பிந்திக் கிடைத்த செய்திகளின்படி அமெரிக்காவின் தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பாராளமன்றத்தின் அனுமதி பெறாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெறாமல் இறைமையுள்ள ஒரு நாடான சிரியாவின் மீது அமெரிக்கா மத்திய தரைக் கடலில் நிலை கொண்டுள்ள USS Ross, USS Porter ஆகிய வாழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல்களில் இருந்து 59 tomahawk ஏவுகணைகளை வீசியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த காரணம் சிரிய மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுதை தடுப்பது அல்ல. தடை செய்யப்பட்ட வேதியல் படைக்கலன்களின் பரவலாக்கம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே அவர் கூறினார்.
இலக்குகள்
சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள அல் ஷயரட் விமானத்தளத்தின் மீதே அமெரிக்காவின் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 6 பேர் கொல்லப்பட்டத்தாக சிரியா அறிவித்துள்ளது.சிரியப் போர்விமானங்கள், அவற்றின் பாதுகாப்பான நிறுத்தும் இடங்கள், கதுவிகள் (radar equipment), படைக்கல சேமிப்பங்கள், விமான எரிபொருள் சேமிப்பு நிலையங்கள், வான் பாதுகாப்பு முறைமைகள் ஆகியவற்றை இலக்கு வைத்தே ஏவுகணைகள் வீசப்பட்டன.
இழப்புத் தொடர்பான முரண்பட்ட அறிக்கைகள்
இரசியாவின் அறிக்கையின் படி ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு: "extremely low". பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த ஆறு விமானங்கள் சேதமடைந்தன என்கின்றது இரசியா.
சிரியாவின் அறிக்கையின் படி: "big material losses". தாக்குதல் நடத்துவது பற்றி இரசியாவிற்கு அமெரிக்கா கொடுத்த தகவல் சிரியாவிற்கு பரிமாறப்பட்டது. அதனால் அங்கிருந்து பல விமானங்கள் தப்பிச் சென்று விட்டன. பழுதடைந்த விமானங்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. சிரிய வான் படைக்கு சிறிய அளவிலான ஆளணி இழப்பு ஏற்பட்டதற்கும் இதுவே காரணமாகும். தாக்குதலுக்கு உள்ளான அல் ஷயரத் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று மட்டுமே பயன்படுத்தப்பட முடியாதவகையில் சேதமடைந்துள்ளது.
இரசிய நகர்வுகள்
இரசியா தனது கடற்படைக் கப்பல்களை சிரியாவை நோக்கி நகர்த்தியுள்ளது. இரசியாவின் frigate வகையைச் சார்ந்த The Admiral Grigorevich என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கிக் கப்பல் (a cruise missile-carrying) என்னும் கப்பலே சிரியாவின் டார்ட்டஸ் துறைமுகம் சென்றுள்ளது. மேலும் தாக்குதல்கள் நடக்காமல் இருக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் சிரியாவில் நிறுத்தப்படும் எனச் சொல்லியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரசியப் பிரதிநிதி சிரியாவில் அமெரிக்கா செய்த தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கின்றது எனவும் தாக்குதல் நடந்தவுடன் ஐ எஸ் அமைப்பினர் சிரிய அரச படைகள் மீது தாக்குதல் நடத்தினர் எனவும் குற்றம் சாட்டினார். ஈராக்கிலும் லிபியாவிலும் நீங்கள் அரச படைகளை அழித்ததால் அங்கு பயங்கரவாதிகள் பெருகி உள்ளது போல் சிரியாவிலும் நடக்க வேண்டுமா என அவர் மேற்கு நாடுகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவில் நடந்த வேதியியல் குண்டு வெடிப்புப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதையும் இரசியப் பிரதிநிதி கடுமையாகச் சாடினார்.
