Monday, 27 April 2020

சீனா தலைமை தாங்குமா தனிமைப்படுத்தப்படுமா?

சீனா 1979இல்அரச முதலாளித்துவ நாடாக மாறிய பின்னர் அதன் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்பம் மற்றும் படைத்துறையில் அது மற்ற வல்லரசு நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து கொண்டிருப்பதும் அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளைச் சிந்திக்க வைத்தன. அமெரிக்கா சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க பல வகைகளில் முயல்கின்றது. ஜேர்மனி, இத்தாலி, கிரேக்கம் உட்பட பல மேற்கு நாடுகள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுடன் வர்த்தகம் செய்வதை பெரிதும் விரும்பின.

கொவிட்-19 நோயின் பின்னர்
கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் சீனா உலக அரங்கில் தனது நிலையை உயர்த்த முயற்ச்சி எடுக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவை கொவிட்-19 நோயை வைத்து சீனாவை உலக அரங்கில் இருந்து ஓரம் கட்ட முயல்கின்றன. இத்தாலி உட்படப் பல நாடுகளுக்கு சீனா தனது  மருத்துவர்களை அனுப்பி கொவிட்-19 நோயில் இருந்து அந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க உதவியது. பல நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்தது.

தற்பெருமை காப்பாற்றல்
கொவிட்-19 தொற்றுநோய் சீனாவில் இருந்து உலகெங்கும் பரவியது என்ற  செய்தி உலகெங்கும் அடிபடுவது சீனாவிற்கும் அதன் ஆட்சியாளரக்ளுக்கும் ஓரு இழுக்காக அமையாமல் இருக்க சீனா பல முயற்ச்சிகளை எடுத்தது. சீனாவின் வெளிப்படைத் தன்மையற்ற ஆட்சி முறைமையால் தான் கொவிட்-19 தொற்றுநோய் மோசமாகப் பரவியது என்ற குற்றச் சாட்டையும் சீனா முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. 2019-ம் ஆண்டி சீன அதிபர் ஜீ ஜிங்பிங் தமது நாட்டு ஆட்சி முறைமையால் தான் 2008-ம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட நிதி நெருக்கடி சீனாவைப் பாதிக்காமல் சீனா தொடர்ச்சியாகப் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியை சாதித்துக் கொண்டிருகின்றது என்றார். இது சீனா தனது ஆட்சி முறைமையை உலகின் மற்ற நாடுகளுக்கு பரப்ப முயல்கின்றதா என்ற கேள்வியை உலக தாராண்மைவாதிகளிடம் எழுப்பியது. சீனா தமது நாட்டிற்கு அமெரிக்காவால் திட்டமிட்டு கொரொனா நச்சுக்கிருமிகள் பரவவிடப்பட்டது எனக் குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலடியாக அமெரிக்க அதிபர் கொரொனா நச்சுக்கிருமிக்கு சீன நச்சுக்கிருமி என்ற பெயரையும் சூட்டினா. இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒரு வார்த்தைப் போரை உருவாக்கியது. அது உலகெங்கும் தெற்று நோய் பரவிக் கொண்டிருக்கையில் ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதால் அந்தப் போரை இரு நாடுகளும் நிறுத்திக் கொண்டன. பின்னர் சீன ஊடகங்கள் மேற்கு நாடுகள் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன என்ற செய்தியை பரப்பின. குறிப்பாக பிரான்ஸின் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் இருப்பர்களை பசியாலும் நோயாலும் இறக்கவிட்டு அங்கு பணிபுரியும் தாதியர்கள் இரவு நேரத்தில் வெளியேறி விடுகின்றனர் என்ற குற்றச் சாட்டு இரு நாட்டுக்கும் இடையிலான உறவை பாதித்தது. சீன அரச தனது நாட்டு மக்களிடம் தாம் தொற்றுநோயை மேற்கு நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது என காட்ட முயல்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும்
சீன அரசின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பதிவில் இத்தாலியர்கள் தங்கள் வீடுகளின் முன்னின்று சீனாவிற்கு நன்றி தெரிவிக்க சீனத் தேசிய கீதத்தை பாடுவதாக ஒரு போலித் தகவலை வெளியிட்டார். ஆனால் ஆறு சீன மருத்துவ நிபுணர்கள் உபகரணங்களுடன் பெல்கிரேட்டில் கொவிடி-19 நோய்த் தடுப்பிற்காக வந்து இறங்கிய போது சேர்பிய அதிபர் சீனாத் தேசியக் கொடியை முத்தமிட்டு தன் நன்றியைத் தெரிவித்ததுடன் ஐரோப்பிய நாடுகளைத தாக்கி கருத்தும் வெளியிட்டார் என்பது உண்மை.  யூரோ நாணயத்தைப் பொது நாணயமாகப் பாவிக்கும் நாடுகள் 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமது நாடுகளில் சீனாவின் முதலீட்டைப் பெரிதும் விரும்பின. ஆனால் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தையிட்ட கரிசனையால் 2019 ஐரோப்பிய ஒன்றியம் சீனாவ ஒரு போட்டியாளராக அறிவித்தது. ஜேர்மன் அதிபர் அஞ்சேலா மேர்க்கலின் கருத்துப்படி ஒரு போட்டி நாட்டுடன் வர்த்தகம் செய்யலாம் ஆனால் அந்த போட்டி நாடு சில விதிகளைக் கையாள வேண்டும் என்றார். சீன அரசு தனது நிறுவனங்கள் உலக அரங்கில் போட்டியிடும் திறனை அதிகரிக்க உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி நிதி உதவி செய்வதையே அவர் சுட்டிக் காட்டினார். சீனாவின் ஹுவாவே கைப்பேசி நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்பத்தை ஜேர்மனியும் பிரான்சும் தடை செய்தால் பதிலடி நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என அந்த நாடுகளுக்கான சீனத் தூதுவர் “மிரட்டியதை” ஐரோப்பியர்கள் வெறுத்தனர். இரசியப் பாணியில் சீனாவும் ஐரோப்பா தொடர்பாக போலிச் செய்திகளைப் பரப்புவதையும் ஐரோப்பியர்கள் கடுமையாக வெறுக்கின்றனர். சீனாவில் கொவிட்-19 நோய் பரவத் தொடங்கிய போத் ஐரோப்பிய நாடுகள் சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியதை பிரபலப்படுத்த வேண்டாம் என்று சீனா கேட்டுக்கொண்டது. ஆனால் சீனா இத்தாலிக்கு உபகரணங்கள் வழங்கியதை உலக அரங்கில் பெரிதாகப் பரப்புரை செய்தது.

