Monday, 13 November 2017

கொரியத் தீபகற்பத்தின் அதிசயங்களும் டிரம்பின் தடுமாற்றங்களும்

அமெரிக்கப் படைத்துறையின் இணைத் தளபது ஜெனரல் ஜோசெப் டன்போர்ட் ஹவாயிலுள்ள அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தில் வைத்து கொரியத் தளபதி ஜியோங் கியோங் டூவையும் ஜப்பானியத் தளபதி அட்மிரல் கட்சுடொஷி கவனோவையும் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அமெரிக்கப் படைத்துறைச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ் வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஜப்பானுக்கும் தென் கொரியாவிற்கும் மேற்கொண்ட பயணங்களை அடுத்து அரங்கேறியுள்ளது.  ஜப்பானும் தென் கொரியாவுக் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகின்றன.

கொலையாளியுடன் கை கோர்க்கும் அதிசயம்
கடந்த நூற்றாண்டில் கொரியர்களை இனக்கொலை செய்த ஜப்பானும் தென் கொரியாவும் அரசுறவியல் அடிப்படையில் மேலும் நெருக்கமடைகின்றமை ஒரு அரசுறவியல் அதியசமாகும். இந்த நெருக்கத்தின் பின்னணியில் இருந்து இணைப்பது ஐக்கிய அமெரிக்கா. இணைய வேண்டிய தேவையை ஏற்படுத்தியது வட கொரியா. வட கொரியாவும் தென் கொரியாவும் ஒரே இனம். ஒரே மொழி பேசுபவர்கள். ஒரே கலாச்சார்த்தையும் கொண்டவர்கள். இரண்டாம் உலகப் போரில் கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியை இரசியாவும் தென் பகுதியை அமெரிக்காவும் ஜப்பானிடமிருந்து அபகரித்துக் கொண்டன.  பொதுவுடமைவாதப் பரம்பல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஏற்பட்ட போட்டியின் விளைவாக 1950இல் கொரியப் போர் உருவானது. மூன்றாண்டுகள் நடந்த போரின் முடிவில் கொரியா இரண்டு நாடுகளாகியது. வட கொரியா பொதுவுடமைவாத நாடாகவும் தென் கொரியா சந்தைப் பொருளாதார நாடாகவும் மாற்றப்பட்டன. கொரியர்கள் ஜப்பானியர்களை அவர்கள் தம்மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களுக்காக வெறுப்பவர்கள். வட கொரியர்களும் அவ்வாறே. வட கொரியாவும் ஜப்பானும் ஏதாவது விளையாட்டுப் போட்டியில் மோதிக்கொண்டால் வட கொரியா வெற்றி பெற வேண்டும் என தென் கொரியர்கள் விரும்புவார்கள். அது போன்ற நிலைப்பாட்டையே வட கொரியர்கள் தென் கொரியாவும் ஜப்பானும் மோதிக் கொண்டால் எடுப்பார்கள். இரண்டு கொரியாக்களும் ஒன்றுடன் ஒன்று நட்பை வளர்க்க வேண்டும் சீனாவுடனான  நட்பை மேம்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடைவர். சீனா படைத்துறையிலும் மற்றும் பொருளாதாரத் துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியடையும் போது அமெரிக்காவால் தென் கொரியாவைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என கொரியர்கள் மத்தியில் அச்சமுண்டு. இதை அதிபர் டொனால்ட் டிரமப் வட கொரியாவின் அச்சுறுத்தலால் மாற்றியமைக்க முயல்கின்றார்.

பிரிந்தவர் கூடுதல் முறையோ
வட கொரியா தென் கொரியாவை மீளவும் தன்னுடன் இணைக்கும் முயற்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக அது தன் படைவலுவை பெருக்கிக் கொண்டே போகின்றது. அதன் விளைவாக அது அணுக் குண்டுகளையும் தொலைதூர ஏவுகணைகளையும் பரீட்சித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கரிசனை கொண்டுள்ளன. இந்த முயற்ச்சியில் வட கொரியா தனது பொருளாதார வளர்ச்சியில் கோட்டை விட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். சீனாவைப் போல் ஒரு சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி வளரும் முயற்ச்சியை அது எடுக்கவில்லை. அப்படி ஒன்று எடுத்தால் அந்நியர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்க வேண்டும். அது கிம் ஜொங் குடும்ப ஆட்சிக்கு ஆபத்தாகலாம் என்ற கரிசனை அதைத் தடுப்பதாகக் கொள்ளலாம்.

