஆண்டுவரை ஈரானில் இருந்து செயற்பட்ட முஹ்சின் அல் ஃபத்லி சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தவுடன் அங்கு சென்றவராவார். இவர் முதலில் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான ஜபத் அல் நஸ்ராவுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து விலகிச் சென்றார். இவரது மெய்ப்பாதுகாவலர் சிரியப் படைகளிடம் அகப்பட்ட பின்னர் இவரைப்பற்றிய தகவல்கள் வெளிவந்தன.  முஹ்சின் அல் ஃபத்லியின் தலைமையில் கொரசன் அமைப்பு  சிரியாவின் பெரு நகரங்களில் ஒன்றான அலேப்பேயில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளும் கொரசன் அமைப்புக்கும் எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றன.

சிரியாவின் குழுக்களும் குடை அமைப்புக்களும்
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக பல ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட குழுக்கள் இருக்கின்றன சில குழுக்கள் ஒன்றிணைந்து குடை அமைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன. இருபத்தி எட்டிற்கு மேற்பட்ட சுனி முசுலிம் போராளிக் குழுக்களும் எட்டிற்கு மேற்பட்ட குர்திஷ் மக்களின் போராளிக் குழுக்களும் இருக்கின்றன. சில குழுக்கள் லிபியாவில் செய்தது போல் அமெரிக்கா வந்து சிரிய அதிபரின் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தி தமக்கு விடுதலை பெற்றுத் தரும் என நம்பியிருந்தன. ஆனால் அமெரிக்காவும் சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளும் வந்து சிரிய அரச படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தாமல் தம்முடன் இணைந்து போராடியவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவது சிரியாவில் பலரை ஏமாற்றப் படுத்தியுள்ளது.

சிரியாவும் சிரியாவிற்குள் நடக்கும் தாக்குதல்களும்
சிரியாவிற்குள் வேறு நாட்டுப் படைகள் புகுந்து அங்குள்ள போராளிக் குழுக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவதாயின் அது சிரியாவுன் அனுமதியுடனும் ஒருங்கிணைப்புடனனும் மட்டுமே நடக்க வேண்டும் என்றது சிரிய அரசு. அப்படிச் செய்யாவிடில் அது சிரியாமீதான ஒரு தாக்குதலாகவே கருதப்படும் என்றடு சிரிய அரசு. இதை இரசியாவும் ஆமோதித்திருந்தது. சிரியாவிற்குள் நடாத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து அல் அசாத்திற்கு எதிராகப் போராடிய முக்கிய குழுக்களில் ஒன்றான ஜபத் அல் நஸ்ரா என்னும் அல் கெய்தாவின் இணை அமைப்பு தன் படை நடவடிக்கைகளை நிறுத்தியதுடன் தமக்கிடையிலான இலத்திரனியல் தொடர்பாடல்களையும் நிறுத்திக் கொண்டது. அசாத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் எதிராகத் தீவிரமாகப்  போராடிய அஹ்ரர் அல் ஷாம் என்னும்  குழுவும் அமெரிக்காவின் தாக்குதல் தம்மீதும் நடாத்தப் படலாம் எனக் கருது களமுனைகளில் இருந்து வெளியேறி வருகின்றது. இப்படி அசாத்திற்கு எதிராகப் போராடும் குழுக்கள் விலகிச் செல்வதால் அசாத் வலுவடையலாம்.



ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணையும் மற்ற அமைப்புக்கள்
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீதும் மற்றும் அல் கெய்தா சார் அமைப்புக்கள் மீதும் தாக்குதல் செய்யத் தொடங்கிய பின்னர் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் மோதியும் கொண்டிருந்த பல் வேறு அமைப்புக்கள் இப்போது ஒன்றுபடத் தொடங்கிவிட்டன. அல் கெய்தாவின் தலைமக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் இப்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

 ஐ.எஸ்.ஐ.எஸின் பின்னர்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்தால் அவர்கள் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பிச் சென்று பின்னர் ஈரான், ஆப்கானிஸ்த்தான், நைஜீரியா, சோமாலியா, ஈரான் போன்ற நாடுகளிற்குத் தப்பிச் செல்லலாம். ஈராக்கில் இருந்து நேரடியாக ஈரானிற்கும் தப்பிச் செல்லலாம். பின்னர் அவர்களால் மீளத் திரள முடியும். ஆனால் சிரியாவில் அசாத்தின் ஆட்சியை அகற்றுவது எப்படி? ஈராக்கில் ஒரு உறுதியான நல்லாட்சியை ஏற்படுத்துவது எப்படி? ஆகிய கேள்விகளுக்கான விடை காண்பது சிரமம். தமது படைநடவடிக்கைள் ஓராண்டுடன் முடியாமல் தொடரலாம் என அமெரிக்கா அறிவித்து விட்டது. ஈராக்கில் ஒரு நன்கு பயிற்ச்சி பெற்ற அரச படையும் சிரியாவில் அரசிற்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு நன்கு பயிற்ச்சியும் அவசியம். இரு பயிற்சிகலையும் அமெரிக்கா வழங்கும் போது அங்கு இசுலாமிய மதத் தீவிரவாதிகளும் ஊடுருவிப் பயிற்ச்சி பெறலாம். அது மீண்டும் முதலாம் அத்தியாயம் என்றாகிவிடும்.



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...