Monday, 13 August 2018

மேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி


அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை தன்னுடன் இணைந்து கொண்டமை இரசியாவை ஆத்திரப் பட வைத்தது. உக்ரேனும் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திரும் இணையலாம் என்ற நிலை வந்த போது இரசியா அங்கு படைகளை அனுப்பி கிறிமியாவை தனதாக்கிக் கொண்டது. அதனால் அமெரிக்கா இரசியா அடக்கப்பட வேண்டும் என வீறு கொண்டு எழுந்தது. பன்னாட்டு நியமங்களையும் மீறி சீனா தென் சீனக் கடற் பிராந்தியத்தின் 90 விழுக்காடு தனக்குச் சொந்தமானது என்கின்றது. தென் சீனக் கடலில் தான் நிர்மாணிக்கும் தீவுகள் படைத்துறைக்குப் பயன்படுத்தப்பட மாட்டாது எனச் சொன்ன சீனா. அந்த உறுதி மொழியையும் மீறி அத்தீவுகளில் படைத் தளங்களை உருவாக்கியது. சீன நிர்மாணித்த தீவு உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி பங்கின் போக்கு வரத்து சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதால் அமெரிக்காவும் ஜப்பானும் ஆத்திரமடைந்தன. ஈராக், சிரியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் ஈரானின் தலையீடு அதிகரித்து வருவதால் இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் அதிக கரிசனை கொண்டன. இவை போன்ற பல பிராந்திய முரண்பாடுகள் பல நாடுகளையும் தம் படைவலுவை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.

குறையும் இடைவெளியை அதிகரிக்க முயலும் அமெரிக்கா
இது வரை காலமும் ஐக்கிய அமெரிக்கா மற்ற வல்லரசு நாடுகளிம் பார்க்க மடைத்துறையிம் மிகவும் முன் தங்கி இருந்தது. இதை இடைவெளி நாளடைவில் சிறியதாகிக் கொண்டே போவதை உணர்ந்த அமெரிக்கா தன் படை வலுவைத் தொழிநுட்ப அடிப்படையில் மிகவும் முன்னேற்ற திட்டமிட்டுள்ளது. அமெரிக்கப் படைத்துறையான பெண்டகன் மிக அவசரமாக செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தை எல்லா படைக்கலன்களிலும் எல்லாப் படைதுறைச் செயற்பாடுகளிலும் உட்புகுத்துகின்றது.

ரடார்களும் விமானங்களும்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக போர்விமான உற்பத்திக்கும் அதை இனம் காணும் ரடார்கள் உற்பத்திக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இலத்திரன் அலைகளை வைத்து எதிரி விமானங்களில் இருந்து வரும் வெப்பத்தை வைத்தும் ஒலியை வைத்தும் இனங்காணுவதும், அதை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை விமான உற்பத்தியாளர்கள் உருவாக்குவதுமாக இருந்த காலம் போய் எதிரியின் விமானத்தில் இருந்து வரும் மின்காந்த அலைகளை வைத்து இனம் காணும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இத்தாலியில் இப்போது ஃபோட்டோன்களை வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் (fully photonics-based coherent radar system) தொழில்நுட்பம் உருவாக்கப்படுகின்றது. இது உடனடி அதி உயர் வீச்சு பிரிதிறன் ரடார் (real-time ultra-high-range-resolution radar). இரசியாவும் "Radio-Photonic Radar"களை உருவாக்கியுள்ளது. இரசியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் "Radio-Photonic Radar" பொருத்தப் பட்டிருக்கும். அவை எதிரி விமானங்களை துரிதமாகவு இலகுவாகவும் இனம் காணும். தற்போது அமெரிக்காவின் F-35 விமானத்தின் உணரிகள் எதிரி விமானங்கள் அதை இனம் காணுவதற்கு முன்னதாக அது எதிரி விமானங்களை இனம் கண்டு அழித்துவிடும். இந்த நிலைமையை மாற்றியமைக்கவே இரசியா "Radio-Photonic Radar"களை உருவாக்கியுள்ளது. இவை அமெரிக்காவின் புலப்படா விமானங்களை செல்லாக்காசாக்கலாம்.

அடுத்த தலைமுறைப் போர்விமானங்கள்
அமெரிக்காவின் F-22, F-35 ஆகியவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் எனப்படுகின்றன. சீனா தனது J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் என்கின்றது. இரசியாவின்  PAK/FA Sukhoi Su-57  ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும். அமெரிக்காவின் F-35, இரசியாவின் SU-57 ஆகியவை பல தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. F-35 போர்விமானத்தை முதலில் போர்க்களத்தில் தாமே பாவித்தோம் என்கின்றது இஸ்ரேலியப் படைத்துறை. F-35இல் உள்ளவை மென்பொருள் சிக்கல்கள் மட்டுமே அதை இலகுவாக சீர் செய்யலாம் என்கின்றனர் அதன் உற்பத்தியாளர்கள். இரசியா தனக்கு இப்போது PAK/FA Sukhoi Su-57  போர்விமானங்கள் பெருமளவில் தேவைப்படாது எனத் தெரிவித்துள்ளது. பல நாடுகளும் இப்போது ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. அமெரிக்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப 2030 முன்னெடுப்பு (Science and Technology 2030 initiative) ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துகின்றது.

