ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்ப்பினர் யஸிதியப் பெண்களைக் கடத்திக் கற்பழித்துவிட்டு பாலியல் அடிமைகளாக பொதுச் சந்தையில் விற்பனை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்ப்பினர் தம்மிடம் உள்ள கைதிகளைக் கொடூரமாகக் கொன்ற காணொளிகளை வெளிவிட்டதனால் உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தினால் போதாது சிரியாவிலும் அவர்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா உறுதியாக நம்பியது. ஆனால் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை விரும்பாத சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் அசாத்திற்கு எதிராகப் போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீது தாக்குதல் நடாத்தத் தயக்கம் காட்டியிருந்தன. ஐக்கிய அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்த பல நாடுகளையும் இணைத்த ஒரு பரந்த கூட்டணி அமைக்கத் தீவிர முயற்ச்சி எடுத்தது. இதில் ஈரானையும் இணைத்துக் கொள்ள பெரு முயற்ச்சி எடுக்கப்பட்டது. ஆனால் ஈரான் மறுத்து விட்டது.
முதலில் இணைந்த பிரான்ஸ்
ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக பிரான்ஸும் விமானக் குண்டுத் தாக்குதல்களை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் திகதியில் இருந்து ஆரம்பித்தது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இலக்குகள் மீது கடுமையான விமானக் குண்டுத்தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. பிரேஞ்சு விமானங்கள் ஈராக்கின் ஜுமார் நகரில் உள்ள ஐ,எஸ்.ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல்கள் நாடாத்தி அதன் உறுப்பினர்களைக் கொன்றன. சைப்பிரஸில் உள்ள பிரித்தானியப் படைத்தளத்தில் இருந்து அதன் விமானங்கள் ஈராக்கில் வேவு பார்க்கும் பறப்பில் முதலில் ஈடுபட்டன. பின்னர் பிரித்தானிய விமானப்படைகள் நேரடித் தாக்குதலில் ஈடுபட பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. டச்சு விமானப் படையினரும் பின்னர் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டனர்.
பிரான்ஸைத் தொடர்ந்தன அரபு நாடுகள்
பிரான்ஸைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகள் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக விமானத் தாக்குதலை செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஆரம்பித்தன. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த நாடுகளை இணைய வைத்தது பெரும் வெற்றியாகும். ஒரு இசுலாமிய அமைப்பிற்கு எதிராகப் போர் புரிவது சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ஐந்து அரபு நாடுகளில் ஐக்கிய அமீரகம் எனப்படும் UNITED ARAB EMIRATES ஒரு சிறந்த விமானப்படையைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பெண் போர்விமான ஓட்டுனராகச் செயற்படுகின்றார். அரபு நாடுகளில் முதல் பெண் விமானி எனப் புகழ் பெற்ற Mariam Al Mansouri ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடாத்தி வருகின்றார். இவர் அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானங்களை ஓட்டுவதில் திறமைசாலியாகும்
டச்சு விமானப் படையினரும் பின்னர் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டனர். இறுதியாக அவுஸ்த்ரேலியாவும் களத்தில் குதித்தது.
