Sunday, 14 February 2021

சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்த நகர்வு

  


அமெரிக்காவில் அருமண் மூலகங்கள் (RARE EARTH ELEMENTS) (REE) பதப்படுத்துவதை ஊக்குவிக்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் முப்பது மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. அமெரிக்காவின் அருமண் மூலகங்களின் தேவையின் எண்பது விழுக்காட்டிற்கும் அதிகமானவை சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. அமெரிக்க சீன வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து அருமண் மூலகங்களை இறக்குமதி செய்வதை தவிர்ப்பதறகன பல நடவடிக்கைக்களை அமெரிக்கா எடுத்து வருகின்றது. உலகின் அருமண் மூலகத்திற்கான மொத்த தேவையான 165,000 தொன்கள் 3.4பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். உலகில் அதிக அளவு அருமண் மூலகத்தை அமெரிக்கா இறக்குமதி செய்கின்றது.

 


அருமண் மூலகங்கள்

உலகில் அருமண் மூலகங்களின் இருப்பு மிகவும் குறைவானது. அருமண் மூலகங்கள் என்பவை 17வகையான பிரித்தெடுப்பதற்கு அரிதான மூலகங்கள் ஆகும். அருமண் மூலகங்களை சுத்தப்படுத்தி பாவனைக்கு ஏற்றவகையில் தயாரிக்கும் போது சூழல் பெருமளவில் மாசுபடும். அருமண் மூலகங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகின்றது. புதிய உலகத் தொழில்நுட்பக் கட்டிடத்தின் செங்கட்டிகளாகத் திகழ்பவை அருமண் கனிமங்கள் ஆகும். 17வகையான கனிமங்கள் அருமண் கனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கைப்பேசிகள், போர்விமானங்கள்புற்றுநோய் மருந்துகள்காற்று-மின் பிறப்பாக்கிகள்மின்சாரக் கார்கள்லேசர் கருவிகள்இரவில் பார்க்கும் கண்ணாடிகள் கணினிகள்வழிகாட்டல் ஏவுகணைகள் எனப் பலதரப்பட்ட பொருட்கள் அருமண் கனிமங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. ஸ்கண்டியம், யெட்ட்ரியம், லந்தனம், செரியம், பிரசியோடைமியம், நியோடைமியம், புரேமெத்தியம், சமரியம், யூரோப்பியம், கடோலினியம், ரெர்பியம், டைஸ்ப்புரோசியம், ஹொமியும், ஏர்பியம், தூலியம் யெடெர்பியம், லூட்டெட்டியம் ஆகியவை அருமண் மூலகங்களாகும். தங்கத்தை சுரங்கத்தில் அகழ்ந்து எடுப்பது போல் இலகுவானது அல்ல. பாதுகாப்புக் குறைந்த கதிர்வீச்சு நிறைந்த சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட மணலில் இருந்து அமிலங்கள் மூலம் தொடர்ச்சியாக கழுவப்பட்ட்டு அருமண் மூலகங்கள் எடுக்கப்படும். இது சூழலை மிகவும் மோசமாக மாசுபடுத்தும்.

 

உங்களது கைப்பேசியில் அழைப்பு வரும்போது அதை அதிரச் செய்வது Neodymium மற்றும் டைஸ்புரொசியம் என்னும் அருமண் மூலகங்களாகும். அருமண் மூலகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட நிரந்தரக் காந்தங்கள் கணினிகளைச் சிறியதாக்க ஏதுவாக அமைந்தன. விமானங்களை பாரம் குறைந்தவையாகவும் வலிமையானதாகவும் உருவாக்க அருமண் மூலகங்கள் பயன்படுகின்றன. மருத்துவத்துறையில் எஸ்-ரே, ஒளிவருடி (X-ray and MRI scanningபோன்றவற்றிற்கு அருமண் மூலகங்கள் பாவிக்கப்படுகின்றன. உலகின் முன்ன்ணி போர் விமானங்கள் வழிகாட்டல் ஏவுகணைகள் போன்றவற்றிற்கு அருமண் மூலிகங்கள் இன்றியமையாதவை.

 

                      

