F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்துள்ளது. முதலாவது பரீட்சார்த்த பறப்பை 2020 செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் பரீட்சார்த்தமாகப் பறக்கவிட்ட செய்தி செப்டம்பர் 14-ம் திகதி வெளிவந்த போது உலக பாதுகாப்புத்துறைகளின் விற்பன்னர்கள் மட்டுமல்ல அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆய்வாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். Air Force Association’s Virtual Air, Space & Cyber Conference என்ற மாநாட்டிலேயே அமெரிக்க வான்படையினர் இந்தத் தகவலை முதலில் வெளிவிட்டனர். எந்த நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கியது என்ற தகவல் கூட வெளிவிடப்படவில்லை. அடுத்த தலைமுறைப் போர்விமானத்தின் முதலாவது பறப்பைச் செய்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என பலதரப்பினரும் எதிர்பார்த்தனர். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்க இருபது ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. புதிய அடுத்த தலைமுறை போர்விமானம் ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா எண்மிய உற்பத்தி தொழில்நுட்பத்தில் (Digital Manufacturing Techniques) மிகவும் முன்னேறியுள்ளது என்பதை 2019 ஜனவரியில் போயிங் நிறுவனம் உற்பத்தி செய்த T-15 போர்விமானம் எடுத்துக் காட்டியது. Next Generation Air Dominance என்னும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விமானம் தொடர்பான எல்லாத் தகவல்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் தொழில்நுட்பத்தை சீனா இணைய வெளியூடாக திருடி தனது ஜே-20, ஜே-30 ஆகிய போர்விமானங்களை உருவாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அந்த வகையான திருட்டுக்கள் நடக்காமல் இருக்க அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் உலகில் பாவனைக்கு வரும் போது உலகப் போர்முறைமையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறை விமானம்
2018-ம் ஆண்டு பிரித்தானியா தனது Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் மாதிரி அமைப்பைக் காட்சிப்படுத்தியது. இதன் மொத்த உற்பத்திச் செலவு மிக மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இத்தாலியும் சுவீடனும்ம் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீடனின் விமான உற்பத்தித் துறை சிறந்த இலத்திரனியல் போர்முறைமைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால் அதன் அனுபவம் சிறந்த பங்களிப்பைச் செய்யக் கூடும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35இன் உற்பத்தியில் கணினி முறைமைகளின் குறியீடுகளில் பெரும்பாலானவற்றை பிரித்தானியர்களே எழுதினர். அந்த அனுபவம் மேலும் விருத்திச் செய்யப்பட்டு ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தில் பாவிக்கப்படும். Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் எந்திரத்தை பிரித்தானியாவின் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. Tempest(சூறாவளி) போர் விமானம் 2030-ம் ஆண்டுதான் முழுமையான பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்கா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை பரீட்சார்த்தமாகப் பறக்க விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து தலைமுறைப் போர்முறைமைகள்
முதலாம் தலைமுறைப் போர்முறைமையில் படையினரை வரிசைப் படுத்துதல் அணிவகுப்பு ஆகியவை முக்கியத்துவமானதாக இருந்தது.
இரண்டாம் தலைமுறைப் போர்முறைமையில் ரைபிள் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளடக்கப்பட்டன.
மூன்றாம் தலைமுறைப் போர் முறைமையில் படை நகர்வு வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எதிரியைப் பல முனைகளில் தாக்குதல் இதில் அடங்கும். இதில் தாங்கிகளும் விமானப்படையின் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்ட்ன.
நான்காம் தலைமுறைப் போர்முறைமையில் பல புதிய தளபாடங்கள் உள்ளடக்கப்பட்டன. அரசற்ற அமைப்புக்களும் போரில் ஈடுபட்டன. போர்த்தாக்குதல்களின் பொதுமக்களும் கொல்லபடுதல் தவிர்க்க முடியாததாகியது. போரில் அரசியலின் ஆதிக்கம் அதிகரித்தது. உளவியல் போர் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிரி நாட்டு மக்களுக்களுக்கான விநியோகங்களை நிர்மூலமாக்குதலும் போரின் பகுதியானது.
ஐந்தாம் தலைமுறைப் போர்முறைமையில் தகவல் தொழில்நுட்பம், புலப்படா விமானங்களும் தாங்கிகளும் கடற்கலன்களும் உள்ளடக்கப்பட்டன. போலிச் செய்திகளைப் பரப்பி எதிரி நாட்டின் படையினரையும் மக்களையும் பிளவுபடுத்தல் திசை திருப்பல் போன்றவையும் இதில் உள்ளன. தரைப்படை, கடற்படை, கடல்சார்படை, வான்படை ஆகியவனவற்றிற்கு இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் வலையமிடல் (Networking) முக்கியத்துவம் பெறுவதுடன். இதில் பல்-திரளப்போர் முறை (multi-domain warfare) உள்ளடக்கப்பட்டுள்ளது.
