ஹமாஸ் அமைப்பு இருந்து செயற்படும் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் செய்யும் உக்கிரமான தாக்குதல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் செய்வதற்கான முன்னேற்பாடாகவும் பார்க்கப்படுகின்றது. 2021 ஏப்ரல் இறுதியில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறையான மொசாட்டின் அதிபர், இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையின் உளவுத்துறை தலைமை அதிகாரி, இஸ்ரேலின் ஈரானிய கேந்திரோபாய வகுப்பாளரான விமானப் படைத் தளபதி ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் சென்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் இயக்குனர் உட்பட பல அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் பல பேச்சு வார்த்தைகளை நடத்ததினர்.
ஈரானின் யூரேனிய உற்பத்தி
இஸ்ரேலியக் குழுவினரின் முக்கிய நோக்கம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் பேச்சு வர்த்தையில் ஈரானின் யூரேனியப் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் சில ஆண்டுகளுக்கு மட்டுமே நடை முறையில் இருக்குமா என்பதை அறிந்து கொள்வதுதான். ஜோ பைடனின் அமெரிக்க நிர்வாகம் ஈரானின் தொலைதூர ஏவுகணை உற்பத்தியை 2023வரைக்கும் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் குழாய்களை 2025வரைக்கும் கட்டுப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டுள்ளது. ஜோ பைடனின் அதிகாரிகள் ஈரானால் இஸ்ரேலுக்கு ஆபத்து என்பதை நம்பாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எடுத்து விட்டு பின்னர் தேவை ஏற்படும் போது மீண்டும் பொருளாதாரத் தடையை விதிப்போம் என மிரட்டுவது அமெரிக்காவின் அரசுறவியல் நகர்வுகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகின்றார்கள். ஆனால் அந்த நம்பிக்கை இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இல்லை.
இஸ்ரேல் அழிக அமெரிக்கா ஒழிக.
இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹு “எமது நெருங்கிய நண்பர்களுக்கு ஒன்றை தெளிவாக கூற விரும்புகின்றோம். எம்மை அழித்தொழிக்க நினைக்கும் ஈரானுடன் செய்யப்படும் எந்த உடன்படிக்கையும் எம்மைக் கட்டுப்படுத்தாது. எம்மை அழிக்க விரும்புபவர்களின் திட்டங்களை செயற்படுத்தாமல் தடுக்கும் தடுக்கும் ஒப்பந்தங்கள் மட்டுமே எம்மைக் கட்டுப்ப்படுத்தும்.” இஸ்ரேலில் இருந்து எழுந்த இந்த வீர வசனங்களுடன் யூதர்கள் கிழக்கு ஜெருசேலத்தில் அராபியர்கள் அழிக என்ற் கோசத்துடன் ஊர்வலம் போனார்கள். அவர்கள் மீது அரேபியர்களான பலஸ்த்தீனியர்கள் தாக்குதல் நடத்த அங்கு பெரும் கலவரம் மூண்டது. இதனால் பலஸ்த்தீனியப் பிரதேசமான காச நிலப்பரப்பில் இருந்து செயற்படும் ஹமாஸ் அமைப்பினர் ஈரானிடமிருந்து பெற்ற ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நத்தினர். இஸ்ரேலின் பதிலடி வழமை போல் காத்திரமாக இருந்தது. இஸ்ரேலிய விமானங்களின் குண்டு வீச்சில் பல ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் அழிக அமெரிக்கா ஒழிக என்பது ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் அடிக்கடி பாவிக்கும் வாசகமாகும். அமெரிக்காவை ஒழிக்க ஈரானால் முடியாது. ஆனால் ஈரான் தனது ஏவுகணைகளை மேம்படுத்திக் கொண்டிருப்பதும் அணுக்குண்டை உருவாக்க முயலவதும் இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்தானதாகும். ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியுடன் தொடர்புபட்ட விஞ்ஞானிகளைக் கொல்வதையும் ஈரானின் யூரேனிய பதப்படுத்தல் நிலையங்களை சேதப்படுத்துவதையும் இஸ்ரேல் வழமையாகக் கொண்டுள்ளது.
விலகிய டிரம்ப் இணைய முயலும் பைடன்
ஈரான் தற்போது வலுக்குறைந்த நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஈரானுடன் ஒப்பந்தம் செய்து அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் ஈரானின் வலிமை அதிகரிக்கும். பராக் ஒபாமா ஈரானுடன் ஒப்பந்தம் செய்து பொருளாதார தடைகளை நீக்கினால் ஈரானில் மிதவாதிகள் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள் என நம்பினார். அவர் நினைத்தது நடக்கவில்லை. இஸ்ரேலிற்கு பல வகையிலும் சார்பாக நடந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்தார். அத்துடன் ஈராக்கில் வைத்து ஈரானின் படைத்தளபதி சுலைமானியையும் கொன்றார். ஈரானினர் அதற்குப் பழிவாங்காமல் நல்ல பிள்ளை போல் நடந்து அமெரிக்க ஆட்சி மாற்றம் வரும் வரை காத்திருந்தனர். அவர்கள் நம்பிய படி 2021 ஜனவரியின் ஆட்சிக்கு வந்த அதிபர் ஜோ பைடன் ஈரானுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார்.
அமெரிக்கவும் இஸ்ரேலும் இணைந்து சதி?