ஜப்பான் பக்குவம்
தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து மேலும் வலிமை மிக்க ஏவுகணைகளை வாங்குவதுடன் தானும் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவிற்கு ஏவுகணைத் தொழில் நுட்பத்தை வழங்கும் போது தென் கொரியா தாயாரிக்கும் ஏவுகணைகள் 110 மைல்களுக்கு மேல் பாயக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனை ஜப்பானுக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் விரோதத்தை மனதில் கொண்டு விதிக்கப்பட்டிருக்கலாம். ஜப்பானைன் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்த அடிப்படையிலான கடப்பாடு ஐக்கிய அமெரிக்காவிற்கு உண்டு. 2001-ம் ஆண்டு தென் கொரியாவின் ஏவுகணைகளின் பாய்யச்சல் தூரம் வட கொரியாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு 185 மைல்களாக அதிகரிக்கப்பட்டது. ஏவுகணைகள் எடுத்துச் செல்லும் குண்டுகளின் எடை 1100இறாத்தலாக மட்டுப் படுத்தப்பட்டது. பின்னர் 500மைல்களாக அதிகரிக்கப்பட்டது. அதனால் வட கொரியாவின் எந்தப் பகுதியையும் தாக்கக் கூடியது. தற்போது தென் கொரிய ஏவுகணைகள் 2200இறாத்தல் எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் அனுமதியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. டிரம்ப் 2017 நவம்பர் இரண்டாம் வாரத்தில் தென் கொரியாவிற்குச் செய்யும் பயணத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என உறுதியாக நம்பப்படுகின்றது. தென் கொரியா அமெரிக்காவின் உதவியின்றி வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னையும் அவரது துணைவர்களையும் அழிக்கக் கூடிய வகையில் ஏவுகணைகளை உருவாக்க முனைகின்றது. அப்படிப் பட்ட ஏவுகணைகள் கொலைச் சங்கிலிக் கோட்பாட்டிற்கு ஏற்ப இயங்கக் கூடியவையாக இருக்கும்.

வலிமையடையும் தென் கொரியா
அமெரிக்கா தென் கொரியாவில்  28000 படையினரை வைத்துள்ளது. அத்துடன் தென் கொரியாவை நோக்கி தனது மொத்த பதினொரு விமானந்தாங்கிக் கப்பலில் மூன்றை அனுப்பியுள்ளது. இன்னும் நான்கு விமானம் தாங்கிக் கப்பல்கள் கொரியத் தீபகற்பம் நோக்கிச் செல்லவுள்ளன.  மேலும் பல அணுப் படைக்கலன்கள் தென் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு வல்லரசு நாட்டிற்கு அண்மையாக இன்னொரு வல்லரசு பெரும் படைக்கலன்களை நகர்த்துவது அரசுறவியலில் வியக்கத்தக்க ஒன்றாகும்

டிரம்பின் மன மாற்றங்கள்
தென் கொரியாவின் பாராளமன்றமான தேசிய சபையில் உரையாற்றிய டிரம்ப் எங்களை வட கொரியா குறைத்து எடை போடவும் கூடாது எம்மைச் சீண்டிப் பார்க்கவும் கூடாது என்றார். மேலும் டிரம்ப் தனது உரையில் தெரிவித்தது: வட கொரிய ஆட்சியாளர்கள் இருண்ட கனவில் வாழ்கின்றார்கள்; அவர்கள் உருவாக்கும் படைக்கலன்கள் அவர்களைப் பாதுகாப்பதற்கு மாறாக அவர்களை பாரிய ஆபத்துக்கு உள்ளாக்குகின்றது; உலகம் வட கொரியாவைத் தனிமைப் படுத்த வேண்டும்; அமெரிக்க நகரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை; ஓரு அயோக்கிய அரசு உலகை அச்சுறுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; மோதல்களை அமெரிக்கா தேடிப்போவதில்லை ஆனால் வந்த மோதல்களை அது விட்டு வைப்பதுமில்லை;
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சும்மாவே சீறிப்பாய்பவர். அவர் தென் கொரியப் பாரளமன்றத்தில் வீரம் தெறிக்கும் உரையை ஆற்றினாலும் அது போருக்கான அறைகூவல் போல் இருக்கவில்லை. மாறாக 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடந்த கொரியப் போரை நினைவு கூர்ந்து மீண்டும் ஒரு இரத்தக் களரி இந்த மண்ணில் நடக்கக் கூடாது என்றார். தென் கொரியத் தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்த கொரியர்கள் டிரம்ப் இங்கு வராதே! நீ வாய் திறக்கும் போதெல்லாம் போர் என்கின்றாய் என்ற பெரிய பதாகைகளுடன் நின்றார்கள். அதேவேளை தென் கொரியப் பழமைவாதிகள் அமெரிக்காவினதும் தென் கொரியாவினதும் தேசியக் கொடிகளைத் தாங்கியவண்ணம் வரவேற்கவும் செய்தார்கள். அவர்களின் கைகளில் இருந்த பதாகைகளில் நாம் டிரம்பை நம்புகின்றோம் என்ற வாசகம் காணப்பட்டது.