அமெரிக்காவின் புதிய F-15
இதுவரை பல போர்முனைகளில் செயற்பட்ட F-15 C/D போர்விமானங்கள் F-15X Eagle என்னும் புதிய வடிவத்தைப் பெறவிருக்கின்றது. இவை வானாதிக்கம் செய்யக் கூடிய வகையில் உருவாக்கப்படவிருக்கின்றன. வானின் போர் விமானங்களிடையே நடக்கும் சண்டையைப் பொறுத்தவரை F-15 மன்னாதி மன்னனாகக் கருதப்படுகின்றது. F-15 போர்விமானங்களிலும் பார்க்க F-15X Eagle விமானங்கள் அதிக அளவு எடைகொண்ட படைக்கலன்களைத் தாங்கிச் செல்ல வல்லன. 24 வானிலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணைகள் அதில் பொருத்தலாம். மிகவும் புதிய உணரிகள் இவற்றில் பொருத்தப்படவிருக்கும் F-15X Eagle விமானங்களில் சிறந்த பறப்புக் கட்டுப்பாடு இருக்கும். F-15X Eagle விமானங்கள் குறைந்த பறப்புச் செலவைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. F-22இன் பறப்புச் செலவு மணித்தியாலத்திற்கு 35,0000டொலர்களாகும் ஆனால் F-15X Eagleஇன் பறப்புச் செலவு மணித்தியாலத்திர்கு 27,000 டொலர்கள் மட்டுமே. இதில் புலப்படாத் தொழில்நுட்பம் அதிக அளவில் இல்லை. இரசியா, சீனா போன்ற வலிமை மிக்க ரடார்களைக் கொண்ட நாடுகளுக்கு எதிராகக் களமிறக்கக் கூடியவை என்பதால் புலப்படாத் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. வானாதிக்கத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் போன்ற வலிமையற்ற ரடார்கள், வலிமையற்ற ஏவுகணைகல் இல்லாத எதிரிகளுடன் போரிடுவதற்கு F-15 சிறந்த போர்விமானமாகும். சிரியாவிற்குள் பலதடவைகள் ஊருடுவுவதற்கு இஸ்ரேல் F-15 C/D போர்விமானங்களையே பயன்படுத்தியது. புதிய F-15X Eagle விமானங்களை இஸ்ரேல் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. F-35விமானங்கள் கத்திகளில் Swiss Army Knife போல போர்விமானங்களில் பற்பணிகள் செய்யக் கூடியவையாக விமர்சிக்கப்படுகின்றது. ஆனால் அது ஒரு இலகுதர விமானங்களாகும்.

இரசியாவின் தாங்கிப்படை
தாங்கிகள் உருவாக்கத்தில் சிறந்து விளங்கும் இரசியாவின் T-14 Armata ஒரு சுப்பர் தாங்கி எனப் பெயரெடுத்துள்ளது. 1994 டிசம்பரில் இருந்து 1996 ஓகஸ்ட் வரை இரசியா செஸ்னியாவில் 5200படையினரை இழந்ததுடன் 52,000படையினர் காயப்பட்டனர். மேலும் 3000படையினர் காணமற் போயுள்ளனர். இது இரசியாவிற்கு அதிக கவசவாகனங்களும் தாங்கிகளும் தேவை என்பதை உணர்த்துகின்றது. இரசியாவின் T-14 Armata பல வகை0களில் அமெரிக்காவின் M1A2 Abrams தாங்கிகளிலும் பார்க்கச் சிறந்தவையாகும்

லேசர்களும் ஹைப்பர் சோனிக்கும்
ஒரு காலத்தில் போர் பற்றிய கதைகளில் கற்பனையாக இருந்து வந்த லேசர் படைக்கலன்கள் தற்போது ஆய்வு கூடங்களில் பரீட்சிக்கப் படும் நிலையை எட்டியுள்ளது. லேசர் படைக்கலன்கள் directed-energy weapons என அழைக்கப்படுகின்றன. அமெரிக்கா, சீனா, இரசியா ஆகிய நாடுகள் இதில் அதிக அக்கறை காட்டி கணிசமான முன்னேற்றமடைந்துள்ளன. ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை சீனாவும் இரசியாவும் உருவாக்கி வருகையில் அவற்றை எதிர் கொள்ள ஒரே வழியாக அமெரிக்கா லேசர் படைக்கலன்களை உருவாக்குகின்றது. அதே போல் சீனாவும் இரசியாவும் லேசர் படைக்கலன்களை உருவாக்குகின்றன. Directed-energy weapons என்பது high-energy laser என்றும் high-power microwave systems என்றும் இருவகைப்படும். இவை ஒளியின் வேகத்தில் சென்று இலக்குகளைத் தாக்குவதால் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் எவுகணைகளை இவற்றால் இலகுவாக அழிக்க முடியும். அத்துடன் மற்றப் படைக்கலனகளிலும் பார்க்க செலவு குறைந்தவையுமாகும்.

