2004-ம் ஆண்டு டிசம்பரில்
இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச்
சமாளிக்க ஜப்பான், அமெரிக்கா, ஒஸ்ரேலியா,
இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து செயற்பட்டன. அதை அடிப்படையாக வைத்து
2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தியப் பாராளமன்றத்தில் ஜப்பானியத் தலைமை அமைச்சர்
சின்சே அபே இரு மாக்கடல்களின் சங்கமம்
என்னும் தலைப்பில் உரையாற்றினார். இந்து மாக்கடலையும் பசுபிக் மாக்கடலையும் ஒன்றிணைத்து
கொள்கை வகுப்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். இந்தியாவும் ஜப்பானும்
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது பெரு விருப்பமாக இருந்து
வருகின்றது.
குவாட் என்பது மனிதநேயமா படைத்துறை நோக்கமா?
இந்தியப் பாராளமன்றத்தில் அவர் உரையாற்றி பத்து
ஆண்டுகள் கழித்து அமெரிக்கா மீண்டும் அமெரிக்கா, ஜப்பான்,
ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிடையேயான
ஒத்துழைப்பை முன் வைத்தது. அமெரிக்கா அதற்கு (நான்கு முனை பாதுகாப்பு பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue) என அழைத்தது. அது சுருக்கமாக
குவாட் (Quad) என அழைக்கப்பட்டது. இது ஒரு
நான்கு நாடுகள் இணைந்த பொறிமுறையாகும் எனவும்
சொல்லப்பட்டது. இது முதலில் மனிதநேய உதவிக்கும் இடர் நிவாரணத்திற்கும் {Humanitarian Assistance and Disaster Relief (HA/DR)} என முன் வைக்கப்படுவதாக சொல்லப்பட்டதுடன் அது ஒரு an informal
consultative mechanism எனவும் விபரிக்கப்பட்டது. ஆனால் இதன் உள் நோக்கம் சீனாவின் கடல்சார்
விரிவாக்கத்தை தடுப்பதற்கு உருவாக்கப்படும் கூட்டமைப்பு எனப் பலரும் கருதினர்.. சீனாவின்
கடல் சார் விரிவாக்கம் வட துருவப் பட்டுப்பாதை, கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், முத்து மாலைத் திட்டம், கடல்சார் பட்டுப்பாதை என மிகவும் பரந்தது. உலக வர்த்த ஆதிக்கத்திற்கு
கடலாதிக்கம் முக்கியத்துவம் என சீனா உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சீனாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சியும் அயல் நாடுகளின் கடல் மற்றும்
நிலப்பரப்புகளை சீனா தன்னுடையது என வலியுறுத்துவதாலும் கரிசனை கொண்டுள்ள
நாடுகளுக்கு இது ஒரு பாதுகாப்பை கொடுக்கக் கூடியது என நம்பப்பட்டது.
டொக்லமில் இந்திய சீன முறுகல்
பூட்டானிற்கு சொந்தமானதாகக்
கருதப்படும் டொக்லம் பிரதேசத்தில் சீனா படைத்துறைக் கட்டமைப்புக்களை
நிர்மானிப்பதாக இந்தியா ஆட்சேபனை தெரிவித்தால் 2017 ஜூன் 16-ம் திகதி ஆரம்பித்த டொக்லம்
முறுகலின் பின்னர் இந்தியாவிற்கு வெற்றி போல மோடிக்கு சார்பான ஊடகங்கள் பரப்புரை
செய்தன. சீனாவின் மிரட்டல்களுக்கு அடிபணியாது அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன்
இந்தியா சீனாவிற்கு எதிரான படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற குரல்
இந்தியாவில் பலதரப்புக்களில் இருந்து ஒலித்தன. ஆனால் டொக்லம் முறுலைத் தொடர்ந்து சீனா இந்தியாவைக்
குறிவைத்து பல படைத்துறை நகர்வுகளையும் கட்டுமானங்களையும் துரிதமாகச் செய்தது.
சீனாவால் எந்த ஒரு படைக்கலன்களையும் ஏவாமல் இணையவெளியூடாக மட்டுமே இந்தியாவில்
பலத்த அழிவை ஏற்படுத்த முடியும். விண்வெளி, இணையவெளி, இலத்திரனியல் முறைமை எனப் பலவழிகளில்
சீனாவால் இந்தியாமீது தாக்குதல் தொடுக்க முடியும். அவை மட்டுமல்ல படைக்கலன்களைத்
தாங்கிய பல ஆளில்லாப் போர்விமானங்களைக்கூட இந்தியா மீது சீனாவால் ஏவ முடியும்.
