துருக்கி சிரியாவிற்கு தனது
படைகளை அனுப்பியமை சிரியப் போர் ஓயவில்லை என்பதைப் பறைசாற்றுகின்றது தனது படை நகர்வின்
நோக்கம் சிரிய எல்லையில் ஒரு முப்பது மைல் நீளமான பாதுகாப்பு வலயத்தை உருவாக்குதே
என்கின்றது. இதற்கு அது இரசியாவின் ஆதரவையும் கோரியுள்ளது.
துருக்கியர்கள், அரபுக்கள், ஈரானியர்கள் ஆகிய மூன்று
இனங்களும் மொழி அடிப்படையில் வட ஆபிரிக்கா, மேற்காசியா
(மத்திய கிழக்கு) ஆகிய பிராந்தியங்களில் உள்ள முப்பெரும் இனங்களாகும். இவர்களிடையே
பல நூற்றுக்கணக்கான இனக்குழுமங்களும் உண்டு. ஆனாலும் இவர்கள் முகம்மது நபியின்
போதனைப்படி இஸ்லாமிய மதத்தைப் பின் பற்றுகின்றார்கள். அதிலும் சுனி இஸ்லாம் சியா
இஸ்லாம் என்ற இரு வகையான மதங்கள் உண்டு. உலக அரசியல் ரீதியில் மேற்காசியாவும் வட
ஆபிரிக்காவும் ஒரு தனிப்பிராந்தியமாகப் பார்க்கப் படுகின்றது. அங்குள்ள நாடுகள்:
அல்ஜீரியா, பாஹ்ரேன், ஜிபுட்டி, எகிப்து, எதியோப்பியா,
ஈரான், ஈராக், இஸ்ரேல்,
ஜோர்தான், குவைத், லெபனான்,
லிபியா, மோல்டா, மொரொக்கோ,
ஓமான், காட்டார், சவுதி
அரேபியா, சிரியா, சூடான், துனிசியா, ஐக்கிய அமீரகம், மேற்குக்கரையும்
காசாவும், யேமன்.
மன்னர் ஆட்சி, படைத்துறையினரின் ஆட்சி, மதவாதம் கலந்த மக்களாட்சி, மக்களாட்சி எனப் பலவிதமான ஆட்சி
முறைமைகள் இப்பிராந்தியத்தில் உள்ளன. வெவ்வேறு ஆட்சி முறைமையின் கீழ் ஆட்சி
செய்பவர்களிடையே முறுகல்கள் உண்டு. மேனாப் பிராந்தியம் என அழைக்கப்படும் வட
ஆபிரிக்க மேற்காசியப் பிராந்திய நாடுகளில் இஸ்ரேலிலும் துனிசியாவிலும் தேர்தல்
மூலம் ஆட்சியாளர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றார்கள்.
மத்திய கிழக்கா மேற்காசியாவா?
ஐக்கிய இராச்சியம் உலகில் ஆதிக்கம் செலுத்திய
போது அது மத்திய கிழக்கு, தூர கிழக்கு, மத்திய ஆசியா என ஆசிய நாடுகளைப் பிரித்து உலக வரைபடத்தை உருவாக்கியது.
ஆனால் கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு அது மேற்குப் புறமாகவே இருக்கின்றது. அதனால்
உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற வகையில் மேற்காசிய நாடுகள் எனச் சொல்வது
பொருத்தமாக இருக்கும். தற்போது உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க ஊடகங்கள்
மத்திய கிழக்கு என்ற சொற்தொடரையே பாவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இஸ்ரேலியர்களும் குர்திஷ்களும்
யூதர்கள் தமக்கென ஒரு மதம் மொழி கொண்ட ஓர்
இனமாகும். அவர்களுக்கு என ஒரு நாட்டை இந்த முப்பெரும் இனங்களுக்கு மத்தியில்
அமைத்து அதை வலிமை மிக்கதாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள். இன்னும் ஒரு இனமான குர்திஷ்
மக்களும் தமக்கு என ஒரு நாடு வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள அரசுறவியல்
பிரச்சனைகளுக்கும் புவிசார் அரசியல் போட்டிகளுக்கும் காரணமாக அமைபவை:
1.இஸ்ரேலியர்கள் தமக்கென அமைத்தை நாட்டைத் தக்க
வைக்க எடுக்கும் நடவடிக்கைகள்
2. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள
எரிபொருள் இருப்பும் அதன் விநியோகமும்.
3. குர்திஷ் மக்களுக்கு என ஒரு நாடு அமையக்
கூடாது என்பதில் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களும் உறுதியாக இருப்பது.
