அமெரிக்காவுடன் பல
துறைகளில் முரண்படும் நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, நேட்டோவில் இணைய முயலும் இரசியக் கவச நாடுகளான உக்ரேனும்
ஜோர்ஜியாவும், தென் அமெரிக்காவரை தன் பொருளாதார
ஆதிக்கத்தை விரிவாக்க முயலும் சீனா, சீனாவுடன் படைத்துறை
ஒத்துழைப்பை அதிகரிக்கும் இரசியா, அமெரிக்காவுடன் படைத்துறை
ஒத்துழைப்பை அதிகரிக்கும் இந்தியா, தன் படைவலுவை
அதிகரித்துக் கொண்டிருக்கும் ஜப்பான், தமது பாதுகாப்பு
அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா எனச் சிந்திக்கும் மேற்கு ஐரோப்பிய
நாடுகள் என பல வழிகளிலும் பன்னாட்டு உறவுகள் மாற்றத்திற்கு உள்ளாகிக்
கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்ப நாடுகள் தமது படைத்துறையை வலிமையாக்கிக்
கொண்டிருக்கின்றன.
மாற்றம் தொடரும்
நேட்டோ தேவையற்ற என்ற கருத்துடன் அரசியலுக்கு
வந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அதன் உறுப்பு நாடுகள் மீது கடுமையான
தாக்குதல்களைச் செய்கின்றார். ஐரோப்பிய ஒன்றியம் தனது நாணயத்தின் பெறுமதியை
வேண்டுமென்றே திரிபு படுத்துகின்றது என்கின்றார். உலக நாடுகள் இணைந்து செய்த சூழல்
பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்குகின்றார். ஜேர்மனியுடனும்
மற்ற வல்லரசு நாடுகளுடனும் இணைந்து ஈரானுடன் செய்த ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக
இரத்துச் செய்கின்றார். உலக வர்த்தகத்தைக் குழப்புகின்றார். டொனால்ட் டிரம்பின்
நடவடிக்கைகளை இட்டுக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் இப்படி ஒரு
நண்பன் எமக்கு இருக்கையில் எமக்கு எதிரிகள் தேவையில்லை என்றார். அமெரிக்காவே
முன்னின்று உருவாக்கிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கை டிரம்ப் நிர்மூலம்
செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில்
டிரம்ப் என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதர். அவர் நான்கு ஆண்டுகள் மட்டும் பதவியில்
இருந்து விட்டுப் போய்விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின்
குடியரசுக் கட்சியினரிடையே டிரம்பிற்கு 90 விழுக்காடு ஆதரவு இருக்கும் போது
டிரம்ப் தனிமனிதரல்லர் என்பது உறுதியாகின்றது. டிரம்ப்வாதம் என ஒன்று
உருவாகிவிட்டது. டிரம்ப் போனாலும் அது தொடர்ந்து இருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மார்கரட் தட்சர் ஆட்சியில் இருக்கும்போது அவரோடு அவரது
தட்சர்வாதம் போய்விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத இடமான
தொழிற்கட்சியில் இருந்து ரொனி பிளேயர் மோசமான தட்சர்வாதியாக உருவாகினார். அது
போலவே டிரம்பிற்கும் யாராவது மோசமான வாரிசு வரமாட்டார் சொல்ல முடியாது என்ற
நிலையில் உலக ஒழுங்கில் டிரம்பிற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றம் மாற்ற முடியாமல்
தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாறிய நிலைமை
1991இன் இறுதியில் நடந்த சோவித் ஒன்றியத்தின்
வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் எனப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட
அமெரிக்க நாடுகளும் தமது படைத்துறைச் செலவுகளைக் குறைத்தன. பின்னர் இரசியா 2014-ம்
ஆண்டு இரசியா கிறிமியாவை தன்னுடன் இணைத்துடன் சிரியாவில் மேற்கு நாடுகள் தமது
படைத்துறைச் செலவை அதிகரித்தன. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார
நெருக்கடிக்குப் பின்னர் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பில் மந்த நிலை உருவானது.
தற்போது மேற்கு நாடுகளின் பொருளாதாரச் சூழல் சீரடைய தொடங்கிய நிலையில் மேற்கு
நாடுகளில் பிரபல்யவாதமும் தேசியவாதமும் தலை தூக்கியுள்ள நிலையில் மேற்கு
நாடுகளிடையேயான ஒற்றுமை கேள்விக்குறியாகியுள்ளது.