இந்தியாவில் பிரம்மாஸ்த்திரம்
இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய BrahMos Supersonic Cruise Missile என்னும் ஏவுகணைகளை இந்திய தனது படைத்துறையின் பிரம்மாஸ்த்திரம் என்கின்றது. மகாபாரத்தில் குறிப்பிடப்படும் பிரம்மாஸ்த்திரம் போல் முழு எதிரிகளையும் நொடிப்பொழுதில் அழிக்காவிடினும் பிரம்மோஸ் ஒலியிலும் பார்க்க 7 மடங்கு வேகத்தில் பாயக்கூடியது 500கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 300கிலோ மீட்டர் பாயக் கூடியது. கடல், வான், தரை ஆகிய மும்முனைகளிலும் பாவிக்கக் கூடிய வகையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது இந்தியா தனது பிரம்மோஸ் ஏவுகணைகளை சிறியதாக்கியுள்ளது. உயரத்தில் மூன்று மீட்டரையும்  எடையில் அரைவாசியையும் குறைத்து புதிய என்னும் ஏவுகணையை உருவாக்கியுள்ளது. சிறிதாக்கப்படும் போது அவை அதிக வேகத்துடனும் அதிக தூரமும் பாயக்கூடியவையாக அமையும். சிறிய ஏவுகணைகள் BrahMos NG சிரிய ரக போர்விமானங்களிலும் விமானம்தாங்கிக் கப்பல்களிலும் பாவிக்கக் கூடியதாக இருக்கும். இந்தியாவின் இரசியத் தயாரிப்பு SU-30MKI போர்விமானங்களிலும் உள்நாட்டு உற்பத்தி தேஜஸ் போர்விமானங்களிலும் சிறியதாக்கப்பட்ட BrahMos NG ஏவுகணைகளைப் பாவிக்கலாம். அத்துடன் கடற்படையினரின்  torpedo எனப்படும் நீருக்குக்கீழான ஏவுகணைகளாகவும் பாவிக்க முடியும். இந்திய விமானம் தாங்கிக் கப்பல்களில் செயற்படும் MiG-29K போர்விமானங்களிலும் பாவிக்கலாம். இப்படி பல துறைகளிலும் பாவிக்கப்படுவதால் BrahMos NG ஏவுகணைகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் போது குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும். இந்தியக் காலாட் படையினர் எதிரியின் கட்டளை-கட்டுப்பாட்டகத்தை அழிக்கவும் BrahMos NG ஏவுகணைகளைப் பாவிக்கலாம். அதிக MiG-29K போர்விமானங்களில் அதிக BrahMos NG ஏவுகணைகளைப் பாவிப்பதன் மூலம் இந்திய வான் படை தனது வான் ஆதிக்கத்தில் வலிமை மிக்கதாக்கலாம். இந்தியர்கள் எப்படைக்கலன்களை உருவாக்கினாலும் அது பாக்கிஸ்த்தானை எப்படிப் பாதிக்கும் எனச் சிந்திப்பது வழக்கம். பெரிய பிரம்மோஸ் பஞ்சாப் மாநிலம் வரைக்கும் பாயுமாம். சிறிய பிரம்மோஸ் தீவிரவாதிகள் நிறைந்த பாக்கிஸ்த்தானின் மேற்குப் பகுதி வரை பாயக்கூடியதாம்.
                                         
Remote Warfare என்னும் தூரப் போர்முறைமை
ஆளில்லாப் போர்விமானங்கள், இணையவெளிப் போர் ஆகியவை தூரப் போர்முறைமையை இலகுவாக்கியுள்ளன. ஆளில்லாப் போர்விமானங்கள் இலகுவாகத் தயாரிக்கக் கூடியவையாக மாறி வருகின்றன. சிரியப் போர் முனையில் பல் வேறு போராளிக் குழுக்கள் ஆளில்லாப் போர்விமானங்களை தாமே உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றன. சிரியாவில் இரண்டு தடவைகள் இரசியாவின் படை நிலைகள் மீது ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆளில்லாப் போர்விமானங்களால் தனது படை நிலைகள் மீது தாக்குதல்கள் நடக்கலாம் என்ற கரிசனையில் அமெரிக்கா ஆளில்லாப் போர்விமான எதிர்ப்பு முறைமைகளை உருவாக்கியுள்ளது.