முரண் பட்ட தீர்மானங்கள்
சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவித்தமை தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை இணைந்து கொண்டுவந்த தீர்மானத்தை இரசியா ஏற்க மறுத்தது. இரசியா தான் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. அதில் சிரியாவில் விசாரணைக்குச் செல்லவிருக்கும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் போதாது என அமெரிகா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சாட்
Tomahawk ஏவுகணைகள்
Tomahawk ஏவுகணைகள் தரையில் இருந்தும், விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும் நீர்மூழ்கிகளில் இருந்தும் வீசக் கூடிய தொலைதூர ஏவுகணைகளாகும். இவை உறுதியாகப் பாதுகாக்கப்பட்ட தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டவை. இவை ஒலியிலும் குறைந்த வேகத்தில் பாய்பவை என்றாலும் எந்தக் கால நிலையிலும் துல்லியமாக இலக்கைத் தாக்கக் கூடியவை. அமெரிக்க ஏவுகணைகளின் துல்லியத் தாக்குதலை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
கணக்கற்றோர் கொல்லப்பட்டனர்.
பராக் ஒபாமா சிரியா வேதியியல் படைகலன்களைப் பாவித்தால் அது செங்க்கோட்டைத் தாண்டியது போல என பல முடை மிரட்டி இருந்தார். ஆனால் அவரால் செய்ய முடியாமல் போனதை டிரம்ப் செய்து முடித்துள்ளார். சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அடிக்கடி கூறி வந்த மேற்குலக ஊடங்கங்கள் தற்போது அதைப்பற்றிப் பேசுவதில்லை. 2016-ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐந்து முதல் ஆறு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் பல இலட்சக் கணக்கானோர்ர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வந்தன. சிரியப் பிரச்சனை பெருமளவில் தஞ்சக் கோரிக்கையானவர்களை உருவாக்கி பல நாடுகளில் அது குடிவரவுக்கு எதிரான கொள்கைகளாக உருவெடுத்தது. அதனால் கொல்லப்பட்டவர்களின் தொகையை வெளிவிடுவது நிறுத்தப்பட்டது. அந்தக் கொலைகளை நிறுத்தாதவர்கள் இப்போது சரின் குண்டுப் பரவலாக்கத்தை நிறுத்த வேண்டும் எனத் துடிக்கின்றார்கள்.
சட்டபூர்வமானதா?
தனது நடவடிக்கைகான சட்ட பூர்வ அங்கீகாரம் பெறுவதற்கே டிரம்ப் வேதியியல் குண்டுகளின் பரவலாக்கம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றார். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் எனக் கருதுமிடத்து அமெரிக்க அதிபர் ஒரு படை நடவடிக்கைக்கு உத்தரவிடலாம். போர் பிரகடனம் செய்யப்படாத ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது உலக நியமங்களுக்கு விரோதமானது. அதனால் இரசியா அமெரிக்காவின் தாக்குதலைச் சட்ட விரோதமானது என்கின்றது.
சிரியாவின் அறிக்கை
சிரியாவின் அறிக்கை அமெரிக்காவை கடுமையாகச் சாடவில்லை. அமெரிக்க ஏவுகணைத் தாக்க்குதல் கவனமில்லாதது, குறும்பார்வையுடையது, பொறுப்பற்றது என்று மட்டும் சிரியா சொல்லியிருக்கின்றது.சிரியத் தொலைக்காட்சி ஆக்கிரமிக்கும் செயல் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு குந்தகம் விளைவிக்கின்றது என்றும் சொல்லியிருந்தது. ஆனால் இரசியாவின் அறிக்கை கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவுடன் சிரிய வான் வெளியில் அமெரிக்க விமானங்களுக்கும் இரசிய விமானங்களுக்கும் இடையில் தவறுதலான மோதல்களைத் தவிர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த உடன்பாட்டில் இருந்து இரசியா விலகுவதாக அறிவித்துள்ளது.
தவறு விட்ட இரசியா
சிரியாவில் சரின் குண்டுகள் வெடித்ததால் அப்பாவிப் பொதுமக்கள் 80 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அந்த சரின் குண்டுகள் சிரியப் போராளிக்கள் வசமிருந்தவை என்றும் அவை தவறுதலாக வெடித்தவை என்றும் இரசியா தெரிவித்திருந்தது. 2013-ம் ஆண்டு சிரிய அரச படைகள் வீசிய சரின் குண்டுகளால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இரசிய அதிபர் புட்டீன் தடுத்திருந்தார். சிரியாவில் உள்ள தடைசெய்யப்பட்ட வேதியியல் குண்டுகளைத் தான் அகற்றுவதாக உறுதியளித்திருந்தார். சிரியாவில் எந்த ஒரு தரப்பினர் கைகளிலும் தடை செய்யப்பட்ட வேதியியல் குண்டுகள் இல்லாமல் செய்ய இரசியா தவறிவிட்டது.
