Tuesday 12 April 2022

ஓரடியால் உலகை மூன்றாக்கிய புட்டீன்

 


இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் ஆரம்ப நோக்கங்களில் முக்கியமானவற்றில் மூன்று: 1. ஐரோப்பாவில் ஜேர்மனியை அடக்கி வைப்பது. 2. இரசியாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பது. 3. அமெரிக்காவை ஐரோப்பாவிற்குள் வரவேற்பது. பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், ஐக்கிய இராச்சியம் ஆகியவை   ஆரம்பத்தில் இதில் இணைந்து கொண்ட நாடுகளாகும். பின்னர், கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டன. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து, பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, ருமேனியா, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, அல்பேனியா, குரோசியா ஆகிய முன்னாள் "பொதுவுடமை" நாடுகள் இணைந்து கொண்டன.

உலக அயோக்கிய கும்பல்கள்

இரசியாவின் ஆதிக்கத்தில் இரண்டு நாடுகளின் அமைப்புக்கள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றியம். மற்றது வார்சோ ஒப்பந்த நாடுகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருப்படாமல் இருந்த நாடுகள் நேட்டோ என்ற அயோக்கியக் கும்பலில் 1991இல் ஒன்றியம் உடைந்த பின்னர் இணைந்து கொண்டன. அவை ஆக்கிரமித்து இணைக்கப்படவில்லை என்பது உண்மை என்றாலும் அவை இரசியாவிற்கு அஞ்சியே நேட்டோவை நாடின. தானும் உருப்படாமல் தன்னை சார்ந்தவர்களையும் உருப்படாமல் அரைநூற்றாண்டு இருந்த இரசியா தற்போது ஒரு உதவாக்கரைத் தலைமையின் கீழ் இயங்குகின்றது. இருக்கும் எரிபொருள் வளத்தை வைத்துக் கொண்டு தன் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி தன்னை ஒரு ஈடு இணையற்ற நாடாக முன்னேற்றாமல் உக்ரேன் என்ற ஆப்பை இழுத்து விட்டுள்ளது இரசியாவின் உதவாக்கரை தலைவனான விளடிமீர் புட்டீன். உலகப் பொருளாதாரத்திற்கும் குறிப்பாக வளர் முக நாடுகளுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. நேட்டோ என்னும் உதவாக்கரை நாடுகள் வித்தித்த பொருளாதாரத்தடை. நேட்டோவில் இணைந்த நாட்டு மக்கள் நேட்டோவில் இருந்து விலக வேண்டும் என தமது எதிர்ப்பைக் காட்டாமல் இருப்பதற்கு காரணம் சோவியத் என்ற வல்லாதிக்க அரசு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற போர்வையில் அதன் உறுப்பு நாடுகளை மீது இழைத்த கொடுமைகளே! வார்சோ கும்பலுக்கும் நேட்டோ கும்பலுக்கும் இடையிலான போட்டி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் உலகைச் சீரழித்தது. சிறந்த உதாரணம் மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளத்தைக் கொண்ட ஆப்கானிஸ்த்தான்.

இரசியாவையும் ஒரு துருவம் ஆக்க புட்டீனால் முடியாது.

ஒரு துருவ ஆதிக்கம் கூடவே கூடாது என்பதை ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவு எமக்கு நன்கு போதித்தது. சிரியாவில் யாரும் எதிர்பாராதவிதமாக தலையிட்டு அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை ஆட்டிபார்த்த புட்டீன் இரசியாவை உலக ஆதிக்கத்தில் ஒரு துருவமாக்காமல் கத்தி வைத்துக் கொண்டு மிரட்டும் தெருச் சண்டியன் போல் அணுக்குண்டைப் பாவிப்பேன் என்ற மிரட்டலுடன் போதிய உளவுத் தகவல் இன்றி, போதிய படைக்கலன்கள் இன்றி, போதிய தயாரிப்பு இன்று உக்ரேனுக்குள் போதிய பயிற்ச்சியின்றிய படைப்பிரிவுகளை அனுப்பினார். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் ஒன்றான ரெக்சஸ் மாநிலத்தின் பொருளாதாரத்திலும் பார்க்க சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இரசியாவிற்கு தேவையற்ற ஒன்று இருக்குமானால் அது போர்தான். உக்ரேன் மீது போரைத் தொடங்கிய புட்டீனின் படைகள் அங்கு உள்ள மக்கள் குடியிருப்புக்களை தரைமட்டமாக்கி அப்பாவிகள் தஞ்சமடைந்திருந்த அரங்குகளிலும் தப்பி ஓட தொடருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் மீது குண்டுகளை வீசியும் தங்களை உலக அரங்கில் கேவலமான குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கின்றனர். இரசியாவும் வலிமை மிக்க நாடாக மாறி அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் உருவாக வேண்டிய நிலையில் தனது காட்டு மிராண்டித்தனமான உக்ரேன் மீதான போரால் இரசியர்கள் மீது உலக மக்களின் வெறுப்பை மேற்கு ஊடகங்கள் வெற்றிகரமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன. உக்ரேனுக்கு இரசியப்படையினரை அனுப்பி சாதித்தவை:

1.இரசியாவில் பணவீக்கத்தை 20% ஆக உயர்த்து,

2. இரசியப் பொருளாதாரம் 2022இல் பத்து விழுக்காடு தேயச்செய்யும் நிலையை உருவாக்கிமை,

3. இரசியப் பங்குச் சந்தையைச் செயலிழக்கச் செய்தமை,

4. இலண்டன் பங்குச் சந்தையில் இரசியப்பங்குகளின் பெறுமதியை 90% வீழ்ச்சியடையச் செய்தமை.

5. இரசியாவின் தாங்கிகளை துருக்கிய ஆளிலிபோர் விமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளால் தகர்க்க முடியும் என அம்பலப்படுத்தியமை

6. இரசியப் படைத்துறை திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் வலிமையற்று இருக்கின்றது என்பதை அம்பலப்படுத்தியமை.

7. அமெரிக்கா இருபது ஆண்டுகளில் ஆப்கானிஸ்த்தானில் இழந்த படையினரிலும் பார்க்க அதிக இரசியப்படையினர் உக்ரேனில் பத்து வாரங்களுக்குள் கொல்லப்பட்டனர் என அமெரிக்க ஊடகஙகள் கேலி செய்ய வைத்தமை. 

8. நடுநிலையாக இருந்த சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவிச் சேர்வது பற்றி சிந்திப்பதை தீவிரமாக்கியமை

9. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரசியாவின் எரிபொருளில் ஐரோப்பிய நாடுகள் தங்கியிருப்பதை இல்லாமல் ஆக்கவிருப்பமை.  

10. ஒதுங்கியிருந்த ஜெர்மனியை படைவலிமையை அதிகரிக்க செய்தமை

மொத்தத்தில் இரசியாவை உலக அரங்கில் ஒரு பெருமை மிக்க நாடாக உருவாக்குவதற்கு புட்டீன் சரிப்பட்டு வரமாட்டார். இரசியர்களுக்கு வேறு தலைமை தேவை.

புட்டீனும் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இரசியாவில் கொள்ளையடித்தையெல்லாம் இப்போது பொருளாதாரத்தடை என்னும் பெயரில் மேற்கு நாடுகள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உலக ஒழுங்கு மேற்கு நாடுகளுக்கு சாதகமாக இருக்கின்றபோது அதை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயல்கின்றது. புட்டீன் சாதித்தது. எல்லாவற்றையும் குழப்பி விட்டதுதான். அத்துடன் நேட்டோக் கும்பலை புட்டீன் மேலும் ஒன்று படுத்திவிட்டார். உலகத்தை நல்வழிப்படுத்தும் திறமையோ தூய்மையோ மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து உலகைக் காப்பற்றும் திறனோ புட்டீனிடம் இல்லை.

உக்ரேன் மீது போர் தொடுத்ததன் மூலம் ஒன்று பட்ட நேட்டொ என்ற ஓர் அணி, இரசியாவும் அதன் ஒட்டு நாடுகள் என இன்னும் ஓர் அணி, இரண்டிலும் சேராமல் நேட்டோ நாடுகளுடன் மோதலைத் தவிர்க்கும் சீனா, இந்தியா போன்றநாடுகளைக் கொண்ட மேலும் ஓர் அணி என உலகத்தை மூன்றாக பிரித்து விட்டார் புட்டீன்.

இரசியாவின் எரிபொருள் வளத்தையும் கனிம வளத்தையும் இரண்டு கண்டஙகள் பரந்த அதன் பெருநிலப்பரப்பையும் வைத்து உலகை நல்வழிப்படுத்தும் நாடாக இரசியாவைக் கட்டியமைக்க ஒரு நல்ல தலைமை இரசியாவிற்கு அவசியம் தேவைப்படுகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...