செயற்கை விவேகம்
போர்க்களத்தில் செயற்கை விவேகம் பரந்த அளவில் பாவிப்பதற்கான முன்னெடுப்பை பல வல்லரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. பொதுவாக killer robots என அழைக்கப்படும் lethal autonomous weapons systems போன்றவற்றை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டப்படுகின்றது. எண்மியச் செயற்பாடுகளுக்கும் மனித உடற் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் குறைந்து கொண்டே போகின்றன. 2030இற்குப் பின்னர நடக்கவிருக்கும் போர்களில் செயற்கை விவேகம் கொண்ட கணினிகள்தான் ஜெனரல்களாக இருந்து போரை நடத்தும். போர்முனையில் ஆளில்லாவிமானங்களில் இருந்து தாங்கி வரை எல்லாவற்றிலும் பொருத்தப்பட்டிருக்கும் கணினிகளும் உணரிகளும் களநிலவரம் தொடர்பான தகவல்களைத் திரட்டி அந்த ஜெனரலுக்கு அனுப்ப அது இடும் கட்டளைப்படி போர் நகர்த்தப்படும். மரபு வழி நடவடிக்கைகளிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முழுக்க முழுக்க தாமாக தீர்மானம் எடுத்து எதிரியை அழிக்கக் கூடிய படைக்கலன்களும் போர் முனைகளில் செயற்படும்.

ஆறாம் படைக்கிளையாக விண்வெளிப்படை.
தற்போது தரைப்படை, கடற்படை, கடல்சார் படை(Marines), வான்படை, இணையவெளிப்படை, என இருக்கும் ஐந்து படைக் கிளைகளோடு இனி ஆறவது படைக்கிளையாக விண்வெளிப்படையும் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை A mix of scary sci-fi and futuristic optimism படைத்துறை நிபுணர்கள் என விபரிக்கின்றார்கள். ஏற்கனவே ஒரு நாட்டின் வானில் இருக்கும் அதனது செய்மதிகளை மற்ற நாடுகள் அழிக்காமல் பாதுகாப்பதும் மற்ற நாடுகளின் செய்மதிகளை செயலிழக்கச் செய்வதும் அழிப்பதும் இந்த விண்வெளிப்படையின் முக்கிய நோக்கமாக இருகும். தரையில் இருந்து செய்மதிகளை நோக்கி வீசப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பது முக்கிய செயற்பாடாக இருக்கும். அமெரிக்காவின் நாசாவும் வான்படையும் இணைந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக இது தொடர்பாக தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. பராக் ஒபாமாவிற்கு ஆளில்லா விமானங்கள் பிடித்திருந்ததைப் போல டொனால்ட் டிர்மப்பிற்கு விண்வெளிப்படை பிடித்திருக்கின்றது. இதனால் இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு இலகுவாகக் கிடைக்கின்றது. விண்வெளிப்படை ஒரு தனிப்பட்ட படைக்கிளையாக இல்லாமல் வான்படையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என பெண்டகனில் சிலர் கருதுகின்றனர்.

சீனா தொழில்நுட்பங்களை வாங்குவதைத் தடுத்தல்
சீன நிறுவங்கள் அமெரிக்க உயர் தொழில்நுட்ப நிறுவனங்கலை விலை கொடுத்து வாங்குவதன் மூலம் அமெரிக்கா உருவாக்கிய தொழில்நுட்பங்களைப் பெற்று வந்தது. இப்போது டொனால்ட் டிரம்ப் அதைப் பலவகைகளில் தடுத்துள்ளார். ஜேர்மனியும் இப்போது அதைச் செய்கின்றது. இதுவரை காலமும் சீன முதலீடுகளை ஊக்குவித்த ஜேர்மனி இப்போது ஜேர்மனிய உற்பத்தி நிறுவனமொன்றை சீனா வாங்குவதித் தடை செய்துள்ளது. Leifeld Metal Spinning என்னும் இயந்திர உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். மிகவும் உறுதியான உலோக உதிரிப் பாகங்களை அது உற்பத்தி செய்கின்றது. அவை வாகன மற்றும் வானூர்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படும். 2016-ம் ஆண்டு Kuka என்னும் இயந்திர மனிதர்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை சீனா 4.5 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியது. இப்படிப் பல ஜேர்மன் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை சீனா வாங்கிக் கொண்டிருந்தது. தற்போது அமெரிக்காவின் பாதையைப் பின்பற்றி ஜேர்மனியும் சீனா தனது நாட்டில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை வாங்குவதைத் தடை செய்கின்றது.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி படைத்துறையை மேம்படுத்தி போரியலை மேலும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...