மாறுமா ஜேர்மனி? அணுக்குண்டு தயாரிக்குமா?
அண்மையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர்
ஐரோப்பியரிடையே அமெரிக்கா மீதான வெறுப்பு பரவலாக இருந்தது. ஆனால் மேற்கு
ஐரோப்பியர்கள் இப்போது அமெரிக்கா இல்லாத ஐரோப்பாவை இட்டு அச்சமடைந்துள்ளனர். 1940களில்
ஐரோப்பியத் தலவர்கள் தமது பதையை இட்டு தெளிவாக இருந்தனர். இப்போது உள்ள தலைவர்கள்
எப்படிப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.
கிஸ்ஸிஞ்சரின் கருத்து அமெரிக்க உலக ஆதிக்கத்தை மற்ற நாடுகள் ஏற்று அதற்கு ஏற்பட நடக்க வேண்டும் என்ற
உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் தற்போதைய மேற்கு ஐரோப்பியத் தலைவர்கள் தமது
பிராந்தியத்தை வழி நடத்தக் கூடிய சிந்தனை அற்றவர்களாக உள்ளனர் என்பது உண்மை. நேட்டோ
நாடுகளைப் பொறுத்தவரை இரசியாவின் அச்சுறுத்தலுக்கு அதிகம் உள்ளாகியுள்ள நாடுகளில்
ஜேர்மனியும் ஒன்றாகும். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருப்பதாலும், உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக இருப்பதாலும் கடந்த
காலம் போர் நிறைந்ததாக இருப்பதாலும் ஜேர்மனி தனது பாதுகாப்பிற்கு மற்ற நாடுகளை
நம்பி இருக்க முடியாது. ஜேர்மனி தனது பாதுகாப்பிற்கான உடனடி நடவடிக்கையாக
அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. F-35, F-15. F/A-18 ஆகியவற்றை வாங்கலாம்
என எதிர்பார்க்கப்படுகின்றது. இச் செய்தி வந்ததும் ஜேர்மனி அணுக்குண்டுகளை
உற்பத்தி செய்யப்போகின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. 1954-ம் ஆண்டு
ஜேர்மனி மற்ற நட்பு நாடுகளான, அமெரிக்கா, பிரித்தானியா. பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுடன்
செய்து கொண்ட பரிஸ் உடன்படிக்கையின்படி ஜேர்மனி அணுக்குண்டு உற்பத்தி செய்வதில்லை
என ஒத்துக்கொள்ளப்பட்டது. தற்போது உலகிலேயே அதிக அளவிலும் உயர்ந்த தரத்திலும்
யூரேனியத்தைப் பதன் படுத்தும் ஜேர்மனியால் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய
தொழில்நுட்ப அறிவு உண்டு. இரசியாவின் அணுக்குண்டுகளில் இருந்து ஜேர்மனிக்கான
கவசத்தை அமெரிக்கா வழங்காவிடில் ஜேர்மனி அணுக்குண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற
கருத்துக்கு ஜேர்மனியர்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கின்றது.
புதுப்பிக்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் போர் விமானங்களில்
மிகவும் பிரபலமானவை அதனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-22 வும் F-35வும் ஆகும். F-22 பல போர்முனைகளில் வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது. அது எதிரிகளின் ரடார்களால்
கண்டறிய முடியாத சிறந்த புலப்படா விமானமுமாகும். F-35 போர்களங்களில்
இன்னும் பெரிதாகப் பாவிக்கப்படாத புலப்படாப் போர்விமானங்கள். அவை கணினி மயமாக்கப்
பட்ட விமானங்களாகும். எதிரி விமானங்கள் F-35ஐ கண்டறிய முன்னர்
F-35 எதிரி விமானங்களை கண்டறிந்து அழித்துவிடும். சீனாவினதும்
இரசியாவினதும் வான் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கருதும் அமெரிக்கா
F-22இன் உடலையும் F-35இன் மூளையையும் கொண்ட
புதிய போர்விமானங்களை உருவாக்க அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டின்
திட்டமிட்டுள்ளது.
மாறுமா இரசிய சீன உறவு?
Vostok 2018, என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம்
திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியைச் செய்யவுள்ளது. Vostok 2018 தமிழில்
கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப்
பின்னர் இரசியா செய்யும் மிகப்பெரிய இந்தப் படைபயிற்ச்சியில் சீனாவும்
இணையவுள்ளது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன. கடைசியாக இரசியா
செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில்
நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே
ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30
விமானங்களும் ஈடுபடவுள்ளன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல்
பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி இடம்பெறவுள்ளது. சிரியப் போரில்
200வகையான படைக்கலன்களையும் கருவிகளையும் பாவித்த இரசியர்களின் அனுபத்தை
சீனப்படையினர் நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சீறுமா இரசியா சிரியாவில்?
சிரியாவின் வட பிராந்தியத்தில் குர்திஷ்
போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா மற்றும் கசக்கா மாகாணங்களில் அமெரிக்கப்படையினர்
இரண்டாயிரம் வரை நிலை கொண்டுள்ளனர். சிரியாவில் வேறு ஒரு வெளிநாட்டுப் படைகளும்
இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை இரசியா தற்போது எடுத்துள்ளது. சிரிய அரசும்
அமெரிக்கப்படைகளை வெளியேறும் படியும் குர்திஷ் போராளிகளை அந்த இரு மாகாணங்களின்
கட்டுப்பாட்டை தம்மிடம் ஒப்படிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த
நிலையில் 2018 ஓகஸ்ட் 28-ம் திகதி இரசியாவின் பெரும் கடற்படைப் பிரிவு ஒன்று
சிரியாவில் தரையிறங்கியுள்ளது. சிரியாவில் எஞ்சியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள்
தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இத்லிப் மாகாணத்திலும் பெரும் போர் ஒன்று
வெடிக்கும் ஆபத்து உள்ளது.
இரசியப் போர்விமானங்களில்
செயற்கை விவேகம்
இரசியாவின் ஐந்தாம்
தலைமுறைப் போர் விமானமான SU-57 இல் செயற்கை விவேகம் இணைக்கப்படவிருக்கின்றது.
பற்பணிப் போர்விமானமான SU-57 ஒரு போர் நிலை என்று வரும் போது முழுக்க முழுக்க
கணினிகளின் உதவியுடன் தானாகவே சிந்தித்துச் செயற்படும். SU-57 2019-ம் ஆண்டு
இரசியாவில் பணியில் ஈடுபடுத்தப்படும். அதற்கான பயிற்ச்சிப் பறப்புக்கள் தற்போது
மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்கா வெற்றிகரமாக செய்து முடித்த செங்குத்தாக
விமானங்கள் தரையில் இருந்து (உலங்கு வானூர்தி போல்) பறந்து செல்லும்
தொழில்நுட்பத்தை இரசியாவும் உருவக்கிக் கொண்டிருக்கின்றது. இத்தொழில் நுட்பம்
விமானம் தாங்கிக் கப்பலில் பாவிக்கும் விமானங்களில் இணைக்கப்படவுள்ளன.
குழவிப் போர் முறைமை (Swarm
Warfare)
இதுவரை காலமும் குழவிப்
போர் முறைமை என்பது சமச்சீரற்ற போரில் (asymmetric warfare) பிரயோகிக்கப்படுகின்ற
ஒன்றாக இருந்தது. அதில் வலிமை மிக்க எதியின் மீது வலிமை குறைந்த படையினர்
பெருமளவில் திடீர் அதிரடித் தாக்குதலை நடத்துவதாகும். எதியில் பதில் தாக்குதல் பல
படையினர் கொல்லப்பட்டாலும் ஒரு சில படையாவது எதிரியின் இல்லைக்கில் சேதத்தை
விளைவிப்பது இதன் அடிப்படை உத்தியாகும். உதாரணத்திற்கு ஒரு பெரிய கப்பலை நோக்கிப்
பல சிறுபடகுகளில் தாக்குதல் செய்வதாகும். பெரும் கப்பலின் தாக்குதலால் பல படகுகள்
அழிக்கப்பட்டாலும் ஒரு படகாவது வெடிபொருட்களுடன் சென்று எதிரியின் பெரிய கப்பல்
மீது மோதி அழிக்கும். தற்போது குழவிப் போர் முறைமை உயர் தொழில்நுட்பப் போரில்
கையாளப்படுகின்றது. அமெரிக்காவின் மிகப் புதிய விமானங்களான F-35
போர் விமானங்கள் தமக்கிடையேயான தொடர்பாடல்களைச் சிறப்பாகச் செயற்படக்கூடியன.