துருக்கியின் உதுமானியப் பேரரசு பதினைந்தாம்
நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாம் ஆண்டின் ஆரம்பம் வரையிலும் மேற்காசிய வட
ஆபிரிக்கப் பிராந்தியம் உட்படப் பல நாடுகளை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. முதலாம்
உலகப் போரில் உதுமானியப் பேரரசிடமிருந்து பிரன்ஸ்சும் பிரித்தானியாவும் இந்த
நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டன. மீண்டும் ஒரு இஸ்லாமியப் பேரரசு இப்பிராந்தியத்தில்
உருவாகாத வகையில் அங்குள்ள நாடுகளின் எல்லைகளை பிரித்தானியாவும் பிரான்ஸும்
வரைந்து கொண்டன. அதனால் பல பிரச்சனைகள் உருவாகின. இன்றுவரை பல இனப்பிரச்சனைகள்
எல்லைப் பிரச்சனைகள் இந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கேந்திர முக்கியத்துவம் மிக்க மேனாப் பிராந்தியம்
உலக எண்ணெய் இருப்பில் 65 விழுக்காடும் இயற்கை எரிவாயு இருப்பில் 45 விழுக்காடும் இந்த மெனா பிராந்தியத்தில் இருக்கின்றன. ஆசியா, ஆபிரிக்கா ஆகிய இரு கண்டங்களையும்
இது உள்ளடக்கி இருக்கின்றது. தெற்கு ஐரோப்பாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. ஆசியாவை ஐரோப்பாவுடனும்
அமெரிக்காவுடனும் இணைக்கும் தரை மற்றும் கடல் வழிப்பாதை இப்பிராந்தியத்தின் ஊடாக நடைபெறுகின்றது.
உலகக் கடற்போக்குவரத்தில் இரு முக்கிய திருகுப் புள்ளிகளான சூயஸ் கால்வாயும் ஹோமஸ்
நீரிணையும் இப்பிராந்தியத்தில் இருக்கின்றன. உலக அரசியல் உறுதிப்பாட்டிற்கும் பொருளாதார
வளர்ச்சிக்கும் இந்தப் பிராந்தியத்தில் அமைதி முக்கியமான ஒன்றாகும்.
இனக்குழுமங்கள்
மோனாப் பிராந்தியத்திற்குப் பிரச்சனையாக இருப்பது அங்குள்ள பல் வேறுபட்ட இனக்
குழுமங்கள். லிபியாவில் மட்டும் அறுநூற்றிற்கும் அதிகமான இனக்குழுமங்கள்
இருக்கின்றன. ஈராக்கிய மக்கள் தொகையின் 70 விழுக்காடு நூற்றைம்பது இனக்குழுமங்களைக்
கொண்டது. சியா முஸ்லிம்களிலும் பார்க்க சுனி முஸ்லிம்களிடையே இந்த இனக்குழுமப்
பிரிவுகளும் பிளவுகளும் அதிகமாக இருக்கின்றன. இந்தப் பிளவுகளை ஆட்சியாளர்கள்
கவனமாகக் கையாள வேண்டிய நிர்பந்தத்தின் கீழ் இருக்கின்றார்கள். லிபியாவில் மும்மர்
கடாஃபியின் வீழ்ச்சிக்கு இனக் குழுமங்களிடையேயான முறுகல்கள் காரணமாயிருந்தன.
அஸ்டானா மூவர்
கஜக்ஸ்த்தான் தலைநகர் அஸ்டானாவில் ஈரான், துருக்கி, இரசியா ஆகிய மூன்று நாடுகளும்
அடிக்கடி சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தின. சிரியாவில் அதிபர் பஷார் அல்
அசத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பது ஈரானினதும் இரசியாவும் உறுதியான
நிலைப்பாடு. சிரியாவில் அசத்துக்கு எதிராகப் போராடும்
குழுக்களுக்கு துருக்கி உதவி செய்கின்றது. அந்தக் குழுக்களின் கட்டுப்பாட்டில்
உள்ள பிரதேசத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என மூன்று நாடுகளும் அஸ்டானாவில்
ஒத்துக் கொண்டன. ஆனால் 2018 ஜனவரி 9-ம் திகதி அசாத்தின் படைகள் துருக்கி ஆதரவுப்
படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தின. உடனே
துருக்கிய வெளிநாட்டமைச்சர் இரசியாவினதும் ஈரானினதும் தூதுவர்களை அழைத்து தனது
அதிருப்தியை வெளியிட்டார். ஆனால் அசாத்தின் படைகள் இரசியாவினதும் ஈரானினதும்
உதவியுடனேயே படையெடுப்பை நடத்தின என்று அறிந்த துருக்கி விசனமடைந்தது. ஈரான் தனது
படைத்துறை ஆலோசகர்களும் ஹிஸ்புல்லாப் போராளிகளும் சிரியாவில் தொடர்ந்து நிலைக்
கொண்டிருப்பதை ஈரான் விரும்புகின்றது. ஆனால் அதை இரசியா விரும்பவில்லை. அப்படி
ஈரான் விரும்புவது போல் நடந்தால் இஸ்ரேல் கடும் சினம் கொண்டு சிரியா மீது
தாக்குதல் தொடுப்பதுடன் அமெரிக்காவும் சிரியாமீது ஹிஸ்புல்லாப் பயங்கரவாதிகளை
ஒழிக்கும் போர்வையில் தாக்குதல் நடத்தும் என்பது இரசியாவின் எதிர்பார்ப்பு.