பிந்தி இணைந்த பிரித்தானியா
சைப்பிரஸில் உள்ள பிரித்தானியப் படைத்தளத்தில் இருந்து அதன் விமானங்கள் ஈராக்கில் வேவு பார்க்கும் பறப்பில் முதலில் ஈடுபட்டன. பின்னர் பிரித்தானிய விமானப்படைகள் நேரடித் தாக்குதலில் ஈடுபட பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. செப்டம்பர் 26-ம் திகதி ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது தாக்குதல் நடாத்த பிரித்தானியப் பாராளமன்றம் ஒத்துக் கொண்டது. பிரித்தானிய தற்போது சிரியாவிற்குள் தாக்குதல் நடாத்த மாட்டாது. அப்படி நடாத்துவதாயின் மீண்டும் அதற்குரிய அனுமதியை பாராளமன்றத்திடமிருந்து பெற வேண்டும். பிரித்தானியப் படையினர் ஒரு மாதத்திற்கு முன்னரே ஈராக்கில் தாக்குதல் நடாத்தத் தயார் நிலையில் இருந்தனர். பிரித்தானியாவின் ஆறு Tornado jets விமானங்கள் சைப்பிரஸ் தீவில் இருந்து சென்று ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தும். பிரித்தானியாவின் Brimstone ஏவுகணைகள் விரைவாக அசையும் இலக்குகளைக் கூடத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடிய Brimstone ஏவுகணைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிரான போரில் பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றன. பிரித்தானிய விமானப்படையினர் ஏற்கனவே ஈராக்கிலும் லிபியாவிலும் ஆபத்து மிக்க தாழப்பறப்புக்களை மேற்கொண்டு இலக்குகள் மீது தக்கக் கூடியவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பிரித்தானியா அமெரிக்காவிடமிருந்து 20 Tomahawk ஏவுகணைகளையும் வாங்கவிருக்கின்றது. இந்த Tomahawk ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடியவை. அத்துடன் தேவை ஏற்படும்போது பாதையை மாற்றி இலக்கை நோக்கிப் பாயவல்லன . பிரித்தானியாவைத் தொடர்ந்து டென்மார்க்கும் பெல்ஜியமும் ஐ.எஸ்.ஐ.எஸ்இற்கு எதிரான தக்குதல்களில் இணைந்து கொண்டன. மொத்தம் பத்து நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராக தாக்குதல் தொடுக்க மேலும் முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு வழங்க ஒத்துக் கொண்டுள்ளன
குர்திஷ் பெஷ்மேர்கா படையினர்
லிபியாவில் உள்ளூர்ப் போராளிகள் அதிபர் மும்மர் கடாஃபியின் படையினருக்கு எதிராக தாக்குதல் நடாத்த நேட்டோப் படையினர் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடாத்தினர். இதில் கடாஃபியின் படையினர் அழிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டனர். இதே போல் தரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெஷ்மேர்கா படையினர் தாக்குதல் நடாத்த விமானத் தாக்குதலை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் நடாத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளைத் தோற்கடிப்பதே அமெரிக்க வெள்ளை மாளிகையின் திட்டம். ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அமெரிக்கப்படைகள் ஒரு தரைவழிப் படையெடுப்பின் மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ அழிக்க முடியும் எனக் கருதுகின்றது. ஆனால் பராக் ஒபாமா அமெரிக்கப்படையினரின் காலடிகள் ஈராக்கில் பதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றம்.
2003-ம் ஆண்டு சதாம் ஹுசேயின் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை வைத்திருக்கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன. அப்போது ஈராக்கிற்கான அல் கெய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்தானியரான அபு முசாப் அல் ஜர்காவி (Abu Musab al-Zarqawi) இனால் உருவாக்கப்பட்டு அது அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடியது. பின்னர் 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அது அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாக மாற்றப்பட்டது. சுனி முசுலிம் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பவர்களையும் சியா முசுலிம்களையும் கொன்று குவித்தது. இந்த அமைப்பால் ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கும் சிய முசுலிம்களுக்கும் இடையிலான மோதல் உருவாகி அதில் பல அப்பாவிகள் கொல்லபப்ட்டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்குதல்களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தியது. ஈராக்கிற்கான அல் கெய்தா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக் கொண்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சி