இவற்றிற்கும் மேலாக பல துல்லியமாகத் தாக்குதல் செய்யக் கூடிய ஏவுகணைகளையும்
இந்தியாவை நோக்கி சீனா நிறுத்தியுள்ளது. இவற்றிற்கு இந்தியா ஈடு கொடுக்க முடியாது
என சீனா உறுதியாக நம்புகின்றது. பல துறைகளில் சீனாவின் படைவலு இந்தியாவின்
படைவலுவிலும் இரண்டு மடங்கானது என்பது உண்மை. மோடியை ஜின்பிங் மிரட்டியதை
இந்தியாவின் சுயாதீன ஊடகவியலாளர்களின் இணையத்தளமான Wire
அம்பலப்படுத்தியது.
மீளக் கூடிய குவாட்
அமெரிக்காவின் வெளியுறவுத் தொடர்பான Foreign Policy சஞ்சிகையில் 2018 ஜூலை மாதம் 23-ம் திகதி வெளிவந்த
கட்டுரை குவாட் என்ற நான்கு நாடுகளின் ஒத்துழைப்பு ஒரு படைத்துறக் கூட்டமைப்பு
என்பதை உறுதி செய்ததுடன் அதன் நோக்கம் சீனாவை அடக்குவது என்பதையும்
பகிரங்கப்படுத்தியது. பத்து ஆண்டுகள் செயற்படாமல் இருந்த குவாட் 2017 நவம்பரில்
கூட்டம் ஒன்றைக் கூடியது. அக்கூட்டம் கூடியமைக்கும் டோக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவில் எழுந்த
சீனாவிற் எதிரான உணர்வலைக்கும் தொடர்பு உண்டு என்பதை உறுதியாக ஊக்கிக்கலாம். 2018 ஜூனிலும் குவாட்டின் கூட்டம் நடந்ததையும் Foreign
Policy சஞ்சிகையில் தெரியப்படுத்தியிருந்தது. எல்லாவற்றிற்கும்
மேலாக குவாட்டில் இணைந்து செயற்படக் காரணம் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி
ஜின்பிங்கிற்கும் இடையில் நடந்த உச்சி மாநாடு எனவும் அதில் அம்பலப்படுத்தப்
பட்டது.
வுஹான் நகரில் சாத்திய அறைக்குள் மோடிக்கு சாத்தப்பட்டதா?
2018 ஏப்ரலில் நரேந்திர மோடியை சீனாவிற்கு
அழைத்த ஜி ஜின்பிங் வுஹான் நகரத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு
வார்த்தையிலும் பார்க்க கடுமையான மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். கதவுகள்
சாத்தப் பட்ட அறைக்குள் நல்ல சாத்துதல் நடந்திருக்க வேண்டும். அதே வேளை இரு
நாடுகளும் இணைந்து செயற்படுவதர்கான நட்புக் கைகளும் அங்கு நீட்டப்பட்டன. 2017 டொக்லம்
முறுகலின் போது சீனாவிற்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் புது டில்லியில்
உள்ள ஜப்பானியத் தூதுவர் மட்டும் சிறு முணுமுணுப்பைக் காட்டினார். மற்ற எந்த
நாடுகளும் சீனாவிற்கு எதிராகக் கருத்து வெளியிடவில்லை. போர் வேண்டாம் அமைதியான
பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற வழமையான அறிக்கைக்கள் மட்டும்
பல நாடுகளால் வெளிவிடப்பட்டன. வுஹான் நகர் சந்திப்பில் இந்தியாமீது ஒரு
மட்டுப்படுத்தப்பட்ட் தாக்குதலைச் செய்ய தயங்காது என்பதை இந்தியா உணர்ந்து
கொண்டது. 2019 தேர்தலுக்கு முன்னர் சீனாவால் ஒரு போரில் மானபங்கப் படுத்தப்படுவதை
விரும்பாத மோடி ஜின்பிங்கின் மிரட்டலுக்கு விட்டுக் கொடுத்தார். சீனாவுடன் ஒரு
மோதலில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டால் பத்து ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில்
வெல்ல முடியாது.
மீண்டும் மோடியை மிரட்டினாரா ஜின்பிங்
வுஹான் நகர முடிய அறைச் சந்திப்பின் பின்னர்
1. புதுடில்லிக்கான சீனத் தூதுவர்: டொக்லம்
நிகழ்வு போன்ற இன்னொன்றில் நாம் சும்மா இருக்க மாட்டோம்
2. அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச்
செயலாளரைச் சந்தித்த சீன அதிபர்: எமது பிரதேசத்தில் ஒரு அங்குலத்தைக் கூட நாம்
விட்டுக் கொடுக்க மாட்டோம். தென் தீபெத் தொடர்பாக சீனாவின் உறுதிப்பாட்டை
இந்தியா சாதாரணமாக எடுக்கக் கூடாது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா தென்
தீபெத் என அழைக்கின்றது. டொக்லம் நிகழ்வின் பின்னர் இந்தியா குவாட் கூட்டமைப்பில்
சேர வேண்டும் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்தது. ஆனால் வுஹான் நகர முடிய
அறைச் சந்திப்பின் பின்னர் அது அடங்கிவிட்டது. வுஹான் நகரச் சந்திப்பின்னர் 2018
ஜூலையில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தின் போதும் மோடியும் ஜின்பிங்கும்
இரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர்.
