Sunday 29 November 2020

இஸ்ரேல் சவுதி கள்ளக் காதலும் ஈரானிய விஞ்ஞானி கொலையும்

  



இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூ சவுதி அரேபியாவிற்கு சென்று சவுதியின் பட்டத்துக்குரிய இளவரசரைச் சந்தித்தார் என்பதை சவுதியின் வெளியுறவுத் துரை அமைச்சர் ஃபசல் பின் ஃபார்ஹல் அல் சவுத் மறுத்துள்ளார். இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன், துருக்கியின் ரெசெப் எர்டோகான், ஹங்கேரியின் விக்டர் ஓபன், பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன், பிரேசிலின் ஜெர் பொல்சொனாரோ, இரசியாவின் விளடிமீர் புட்டீன், இந்தியாவின் நரேந்திர மோடி, மெக்சிக்கோவின் மானுவேல் ஓப்ரடோர் ஆகியோர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அவருக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தவர்கள் ஆகும். ஆனால் அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் கலக்கமடைந்தவர்களாக இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன் ஆகிய இருவரும் இருக்கின்றார்கள். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடனை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இருவரும் நிச்சயமாக கலந்துரையாடி இருப்பார்கள்.

எந்த ஆண்டி பெருவல்லரசு?

இஸ்ரேல் அமெரிக்க உறவு உறுதியானதாகவே கடந்த பல பத்தாண்டுகளாக இருக்கின்றது. சில வேளைகளில் இஸ்ரேல் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதுமுண்டு. 1996-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது நெத்தன்யாகூ அரபு இஸ்ரேலிய மோதல்களின் வரலாறு பற்றி கிளிண்டனுக்கு பாடம் எடுப்பது போல் நடந்து கொண்டார். சினமடைந்த கிளிண்டன் பேச்சு வார்த்தையின் பின்னர் “எந்த ---- ஆண்டி இங்கு பெருவல்லரசு (Who is the f—king superpower here?) என தனது உதவியாளர்களிடம் கேள்வி எழுப்பினாராம். பொதுவாக அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர்கள் மக்களாட்சிக் கட்சியின் அதிபர்களுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அதிக சாதகமாக நடந்து கொள்வார்கள். ஆனாலும் டிரம்பைப் போல் இஸ்ரேலுடன் தாராளமாக எந்த ஓர் அமெரிக்க அதிபரும் நடந்து கொண்டதில்லை. டிரம்பின் வெளியுறவுத் துறையினரும் அவரது யூத மருமகனும் ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரசுறவை ஏற்படுத்த வழிவகுத்தனர். இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசேலத்தை இஸ்ரேலுடன் இணைத்து ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். இஸ்ரேல் சிரியாவிடமிருந்து அபகரித்த கோலான் குன்று பகுதிகளை இஸ்ரேலுடன் பன்னாட்டு நியமங்களுக்கு முரணாக இணைத்ததை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். இஸ்ரேலின் ஜேருசேலம் இணைப்பு நடவடிக்கையை பலஸ்த்தீனியர்கள் எதிர்த்த போது டிரம்ப் அவகளுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தினார். பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் வாஷிங்டன் பணிமனையை மூட உத்தரவிட்டார். அத்துடன் பலஸ்த்தீனியர்களின் மேற்கு கரையில் இருந்த அமெரிக்க துணைத் தூதுவரகத்தையும் மூட உத்தரவிட்டார். இஸ்ரேலுக்கு அச்சம் கொடுப்பவராக இருந்த ஈரானியப் படைத் தளபதி காசிம் சுலேமானியைக் ஈராக்கில் வைத்து ட்ரம்பின் படையினர் குண்டு வீசிக் கொலை செய்தனர். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடன் பலஸ்த்தீனியர்கள் விவகாரத்தில் சற்று அவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுப்பார். அவர் இஸ்ரேலுக்கு எதிராகச் செய்யும் நகர்வுகள் அறுதிப் பெரும்பானமையில்லாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் நெத்தன்யாகூவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதில் போய் முடியலாம்.

