Sunday 17 October 2021

Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவில் முன்னேறியசீனா

  


செயற்கை நுண்ணறிவில் அமெரிக்கா பின் தங்கியதால் சீனா முன்னேறிவிட்டது என்ற செய்தி பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் மென்பொருள் பிரிவின் முதன்மைப் பதவியில் இருந்த நிக் சைலன் அமெரிக்கா போதிய நிதியை மென்பொருள் துறைக்கு ஒதுக்கவில்லை என்பதை ஆட்சேபித்து தன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்க மென்பொருள்துறைக்கு போதிய நிதி ஒதுக்காத நிலையில் சீனா அதற்கென பெருமளவு நிதியை ஒதுக்கியபடியால் அமெரிக்காவை விட சீனா செயற்கை நுண்ணறிவில் முன்னணியில் இருக்கின்றது என்பது நிக் சைலனின் குற்றச் சாட்டாகும்.

சீனாவிற்கு வாய்ப்பான அதன் மக்கள் தொகை

அமெரிக்காவின் மக்கள் தொகை 339மில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1,433 மில்லியனாகவும் உள்ளன. சீனா தனது நாட்டு மக்கள் தொடர்பான எல்லாத் தகவல்களையும் திரட்டி கையாள்கின்றது. ஓர் அமெரிக்கக் குடிமகனின் எல்லாத் தகவல்களையும் அரசு திரட்டி வைத்திருப்பதை அமெரிக்க மக்கள் தமது சுதந்திரத்தையும் அடிப்படை உரிமையையும் பாதிப்பதாக கருதுகின்றார்கள். சீனாவின் அதிக மக்கள் தொகை இருப்பதால் அரசு திரட்டும் தகவல்களும் அதிகமாக உள்ளன. அவற்றை கணினி மயப்படுத்தி தரவு நிரல்படுத்துவதற்கு உயர்தர மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

சீனா சென்ற Microsoft

சீனா செயற்கை நுண்ணறிவு வளர்வதற்கு சிறந்த களமாக உள்ளபடியால் 2018-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான மென்பொருள்களை உருவாக்க தாம் விரும்புவதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது. 2019இல் Microsoft நிறுவனம் சீன படைத்துறையின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்வறிவு மேம்படுத்தலில் செயற்பட்டது. அவற்றில் சீனாவின் சிறுபான்மையினரைக் கண்காணிப்பது முதன்மையானதாக இருந்தது. அதனால் அமெரிக்க முதவை உறுப்பினர்(செனட்டர்) Ted Cruz அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக நோக்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைக்கு உதவக் கூடாது என தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். ஆனால் தாம் வெட்டு விளிம்பு (Cutting-Edge) தொழில்நுட்ப விரிவாக்கத்தில் உலகெங்கும் ஒத்துழைப்பதாக Microsoft தெரிவித்தது. Microsoft நிறுவனம் உருவாக்கிய Environmental Mapping தொழில்நுட்பம் சீனாவின் செயற்கை நுண்ணறிவின் மூலமான பொதுமக்கள் கண்காணிப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையானது. சீனாவெங்கும் பொருத்தப்பட்டுள்ள 200மில்லியன்களுக்கும் அதிகமான கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் முகங்கள் மூலம் மனிதர்களை இனம் காணும் (Facial Recognition) மென்பொருள்கள் இணைக்கப்பட்டுள்ளன. சீனாவில் ஒருவர் தலைமறைவானால் அவரை ஒரு சில நிமிடங்களுக்குள் அந்த கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் கண்டு பிடித்துவிடும்.

