Monday, 1 May 2017

ஈரானின் நிலையும் தலைமை மாற்றங்களும்

சிரியாவில் இரசியாவுடன் இணைந்து உலக வல்லரசான அமெரிக்க எதிர்ப்பையும் பிராந்திய வல்லரசுகளான சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தனது ஆதரவாளரனா பஷார் அல் அசாத்தின் ஆட்சியை ஈரான் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அதன் தலைமையில் பெரும் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி ஈரான் புதிய அதிபரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அது வழமையாக நடைபெறுவது. ஆனால் ஈரானின் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி கமெய்னி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்று நோய் எனவும் செய்திகள் வெளிவருகின்றன. அவருக்கு தற்போது வயது 77. இவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ வாய்ப்பு உள்ளதாக 2016-ம் ஆண்டு பிரெஞ்சு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிற்கு எதிரான நிலை அதிகாரம் தரும்
தற்போதைய உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெய்னி 1989-ம் ஆண்டில் இருந்து பதவியில் இருக்கின்றார். உச்சத்தலைவராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் கால வரையறை இன்றிப் பதவியில் தொடரலாம். அமெரிக்காவிற்கு அழிவு வரட்டும் என்பதே ஈரானின் ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்லும் வாசகமாகும். இஸ்ரேல் என ஒரு நாடு இருக்கக் கூடாது என பகிரங்கமாகவும் உறுதியாகவும் சொல்லுபவர்கள் ஈரானிய ஆட்சியாளர்கள் மட்டுமே. அமெரிக்கக் கடற்படைக்கலன்களுக்கு பாரசீக வளைகுடாவிலும் ஏடன் வளைகுடாவிலும் அடிக்கடி ஈரானியப் போர்க்கப்பல்கள் ட் தொந்தரவு கொடுப்பதாக அமெரிக்கக் கடற்படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் திகதி திங்கட்கிழமை அமெரிக்க நாசகாரிக் கப்பலான யூ.எஸ்.எஸ் மஹானுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவகையில் அதை ஈரானியக் கடற்படைப் படகுகள் அண்மித்தன. மஹான் கொடுத்த சமிக்ஞைகளையும் பொருட்படுத்தாமல் ஈரானியக் கப்பல்கள் முன்னேறியபோது மஹான் எச்சரிக்கை வேட்டையும் வெடிக்கச் செய்தது. அதையும் மீறி ஈரானியக் கப்பல் நகர்ந்த போது மஹான் தனது பாதையை மாற்றிக் கொண்டது. இந்த மாதிரியான சம்பவங்கள் 2016-ம் ஆண்டு மட்டும் 35 தடவைகள் நடந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மூன்று தூண்கள்
மேற்காசியாவையும் வட ஆபிரிக்காவையும் பொறுத்தவரை சவுதி அரேபியாவிற்கு அடுத்ததாக ஈரான் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். அப்பிராந்தியத்தில் 2016-ம் ஆண்டு அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி 412.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எகிப்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். ஈரானின் மக்கள் தொகை 78.8மில்லியனாகும். மிள் எழுச்சியுறக்கூடியதும் தாங்குதறன் கொண்டதுமான பொருளாதாரம், தொழில்நுட்ப விஞான வளர்ச்சி, கலாச்சார மேம்பாடு ஆகிய மூன்றும் முக்கிய தூண்களாகக் கொண்டு ஈரானை அதன் மதவாத ஆட்சியாளர்கள் வழிநடத்துகின்றார்கள். ஈரானியப் பொருளாதாரம் ஈரான் மீதான மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் பெரிதளவில் சீரடையவில்லை. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியின் பொருளாதாரச் சீர்திருத்தம் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என பழமைவாதிகள் வாதிடுகின்றனர். 

ஈரானில் உள்ள முக்கிய அதிகார மையங்கள்:
1.
அதிபர்: இவர் மக்களால் நேரடியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார்.
2.
பாராளமன்றம்: 290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தெடுக்கப்படும். ஈரானியப் பாராளமன்றம் Islamic Consultative Assembly என அழைக்கப்படும்.
3.
அறிஞர்கள் சபை: இது மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படும். இதில் 88 உறுப்பினர்கள் உள்ளனர்.
4.
உச்சத் தலைவர்: இவர் அறிஞர் சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தப் பதவிக்கு கால எல்லை இல்லை.
5. அரசமைப்புப் பாதுகாவலர் சபை: இது உச்சத் தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்டது. அறிஞர் சபை, அதிபர் தெரிவிலும் பாராளமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முதலில் அரசமைப்புப் பாதுகாவலர் சபையின் அனுமதியைப் பெறவேண்டும்.
6. ஈரானியப் படைத்துறை


இவற்றில் உச்சத் தலைவர் பதவியே அதிக அதிகாரம் கொண்டதாகும். ஈரானியப் படைத்துறையின் தளபதி உச்சத் தலைவரே. அவரே நீதித் துறையில் உயர் பதவிகளில் இருப்போரையும் அரச ஊடகத் துறைக்குப் பொறுப்பானவரையும் நியமிக்கின்றார். உச்சத் தலைவர் பாராளமன்றம் இயற்ற முயலும் சட்டங்களையும் நிறுத்த முடியும்.


