Tuesday 8 December 2020

ஜப்பானுக்கு எதிராக புட்டீனின் குங்ஃபூ நகர்வு

 


வட மேற்கு பசுபிக் கடலில் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் பிராந்தியம் என்கின்றனர். இத்தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிணக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்கின்றது. 2020 டிசம்பர் முதலாம் திகதி அத்தீவுகளில் இரசியா தனது எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது பிணக்கை தீவிரப்படுத்தியுள்ளது.


இரண்டு போர்களும் பல ஒப்பந்தங்களும்

1786-ம் ஆண்டு இரசியப் பேரரசி கதரீன் கியூரில் தீவுக் கூட்டம் தனது நாட்டின் ஒரு பகுதி எனப் பிரகடனம் செய்திருந்தார். 1855-ம் ஆண்டு இரசியாவும் ஜப்பானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கியூரில் தீவுக் கூட்டங்களின் நான்கு தீவுகள் ஜப்பானுக்கு உரியவை என்றும் ஏனைய வட பகுதி தீவுகள் இரசியாவிற்கு உரியவை என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. 1905-1906 இல் நடந்த ஜப்பானுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போரில் இரசியா தோல்வியடைந்ததால் கியூரில் தீவுக் கூட்டத்தின் சக்லின் தீவின் தென் பகுதி ஜப்பானுக்கு சொந்தமானது என ஒத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டாம் உலக போரின் முடிவில் இரசியா (சோவியத் ஒன்றியம்) முழு கியூரில் தீவுக் கூட்டத்தையும் தனதாக்கிக் கொண்டது. அங்கிருந்த ஜப்பானிய மொழி பேசும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலக அமைதியை நிலைநாட்ட 1951-ம் ஆண்டு நடந்த சன் ஃபிரான்சிஸ்க்கோ மாநாட்டில் ஜப்பான் கியூரில் தீவுகள் மீதான எல்லா உரிமைகளையும் கைவிட வேண்டும் என்று முடிவு செய்ததுடன் கியூரில் தீவுகளின் மீதான இரசியாவின் (சோவியத் ஒன்றியத்தின்) இறையாண்மையையும் அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதில் சக்கலின் தீவு தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படவில்லை. அது இரு நாடுகளுக்கும் சொந்தமானவை எனக்கருதப்பட்டது.



பனிப்போர்க்காலம்

1956-ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் மீண்டும் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டன. அதன் படி கியூரில் தீவுக் கூட்டத்தின் சிறுபகுதியான சிக்கோட்டன், ஹபோமாய் ஆகிய தீவுகள் ஜப்பானிற்கு வழங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு ஜப்பானும் அமெரிக்காவும் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொண்டதை விரும்பாத சோவியத் ஒன்றியம் ஜப்பானின் அந்நியப் படைகள் இருக்கும் வரை கியூரில் தீவில் ஜப்பானுக்கு இடமில்லை எனவும் 1956-ம் ஆண்டு செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாகவும் அறிவித்தது. கியூரில் தீவுக் கூட்டங்களில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளலாம் என சோவியத் கரிசனை கொண்டிருந்தது.

சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர்

1991 சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவும் ஜப்பானும் கியூரில் தீவுக் கூட்டங்கள் தொடர்பாக தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன.

இதுருப், குணசீர், சிக்கோட்டன், ஹபோமை ஆகிய நான்கு தீவுகள் தொடர்பாக 2000-ம் ஆண்டில் விளடிமீர் புட்டீன் ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 2013-ம் ஆண்டு ஒரு தீவிர பேச்சு  வார்த்தையை இரு நாடுகளும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கையில் இரசியா உக்ரேனுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஜப்பான் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது.

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர்

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர் யோசிகிடே சுகா பதவிக்கு வந்த பின்னர் 2020 செப்டம்பரில் இரசிய அதிபர் புட்டீனுடன் தொடர்பு கொண்டு கியூரில் தீவுப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தார். அத்துடன் இரசிய ஜப்பானிய வர்த்தகத்தை விரிவு படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரின் எண்ணத்தை விளடிமீட் புட்டீன் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

 

இரசியாவின் பசுபிக் வாசலில் அந்நியரா?

இரசியாவில் இருந்து பசுபிக் நாடுகளுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் வர்த்தகம் நடை பெறுவதற்கு இரசியாவின் கிழக்கெல்லையில் உள்ள கியூரில் தீவுக் கூட்டம் முக்கியமான ஒன்றாகும். நடுவண் ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை இரசியா எதிர் கொள்வதற்கும் கியூரில் தீவுக் கூட்டம் இரசியாவிற்கு அவசியமானதாகும்.

புட்டீனின் குங்குஃபூ அடி

சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளில் செய்தது போல் தனது திடீர் படை நகர்வுகள் மூலம் பிராந்திய நலன்களை தூக்கி நிறுத்துவதில் மீண்டும் ஒரு முறை புட்டீன் வெற்றி கண்டுள்ளார். கியூரில் தீவில் தனது படை நிலைகளை வலுப்படுத்தியதன் மூலம் புட்டீன் ஜப்பானுடன் செய்யும் பேச்சு வார்த்தைகளில் தனது நிலையை வலிமையாக்க செய்த நகர்வுதான் கியூரில் தீவுகளில் எஸ்-300 ஏவுகணை ஏதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது. இரசியாவுடன் இதுவரை மட்டுப்படுத்தப் பட்ட வர்த்தகத்தை செய்யும் ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த இரசியாவுடன் அதிக வர்த்தகம் செய்ய விரும்புகின்றது என்பதை புட்டீன் ஜப்பானிய தலைமை அமைச்சருடனான பேச்சு வார்த்தையின் போது உணர்ந்து கொண்டுள்ளார். குங்குஃபு சண்டை வீரரான புட்டீன் எதிரியின் வலுவற்ற புள்ளியை அறிந்து தாக்குதல் செய்கின்றார்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...