Monday, 29 May 2017

அமெரிக்க முதலாளித்துவம் டிரம்பை பதவியில் இருந்து அகற்றுமா?

அமெரிக்க அரசு என்பது நிர்வாகத் துறையான வெள்ளை மாளிகையும், சட்டவாக்கற்துறையான மக்களவையையும் மூதவையையும் கொண்ட பாராளமன்றமும், நீதித்துறையும் என வெளியில் காட்டிக் கொள்ளப் படுகின்றது. அமெரிக்க அரசு என்பது அதன் அதிபரும் பராளமன்றமும் மட்டுமல்ல. அதன் படைத்துறை, பல்வேறு உளவுத் துறைகள் மட்டுமல்ல. அமெரிக்க அரசைப் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் முதளாளித்துவக் கட்டமைப்பு அமெரிக்க அரசில் உச்ச வலிமை மிக்க ஒன்றாகும். அமெரிக்க முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாப்பதும், முதலாளிகளுக்கிடையிலான போட்டிகளில் நடு நிலை வகிப்பதும் போட்டி சீராக நடப்பதை உறுதி செய்வதும் அமெரிக்க அதிபர், பாராளமன்றம், படைத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் முதன்மைக் கடமைகளாகும்.
வலிமை மிக்க அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அரசு
அமெரிக்க அதிபர், பாராளமன்றம், நீதித் துறை ஆகிய மூன்றும் அமெரிக்க அரசமைப்புக் கட்டுபட்டு இயங்குகின்றது. வை மூன்றும் Checks and balances என்கின்ற சரிபார்த்தலும் சமப்படுத்தலும் என்ற முறைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்காவது பிரிவான அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அரசு (The U.S. National Security State) அரசமைப்புக்கு அப்பால் நின்று செயற்படுகின்றது. 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடந்த கொரியப் போருக்குப் பின்னர் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அரசு வலுப்பெற்றது. இது படைத்துறையையும் பல்வேறு அமெரிக்க உளவுத் துறைகளையும் கொண்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை படைத்துறை மயமாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
அகற்றப்பட்ட ஜோன் எஃப் கெனடி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோன் எஃப் கென்னடி அமெரிக்க முதலாளித்துவக் கட்டமைப்பின் சொல்லுக்குக் கட்டுபடாத வகையில் அமெரிக்க மக்கள் மத்தியிலும் பெருமளவு உலக மக்கள் மத்தியிலும் அவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். கியூபாவில் இரசியா நிறுத்தியுள்ள அணுக்குண்டு தாங்கிய ஏவுகணைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு இரசியா மீது முன்கூட்டியே அணுக்குண்டுகளை வீசிப் போர் தொடுக்கும் படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்ட போது அவர் அதற்கு மறுத்துவிட்டான் என சில சதிக்கோட்பாடுகள் சொல்கின்றன. இரசியாவை அழிப்பதன் மூலம் உலகில் பொதுவூடமைவாதம் பரவுவதை ஒழித்துக் கட்டுவதே அப்போது உலக முதலாளிகளின் நோக்கமாக இருந்தது. கியூப ஏவுகணை நெருக்கடியை ஜோன் எஃப் கென்னடி படை நகர்வுகள் மூலமும் அரசுறவியல் பேச்சு வார்த்தை மூலமும் சில விட்டுக் கொடுப்புக்கள் மூலமும் தீர்த்தார். உலகில் பொதுவுடமையை அவர் ஒழித்துக் கட்டாமல் போனது அவரின் உயிருக்கு உலை வைத்ததா?
விரட்டப்பட்ட ரிச்சர்ட் நிக்சன்
அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர் நிகசன் இரசியாவுடன் பல அரசுறவியல் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தொடர்பாக பல இரசியாவுடன் உடனபடிக்கை செய்து கொண்டார். SALT 1 என சுருக்கமாக அழைக்கப்படும் கேந்திரோபாய படைக்கலன்களை மட்டுப்படுத்தும் உடன்படிக்கையைச் செய்து கொண்டார். சீனாவுடன் ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் உடன்படிக்கையைச் செய்து கொண்டார். உலகில் பொதுவுடமைவாதத்தை ஒழிக்க வேண்டிய பதவியில் உள்ளவர் பொதுவுடமை நாடுகளுடன் உடன்படிக்கை செய்து கொள்வதை உலக முதலாளிகள் வெறுத்தனர். அதனால் அவரது பழைய முறைகேடுகள் தோண்டி எடுக்கப்பட்டு அவர் பதவியில் இருந்து விரட்டப்படார். அவர் பதவியில் இருந்து விலக்கப்படக் காரணமாக இருந்த எதிர்கட்சியின் பணிமனையில் செய்த திருட்டு தொடர்பான தகவல்களை வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகை வேண்டுமென்றே திரித்துக் கூறியிருந்தது என சதிக்கோட்பாடுகள் பின்னர் தெரிவித்தன. வியட்னாம் போரை விரும்பாத நிக்ஸன் இரண்டாம் தடவையும் அமெரிக்க அதிபராக வருவதை முதலாளித்துவக் கட்டமைப்பு விரும்பியிருக்கவில்லை. வியட்னாம் போரை கொடூரமாக நடத்தினார் என்ற பழி அவர் மீது இலகுவாகச் சுமத்தப்பட்டது. 
களத்தில் இறங்கிய பெருமுதலாளி டிரம்ப்
2012-ம் ஆண்டு பராக் ஒபாமா இரண்டாவது தடவை அமெரிக்க அதிபராக மக்களாட்சிக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற போது இனி குடியரசுக் கட்சி அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என பல அரசறிவியலாளர்கள் கருத்து வெளியிட்டனர். குடியரசுக் கட்சி வரிக் குறைப்பும் சமுகநலன் செலவுக் குறைப்பும் தனது கொள்கைகளில் முக்கியமாகக் கொண்டது. மக்களாட்சிக் கட்சி செல்வந்தர்களிடம் வரி அறவிட்டு மக்கள் நலனுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையது. இரண்டும் முதலாளித்துவக் கட்டமைப்பை வேறு வேறு விதத்தில் பாதுகாக்கும் கொள்கைகள் கொண்டவை. தொழிலாளர்கள் மீது கரிசனை காட்டிக் கொண்டே முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பது மக்களாட்சிக் கட்சியின் கொள்கையாகும். இதற்கு அவர்கள் தாராண்மைவாதம் என்ற பெயர் சூட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியினர் முதலாளித்துவ சூழலில் போட்டியில் வெல்லுபவன் வெல்லட்டும் மற்றவர்களின் உழைப்பு சுரண்டப்படட்டும் என்ற கொள்கையுடையவர்கள். ஆனால் 2016 நவம்பரில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற டொனால்ட் டிரம்ப் குடிவரவுக் கொள்கைக்கு எதிரான கொள்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார். மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழிலாளர்கள் குடியேறுகையில் அமெரிக்க முதலாளிகள் அவர்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி தமது இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். பாதிக்கப்படுவது அமெரிக்கத் தொழிலாளர்களே. டிரம்பின் குடிவரவுக்கு எதிரான கொள்கை முதலாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. டிரம்ப் நேட்டோ காலாவதியாகப் போய்விட்ட ஒன்று என்றார். இரசியாவுடன் ஒத்துழைக்கலாம். விளடிமீர் புட்டீன் நல்ல மனிசன் என்றார். இது அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை இரசியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளுமா என்ற அச்சத்தை உருவாக்கியது. அத்துடன் இரசியாவுடன் செய்யப்படும் சமரசம் அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நாடுகளுக்கும் அமெரிக்கப் படைக்கல உற்பத்தியாளர்கள் செய்யும் விற்பனையை பெருமளவு பாதிக்கும் என்ற அச்சத்தை மேலோங்கச் செய்தது. வழமையாக அமெரிக்கப் பெரு முதலாளிகளின் சார்பில் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவர். ஆனால் பெரு முதலாளிகளில் ஒருவரான டிரம்ப் தானே தேர்தல் களத்தில் இறங்கிப் போட்டியிட்டு வென்றார். இவர் மற்ற முதலாளிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளார். இதனால் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒருவராகியுள்ளார்.