ஈரானிய அதிபர் தேர்தல்
ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேவையான தகமைகள்:
1. ஈரானில் பிறந்த ஈரானியக் குடிமகனாக இருக்க வேண்டும்
2. ஈரானிய அரச மதமான இஸ்லாம் மீது இறைவன் மீதும் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும்.
3. ஈரானிய அரசியல்யாப்பிற்கு விசுவாசமுள்ளவராக இருக்க வேண்டும்.
4. 21 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
5. அரசமைப்புப் பாதுகாவலர் சபையின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.

2017 மே மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட 36பேர் விண்ணப்பித்திருந்தனர். 2017 ஏப்ரல் 20-ம் திகதி அரசமைப்புப் பாதுகாவலர் சபை அதிபர் தேர்தலுக்கான ஆறு வேட்பாளர்களை அங்கிகரித்தது:
1. ஹசன் ரௌஹானி(தற்போதைய அதிபர்)
2. எஷாக் ஜஹங்கிரி (தற்போதைய துணை அதிபர்),
3. எப்ராஹிம் ரைசி - Raisi (ஈரானிய முக்கிய வழிபாட்டிட நிர்வாகத் தலைவர்)
4. மொஹமட் பகர் கலிபாஃபா - Qalibaf (தெஹ்ரான் நகரபிதா),
5. மஹ்முட் அஹமடினெஜட்(முன்னாள் அதிபர்),
6. ஹமிட் பக்கை (முன்னாள் துணை அதிபர்)
மக்களின் நேரடியான வாக்களிப்பின் மூலம் அதிபர் தெரிவு செய்யப்படுவர். இவர்களது பரப்புரை விவாதம் போன்றவற்றை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்யும்.

தீவிரப் போக்காளர்களை விரும்பும் உச்சத் தலைவர்
வேட்பாளர்களை தீவிரப்போக்குக் கொண்டவர்கள், பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என வகைப்படுத்துவது வழமையாகும். தீவிரப் போக்குக் கொண்டவர்கள் சார்பில் மூவர் நிறுத்தப்பட்டமையும் அவர்களுல் ஒருவராக  பிரபலமில்லாத எப்ராஹிம் ரைசி இருப்பதும் அவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையின் வெளிப்பாடு என சில நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் தலைமை வழக்குத் தொடுநனரான இவர் உச்சத் தலைவர் அலி கமெய்னிக்கு விருப்பமான வேட்பாளராவார். உச்சத் தலைவரின் முன்னாள் மாணாக்கருமாவார். எப்ராஹிம் ரைசியை உச்சத் தலைவர் கமெய்னி ஈரானிய முக்கிய வழிபாட்டிடத்தின் தலைமை நிர்வாகி ஆக்கி அவரை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். ஆனால் ரைசிக்கு அரசியல் அனுபவம் இல்லை. சீர்திருத்தத்தை பெரிதும் விரும்பும் மத்தியதர வர்க்கத்தினரின் வாக்குகளை இவர் பெறுவதற்குப் பெரிதும் உழைக்க வேண்டும். சில மேற்கு நாட்டு ஊடகங்கள் தேர்தல் முறை கேடுகள் மூலம் ரைசியை வெற்றி பெற வைக்கலாம் என எதிர்வு கூறுகின்றன. தற்போதைய உச்சத் தலைவர் சீர்திருத்தத்தை விரும்பாத பழமைவாதியாகும். ஆனால் கடந்த அதிபர் தேர்தலின் போதும் ஹசன் ரௌஹானி வெற்றி பெறுவதை உச்சத் தலைவர் விரும்பவில்லை. இருந்தும் ரௌஹானி வெற்றி பெற்றார். இம்முறை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும் சீர்திருத்தவாதியான ரௌஹானி, திவிரவாதப் போக்குடையவர்களான எப்ராஹிம் ரைசி, மொஹமட் கலிபாஃப் ஆகிய மூவரில் ஒருவர் வரவே வாய்ப்புக்கள் உண்டு. உச்சத்தலைவர் 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சயீட் ஜலீல் என்ற வேட்பாளர் வெற்றி பெறுவதை விரும்பியதாக மேற்குலக ஊடகங்கள் பரப்புரை செய்தன. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. உச்சத் தலைவர் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என்கின்றது மேற்காசியாவின் பிரபல ஊடகமான அல் மொனிட்டர்.