Microsoft ஐப் போல பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து பல தொழில்நுட்பங்களில் செயற்படுகின்றன. சீன அரசு தனது நாட்டில் இருந்து பல மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்கின்றது. சில அமெரிக்கப் பலகலைக்கழங்கள் சீன அரசுடன் இணைந்து ஆய்வுகள் செய்கின்றன. அப்பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்கு தேவையான நிதி அமெரிக்காவில் இருந்து கிடைக்காமையினால் அவை சீனாவை நாடுகின்றன. டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இவற்றிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சீனாவின் 5G & 6G அலைக்கற்றை தொழில்நுட்பம்

சீனாவின் OPPO நிறுவனம் “6G AI-Cube Intelligent Networking” என்னும் தலைப்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் எப்படி செயற்கை நுண்ணறிவைப் பாவித்து 6G அலைக்கற்றை உருவாக்குவது என்பது பற்றி விளக்கியுள்ளது. 4G இலும் பார்க்க 5G ஆயிரம் மடங்கு விரைவாகச் செயற்படும். 5Gஇலும் பார்க்க 6G ஆயிரம் மடங்கு வேளையில் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 6G தொழில்நுட்பத்தை கைப்பேசிகளில் செயற்படுத்துவதற்கு அவை செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட படிமுறைகளை(Algorithms) உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும்.

ஹுவாவேயின் தானியங்கி மகிழூர்ந்துகள் (Autonomous Cars)

ஹுவாவே நிறுவனம் மற்ற நாடுகளை விட 5G தொழில்நுட்பத்தில் முந்தியமை அமெரிக்கர்களை பொறாமைக்கும் சினத்திற்கும் உள்ளாக்கியது. அதனால் அமெரிக்கா சீனா மீது ஒரு தொழில்நுட்பப் போரைத் தொடுத்து சீனாவிற்கு குறைகடத்திகளை (Semiconductors) ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. உலகிலேயே அதிக குறைகடத்திகளை உற்பத்தி செய்யும் தைவானையும் சீனாவிற்கான ஏற்றுமதியைத் தடைசெய்யும்படி வலியுறுத்தியது. ஹுவாவே வர்த்தக அடிப்படையில் 6G தொழில்நுட்பத்தை 2030அளவில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. அது செயற்கை நுண்ணறிவையும் 5G தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தானியங்கி வண்டிகளை உருவாக்கவிருக்கின்றது. ஹுவாவேயின் Intelligent World 2030 என்னும் அறிக்கையில் 2030-ம் ஆண்டு சீனாவின் மகிழூர்ந்துகளில் 20% தானியங்கிகளாக இருக்கும் என எதிர்வு கூறுகின்றது. ஹுவாவே நிறுவனம் சீனாவின் மகிழூர்ந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தானியங்கி மகிழூர்ந்துகளை உற்பத்தி செய்யவிருக்கின்றது. தற்போது சீனா மகிழூந்துகளை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளது. 2030இல் நிலைமை மாறலாம்.

செயற்கை நுண்ணறிவால் சிஐஏ முகவர்களை அழித்த சீனா

அமெரிக்காவின் மருத்துவத்துறையில் சீனா ஊடுருவி தகவல் திருட்டு செய்வதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. பின்னர் சீனாவில் செயற்படுக் கொண்டிருந்த சிஐஏ முகவர்களுடன் எந்த தொடர்பையும் சிஐஏயால் மேற்கொள்ள முடியாதிருந்தது. பின்னர் அவர்கள் கொல்லப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும் இருக்கலாம் என்ற செய்தி வெளிவந்தது. இவற்றை வைத்துப் பாருக்கும் போது ஒரு செயல்முறை நடந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது: 1. மருத்துவத் தகவலை செயற்கை நுண்ணற்வின் மூலம் வடிகட்டி சீனாவில் பணிபுரியும் அமெரிக்கர்களின் படங்களை சீனா பெற்றுக் கொண்டிருக்கலாம். 2. சீனா தனது செயற்கை நுண்ணறிவு மூலம் முகம் மூலம் இனங்காணும் முறைமை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தையும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். 3. அவர்களை கைது செய்து விசாரித்து அவர்களை தண்டித்திருக்கலாம்.

ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலை

கணினிகளின் செயற்கை நுண்ணறிவு கணினிகள் தாமாக கற்றறிந்து (Machine Learning) தம் அறிவை வளர்க்கின்றன. இது தொடர்ச்சியாக வளரும் போது முடிவில்லா அறிவை கணினிகள் பெற்றால் அது ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலையை எட்டலாம். ஒரு செயற்பாடு முடிவிலி பெறுமானத்தை ஏட்டும் நிலையை ஓரிமை (Singularity: A point at which a function takes an infinitive value) எனப்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...