Wednesday, 6 September 2017

ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் ஆண்டுகள் பதினாறு

பராக் ஒபாமா பதவிக்கு வரும் போது ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறும் என்ற வாக்குறுதியுடன் வந்தார். ஆனால் வெளியேறவில்லை. ஆப்கானில் 8,400 அமெரிக்கப்படைகள் மட்டும் இருக்கின்றது என்றார் ஆனால் உண்மையில் 12,000 இற்கும் மேற்பட்ட படையினரை ஒபாமா அங்கு விட்டுச்சென்றார். ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்க சார்பு அரசு உருவாக்கப்பட்ட பின்னர் அமெரிக்கப் படைகளுக்கு அரசுறவியல் கவசம் (diplomatic immunity) வழங்கப்பட்டது. டொனால்ட் டிரம்பும் தேர்தல் பரப்புரையின் போது ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கப்படும் என்றார். ஆனால் பல மாதங்களாக வெள்ளை மாளிகையில் இரகசியமாக நடந்த விவாதத்தின் பின்னரும் காம்ப் டேவிட்டில் அமெரிக்க “போர் அமைச்சரவை” நடத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னரும் ஆப்கானிஸ்த்தானிற்கு அதிக அமெரிக்கப் படையினர் அனுப்பப்படுவர் என டிரம்ப் ஓகஸ்ட் மாதம் 21-ம் திகதி அறிவித்தார்.

என்ன வளம் இல்லை அந்தத் திருநாட்டில்
ஆப்கானிஸ்த்தானில் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிம வளங்கள் இருப்பதாக 2010-ம் ஆண்டு மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவிற்கு 600 ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வழங்கள் ஆப்கானிஸ்த்தானில் உள்ளது எனவும் மதிப்பிடப்பட்டது. சிலர் அது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு எனவும் சொல்கின்ரனர். சிலர் வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானின் கனிம வள இருப்பு குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். அண்மைக் காலங்களாக டிரம்பும் ஆப்கானிஸ்த்தான் அதிபர் அஸ்ரப் கானியுடன் அமெரிக்க கனிம வள அகழ்வு நிறுவனங்களை ஆப்கானிஸ்த்தானில் அனுமதிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையை இரகசியமாக நடத்தினார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்களில் முக்கியமானவை இரும்பும் செப்பும் ஆகும்இரும்பின் பெறுமதி 420பில்லியன் டொலர்கள், செப்பின் பெறுமதி 240பில்லியன்கள் என்றும் கருதப்படுகின்றது. 2010-ம் ஆண்டு உலகச் சந்தையில் இருந்த விலையிலும் பார்க்க இப்போது அவற்றின் விலைகள் உலகப் பொருளாதார மந்த நிலையினால் 30 விழுக்காடு குறைந்திருக்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும். ஆப்கானிஸ்த்தானின் rare-earth minerals அதன் ஹெல்மண்ட் மாகாணத்திலேயே இருக்கின்றன. அந்த மாகாணம் தலிபான் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.

ஐ எஸ் அமைப்பின் புகலிடமாகலாம்.
ஈராக்கிலும் சிரியாவிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்த ஐ எஸ் அமைப்பினர் இனி ஆப்காலிஸ்த்தானை நோக்கி நகரலாம். அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறினால் தலிபான் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாகலாம் என்ற கரிசனையும் அமெரிக்காவிற்கு உண்டு.

ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற ஆப்கான்
கிறிஸ்த்துவிற்கு 330 ஆண்டுகளுக்கு முன்னர் மகா அலெக்சாண்டர் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தார். அது நடந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னர் மொங்கோல் அரசர் ஜென்கிஸ் ஆப்கானை ஆக்கிரமித்தார். 1839இல் தொடங்கி பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்து பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தது அப்போர்கள் நடந்த காலம் 80 ஆண்டுகளாகும். இறுதியில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பில் இருந்த இந்தியாவை நோக்கி ஆப்கானிஸ்த்தான் படை எடுத்தது. அதை முறியடிக்க முதன்முதலாக வான் படைத் தாக்குதல் ஆசியாவில் நடைபெற்றது. இறுதியில் பிரித்தானியா  தனது ஆப்கானை ஆக்கிரமிக்கும் கொள்கையைக் கைவிட்டது. ஆப்கான் ஆக்கிரமிக்கவும் கைப்பற்றி வைத்திருக்கவும் கடினமான நாடு என்ற எண்ணம் உலகெங்கும் பரவியது.

