Monday, 30 April 2018

கொரியாவிலும் தைவானிலும் சீனாவும் அமெரிக்காவும்


ஒரு புறம் வட கொரிய மற்றும் தென் கொரியத் தலைவர்கள் கட்டிப்பிடித்து மகிழந்து கொண்டாடிக் கொண்டிருக்க மறுபுறம் அமெரிகாவின் B-52 போர் விமானங்கள் சீனக் கடற்கரையில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் பரீட்ச்சார்த்தப் பறப்புக்களை மேற்கொண்டிருந்தன. கொதிநிலையில் இருந்த கொரியத் தீபகற்ப்பம் தணி நிலையை நோக்கி நகர்கையில் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடற்பிரதேசம் கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டில் பதவிக்கு வந்ததில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனா மீளப் புதுப்புக்கப்படும் எனச் சொல்லி வருகின்றார். அதற்கான பொருளை 2018-ம் ஆண்டு சீனப் பாராளமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து அறிந்து கொள்ளலாம். “பிளக்கப்பட்டதும் உடைக்கப்பட்டதுமான ஒரு நாடு முன்னேறவோ அபிவிருத்தியடையவோ முடியாது” என்பது அவரது உரையின் முக்கிய வாசகம். அவர் ஹொங்கொங்கை முழுமையாக சீனாவின் பொதுவுடமை முறைமைக்குள் கொண்டு வரவும் தைவானை சீனாவின் ஒரு மாகாணமாக்கவும் விரும்புகின்றார் என வியாக்கியானம் கொடுத்தது ஒரு ஹொங்கொங் ஊடகம். ஆனால் அவர் அத்துடன் மட்டும் நிற்கின்றாரா அல்லது கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், கொரியத் தீபகற்பம் ஆகியவையும் சீனாவின் பகுதிகளாக நினைக்கின்றாரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சீன விரிவாக்கக் கனவு எல்லையற்றது என்பதை சீனாவின் முத்துமாலைத் திட்டம், கடல்வழிப்பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை, வட துருவப் பட்டுப்பாதை ஆகிய திட்டங்கள் எடுத்து இயம்புகின்றன.

கோழியை அடிக்க குரங்கு திருந்தும்
சீனாவில் ஒரு பழமொழி உண்டு கோழிக்கு கொடுக்கும் அடியில் குரங்கு பயப்பட வேண்டும் என்று. ஹொங்கொங்கைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் Benny Tai Yiu-ting சீனா தைவான் என்ற குரங்கை மிரட்ட ஹொங்கொங்கைக் கோழியாகப் பாவிக்கின்றது என்றார். ஆனால் தைவானியர்கள் ஹொங்கொங் மக்களின் குடைப்புரட்சியை தாம் சீனாவில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகப் பார்க்கின்றார்கள். ஹொங்கொங்கிற்கே வேண்டாத சீனா தைவானுக்கு எதற்கு என அவர்கள் சிந்திக்கின்றார்கள். தைவானியர்களும் சீனர்களும் ஒரே இனக்குழுமமாகக் கருதப்பட்டாலும் அவர்களுடைய மொழி சற்று வேறுபடுகின்றது. வாழ்க்கை முறை என்று பார்க்கும் போது சீனாவிலும் பார்க்க தைவானில் பெண்களுக்கு அதிக உரிமை உண்டு.