ஈரானினதும் ஹிஸ்புல்லாவினதும் சியா இஸ்லாமிய ஆதிக்கம் தன் எல்லை நாடான சிரியாவில்
அதிகரிப்பதை சுனி இஸ்லாமிய நாடான துருக்கி விரும்பவில்லை. இவற்றால் ஒற்றுமையாக
இருக்க விரும்பும் அஸ்டானா மூவரிடையே முறுகல் நிலை.
சிரியாவின் வடக்கு துருக்கிக்கு முடக்கு
சிரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் குர்திஷ்
போராளிகளையும் சுனி முஸ்லிம் போராளிகளையும் உள்ளடக்கிய முப்பதினாயிரம் பேரைக்
கொண்ட ஒரு படையணியை உருவாக்க அமெரிக்கா முயல்கின்றது. ஆனால் சிரியாவிலோ ஈராக்கிலோ
குர்திஷ் மக்களுக்கு என ஒரு படையணி இருக்கக் கூடாது என்பது துருக்கியின்
நிலைப்பாடு. அதனால் தனது எல்லையில் அமெரிக்கா பயங்கரவாதிகளைத் திரட்டுகின்றது என
துருக்கி குற்றம் சாட்டுகின்றது. குர்திஷ் பயங்கரவாதிகள் அமெரிக்காவின் முதுகில்
குத்துவார்கள், அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பி
பயங்கரவாதத் தாக்குதல்களைச் செய்வார்கள் என்கின்றது துருக்கி. துருக்கியில் உள்ள
குர்திஷ் போராளிகளைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனப் படுத்திய அமெரிக்கா ஈராக்கிலும்
சிரியாவிலும் உள்ள குர்திஷ் போராளிகளுக்கு மட்டுப்படுத்தப் பட்ட அளவில்
படைக்கலன்களையும் பயிற்ச்சிகளையும் வழங்கி ஐ எஸ் எனப்படும் இஸ்லாமியப் போராளி
அமைப்புகளுக்கு எதிராகப் போராட வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கா குர்திஷ்
போராளிகளை தனது தேவைக்குப் பயன்படுத்திவிட்டு இறுதியில் கைவிட்டு விடும் என சில
குர்திஷ் அறிஞர்கள் கருதுகின்றார்கள். சிரியாவில் தமது விடுதலைக்காகப் போராடும் YPG எனச் சுருக்கமாக அழைக்கப் படும் மக்கள்
பாதுகாப்புப் பிரிவு என்னும் அமைப்பை துருக்கி பயங்கரவாத அமைப்பு எனப் பிரகடனப்
படுத்தினாலும். ஈராக்கில் உள்ள பெஷ்மேர்கா என்னும் குர்திஷ் போராளி அமைப்புடன்
துருக்கி மட்டுப்படுத்தப்பட்ட உறவை வைத்துள்ளது. அவர்களிடமிருந்து எரிபொருளையும்
வாங்கியது. ஆனால் அவர்கள் தமக்கு என ஒரு நாட்டை ஈராக்கில் அமைப்பதை துருக்கி
கடுமையாக எதிர்க்கின்றது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் அங்கம் வகிக்கும்
தன்னைக் கேட்காமல் சிரியாவில் ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை அமைப்பது தவறு
என்கின்றது 2018-01-20 சனிக்கிழமை
துருக்கி தனது படைகளை "Olive
Branch" என்னும் குறியீட்டுப் பெயருடனான படை நவடிக்கையாக
சிரியாவில் குர்திஷ் மக்களின்
கட்டுப்பாட்டில் உள்ள அஃப்ரின் பிரதேசத்துக்கு தனது படைகளை எல்லை தாண்டி அனுப்பியுள்ளது.