மலைக் கோவில் வாசலில்
தென் கொரியாவின் வலு அதன் பொருளாதாரம். ஆசியாவில் வளர்ச்சியடைந்த இரு பொருளாதரங்கள் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே. தென் கொரியாவின் பொருளாதாரம் நிலை கொண்டிருப்பது அதன் தலைநகர் சியோலில். அந்தத் தலைநகரம் வட கொரியாவின் ஆட்டிலெறி வீச்சுக்குள் உள்ளமைதான் ஒரு போரை தென் கொரியர்களை விரும்பாமல் வைத்திருக்கின்றது. வட கொரியாவின் வலு அதன் படத்துறை. உலகின் ஐந்தாவது பெரிய படைத்துறையை அது கொண்டிருக்கின்றது. அதன் அடுத்த வலு வட கொரியாவில் உள்ள மலைத் தொடர்கள். கொரியர்கள் தெய்வங்களாக மதிக்கும் மலைத் தொடர்களுக்கு அடியில் வட கொரியாவின் படைவலு மறைத்து வைக்கப் பட்டுள்ளது. படைக்கல உற்பத்தி நிலையங்கள், படையணிகள், விமான ஓடுபாதைகள், படைக்கலக் களஞ்சியங்கள் பல மலைத்தொடர்களுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் இருப்பிடங்களை இனம் காண்டு சிரமம். அவற்றை அழிப்பது அதிலும் சிரமம்அதனால்தான் வட கொரிய அதிபர் துணிச்சலுடன் செயற்படுகின்றார்.

வாலாட்ட முடியாத சிஐஏ
வட கொரியாவின் மூன்று தலைமுறை ஆட்சியாளர்கள் தமது நாட்டுக்குள் அமெரிக்க உளவுத்துறை வாலாட்டாமல் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். இதனால் பல பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்த போதிலும் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாத நிலை இருக்கின்றது. இது வட கொரிய அதிபர் கிம் உங் ஜொன்னை அசைக்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வேறு ஆட்சி வேறு
முதலில் தென் கொரியா தனது பாதுகாப்பைத் தானே உறுதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த டிரம்ப் தென் கொரியா அமெரிக்கப் படைக்கலன்களை தனது நாட்டுக்குள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகின்றார். டொனால்ட் டிரம்ப் இப்போது தனது நட்பு நாடுகளை சர்வாதிகாரியிடமிருந்து பாதுகாப்பேன் என முழங்குவதும் ஒரு அரசுறவியல் வியப்பாகும்

சீனாவும் தென் கொரியாவும்
தென் கொரியாவின் உயர் மலைகளில் அமெரிக்காவின் தாட் என்னும் ஏவுகணை என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்துவதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. சீனாவின் பெரும் நிலப்பரப்பில் நடப்பவற்றை தாட் முறைமையில் உள்ள கதுவிகள் உணர்ந்து கொள்ளும். தென் கொரியா மீது பொருளாதாரத் தடைகளையும் தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு எதிராக கொண்டு வந்தது. பின்னர் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை செய்து பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன. தாட் சீனாவிற்குப் பாதகமில்லாத வகையில் நிறுத்தும் உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

சீனாவில் டிரம்ப்
ஜப்பானுக்கும் தென் கொரியாவிற்கும் பயணம் செய்த டொனால்ட் டிரம்ப் அடுத்ததாக சீனாவிற்குச் சென்றார்.  அமெரிக்கா வட கொரியா தொடர்பாக சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பவை:
1. சீனா வட கொரியாவிற்கு 18மைல் நீளக் குழாயினூடாகச் செய்யும் எரிபொருள் ஏற்றுமதியைத் தற்காலிகமாகவேனும் நிறுத்த வேண்டும்
2. சீனாவில் உள்ள வட கொரிய வங்கிக் கணக்குகளை மூட வேண்டும்.
3. சீனாவில் வேலையும் வட கொரியர்களை சீனாவில் இருந்து வெளியேற்ற வேண்டும்
கிம் ஜொங் உன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான உறவு சரிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. வட கொரியாவிற்கு பொருளாதார நெருக்கடிகள் கொடுக்கும் நடவடிக்கைகளை சீனா எடுக்க விரும்பவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வட கொரியாவில் இருந்து புகலிடத் தஞ்சம் கோரி பெருமளவில் மக்கள் வருவதைச் சீனா விரும்பவில்லை. மற்றது வட கொரியா தென் கொரியாவில் ஆட்சி கவிழ்ந்து அங்கு தனக்கு எதிரானவர்கள் ஆட்சியில் அமருவதை சீனா விரும்பவில்லை.

சீனர்களும் கொரியர்களும் ஜப்பானியர்களும் தமக்கிடையே இருக்கும் வரலாற்று அடிப்படையிலான பகைமை நீக்கி ஒற்றுமையாகை அவர்களது பிராந்தியத்தை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த பகைமை தொடரும் வரை அங்கு அமெரிக்கா இலகுவாக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும். வட கொரியாவைப் பூச்சாண்டியாக்கி சீனவிற்கு அண்மையாக அமெரிக்கா படைக்கலன்களை குவிக்கின்றது.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...