Monday 21 February 2022

நிலாந்தனின் உருட்டல்களும் பேராசிரியர் கணேசலிங்கத்தின் புரட்டல்களும்

  


இந்திய வான் படையினர் Geopolitics என்னும் சஞ்சிகையை மாதம் தோறும் வெளியிடுகின்றனர். அதன் நவம்பர் 2017 பதிப்பு “கடலோரக் கண்காணிப்பு” என்னும் தலைப்பில் ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தியாவின் கரையோரத்தில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகளும் இந்திய மீனவர்களும் இந்தியாவின் கரையோரப்பாதுகாப்பிற்கு முக்கியமானவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. அதில் எங்கும் ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவின் பாதுகாப்பு எனக் குறிப்பிடப்படவில்லை. அந்த சஞ்சிகையின் எந்த ஒரு பதிப்பிலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு வேண்டியவர்கள் எனக் குறிப்பிடவில்லை. இந்தியாவின் எந்த ஒரு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்களும் எப்போதாவது ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்களா?

இந்தியாவின் மு திருநாவுக்கரசு

மு திருநாவுக்கரசு என்பவர் மட்டும் இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள்தான் பாதுகாப்பு எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அவரது காணொலிப்பதிவுகளில் அவர் அப்படிச் சொல்லும் போது அவர் தனது கண்களை உருட்டிப் புரட்டிக் கொண்டுதான் சொல்லுவார். அதைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவர் சொல்வது உருட்டலும் புரட்டலும். என்று. தன்னை இந்திய வெளியுறவுக் துறையின் பேச்சாளர் போல கருதிக் கொண்டு அவர் எப்போதுக் கருத்து வெளியிடுவார். உலகில் மிகச்சிறந்த மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளைக் கொண்ட நாடு சீனா அது தனது DF-41 ஏவுகணையைச் இந்தியாமீது வீசினால் அதை எப்படி ஈழத்தமிழர்கள் தடுப்பார்கள்? திருநாவுக்கரசு சுதுமலையில் ஏறி நின்று கையைக் காட்டினால் DF-41 ஏவுகணை திரும்பிச் சென்று பீஜிங்கில் விழுமா? உலகிலேயே அதிக கடற்படைக்கலன்களைக் கொண்ட சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலும், நாசகாரிக்கப்பல்களும், கரையோரத்தாக்குதல் கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் வங்காள விரிகுடாவிற்கு வந்து இந்தியாமீது தாக்குதல் நடத்தினால் அதை எப்படி ஈழத்தமிழர்களால் தடுக்க முடியும்? திருநாவுக்கரசு கீரிமலையில் நின்று கொண்டு வாயால் ஊத சீனக் கப்பல்கள் அழிந்து விடுமா? சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏவூர்திகளில் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் பாவனைக்கு வந்தால் தமிழர்கள் என்ன செய்வார்கள்? இந்தியாவின் பகை நாடுகள் எந்த எந்த படைக்கலன்களால் இந்தியாவைத் தாக்கும் போது தமிழர்கள் அவற்றை எப்படி எதிர் கொண்டு இந்தியாவைப் பாதுகாப்பார்கள் என விளக்கம் கொடுக்கும் அளவிற்கு திருநாவுக்கரசுக்கு படைத்துறை அறிவு இருக்கின்றதா? அவரது சரித்திர அறிவு மட்டும் புவிசார் அரசியல் ஆய்வு செய்யப் போதுமானதா?