அரபு மக்களுக்கு உதவாத சவுதி அரச குடும்பம்.

2019-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் தலைவராக இருந்த சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த அல் ஃபைசல் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள இரகசிய அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை உறவுகளை அம்பலப்படுத்தினார். வஹாபிசமும் சியோனிசமும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக வளர்த்து விட்டவை எனக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. சவுதி அரச குடும்பமே பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூட குற்றச்சாட்டு உள்ளது என்பது மட்டுமல்ல சவுதி அரச குடும்பம் உண்மையில் யூதர்கள் என்ற ஐயம் தெரிவிப்போரும் உள்ளனர். பதினொரு நூல்களுக்கு மேல் எழுதிய செயட் அபூரிஸ் என்ற பலஸ்த்தீனிய ஊடகவியலாளர் அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கு நாடுகளின் அடிவருடிகள் என்றே விபரித்தார். அவர்கள் தங்கள் குடிமக்களின் நலன்களில் அக்கறை இல்லாதவர்கள் என்பதும் அவரது குற்றச் சாட்டு. 2005-ம் ஆண்டு இறந்த சவுதி அரசர் பஹ்ட்டை சோம்பேறி, ஊழல்காரர், அறிவற்றவர், குடிகாரர், காணொலி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என விபரித்திருந்தார். அரபு நாடுகளில் இருக்கும் ஆட்சியாளர்கள் சட்டபூர்வமானவர்கள் அல்லர் என்பது அவரது ஆணித்தரமான கருத்து. அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கத்தைய நாடுகளினதும் எரிபொருள் நிறுவனங்களினதும் மாவட்ட அலுவலகர்கள் என அவர் தனது நூல்களில் விபரித்திருந்தார். சவுதி அரேபியா இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளை பேணுவதன் மூலம் சவுதியில் தமக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களின் விபரங்களை இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றது. சவுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க சவுதியில் செயற்படும் இஸ்ரேலிய உளவுப் படையினர் தீவிரமாகச் செயற்படுகின்றனர். இஸ்ரேல் கைப்பற்றிய அரபு நிலங்களைவிட்டு வெளியேறும் வரை அதனுடன் உறவு இல்லை என சவுதி அரேபியா சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

சவுதியும் டிரம்பும்

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மான் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்கு டிரம்ப் உதவியாக இருந்தார். ட்ரம்பின் மருமகனுடனும் அவர் நல்ல உறவை வைத்திருந்தார். யேமனில் சவுதி அரேபியா செய்த தாக்குதல்களுக்கும் டிரம்ப் படைக்கல உதவிகளையும் நேரடி நிபுணத்துவ உதவிகளையும் செய்தார். சவுதியில் இருந்து வெளியேறி துருக்கியில் வசித்த ஊடகரான ஜமால் கஷோக்ஜியின் உண்மையான கொலையாளிகளை தண்டிப்பதில் டிரம்ப் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் ஜோன் பைடன் நிச்சயம் அக்கறை காட்டுவார்.

நால்வரின் இரகசிய சந்திப்பு

2020 நவம்பர் 22-ம் திகதி பெஞ்சமின் நெத்தன்யாகூ அமைச்சரவைக் கூட்டத்தை திடீரென இரத்துச் செய்து விட்டு தனிப்பட்ட விமானம் ஒன்றில் ஏறிப் பறந்ததாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிப்பது நெத்தன்யாகூ – சல்மான் சந்திப்பை உறுதி செய்கின்றது. நெத்தன்யாகூ, சவுதி இளவரசர் சல்மான், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ இஸ்ரேலின் உளவுத் துறையான மொசாட்டின் தலைமை இயக்குனர் யொஸ்ஸி கொஹென் ஆகியார் சவுதி அரேபியாவின் செங்கடல் கரையோர நகரமான நியோமில் சந்தித்து ஐந்து மணி நேரம் உரையாடியுள்ளார்கள். இவர்களின் சந்திப்பின் முக்கிய நோக்கம் ஈரானை இனி எப்படிக் கையாள்வது என்பது பற்றியே இருந்திருக்கும் என மேற்காசியாவின் புவிசார் அரசியலை புரிந்தவர் எவரும் அடித்துச் சொல்வர். ஆனால் 2021 ஜனவரி 20-ம் திகதி டிரம்பின் ஆட்சி முடியுமுன்னர் ஈரான் மீதான ஒரு தாக்குதல் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்குமா என அறுதியிட்டு சொல்ல முடியாது.  