சீனாவுடன் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட டிரம்ப்
டொனால்ட் டிரம்ப் தைவான் தொடர்பாக அவருக்கு முன்னர் இருந்த அமெரிக்க அதிபர்களிலும் பார்க்க தீவிரமான கொள்கையைக் கடைப்பிடித்தார். 2016 நவம்பரில் வெற்றி பெற்ற பின்னர் தைவான் அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதுடன் அதைப் பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் சீனாவுடனான பேரம் பேசுதலுக்கு தைவான் தொடர்பான அமெரிக்க நிலைப்பாடு பாவிக்கப்படும் எனவும் பகிரங்கமாக அறிவித்தார். இது ஒரு புறமிருக்க தைவான் சுதந்திரத் தனிநாடாக வேண்டும் என்ற கொள்கை முன்பு இல்லாதவகையில் தைவானில் பிரபலமடைகின்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அவருக்கு முன்னர் இருந்த தலைவர்களிலும் பார்க்க தைவானை சீனாவின் ஒரு மாகாணமாக இணைக்க வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கின்றார். தைவானியர்களில் 70விழுக்காட்டினர் சீனா தமது நாட்டை ஆக்கிரமித்தால் அதற்கு எதிராகப் படையில் இணைந்தோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ போராடத் தயாராக இருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. தைவானியர்கள் தமது எனக் கருதும் வான் மற்றும் கடற்பரப்புக்களில் சீனாவின் விமானங்களும் கப்பல்களும் அத்து மீறுவது தைவானிய இளையோரை ஆத்திரப்படுத்தியுள்ளது. முன்பு சீனாவுடன் இணைய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் பலர் ஹொங்கொங்கில் சீன ஆதிக்கத்திற்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டங்களைக் கொண்டு தமது மனங்களை மாற்றிக் கொண்டனர். தற்போது 1.5விழுக்காடு தைவானியர்கள் மட்டுமே சீனாவுடன் தைவான் இணையவேண்டும் எனக் கருதுகின்றார்கள். 2018 ஏப்ரில் 18-ம் திகதி சீனக் கடற்படையினர் தைவானை அச்சுறுத்தும் வகையில் தமது போர் ஒத்திகையை தைவான் நிரிணையில் மேற்கொண்டிருந்தனர்.

சீனாவின் படைப்பயிற்ச்சிகள்
சீனா தொடர்ச்சியாக தைவானை மையப்படுத்தி பல படைத்துறைப் பயிற்ச்சிகளையும் ஒத்திகைகளையும் செய்கின்றபடியால் தைவான் ஒரு சீன ஆக்கிரமிப்பை எப்படி எதிர் கொள்வது என்ற போர் ஒத்திகையை தைவான் 2018 ஏப்ரல் மாத ஆரம்பத்தில் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் ஒத்திகைகளில் பொதுமக்களையும் தைவான் ஈடுபடுத்துகின்றது. பொதுமக்கள் பாவிக்கும் ஆளில்லா விமானங்களும் பெருமளவில் ஈடுபடுத்தப் படவிருக்கின்றன. தைவானின் கரையில் வைத்து ஆக்கிரமிப்பாளர்களை ஒழித்துக் கட்டுவதுதான் இந்தப் போர் ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். இவ் ஒத்திகையின் கட்டுப்பாட்டகம் கணினி மயப்படுத்தப் பட்டதாக இருக்கும்.

தைவான் பயணச் சட்டம் 2018.
2018 மார்ச் 16-ம் திகதை தைவான் பயணச் சட்டத்தில் (Taiwan Travel Act) கையொப்பமிட்டார். அச்சட்டம் அமெரிக்க அரசு தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அரச அதிகாரிகள் பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்கின்றது. இது சீனாவை சினம் கொள்ள வைத்துள்ளது. அது போதாது என்று அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோவும் பசுபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதி ஃபில் டேவிட்சனும் தைவானுடனான உறவு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான படைக்கலன்கள் விற்பனை செய்ய வேண்டும் கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அமெரிக்கப் பாதுகாபுத் துறை ஆலோசகர் ஜோன் போல்டன் தைவானுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