கொவிட்-19 நோய்ப்பரவலுக்குபின் உபாயங்கள் மாற்றம்
உலகம் எங்கும் கொவிட்-19 தொற்று நோய்பற்றிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் சீனா தனது போர்விமானங்களையும் போர்க்கப்பல்களையும் தைவான் எல்லைக்குள் அதை மிரட்டும் வகையில் அனுப்பியது. அதற்குப் பதிலடியாக அமெரிக்க்கா தனது பி-52 போர் விமானங்களை அனுப்பியது. சீனாவின் ஹையாங் டிஜி-8 என்னும் ஆய்வுக் கப்பல் சீன கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்புடன் வியட்னாம் மற்றும் மலேசியாவிற்கு சொந்தமான தென் சீனக் கடற்பகுதிகளில் எரிபொருள் ஆய்வை மேற்கொண்டதாக இரு நாடுகளும் 2020 ஏப்ரல் 17-ம் திகதி குற்றம் சாட்டின. அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் அமெரிக்கா என்ற கடற்படைக் கப்பல் சீனக் கப்பல்களை இடை மறித்தன. அதில் அமெரிக்காவின் புதிய எஃப்-35 புலப்படா போர்விமாங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான தியோடோ ரூஸ்வெல்ற்றில் பணிபுரியும் ஐயாயிரம் பேரில் ஆயிரம் பேருக்கு கொவிட்-19 நோய் தொற்றுயுள்ளதை சாதகமாக்கி சீன இந்த நகர்வை மேற்கொண்டதாகக் கருதப் படுகின்றது. ஆனலும் ஒஸ்ரேலியா பல கப்பல்களைக் கொண்ட ஒரு படையணியை தென் சீனக் கடலுக்கு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கு துணையாக அனுப்பியது.

