26/10/2019
சனிக்கிழமை சிரிய நேரம் இரவு 11-00 மணிக்கு பெயர் வெளியிடாத (ஏர்பில், ஈராக்) இடத்தில் இருந்து
கிளம்பிய அமெரிக்காவின் எட்டு போயிங் CH-47 Chinook உழங்கு வானூர்திகளில் அமெரிக்காவின் சிறப்புப் படையணியான
டெல்டாவைச் சேர்ந்த 100 படையினர் சிறபுப் பயிற்ச்சி பெற்ற நாய்களுடன் இருந்தனர்.
அவர்களின் படையணியின் முழுப்பெயர் 1st Special Forces Operational
Detachment-Delta, known as Delta Force. சிரியாவின் இத்லிப் மகாணத்தின் இரசியக்
கட்டுப்பாட்டில் உள்ள பரிஷா நகரத்தில் இரசியாவின் அனுமதியுடன் வேட்டுக்களை
மாரிபோல் பொழிந்தபடி சென்று இறங்கிய அமெரிக்கப் படையினர் அல் பக்தாதி இருந்த
கட்டிடத்தின் சுவரை உடைத்துக் கொண்டு உள் நுழைந்தனர். கதவில் தற்கொலையாளிகள்
இருப்பார்கள் என்பதால் சுவரை உடைத்துக் கொண்டு போனார்கள். டெல்டா படையணியினர் பல
மொழிகள் பேசக் கூடியவர்கள். கட்டிடத்தை சுற்றவர இருந்த மக்களை அரபு மொழியில் விலகிச்
செல்லும் படி பணித்தனர். அவர்களை ஒரு மரத்தின்
கீழ் படை நடவடிக்கை முடியும்வரை இருக்க வைத்தனர். மூன்று மணித்தியாலங்கள்
துப்பாக்கி வேட்டு ஓசை கேட்டபடி இருந்தது.
கைப்பற்றப்படாமல்
இருக்க தற்கொலை செய்தார்
ஐ எஸ் என்னும்
தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதியை இலக்கு வைத்தே ஆபத்து மிக்க பகுதிக்கு 100படையினரும்
ஒரு மணித்தியாலம் தாழப் பறந்து சென்றனர். அமெரிக்கச் சிறப்புப் படையினர் தாக்கிய
கட்டிடத்தில் இருந்து 11 சிறுவர்களை அமெரிக்கப் படையினர் பாதுகாப்பாக
வெளியேற்றினர். அமெரிக்கப் படையின் தாக்குதலில் இருந்து தப்ப அல் பக்தாதி ஒரு
சுரங்கத்துள் தன் மூன்று பிள்ளைகளுடன் தப்பி ஓடினார். அவரை சிறப்புப் பயிற்ச்சி
பெற்ற நாய்கள் துரத்திச் சென்றன. எதிரிகளிடம் சரணடையக் கூடாது அவர்களால்
கைப்பற்றாப்படக் கூடாது என்ற வைராக்கியத்துடன் தற்கொலைக் குண்டுகள் பொருத்தப் பட்ட
உள்ளாடையுடன் எப்போதும் இருக்கும் அல் பக்தாதி அவற்றை வெடிக்கச் செய்தார். அமெரிக்காவின்
படையில் இருந்த கே-9 என்ற பெயருடைய ஒரு நாய் மட்டும் காயப்பட்டது. முதலில் டிரம்ப் பெரிய அலுவல் ஒன்று நடந்துள்ளது என டுவிட்டர்
பதிவிட்டார். தக்குதலில் அல் பக்தாதியின் இரண்டு மனைவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு முன்ன்ர் நான்கு தடவைகள் அல் பக்தாதி
கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்திருந்தன.
நேரடியாக டிரம்ப்
பார்த்தார்.
அமெரிக்க டெல்டா
படையினரைன் தாக்குதலின் போது பல ஐ எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு கைது
செய்யப்பட்டதுடன் அவர்களின் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐ எஸ் போராளிகளிற்கு
எதிரான எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவையான தகவல்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம். தாக்குதல்களை
வெள்ளை மாளிகையின் நிலைமை அறையில் (Situation Room) இருந்து நேரடியாகப் பார்ப்பதற்காக தக்குதலாளிகளிடமிருந்த ஒளிப்பதிவுக்
கருவிகளில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திடீர் DNA பரிசோதனை
தாக்குதல் நடந்த
இடத்தில் வைத்தே திடீர் டிஎன்ஏ (DNA) பரிசோதனை
செய்யப்பட்டு அவர் அல் பக்தாதிதான் என உறுதி செய்யப்பட்டது. தாக்குதல் நடத்த முன்னரே
அல் பக்தாதியின் உள்ளாடையை உளாவாளிகள் மூலம் திருடி அதிலிருந்து அவரது டிஎன்ஏ
மாதிரிகளை அமெரிக்கப் படையினர் பெற்றிருந்தனர். அல் பக்தாதி இருந்த கட்டிடத்தை
அமெரிக்கப் போர் விமானங்கள் இறுதியில் குண்டு வீசி அழித்தன. அந்த இடம் ஒரு வழிபாட்டிடமாக
மாற்றப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை. இத் தாக்குதலை நெறிப்படுத்த ஈராக்கின்
எர்பில் நகரில் ஒரு கட்டளை-கட்டுப்பாட்டகம் ஒன்று நிறுவப்பட்டது. அங்கிருந்து டெல்டா100 படையினரும் நாய்களும் துருக்கி
ஊடாகப் பறந்து தாக்குதலுக்கு சென்றிருக்கலாம்.