டிரம்ப்பின் பிரச்சனைகளின் பின்னணி
2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற போது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. பின்னர் சலி கேற்றை தனது குடிவரவுக் கொள்கைக்கு நீதிமன்றத்தில் ஆதரவு வழங்க மறுத்ததால் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். அதிபர் பதவிக் கையளிப்பின் போது மைக்கேல் ஃபிளைன் இரசியாவுடன் தொடர்பு வைத்திருந்தது மட்டுமல்ல துருக்கியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு துருக்கிக்காக அமெரிக்க பாராளமன்றத்தில் பரப்புரையாளராகச் செயற்பட்டார் என்பதையும் ஒபாமா டிரம்ப்பிடம் தெரிவித்திருதார்.

மருமகனே மருமகனே போ போ!
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதும் அவரது மருமகன் Jared Kushner வாஷிங்டனுக்கான இரசியத்தூதுவரிடம் மொஸ்க்கோவிற்கும் தமக்கும் இடையில் ஒரு தனிப்பட்ட இரகசியமான தொடர்பாடல் முறைமையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் தகவலை அந்தத் தூதுவர் மொஸ்க்கோவில் உள்ள வெளியுறவுத்துறைக்கு தெரிவித்தார். அந்தத் தொடர்பாடல் அமெரிக்க உளவுத்துறையால் ஒற்றுக் கேட்கப்பட்டுள்ளது. மரபு வழி யூதரான Jared Kushner செய்தது ஒரு தேசத் துரோகக் குற்றமாகும். டிரம்பிற்கு தற்போது ஆலோசகர்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் பலர் தேர்தலின் போது இரசிய உளவுத்துறையுடன் இணைந்து செயற்பட்டமை இனி ஒன்றன் ஒன்றாக வெளிவரப் போகின்றது. டிரம்ப் விரைவில் தனது மருமகனையும் பதவியில் இருந்து நீக்கலாம். ஏற்கனவெ டிரம்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் ரில்லர்சன் முன்பு தொழில் ரீதியில் இரசியாவுடன் நெருங்கிச் செயற்பட்டவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்ப்பட்டுள்ளது. அவருக்கு இரசிய அரசு விருதும் வழங்கிக் கௌரவித்திருந்தது.

விசாரணையை ஆரம்பித்த FBI
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான உளவுத்துறை FBI என அழைக்கப்படும். இது அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படுகின்றது. அதன் தலைமை இயக்குனரான ஜேம்ஸ் கொமி டிரம்ப் பதவி ஏற்க முன்னரே அவரது தேர்தல் பரப்புரைக்குழுவிற்கும் இரசிய உளவுத் துறைக்கும் தொடர்புகள் இருந்ததா என்பதைப் பற்றி துப்பறியத் தொடங்கினார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்கும் வைபவத்தில் FBIஇன் தலைமை இயக்குன ஜேம்ஸ் கொமியை டிரம்ப் கட்டித்தழுவ முயன்றார். அது மரபுக்கு மாறானது என ஜேம்ஸ் கொமி விலகிக் கொண்டார். உளவுத் துறையில் மட்டுமல்ல உளத்துறையிலும் வல்லவரான ஜேம்ஸ் கொமி டிரம்பின் மடியில் பாரம் இருப்பதால் தன்னை அவர் தன்பக்கம் இழுக்க முயல்கின்றான் என உணர்ந்து கொண்டார். மைக்கேல் ஃபிளைன் மீதான குற்றச்சாட்டுக்கள் பல ஊடகங்களில் அடிபட டிரம்ப் மைக்கேல் ஃபிளைனை பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்ற்கு. பின்னர் டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் தொடர்பு கொண்டு மைக்கேல் ஃபிளைன் அருமையான மனிதர் அவரை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு ஜேம்ஸ் கொமி நீங்கள் நேரடியாக என்னுடன் தொடர்பு கொள்ளக் கூடாது உரிய வகையில் நீதித் துறை மூலமாக என்னை அணுக வேண்டும் என்றார். பின்னர் ஜேம்ஸ் கொமியை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு அழைத்த தான் விசாரணக்கு உட்படுத்தப்படவில்லை என பகிரங்கமாக அறிக்கை ஒன்றை விடும்படி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் தனக்கு விசுவாசமாக நடப்பதாக ஒரு உறுதிமொழி வழங்கும் படியும் டிரம்ப் ஜேம்ஸ் கொமியைக் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜேம்ஸ் கொமி டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களினதும் செயற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை நீதித்துறையிடம் கோரினார். இது டிரம்ப்பிற்கு தெரிய வந்தது. டிரம்ப் வழமையான செயற்பாடுகளுக்கு மாறாக ஜேம்ஸ் கொமியைப் பதவியில் இருந்து நீக்கினார்.