மிரட்டல் மட்டுமல்ல
மூடிய அறையில் மிரட்டல் மட்டுமல்ல
இந்தியாவிற்கான இணைகரங்களும் நீட்டப்பட்டன. அது ‘China India Plus’ proposal எனப் பெயரிடப்பட்டது. அதன்
முதற்கட்டமாக ஆப்கானிஸ்த்தானில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயற்பட இணங்கின. இரு
நாடுகளும் இணைந்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படுவதை Two Plus One என அழைத்தனர். பின்னர் சீனாவிற்குப் பயணம் செய்த நேப்பாளத் தலைமை அமைச்சர்
ஷர்மா ஒலியிடம் Two Plus One திட்டம் பற்றித் தெரிவித்த போது
அதை அவர் மிகவும் விரும்பினார். இது போன்று மற்ற ஆசிய நாடுகளில் சீனாவும்
இந்தியாவும் இணைந்து செயற்படும் திட்டம் முன் வைக்கப்ப்பட்டுள்ளது. அதில் மலை தீவு,
இலங்கை, சிஸில்ஸ், மியன்மார்,
பங்களாதேசம் ஆகியவையும் Two Plus One திட்டத்தில்
இணைக்கப்படவுள்ளன.
ஜீ-2 திட்டத்தை நிராகரித்த சீனா.
இத்திட்டம் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து
செயற்பட வேண்டும் என 2005-ம் ஆண்டு பொருளியல் நிபுணரும் அரசியல் ஆலோசகருமான C. Fred Bergsten என்பவரால் முன்மொழியப்பட்டது. பின்னர்
அமெரிக்க-சீன சிறப்பு உறவின் 30 ஆண்டுகள் நிறைவை ஒட்டி National Security
Advisor Zbigniew Brzezinski, historian Niall Ferguson, former World Bank
President Robert Zoellick and former chief economist Justin Yifu Lin. ஆகியோரால் 2009-ம் ஆண்டு மீளவும் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் முன்வைத்த
காரணங்கள்:
1, சீனாவும் அமெரிக்காவும்
ஒன்றிற்கு ஒன்று தேவைப்படும் நாடுகள்
2. இரண்டும் முன்னணிப் பொருளாதாரங்கள்
3. 2008 உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு
முன்னர் இரண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியின்
அரைப்பங்காகும்.
4. இரண்டு நாடுகளும் உலகின் மிகப்பெரிய
வர்த்தகப் பங்காளிகள்.
5. இரண்டும் சூழலை மாசுபடுத்தும் மிகப்பெரிய
நாடுகள்
6. அமெரிக்கா உலகின் அதிக அளவு கடன் வாங்கும்
நாடு. சீனா அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை வைத்திருக்கும் நாடு
என்பதால் அமெரிக்காவின் கடன் தேவையை அது நிறைவு செய்கின்றது.
7. அமெரிக்கா வளர்ந்த நாடுகளில் முதன்மையானது.
சீனா வளர்முக நாடுகளில் முதன்மையானது. இரண்டு நாடுகளின் உற்பத்தியைக் கூட்டினால்
அது உலக உற்பத்தியின் அரைப்பங்கு.
இப்படிப்பட்ட சூழலில் இரண்டு நாடுகளும்
போட்டியாளர்களாக இருப்பதை விட பங்காளிகளாக மாற வேண்டும் என்பது அந்த நிபுணர்களின்
கருத்து. ஆனால் சீனா அதை நிராகரித்து விட்டது.
ஒரு துருவமா இருதுருவங்களா பல்துருவங்களா?
சீனாவும் அமெரிக்காவும் தலைமை தாங்கும் இரு
துருவ ஆதிக்க உலக ஒழுங்கை இந்தியா விரும்பவில்லை. அது பல் துருவ ஆதிக்க ஒழுங்கில்
தானும் ஒரு துருவமாக இருக்க விரும்புகின்றது. ஆனால் உடனடியாக ஒரு துருவமாக
இந்தியாவால் உயர முடியாது. அது அமெரிக்காவுடன் சேர்ந்து உயர வேண்டும் அல்லது
சீனாவுடன் சேர்ந்து உயர வேண்டும். சீனாவுடன் இணைந்து உயர்ந்தால் அமெரிக்கா
இந்தியாமீது போர் தொடுக்காது. ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து உயர்ந்தால் சிறு
போர்கள் மூலம் அன்னது மென்னுதல் மூலம் இந்திய நிலப்பரப்புக்களை சீனாவால் அபகரிக்க
முடியும். ஊழலற்ற நாடாக இருந்தால் இளையோர்
நிறைந்த இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரம் முதியோர் நிறைந்த சீனாவினதிலும்
பார்க்கப் பிரகாசமானதாக இருக்கின்றது. சரியான தலைமை கிடைத்தால் மட்டும்
இந்தியாவால் சீனாவை பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் மிஞ்ச முடியும்.
No comments:
Post a Comment