அல் பக்தாதியை
அசிங்கப் படுத்த டிரம்ப் முயற்ச்சி
ஊடகவியலாளர்களைக்
கூட்டி அல் பக்தாதியின் இறப்பை அறிவித்த டொனால்ட் டிரம்ப் அவர் நாய் போல இறந்தார், கோழையாக இறந்தார் என வரிகளை அடுக்கி அவரை முடிந்த அளவு
கேவலப் படுத்தினார். உக்ரேன் விவகாரத்தில் அதிபர் தேர்தலில் பின்னடைவைச்
சந்திக்கும் டிரம்பிற்கு இந்த நடவடிக்கை நல் வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்
தாக்குதலுக்கு இரசியா அனுமதியும் உதவியும் வழங்கியமை டிரம்பின் தேர்தல் வெற்றி
வாய்ப்பை அதிகரிக்கு நோக்கத்துடனா என்ற கேள்வியும் எழுகின்றது. ஊடகவியளார்கள் முன்
இரசியாவிற்கு டிரம்ப் இரசியாவிற்கு நன்றி தெரிவித்தார். தாக்குதலுக்கு தாம் உதவி
செய்யவில்லை என்றது இரசியா. அல் பக்தாதியின் இறப்பில் எந்த ஒரு நீதிபதியும்
சம்பந்தப்படவில்லை இருந்தும் அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டார் என்றார்
டிரம்ப். அவரைத் தவிர எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என டிரம்ப் தெரிவிக்க
மறுத்தார்.
நாய் போல என இகழ்ந்த
டிரம்ப் நாய்களைப் பாராட்டினார்.
அமெரிக்காவின்
படையணிகள் பலவற்றில் நாய்கள் பாவிக்கப்படுவதுண்டு. வெடிபொருட்களை மோப்பம்
பிடிப்பதற்கு என German shepherd, Belgian Malinois என்றவகை நாய்களைப் பாவிக்கின்றார்கள். துரித படை
நடவடிக்கைக்களுக்காக அவற்றிற்கு சிறப்புப் பயிற்ச்சி வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு
இருட்டில் பார்க்கக் கூடிய கண்ணாடி, நீர்புகாத ஆடை
போன்றவை கூடப் பொருத்தப்படும். முழுப் பயிற்ச்சி பெற்ற ஒரு நாயின் பெறுமதி $283,000இற்கு மேல். மோப்பம் பிடிக்கும் நாய்களுக்கு இணையாக எந்த ஒரு கருவியையும்
விஞ்ஞானிகளால் உருவாக்க முடியவில்லை. பின் லாடனைக் கொன்ற போது பாவிக்கப் பட்ட நாயை
பராக் ஒபாமா நேரில் சந்தித்திருந்தார். அல் பக்தாதிக்கு எதிரான
நடவடிக்கையில் காயப்பட்ட நாயை மதிநுட்பம் மிக்க அழகிய நாய் என்றார் டிரம்ப்.
குர்திஷ்
போராளிகள் பேருதவி
குர்திஷ் உளவுத்
துறையின் உதவியுடன் சிஐஏ தகவல்களைத் திரட்டியது. அவர்களின் 5 மாதங்கள் தொடர் முயற்ச்சி வெற்றி பெற்றமைக்கு குர்திஷ் உளவுத் துறை முக்கிய
காரணமாகும் . குர்திஷ் தளபதி ஜெனரல் மஜ்லௌம் சிரியாவின் வடகிழக்குப்
பிராந்தியத்தில் ஒரு மிகச் சிறந்த உளவுத் துறையைக் கட்டி எழுப்பியிருந்தார்.
அவர்களின் செயற்பாட்டால் பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. பின் லாடனைப் பிடிக்க
ஐநூறு பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவுடன் பத்து ஆண்டுகள் எடுத்தன. ஆனால் அல்
பக்தாதியை மிக விரைவில் மிகக் குறைந்த செலவுடன் பிடிப்பதற்கு குர்திஷ் போராளிகளே காரணம்.
அல் பக்தாதி இடங்களை மாற்றிக்கொள்ளும் முறை குர்திஷ் உளவாளிகளால் அறியப்பட்டது.