ஆப்பு வைக்கப் போகும் குறிப்பேடுகள்
அமெரிக்க அதிகாரிகள் அதிபருடன் செய்யும் கலந்துரையாடல்களை உடனுக்கு உடன் தங்கள் குறிப்பேட்டில் பதிந்து கொள்ள வேண்டும். அந்தக் குறிப்பேட்டில் உள்ளவைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு. அவை நீதிமன்றில் சாட்சியங்களாகச் சமர்ப்பிக்கப்படலாம். டிரம்ப் ஜேம்ஸ் கொமியை பதவி நீக்கம் செய்த பின்னர் டிரம்ப்பிற்கு எதிராகப் பல கருத்துக்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. டிரம்ப் தான் துணைச் சட்டமா அதிபர் ரொட் ரொசென்ரைனின் பரிந்துரையின் பேரில் ஜேம்ஸ் கொமியைப் பதவி நீக்கம் செய்தேன் என்றார். ஜேம்ஸ் கொமிய ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரத்தில் அவருக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் செயற்பட்டார் என்பதே ரொட் ரொசென்ரைன் கொகியிற்கு எதிராகச் சொன்ன குற்றச் சாட்டாகும். டிரம்ப் தன்னைப் பாதுகாக்க கொமியைப் பலியிட்டார் என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த அழுத்தங்களாள் டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களுக்கும் எதிரான குற்றச் சாட்டை விசாரிக்க ரொட் ரொசென்ரைன் ரொபேர்ட் முல்லர் என்ற முன்னாள் FBI இயக்கினரை சிறப்பு விசாரணையாளராக நியமித்துள்ளார்.

அதிகரிக்கும் நிகழ்தகவு
எதிர்க் கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் டிரம்பைப் பதவியில் இருந்து விலக்குவது பற்றி பரவலாகப் பேசத் தொடங்கிவிட்டனர். டிரம்பின் ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியின் புளோரிடாவிற்கான மக்களவை உறுப்பினர் Carlos Curbelo  டிரம்ப்பைப் பதவியில் இருந்து விலக்குவது பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இவர் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஒருவர். டிரம்ப் அமெரிக்கா G-7 நாடுகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை இரத்துச் செய்தமையால் ஆத்திரமடைந்துள்ளார். டிரம்ப்பை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என முதல் களத்தில் இறங்கியுள்ள பாராளமன்ற உறுப்பினர் இவராகும். இவரை அடுத்து மிக்சிகன் தொகுதி உறுப்பினரும் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப்பை பதவியில் இருந்து விலக்குவது பற்றிய நிகழ்தகவை பந்தய நிபுணர்கள் உயர்த்தியும் உள்ளனர். 

பதவி விலக்கப்படுவது எப்போ?
சிறப்பு விசாரணையாளர் ரொபேர்ட் முல்லர் கண்டிப்பும் நேர்மையும் நிறைந்தவர். ஜேம்ஸ் கொமியும் இவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று செயற்பட்டவர்கள். அமெரிக்காவின் பல்வேறு அதிகாரிகள் போல் இவர்களும் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அரசைப் (The U.S. National Security State) பாதுகாக்க பெரிதும் விரும்புபவர்கள். ரொபேர்ட் முல்லர் இரசிய உளவுத் துறைக்கும் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவிற்கும் இடையில் இருந்த தொடர்பை நிரூபிப்பது கடினம். ஆனால் டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் நடந்து கொண்டவை பற்றி நிரூபிப்பது இலகு. நீதித்துறையின் ஓர் பிரிவான FBIஇன் தலைமை இயக்குனருக்கு எதிரான செயற்பாடு நீதித்துறையின் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தாகும். இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். அதை வைத்து டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு அவசியம். அந்த ஆதரவு எவ்வளவு விரைவாகக் கிடைக்கும் என இப்போது சொல்ல முடியாமல் இருக்கின்றது.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...