சீர்திருத்தவாதி ஹசன் ரௌஹானி
சீர்திருத்தவாதியான தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானி மீண்டும் போட்டியிடுகின்றார். 1979-ம் ஆண்டுப் புரட்சியின் பின்னர் பதவியில் இருக்கும் அதிபர் மீண்டும் போட்டியிடும் போது தோல்வியடைவதில்லை. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாக மேற்கு நாடுகள் ஈரான் மீது விதித்த தடையை தொடர் பேச்சு வார்த்தைகள் மூலம் நிறுத்தி வெறுமையாக இருந்த  ஈரானியத் திறைச் சேரியில் மீண்டும் நிதியால் நிரப்பியவர் ரௌஹானி. ரௌஹானியை ஈரானில் செல்வாக்கு மிக்கவராக்குவதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் உடன்பாட்டில் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட்ட போது எரிபொருள் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.


அடுத்த உச்சத் தலைவர்
முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா கொமெய்னி 1989இல் காலமான போது அவரது மகன் அவரது இடத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப் பட்டது. மாறாக சிறந்த இஸ்லாமிய மார்க்கக் கல்விமானாகிய தற்போதைய கமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரானின் உள்நாட்டு அரசியல் பல சிக்கல் மிகுந்த விட்டுக் கொடுப்புகளும் உடன்பாடுகளும் நிறைந்தவை. 1979இல் செய்த மதவாதப் புரட்சி அழிந்து போகாமல் இருப்பதில் மதகுருமார் அதிக கவனத்துடன் இருக்கின்றனர். மக்கள் விரோதச் செயற்பாடுகளை அவர்கள் எப்போதும் தடுக்கின்றனர். ஈரானில் அயத்துல்லா என்பது ஒரு பட்டமாகும். அதன் பொருள் இறைவரின் அடையாளம் என்பதாகும். இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருவரே ஈரானின் உச்சத்தலைவராக முடியும். இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் குரான் பற்றியும் உயர் அறிவுள்ளவர்கள் அவர்கள். தற்போது அறிஞர் சபையின் உறுப்பினரான சாதிக் அர்தெர்ஷிர் லரிஜானியும் (Sadeq Ardeshir Larijani) அதே சபையின் முதன்மைத் துணைத் தலைவருமான மஹ்மூக் ஹஷெமி ஷஹ்ரௌத்தியும் (Mahmoud Hashemi Shahroudi) அடுத்த உச்சத் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிகின்றது. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியும் அடுத்த உச்சத் தலைவராக வரலாம் எனவும் சொல்லப்படுகின்றது. லரிஜானி தற்போது தீர்ப்பாயச் சபையின் தலைவராகவும் செயற்படுகின்றார். ஷஹ்ரௌத்தி இறைவனால் அனுப்பப்பட்டவர் என பல மதகுருமார் நம்புகின்றனர்.

அமெரிக்காவுடன் போர் நடக்குமா?
ஈரானைப் பற்றியும் அதனுடன் செய்த யூரேனியப் பதப்படுத்தல் உடன்பாடு பற்றியும் தனது தேர்தல் பரப்புரையின் போது கடுமையாக விமர்ச்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான ஒரு போரையோ அல்லது தாக்குதலையோ தொடுக்க மாட்டார். அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களுக்கு ஈரான் கொடுக்கும் தொந்தரவுகளை ஒபாமா காலத்தில் பெரிது படுத்தாதது போல் டிரம்பும் செய்வார் என எதிர்பார்க்கலாம். ஈரானுடனான போர் ஒரு எரிபொருள் விலையை அதிகரிக்கும் அது உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதுடன் இரசியாவிற்கும் புட்டீனுக்கும் வலுவூட்டுவதாக அமையும். ஈரான் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை மீறாதவரை அதன் மீது யாரும் தாக்குதல் தொடுக்க மாட்டார்கள்.


ஈரானில் உள்ள மதகுருமார்களின் நாட்டுப்பற்றும் மதப் பற்றும் மிகவும் உறுதியானது. ஈரானிய மக்கள் சிறந்த விவேகிகள். வரலாற்றுப் பெருமை மிக்க இனத்தவர்கள். உன்னத கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். அவர்கள். பல ஆயிரம் ஆண்டுகள் தமது நாட்டை பல சவால்களுக்கு நடுவில் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த நாட்டை யாராலும் அசைக்க முடியாது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...