போனது சோவியத் வந்தது நேட்டோ
சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் 1990-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றினர். அங்கு அல் கெய்தாவும் நிலைகொண்டிருந்தது. ஆப்கானிஸ்த்தானில் உள்ள கனிம வளமும் அதை ஈரன் தன் வசமாக்கலாம் என்ற கரிசனையும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானை 2001 ஒக்டோபரில் ஆக்கிரமிக்க வைத்தன. இப்படி ஓர் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கவே இரட்டைக் கோபுரத் தாக்குதல் செய்யப்பட்டது என சில சதிக்கோட்பாட்டாளர்கள் சொல்கின்றார்கள்

மேற்கு நாடுகளு பாதகமான உலக நிலைமை
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளுக்கு சாதகமாக உலக நிலை இருக்கவில்லை. ஜோர்ஜியாவை இரசியா ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியவில்லை. அரபு வசந்தந்தை மேற்கு நாடுகளுக்கு ஏற்றபடி மாற்ற முடியவில்லை, கிறிமியாவை இரசியா மீளவும் தன்னுடன் இணைத்தமையைத் தடுக்க முடியவில்லை, ஈரானில் ஆட்சி மாற்றம் எற்படுத்த முடியவில்லை, வட கொரியாவைச் சமாளிக்க முடியவில்லை, தென் சீனக் கடலில் சீனாவின் செயற்கைத் நிர்மாணத்தையும் அதை படைத்துறை மயமாக்குவதையும் தடுக்க முடியவில்லை. இவை போதாது என்று பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து பாத்து ஆண்டுகளாக விடுபட முடியவில்லை. அமெரிக்காவைப் பொறுத்த வரை அது 2001-ம் ஆண்டு ஆக்கிரமித்த ஆப்கானிஸ்த்தான் பிரச்சனை 16 ஆண்டுகளாக இழுபடுகின்றது.

கௌரவ வெளியேற்றம்
கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்கா ஆப்கானில் இருந்து ஒரு கௌரவமான வெளியேற்றத்துக்கான சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டிருந்தது. 2011-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானில் ஒரு இலட்சம் படையினர் இருந்தனர். அப்போது கூட அமெரிக்காவால் ஒரு கௌரவமான முடிவை எட்டி அங்கிருந்து கௌரவமாக வெளியேற முடியவில்லை. ஆப்கானிஸ்த்தானை யார் தலையிலாவது கட்டி விட வேண்டும் என்ற நோக்கம் கூட நிறைவேறவில்லை. ஆப்கானிஸ்த்தானில் இந்தியாவின் அதிகரித்த ஈட்டுபாட்டை அமெரிக்க்கா விரும்பியது. ஆனால் அது பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் ஆதரவை அதிகரித்தது. சீனா ஆப்கானிஸ்த்தானைப் பொருளாதார ரீதியாக மட்டும் சுரண்ட முயல்கின்றது. தற்போது அமெரிக்காவின் ஆப்கானிஸ்த்தான் நிலைப்பாட்டுக்கு சரியான உதாரணம் புலிவால் பிடித்த கதைதான். அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறினால் தற்போது அதை முழுமையான தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் காத்திருக்கின்ரது. ஈரானின் ஆப்கானிஸ்த்தான் பக்கமான விரிவாக்கத்திலும் பார்க்க அரபு நாடுகள் பக்கமான விரிவாக்கத்தில்தான் சவுதி அரேபியா அதிக கரிசனை காட்டுகின்றது. ஈரானை விட்டால் இரசியாவும் மீண்டும் ஆப்கானிஸ்த்தானில் தனது கால் வைக்க தயங்க மாட்டாது. சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதையில் ஆப்கானிஸ்த்தானும் அவசியமான ஒரு பிரதேசமாகும்.

மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றம்.
அமெரிக்கப் படைத்துறை ஆப்கானிஸ்த்தானில் தமது எண்ணப்படி செயற்படும் அதிகாரத்தை முன்பு பராக் ஒபாமாவிடம் கோரியிருந்தது. அதை ஒபாமா மறுத்திருந்தார். ஆனால் தற்போது அந்த அதிகாரத்தை டிர்ம்ப் வழங்கியுள்ளார். ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் நலன்கள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு தரப்பினருக் கலந்து ஆலோசித்துள்ளனர். அந்த நலன்களை எப்படிப் பாதுகாப்பது என்பதை நோக்கமாகக் கொண்ட உபாயம் தற்போது வகுக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் மற்றப் படைத் தளபதிகளிலும் பார்க்க அதிக காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஜெனரல் ஜோன் நிக்கொல்சனைப் (Gen. John W. Nicholson Jr) பதவி நீக்கம் செய்வது பற்றியும் அமெரிக்க அதிபர் டிர்ம்ப் கருதியிருந்தார். தற்போது அவரின் நீண்ட நாள் வேண்டுகோளை டிரம்ப் நிறைவேற்றியுள்ளார். ஜெனரல் ஜோன் நிக்கொல்சன் மற்றத் தளபதிகளிலும் பார்க்க வித்தியாசமாகச் செயற்படுகின்றார். எல்லைகளற்ற மருத்துவர்களின் மருத்துவ மனையில் அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சால் இறந்தவர்களின் குடும்பத்தினரை தனது மனைவியுடன் சென்று சந்தித்து மன்னிப்புக் கோரி ஆறுதல் கூறினார். ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களை ஒழிப்பது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என அவர்களை நம்பவும் வைத்தார். தனது உணர்ச்சிகளைக் கொட்டிக் குவித்து அந்தச் சந்திப்பை மிகவும் உணர்வுபூர்வமானதாகவும் நடக்க வைத்தார். கொல்லப்பட்ட ஒருவருக்கு ஆறாயிரம் டொலர்களும் காயப்பட்ட ஒருவருக்கு மூவாயிரம் டொலர்களும் அமெரிக்காவால் கொடுக்கப்பட்டு ஒரு மோசமான போர்க்குற்றம் மூடி மறைக்கப்பட்டது.