அதே வேளை அப்பிரதேசத்தில் துருக்கிய விமானப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான அனுமதியை
இரசியாவிடம் பெறுவதற்கு தனது படைத்தளபதியை இரசியாவிற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின்
ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தும் தனது நேட்டோ நண்பன் மீது அமெரிக்கா
என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பது ஒரு பெரும் கேள்வி. துருக்கியின் நகர்வுகளைப்
பற்றி அமெரிக்க வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவிக்கும் போது துருக்கி ஐஎஸ் போராளிகள்
மீது கவனம் செலுத்த வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
துருக்கி. இந்த
நான் முனை முறுகல் மெனாப் பிராந்தியத்தில் தணிவதற்கான அறிகுறிகள் அண்மையில் இல்லை.
இரசிய, அமெரிக்க, சீன ஆதிக்கப் போட்டி
பனிப்போர்க்
காலத்தில் மேனா பிரதேசம் எனப்படும் வட ஆபிரிக்க மற்றும் மேற்காசியப் பிரதேசங்களில்
இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. அரபு இஸ்ரேலியப்
போர்களுக்குப் பின்னால் இந்தப் பிராந்திய ஆதிக்கப் போட்டி இருந்தாது. 1991-ம்
ஆண்டின் பின்னர் அந்த ஆதிக்கப் போட்டி குறையத் தொடங்கியது. ஆனால் 2014-ம் ஆண்டு
இரசியா சிரிய உள்நாட்டுப் போரில் தலையிடத் தொடங்கியதில் இருந்து இந்தப் பிராந்திய
ஆதிக்கப் போட்டி மீண்டும் தலை தூக்கியுள்ளது. அமெரிக்கா அகற்ற முயன்ற பஷார் அல்
அசாத்தின் ஆட்சியை இரசியா தக்கவைத்து அதை உறுதியாக்கி விட்டது. இந்தப் பணியில்
சிரியாவில் இரசியா இரண்டு தளங்களை உருவாக்கி விட்டது. ஆனால் சிரியாவில்
நிரந்தரமாகப் பெருமளவு படையினரை வைத்திருக்க இரசியா விரும்பவில்லை. அசாத்தை அகற்ற
முடியாத அமெரிக்கா அதைப் பல கூறுகளாகப் பிரிக்க விரும்புகின்றது. அதற்கு குர்திஷ்
மக்களைப் பாவிப்பதை துருக்கி எதிர்க்கிறது. அமெரிக்கப் படையினர் சிரியாவில் நிலை
கொள்வதை ஈரானும் எதிர்க்கின்றது.
கொல்லப்பட்ட
ஒஸ்லோ உடன்படிக்கை
அமெரிக்க
அனுசரணையுடன் இஸ்ரேலுக்கும் பலஸ்த்தீனியர்களுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒஸ்லோ
சமாதான உடன்படிக்கையின் படியான சமாதானப் படிமுறைகள் இருபத்தைந்து ஆண்டுகளாகத்
தொடர்கின்றது. அதன் படி ஜெருசலேம் கிழக்கு பலஸ்த்தீனியர்களுக்கு உரியது, ஆனால் முழு ஜெருசலேமும்
இஸ்ரேலின் தலைநகர் என்றும் அங்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கான தனது தூதுவரகத்தை
அமைக்கப் போகின்றது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது பலஸ்த்தீனியர்களை
கடும் அதிருப்திக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியது. ஒஸ்லோ உடன்படைக்கையை
இஸ்ரேல் கொன்று விட்டது என்றால் பலஸ்த்தீனிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட்
அப்பாஸ். ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்திட்டது இஸ்ரேலில் இடது சாரிகள் ஆட்சியில்
இருந்த போது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தீவிரப் போக்குக் கொண்ட வலது
சாரிகள். மீண்டும் ஒரு பல்ஸ்த்தீனியக் கிளர்ச்சி அல்லது போர் மேற்குக் கரையில்
ஏற்படலாம். ஆனால் இஸ்ரேலின் கொள்கை பலஸ்த்தீனியர்கள் கிளர்ச்சி செய்தல்
வன்முறையைப் பிரயோகிக்க வேண்டும்; அவர்கள் அடங்க மறுத்தால்
கொடூரமான வன்முறையைப் பாவிக்க வேண்டும் என்பதாகும்.
பல சிக்கல்களைக்
கொண்ட மேனாப் பிராந்தியம் சுமூக நிலையடைந்து பொருளாதார சுபீட்சம் பெறுவது
இலகுவானதுமல்ல விரைவில் நடக்கப் போவதுமல்ல.
No comments:
Post a Comment