சிரியாவில் அரபு வசந்தம் ஆரம்பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனால் அசாத்திற்கு எதிரான மத்திய கிழக்கு சுனி ஆட்சியாளர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிதியையும் படைக்கலன்களையும் பெற்றது. பின்னர் சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகப் போராடும் இன்னும் ஒரு அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜப்ரத் அல் நஸ்ராவிற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது. இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது பல ஐயங்களை ஏற்படுத்தியது. இதன் தலைவர் அபூபக்கலர் அல் பக்தாடி ஒரு யூதர் என்றும் அவர் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் உளவாளி என்றும் செய்திகள் வந்தன. சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரபபைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தரனர். ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள பெரு நிலப்பரப்பில் ஒரு இசுலாமிய அரசை அமைப்பதை தமது இலக்காகக் கொண்டுள்ளனர். முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பத்தாயிரம் பேர் வரை இருக்கலாம் என அமேரிக்கா மதிப்பிட்டிருந்தது. தற்போது இருபதினாயிரம் முதல் முப்பத்தோராயிரம் வரை இருக்கலாம் என அமெரிக்கா சொல்கின்றது. இசுலாமிய அரசு உருவாக்குவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பிரகடனம் செய்த பின்பு அதில் இணைவதில் பல இளைஞர்கள் அக்கறை காட்டி வருகின்றனர். ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து இளைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். இசுலாமிய அரசு என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தம் பெயரையும் மாற்றிக் கொண்டனர். இதனால் இப்போது அவர்கள் ஐ.எஸ் என அழைக்கப்படுகின்றனர். மேற்கு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளையிட்டு அதிகம் கரிசனை காட்டுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கு நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் அதில் இணைந்திருப்பதுதான். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தம்மிடம் அகப்பட்டவர்களை கொலை செய்யும் காணொளியில் உரையாற்றுபவர்கள் பிரித்தானிய ஆங்கிலமும் வட அமெரிக்க ஆங்கிலமும் கதைப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர்களால் இலகுவாக அமெரிக்காவிற்கோ அல்லது பிரித்தானியாவிற்கோ சென்று தாக்குதல்களை நடத்த முடியும். இதனால் மத்திய கிழக்கில் இருந்து தமது நாட்டுக்கு வரும் பயணிகளையிட்டு இவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
கொரசன் அமைப்பு
அமெரிக்காவிற்குத் தலையிடி கொடுக்கும் ஒரு போராளி அமைப்பின் பெயர் இப்போது பிரபலமாக அடிபடுகின்றது. கொரசன் என்பது அதன் பெயராகும். அதன் தலைவர் குவைத் நாட்டைச் சேர்ந்த 33 வயதான முஹ்சின் அல் ஃபத்லி. இவர் அல் கெய்தாவின் முன்னிலைத் தளபதியாக இருந்தவர். இவருக்கு மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி முன் கூட்டியே தெரிந்த சிலரில் இவரும் ஒருவர். வட ஆப்கானிஸ்த்தானிலும் இரசியாவின் செஸ்னியாவிலும் திறன் மிக்க போராளியாகச் செயற்பட்டதனால் அல் கெய்தாவில் பிரபலமானவர் இவர். விமான எதிர்ப்புத் துறையில் இவர் நிபுணத்துவம் பெற்றவர் எனச் சொல்லப்படுகின்றது. 2012-ம் ஆண்டுவரை ஈரானில் இருந்து செயற்பட்ட முஹ்சின் அல் ஃபத்லி சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தவுடன் அங்கு சென்றவராவார். இவர் முதலில் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான ஜபத் அல் நஸ்ராவுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து விலகிச் சென்றார். இவரது மெய்ப்பாதுகாவலர் சிரியப் படைகளிடம் அகப்பட்ட பின்னர் இவரைப்பற்றிய தகவல்கள் வெளிவந்தன. முஹ்சின் அல் ஃபத்லியின் தலைமையில் கொரசன் அமைப்பு சிரியாவின் பெரு நகரங்களில் ஒன்றான அலேப்பேயில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளும் கொரசன் அமைப்புக்கும் எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றன.
சிரியாவின் குழுக்களும் குடை அமைப்புக்களும்
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக பல ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட குழுக்கள் இருக்கின்றன சில குழுக்கள் ஒன்றிணைந்து குடை அமைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன. இருபத்தி எட்டிற்கு மேற்பட்ட சுனி முசுலிம் போராளிக் குழுக்களும் எட்டிற்கு மேற்பட்ட குர்திஷ் மக்களின் போராளிக் குழுக்களும் இருக்கின்றன. சில குழுக்கள் லிபியாவில் செய்தது போல் அமெரிக்கா வந்து சிரிய அதிபரின் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தி தமக்கு விடுதலை பெற்றுத் தரும் என நம்பியிருந்தன. ஆனால் அமெரிக்காவும் சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளும் வந்து சிரிய அரச படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தாமல் தம்முடன் இணைந்து போராடியவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவது சிரியாவில் பலரை ஏமாற்றப் படுத்தியுள்ளது.