கடுகு சிறிது காரம் பெரிது
கடந்த பல பத்தாண்டுகளாக் தைவான் சீன ஆக்கிரமிப்பு எதிரான போருக்கான ஒத்திகையைத் தொடர்ந்து செய்து வருவதுடன் தனது படைவலிமையையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. 23மில்லியன் மக்களைக் கொண்ட தைவான் 180,000 படையினரைக் கொண்டுள்ளது. இத்தொகை பெரிய நாடுகளான ஜேர்மனிக்கும் ஜப்பானுக்கும் இணையானது. தைவான் நூறு அமெரிக்க F-16 போர்விமானங்களையும் மேலும் நூறு உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட F-CK-1A/C போர்விமானங்களையும் கொண்டுள்ளது. அதன் கடற்படை எட்டு நாசகாரிக் கப்பல்களையும் 20 ஃபிரிக்கேற் வகைக் கப்பல்களையும் கொண்டுள்ளது. தைவானின் வான் மற்றும் கடல் வழியிலான எதிர்ப்பு ஏவுகணை முறைமைகளையும் கொண்டுள்ளது. எல்லாவற்றிலும் மேலாக சீனாவைத் தாக்கக் கூடிய ஏவுகணைகள் பல நூற்றுக் கணக்கில் தைவானுடன் உள்ளன. இவை சீனாவில் பெரும் சொத்தழிவையும் ஆளணி ஏற் ஏற்படுத்தக்கூடிவை. சீனாவில் இருந்து புறப்படும் சீனப் படையினர் தைவான் நீரிணையைக் கடந்து சென்று தைவானில் தரையிறங்க ஏழு மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கும். இந்த நேர அவகாசத்தில் தைவானியப் படைகள் போதிய தயார் நிலை நகர்வுகளைச் செய்து விடலாம். தைவானிய கடற்கரையில் 10 விழுக்காடு மட்டுமே ஆக்கிரமிப்புப் படையினர் கடல்வழியாகச் சென்று தரையிறங்க உகந்தவை. தைவானில் இருக்கும் பல மலைத் தொடர்கள் ஆக்கிரமிப்புப் படையினருக்கு பிகவும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியவை. சில படைத்துறை நிபுணர்களின் கணிப்புப் படி நான்கு இலட்சம் படையினரை சீனா தைவானை ஆக்கிரமிக்க களத்தில் இறக்க வேண்டியிருக்கும். இச்சூழலில் கடுமையான இழப்புக்களுக்கு மத்தியிலேயே சீனாவால் தைவானை ஆக்கிரமிக்க முடியும். ஆக்கிரமித்து அதைப் பேணுவதிலும் பல இழப்புக்களை சீனா சந்திக்க வேண்டியிருக்கும்.

1995-இல் சீனா தைவானை ஆக்கிரமிக்க ஆயத்த வேலைகள் செய்த போது அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அதன் பரிவாரங்களுடன் தைவானைப் பாதுகாப்பதற்கு அனுப்பிய போது சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. அதே போல் அமெரிக்கா இனியும் செய்யும் என்பதைச் சீனா அறியும். தைவானை ஆக்கிரமிக்கச் செல்லும் சீனக் கடற்படைக் கப்பல்களில் நாற்பது விழுக்காட்டை அமெரிக்க நீர்முழ்கிக் கப்பல்களால் அழிக்க முடியும் என்ற நிலை தற்போது நிலவுகின்றது. தைவானும் அமெரிக்காவும் இணைந்து சீன ஆக்கிரமிப்பு முயற்ச்சியை முறியடிக்க முடியும். அது சீனப் பொதுவுடமைக் கட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் சீனாவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சீன மாணவர்கள் அங்கு சீனப் பொதுவுடமைக் கட்சியின் கிளைகளை அமைப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்துள்ளன. 1970களின் பின்னர் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்று கல்வி பயில்வோர்களின் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அவர்களில் பெரும்பான்மையானோர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் பிள்ளைகள். அதனால் இவர்கள் முதலாளித்துவக் கட்டமைப்பால் கவரப்பட்டு அதை சீனாவில் புகுத்த முயல்வார்களா என்ற அச்சம் கட்சியின் உயர்பீடத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைத்தது. அந்த நிலைமையை சீனா இப்போது மாற்றி அமைக்க முயல்கின்றது. அமெரிக்காவிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் மூலம் அமெரிக்காவில் பொதுவுடமை வாதத்தைப் பரப்ப முயல்கின்றது.
                                                         
