அமெரிக்கா 10 விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவிடம் நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் பத்து உள்ளன. அவற்றுடன் அடுத்த தலைமுறை ஃபோர்ட் வகை பெருவிமானந்தாங்கிகளின் (Ford Class super carriers) முதல் உற்பத்தியான USS Gerald R Ford(CVN 79)ஐ 2017இல் 13பில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணித்து முடித்து தொடர்ந்து பரிசோதித்து வருகின்றது. இரண்டாவது உற்பத்தியான USS John F Kennedy (CVN 79) 2019 டிசம்பரில் நிர்மானித்து முடிக்கப்பட்டது. 2058-ம் ஆண்டு அமெரிக்கா பத்து ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா கொண்டிருக்கும்.
விமானம் தாங்கிகளில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம்
ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை விமானந்தாங்கிக் கப்பல்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் மட்டுமே பாவிக்கின்றன. அமெரிக்காவின் படைத்துறை வலிமையிலும் அதன் உலக ஆதிக்கத்திலும் அதன் விமானம் தாங்கிக் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் பாவிக்கும் F-35B Lightning II என அழைக்கப்படும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் எதிரியின் எதிர்கால அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. அமெரிக்காவின் கடலாதிக்கத்தைத் தொடர்ந்து பேணுவதற்காக அவை உருவாக்கப்பட்டன. எதிரியின் எந்த வான் பாதுகாப்பையும் ஊடறுத்துக் கொண்டு சென்று தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பக் கூடிய வகையில் அவை உருவாக்கப்பட்டன. அவை மிகக் குறுகிய தூரம் மட்டும் ஓடி கப்பலில் இருந்து பறந்து செல்லும். தரையிறங்கும் போது உலங்கு வானூர்தி போல் ஓடு பாதை தேவையில்லாமல் இறங்கும். எதிரியின் ரடார்களுக்கு இலகுவில் புலப்படாதவை F-35B.
ஒலியிலும் ஐந்து மடங்கிற்கும் அதிக வேகம்
அமெரிக்காவின் பெருவிமானம் தாங்கிக் கப்பல்களையும் அவற்றில் உள்ள ரடார்களால் இனம் காணக் கடினமான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் சீனாவினதும் இரசியாவினதும் படைத்துறையினர் கருத்தில் கொண்டனர். இரசியா 2020இலும் சீனா 2030இலும் தமது படைத்துறையை உலகின் முதற்றரமானதாக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிச் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கிகளை அவற்றின் பரிவாரங்களாக வரும் நாசகாரிகளையும் அவற்றில் உள்ளவிமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தாண்டிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கின. சீனா தனது முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2017இல் பரிசோதித்தது. அதனால் 2018-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை ஹைப்ப்ர் சோனிக் ஏவுகணைகள் செல்லுபடியற்றதாக்கி விட்டன என படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறப்பவற்றை சுப்பர்சோனிக் என்றும் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவற்றை ஹைப்பர்சோனிக் என்றும் அழைப்பர். 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இரசியாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் துறையில் அமெரிக்காவை மிஞ்சிய நிலையில் இருந்தன. அமெரிக்காவின் தாட் மற்றும் பேற்றீயோற்றிக் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் சீனாவினதும் இரசியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க முடியாத நிலை இருக்கின்றன. சீனா உருவாக்கியுள்ள hypersonic glide vehicle (HGV) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையினது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் அதை ஏவப்பட்டவரால் அதன் திசையை மாற்ற முடியும். அதனால் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்ற அசையும் இலக்குகளை அவற்றால் துல்லியமாகத் தாக்க முடியும். அமெரிக்கா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இயக்க செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பாவிக்கவுள்ளது. ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றால் மட்டுமே துரிதமாக இயக்கி துல்லியமாக இலக்கைத் தாக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஒலியின் வேகமும் ஒளியின் வேகமும்
ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து தப்புவதற்கு ஒளியின் வேகத்தில் லேசர் படைக்கலன்கள் மட்டுமே பயன்படும். லேசர் கதிர்கள் அது வீசப்படும் இலக்கை ஒளியின் வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் ஒளியிலும் பார்க்க வேகமாக இயங்கக் கூடியது ஒன்றுமில்லை. லேசர் கதிர்களை உருவாக்கி வீசுவதற்கு மிக அதிக மின்சாரம் தேவை. கடுமையான தூசு, மூடுபனி போன்றவை லேசர் கதிர்களின் செயற்பாட்டிற்கு இடையூறாகும். இவற்றைத் தவிர்க்க அமெரிக்கா விண்வெளிப்படையை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் உள்ள செய்மதிகளால் எதிரியின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இனம் காண முடியும். செய்மதியில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து லேசர் படைக்கலன்கள் செயற்படும்.
லேசர் கதிர் உற்பத்திப் பிரச்சனை
லேசர் கதிர்களை உற்பத்தி செய்வதற்கு அதிக அளவிலான மின்சாரம் தேவை. சாதாரண விமானம் தாங்கிக் கப்பல்களில் இடப்பிரச்சனை பெரும் பிரச்சனையாகும் ஆனால் ஃபோர்ட் வகை பெருவிமானந்தாங்கிகளால் (Ford Class super carriers) அப்பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும். விமானம் தாங்கியில் லேசர் கதிர்களை உருவாக்கத் தேவையான மின்சாரத்தை பெருமளவில் உற்பத்தி செய்துமின்தேக்கிகளில் (capacitor) சேமித்து வைக்க வேண்டும். தொடர்ச்சியாக அல்லது சமாந்தரமாக இணைக்கப்பட்ட பல மின்தேக்கிகள் அதற்கு தேவைப்படும். அவற்றிற்கு பெருமளவு இடம் தேவைப்படும். ஃபோர்ட் வகை விமானம் தாங்கிகளில் அணுவலு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இரட்டை இயந்திரங்கள் உள்ளன. அவை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக விமானம் தாங்கிகளை கடலில் செயற்பட வைக்கும் எண்ணத்துடம் உருவாக்கப்பட்டவை. அதனால் ஃபோர்ட் வகை விமானம் தாங்கிகள் லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அழிக்க முடியும்.
இந்தியாவின் காளி
இந்தியாவிடம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. மேலும் ஒரு கப்பலை உருவாக்கும் திட்டமும் இந்தியாவிடம் உள்ளது. தீபகற்பமான இந்தியாவின் 3214 கிலோ மீட்டர் நீளமான மேற்குக் கரையை பாக்கிஸ்த்தானிடமிருந்தும் 1822கிலோ மீட்டர் நீளமான கிழக்குக் கரையை சீனாவிடமிருந்தும் பாதுகாப்பதற்கு இந்தியாவிற்கு ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்கள் தேவை என சில படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். அவற்றை இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injector என்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beam இலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும். ஒளியின் வேகத்தில் பாயும் நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிற்கும் அவற்றை எதிர்க்கும் ஒளியின் வேகக் கதிர்களை உருவாக்கிகளிற்கும் இடையில் படைத்துறைப் போட்டி தொடரும்
No comments:
Post a Comment