துருப்பிடிக்கும் சீனாவின் செயற்கைத் தீவுகள்.
சீன விரிவாக்கத்தினதும் அதன் உலக ஆதிக்கத்தினதும் முதற்படியாக கருதப்படவெண்டியது தென் சீனக் கடலில் அதன் எட்டுப் புள்ளிக் கோட்டுக்குள் உள்ள கடற் பிரதேசத்தை முழுமையாக தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான். அதன் ஆரம்பப் புள்ளியாக சீனா தென் சீனக் கடலில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பன்னாட்டு நியமங்களுக்கு மத்தியிலும் செயற்கைத் தீவுகளை உருவாக்கியது. சீனா மணல் வாரி இறைத்து உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் படைக்கலன்களை மறைத்து வைத்திருப்பது கடினமான ஒன்றாகும் நிலத்தைத் துளைத்துக் கொண்டு போகக்கூடிய ஏவுகணைகளால் தென் சீனக் கடலில் உள்ள தீவுகளின் படை நிலைகளை இலகுவாக அழிக்க முடியும். அமெரிக்காவின் புலப்படாப் போர்விமானங்களில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் வீசப்படும் ஏவுகணைகள் தென் சீனக் கடற் தீவுகளில் உள்ள படை நிலைகளைத் துவம்சம் செய்ய முடியும். சீனப் பெரு நிலப்பரப்பில் இருந்து செயற்கைத் தீவுகளுக்கான வழங்கல்களை அமெரிக்காவின் கடற்படையால் துண்டிக்க முடியுமானால் அது அத் தீவுகளின் அழிவிற்கு வழிவகுக்கும். தென் சீனக் கடலில் சீனா நிறுத்தியுள்ள பல படைக்கலன்களும் ரடார்களும் வழங்கல் குழாய்களும் துருப்பிடித்து விட்டன. அவற்றில் பல செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

கொவிட்டால் சீனா ஆபிரிக்காவைக் கோட்டைவிட்டது
பட்டி-பாதை முன்னெடுப்பு என்ற பெயரிலான சீனாவின் புதிய பட்டுப்பாதை ஆபிரிக்காவை சீனா ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்கும் உலகிற்கு சீனா தலைமை தாங்கும் முயற்ச்சிக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் போது சீனாவில் வசித்த பல ஆபிரிக்கர்களை சீனர்கள் கேவலமாக நடத்தியமை பல ஆபிரிக்க நாடுகளில் பெரும் சீன எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. சீனாவின் குவான்சோ மாகாணத்தில் ஐந்து நைஜீரியர்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அங்கு உள்ள எல்லா ஆபிரிக்கர்கள் மீது கடுமையான கெடு பிடிகள் ஆரம்பமாகின. வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் ஆபிரிக்கர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆபிரிக்கர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்ற போது விரட்டப்பட்டனர். நோயால் பாதிக்கப்படாத ஆபிரிக்கர்களும் தனிமைப் படுத்தப் பட்டனர். சிறு பிள்ளைகளைக் கொண்ட ஆபிரிக்கக் குடும்பங்கள் கூட தெருவில் உறங்க வேண்டிய நிலை உள்ளானது. சீனக் காவற்றுறையினர் ஆபிரிக்கரகளுடன் கடுமையாக நடந்து கொண்டனர். வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபிரிக்கரக்ள் தெருக்களில் நின்ற போது அவர்கள் காவற்றுறையினரால் விரட்டப்பட்டனர். பல ஆபிரிக்கர்களின் கடவுட் சீட்டுக்கள் பறிக்கப்பட்டன. இவற்றால் ஆத்திர மடைந்த பல ஆபிரிக்க அரசுகளும் ஆபிரிக்க ஒன்றியமும் தமக்கான சீனத்தூதுவரை அழைத்து தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்தன.

சீனாவைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சி
சீனாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக வர்த்கப் பழிவாங்கல் செய்வோம் என அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டல் விடுக்கும் முயற்ச்சியை 2015-ம் ஆண்டு கனடாவுடனும் மெக்சிக்கோவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்யும் போதே ஆரம்பித்து விட்டது. பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் இயக்குனர் Changyong Rheeஇன் கருத்துப் படி பன்னாட்டு வர்த்தக முறைமையில் இருந்து சீனாவைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சி உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜெர்மனியப் பத்திரிகை ஒன்று ஜேர்மனிக்கு சீனா பரப்பிய கொரோனா கிருமியால் தமது நாட்டுக்கு 149 பில்லியன் யூரோ இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான விலைச்சிட்டை ஜெர்மனிய அரசு சீனாவிற்கு அனுப்பியதாகவும் ஒரு போலிச் செய்தியை வெளியிட்டது. இது ஜெர்மனியில் சீனாவிற்கு வெறுப்பை வளர்க்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும். அமெரிக்காவின் மிசோரி மாநில அரசு கொவிட்-19 தாக்கத்திற்கான இழப்பீட்டை கோரி சீனா மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வேறு பல தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் சீனாமீது வழக்குத் தொடர்ந்துள்ளன.

எரிபொருள் உற்பத்தி நாட்டு மக்களும் தொழிலாளர்களும்
கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை படு வீழ்ச்சியடைந்து எதிர்மறையான நிலையைக் கூட அடைந்தது. இதற்கான காரணம் சீனாதான் என பல எரிபொருள் உற்பத்தி நாட்டு மக்களும் அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களும் எண்ணி சீனா மிது வெறுப்புக் கொள்ளும் நிலையையும் தோன்றியுள்ளது.

உற்பத்திகள் சீனாவில் இருந்து வெளியேறுமா?
கொவிட்-19 தாக்கத்தின் பின்னர் பல தென் கொரிய நிறுவனங்கள் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளன. ஏற்கனவே அமெரிக்காவில் உற்பத்தி செய்யுங்கள் என்ற குரலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் தற்போது வேலைவாய்ப்புகள் பல பறிபோயுள்ள நிலையில் 2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்க டிரம்ப் சீன விரோதக் கொள்கையை தூக்கிப் பிடித்து சீனாவில் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் படி தூண்டலாம். தற்போது உலக தயாரிப்பில் (global manufacturing) 28% சீனாவில் மேற்கொள்ளப்படுகின்றது.. இவற்றை வேறு நாடுகளில் செய்யும் தொழிற்சாலைகளை ஓரிரு ஆண்டுகளில் உருவாக்கிவிட முடியாது.

மேலாண்மை மேன்மையைக் கொண்டு வருமா?
உலக நாடுகளில் கொவிட்-19 தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பட்டியலைப் பார்க்கும் போது சீனா கொவிட்-19 நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டுள்ளது எனவே தோன்றுகின்றது. நெருக்கடி மேலாண்மையில் சீனா உலகின் முதலாம் இடத்தைப் பிடித்து விட்டது. ஆனால் 30 நாடுகளைக் கொண்ட மென்வல்லரசுப் பட்டியிலைல் சீனா இதுவரை இடம்பெறவில்லை. கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அது ஒரு மெல்வல்லரசாகவும் உருவெடுக்கும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டான 2021-இல் சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கமும் 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டின் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (HARMONIOUS) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கமும் சீனக் கனவுகளாகும். சீனா செழுமையும் வலிமையும் அடைய 2050ஐயும் தாண்டிச் செல்ல வேண்டும். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...