2013-ம் ஆண்டு இரசியப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருக்கவில்லை. தற்போது லதக்கியாவில் சிரிய விமானப் படைத்தளமும் டார்ட்டஸில் கடற் படைத்தளமும் இரசியா வைத்திருக்கின்றது. ஒரு வல்லரசின் படைகள் நிலை கொண்டுள்ள ஒரு நாட்டில் இன்னொரு வல்லரசு குண்டு வீசுவது ஒரு பிரச்சனைக்கு உரிய நடவட்டிக்கையே. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் இரசியாவிற்கு அறிவித்த பின்னரே தாக்குதல் செய்யப்பட்டன என்றார். இரசியர்கள் எவரும் கொல்லப்படாமல் இருப்பதற்கான எல்லாஅ முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இரசிய அதிபர் புட்டீனின் பேச்சாளர் அமெரிக்கா மேற் கொண்ட ஏவுகணைத் தாக்குத்தல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பெரிதும் பாதிக்கும் என்றார்.
சிரியா மீதான தாக்குதல் சொல்லும் சேதிகள்
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா, யேமன், ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தனது படைத் தளபதிகளுக்கு உத்தரவும் அதிகாரமும் வழங்கியுள்ளார் என்ற செய்தி உறுதிப்படுதப்பட்டுள்ளது. இது ஈரானுக்கும் ஒரு மறைமுக எச்சரிக்கையை விடுக்கின்றது.
- சிரிய அதிபர் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கம் தற்போது அமெரிக்காவிற்கு இல்லை. அதனால் தொடர்ச்சியான தாக்குதல் நடக்காது.
- டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இரசிய உளவுத்துறை உதவி செய்தது. அவர் இரசியாவிற்கு சாதகமாக நடப்பார் என அவரது எதிரிகள் சொல்வதற்கு ஒரு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து இரசியா அவசரமாகக் கூட்டிய ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.
- கிறிமியா இணைப்பும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை தடுத்ததும் இரசிய அதிபர் புட்டீன் உலக அரங்கில் செய்த இரு பெரும் அதிரடி நடவடிக்கைகள். அவை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவால் விடுவதாக அமைந்தன.
- பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோல்வியடைந்த பின்னர் உலகில் ஒரு துருவ ஆதிக்க நிலை உருவாகியுள்ளது என மேற்கு நாடுகள் நினைத்திருக்கையில் இரசியாவும் சீனாவும் அதற்கு அண்மைக்காலங்களாக பெரும் சவால்களை விடக்கூடிய வகையில் தமது படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நிலைமை இன்னும் அமெரிக்காவிற்குப் பாதகமாக உருவாகவில்லை என உணர்த்துகின்றது.
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகள் எதிர்வு கூறமுடியாதவையும் மரபு வழியானவையும் அல்ல என்பதை அவர் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
- இதே மாதிரியான நடவடிக்கையை வட கொரியாவிலும் எடுக்கத் தயங்க மாட்டேன் என்பதியும் அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.
- மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் அமெரிக்கா தமது பிராந்தியதில் எந்த அளவிற்கு அக்கறையும் ஆதிக்கமும் செலுத்தப் போகின்றது என்பதையிட்டு கரிசனை கொண்டுள்ள வேளையில் அவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
- அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஒரு சீரற்ற நிலையில் உள்ளது அதனால் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது எனக்கூறும் பல விமர்சகர்களுக்கு ஒரு பதில் கூறப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் எப்போதும் இல்லாத அளவு ஒரு புதிய அதிபருக்கான மக்கள் ஆதரவு மிகக் குறைந்த அளவில் உள்ளது. அதை மாற்றி டிரம்ப் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்ச்சி இதுவாக இருக்கலாம்.
No comments:
Post a Comment