அல் பக்தாதி இருந்த கட்ட்டிடத்தில் உள்ள சுரங்கங்கள் யாவும் தப்பி ஓட முடியாதபடி உள்ளவை
என அமெரிக்கர்கள் முன் கூட்டியே அறிந்திருந்தனர். அல் பக்தாதியத் சுரங்கத்தில் துரத்திப்
பிடிக்க கொண்டு செல்லப்பட்ட மனித இயந்திரங்கள் பவிக்கப்பட வேண்டிய தேவை
ஏற்படவில்லை. ஐ எஸ் அமைப்பின் எதிரி அமைப்பான Hay’at Tahrir al-Shamஇன் கட்டுப்பாட்டுப் பகுதியுள் அல் பக்தாதி இருந்தமை
அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.
ஐ எஸ் அமைப்பு அழியாமல் தொடரலாம்
தன்னை எப்படியும்
கொல்வாரகள் என உணர்ந்திருந்த பக்தாதி தனது அமைப்பின் கட்டமைப்பை தனக்குப்
பின்னரும் செயற்படக்கூடிய வகையில் ஒழுங்கு செய்திருந்தார். அடுத்த தலைமைப்
பொறுப்பை Abu Hassan al-Muhajir என்பவர் ஏற்றுக்
கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரித்தானிய ஃபினான்ஸியல் ரைம்ஸ் நாளிதழ்
அல் பக்தாதி கொலை ஐ எஸ் அமைப்பிற்கு ஒரு குறியீட்டு இழப்பு மட்டுமே பாதிப்பை
ஏற்படுத்தாது எனச் சொல்கின்றது.
சர்ச்சை மிக்க
வரலாறு
இப்ராஹிம்
அவ்வாட் இப்ராஹிம் அலி அல் பத்ரி அல் சமர்ராய் என்னும் இயற்பெயருடன் அல் பக்தாதி 1971-ம் ஆண்டு ஈராக்கின் சமர்ரா நகரில் பிறந்தார். பாக்தாத் பல்கலைக்
கழகத்தில் இஸ்லாமியக் கல்வியில் கலாநிதிப்
பட்டம் பெற்றவர். அதை சிலர் மறுக்கின்றார்கள். அல் பக்தாதி என்பது ஒரு கற்பனைப்
பாத்திரம் எனவும் வாதிடப்படுகின்றது. அல் பக்தாதி இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு
தாக்குதலும் செய்யவில்லை. அவ இஸ்ரேலிய உளவாளி எனவும் சொல்லப்பட்டது. அவரின் பல
தாக்குதல்கள் உலகெங்கும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தின. 2004-ம் ஆண்டு அமெரிக்கப் படையினரால் சிறை
பிடிக்கப்பட்டு 10மாதத்தில்
விடுதலை செய்யப்பட்டவர், அல் பக்தாதி அபு
முசம் அல் ஜர்காவியின் தலைமையிலான அல் கெய்தா அமைப்பில் இணைந்து கொண்டார். அல்
கெய்தாவில் இருந்து விலகி 2013இல் ஐ எஸ் ஐ எல்
எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பை ஆரம்பித்தார். பின் லாடனும் அல் கெய்தா அமைப்பும்
அமெரிக்காவை அழித்த பின்னரே இஸ்லாமிய அரசி நிறுவலாம் என நம்பினர். ஆனால் அல்
பக்தாதி இஸ்லாமிய அரசை அமைத்த பின்னரே அமெரிக்காவை அழிக்க முடியும் என நம்பினார். அதன்
படி 2014 ஜூனில் சிரியாவிலும் ஈராக்கிலும் பல நகரங்களைக்
கைப்பற்றி பிரித்தானியாவின் நிலப்பரப்பிற்கு ஒப்பான நிலப்பரப்பில் இஸ்லாமிய அரசை
நிறுவினார். இஸ்லாம்கிய அரசுக் கோட்பாட்டை விரும்பி பல்லாயிரம் இஸ்லாமிய இளையோர்.
உலகெங்கும் இருந்து அவரது ஐ எஸ் அமைப்பில் இணைந்தனர். ஆனால் பரந்து மறைந்து இருக்க வேண்டிய போராளிகளை சிரியாவிலும்
ஈராக்கிலும் திரட்டியமை அவர்களை இலகுவில் அழிக்க வழிவகுத்தது.
2017-ம் ஆண்டு ஐ
எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் 2018-ம் ஆண்டு 3670
தாக்குதல்களை உலகெங்கும் ஐ எஸ் அமைப்பு செய்தது. உலகெங்கும் உள்ள ஐ எஸ் அமைப்பின்
கிளைகள் இனி தம் இச்சைப்படி செயற்படலாம். அது ஓர் ஆபத்தான நிலைமையாகும். குர்திஷ்
மற்றும் யதீஷ்ய சிறுவர்கள் உட்பட பல பெண்களுக்கு எதிராக அல் பக்தாதியின் ஐ எச்
அமைப்பு தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்களுக்கும் கொடுமைகளுக்கும் இன்னும்
முழுமையாக தண்டனைகள் வழங்கப்படவில்லை.
No comments:
Post a Comment