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றுடன் ஒன்று ஈரான் தொடர்பாக முரண்படுவது போல் பாசாங்கு செய்வதும் அவர்களின் கேந்திரோபாயமாகவும் இருக்கலாம். அமெரிக்காவும் ஈரானும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில் இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்து அதன் யூரேனிய உற்பத்தி நிலையத்தை முற்றாக அழிக்கலாம். ஈரானுக்கு சினம் வரும் போது முதலில் அது செய்வது சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் ஹோமஸ் நீரிணையை மூட முயல்வதுமாகும். சவுதி அரேபியா ஈரானுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த தொடங்கி விட்டது. அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு ஹோமஸ் நீரிணையை பாதுகாக்கும் அமெரிக்காவுடன் அங்கு ஈரானால் முரண்பட முடியாது. பாக்கிஸ்த்தானிய தலைமை அமைச்சர் இம்ரான் கான் 2021 மே மாதம் 7-ம் திகதி சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்தார். அவருக்கு முன்னர் பாக்கிஸ்த்தானிய படைத்துறை உயர் அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். பாக்கிஸ்த்தான் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் உறவை வளர்க்க பாவிக்கப்படுகின்றார். 2016-ம் ஆண்டில் யேமனில் உள்ள ஈரானுக்கு ஆதரவான தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சவுதி அரேபியாவுடன் இணைய பாக்கிஸ்த்தான் மறுத்த பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பல பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொள்ளும் பாக்கிஸ்த்தான் இப்போது சவுதி அரேபியாவுடன் உறவைச் சீர் செய்ய விரும்புகின்றது
அரசுறவுகளில் வலிமையடைந்த இஸ்ரேல்
இஸ்ரேல் ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் போன்ற அரபு நாடுகளுடன் புதிதாக அரசுறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சிரியா நீண்ட உள்நாட்டுப் போரில் களைப்பும் சலிப்பும் அடைந்துள்ளது. அது ஈரானுக்கு பெரும் உதவிகளைச் செய்ய முடியாது. இரசியா அதிபர் புட்டீன் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானுக்கு உதவி செய்தால் அவர் தனது நாட்டில் மரபுவழி கிருத்தவர்களின் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இவற்றால் புவிசார் அரசியல் நிலைமை ஈரானுக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில் ஈரான் மீது ஒரு போரை இஸ்ரேல் தொடுக்கலாம்.
வலிமையடையும் இஸ்ரேலிய வான்படை
இஸ்ரேல் தனது வான்படையின் வலிமையை அதிகரிக்க ஈரான் தனது வான்பாதுகாப்பை அதிகரித்தது. ஈரான் இரசியாவிடமிருந்து எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கியது. இதனால் இஸ்ரேலிடமுள்ள F-15 மற்றும் F-16 போர் விமான ங்கள் மூலம் ஈரானில் தாக்குதல் செய்ய முடியாத நிலை உருவாகியது. அதனால் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக F-35 புலப்படா போர் விமானங்களை பாவிக்க வேண்டும். ஆனால் F-3ன் ஆகக்கூடிய பறப்புத் தூரம் 650மைல்களாகும். இஸ்ரேலில் இருந்து ஈரானின் தூரம் ஆயிரம் மைல்களுக்கும் அதிகமானது. 2021 ஏப்ரலின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தப்பான உடன்படிக்கை மேற்காசியாவில் ஒரு மோசமான போரை உருவாக்கும் என்றார். மேலும் அவர் தமது போர் விமானங்களால் ஈரான் வரை சென்று தாக்குதல் நடத்த முடியும் என்றார். 2019-ம் ஆண்டு இஸ்ரேலின் அமெரிக்கத் தயாரிப்பு F-35 புலப்படாப் போர் விமானங்கள் ஈரானின் வான் எதிர்ப்பு முறைமைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஈரானுக்கு மேலாகப் பறந்து சென்று வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஈராக் அணுக்குண்டு உற்பத்தி செய்வதை தடுக்க இஸ்ரேல் 1981-ம் ஆண்டு அதன் ஆய்வு நிலையங்கள் மீது வான் தாக்குதல் நடத்தி அழித்தது. F-35 விமானங்களின் எரிபொருள் கொள்கலன்களின் அளவைக் கூட்ட இஸ்ரேல் பலவழிகளில் முயற்ச்சி செய்தது. அத்துடன் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் முயற்ச்சியிலும் ஈடுபட்டது. மூன்றாவது தெரிவு சவுதி அரேபியாவில் எங்காவது எரிபொருளை நிரப்புவதாகும். இஸ்ரேல் இந்த மூன்று வகைகளையும் பாவிக்கும் நிலையில் உள்ளது என்ற படியால்தான் F-35 ஈரான் வரை பறந்து சென்று வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் போர் விமானங்களை தனக்கு ஏற்றவாறு மேம்படுத்துவதில் கைதேர்ந்தது என்பதை பல தடவை நிரூபித்துள்ளது.
ஈரான் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய நிலையை அடைய முன்னரே அதை அழிக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. ஈரானைத் தாக்கும் போது லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் அழிக்க வேண்டும். ஈரான் மீதான தாக்குதலும் அது அடுத்த சில பத்தாண்டுகள் தலைஎடுக்காத படி அமைய வேண்டும். அதற்கு இஸ்ரேலுக்கு அவசியம் தேவைப்படும் அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்குமா?
No comments:
Post a Comment