அத்துடன் எதிரியின் விமானங்கள், உணரிகள், ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் F-35 போர் விமானங்களை
இனம் காணமுன்னதாக F-35 எதிரியை இனம் கண்டு தாக்குதல்
தொடுக்கத் தொடங்கிவிடும். பல F-35 போர் விமானங்கள் கூட்டாக
தாக்குதல் செய்யக் கூடியவை. அவற்றை இனம் காண்பது எதிரிக்குக் கடினம். பல F-35 ஒன்றாகப் பறக்கும்போது ஒரு விமானம் எதிரியின் வானிலோ தரையிலோ கடலிசோ
உள்ள இலக்கை உணர்ந்து கொண்டால் அது அது தான் தாக்குதல் செய்யாமல் தன்னுடன் இணைந்து
பறக்கும் விமானத்தில் உள்ள ஏவுகணையை எதிரியின் மீது வீசும். இச் செயற்பாடு மனித
செயற்பாடின்றி செயற்கை விவேகத்தின் மூலம் விமானங்கள் தாமாகவே செயற்பட்டு எதிரியின்
இலக்கின் மீது தாக்குதல் நடக்கும். இந்த வகையில் அமெரிக்காவின் F-35 செயற்படும் போது இரசியாவின் SU-35 போர்விமானங்களையும்
S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் அழித்துவிடும்
வாய்ப்பு அதிகம் உண்டு.
சீனாவின் நித்திரையைக் குழப்பும் குவாம் தீவு
இது வரை காலமும் தனது வான்பரப்புக்குள் மட்டும் தனது
போர்விமானங்களின் பறப்புக்களையும் பயிற்ச்சிகளையும் பெருமளவில் செய்து வந்த சீன
வான் படையினர் 2018 ஓகஸ்ட் மாதம் தமது புதிய பெரிய விமானமாகிய H-6Kஐ பன்னாட்டு
வான் பரப்பில் பறக்க விட்டனர். இவை அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை.
பசுபிக் கடலில் உள்ள குவாம் தீவில் இருக்கும் அமெரிக்காவின் படைத்தளத்தை இட்டு
சீனா எப்போதும் அதிக கரிசனையுடனேயே இருக்கின்றது. இதுவரை காலமும் அதைக் கருத்தில்
கொண்டு சீனா தனது ஏவுகணைகளில் அதிக கவனம் செலுத்தியது. இப்போது வான் படையிலும்
அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 2018 ஒகஸ்ட் ஆரம்பத்தில் தைவானிற்கான
படைத்துறை உதவிகளை அதிகரிக்கும் சட்டத்தை அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றியதும
அதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியதும் சீன ஆட்சியாளர்களை கடும்
சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்த சினத்தை சீனா H-6Kஐபோர்விமானங்களின்
பறப்புக்கள் மூலம் பகிரங்கமாகவும் வட கொரிய விவகாரத்தில் இரகசியமாகவும்
காட்டியுள்ளது. இதனால் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் வட கொரியாவிற்கு
செல்லவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டது. 2018இல் சீனாவின் படைவலு தொடர்பாக அமெரிக்கப்
பாதுகாப்புத் துறை 2018 ஓகஸ்ட் மாதம் 16-ம் திகதி வெளிவிட்ட அறிக்கையில் கடந்த
மூன்று ஆண்டுகளாக சீனா தனது வானில் இருந்து கடற்பரப்புக்கு செய்யும்
தாக்குதல்களின் திறனை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுபிக் மாக்கடலின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவினதும் அதன் நட்பு
நாடுகளின் படை நிலைகளை இலக்காகக் கொண்டே சீனா இதைச் செய்வதாக அந்த 130பக்க அறிக்கை
தெரிவிக்கின்றது.
மாறிவரும் நாடுகளிடையான உறவு மட்டுமல்ல பொருளாதார மற்றும்
வர்த்தகப் போட்டிகளையும் படை வலிமையின் பங்கு அதிகரித்துச் செல்வது ஓரு
பேரழிவிற்கான ஆபத்தை அதிகரிக்கின்றது.
No comments:
Post a Comment