பல்-திரளப்போர் முறை (multi-domain warfare)
இனிவரும் காலங்களில் போர்விமானங்கள் பாரிய அளவில் வலையமாக்கம் (networking) உள்ளடக்கப்படும். இதனால் பல போர் விமானங்கள் ஒன்றாக இணைந்து செயற்படமுடியும். தாக்குதல் போர்விமானங்களும் ஆளில்லாப் போர் விமானங்களும் இணையவெளிப்படையினரும் இணைந்து செயற்படுவது பல்-திரளப் போர்முறையாகும். முதலில் எதிரியின் பிரதேசத்தினுள் ஆளில்லாப் போர் விமானங்கள். பறந்து சென்று தாக்குதலில் ஈடுபடும். சில ஆளில்லாப் போர் விமானங்கள் எதிரியின் ரடார்களுக்கு பெரிய போர்விமானம் போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் சமிக்ஞைகளை வெளியிடும். எதிரி இந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் போது எதிரியின் விமான எதிர்ப்பு முறைமைகளின் இருப்பிடத்தை கட்டுப்பாட்டகத்திற்கு அறிவித்து விடும். பின்னர் அந்த இடங்களில் புலப்படா போர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். எதிரியின் தாக்குதல் நிலைகளில் உள்ள கணினிகளின் செயற்பாடுகளை போர் விமாங்களில் உள்ள கணினிகள் இணையவெளிப் போர் மூலம் செயலிழக்கச் செய்யும். உரையாடல் மூலமும் கையசைவுகள் மூலமும் படையினரால் ஆளில்லா விமானங்களை இயக்கும் முயற்ச்சியில் 2020இன் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வெற்றி கண்டனர். விமானங்களும் ஆளில்லா விமானங்களும் செயற்கை நுண்ணறிவை பாவித்து தாமாகவே மனித தலையீடின்றி தமக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி நிலைமைக்கு ஏற்ப தமது பறப்புக்களை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் பாவனைக்கு வந்து விட்டன.
லேசர் படைக்கலன்கள்
அடுத்த தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் படைக்கலன்கள் இணைக்கப்படும். 2017-ம் ஆண்டு அமெரிக்கா உலங்கு வானூர்திகளில் இருந்து செயற்படுத்தும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்தது. ஒளியின் வேகத்தில் செயற்படும் லேசர் படைக்கலன்கள் ஒலியிலும் பார்க்க பலமடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இலகுவில் அழித்துவிடும். 2020 மே மாதம் அமெரிக்கப் கடற்படையினர் லேசர் படைக்கலன்களைப் பாவித்து விமானங்களை அழிக்கும் பரிசோதையை செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது எல்லா நாசகாரிக் கப்பல்களிலும் லேசர் படைக்கலன்களைப் பொருத்திக் கொண்டிருக்கின்றது.
முப்பரிமாண அச்சிடல்
எதிர்காலப் போரிலும் படைத்துறை உற்பத்தியிலும் முப்பரிமாண அச்சிடலும் முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றது. படையினரின் தலைக்கவசம் முதல் படைக்கலன்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் உட்பட நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகுதி வரை முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படும். போரின்போது படையினருக்கு தேவையான வழங்கல்களில் பெரும்பகுதி முப்பரிமாண அச்சிடல் மூலம் துரிதமாக உற்பத்தி செய்யப்படும். தற்போது பல புதிய போர்விமானங்களின் உதிரிப்பாகங்கள் முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை உற்பத்திச் செலவையும் நேரத்தையும் பெருமளவில் மிச்சப்படுத்துகின்றன. போர் முனைகளில் காயப்படும் வீர்ர்களுக்கு தேவையான புதிய உறுப்புக்களையும் முப்பரிமாண அச்சிடல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 2011-ம் ஆண்டு முப்பரிமாண அச்சிடல் மூலம் உருவாக்கிய உலகின் முதலாவது ஆளில்லா விமானம் வெற்றீகரமாகப் பறக்கவிடப்பட்டது.
விண்வெளிப்படை
ஒரு நாட்டு செய்மதி மற்ற நாட்டு செய்மதியை அழிப்பதும் செய்மதிகளில் இருந்து ஏவுகணைகளையும் குண்டுகளையும் வீசுவதும் உளவு பார்த்தலும் வேவுபார்த்தலும் இணையவெளிப் போர் செய்வதும் விண்வெளிப் படையின் முக்கிய செயற்பாடுகளாக அமையும். 2018 ஓகஸ்ட் 9-ம் டிரம்ப் அமெரிக்காவின் ஆறவது படையாக விண்வெளிப்படையை அறிவித்தார். அதற்கான சட்டமும் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. 1990இல் இருந்தே இரசியா தனது விண்வெளிபடையை ஆரம்பித்து விட்டது.2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது.2016-ம் ஆண்டு சீனா விண்வெளிப்படையை உருவாக்கத் தொடங்கியது.
ஆறாம் தலைமுறைப்போர்முறைமை
1991-ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக நடந்த போரை அவதானித்த இரசியாவின் Major-General Vladimir Slipchenko ஆறாம்தலைமுறைப் போர்முறைமை என்ற கோட்பாட்டை உருவாக்கினார். இப்போர் முறைமையில் தொலைவில் இருந்தே துல்லியமாகத் தாக்கக் கூடிய படைக்கலன்களை எதிரியின் மீது ஏவி அழித்தல் பயன்படுத்தப்பட்டன. தாக்குதல்களுக்கு செய்மதிகள் மூலம் தகவல் திரட்டப்பட்டது. Global Positioning System(GSP) முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் மனித இயந்திரங்களான ரொபோக்கள் படையினராகச் செயற்படுவதும் எதிர்காலப் போர்முறைமையில் முக்கியமாக இடம்பெறும்.
No comments:
Post a Comment