ஈரான் அணு விஞ்ஞானி கொலை

ஒரு புறம் ஈரானுக்கு எதிராக சில அரபு நாடுகளும் இஸ்ரேலும் கள்ள உறவுகளையும் பகிரங்க உறவுகளையும் வளர்க்கும் போது மறுபுறம் ஈரானின் நான்காவது அணு விஞ்ஞானி மோஷேன் ஃபக்ரிஸாதேவை கொல்லப்பட்டார். இது ஈரானில் கொல்லப்பட்ட நான்காவது விஞ்ஞானியாகும். இது வரை கொல்லப்பட்டவர்களில் உயர் தரமான விஞ்ஞானியும் ஆவார். எல்லாக் கொலைகளிற்கும் இஸ்ரேல் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. 2021-ம் ஆண்டு ஜூன் 18-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் ஒரு படைத்தளபதிதான் அதிபராக வரவேண்டும் என ஈரானில் தீவிரப் போக்குடையவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். 2019இல் நடந்த தளபதி சுலேமானி கொலையும் இந்த அணு விஞ்ஞானி கொலையும் ஈரானில் ஒரு அதிதீவிரவாதப் போக்குடையவர் ஒருவரே அதிபராக வருவதை நிச்சயப் படுத்தியுள்ளது. அதை இஸ்ரேலும் விரும்புகின்றது. ஏனென்றால் ஈரானில் திவிரவாதப் போக்குடையவர்களின் கை ஓங்கும் போது ஈரானுக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோன் பைடனுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்காது.  ஈரானின் இரண்டு பெறுமதிமிக்க குடிமக்கள் கொல்லப் பட்டமை ஈரானால் அவர்களைப் பாதுகாக்க இயலாத நிலையைக் காட்டுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானிய ஆட்சியாளர்கள் மீது கரி பூசுவது அந்த ஊடகங்களின் நோக்கங்கள். அந்த ஊடகங்கள் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளன. ஆனால் இஸ்ரேலைக் கண்டிக்கும் வாக்கியங்களை அவை எழுதவோ பேசவோ இல்லை. ஈரான் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் உளவுத்துறைகளை விஞ்சக் கூடியவகையில் தனது உளவுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளின் கணவரும் யூதருமான ஜெரார்ட் குஷ்ணர் வெள்ளை மாளிகையின் உயர் பதவியான அதிபரின் மூத்த ஆலோசகர் பதவியில் இருக்கின்றார். டிரம்ப் 2017 ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குஷ்ணர் சவுதியின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானுடன் நெருங்கிய நடபை வளர்த்துள்ளார். குஷ்ணர் 2020 டிசம்பர் முதல்வாரம் இஸ்ரேலுக்கும் சவுதிக்குமான பயணம் ஒன்றை மேற்கொள்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்: 1. சவுதி – இஸ்ரேல் உறவை மேலும் நெருக்கமாக்குவது 2. கட்டார்(கத்தார்) நாட்டின் மீது சவுதி அரேபியா, எகிப்த்து, ஐக்கிய அமீரகம் ஆகியவை மேற்கொண்டுள்ள பொருளாதாரத் தடையையும் மற்றும் நெருகுவாரஙக்ளை நீக்குவதாகும். அதன் மூலம் கட்டார்(கத்தார்) ஈரான் மீது தங்கியிருப்பதை இல்லாமல் செய்யலாம்.

 

 

http://www.veltharma.com/2020/11/blog-post_24.html

http://www.veltharma.com/2013/01/blog-post_28.html

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...