சிரியாவும் சிரியாவிற்குள் நடக்கும் தாக்குதல்களும்
சிரியாவிற்குள் வேறு நாட்டுப் படைகள் புகுந்து அங்குள்ள போராளிக் குழுக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவதாயின் அது சிரியாவுன் அனுமதியுடனும் ஒருங்கிணைப்புடனனும் மட்டுமே நடக்க வேண்டும் என்றது சிரிய அரசு. அப்படிச் செய்யாவிடில் அது சிரியாமீதான ஒரு தாக்குதலாகவே கருதப்படும் என்றடு சிரிய அரசு. இதை இரசியாவும் ஆமோதித்திருந்தது. சிரியாவிற்குள் நடாத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து அல் அசாத்திற்கு எதிராகப் போராடிய முக்கிய குழுக்களில் ஒன்றான ஜபத் அல் நஸ்ரா என்னும் அல் கெய்தாவின் இணை அமைப்பு தன் படை நடவடிக்கைகளை நிறுத்தியதுடன் தமக்கிடையிலான இலத்திரனியல் தொடர்பாடல்களையும் நிறுத்திக் கொண்டது. அசாத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் எதிராகத் தீவிரமாகப் போராடிய அஹ்ரர் அல் ஷாம் என்னும் குழுவும் அமெரிக்காவின் தாக்குதல் தம்மீதும் நடாத்தப் படலாம் எனக் கருது களமுனைகளில் இருந்து வெளியேறி வருகின்றது. இப்படி அசாத்திற்கு எதிராகப் போராடும் குழுக்கள் விலகிச் செல்வதால் அசாத் வலுவடையலாம்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணையும் மற்ற அமைப்புக்கள்
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீதும் மற்றும் அல் கெய்தா சார் அமைப்புக்கள் மீதும் தாக்குதல் செய்யத் தொடங்கிய பின்னர் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் மோதியும் கொண்டிருந்த பல் வேறு அமைப்புக்கள் இப்போது ஒன்றுபடத் தொடங்கிவிட்டன. அல் கெய்தாவின் தலைமக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் இப்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸின் பின்னர்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்தால் அவர்கள் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பிச் சென்று பின்னர் ஈரான், ஆப்கானிஸ்த்தான், நைஜீரியா, சோமாலியா, ஈரான் போன்ற நாடுகளிற்குத் தப்பிச் செல்லலாம். ஈராக்கில் இருந்து நேரடியாக ஈரானிற்கும் தப்பிச் செல்லலாம். பின்னர் அவர்களால் மீளத் திரள முடியும். ஆனால் சிரியாவில் அசாத்தின் ஆட்சியை அகற்றுவது எப்படி? ஈராக்கில் ஒரு உறுதியான நல்லாட்சியை ஏற்படுத்துவது எப்படி? ஆகிய கேள்விகளுக்கான விடை காண்பது சிரமம். தமது படைநடவடிக்கைள் ஓராண்டுடன் முடியாமல் தொடரலாம் என அமெரிக்கா அறிவித்து விட்டது. ஈராக்கில் ஒரு நன்கு பயிற்ச்சி பெற்ற அரச படையும் சிரியாவில் அரசிற்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு நன்கு பயிற்ச்சியும் அவசியம். இரு பயிற்சிகலையும் அமெரிக்கா வழங்கும் போது அங்கு இசுலாமிய மதத் தீவிரவாதிகளும் ஊடுருவிப் பயிற்ச்சி பெறலாம். அது மீண்டும் முதலாம் அத்தியாயம் என்றாகிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment