Friday, 28 February 2014

பாக்கிஸ்த்தான் சவுதிக்கு அணுக் குண்டு விற்பனை செய்யுமா?

பாக்கிஸ்த்தானில் சியா முசுலிம்களும் சுனி முசுலிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். எண்பது விழுக்காடு சுனி முசுலிம்களைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் சுனி முசுலிம்கள் ஒதுக்கப்படாத நிலை இருந்தது. பங்களா தேசப் பிரிவினையின் போது பாக்கிஸ்த்தானிய அதிபராக இருந்த யஹியா கானும் பெனாஸிர் பூட்டோவின் கணவரான முன்னாள் பாக்கிஸ்த்தானிய அதிபர் அசிஃப் அல் ஜதாரி ஆகியோர் சியா முசுலிம்களே. அணுக்குண்டு வல்லரசாக முயலும் சியா ஈரானிற்கும் பிராந்திய வல்லரசாக முயலும் சுனி சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டியில் பாக்கிஸ்த்தான் இனி வரும் காலங்களில் பெரும் பங்காற்றவிருக்கின்றது.

1987இன் பின்னர் பாக்கிஸ்த்தானில் மதவாதம் தீவிரமடைந்த போது சியா-சுனி மோதல்கள் பல நடைபெற்றன. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுமளவிற்கு மோதல்கள் தீவிரமடைந்தன. இந்த மோதல்களுக்கு அல் கெய்தா ஒரு புறமும் சவுதி அரேபியா மறுபுறமும் நின்று சுனி முசுலிம்களுக்கு உதவின.

சியா முசுலிம்களுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சவுதி அரேபியா தனது எதிரி நாடான  சிய முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன் பல முனைகளில் போட்டி போடுகின்றது. இந்த இரு நாடுகளின் போட்டிக்களமாக பல மத்திய கிழக்கு நாடுகள் மாறிவருகின்றன.
ஈரான் தொழிழ்நுட்பத்துறையில் வளர்ச்சியடைந்து தானகவே பல படைக்கலன்களை உருவாக்கி வருகின்றது. சவுதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து பல புதிய தரப் படைக்கலன்களை வாங்கிக் குவிக்கின்றது.

ஈரானின் அணுக் குண்டு உற்பத்தியை அமெரிக்கா அழித்து ஒழிக்க வேண்டும் என சவுதி அரேபியா விரும்பியது. ஈரானுக்கு எதிரான தாக்குதல் தமது நாட்டுக்கு எதிராக இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலைத் அதிகரிக்கும் எனக் கருதிய அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை விரும்பவில்லை. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் தாம் அமெரிக்கா மீது தாக்குதல் நடாத்துவோம் எனப் பகிரங்கமாக அறிவித்தது. இதனால் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியைத் தடுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடையை நடைமுறைப்படுத்தின. இதனால் ஈரானியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட அது அமெரிக்காவுடன் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இருதரப்பும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தன. ஈரான் பதப்படுத்திய முழு யூரேனியத்தையும் அழிக்க வேண்டும் என சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் வலியுறுத்தின. அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்க சவுதி திட்டமிடுகின்றது. சிரியாவில் ஆட்சி செய்யும் அல் பஷார் அசாத் சியா முசுலிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனக் குழுமத்தை சேர்ந்தவர். இவரை அகற்றி சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சுனி முசுலிம்களின் கைக்களில் ஆட்சியை ஒப்படைக்க அமெரிக்கா உதவி செய்யாததும் சவுதியை ஏமாற்றவும் ஆத்திரமும் அடைய வைத்தது. இதனால் சவுதி அரேபியா அமெரிக்காவுடனான தனது நெருங்கிய உறவை ஒரு புறம் வைத்து விட்டு தனது பாதுகாப்புத் தொடர்பாக மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியது. இரசியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. தனது நட்பு நாடும் சுனி முசுலிம் நாடான எகிப்தையும் இரசியாவுடன் நட்பைப் புதுப்பிக்க வைத்தது.

சவுதி அரேபியா தனது பாதுகாப்புக்கு மாற்று வழி தேடும் முயற்ச்சியில் இன்னும் ஓர் அம்சமாக சவுதி இளவரசரும் துணைத் தலைமை அமைச்சருமான சல்மன் பின் அப்துல் அசீஸ் 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாத நடுப்பகுதியில்பாக்கிஸ்த்தானிற்கான ஒரு பயணத்தை மேற்கொண்டார். சவுதி அரச பிரமுகர் பாக்கிஸ்த்தானிற்கு இப்போது பயணம் செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது எனக் கருதப்படுகின்றது.

உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட நாடுகளின் ஒன்றான பாக்கிஸ்த்தானின் உறவும் ஒத்துழைப்பும் சவுதி அரேபியாவிற்குப் பெரிதும் பயன்படும். அணுக்குண்டு வைத்திருக்கும் ஒரே ஒரு நாடு பாக்கிஸ்த்தானாகும். கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியா பாக்கிஸ்த்தானின் அணுவலு உற்பத்தியில் முதலீடு செய்து வருகின்றது. சவுதியின் துணைத் தலைமை அமைச்சர் சல்மன் பின் அப்துல் அசீஸின் பாக்கிஸ்த்தானியப் பயணத்தின் போது சவுதி அரேபிய போர் விமானிகளுக்கு பாக்கிஸ்த்தான் பயிற்ச்சி வழங்குவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்துடன் பாக்கிஸ்த்தானியப் பயிற்ச்சி விமானங்களை சவுதிக்கு விற்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

தனது பாதுகாப்பிற்கான மாற்று வழிகளில் சவுதி சீனாவிடமிருந்து புதிய தர தரையில் இருந்து தரைக்கு வீசக் கூடிய ஏவுகணைகளையும் இரகசியமாக வாங்கிக் குவித்துள்ளது.