நிலாந்தனின் உருட்டல்கள்

இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளராக தன்னை கருதிக் கொள்ளும் திருநாவுக்கரசுக்கு நிலாந்தன் என்பவர் கொள்கை பரப்புச் செயலாளராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகின்றது. நிலாந்தன் இந்தியாவின் வால் பிடிக் கும்பல்களான ஆறு தமிழ் கட்சிகள் “ஈழத் தமிழர் தேசியப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” என்னும் தலைப்பில் நடந்திய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் திருநாவுக்கரசு சொன்னது போல் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேசம் என்றால் அது இந்தியாதான் என்றார். ஈழத்தமிழர்களை இந்தியாவில் காலடியில் ஒரு கூட்டுப் புழுவாக கேவலப்படுத்துகின்றனர். இது நிலாந்தனின் முதலாவது உருட்டல். இரண்டாம் உருட்டல் நிலாந்தனின் இன்னொரு வாசகம்: “ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இந்தியாவிற்கு பாதுகாப்பு இல்லை.” ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தவர்களை இந்தியா ஏன் அழித்தது என்ற கேள்விக்குப் பதில் கூறும் அறிவு நிலாந்தனுக்கு இருக்கின்றதா? நிலாந்தனின் அடுத்த உருட்டல்: “ஒரு சிறிய அரசற்ற தேசிய இனத்தின் விடுதலைக்கான இறுதித் தீர்வை பக்கத்தில் இருக்கும் பெரிய அரசுதான் இறுதியிலும் இறுதியாக தீர்மானிக்கின்றது.” இதற்கு அவர் பல உதாரணங்களைச் சொல்கின்றார். அதில் ஈடுகால உதாரணமாக உக்ரேனைச் சொல்லுகின்றார்: “இரசியாவின் செல்வாக்கு மண்டலத்தை மீறி சிந்திக்க உக்ரேனால் முடியவில்லை. கிறிமியாவாலும் சிந்திக்க முடியவில்லை.” இது நிலாந்தனின் மிகப் பெரிய உருட்டல். இரசியாவின் எல்லையில் உள்ள உக்ரேனிலும் பார்க்க மிகச் சிறிய போல்ரிக் நாடுகளான லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் இரசியாவை மீறி இரசியாவின் எதிரணியில் இணைந்து இறைமையுள்ள சுதந்திர நாடுகளாக இருப்பது நிலாந்தனுக்கு தெரியாதா? கியூபாவை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை நிலாந்தன் ஏன் மறைத்தார். சீனாவுடன் எல்லையைக் கொண்டு சீனாவின் பகை நாடாக வியட்னாம் இருப்பதை நிலாந்தன் அறிய மாட்டாரா? நிலாந்தன் போன்றவர்களை ஆய்வாளர்களாக வியட்னாமியர்கள் ஏற்றுக் கொள்ளாததுதான் அவர்களின் உறுதியான இருப்புக்கு காரணமாக இருக்கலாம். நிலாந்தனின் நோக்கம் தமிழர்களை இந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்துவது மட்டுமே. நெல்சன் மண்டேலா வெள்ளையர்களை மன்னித்தாராம் சொல்கின்றார் நிலாந்தன். அதனால்தான் இன்னும் தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் விடுதலை பெறவில்லை என்பதை திருநாவுக்கரசின் கொ.ப.செ அறியமாட்டார். ஜப்பானியர்கள் தம்மை அழித்த அமெரிக்கர்களை மன்னித்தார்கள் என உருட்டுகின்றார் நிலாந்தன். அமெரிக்கா ஜப்பான் தொடர்பான தனது கொள்கையை மாற்றியது போல் ஈழத் தமிழர்கள் தொடர்பான கொள்கையை எப்போது மாற்றினார்கள் நாம் மன்னிப்பதற்கு? நிலாந்தன் எம்மை சிங்களவர்களை மன்னிக்கச் சொல்கின்றாரா? இதுதானா கொடுத்த காசுக்கு மேலாக கூவுவது என்பது?