பாக்கிஸ்த்தான் இரட்டை வேடம்
பாக்கிஸ்த்தான் இரட்டை வேடம் என நம்பும் டிரம்ப்
ஆப்கானிஸ்த்தான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு உதவிகள் செய்து கொண்டே ஆப்கான் தீவிரவாதிகளுக்கும் பாக்கிஸ்த்தான் உதவி வருகின்றது என டிரம்ப் உறுதியாக நம்புகின்றார். பாக்கிஸ்த்தான் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துகின்றார். பாக்கிஸ்த்தானின் நிலைப்பாடு என்று சொல்லும் போது பாக்கிஸ்த்தானில் பல தரப்புக்கள் உண்டு. பாக்கிஸ்தானில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பாக்கிஸ்த்தான் படைத்துறை, பாக்கிஸ்த்தானிய உளவுத்துறைம் ஆகியவை மட்டுமல்ல பாக்கிஸ்த்தானில் தமக்கென நிலப்பரப்புக்களை வைத்திருக்கும் பல்வேறுபட்ட தீவிரவாத அமைப்புக்கள் ஆகியவையே அவையாகும். 2017-08-30-ம் திகதி பாக்கிஸ்த்தானுக்கு 255மில்லியன் டொலர்கள் படைத்துறை உதவியை வழங்க முன்வந்த அமெரிக்கா அதற்கான நிபந்தனைகளையையும் முன்வைத்தது. ஆப்கானிஸ்த்தானுக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே முக்கியமான நிபந்தனையாகும். 2002-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு 33பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. பாக்கிஸ்த்தான் தலிபானுக்கும் ஹக்கானிக்கும் வழங்கும் உதவிகள் அண்மைக்காலங்களாக அமெரிக்காவை கடும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதனால் 2017 ஓகஸ்ட் மாத இறுதியில் பாக்கிஸ்த்தான் தீவிரவாத அமைப்புக்களுக்குச் செய்யும் உதவிகள் அமெரிக்காவை அதன் பொறுமையின் எல்லைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர். ஆனால் அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு உதவி வழங்குவதும் எச்சரிக்கை விடுப்பதும் ஒரு தொடர்கதையாக இருக்கின்றது. 2011-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானுக்குப் பயணம் செய்த அப்போதைய வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் உங்கள் பின்வளவில் பாம்பை வைத்துக் கொண்டு அது உங்கள் அயலவரைக் கடிக்காது என எதிர்பார்க்காதீர்கள் என்றார்.

ஆப்கான் மக்களுடன் ஒத்துழைப்பு
ஆப்கானிஸ்த்தானின் அரசியலமைப்பில் 14 இனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி ஓர் அரசை உருவாக்குவது மிகவும் சிரமமான ஒன்று என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இனமாக பஷ்த்துனியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மொத்த மக்கள் தொகையில் 42 விழுக்காட்டிலும் அதிகமாகும். ஆப்கானிஸ்த்தானில் இருந்து இந்தியாவிற்கு சென்று குடியேறிய பஸ்த்துனியர்களே இந்தி திரைப்படவுலகில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்.