மத்திய கிழக்கு தொடர்ந்து எரியும் என எதிர்பார்க்கலாம்.

Sunday, 23 February 2014

காணாமல் போன அதிபரும் கதறிய உக்ரேயின் சிதறுமா என்ற கேள்வியும்.

2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் திகதி உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யவிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆரம்பமான உக்ரேயின் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் திகதி திடீரென பெரும் திருப்பத்துக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரேயின் பாராளமன்றத்தின் அதிரடி நடவடிக்கைக்கள்
உக்ரேயினைத் தன்பக்கம் இழுக்கப் பெரு முயற்ச்சி செய்து கொண்டிருந்த இரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும். அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை (Oleksandr V. Turchynov) தற்காலிக அதிபராக்கியது. இதற்கு முன்னரே நிலைமை தனக்கு எதிராகத் திரும்புகிறது என உணர்ந்த விக்டர் யனுகோவிச் தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார். உக்ரேயினில் நிகழந்த மற்ற அதிரடி மாற்றங்கள்:

  • சிறையில் இருந்த முன்னாள் தலைமை அமைச்சர் ஜூலியா தமொஷென்கோவை ( Yulia V. Tymoshenko) விடுவித்தது.
  • பதவியில் இருந்து விரட்டப்பட்ட விக்டன் யனுக்கோவைச்சை கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • விக்டர் யனுகோவிச்சிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட உற்துறை அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கியது. 
  • உக்ரேனியப் படைத்துறை தாம் அரசியல் மாற்றங்களில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தது.
  • வெளியுறவுத் துறை அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கியது.
  • இரசியாவின் முகத்தில் கரிபூச சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைச் சட்டத்தை இரத்துச் செய்தது. 
  • சுகாதாரத் துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
  • ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • கல்வித்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
  • மே மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 
இரகசியச் சதி
உக்ரேயினில் ஆட்சி மாற்றத்திற்கு திரைமறைவில் ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, போலாந்து ஆகிய நாடுகள் செயற்பட்டன. விக்டர் யனுகோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இடைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன. பன்னாட்டு நாணய நிதியம் அரச உடமையான நிறுவனங்களை தனியார் மயமாக்கும் படி உக்ரேயினின் அரசை நிர்ப்பந்திக்கும். அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் போது மேற்கு நாடுகள் அவற்றில் முதலீடு செய்து இலாபமீட்டும்.

அடிவயிற்றில் அடிவாங்கிய இரசியா தனது படையை அனுப்புமா?
உக்ரேயினில் நடந்து கொண்டிருக்கும் அதிரடி மாற்றங்கள் உக்ரேயினை இரசியாவின் பிடியில் இருந்து விடுவித்து அதை மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் இணைப்பதற்கு வழி செய்வதாக அமைகின்றது.  மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பின்னணியில் இருந்து செய்த திரைமறைவு நடவடிக்கைகள்தான் விக்டர் யனுகோவிச்சைப் பதவியில் இருந்து விரட்டியது என்பதில் ஐயமில்லை. இரசியாவின் பாதுகாப்பிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின் நேட்டோப் படைக் கூட்டமைப்பில் இணைந்தால் அது இரசியாவின் உலக அரங்கில் மீண்டும் செய்ய விரும்பும் ஆதிக்கத்திற்கு பேரடியாகும். உக்ரேயின் என்பதன் பொருள் எல்லை நாடு என்பதாகும். இரசியாவின் எல்லையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் என்பது. இரசியா விரும்பக்கூடிய ஒன்றல்ல. இரசியக் கடற்படையின் கருங்கடல் பிரிவின் தலைமையகம் உக்ரேயினின் செவெரோப்போல் நகரில் இருக்கிறது. உக்ரேயின் இரசியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை அதன் மென்மையான அடிவயிறு என்கிறார்கள் படைத்துறை நிபுணர்கள். இரசியா மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை உக்ரேயினூடாகவே செய்கின்றது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொண்டலினா றைஸ் இரசியா உக்ரேயினில் படைத்துறைத் தலையீடு செய்தால் அது பெரும் ஆபத்தான தவறாக அமையும் என்றார். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரும் இரசியா உக்ரேயினில் தலையிடக் கூடாது எனத் தெரிவித்தார். உக்ரேயினில் நடந்த ஆட்சி மாற்றத்தை இரசியா ஒரு பயங்கரவாதிகளின் படைக்கலன் ஏந்திய சதி என இரசியா விமர்சித்துள்ளது. அத்துடன் உக்ரேயினின் கிரிமியாப் பிரதேச மக்கள் தம்மைப் பாதுகாக்கும்படி இரசியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிரிமியாவில் இரசியப் படைத்தளம் இருக்கின்றது. 1954-ம் ஆண்டின் முன்னர் கிரிமியா இரசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் குருசேவ் அதத உக்ரேயினுடன் இணைத்தார்.

உக்ரேயின் பிளவுபட்டுச் சிதறுமா?
2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23-ம் திகதி உக்ரேயினில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்களை உக்ரேயினில் இரசியர்கள் பெரும்பகுதியாக் வாழும் பகுதியில் உள்ள பிரதேச அதிகார மையங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேயினில் கிழக்குப் பகுதி முழுவதிலும் சில தெற்குப் பகுதிகளிலும் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்கள் தாம் இனி உக்ரேயின் அரசிற்கு கீழ்படிந்து நடக்க மாட்டோம் வரி செலுத்த மாட்டோம் என அறிவித்து விட்டனர். சிலர் ஆர்ப்பாட்டங்களும் செய்யத் தொடங்கி விட்டனர். உக்ரேயின் பிளவு படக்கூடாது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொண்டலினா றைஸ் தெரிவித்துள்ளார். உக்ரேயில் திடத்தன்மை நிலவ அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பன்னாட்டு நாணய நிதியத்துடனும் இரசியாவுடனும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய உக்ரேயின் அரசை எதிர்க்கும் பிராந்தியம்.
இரசியாவிற்கு மும் முனை ஆபத்து
இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின் இரசியாவிற்கு எதிரான நேட்டோப் படைக் கூட்டமைப்பில் இணையும் அபாயம் இப்போது தோன்றியுள்ளது. அத்துடன் தனது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியா என்னும் ஒரு பெரிய பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கும் கனவிற்கு பெரும் அடி விழுந்துள்ளது. உக்ரேயினைஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிடாமல் தடுத்து தனது யூரோ ஏசியாக் கூட்டமைப்பில் இணைக்க இரசியா எண்ணி இருந்தது. இவை எல்லாவற்றிலும் மேலாக இரசியாவிலும் அரசியல் சீர் திருத்தம் கோரி மக்கள் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனுக்கு எதிராகக் கிளம்பலாம்.

Saturday, 22 February 2014

தெலுங்கானா ஏன் பிரிந்தது?

இசைக்கு ஏற்ற இனிய மொழியான தெலுங்கைப் பேசும் மக்கள் ஒரே மாநிலத்தில் ஒன்றாக வாழ முடியாமல் இரண்டாகப் பிரிந்துள்ளனர். இந்தியப் பாராளமன்றத்தின் வரலாற்றில் ஒரு மோசமான நிகழ்வாக தெலுங்கானாவை தனி மாநிலமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதைத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. ஆனால் காங்கிரசுக்குப் பயந்து எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்தது.

தன் கட்சிக்காரர்களின் கால்வாரிய காங்கிரசு.
தற்போது ஆந்திர மாநிலத்தில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியே நடக்கின்றது. முதலமைச்சர் கிரான் குமார் ரெட்டியும் தெலங்கானாப் பிரிவை எதிர்த்தார் காங்கிரசுக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் சிரஞ்சீவி தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்படுவதை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவருடன் ஆந்திரப் பிரதேசத்தின் காங்கிரசுப் பிரபலங்களும் துணை அமைச்சர்களுமான பல்லம் ராஜு, புரந்தேஸ்வரி, எள்ளூர் கே எஸ் ராஜா, அரக்கு கே சி டியோ ஆகிய தெலங்கானாப் பிரிவினையை எதிர்த்தனர்.தெலங்கானாப் பிரிவினையை ஆதரித்த மாயாவதி உத்தரப் பிரதேச மாநிலத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் என்றார்.

ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த தெலங்கானாவை (தெலுங்கான எனவும் கூறுவர்) இந்திய அரசு ஒரு தனி மாநிலமாப் பிரித்து இந்திய அரசின் 29வது மாநிலத்தை உருவாக்கியுள்ளது. தெலங்கானவில் மக்கள் ஆர்பரித்து மகிழ்ச்சியாக தமது புதிய மாநிலத்தின் உதயத்தைக் கொண்டாட எஞ்சிய ஆந்திரப் பிரதேசமான சீமந்திரா மக்கள் தமது மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை துக்க நாளாக கழித்தனர். 1969-ம் ஆண்டு ஆரம்பித்த தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை பல போராட்டங்களின் பின்னர் நிறைவேறியுள்ளது.

Cut & Paste.
1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்ற போது ஐதராபாத்தின் நிசாம் தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசம் இந்திய அரசுடன் இல்லாமல் ஒரு தனி நாடாக இருக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை பிரித்தானியா ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்தியா1948-ம் ஆண்டு ஐதராபாத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதுவே தெலங்கானா ஆகும். 1956இல் இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களின் எல்லைகள் வகுக்கப்பட்ட போது ஆந்திரப் பிரதேசம் உருவானது. அப்போது தெலங்கானா மக்களுக்கும் சீமாந்திரா மக்களுக்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தெலங்கானாவா சீமந்திராவா? ஏன் இந்தப் பிரிவு?
அரை நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த ஒரு மொழி பேசும் மக்கள் ஏன் பிரிந்தனர்? தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஒன்பது மாவட்டங்கள், மதராஸ் மாகாணத்தில் இருந்து பன்னிரண்டு மாவட்டங்கள், ஒன்று பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த ஏனாமில் இருந்து ஒரு மாவட்டம் ஆகியவற்றை இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழி ஒன்றாக இருந்த போதிலும் சீமந்திரா மக்கள் என்றும் தெலங்கானா மக்கள் என்றும்  இரு பிரிவினரும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக் கொண்டனர்.சீமந்திரா மக்கள் தாம் தெலங்கானா மக்களிலும் பார்க்க கலாச்சாரத்தால் கல்வியால் பண்பாட்டால் உயர்ந்தவர்கள் என்றும் கருதினார்கள். ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் சீமந்திரா மக்கள் கதாநாயகர்களாகவும் தெலங்கான மக்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தனர்.  தெலங்கான மக்கள் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தெலங்கானா மக்க்களின் பட்டுக்கம என்னும் பண்டிகையை அரசு புறக்கணித்தது. தெலங்கானா மக்கள் சீமந்திரா மக்களை ஏமாற்றுக்காரர்களாகவும் பணத்தாசை பிடித்தவர்களாகவும் கருதுகின்றனர். தெலங்கானா மக்கள் தாம்மை கள்ளம் கபடமற்றவர்களாகவும் மரபு வழி முறையில் ஒழுகுபவர்களாகும் கருதுகின்றனர். சீமந்திரா மக்கள் தாம் கடின உழைப்பாளிகள் எனவும் தெலங்கானா மக்கள் சோம்பேறிகள் எனவும் கருதுகின்றனர். சீமந்திராவில் உள்ள தலித்துக்கள் தாம் தெலங்கானாத் தலித்துக்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் எனக் கருதுகின்றனர்.  தெலங்கான மக்கள் நவராத்திரி விழாவிற்கும் சீமந்திரா மக்கள் தைமாதத்தில் வரும் மகர சங்கிராந்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தெலங்கானா மும்பையத் தலைநகராகக் கொண்ட மகாராஸ்ட்ரா மாநிலத்திற்கு அண்மையாகவும் சீமந்திரா பிரதேசம் தமிழ்நாட்டுக்கு அண்மையாகவும் இருப்பதால் இவர்களின் மொழிவழக்கில் சிறிய வேறுபாடு உண்டு. தெலங்கானா மக்களின் தெலுங்கு மொழியில் உருது மொழி கலந்துள்ளதாகக் குற்றம் சாட்டுவதும் உண்டு. சீமாந்திரா மக்கள் தம்மைச் சுரண்டுவதாகவும் தெலங்கானா மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம்
தெலங்கானா என்பதன் பொருள் தெலுங்கர்களின் நாடு என்பதாகும். 1969-ம் ஆண்டு தெலங்கானா கோரிக்கையை முன்வைத்து ஒஸ்மானியாப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடங்கினர். இதில் மற்ற மாணவர்களும் இணைய காவற்துறை துப்பாக்கிச் சூடு நடாத்திய போது முன்னூற்று ஐபம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். போராட்டம் அடக்கப்பட்டாலும் தெலங்கான மக்கள் தமது தனி மாநிலக் கோரிக்கையைக் கைவிடவில்லை. 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி உருவாக்கப்பட்டது. 19900-ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் தனித் தெலங்கான மாநிலம் உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தனர். பின்னர் காங்கிரசுக் கட்சியும் அதற்குப் போட்டியாக தனித் தெலங்கானக் கோரிக்கையை ஆதரித்தது. தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.

வாக்குவேட்டை அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள்
2004ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக வாக்குறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. காங்கிரசுக் கட்சி தனி மாநிலம் உருவாக்காதமையினால் கூட்டணி இரண்டு ஆண்டுகளில் உடைந்தது. 2009 பொதுத் தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்தது. புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா உருவாக்குவோம் என வாக்குறுதி கொடுத்தது. நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தது.மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தனித் தெலங்கானக் கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார். இதை ஒட்டி பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை அப்போதைய இந்திய மைய அரசின் உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம்  வெளியிட்டார். இந்த வாக்குறுதியன் படி தெலங்கானா 2014 பெப்ரவரி மாதம் தனிமாநிலமாக்கப்பட்டது. காங்கிரசுக் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிந்த படியால் காங்கிரசின் செல்வாக்கு தெலங்கானாவில் அதிகரிக்கப்படும் என்றும் சீமன்திராவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கள்ளத்தனமாக நிறைவேற்றப்பட்டதா?
தெலங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இந்திய மக்களவையில் நிறைவேற்ற விடாமல் சீமந்திரா பாராளமன்ற உறுப்பினர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். பாராளமன்றத்தில் மிளகுத்தூள் வீசப்பட்டது. அவைத் தலைவரின்(சபாநாயகர்) ஒலிவாங்கி பிடுங்கி எறியப்பட்டது. பாராளமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. பாராளமன்ற நிகழ்வுகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதைத் தடை செய்து விட்டு குரல் மூலமான வாக்கெடுப்பினால் நிறைவேற்றப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநில சட்ட சபை தெலங்கானாவைப் பிரிப்பதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

சட்டச் சிக்கல் தொடரலாம்
இந்தியப் பாராளமன்றத்தின் லோக் சபா எனப்படும் மக்களவையில் நிறைவேற்றிய தெலங்கானாவைத் தனி மாநிலமாக்கும் தீர்மானத்தை ராஜ்ய சபா எனப்படும் மேலவை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியது. இதனால் இந்தச் சட்டம் மீண்டும் மக்களவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். சில அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெலங்கான சட்டத்திற்காக அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்கின்றனர். இதனால் இந்தப் பிரச்சனை நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம். பாரதிய ஜனதாக் கட்சி தெலங்கானாவிற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும் எனச் சொல்கின்றது. ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராகச் சிலகாலம் வைத்திருப்பதானால் அதற்கு இந்திய அரசிய்லமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது அது ஒரு யூனியன் பிரதேசமாக்கப்படவேண்டும் என அரசமைப்புச் சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

பேரினவாதிகள் பிரித்து ஆளுகின்றார்களா?
இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. அதன் மக்கள் தொகை ஜேர்மனியின் மக்கள் தொகைக்கு ஒப்பானது. மற்ற நான்கு பெரிய மாநிலங்களும் வடக்கில் இருக்கின்றன. இந்த மாநிலத்தைப் பிரிப்பது வட இந்தியர்களின் பேரினவாதக் கொள்கைக்கு உகந்ததாகும். ஒன்றிணைந்த ஆந்திரப்பிரதேசத்தில் 84.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதில் தெலங்கான மக்கள் தொகை 35.28 மில்லியன்கள். இரு மாநிலங்களும் சிறிது காலம் ஹைதராபாத்தை பொதுவான தலைநகராகக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சீமந்திரா தெலுங்கர்கள் பாரிய முதலீட்டைச் செய்துள்ளனர். ஹைதராபாத்தை ஒட்டியும் நதிநீர்ப்பங்கீட்டை ஒட்டியும் இரு பிரிவினருக்கும் இடையில் பெரும் மோதல் வெடிக்கலாம். இப்போது சீமந்திரா தலைநகர் ஒன்று இல்லாமல் இருக்கிறது. சீமந்திராவில் இரு பிரதேசங்கள் இருக்கின்றன.  ஒன்று ராயசீலம் எனப்படும். மற்றது கரையோர ஆந்திரப் பிரதேசம் ஆகும். ராயசீலப் பிராந்தியத்தில் பகுதியில் வாழும் மக்கள் சீமந்திராவின் தலைநகராக ராயசீலத்தின் குர்னூல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Friday, 14 February 2014

காதலும் ஜெனீவாத் தீர்மானம் போலே!!!

அகமென்றும் புறமென்றும்
காதலும் வீரமும் தமிழர்
வாழ்வியலில் இரு கண்கள் அன்றோ
இந்திர விழா மன்மதன் விழா - எனக்
காதலுக்கு விழா எடுத்தவர் நாம் அன்றோ

அறம் பொருள் இன்பம் என
மூன்றில் ஒரு பகுதியைக்
காதலுக்குக் கொடுத்தவரும் தமிழர் அன்றோ
இரவுக்குறி பகற்குறி என
காதலர் சந்திப்புக்களுக்கு
கோட்பாடுகள் வகுத்தது தமிழ்ப்பண்பாடு அன்றோ
நகக்குறியென்றும் பற்குறியென்றும்
இணைந்த இன்பத்தை நினத்துப் பார்த்து மகிழ்ந்தவர்
எம் தமிழ்ப் பெண்கள் அன்றோ

ஏறு தழுவி மணம்முடித்தல்
கல் தூக்கி மணம்முடித்தல்
பரிசல் கொடுத்து மணம்முடித்தல்
மடலேறி மணம்முடித்தல்
போரில் வென்று மணம்முடித்தல்
என காதலரை இணைத்தவர் நாம் அன்றோ
ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கத்தை வலியுறுத்தி
மனம் விரும்பியவரை தடையின்றி அடைய
திணைக்கலப்பு மணமும் செய்தவர் நாம் அன்றோ

எந்தையும் நிந்தையும் அந்நியரானாலும்
யாயும் ஞாயும் அறியாதவரானாலும்
மண்ணோடு நீர்போல் மனங்களைக்
காதலில் இணைய அனுமதித்தோர் தமிழர் அன்றோ

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமாக
வந்திருந்து மணம் பேசி
முன்னறியாதவரை இணைத்தல்
ஆரியம் தந்த அறிவீனமன்றோ

ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும்
உள்ளத்தால் இணைவதைக் காதலென்கின்றனபழம்பெரும் தமிழிலக்கியங்கள்
இன்று எம் எல்லோரினதும் ஒத்த நிலையா
அன்பை நாம் பொழிய வேண்டியதும்
எம் தேசியத்தில் அன்றோ

மழைதரு மேகங்கள் கருங்குழலாய்
கடலலைகள் மல்லிகை மாலைகளாய்
வண்ண வானவில்லே நெற்றியாய்
நீர் நிலைகளில் கதிரும் நிலவும்
தரும் விம்பங்கள் கண்களாய்
புள்ளினங்கள் ஆங்கே காதோரக் குழலாய்
உப்பளங்கள் வதனமாய்
முக்கனிகளும் இதழ்களாய்
நீரோடைகள்தான் கழுத்து நகையாய்
பசுமையான வயல்கள்
மரகத மணி பதித்த ஆடையதாய்
வன்னி விருந்தோம்பல் மார்பதாய்
தேன் மலர்களும் மீன்வளங்களும் கரங்களாய்
வழிபாட்டிடங்கள் வளையல்களாய்
வற்றாக் குளங்களும்இடைகளாய்
கரும்பு வளமும் கனிம வளமும் கால்களாய்
இயற்கைத் துறைமுகங்கள் பாதங்களாய்
பாடும்புள்ளினங்கள் மேகலையாய்
ஆடும் மயில்கள் மெட்டிகளாய் - அழகிய எம்
தேசமகள் ஆங்கே துணையின்றி வாடுகின்றாள்
காதலிப்போம் காதலிப்போம் அவளை
மனதாரக் காதலிப்போம்

அழகிய எம் தேசிய மகளை
அலங்கரித்த தன்னாட்சி
என்னும் அணிகலன்கள் - அன்று
படைக்கலன்கள் எல்லாம்
மௌனித்துப் போனதால்
கலைந்து போனதன்றோ

ஜெனிவாக் கிலுகிலுப்பையை நம்பியிராமல்
தனியாய் ஓர் அரசு என்னும் திருமண பந்தத்தில்
எம் தேசமகளை கைப்பிடிப்பது எம் கடன் அன்றோ

அமெரிக்கரும் பிரித்தானியரும் யாராகினரோ
இந்தியரும் சீனரும் எம்முறைக் கேளிர்
அவர்தம் ஆதரவும் எதிர்ப்பும்
எம் தேசமகளையும் தன்னாட்சியையும்
இணைக்கும் என நம்புதல் மடமையன்றோ

திங்கள் இல்லா மாலை கருங்குடையான்
பயங்கரவாதம் என அன்று ஓதி
எம் விடுதலையின் கால்வாரி
சிங்களம் தன்னைப் புணர்ந்தாலும்
அறிவாய் நன்றாய் ஆரிய நரித்தனம்

ஜெனிவா தன்னில் தீர்மானித்தாலும்
தீராது ஒழியாத் துயரென்பதாலும்
தேச மங்கை இடர் பெரும் தீயேன்பாய்
அறிந்தோம் என தோழா நீ முழங்கு

என்றும் மாறா அயோக்கியத்தனம்
இத்தாலி கொடுக்கோல் வெள்ளைச்சி
தேர்தலோடு தோற்று ஓடினாலும்
ஆரிய அயோக்கியத்தனம்
மாறாது தொடரும் வழக்கமென
அறிவாய் நீ என் தோழா

தமிழர்க்கு உதை மாறாத உதை
நிறுத்து அதை உன் கடன்
என உன் மனம் கொள்
ஈழவர் உதை இனித் தொடங்க
தேசமகளை நீ காதலி தோழா

அக நூலகத்தில் முகநூலாவாள்
இணைய முகவரி கொடுப்பாள்
இணைந்து முக வரி தொடுப்பாள்
மின்னஞ்சல் விடுத்து என்நெஞ்சில்
பொன்னூஞ்சல் ஆடிடுவாள்
ஆனாலும் அக்காதலிலும்
தேசிய மகளைக் காதலித்தல்
பெருங்கடன் என்றுணர்வாய் தோழா

சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடிப்பதால்
ஆசை காட்டி ஏமாற்றிச் சாகடிப்பதால்
இறுதியில் பொய்யாய் முடிவதால்
சிலர் காதலும் ஜெனிவாத் தீர்மானம்போலே
தேசியத்தின் மீது வைக்கும் காதல்
என்றும் இனிக்கும் சரித்திரத்தில் நிலைக்கும்
என்றுணர்வாய் என் தோழா

Monday, 10 February 2014

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள நீர்மூழ்கிக் கப்பல் போட்டி

2014-ம் ஆண்டு சீனா தனது புதிய ரக நீர் மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் தாக்கும் திறனை அதிகரிக்கவுள்ளது. சீனாவின் JL-2 நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு ஏவுகணைகள் 14,000 கிலோமிட்டர் அதாவது 8,699 மைல்கள் வரை பாயக் கூடியவை. இவற்றால் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய், அலஸ்கா போன்ற மாநிலங்கள் மீது அணுக்குண்டுத் தாக்குதல்களை செய்யும் திறனை சீனா பெறுகின்றது.

உலகிலேயே படைத்துறைச் செலவு அதிகரிப்பு ஆசிய நாடுகளில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஆசியப் படைத்துறைச் செலவு 2011இலும் பார்க்க 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் சீனாவின் படைத்துறைச் செலவு மற்றா ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கிறது.

சீனா உருவாக்கியுள்ள அதிவேகமாகச் செல்லும் ஏவுகணைகள் அமெரிக்கா பல பில்லியன்கள் செலவி உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செல்லுபடியற்றதாக்கியுள்ள வேளையில் சீனா தனது புதிய தர நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ள. சீனாவிடம் மொத்தமாக 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆறு அணுவலுவில் இயங்கிக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக் கூடியவை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட துறைமுகங்களான அம்பாந்தோட்டை, சிட்வே, சிட்டகொங், குவாடர் ஆகிய துறை முகங்கள் ஆழ்கடல் துறைமுகங்களாக இருக்கின்றன. சீனா தனது எதிர்கால கடற்படை வலுவில் நீர் மூழ்கிக் கப்பல்களிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என இது சுட்டி நிற்கின்றது. சீனா தனது நீர் மூழ்கிகளில் இருந்து வீசக் கூடிய ஏவுகணைகளில் வலுவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக அக்கறை காட்டுவதன் மற்ற நொக்கம் நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவல்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்பதாகும்.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் வலுவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா 35 பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கிய P-8A Poseidon என்னும் ஏவுகணைகளை வேட்டையாடும் போர் விமானங்கள் பரீட்சித்துப் பார்த்த வேளையில் அவை வெற்றி அளிக்கவில்லை. இந்த P-8A Poseidon விமானங்கள் எட்டை இந்தியாவும் வாங்கியிருந்தது.



தாய்லாந்தின் கடற்படையினருக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பயிற்ச்சிகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் தாய்லாந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவிருக்கின்றது.  வியட்னாம் ஏற்கனவே இரசியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிவிட்டது. பிலிப்பைன்ஸ்சும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. மியன்மார் இந்தியாவிடமிருந்து நீர் மூழ்கிக்கப்பல்களைக் கண்டறியும் உணரிகளை வாங்கியுள்ளது. ஜப்பான் தனது நாட்டில் உள்ள தளங்களில்  அமெரிக்க நீர்மூழ்கி வேட்டை விமானங்களை நிறுத்த அனுமதித்துள்ளது. சீனாவிற்கு கிழக்கேயும் தென் கிழக்கேயும் உள்ள இந்தச் சிறிய நாடுகளின் நிதிவளம் பெரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடமளிக்காத வேளையில் இவை தமது கடற்படைப்படகுகளின் திறனையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கின்றன. இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து நீர்மூழ்கி போர் ஒத்திகையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் மேலும் பல படைத்துறைகளில் இணைந்து செயற்படலாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாய்வான் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஒத்திகையைச் செய்துள்ளது. இதில் நீர்மூழ்கிகளை அழிக்கும் முறைமை பரீட்சிக்கப்பட்டது. மியன்மார் 2015-ம் ஆண்டில் இருந்து தனக்கு என ஒரு நீர்மூழ்கிப் படையை உருவாக்கவிருக்கின்றது. மலேசியாவிடமும் சிங்கப்பூரிடமும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன அவை தமது நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் வலுவையும் அதிகரிக்கவிருக்கின்றன. சீனாவிற்கு சவால் விடும் வகையில் ஜப்பானிடம் பெரிய நீர்மூழ்கிப்படை இருக்கின்றது.

அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல்
2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் புதிப்பிக்கப்பட்ட ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானில் நிலை கொள்ளவிருக்கின்றது. தற்போது ஜப்பானில் இருக்கும் ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலுக்குப் பதிலால ரொனால்ட் ரீகன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்ஷா திட்டம்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டனத்தில் இருந்து 200 கிலொ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்தில் உயர் தொழில் நுட்ப கடற்படைத் தளம் ஒன்று சீன அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் கடற்படையின் கிழக்குக் கட்டளையகத்தின் கீழ் வரும் இந்தத் தளத்தில் நிலத்துக் கடியில் இந்தியாவின் அணுக்குண்டுகள் தாங்கிய அரிகாந்த் நீர்மூழ்கிக் கப்பலை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இந்தியக் கடற்படையின் கிழக்குக்கட்டளையகத்தின் கீழ் அரிஹாந்த் நீர்மூழ்கிக்கப்பல், ஜலஷ்வா என்னும் ஈருடகக் கப்பல், சக்ரா என்னும் அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட ஐம்பது கடற்கலன்கள் இருக்கின்றன. இந்தத் துறைமுகத்தில் எதிரிப்படைகளின் தாக்குதல்களிலும் கண்காணிப்பிலும் இருந்து கடற்படைக்கலன்களை மறைத்து வைக்கக் கூடிய வசதிகள் உண்டு. இந்தியா தனது கடற்படை வலுவை நிதானமாகவும் உறுதியாகவும் வளர்த்து வருகின்றது.

ஜப்பானைச் சுற்றியுள்ள நாடுகள் தமது படைத்துறை வலுவை சீனாவிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடனேயே வளர்த்து வருகின்றன. இந்த நாடுகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சீனாவின் சவாலை சமாளிக்க முடியும்.

ஆசிய ஆட்சியாளர்களுக்கு படைத்துறைப் போட்டி அவசியமாக இருக்கலாம். ஆனால் ஆசிய மக்களுக்குத் தேவைப்படுவது அமைதியும் அபிவிருத்தியுமே.

Friday, 7 February 2014

கவிதை: மறக்கப்படுவது வாழ்கையையே கெடுக்கும்


 தேவைப்படும் அளவு கிடைக்காதது
தேவை தீர்கக் கொடுக்க முடியாதது
காதல்

கண்வழி நடந்து
காலொடிந்தது
இதயவழி நடந்து
இணைந்தது.

எல்லோரும் பிழையாகிப் போயினர்
பலர் பொய்யாகியும் போயினர்
எதுவும் தெரியாதது போல் இருக்கும் சிலர்
எதுவுமே தெரியாமல் இருக்கும் பலர்
விலை கொடுத்தோர் பலர்
விலையாகிப் போனோர் பலர்
நிகழ்காலத்தைத் தேடினோம்
எதிர் காலத்தைத் தொலைத்தோம்
எல்லாம் இழந்தோம்
மறக்க முடியாத சரித்திரம்
தாங்க முடியாத நிகழ்காலம்
தீர்மானிக்க முடியாத எதிர்காலம்
தமிழர் வாழ்வு
வலுவைத் தருவது வெற்றிகளல்ல
போராட்டங்களே வலுவாகும்


எலும்பாலான கூடு
உள்ளே சிறகடிக்கும் பறவை
இதயம்

அருகிருந்தால்  கண்ணால் பார்ப்பது
தொலைவில் இருந்தால் கண் மூடிப்பார்ப்பது
அன்பு

மீண்டும் வரமுடியாதது
நினைத்தால் இனிக்கும்
பாடசாலை நாட்கள்

எதிரியாய் இருக்கும் தகமை
மிக இலகுவானது
நண்பனாய் இருக்கும் தகமை
மிகச் சிரமமானது

இலகுவான வாழ்கையை
கடினமாய்ப் போனது
ஆசைகள்

உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
அன்பு காட்டச் சிலர்
இனிய குடும்பம்


காதலிப்பது துணிவைத் தரும்
காதலிக்கப்படுவது வலுவைத் தரும்
மறக்கப்படுவது வாழ்கையையே கெடுக்கும்

தூக்க ஆள் தேடும் குழந்தைகள்
விளையாட் ஆள் தேடும் பிள்ளைகள்
காதலிக்க ஆள் தேடுக் இளசுகள்
கதைக்க ஆள் தேடும் முதியவர்வர்கள்

தாயிடம் மறைக்க முடியாதது
பசியும் காதலும்

Monday, 3 February 2014

உக்ரேயினிலும் "வெள்ளை வான்"

83இலட்சம் இரசியர்கள் உக்ரேயினில் வாழ்கிறார்கள்
ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி உக்ரேயினைப் பற்றித் தெரிவித்த கருத்து உக்ரேயின் பிரச்சனையை மேலும் உக்கிரமடையப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இணைந்து உக்ரேயின் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் வாழும் முயற்ச்சிக்கு உதவி செய்யும் என்றார் ஜோன் கெரி. ஜோன் கெரி இப்படிச் சொன்னதுடன் நிற்கவில்லை ஜேர்மனியில் உக்ரேயின் எதிர்க் கட்சியைச் சேர்ந்த மூவரைச் சந்திக்கவும் செய்தார். உக்ரேயின் மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு அமெரிக்கா உதவி செய்யும் எனவும் ஜோன் கெரி உறுதி அளித்தார்.

எந்தக் கூட்டுடன் கூடுவது
உக்ரேயின் நாடும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தி வந்தன. இரு தரப்பும் Ukraine-EU Association Agreement என்னும் உக்ரேய்ன் - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திட முயன்றன. இதை விரும்பாத இரசியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரேயின் இணைவதை உக்ரேயின் அதிபர் மீது அழுத்தம் கொடுத்துத் தடுத்தது. உக்ரேயின் நாடு தனது எரிவாயுத் தேவைக்கு இரசியாவிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இரசியா உக்ரேயினுக்கு பத்து மில்லியன் டொலர்கள் நிதி உதவியும் குறைந்த விலையில் எரிவாயு வழங்குவதாயும் உறுதி வழங்கியது. அத்துடன் இரசியா உக்ரேயினைத் தனது யூரோஆசிய பொருதார சமூகத்தில் இணையும் முடிவை எடுக்க வைத்தது. இதற்கு உக்ரேயினில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. உக்ரேயினில் மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.  2013-ம் ஆண்டு நவம்பர் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இன்று வரை தொடர்கின்றது.