சீனாவின் கழுவலும் நழுவலும்

1992-ம் ஆண்டு சீனாவில் அருமண் மூலகங்கள் கண்டறியப்பட்ட போது சீன அதிபர் டெங் மத்திய கிழக்கிற்கு மசகு எண்ணெய் போல சீனாவிற்கு அருமண் மூலகங்கள் அமையும் என்றார். அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தின் MOUNTAIN PASS என்னும் இடத்தில் அருமண் மூலகங்கள் அகழப்பட்டன. கடுமையான ஊழியர் பாதுகாப்பு மற்று சூழல் பாதுகாப்பு விதிகளால் அமெரிக்காவில் உற்பத்திச் செலவு அதிகம். இந்த ஊத்தை வேலையை சீனர்கள் செய்யட்டும் என அங்கிருந்து மணல் எடுத்து சீனாவிற்கு அனுப்பி கழுவப்பட்டது. 1992இல் உலக அருமண் இருப்பில் 80விழுக்காடு சீனாவின் காணப்பட்டது. தற்போது 43%இலும் குறைவு. ஒஸ்ரேலியா, இரசியா, பிரேசில், கிரீன்லாந்து உட்படப் பல நாடுகளில் அருமண் மூலகங்கள் காணப்படுகின்றன. சீனாவின் அருமண் மூலகங்கள் தூய்மைப் படுத்திய இடங்கள் பெருமளவு சூழல் அசுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அங்கு சிவப்பு நிற கழிவு நீர் கொண்ட பெரும் ஏரிகள் உருவாகியுள்ளன. அதனால் நிலத்துக்கடி நீர் அமில மயப்படுத்தப்பட்டு சுற்றவுள்ள பெருமளவு நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த இடங்களில் பெருமளவு மண்ணரிப்பும் ஏற்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீனா பொருளாதார மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சூழல் மாசுபடுவதை பெரிது படுத்தாமல் இருந்தது. ஒஸ்ரேலியா தனது நாட்டில் கண்டறியப்பட்ட அருமண் மூலகங்களை தனது நாட்டில் தூய்மைப் படுத்தாமல் மலேசியாவில் தூய்மைப் படுத்தியது. பின்னர் அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

 

வர்த்தகப் போரும் அருமண் மூலகங்களும்                           சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போரில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை அதிகரிக்கும் போது அருமண் மூலகங்களுக்கான வரி அதிகரிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு மலிவான விலையில் அருமண் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது. அமெரிக்க நிறுவனமான MP Materials சீனாவிற்கு கழுவ அனுப்பும் அருமண் மூலகங்கள் மீதான வரியை சீனா 10%இல் இருந்து 25% ஆக அதிகரித்து விட்டது. அமெரிக்காவின் அடுத்த சுற்று வரி அதிகரிப்பில் அருமண் மூலகங்களும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனா அருமண் ஏற்றுமதியைத் தடை செய்வதன் மூலம் அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என சீன ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. உலகத்தின் தங்க இருப்பிலும் பார்க்க 15,000 மடங்கு இருப்பில் உள்ளது. இதனால் சீனா வர்தகப் போரில் தனது படைக்கலனாக கையில் எடுத்துள்ள அருமண் கனிம வள ஏற்றுமதி மிகவும் வலிமை குறைந்ததாகும். 2010-ம் ஆண்டு சீன மீன்பிடிப்படகுகளை கிழக்குச் சீனக் கடலில் ஜப்பான் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அருமண் மூலகங்களை சீனா தடை செய்தது. அதனால் ஜப்பானில் மின்சாரக் கார் உற்பத்தி, காற்றாடி ஆலைகள், வழிகாட்டல் ஏவுகணைகள் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலகங்களுக்கு பதிலாக வேறு வழிகளில் தனது உற்பத்தியை செய்பும் வழியைக் கண்டறிந்து கொண்டது.


டெக்ஸஸ் மாநிலம்

 2020-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்காவின் டெக்ஸ்ஸ் மாநிலத்தில் உள்ள அல் பசோ என்னும் இடத்தில் 1250 அடி உயரமான ஒரு மலையில் பெருமளவு அருமண் மூலகங்கள் கண்டறியப்பட்டன. அங்குள்ள அருமண் மூலகங்கள் அமெரிக்காவின் முழுத்தேவையையும் 130 ஆண்டுகள் நிறைவு செய்யக் கூடியவை. அங்கு நிலையான காந்தம் தயாரிக்க தேவையான மூலகங்களும் பெருமளவில் இருக்கின்றன. 2019-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு அருமண் மூலகங்கள் ஏற்றுமதிய செய்வதை தடை செய்வேன் என சீன அதிபர் சீ ஜின்பிங் மறைமுக மிரட்டலை விடுத்திருந்தார். 2019-ம் ஆண்டு சீனர்களின் அருமண் மூலக உற்பத்தி ஒரு பில்லியன் டொலர் பெறுமதியானதாகும்.

பதப்படுத்துவதில் புதிய தொழில்நுட்பம்

2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா சீனாவில் அருமண் மூலகங்களுக்கு தங்கியிருப்பதை தடுக்க தனது அவசர ஆணையை வெளிவிட்டார். அதன் படி அமெரிக்காவின் அருமண் மூலங்களின் பல ஆண்டுகளுக்கு தேவையான கையிருப்பை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. தற்போது அமெரிக்காவில் அதிக அருமண் இருப்பு கண்டறியப் பட்டுள்ளபடியால் அதை தூய்மையாக்குவதுதான் சவாலாக உள்ளது. சூழல் மாசுபடாமல் அருமண் மூலகங்களை தூய்மைப் படுத்துவதற்கு உரிய வகைகளை கண்டறிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் முப்பது மில்லியன் டொலர்களை ஒதுக்கி தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்படுகின்றது. இதன் மூலம் அமெரிக்காவின் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமெரிக்காவிலேயே மூலகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு தூயமைப்படுத்தப் படும்.

 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...