தலை சாயாத தலிபான்
16 ஆண்டுகளாக நோட்டோப் படையினர் உலகின் தலைசிறந்த விமானங்கள் மூலம் பல விதமான குண்டுகளை வீசியும் தரைவழிப் படைநகர்வுகளை தலைசிறந்த கவச வண்டிகள் துணையுடன் மேற்கொண்டும் தலிபான் அழிக்கப்படாமல் இருக்கின்றது. 2001-ம் ஆண்டு ஒக்டோபரில் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைகள் தலிபானினதும் அல் கெய்தாவினதும் பல நிலைகளை தாக்கி அழித்து அவற்றைத் தலைநகர் காபூலில் இருந்து விரட்டின. மூன்று மாதங்களுக்குள் ஒரு புதிய அரசு பல படைக்கலன்கள் ஏந்திய குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. ஒசாமா பின்லாடனைப் பிடிப்பது முக்கிய பணியாகியது. அதற்காக அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 2001 டிசம்பரில் 2500 ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதியில் அது 9700 ஆக உயர்ந்தது. 2004-ம் ஆண்டு தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலிபானால் பாடசாலை செல்லத் தடை செய்யப்பட்ட பெண்கள் பல இலட்சம் பேர் பாடசாலைக்குத் திரும்பினர். பல தலிபான்கள் பாக்கிஸ்த்தானில் புகலிடம் தேடிக்கொண்டனர். அங்கிருந்து தமது தாக்குதலகளை நேட்டோப் படையினர் மீது தொடுத்தனர். அமெரிக்கப் படையினரி எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்தது. ஆப்கானிஸ்த்தானின் முழுப்பாதுகாப்பையும் நேட்டோப்படையினர் 2006-ம் ஆண்டு பொறுப்பேற்றனர். அமெரிக்கப்படை 30,000 ஆக உயர்ந்தது. 2008-ம் ஆண்டு நேட்டோவின் கூட்டுப் படைத்தளபதி அட்மிரல் மைக் முலன் நாங்கள் வெற்றி பெறவில்லை என அறிவித்தார். போராளிக் குழுக்களைப் பொறுத்தவரை தோற்கடிக்கப்படாமல் இருப்பது பெரு வெற்றி என்ற ஹென்றி கிஸ்ஸிங்கரின் கருத்தை இங்கு குறிப்பிட வேண்டும். 2009-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பராக் ஒபாமா தனது கொள்கை தலிபான்களைத் தோற்கடிப்பதல்ல ஆப்கான் மக்களைப் பாதுகாப்பதே என்றார். அவர் மேலும் படைகளை அங்கு அனுப்பினார். 2010-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆப்கானில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாகியது. 2011 மார்ச் மாதம் பின் லாடன் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கொல்லப்பட்டார். தலிபான்கள் நேட்டோப் படைகளை விட்டு ஆப்கான் அரச படைகள் மீது தாக்குதல் நடத்தினர். ஒபாமா தனது படைகளை விலக்கும் போது தாம் ஆப்கானைக் கைப்பற்றும் நோக்குடனேயே அவர்கள் அதை மேற்கொண்டனர். இதனால் ஒபாமா முழுமையாக படைகளை ஆப்கானில் இருந்து வெளியேற்றும் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தில் இருந்து 8400 ஆகக் குறைக்கப்பட்டது. 2017 ஜனவரி ஆட்சிக்கு வந்த டிரம்ப் ஆப்கான் அரச படையினருக்கு பயிற்ச்சி கொடுக்கவும் பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்களைச் செய்யவும் என மேலதிகமாக 4000 படையினரை அனுப்பவிருப்பதாக 2017 ஓகஸ்ட்டில் முடிவெடுத்தார். படைகளை விலக்காமல் மேலும் படையினரை அனுப்புவது அமெரிக்காவின் தோல்வியை ஒத்தி வைப்பதாகும் என சில படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ் நாங்கள் வெல்ல முடியாது அதே வேளை தலிபானை வெல்ல விடமாட்டோம் என்றார்.

ஆப்கானும் சிரியா போலாகுமா?
இரசியாவும் ஈரானும் சிரியாவிலும் ஈராக்கிலும் தலையிட்டது போல் ஆப்கானிஸ்த்தானில் தலையிட வாய்ப்புக்கள் உண்டு. அது அந்த இரு நாடுகளில் செய்தது போல வெளிப்படையான தலையீடாக இல்லாமல் மறைமுகத் தலையீடாக இருக்கும். ஏற்கனவே இரசியா இரகசியமாக தலிபான்களுக்கு படைக்கலன்கள் வழங்குகின்றது என நம்பப்படுகின்றது. தனது நவீன படைக்கலன்களை சிரியாவில் பரீட்சித்துப் பார்த்த இரசியாவிற்கு இன்னும் ஒரு வித்தியாசமான பரீட்சார்த்தக் களமாக ஆப்கான் இருக்கின்றது. தனது படையினருக்கு தொடர்ச்சியான களமுனைப் பயிற்ச்சி வழங்கிக் கொண்டிருக்க அமெரிக்கா விரும்புகின்றது. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஆப்கான் மக்களுக்கு இப்போது விமோசனம் இல்லை.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...