ஆத்திரமடையும் இரசியா
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் நட்பு நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது இரசியாவைக் கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது. இரசியா இதை ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதுகிறது. போல்ரிக் நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமை இரசியாவை ஆத்திரப்படுத்தியது. 01/07/2013இல் இருந்து குரோசியாவும் 28வது நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

 தூபமிடுவது யார்?
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேயின் கிளர்ச்சிக்கு தூபமிடுவதாக இரசியா குற்றம் சாட்டுகிறது. உக்ரேயின் மக்கள் சுதந்திரமாகச் செயற்படாமல் இரசியா தடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது. ஜோன் கெரி அமெரிக்கா உக்ரேயின் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தமை உக்ரேயினின் ஒரு இரசியாவிற்கும் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மோதல் களமாக உக்ரேயினை மாற்றியுள்ளது. உக்ரேயின் அதிபர் விக்டர் யனுக்கோவிச் தேர்தலில் ஊழல் செய்து ஆட்சிக்கு வந்து ஊழலுடன் ஆட்சி செய்து கொண்டிருப்பவர் என்பது மேற்கு நாடுகளின் கருத்தாக இருக்கிறது. தேர்தலின் போது விக்டர் யனுக்கோவிச் வெற்றி பெற இரசியா முன்னூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் உக்ரேய்னில் செலவு செய்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அத்துடன் பல இரசியர்கள் உக்ரேயின் சென்று தேர்தலின் போது செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. இரசியா இதே கைங்கரியங்களை அஜர்பைஜான், பெலரஸ் ஆகிய நாடுகளிலும் செய்ததாகவும் கருதப்படுகின்றது. இந்த நாடுகளிலும் இரசியாவின் ஒரு பகுதியான செஸ்னியக் குடியரசிலும் இரசியாவிற்கு சார்பான வேட்பாளர்கள் வெற்றி பெறச்செய்ய வாக்குப் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகள் திணிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு நிலவுகின்றது.

இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின்.        இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேயின் அதன் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒரு நாடாகும். உக்ரேயின் நாடு இரசியாவுடன் இல்லாவிடில்  இரசியா தனது வல்லரசு நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் 90 விழுக்காடு உக்ரேய்னூடாகச் செல்லும் குழாய்களூடாக விநியோகிக்கப்படுகின்றது. இரசியாவின் கருங்கடல் கடற்படைப் பிரிவு உக்ரேய்னிடமிருந்து குத்தகைக்கு இரசியா எடுத்த செவெஸ்டப்போல் துறைமுகத்திலேயே இருக்கிறது. உக்ரேய்ன் இரசியப் பிடியில் இருந்து விலகி நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இரசியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லியன் அதாவது நூறு கோடி அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பீடு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமது நாட்டின் ஒரு பகுதி உக்ரேயின்.
இரசிய மக்களிடையே உக்ரேய்ன் தொடர்பாக இரசியா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வருகின்றது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இரசியர்கள் உக்ரேய்னைத் தமது நாட்டின் ஒரு பகுதி என்ற மனப்பாங்குடன் இருக்கின்றனர். உக்ரேய்ன் மக்கள் செய்யும் எழுச்சி வெற்றி பெற்றால் அது இரசியாவிலும் மக்களாட்சி முறைமையை வேண்டி நிற்கும் பெரும் தொகையான மக்களுக்கு ஓர் உந்து வலுவாக அமையலாம் என்பதை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் நன்கு அறிவார். இதனால் இரசியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என நிச்சயம் நம்பலாம்.
கவண் கொண்டு பெட்ரோல் குண்டு வீசும் ஆர்ப்பாட்டக்காரர்

திருப்தியடையாத ஆர்ப்பாட்டக்காரர்கள்
உக்ரேய்னின் தலைமை அமைச்சரும் அமைச்சரவையும் பதவி விலகி ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான சட்டம் அரசால் திரும்பப் பெறப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்தியடையவில்லை. உக்ரேய்ன் அதிபரும் பதவி விலகி புதிதாகத் தேர்தல் நடாத்த வேண்டும் அரசமைப்பு மாற்றப் படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரேய்னில் அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டு படைத்துறையினர் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்பவர்களை விரைவில் அடக்க விரைவில் முயலலாம். ஜனவரி 31-ம் திகதி உக்ரேய்னின் படைத்துறையினர் நாட்டில் அமைதி உடனடியாக நிலை நாட்டப்பட வேண்டும் என்றனர். சுகயீன விடுப்பில் சென்ற உக்ரேயின் அதிபர் 03/02/2014இல் இருந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

உக்ரேயினிலும் "வெள்ளை வான்"
உக்ரேயினிலும் குடிமக்கள் போல் உடையணிந்த பாதுகாப்புத் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்வது, காணாமற் போகச் செய்வது பரவலாக நடக்கின்றது. இந்தக் கடத்தற்காரர்களை plain-clothed kidnappers என மக்கள் அழைக்கின்றனர்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்  உக்ரேயின் எதிர் கட்சியினருகு உதவி செய்தால் உக்ரேய்னில் இப்போது நடந்து கொண்டிருக்கும் எழுச்சி பெரும் உள்நாட்டுப் போராக வெடிக்கலாம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...