வட கொரியாவிட்டுக் கொடுப்பு சீனாவை ஓரம் கட்டுகிறதா?
வட கொரியா ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் பரீட்சிப்பதை நிறுத்துவேன் அறிவித்தமை பலரை ஆச்சரியப் படுத்துகின்றது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை அமெரிக்க் அதிபர் டிரம்ப் ரொக்கெட் மனிதன் என அழைத்ததும் அதற்கு பதிலடியாக இவரை அவர் டுவிட்டர் மனிதன் என அழைப்பதுமாக ஓராண்டுகள் போட்டி போட்டுக் கொண்டு ஓராண்டைக் கழித்த இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டதும் இன்னும் ஓர் இரகசியமாகும். முதலில் வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் வட கொரியாவின் பொருளாதாரம் பெருதும் பாதிக்கப்பட்டதால் கிம் ஜொங் உன் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனச் செய்திகள் வெளிவந்தன. பின்னர் வட கொரியா ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் பரிசோதிக்கும் மலைப்பகுதி தொடர்ச்சியான அதிர்வுகளால் வெடித்துச் சிதைந்து விட்டது. மேலும் பரிசோதனைகள் செய்ய முடியாத நிலையில்தான் வட கொரியா பேச்சு வார்த்தை மேசைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது எனவும் சில அரசியல் ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். இந்த சூழலைப் பயன் படுத்தி தென் கொரிய அதிபர் மூன் தனது நாட்டில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரிய விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றுவதற்கான முழுச் செலவையும் தென் கொரியா ஏற்றுக் கொண்டது. அதற்கு வந்த வட கொரிய அதிபரின் சகோதரியை நல்ல முறையில் நடத்தி அவரிடம் வட கொரியாவில் ஓர் ஆட்சியாளர் மாற்றம் செய்ய அமெரிக்கா முயலாது என்பதை உறுதி படத் தெரிவித்தார் தென் கொரிய அதிபர். அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளில் இரு கொரியாவினதும் தலைவர்கள் முதலிலும் பின்னர் அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை செய்வதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. வட கொரியா இது வரை விதித்து வந்த முன் நிபந்தனைகளில் இரண்டு முக்கியமானது. ஒன்று தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் படைப் பயிற்ச்சிகளை நிறுத்துவது. மற்றது அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்பது. இவையிரண்டும் வட கொரியாவுலும் பார்க்க சீனாவிற்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவையிரண்டும் வலியுறுத்தப் படாமை சீனா வட கொரியாவுடனான சமாதான முன்னெடுப்பில் ஓரம் கட்டப்படுவதாக நம்பப்படுகின்றது. கிம் ஜொங் உன் வட கொரியாவைச் சந்தைப் பொருளாதாரமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார். வட கொரியாவை அணுக்குண்டு அற்ற நாடாக மாற்றினால் அது அந்தப் பிராந்தியத்தின் படைத்துறைச் சமநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது சீனாவிற்குப் பாதகமாக அமையலாம். 

ஒரு கொரியாவை விரும்பாத ஜப்பான்
கொரியத் தீபகற்பத்தின் சமாதானத்திற்கு முக்கியமானது இரு கொரியாக்களும் ஒன்றிணைவதாகும். அதை ஜப்பான் விரும்பவில்லை. இணைப்பு தென் கொரியர்களுக்கு பெரும் பொருளாதாரச் சுமையைக் கொண்டு வரும் என்பதால் அவர்களும் விரும்பவில்லை. இரு கொரியாக்களும் இணைந்து ஓர் அமெரிக்க சார்பு நாடாக உருவெடுக்கலாம் என்ற கரிசனையினால் சீனாவும் விரும்பவில்லை. இரு கொரியாக்களும் பிளவு பட்டு நின்றால்தான் அமெரிக்கப் படைகள் அங்கு தொடர்ந்து நிலை கொள்ள முடியும் என்பதால் அமெரிக்காவும் விரும்பவில்லை. இரு கொரியாக்களும் இணையும் சாத்தியம் இப்போது இல்லவே இல்லை. வட கொரியாவும் ஒரு அமெரிக்க சார்பு நாடாக மாறாமல் பார்த்துக் கொள்வதில் சீனா அதிக கவனம் செலுத்தும். அது எந்த வகையில் இரு கொரியாக்களுக்கும் இடையிலான சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்விக்கான பதில் அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...