பேராசிரியர் கே ரி கணேசலிங்கத்தின் புரட்டல்கள்

நிலாந்தன் திருநாவுக்கரசின் உருட்டுப் புரட்டல்களை பரப்புகின்றார் என்றால் பேராசிரியர் கணேசலிங்கம் நிலாந்தனின் அலட்டல்களை பரப்புரை செய்கின்றார். “ஈழத் தமிழர் தேசியப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” என்ற மாநாட்டில் உரையாற்றும் போது மூன்று எடுகோள்களை முன்வைத்தார்:

1. ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு இலங்கைத் தீவுக்குள் சாத்தியமற்றது. பிராந்திய சர்வதேச மட்டத்திலான தீர்வுகளும் தீர்வுக்கான அணுகு முறைகளுமே எங்களுக்கு யதார்த்தமானதாக இருக்கின்றது.

2. கடந்த கால உடன்படிக்கைகள் அனைத்தும் தீர்வுக்கான எத்தனங்களாக இருந்தனவே அன்றி இலங்கைத் தீவுக்குள் ஒரு தெளிவான தீர்வை நோக்கிய எண்ணத்தை இந்த இனத்துக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

3. 2007இற்குப் பின்னர் இந்தோ பசுபிக் உபாயம் இந்து சமுத்திரத்தையும் பசுபிக் விளிம்பு நாடுகளுக்கும் அந்த விளிம்பு நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கும் ஒரு வாய்ப்பான காலப்பகுதியாக அமைந்திருக்கின்றது.

ஒரு வரியில் சொல்லுவதானால் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு இந்தியாவிடம் தான் இருக்கின்றது என புரட்டுகின்றார் கணேசலிங்கம். அவரது அடுத்த புரட்டல்: “இன்று ஜெர்மனியர்களும் பிரான்ஸ்காரர்களும் இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை தடுக்க முயற்ச்சிக்கின்றார்கள். பின்புலத்தில் அவர்களுடைய பொருளாதார இருப்பு அடிப்படையானது.” ஆனால் புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இரசியா ஒரு Economic Fortressஐ உருவாக்கிவிட்டுத்தான் உக்ரேனுக்கு எதிரான நகர்வுகளைச் செய்கின்றது. இரசியவின் பொருளாதாரத்தை Sanction Proofஆக மாற்றிவிட்டுத்தான் புட்டீன் செயற்படுகின்றார் என்பதை அறியக் கூடிய பொருளாதார அறிவு கணேசலிங்கத்திற்கு இல்லையா?

திருநாவுக்கரசால் மந்திரித்து விடப்பட்ட கோழிபோல அமைந்திருந்தது கணேசலிங்கத்தின் இன்னொரு கொக்கரிப்பு:

  • ·   ழத் தமிழர்கள்தான் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ஓரளவில் பாதுகாப்பு அரணைக் கொடுக்கக் கூடிய சக்திகளாக இருக்கின்றார்கள். ஏறக்குறைய நான் நினைக்கின்றேன் இந்தியர்களுடைய பாதுகாப்பு என்பது ஈழத்தில் இருக்கின்ற மக்களுடைய, ஈழத்தமிழ் மக்களுடைய இருப்போடுதான் ஐக்கியப் பட்டிருக்கின்றது.

பேராசிரியர் கணேசலிங்கத்திற்கு படைத்துறை அறிவு அறவே கிடையாது என்பதை அவரது ஒரு சொற்றொடர் காட்டுகின்றது: “பிரான்ஸின் சுக்கோய் (Sukhoi) விமானம்”. இதுவும் அவரது உரையில் இடம்பெற்றுள்ளது. சமூகத்தின் வரிப்பணத்தில் தான் வசிப்பதாகச் சொன்னார் கணேசலிங்கம். வரிசெலுத்துபவர்கள் value for moneyயை எப்போதும் பார்ப்பார்கள் உங்களின் அறிவின் பெறுமதி சுக்கோய் விமானத்தை உற்பத்தி செய்வது இரசியா என்று கூடத் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதை யாரிடமய்யா சொல்லி அழுவது. புவிசார் அரசியலைப் பற்றி ஆய்வு செய்வதற்கு படைத்துறை மற்றும் பொருளாதாரத் துறை பற்றிய அறிவு அவசியமய்யா. இரண்டும் உங்களிடம் இல்லை. உங்களுக்காக வரி செலுத்துபவர்களுக்காக அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.

கூலிப்படையாக இந்தியா

SWRD பண்டாரநாயக்கா மட்டுமே இந்தியா தொடர்பாக சிறந்த வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தார். ஜே ஆர் ஜெயவர்த்தனேயும் மஹிந்த ராஜபக்சேயும் இந்தியா தொடர்பான வெளியுறவுக் கொள்கையைத் தவறானதாக இருந்தன என்பது கணேசலிங்கத்தின் இன்னும் ஒரு புரட்டல். ஆனால் ஜே ஆரும் மஹிந்தவும் ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியாவைத் தமது கூலிப்படையாக கையாண்டனர் என்ற உண்மையை பாவம் அவர் மறைக்க முயல்கின்றார்.

பல புரட்டல்களைச் செய்த பேராசிரியர் கணேசலிங்கம் ஆறு கட்சிகளின் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்:

  • ·         காலையில் கூட ஒரு சிங்களப் பேராசிரியரோடு உரையாடினேன். 13ஐ நிராகரித்து விட்டு நாம் இந்தியாவைத் திருப்திப்படுத்துவோம். இந்தியாவின் நெருக்கீட்டில் இருந்து தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் - எங்களுடைய தலைவர்கள் - தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் என்றார் அவர். மிக ஆணித்தரமாக அவருடைய வாதமும் நியாய்ப்பாடுகளும் இருந்தன. நான் நினைக்கின்றேன் அவர்களிடம் இது சார்ந்து ஒரு தெளிவான உபாயம் ஏற்பட்டுவிட்டது.

Tamilnet இணையத்தளத்தினர் நடத்திய ஓர் உரையாடலில் சொல்லப்பட்ட வாசகம்: “இந்தியாவிற்கு திராணி இருந்தால் 13ஐ முழுமையாக நிறைவேற்றட்டும். இந்தியாவால் அது முடியாத வேலை!” அதை கணேசலிங்கம் உண்மை என உறுதி செய்துள்ளார். 13 என்னும் கூரையில் ஏற முடியாத இந்தியாவிடம் இணைப்பாட்சி (சமஷ்டி) என்னும் கோபுரத்தை இந்திய வால் பிடிகளான ஆறு கட்சிகள் வேண்டி நிற்கின்றன.

அமெரிக்காவுடன் மோடி நட்பை அதிகரிப்பதை கணேசலிங்கம் தூக்கிப் பிடித்து உரையாற்றினார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இன்று நிலவும் நட்பு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் 1979இல் உருவான நட்பைப் போன்றது என்பதை கணேசலிங்கம் அறிய மாட்டாரா? இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க - இந்திய நட்பு மோசமான பகைமையாக மாறாது இருக்கும் என்பதை பேராசிரியர் உறுதி செய்வாரா?

நிலாந்தனும் கணேசலிங்கமும் இந்தியாவைப் பற்றி தாழ்த்தி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஜே ஆர் ஜெயவர்த்தனே 1985-86இல் இந்திய வெளியுறவுச் செயலராக இருந்த ரொமேஸ் பண்டாரியின் மகளிற்கு செய்த கல்யாணப்பரிசுடன் இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான கொள்கை தலைகீழாக மாறியது. அதிலிருந்து இன்றுவரை இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பல கொடுமைகளைச் செய்து கொண்டே இருக்கின்றது. இந்தியா தனது கொள்கையை மாற்றாமல் இந்தியா பற்றி தமிழர்களுக்கு யாரும் போதிக்கத் தேவையில்லை. 2009-ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் இருந்து “அரசியல் ஆய்வு” செய்து கொண்ந்தியாவின் உளவாளிகளாகச் செயற்பட்டவர்களை இந்தியா இலங்கை அரசுக்கு வேண்டு கோள் விடுத்து  அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றது. அவர்கள் தங்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கூவுகின்றார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...